தண்ணிலவு தேனிறைக்க… 22

TTIfii-b6488f73

தண்ணிலவு – 22

நாட்கள் எந்தவித ஆராவாரமும் இல்லாமல், நகரத் தொடங்கியது. மாடிபோர்சனை வாடகைக்கு விட்டு, நம்பிக்கையானவர்களை குடிவைக்க ஏற்பாடு செய்தான் தயானந்தன்.

வாடகைப் பணமே வீட்டுக்கடனின் மாதத்தவணையில் பாதியாக வந்துவிட, கையைக் கடிக்காமல், சேமிப்புடன் பாஸ்கரின் குடும்பம் பயணப்படத் தொடங்கியது. சின்னப் பிள்ளைகளின் அர்த்தமற்ற சண்டைகள், முறைப்புகளுக்கு குறைவில்லாமல் சிந்தாசினி, பாஸ்கரின் தினசரிகள் களைகட்டின.

இரவுநேரத்தில் கைகளுக்கு அடங்காமல் அட்டகாசம் செய்பவளை, இழுத்து பிடிப்பதே பாஸ்கருக்கு எரிச்சலைத் தரும்.

“எந்த ப்ரிகாஷனும் இல்லாம என்னால முடியாது…” முரண்டு பிடிப்பதில் ஆரம்பிக்கும் மனைவியின் பிணக்கு.

“நடந்தத மறக்காம மனசுல வைச்சு, குத்திக் காமிக்கிறியா?” பதிலுக்கு பாஸ்கரும் எகிறி நிற்பான்.

“விபுக்கு எட்டு வயசு… அதை மனசுல வச்சுட்டு பேசுங்க! ஒரு யோசனையும் செய்றதில்ல… கோபம் மட்டும் முந்திகிட்டு வருது மாமா, உங்களுக்கு!” நொடித்துக் கொள்வாள் சிந்தாசினி.

“என்ன சொல்ல வர்றேன்னு தெளிவா சொல்லுடி!” கடுப்புடன் பாஸ்கர் கேட்க,

“இப்பவே என்னை, அவனோட அக்காவான்னு கேக்குறாங்க? இவ்ளோ பெரிய பையனை வச்சுட்டு என்னால இன்னொரு குழந்தை பெத்துக்க முடியாது”

“எதுக்கு இவ்வளவு பயம் சிந்தாசினி? அண்ணனா, அவன் பொறுப்ப அழகா செய்வான்டி! உன் புள்ளையோட வயச பாக்குற நீ, நம்ம வயசை பாக்க மாட்டேங்குற… நமக்கு இதுதான் சரியான வயசு. அக்கான்னு சொல்றவங்க, உன்னை அம்மான்னு சொல்றதுக்காகவாவது அடுத்த குழந்தை நமக்கு வேணும். அதுவும் பொண்ணுதான் வேணும்”

“ஏன், பையன் பொறந்தா என்ன செய்வீங்க?”

“பொண்ணு பொறக்கிற வரை முயற்சி எடுப்போம் சினிகுட்டி!”

“அடப்பாவி மாமா! என்னைக் கேக்காம எப்படி நீ மட்டும் முடிவு பண்ணலாம்? உன்னை சாமியாரா அலைய விட்டுருக்கனும்” மூக்கு விடைத்துக்கொண்டு சிந்து சண்டையில் இறங்க,

“நிம்மதியா கைலாஷால ஷிஃப்ட் ஆகி என்ஜாய் பண்ணிருப்பேன் மஞ்சளழகி!” மனைவியின் வாயடைக்கும் வேலைக்கு இடையில், கணக்கில்லாமல் வாய்விட்டும், அடிகளை பெற்றுக் கொண்டும் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வான் பாஸ்கர். 

“எப்படியும் ஏழு வருஷம் சேர்ந்து வாழ்ந்திருந்தா ரெண்டு டிக்கெட் ரிலீஸ் பண்ணியிருப்போம். அதெல்லாம் நேர் பண்ண வேணாமா?” சீண்டலிலும் அதட்டலிலும் குழந்தை வேண்டுமென்றே பாஸ்கர் வீம்புடன் நிற்க, சிந்தாசினியின் மறுப்பெல்லாம் காற்றோடு கரைந்தேதான் போகும்.

