தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு – 3

தமிழ்செல்வனிடம் பொறுப்புகளை கைமாற்றிவிட்ட திருப்தியுடன் இருபது நிமிட பயணத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சிந்தாசினி.

நேரம் மதியம் மூன்றரை மணி… மதிய உணவிற்காக இவள் வீட்டிற்கு வந்து சேரவும், தாய் மரகதம் அலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது.

“சொல்லும்மா… மதிய தூக்கம் முடிஞ்சதா?” என மகள் விசாரிக்க,

“ம்க்கும்… இந்த அக்கறைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லடி! நேருல வந்து கவனிக்கத்தான் உங்களுக்கெல்லாம் வலிச்சுப் போகுது… நீ சாப்பிட்டியா?” அலுப்பான பதிலுடன் அக்கறையாக மகளை விசாரித்தார்.

“இப்பதான்மா வந்தேன்! உன்கூட பேசி முடிச்சிட்டுதான் சாப்பிட உக்காரனும்…” அசிரத்தையுடன் சொன்ன விதத்தில் மகளின் சோர்வை கணித்துக் கொண்ட மரகதம், 

“பொறுப்பு வராதாடி உனக்கு? இத்தனை நேரத்துக்கு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? ஏற்கனவே முருங்கக்கா காய்ஞ்சு போனாப்புல வத்திட்டே வர்ற… எல்லாம் எடுத்து சொல்லிட்டு இருக்க, நீ இன்னும் சின்ன புள்ளையா? அண்ணி இதையெல்லாம் கண்டிக்கிறதில்லையா? நீ ஃபோன் டப்பாவ அவங்கட்ட குடு! நான் கேக்குறேன்…” கோபத்துடன் படபடத்தார்.

இவரது இத்தனை கோபத்திற்கும் நியாயம் இருக்கத்தான் செய்தது. கொரானோ ஊரடங்கு காலத்தில் பதினைந்து நாட்கள் உடம்பு சுகவீனத்தில் படுத்து, இப்பொழுது தான் சற்று தேறி வந்திருக்கிறாள் சிந்து.

இரும்புச்சத்து குறைபாடும், குறைந்த இரத்த அழுத்தமும் இவளுக்கு மயக்கத்தையும் தலைசுற்றலையும் இழுத்து வைத்திருந்தது.

சத்தான, நேரத்திற்கான ஆகாரத்தை வெகு சிரத்தையுடன் எடுத்துக் கொள்வது மட்டுமே இதற்கு சரியான மருந்து என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் இருந்தனர்.

இவளின் உடல்நலன் இந்த லட்சணத்தில் இருக்க, இன்னமும் இவள் அசட்டையுடன் நடந்து கொள்வதினால் மரகதத்தின் தாய்மனம் சட்டென்று சினம் கொண்டது.

“தெரியாத்தனமா வாயை விட்டுட்டேன்! யாருகிட்டயும் எதையும் நீ கேக்க வேணாம்! எதுக்கு கூப்பிட்ட? அதை சொல்லு மொதல்ல…” சிந்து பேச்சை மாற்றிட, மகளுக்கு அடுத்த கொட்டினை வைக்கத் தயாரானார் மரகதம்.

“எதுக்கு கூப்பிட்டேன்னா? நீ, இங்கே எப்போ வரப்போற? வரமாட்டேன்னு சொல்லி எல்லார் நிம்மதியையும் கெடுக்க நினைக்காதே சொல்லிட்டேன்!” என குறையாத கோபத்தில் பேசத் தொடங்கினார் மரகதம்.

“சரிம்மா! எந்த காரணமும் சொல்லல… விசேஷத்துக்கு நல்லபடியா வந்து சேர்றேன்! இப்போ சந்தோஷமா?” என கடுகடுத்தவளுக்கு, ‘நான் அடுத்தவர் நிம்மதியை குலைப்பவளா?’ என்ற மனச்சோர்வே மேலிட்டது.

“அண்ணன் ஃபோன் பண்ணினா?”

“ம்ம்… காலையில கூப்பிட்டு பேசிச்சு!”

