தண்ணிலவு தேனிறைக்க… 6

TTIfii-5a88ece4

தண்ணிலவு தேனிறைக்க… 6

தண்ணிலவு – 6

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்!

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்!

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்…

திரை போட்ட போதும்

அணை போட்டதில்லை!

மறைத்திடும் திரைதனை

விலக்கி வைப்பாயோ…

விளக்கி வைப்பாயோ…

 

ஹெட்போனின் வழியாக பாடல் கசிந்து கொண்டிருந்தது.  அதற்கு இடைஞ்சலாக ஒலித்த நெபுலைசர் மிஷினின் ‘கிர் கிர்’ சத்தம் சட்டென்று நின்றுவிட, உடல் மொத்தமும் அதிர்ந்து கண் விழித்தாள் சிந்தாசினி.

மருந்து முடிந்ததும் மிஷினை நிறுத்திய பாஸ்கர், மெதுவாக அவளின் மாஸ்கை கழட்டி, ஸ்டாண்டில் மாட்டிவிட்டு மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

மடிக்கணினியில் எதையோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து, “எதாவது வேணும்னா சொல்லு சிந்தாசினி!” என கனிவாய் கூறியவனின் குரலை இவளால்தான் நம்ப முடியவில்லை.

‘இவனுக்கு இப்படியெல்லாம் கூட அன்பாக பேசத் தெரியுமா? அதுவும் என்னிடம்…’ எண்ணியவள், தன்னை பாவப்பட்ட ஜீவனாகவே இன்னமும் நினைத்துக் கொண்டாள்.

இவன் என்னவோ சாதாரணமாகதான் பேசுகிறான். இவளால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்குள்ளேயே இன்னுமின்னும் இறுகிக் கொண்டிருந்தாள்.

கணவனுக்கு சொல்ல வேண்டிய பதில்கள் கூட தலையசைப்பிலும், ‘ஆம் இல்லை’ என்ற ஒற்றை வார்த்தையில் மட்டுமே வெளிவருகின்றது.

அதற்குமேல் பேச விரும்பினாலும் இவளின் மனநிலையோ உடல்நிலையோ அனுமதிக்கவில்லை. உடன் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கும் கையை அசைக்கமுடியாத கஷ்டம் வேறு.

உடல் முழுவதும் அடித்துப் போட்டது போன்ற வலி. அதையும் தாண்டி, இரண்டு கைகளிலும் மாற்றிமாற்றி குத்திய வென்ஃப்ளானின் ரணமும் சேர்ந்து, அவளுக்கு நரகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.

கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையின் தனியறை அது. காய்ச்சல், மயக்கம், இருமல் இத்யாதி பட்டியல்களோடு இவள், இங்கே சேர்ந்து ஐந்து நாட்கள் கடந்தாகி விட்டது.

மூன்றுநாள் தொடர் காய்ச்சல், இன்று சற்றே தணிந்திருந்தாலும், இருமலும் சளியும் உச்ச நிலையிலிருக்க, தினமும் ஐந்துமுறை நெபுலைசரில் மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து நாட்களும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இடையில் கொரானாவாக இருக்குமோ என சந்தேகித்து  ஸ்வாப் டெஸ்டும், நுரையீரலுக்கு சி‌டி ஸ்கேனும் இன்னபிற பரிசோதனைகளும் எடுத்து, இவளை பூரண நோயாளி அந்தஸ்தை கொடுத்திருந்தது மருத்துவமனை.

இன்னும் எத்தனைநாள் இந்த அவஸ்தையோ என நொந்து கொண்டவளின் எண்ணமெல்லாம், இங்கே வந்து சேர்ந்த அவலத்தை மட்டுமே நொடிக்குநொடி நினைத்துப் பார்த்தது.

அன்று கணவனின் அக்கறையான கேள்வியை கவனத்தில் கொள்ளாமல் சிந்து, தன்போக்கில் மண்டபத்தை வலம் வந்து கொண்டிருக்க, உடலின் வெப்பநிலையும் வெகுவாக மாற்றமடையத் தொடங்கியிருந்தன.

தனக்குள் சரியில்லையென்று மூளை எச்சரித்தாலும் என்னவாகிவிடப் போகிறது என்ற அசட்டையான மனோபாவத்தில் அப்படியே இருந்து விட்டாள்.

கைவசம் மாத்திரை இருந்திருந்தால், போட்டுச் சமாளித்திருக்கலாம். இவள் வாயைத் திறந்து கேட்டால் ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு பதிலையும் சொல்லி, பெரியவர்களிடம் பாரபட்சமின்றி திட்டுகளையும் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதையெல்லாம் யார் தாங்கிக் கொள்வதென்ற அலட்சியத்தில் மேதாவியாய் இருந்துவிட, சரியாக நான்கு மணியளவில், தலைசுற்றி விழுந்து அனைவரையும் கலங்கடித்து விட்டாள்.