*******************

சமையல் வேலையும் வீட்டு வேலையும் பொழுதுகளை முழுங்கினாலும், ஏதோ ஒரு சஞ்சலத்தோடு சோர்வோடு வலம் வந்தாள் சிந்தாசினி.  

“என்னவாம் மேடம், இப்ப எல்லாம் மொகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்கீங்க?” பாஸ்கர் கேட்க,

“வீட்டுலயே இருக்குறது போரடிக்குது மாமா! கொரானான்னு சொல்லியே எங்கேயும் போக முடியல… மூணுவேளையும் தின்னுட்டு தண்டமா இருக்கேன்! இப்படியே நாளெல்லாம் வீணாப்போகுது” முகம் சுருக்கிச் சொன்னவளை ஊடுருவிப் பார்த்தவன்,

“பகல்ல புள்ளைகளும், நைட்ல நானும் தொல்லை குடுத்துமே உனக்கு போராடிக்குதா சினிகுட்டி? இனி தீயா வேலை பார்த்துடுவோம்!” உல்லாசத்துடன் கண்ணடிக்க,

“மக்குமாமா! உங்க புத்தி தெரிஞ்சே வாய விட்டேன் பாருங்க… நானெல்லாம் எந்த காலத்துலயும் திருந்த மாட்டேன்!” தன்னைத்தானே திட்டிக் கொண்டவளின் கைகளை பாந்தமாய் தனக்குள் அடக்கிக் கொண்டான் பாஸ்கர்.

“கொஞ்சநாள் ரிலாக்ஸா இரேன்டா! ஏன் எதையாவது போட்டு மனசை குழப்பிட்டே இருக்க?”

“ம்ப்ச்… சம்பாத்தியம், வேலைன்னு ஓடி பழகிடுச்சு மாமா! என்னால வீட்டுல சும்மா இருக்க முடியல…” மனம் சுணங்கிக் கொண்டவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்று பாஸ்கருக்கும் புரியவில்லை.

“இப்போ ஆன்லைன் வொர்க், ஆன்லைன் ஸ்டடீஸ் மட்டுந்தான் ஒழுங்கா நடக்குது. உன்னோட கோச்சிங் கூட ஆன்லைன்ல ஸ்டார்ட் ஆகிடுச்சு… உன்னை படிக்கச் சொன்னா, ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி வேண்டாம்னு சண்டை போடுவ…” சமயம் பார்த்து மனைவியின் குறைகளைச் சொல்ல, இவளுக்கு சுருக்கென்றது.

ஒருமுறை தோல்வியைத் தழுவிய அனுபவம் வயிற்றில் புளியைக் கரைத்து புலியைப் பார்த்த பயத்தினைக் கொடுத்திருக்க, மறுபடியும் ஒருமுறை என்ற சுயசோதனையில் இறங்கவும் பெரும் தயக்கம் வந்திருந்தது சிந்துவிற்கு.

இப்பொழுது கணவனின் குற்றம் சாட்டும் பாவனையும், மொட்டு மொட்டென்று வீட்டிலேயே அடைந்து கிடக்கும் அவஸ்தையும் சேர்ந்து கொண்டதில் குழப்பத்துடன் நடமாட ஆரம்பித்தாள். 

“டோட்டல் டெடிகேஷனோட முழுமையா ஒரு விசயத்துல ஈடுபடனும். இதுதான் எனக்கு வாழ்க்கைன்னு ஏதாவது ஒண்ண விரும்பி ஏத்துகிட்டா போதும், அதுவே சந்தோசத்தைக் கொடுக்கும். மனசுக்கும் திருப்திய தரும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் தவறாம அரியர்ஸ் வச்சிருந்த நானே, முட்டிமோதி படிப்பை முடிக்கும்போது, உனக்கு முடியாதா? வீரமெல்லாம் பேச்சுல மட்டும்தானா? எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணமாட்டியா?” கணவனின் அறிவுரையிலும், வற்புறுத்தலிலும் சற்றே மனம் தெளிவுபெற, மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த தைரியத்துடன் முடிவெடுத்தாள் சிந்தாசினி.