“அதானே! சொல்றவங்க சொன்னாதான் உங்களுக்கெல்லாம் மண்டையில ஏறுது. சீக்கிரமா ரெண்டு நாள்ல வந்து சேரப்பாரு!” என மரகதம் உத்தரவிடவும் சிந்து திகைத்து விட்டாள்.

“ம்மா… கடையில வேலை நிறைய இருக்கு… இப்ப யாரையும் மாத்தி விடவும் முடியாது. ஃபங்ஷன் அன்னைக்கு அங்கே இருப்பேன்! வேற எதையும் என்னால செய்ய முடியாது” மகள் முடிவாக கூறியதில், மரகதம் கொதிக்க  ஆரம்பித்து விட்டார்.

“என்னடி பேசுற… சடங்கான பொண்ணுக்கு, நீயும் உன் புருசனும் தாய்மாமா குடும்பம். அதுக்கு தகுந்தா மாதிரி சீர் செய்யனும். நிறைய வேலை, உனக்கு வரிசை கட்டிட்டு நிக்குது. அதையெல்லாம் யார் எடுத்து செய்யப்போறா?

எப்படி, ஏது செய்யனும்? என்ன வாங்கணும், வைக்கணும்ன்னு யார் பொறுப்பெடுக்க போறா? நீயும் வரமாட்ட… பாஸ்கர் மாப்பிள்ளையும் விசேசத்துக்கு மொதநாள் வர்றேன்னு விலகி நிக்கிறாரு. புருசனும் பொஞ்சாதியும் மனசுல என்னதான்டி நினைச்சுட்டு இருக்கீங்க? ஊரு நடைமுறை என்னன்னு உனக்கு தெரியாதா?” இடைவிடாத கேள்விகளில் வெடித்தார் மரகதம்.

கிராமத்து வெள்ளந்தி மனிதர்களுக்கு அத்தனை எளிதில் இந்த கால நடைமுறைகள் பிடிபடுவதில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டே உலகையே வாங்கிக் கொள்ளலாம் என உரக்கச் சொன்னாலும் நம்பாமல், சிறியவர்களின் தலையை உருட்டிக் கொண்டு இருப்பார்கள். மரகதமும் அப்படியே!

“அம்மா… அம்மா! கொஞ்சம் மூச்சுவிடு! ஏற்கனவே பீபீ இருக்கு… இப்டி பேசி இன்னும் கூட ஏறிடாம! அதான் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களேம்மா… அவங்க பார்த்துப்பாங்க!” என சிந்து சொல்லியதில் மரகதத்தினுள் உறங்கிக் கொண்டிருந்த சிங்கம் சிலிர்த்தெழுந்து கொண்டது.

“எது? அவங்க பார்த்துப்பாங்களா? ஊருக்கெல்லாம் வேலை பார்த்து கொடுக்கத்தான் என் மகனுக்கும் மருமகளுக்கும் நேரம் இருக்கா? இல்ல, உங்க வீட்டு வேலையை இழுத்து போட்டுட்டு செய்யணும்னு அவங்களுக்கு தலையெழுத்தா?

என் பையன் தலையில நல்லா மொளகா அரைக்கிறீங்கடி… என் மருமக, உனக்கு நாத்தி முறை… அதை மனசுல வையி மொதல்ல… சும்மா எதுக்கெடுத்தாலும் அண்ணன் அண்ணின்னு சொல்றத நிப்பாட்டு!” அதட்டியவரின் பாவனையில், மகன் மருமகளை பற்றிய பெருமையே விஞ்சி நின்றது.

மனதளவில் தன்னை மகாராணியாகவே நினைக்க வைக்கும் மகன், உரிமையுடன் கூடிய பேச்சினில் குடும்பத்தின் ஒவ்வொரு முடிவிற்கும் தன்னையே சார்ந்திருக்கும் மருமகள்…

இவர்களின் நிழலில் இளைப்பாறும் மரகதத்திற்கு இதை விடவா நிம்மதியாக வாழ்ந்திட முடியும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

எங்கேயும் மகனையும் மருமகளையும் விட்டுக்கொடுத்திட மாட்டார் அந்த முதிய பெண்மணி. மகள்களிடமும் அவர்களின் பெருமை பேசுவதில் இவர் சலித்துக் கொள்வதுமில்லை.