அதற்கும் பல கண்டிசன்களை முன்வைத்து, முயற்சியில் இறங்க, அடுத்த ஆறுமாதத்தில் நடந்த ஃபவுண்டடேசன் தேர்வில் வெற்றி பெற்றாள். அந்த வெற்றியே அவளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்க, அடுத்தகட்ட பயிற்சிகளில் நாட்கள் இலகுவாய் கழிந்தன.

இதனிடையில் நாள் தள்ளிப்போய், கர்ப்பம் உறுதியானதும் குழந்தை வேண்டாமென்று சிந்தாசினி முரண்டு பிடிக்க, வேண்டுமென வீம்பில் நின்றான் பாஸ்கர்.

“இந்த தடவ உன்னோட முறையாடி! வாய்க்கு வந்தத பேசி எதையாவது பண்ணி வைச்சா மனுசனா இருக்க மாட்டேன், பார்த்துக்கோ!” கணவனாக பாஸ்கர் நெற்றிக்கண்ணை திறக்க, சற்று அமைதியாகவே தனது மறுப்பை வெளிப்படுத்தினாள் சிந்து.

“இத்தனை வருசமா விபு ஒத்த புள்ளையா வளர்ந்துட்டான். அவனுக்கும் புதுசா இன்னொரு ஆள் வர்றது பிடிக்குமோ, பிடிக்காதோன்னு யோசனையா இருக்கு மாமா!” கவலையுடன் பயத்தை சொல்லிவிட, பாஸ்கரும் மலையிறங்கி அமைதியுடன் மனைவியை அணைத்து கொண்டான்.

“நீ, ஏன் இப்படி நினைக்குற சிந்தா? விபு ஒத்த புள்ளையா இருந்தாலும் அவன் வளர்ந்த விதம் வேற… கிராமத்துல உங்க தமிழ் மாமா பசங்களோட வளந்திருக்கான். இங்கேயும் நந்தா, நைல்குட்டின்னு நல்லவிதமா தான் பழகிட்டு வர்றான். இவ்வளவு யோசனை உனக்கு வேணாம்” மெதுவாக அவளுக்கு புரியும்படி எடுத்துக்கூற, 

“நிஜமாவா? தப்பா எதுவும் நடக்காதே மாமா?” சிந்து திருதிருத்துக் கொண்டே கேட்க,

“அப்படி எதுவும் நடக்காதுடா! நெருக்கமான சொந்தங்கள், உறவுகள் எல்லாரும் நம்மை சுத்தியும் இருக்காங்க. அந்த சூழலே, எதையும் போட்டி பொறமையில்லாம ஏத்துக்க வைக்கும். நம்மைவிட, விபுதான் புது வரவை எதிர்பார்ப்பான்” அமைதியாக பாஸ்கர் பேசியதே, சிந்துவை யோசிக்க வைக்க, விபாகரும் ஆராவாரத்துடன் தனது உடன்பிறப்பை எதிர்கொள்ள தயாராயிருந்தான். 

மரகதமும் தன் பங்கிற்கு அன்பாகவும் கடிந்தும், பிள்ளை பெற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று மகளுக்கு உத்தரவிட்டுவிட, அனைவரின் கவனிப்பிலும், மனபூரிப்பிலும் படிப்பையும், மசக்கையையும் ஒன்றாகவே அனுபவித்தாள் சிந்தாசினி. 

முதல் பிள்ளைபேற்றின் போது எதிர்கொண்ட இன்னல்களை மறக்கடிக்கும் வண்ணம் பாஸ்கர், மனைவியை எந்தநேரமும் தாங்கிக்கொள்ள,

“இந்த முறையும் பையன் பொறந்தா, அடுத்து பொண்ணுக்கு ட்ரை பண்ணுவோம் மாமா!” ஆனந்த அதிர்ச்சி கொடுத்தே, தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டாள் சிந்து.