“போன வருஷம் நர்மதா பொண்ணுக்கு உன் அண்ணனும் அண்ணியும் என்னவெல்லாம் செஞ்சாங்கன்னு உனக்கு தெரியும்தானே? அதேமாதிரி சிறப்பா செஞ்சு நல்ல பேரு வாங்கப்பாரு!” என அழுத்தமான கொட்டும் விழுந்தது.

மரகதத்தின் பெரிய பெண்ணான நர்மதாவின் மகள், சென்ற வருடம் பெரியவளாகியிருக்க, தாய்மாமன் சீர்வரிசையை எந்தக் குறைவும் இல்லாமல் சிறப்பாக செய்து முடித்திருந்தான் தயானந்தன். இவனது செய்முறைகளைப் பார்த்தே உற்றார் உறவினர்கள் சபையிலேயே வாயடைத்துப் போயிருந்தனர்.

“நீ கொடுத்து வச்சவ மரகதம்… மூணு பொண்ணுகளையும் இப்ப வரைக்கும் ஒண்ணுபோல பாக்குற புள்ளைய பெத்து வச்சுருக்க… அது மட்டுமா? மருமகளும் முகம் சுளிக்காம அவனுக்கு இணையா நிக்கிறா!” என பாராட்டி மகிழ, அன்று இரவே மகன் குடும்பத்தை நிற்க வைத்து திருஷ்டி கழித்து  போட்டார் மரகதம். தாயின் அன்றைய அலட்டலை நினைக்க இன்றும் சிந்துவிற்கு சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“உன் மகனும் மருமகளும்தான் உலக அதிசயமாச்சே… அவங்களுக்கு இணையா நம்மால வரமுடியுமா?” என கிண்டலில் இறங்கினாள் மகள்.

“பகடி பேசாதேடி! ஒழுங்கா வீட்டு மனுஷியா, மருமகளா எல்லாத்தையும் முன்னாடி நின்னு செய்ய ஆரம்பி… யாரையும் யாருக்காகவும் எதிர்பார்க்காதே சொல்லிட்டேன்!” மகளை மானசீகமாய் தலையில் கொட்டிக் கொண்டே பேச்சில் கடித்து வைத்தார்.

சிந்து பக்கத்தில் இருந்திருந்தால், அளவில்லா கொட்டுக்கள் அம்மாவின் பிரசாதமாக அவளை வந்து சேர்ந்திருக்கும். 

“அப்படிதானேம்மா, அஞ்சாம்நாள் தண்ணி ஊத்துற அன்னைக்கும் செஞ்சேன்! ஏன் எதுவும் தெரியாத மாதிரியே பேசுற!”

“அப்போ அவசரத்துக்கு ஏனோதானோன்னு பண்ணியாச்சு சிந்து… இப்போ செய்யபோறதுதான் காலத்துக்கும் உங்களை சொல்லிட்டு இருக்கும். கொஞ்சம் அமைதியா யோசனை பண்ணிபாரு கண்ணு!

எல்லா விசயத்துலயும் பிடிவாதம் பிடிக்கிற மாதிரி, இதுலயும் வீம்புக்கு நிக்காதே! காலத்துக்கும் நமக்கு நாத்தனார், கொழுந்தன், உறவெல்லாம் வேணும்டி!” என தன்மையாக மகளுக்கு புரிய வைத்தார்.

“நான் எதையும் மறுக்கலம்மா… ஆனா ஒருவாரம் கடையை விட்டுட்டு வரமுடியாது. என்னோட சொந்த கடை கிடையாது. எல்லார் மாதிரியும் நானும் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்!

கொரொனா சமயத்துல கடை தொறக்கலன்னாலும், தமிழ்மாமா சம்பளம் கொடுத்திருக்காரு! மறுபடியும் வேலை ஆரம்பிச்சிருக்குற இந்த நேரத்துல, நானும் அனுசரிச்சு நடக்கனும். சீர்வரிசைக்கு என்னென்ன வாங்கணுமோ நீயும் அண்ணியும் சேர்ந்து போயி வாங்கிட்டு வாங்க…” மீண்டும் தன்நிலைமையை சொல்லி வலியுறுத்த, மரகதம் கொதிநிலைக்கே சென்று விட்டார்.