“அட… அட! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே சினிகுட்டி!” உற்சாகத்தில் பாஸ்கர் மனைவியை கட்டிக்கொள்ள,

“அச்சோ… காதுல தேனடைச்சுடாமா மாமா? அப்புறம் உணமைக்குமே உங்க காது கேட்காது!”

“அதெல்லாம் நீ கூலா பேசப்பேச திறந்திடு சீசே ஆகிடும்டா!” மடைதிறந்த பேச்சுக்கள் மனதில் இனிமையைக் கூட்டிட, சந்தோசச் சாரலுடன், வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியையும் வாரியிறைத்தது.

வீட்டிலிருந்தபடியே படிப்பை தொடர, இரண்டு குரூப் தேர்வுகளையும் அடுத்தடுத்து எழுதி முடிக்கும் நேரத்தில் குழந்தை நிஹானிகா பாஸ்கரின் இளவரசியாகப் பிறந்தாள்.

நைனிகாவின் அலட்டலில், தன் பெயரைப் போலவே மழலைக்கும் இருக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்ததில், ‘நிஹானிகா’ என்ற பெயரே வைக்கப்பட, குழந்தை அனைவருக்கும் ஹனிகுட்டி ஆகிப் போனாள்.  

வாழ்க்கை இனிமையாக, ‘அடை தேனடை’யாக ருசிக்க, ஹனிகுட்டிக்கும், சினிகுட்டிக்கும் சலாம் போட்டே பாஸ்கர் வலம் வந்தான்.

அடுத்த மூன்று வருட பிராக்டீசை சிந்தாசினி ஆரம்பிக்க, எந்தவித தடையும் இருக்கவில்லை. பகுதிநேர பயிற்சியாக சில மணிநேரங்கள் மட்டும் வகுப்பிற்கு சென்று, மீதியை வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டாள்.   

ஆடிட்டர் அசிஸ்டெண்ட் டிரைனிங், சாப்ட்வேர் ஸ்கில் கோர்சஸ் என நாட்கள் அதன்போக்கில் செல்ல ஆரம்பித்தது. பயிற்சி முடிந்தவுடன் வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் அசிஸ்டென்ட் ஆடிட்டராக வேலையும் கிடைக்க, அதனைத் தொடர்ந்தாள் சிந்து.

பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே பணிகள் நடக்க, வீடு, குழந்தை வளர்ப்பு, வேலை என அனைத்தும் மிக எளிதாக சிந்தாசினிக்கு கைவந்தது.

வொர்க் ஃப்ரம் ஹோமை தொடர்ந்து கொண்டே குழந்தைகளின் பராமரிப்பை முடிந்தவரை தனதாக்கிக் கொண்டான் பாஸ்கர்.

“தினமும் பனிரெண்டு மணிநேரம் கோடிங் எழுதி நான் பண்ற சம்பாத்தியத்த, மூணுமணிநேரம் கணக்கெழுதி ஈசியா நீ செஞ்சு முடிச்சிடுற…” பெருமூச்சுடன் பெருமையாக சொல்லவும் செய்வான் பாஸ்கர்.   

“இப்ப குறைபட்டு என்ன பிரயோஜனம் பாஸ்? இந்த ஞானோதயம் எல்லாம், கழுத்துல கத்தி வைச்சு என்னை படி படின்னு சொல்லும் போது இருந்திருக்கணும். இப்ப நீங்க விடச் சொன்னாலும் நான் பின்வாங்குறதா இல்ல….” என மிதப்பாக சிரிப்பாள் சிந்தாசினி.

மரகதமும் உதவிக்காக இவர்களுடன் வந்து தங்கிக்கொள்ள, எந்தவித சிரமமும் இல்லாமல், வருடங்கள் அமைதியாக நகர ஆரம்பித்தன.

****************************

நிஹானிகாவின் நான்காம் வருட பிறந்தநாளையும், சிந்தாசினியின் சாட்டர்ட் அக்கவுண்டட் பயிற்சியும் நிறைவு பெற்றதை கொண்டாடியதின் எதிரொலியாக பாஸ்கரின் வீடு களைகட்டியிருந்தது.  

விழா முடிந்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் வேலைகளில் பெரியவர்கள் ஈடுபட்டிருக்க, வெளியே பெண்பிள்ளைகளின் ஆட்டம் கனஜோராக தொடங்கி இருந்தது.

வீடெங்கும் ஜிகினா தூள்கள், வண்ண காகிதங்கள் பறக்க விடப்பட, தோரணங்களில் தொங்கவிடப்பட்ட பலூன்கள் குண்டூசியின் மூலம் ‘டப்டப்’ என்று வெடித்த நேரத்தில், சிந்தாசினியும் மிதுனாவும் கோபத்துடன் வெளியே எட்டிப் பார்க்க,

“ஹனிக்குட்டி! அம்மாவும் அத்தையும் வந்துட்டாங்க! போச்சு, இனிமே விளையாட முடியாது” எட்டுவயது நைல்குட்டி மாட்டிக்கொண்ட அவஸ்தையுடன் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.

“டோன்ட் வொர்ரி நைல் அக்கா… எஸ்கேப் ஆகி, அப்பாகிட்ட போயிடுவோம்” குதித்துக் கொண்டே பேசிய ஹனிகுட்டி, நைனிகாவை இழுத்துக்கொண்டு அவசரமாய் மொட்டை மாடிக்கு படையெடுத்தாள்.

அங்கே உணவுப் பந்தி முடிந்து, தயா, தமிழ்செல்வன், பாஸ்கர் மூவரும் சேர்ந்து சேர், டேபிளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் விபுவும் நந்தாவும் உதவிக்கு நின்று கொண்டிருந்தனர்.

“அதென்ன மாப்ள…  பொண்டாட்டி படிப்பு முடிஞ்சதையும் விழா எடுத்து கொண்டாடுற?” தமிழ்செல்வன் கேலியுடன் கேட்டான். இன்றைய விழாவிற்கென இவன் மட்டும் சென்னைக்கு வந்திருந்தான்.

“இல்லையா பின்ன? இவளை படிக்க வைக்க நான் பட்டபாடு எனக்குதானே தெரியும். ஆனாலும், ஆறு வருசத்துல ரொம்ப சீக்கிரமா முடிச்சிருக்கா!” கிண்டல் குறையாமல் பாஸ்கர் பதிலளிக்க, எப்போதும் போல் தயானந்தன் இடையிட்டான்.

“ரொம்ப அலுத்துக்காதே மாப்ள… நாளைக்கு சம்பாத்தியம் பண்ணிக் கொடுக்கும்போது நீதான் இளிச்சிட்டு வாங்கிக்கப் போற! அதனால எப்பவும் போல இப்பவும் அடக்கிவாசி!” வாயை மூடிக்கொள் என சைகையால் தயா செய்து காட்ட,

“தோ… வந்துட்டாருல்ல என் மாமா! இனி ஒன்னும் பேசமுடியாது” என்றபடியே வாயை மூடிக்கொண்டான் பாஸ்கர்.  

“சரியா சொன்ன மச்சான்! நல்லதோ கேட்டதோ எல்லா ஆம்பளைகளுக்கும் பொஞ்சாதிங்கதான் ரிமோட் கண்ட்ரோலா இருந்து ஆட்டி வைக்குறாங்க…” தமிழ்செல்வனும் தனது முறையாக சொல்லிய நேரத்தில் சிந்துவும், மிதுனாவும் குழந்தைகளைத் தேடி மேலேறி வந்து விட்டனர்.