“அடியே கூறுகெட்டவளே! மொதமொத சின்ன பிள்ளைக்கு செய்யப்போற சடங்குக்கு, என்னைப் போயி சீர்வரிசை வாங்கியாரச் சொல்றியே? அறிவிருக்காடி உனக்கு!

குழந்தைய விட்டுட்டு மிதுனா போகணும்னா கூட முடியாது. இந்த சின்னக்குட்டி என் கையில அரைமணி நேரத்துக்கு மேல நிக்கமாட்ட… பொழுதுக்கும் வீட்டுல வேலைக்காரி இருக்கான்னுதான் பேரு… இந்த குட்டிபொண்ணு அவகூடவும் போக மாட்டேங்குறா!

ஆபீசுக்கு கூட, பொண்ண தோள்ல தூக்கிட்டு போறா உன் அண்ணி! கொஞ்ச நேரம் அழுதுட்டு சும்மா இருந்துருவான்னு விட்டுட்டு போனா, உன் அண்ணன்காரன் கோபத்த சமாளிக்க முடியல…

நேத்து கூட, குழந்தைய இடுப்புல வச்சுக்கோ, வேலைய பார்க்காதேன்னு பொண்டாட்டிய சத்தம் போட்டுட்டு இருந்தான். இந்த அழகுல இவள மட்டும் எப்படி அனுப்பி வைக்கிறது? உன் அண்ணனும் இப்படியெல்லாம் போக சம்மதிக்க மாட்டான்.

ஏற்கனவே மாப்பிள்ளைக்கு சீக்கிரம் வரத் தெரியாதா? இன்னும் பொறுப்பு வரலையான்னு கோபத்துல கத்திட்டு கெடக்கான். எது எப்படி இருந்தாலும் சீக்கிரமா வரப்பாரு!” தங்கள் வீட்டு நிலவரத்தை பெரும் பாட்டாக பாடி மரகதம் அலைபேசியை வைக்க, இவளுக்குதான் அயர்ச்சியாய் இருந்தது.

கணவன் வேண்டாமென்று விலகிக் கொண்டாலும் அவனின் உறவுகளை இவளால் தள்ளி நிறுத்த முடியவில்லை. சொந்த அண்ணியே நாத்தனராக இருக்க, எவ்வாறு உறவை முறித்துக் கொள்ள முடியும்?

தனது சுகதுக்கங்களில் தாங்கிக் கொண்டவர்களை தட்டிக் கழிக்க இவளாலும் முடியாது. அப்படி செய்தாலும் அதுவும் நன்றி கெட்டசெயல்தான்.

தனக்குள் சிந்தித்தபடி வீட்டுக் கூடத்தில் நின்றிருக்க, அலமேலு வந்து அழைத்ததும் நிஜத்திற்கு வந்தாள்.

“என்ன சிந்தா? இப்டி திகைச்சு நிக்கிற? போயி கையலம்பிட்டு வா, சாப்பிடலாம்…” என்றழைத்துச் செல்ல, அவரைப் பின் தொடர்ந்தாள்.

மகளுக்காகவென நேரம் சென்றே சமைக்க பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அலமேலு. எந்தவொரு உணவையும் சூடாக எடுத்துக் கொண்டால் எளிதில் செரிமானமாகும், இரண்டு கவளம் அதிகமாகவும் உண்ணலாம் என மகளுக்காக  அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவர்.

சாதத்தில் பருப்பு போட்டு நெய் விட்டவர், உள்ளே சென்று சூப்பு கிண்ணத்தை கொண்டு வந்து வைத்தார்.

“சாப்பிட்டதும் சூப் வேண்டாம்மா! வயிறு டொம்னு இருக்கு… எல்லாமே தலைகீழா செய்யுற… இதெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எடுத்துக்கணும்”

“நீ இங்கேயே இருந்தா அப்படி செய்யலாம் சிந்தா! நீதான் பொழுதுக்கும் ஓடிட்டு இருக்கியே? அதெல்லாம் நீ வண்டி ஒட்டிட்டு போறதுக்குள்ள செமிச்சிடும். வேணாம்னு சொல்லாம சாப்பிடு!”

“அப்பாவுக்கு கொடுத்தியா?”

“தாத்தாவும் பேரனும் ரெண்டு டம்ளர் குடிச்சு, ஏப்பம் விட்டுட்டு தூங்கப் போயாச்சு! நீ சாப்பிட்டு செத்தநேரம் கண்ண மூடு!” அன்புக் கண்டிப்பில் கூறியவர்,

“யார் பேசின இவ்வளவு நேரமா? வர்ற கொஞ்ச நேரத்துக்கும் ஃபோன் பண்ணி கூப்பிடுறாங்களா கடையில இருந்து?” என சலித்துக் கொண்டவருக்கு, எதிரில் இல்லாத மருமகள் கயல்விழி மேலேதான் எப்போதும் கோபம் வரும்.

தொழில் இடத்தில் நிகழும் குறைபாடுகளுக்கும் மருமகளையே காரணப்படுத்துவார். மகனின் ஒவ்வொரு செயலுக்கும், மகளின் அதிகப்படியான வேலைகளுக்கும் மருமகளை பந்தாக்கிக் விளாசிக் கொண்டே இருக்கும் சராசரி மாமியார்தான் அலமேலு.

“அம்மா பேசினாங்க! சென்னைக்கு எப்போ வர்றேன்னு கேட்டாங்க!” என்று மரகதம் பேசியதை ஒப்புவிக்க,

“உங்கம்மா சொல்றதும் சரிதான் சிந்தா! நம்ம வீட்டு வேலைய நாமதான் பொறுப்பா, பக்கத்துல இருந்து செய்யனும். அவங்கவங்களுக்கும் வேலை பொறுப்புன்னு கூடிப் போயிருக்குன்னு தெரிஞ்சே, அவங்க தயவை எதிர்பார்க்கிறது தப்புடா! அம்மா சொல்றபடி கேட்டு முன்னாடியே கிளம்ப பாரு!” என வாஞ்சையுடன் மகளுக்கு புரிய வைத்தார்.

இவளுக்கு இப்படியும் ஒரு கொடுப்பினை… ஒரு தாயிடம் கண்டிப்பும் மற்றொரு அன்னையிடம் அரவணைப்பும் போட்டிபோட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளும் பாக்கியசாலி இவள்.

“நீங்க எப்போ வருவீங்கம்மா?” என அலமேலுவை கேட்க,

“இந்த வாரம் அறுப்பு(அறுவடை) இருக்குனு உம்ம அப்பாரு சொல்லிட்டு இருந்தாக! அது முடியுற வரைக்கும் என்னால அசைய முடியாது. நான் வர்றதா இல்லையான்னு அவர்கிட்ட கேட்டு சொல்றேன்… ஆனா, நீ போயே ஆகணும் சிந்தா கண்ணு!

ஊர், உறவுக்காரங்க முன்னாடி, மகன் மருமகளை கௌரவமா நிக்க வைக்கணுமுன்னு அன்னைக்கே சீர் செனத்திய வம்படியா கேட்டு வாங்கினவங்க உன் மாமியார். அவங்க இருந்திருந்தா, அதே கௌரவத்தை சீர் செய்யுறதிலயும் காட்டனுமுன்னு சொல்லியிருப்பாங்க!

அவங்க இல்லாத குறை தெரியாத அளவுக்கு, வீட்டு மருமகளா, எல்லா காரியத்தையும் பொறுப்பா முன்னாடி நின்னு முடிச்சு குடுத்திட்டு வா!” என அலமேலும் வலியுறுத்தி சொல்லிவிட, இவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

கௌரவம், சீர்வரிசை, செய்முறைகளை முன்வைத்து இவளின் மாமியார் மஞ்சுளா பேசிய பேச்சுக்களை எல்லாம் அளவுகோலில் அளந்துவிட முடியுமா? இன்று, இவள் தனிமரமாய் நிற்பதற்கு அடித்தளமே அதுதானே!

நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது சிந்துவிற்கு… ‘ச்சை… எதை மறக்க வேண்டுமென நினைக்கிறாயோ, அதையே நூலாகப் பற்றிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்’ என மனதிற்குள் அசரீரி ஒலிக்க, தலையை உலுக்கிக் கொண்டாள்.

‘இதென்ன வீணான மனஉளைச்சல்? இதற்கு முன்பு சென்னைக்கு போகாதவளா நான்? கடமையை செய்து விடுவது என்கிற முடிவினை சற்று நேரத்திற்கு முன்புதானே எடுத்துக் கொண்டேன். பின்னும் ஏன் இந்த படபடப்பு?’ என தன்னைதானே கேட்டுக் கொண்டாள்.

சிந்துவிற்கு முன்னைப்போல் சென்னைக்கு செல்வதற்கெல்லாம் வேப்பங்காயாக கசப்பதில்லை. இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாக, அண்ணன் வீட்டிற்கு சென்று தாய் மரகதத்தை பார்த்துவிட்டும் வருகிறவள்.

அப்பொழுதெல்லாம் மனதில் கல்மிசமில்லாமல் அண்ணி மிதுனாவிடமும், பெரிய நாத்தனார் சாந்தினியிடமும் முகம் சுருக்காமல் பேசி, அன்பு பாராட்டவும் செய்கிறவள்தான்.

ஆனால் இந்த முறை பாஸ்கர் வருகிறான். எப்படியும் விழாவில் மனைவி என்கிற முறையில் அவனுடன் இணைந்து நின்று முறைகள் செய்ய வேண்டும்.

இந்த எண்ணமே அவளுக்கு தடைகல்லாகி நிற்க, முதலில் முடியாது என்று மறுப்பு தெரிவித்தவள், இப்போது போவதென்று முடிவும் செய்து விட்டாள். பின்பும் ஏனிந்த குழப்பமென்று புரியாத புதிராக தோன்ற, காரணத்தையும் கண்டுபிடித்து விட்டாள். 

‘சரிதான்! ஒரு அம்மா புத்திமதி சொன்னாலே காது ஜவ்வு கிழிஞ்சிடும்! இங்கே ஒண்ணுக்கு ரெண்டு அம்மாக்கள் அட்வைஸ் பண்ணினா, இப்படிதான் மூளை குழம்பி பதட்டம் வரும். டேக் இட் ஈஸி சிந்து! சென்னை போறோம், நம்ம வேலைய முடிக்கிறோம்… திரும்பி வர்றோம்! போலாம் ரைட்…’  என மனதிற்குள் தன்னைதானே சமாதானப்படுத்திக் கொண்டு சென்னைக்கு புறப்படத் தயாரானாள் சிந்து.

பொறுப்பெடுத்து வேலைகளை செய்யப் பழகு என, ஒருவர் மாற்றி ஒருவர் அழைத்து சொல்லிய வண்ணம் இருக்க, இவளுக்கு உறுதுணையாய் நின்று, யோசனைகள் சொல்ல வேண்டியவனோ வெகு அமைதியாக இருந்தான். இன்னும் இவளை அழைத்து என்னென்ன செய்ய வேண்டுமென்று கேட்கவுமில்லை, செய் என்று அடுத்தவர் மூலமாகவும் சொல்லவுமில்லை.

‘சரியான மண்டைக்கனம் பிடிச்ச ஆளு… சுத்தி இருக்குறவங்களை சொல்ல வைச்சே, தன்னோட வேலைய முடிக்கிறாரு! எல்லாரும் சேர்ந்து சொன்னா போதும், நான் செஞ்சுடுவேன்னு தெரிஞ்சே அமைதியா இருக்காரு! யாரும் இவரை ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு தைரியம்!’ என எப்பொழுதும் போல் கணவனை மனதிற்குள் திட்டித் தீர்க்கவும் தவறவில்லை சிந்து.