“ஆமாமா… அதான் உங்க இஷ்டத்துக்கு ரிமோட்டை போட்டு உருட்டி, கீழே போட்டு உடைச்சுன்னு அடி குடுத்துட்டே இருக்கீங்களே! இதுல நீங்க வீட்டம்மா பேச்சுக்கு தலையாட்டுற பொம்மைங்கன்னு நாங்களும் நம்பிட்டோம்!” மிதுனா கிண்டலுடன் கூறியதை சிந்துவும் ஆமோதித்து சிரிக்க,

“உங்க ரிமோட் எப்பவும் ஹெவி டுயூட்டி பாட்டரியிலயே ஓடுது மாமா! உப்பு, காரம் எல்லாம் குறைச்சுக்க சொல்லுங்க… இங்கே வரைக்கும் நெடி தாங்க முடியல!” பாஸ்கர் கேலிபேச,

“அதெல்லாம் தொட்டில் பழக்கம் மாப்ள…. அடங்கமா வளர்ந்து என் கழுத்தை நெறிக்குது. மொத்தத்தில வளர்ப்பு சரியில்ல…” நக்கலடித்த தயா, மனைவியின் முறைப்பினை பரிசாகப் பெற்றுக் கொண்டான்.  

‘வீட்டுக்கு வந்துதானே ஆகணும், அப்ப இருக்கு உனக்கு’ மிதுனா பார்வையாலேயே மிரட்டலை விடுக்க, ‘போச்சுடா, இவ முன்னாடி வாயை தொறந்துட்டேனே… இன்னைக்கு தைல பாட்டிலை கக்கத்துல வைச்சுட்டே தான் படுக்கைக்கு போகணும்’ மனைவியை தாஜா செய்வதற்கான உடனடி தீர்வையும் மனதிற்குள் சொல்லிக் கொண்டான் தயா.

கணவனின் பேச்சிற்கு கடுகடுத்துக் கொண்டு, சிந்து நிற்கும் நேரத்தில்,  

“எவ்வளவு பட்டாலும் எனக்கும் அறிவு வரமாட்டேங்குது மாமா? இன்னும் எவ்வளவுதான் உங்கட்ட நான் வாங்கிக் கட்டிக்கப்  போறேன்னு தெரியல!” பாஸ்கர் அலுத்துக் கொள்ள,

“உன்னோட ரிமோட் கண்ட்ரோல் சரியில்ல மாப்ள… உனக்கு பாவம் பார்த்து அப்படியே விட்டுறா என் தங்கச்சி!” தயா பதிலடி கொடுத்தான்.

ஆண்களின் பேச்சு, பெண்களுக்கு உஷ்ணத்தை வரவழைக்க, ஏற்கனவே வாண்டுகளை கண்டிக்கவென வந்த கோபமும் சேர்ந்து கொண்டது.

“வரவர எல்லாருக்கும் வாய், சேட்டை எல்லாம் ஜாஸ்தியா போச்சு! இதுக்கெல்லாம் பனிஸ்மெண்ட் குடுத்தா மட்டுமே எல்லாரும் அடங்குவீங்க போல!” பொத்தம் பொதுவாய் மிதுனா அதட்ட, சிந்து பிள்ளைகளை முறைத்தாள்.

மேலே ஏறி வந்த வாண்டுகள், விபு நந்தாவையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஐஸ்க்ரீம் உள்ளே தள்ளுவதில் லயித்திருக்க, அவர்களின் அம்மாக்களுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.

“நைனி டூ ஐஸ்கிரீம்ஸ் சாப்பிட்டு முடிச்சுட்டா! இப்ப உன் டெர்ம் ஹனிகுட்டி” விபு நேரத்தை பார்க்க,

“எஸ்… டென் மின்ஸ்ட்ல மூணு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்னா, நீதான் வின்னர்! முடியுமா ஹனி?” நந்தாவும் ஏற்றி வைக்க,

“அவளுக்கு முடியும்டா எனக்குதான் முடியாது” பல்லைக் கடித்தபடியே முறைத்தாள் சிந்தாசினி.

அவளின் முறைப்பில் இரண்டு குட்டிகளும், “அப்பா… அப்பா” என்றவாறே, நைல் தயாவின் கைகளைப் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, ஹனிக்குட்டியோ உப்புமூட்டையாக பாஸ்கரின் முதுகில் தொற்றிக் கொண்டாள்.

பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து, ஏற்றி வைக்கும் செல்லக் கொஞ்சல்களில் இரு சிட்டுகளும் வஞ்சகம் இல்லாமல் குறும்பு செய்து அடங்காத ஆட்டங்கள் ஆடி, அவரவர்களின் அம்மாக்களிடம் மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் அடங்குவர்.

அதிலும் நைனிகா சிந்துவிடத்திலும், நிஹானிகா மிதுனாவிடமும் கொஞ்சி கெஞ்சி ‘நானே பாவம் அத்தை’ என உதடு பிதுக்கிக் கொண்டால் போதும், உடனிருக்கும் அடுத்த சிட்டுக்கு திட்டுகளை பார்சல் பண்ணிவிட்டு, மருமகளை மடியில் போட்டு தாலாட்டு பாடிவிடுவர் இரண்டு அத்தைகளும்.

அவ்வண்ணமே இப்பொழுதும் இருவரும் சேட்டைகளை செய்துவிட்டு, தப்பிக்கும் மார்க்கமாக தந்தையிடம் வந்து சரணடைந்து விட்டனர்.

“ஹனிமா! யார் என்ன சொன்னா? என்ன பண்ணிட்டு வந்தீங்க?” மகளோடு பாஸ்கர், உருகும் நேரத்தில்

“இந்த ரெட்டைவாலுகளோட சேட்டையும் தாங்க முடியல… ரெண்டும் அறுந்தவாலுங்க! இதுங்க பின்னாடி அலையுறதுக்கே தனியா ஒரு ஆளை வேலைக்கு வைக்கணும் போல…” மூச்சிரைத்தவாறு இரண்டு பெண்பிள்ளைகளையும் சிந்தாசினி கடிந்து கொள்ள,

“என்னடி நீயுமா ஹெவி டுயூட்டி பாட்டரில ஓடுற?” முறைப்பும் திட்டும் பரிசாக கிடைக்குமென்று தெரிந்தே பாஸ்கர் கோதாவில் இறங்க,

“இந்த எகத்தாளம்தான்… அப்டியே உங்க பொண்ணுக்கும் இறங்கியிருக்கு. எதை வேண்டாம்னு சொல்றாங்களோ அதைதான் அடம்பிடிச்சு செய்றா! ஒண்ணு சொன்னா கேக்குறதில்ல! இறக்கி விடுங்க அவள… இல்லன்னா உங்களுக்கும் சேர்த்தே அடிவிழும்” கோபத்துடன் வார்த்தைகளை கொட்டி முடித்தாள் சிந்தாசினி.

“ஹனிகுட்டி இறக்கி விடவா? இல்லைன்னா உங்கம்மா என்னை கடிச்சிடுவா!” பாஸ்கர் சொல்லியதில் தந்தையை இன்னும் இறுக்கிக் கொண்டு ஒட்டிக் கொண்டாள் ஹனிகுட்டி.

“நோப்பா! ஹனிக்கு வலிக்கும்”

“நைனிக்கும் வலிக்கும் பாஸ்மாமா!” இரண்டு குட்டிகளும் ஒன்றாய் பாவமாக சொல்ல,

“பாவம்டி! புள்ளைங்கள விட்டுடேன்… ரெண்டும் அழுதிடும் போல… பிறந்தநாள் அதுவுமா திட்டாதே!” பாஸ்கர் பேசும் நேரத்தில் மிதுனாவிடம் தாவிசென்று ஒளிந்து கொண்டாள் ஹனிகுட்டி.

அம்மா பேச்சில் அப்பாவிற்கே அடி கிடைக்கும் சாத்தியங்கள் உறுதியாகிவிட, நைசாக அத்தையிடம் தாவி விட்டாள் சுட்டிப்பெண்.