மனதிற்குள் வெடித்த கோபங்களையும் ஆதங்கங்களையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள். இதெல்லாம் இவளின் வழக்கம் தானே! விழாவிற்கு இரண்டு நாட்கள் இருக்கும்பொழுது ஒருவழியாக, மகன் விபாகரனுடன் சென்னை வந்து சேர்ந்தாள் சிந்து.

“நாலுநாள் இருக்கும்போதே வா… வந்து முன்னாடி நின்னு என்ன செய்யனுமோ பொறுப்பா செய்யின்னு சொல்லிச்சொல்லி என் வாய்தான் வலிச்சு போச்சு… நீ உன் சௌகரியத்துக்குதான் வந்து நிக்கிற!” மீண்டும் தனது குற்றப் பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பித்தார் மரகதம்.

வந்தாலும் குற்றம்; வராவிட்டாலும் குற்றம். சொல்பேச்சை கேட்டாலும் குற்றம் சொல்வர்; கேட்கா விட்டாலும் குத்திக் காண்பிப்பர். அம்மா அல்லது மாமியார் இப்படி யாராவது ஒருவரிடம் கொட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது பல பெண்களின் வாழ்க்கை வரலாற்று பக்கங்களில் அங்கீகரிக்கப்படாத சட்ட சாசனம் இது.

இந்தக் கோட்பாட்டினை மாற்றியமைக்க அந்த கடவுளாலும் முடியாது. அதை வரமாகக் கேட்டாலும் ‘முடியும்… ஆனா முடியாது…’ என்ற இழுவைப் பாட்டைபாடி சடுதியில் இடத்தை காலி செய்து விடுவார். ஏனென்றால் பெண்களின் எண்ணப்போக்கு அப்படி!

மகளின் மீதான அதிருப்தியை மரகதம் அடுக்கிக்கொண்டே இருக்க, “வந்தவ கொஞ்சம் மூச்சு விடட்டும் அத்தை! உங்க உஷ்ணபேச்சுல மறுபடியும் ஊருக்கு பொட்டியக் கட்டிடப் போறா.. அப்புறம் உங்க பையன்கிட்ட நீங்கதான் பாராயணம் கேக்கணும்! நான் இடையில வரமாட்டேன்!” என மாமியாருக்கே செக் வைத்து அவரின் வாயை மூட வைத்தாள் மிதுனா.

மருமகளிடம் வாய் கிழிய பேசும் மரகதம், மகனிடம் அளந்துதான் பேசுவார். மூச்சுவிடும் இடைவெளியிலும் முன்கோபத்தில் முந்திக் கொள்ளும் பாசக்காரன் தயானந்தன்.

அவனிடம் குரலை உயர்த்தி பேச நினைத்தாலே போதும் அவர்களை கடித்து குதறி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். தயாவின் இந்த சுபாவத்தை யாராலும் மாற்ற முடிவதில்லை.

மனைவியும் அவனை மாற்றும் முயற்சியில் தோல்வியுற்று, கணவனை சமாளிக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்று விட்டாள். அதனால்தான் மாமியாரிடமும் இவளின் மிரட்டல்கள் செல்லுபடியாகின்றது.  

“அத்தை சொல்ற மாதிரி வேலை எதுவும் நெருக்கி நிக்கல சிந்து. உட்கார்ந்த இடத்துல இருந்தே முக்காவாசி வேலையும் முடிச்சாச்சு!” என அனுசரணையாக கூறினாள் மிதுனா.

“ஷப்பா… நல்ல வார்த்தை சொன்னீங்கண்ணி! அம்மா குடுத்த பில்ட்-அப்ல எந்த வேலை, எப்படி செய்யணும்னு குழம்பிட்டே வந்தேன்! எப்படி முடிச்சீங்க?” சிந்து மகிழ்ச்சியுடன் கேட்க,

“எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்ல பாஸ்கர் முடிச்சிட்டான் சிந்து! அஞ்சனாக்கு காக்ராசோளி ஆர்டர் போட்டது, வந்து தைக்கவும் குடுத்தாச்சு… நகைய அவன் புனேல இருந்து வரும் போது வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டான்.