“மீ குட்டிகேர்ள் அன்ட் கியூட் கேர்ள் அத்த… ஐயாம் பாவம்! இந்த ஒரு தடவ ப்ளீஸ்….” மிதுனாவிடம் பாவமாக ஹனி கெஞ்ச,

“எஸ் அத்த… டுடே பர்த்டே… ஜாலிடே… இன்னக்கு மட்டும் ப்ளீஸ்… ப்ளீஸ்” தனது முறையாக நைனியும் சிந்துவிடம் கெஞ்சிய விதத்தில், இருவரும் பெருமூச்சுவிட்டே சலித்துக் கொண்டனர்.

“இன்னைக்கு ஒருநாள் விட்டுடுவோம் சிந்து!”  

“இப்டி சொல்லித்தான் ஒவ்வொரு தடவையும் ரெண்டு பேரும் தப்பிக்கிறாங்க அண்ணி! வீட்டுல எதையும் வைக்க முடியல… கீழே போட்டு உடைக்கணும் இல்ல களைச்சு போடணும். இவளால வீட்டு வேலை முடிவுக்கு வரவே மாட்டேங்குது!” அலுப்பாய் சிந்தாசினி கூறி முடிக்க,

“ரொம்ப சலிச்சுக்காதேடி! உன் பொண்ணோட லூட்டிக்கு ரெண்டு அடி குடுத்துட்டு, அவளை சமாதானம் பண்ற பேர்வழின்னு அவளை தூக்கிட்டு ஒதுங்கிப் போறவ, இத்தனை பேசக்கூடாது. நானும் விபுவும் தான் எல்லாத்தையும் சரி பண்ணி, எடுத்து வைக்கிறோம். வேடிக்கை பாக்குற உனக்கு அலுப்பு தட்டுதா?” பாஸ்கர், மனைவியை கடிந்து கொள்ள,

“அடேய்! குழந்தைங்கள சத்தம் போடுறத விட்டுட்டு எங்களையே குத்தம் சொல்றீங்களா?” மிதுனா அதிருப்தியுடன் சொல்ல,

“இனிமே குழந்தைங்கள கண்டிக்கிறதுக்கு பதிலா, உங்களுக்கு பனிஷ்மெண்ட் குடுக்கணும் அப்போதான், பிள்ளைங்களும் அடங்குவாங்க!” முறைப்புடன் பதிலளித்தாள் சிந்தாசினி.

“சரியா சொன்ன சிந்து! நன்றே செய்… அதை இன்றே செய்! எங்களை ரிமோட் கண்ட்ரோல்ன்னு சொன்ன ஜாம்பவான்கள, இங்கே கிளீன் பண்ணிட்டு, இங்கயே படுக்கச் சொல்வோம். அதுதான் இன்னைக்கு பனிஷ்மெண்ட். பசங்களா… எல்லாரும் கீழே இறங்குங்க!” மிதுனாவின் அதட்டலில் பிள்ளைகள் எல்லாரும் கீழிறங்க, ஆண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.

“எனக்கு கவலையில்ல மச்சான்! நான் இன்னும் ஒருமணி நேரத்துல பஸ்சுக்கு கிளம்பிடுவேன்!” என்றவாறே தமிழ் கழன்று கொள்ள, பாஸ்கரும் தயாவுமே உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அவரவர் மனைவியை சமாதானப்படுத்தும் முறைகள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களாக இருக்க, அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டே கீழிறங்கினர்.

தயானந்தனின் சக்கரக்கட்டி உருகலும், பாஸ்கரின் சினிகுட்டி குழைவும் சரியான விகிதத்தில் அவரவர் இணைகளுக்கு பரிமாறப்பட, உஷ்ணக்காற்றாய் வெளிவந்த பெண்களின் பொருமல்களும் வெண்ணிலவின் குளிர்ச்சியைத் தந்து, அந்த இரவினை இனிமையாக்கியது.

இந்த குளிர்ச்சியும் இனிமையும் என்றென்றும் தேனாறாய் பெருகி வாழ்வு சுகம்பெற, வாழ்த்தி விடைபெறுவோம் தோழமைகளே!!!

 

சுபம்