மேக்கப்செட் என்னென்ன வேணுமோ, அதையும் பாப்பாக்கு பிடிக்கிற மாதிரியே ஆன்லைன்ல போட்டு விட்டுட்டான். இப்போ மிச்சம் இருக்கிறது பித்தளை பாத்திரம் வாங்கறது, சேலை எடுக்கணும், வெத்தலை, பூ, பழம் மட்டும்தான்! இதெல்லாம் ஒருநாள்ல முடிச்சுடலாம்…” என ஒவ்வொன்றாக மிதுனா சொல்லிக் கொண்டே போக, சிந்து தன்னிலிருந்து இறங்கிக் கொண்டே வந்தாள்.

“அப்படியா… எல்லாமே முடிச்சாச்சா?” சுரத்தில்லாமல் இவள் கேட்க,

“பெரியப்பா, சித்தாப்பா, மாமாக்களுக்கு மட்டும் ஒரு தடவ ஃபோன் போட்டு விசயத்த சொல்லி, வாங்கன்னு கூப்பிடனும் அதை பாஸ்கர் வந்தபிறகு, நீயும் அவனும் சேர்ந்தே சொல்லிக்கலாம்” என அனைத்தையும் கூறிவிட்டு மிதுனா சென்றுவிட, இவளுக்குத்தான் தாளம் தப்பிப்போனது.

‘ஓ… எல்லாம் முடித்தாகி விட்டதா? நான் வந்து செய்வதற்கு ஒன்றுமில்லை என்றால், வருத்தி எடுக்காத குறையாக என்னை ஏன் அழைக்க வேண்டும்? என்றைக்கும் நான் ஒரு பொருட்டாக யாருக்கும் தோன்றவே மாட்டேனா?’ என மனதோடு மருகியவளின் கோபம், எரிச்சல், வருத்தம் அனைத்தும் ஒன்றாக வெடிக்க, கண்ணீர் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் அவசரமாய் குளியலறையில் தஞ்சமடைந்து விட்டாள் சிந்து.

மனம் ஒட்டாத மணவாழ்வின் பகிரங்கமான அத்தாட்சிகள் தான் இவையெல்லாம். ஆற்றாமைகள் மட்டுமே கொட்டிக் கிடந்தன அவளின் மனதிற்குள்… ‘ஏன் இப்படி இருக்கிறேன்? இவ்வளவுதானா நான்?’ என தன்னைத்தானே கடிந்து கொண்டாள். ஏனோ மனம் அவளை பலவீனமாக்கி பயமுறுத்தியது.

தெளிவு, நிதானம் இந்த இரண்டுமே தன்னை செதுக்கி இருக்கிறது என்று, நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் பொய்யா? தன்னிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத பேதையாகிப் நின்றாகி.

ஏற்கனவே வெடித்து சின்னாபின்னமாகிய இவளின் அகமும் புறமும், கணவன் தன்னை முற்றிலுமாக தவிர்க்கத் தொடங்கி விட்டான் என இவளின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டிட, இல்லாத குழப்பங்களும், கலவையான வருத்தங்களும் அவளைச் சூழ்ந்து கொண்டன. இதன் தாக்கத்தில் கணவனின் மேல், முன்னிலும் விட அதிக கோபத்தை ஏற்றி வைத்துக் கொண்டாள்.

‘யாருக்கும் நான் தேவையில்லை… என்னை முக்கியமாய் கருதவில்லை’ என்ற தன்னிரக்கமே அலைகழிக்க, அதை வெளியில் காட்டிக்கொள்ள முடியாத அவலநிலை வேறு அவளை வதைத்தது.

இந்த வெளிப்படையான புறக்கணிப்பு, தான் ஆரம்பித்து வைத்த சித்து விளையாட்டின் எதிரொலி என்பதை ஏனோ புரிந்து கொள்ள மறந்து போனாள். இதுவும் ஒருவகை சுயநலம்தான்.

தங்கள் நிலையில் இருந்து, இறங்கி வராமல் காரியங்களை சாதித்து கொள்வதிலும் ஒற்றுமைதான் இருவருக்குள்ளும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!