விழா களேபரங்கள் முடிந்து அனைவரும் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், விழாவிற்கும் கணவனின் அன்றைய ஆட்டத்திற்கும் சேர்த்தே திருஷ்டி எடுத்ததுபோல், உடல் கொதிப்பில் மயங்கி விழுந்திருந்தாள் சிந்தாசினி.

உடனே தண்ணீர் தெளித்ததும் கண் திறந்தவள், தலைசுற்றலில் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள அனைவரின் மனதிலும் கலவரம் கூடிக் கொண்டது.

உடலும் முகமும் நொடியில் சிவப்பேறிக் போக, சற்றும் தாமதிக்காமல் தயாவும் பாஸ்கரும் சேர்ந்து, இவளை மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு வந்திருந்தனர்.

காய்ச்சலின் வீரியத்தில் ரத்த அழுத்தமும் குறைந்திருக்க, கண்ணை மூடியவள், முழிப்பதற்கே நான்கு மணிநேரம் கடந்து விட்டிருந்தது.

குழந்தைகளின் வாய்மொழியின் மூலம் சிந்தாசினி மண்டபத்தில் குளிர்பானம் எடுத்துக் கொண்டதை அறிந்த பெரியவர்கள், அப்பொழுதே இவளை கடிந்து கொள்ள ஆரம்பிக்க, அன்றைய நாளின் மிச்சசொச்ச நேரங்கள் பெரும் அவஸ்தையுடன்தான் கழிந்தன.

காய்ச்சல் எனக் கூறியதும், இவள் தனிமையில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட, உடன் ஒருவர் இருக்கலாம் என்கிற விதியில் கணவன் பாஸ்கர் அவளுடன் தங்கிக் கொண்டான்.

வயதானவர்களை விடக்கூடாது என்று இரண்டு அம்மாக்களையும் தவிர்த்து விட, மிதுனாவும் தயாவும் வீடு, குழந்தைகள் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமிருக்க, எஞ்சியிருந்தது பாஸ்கர் மட்டுமே! சாந்தினிக்கும் அன்றைய நாளின் மீதி வேலைகள் சூழ்ந்திருந்தன.

மனைவியின் திடீர் உடல்நிலை பின்னடைவில், தானாகவே சிந்துவை பார்த்துக் கொள்வதாக ஒத்துக் கொண்டான் பாஸ்கர். என்றுமில்லாத பதட்டமும் படபடப்பும் முதல்முறையாக தாக்க, இவனுமே ஒய்ந்து போனான்.

மருத்துவமனைக்கு வந்த இரண்டு நாட்கள் வரை அதீத அயர்ச்சியிலேயே கழித்தவளுக்கு, உடன் யார் இருக்கிறார் என்றெல்லாம் கூட அனுமானிக்க முடியவில்லை.

முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு, தலைக்கவசத்துடன் வருபவரை உற்றுப் பார்க்கும் திராணியில்லாமல், கண்களை மூடியே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் சிந்து.

மூன்றாம்நாள் காய்ச்சல் சற்றே குறைந்து, காட்சிகள் தெளிவாக தெரிய ஆரம்பித்ததில், அருகிலிருப்பவன் கணவன்தான் என்றுணர்ந்து கொண்ட பிறகு, இவள் மனம் அடைந்த அதிருப்திக்கு அளவே இல்லை.

மனம் வெறுத்த நிலையில் தன்னை நினைத்து உள்ளுக்குள் குமைந்து போனாள்.

‘எனக்கு நல்லா வேணும்! குழந்தைகளுக்கு போட்டியா எடுத்துக்க போயி, இப்ப யாரை வேண்டாம்னு சொல்றேனோ, அவரோட கவனிப்புலதான் இருக்கேன்.

இந்த அழகுல இவர்கூட பேசமாட்டேன், பார்க்க மாட்டேன்னு வீராப்பு வேற… இப்போ இவரை விட்டா யார் மொகத்தையும் பார்க்கவோ பேசவோ முடியாது. கடவுளே எனக்கு ஏன் இந்த தண்டனை?’ மனதிற்குள் தன்னைதானே வசைபாடிக் கொண்டவளை இமைக்காமல் பார்த்தான் பாஸ்கர்.

“இப்போ எப்படியிருக்கு சிந்தாசினி? தலைபாரமெல்லாம் இறங்கிடுச்சா?” மிகஅருகில் வந்து நெற்றிச் சூட்டை சோதித்து பார்க்க, இவள் உதட்டை சுளித்துக் கொண்டு அதிருப்தி காட்டினாள்.

“நிமிசத்துல எங்களை பயமுறுத்திட்ட! நீ ரொம்ப நேரம் கண்ணை திறக்காம இருக்கவும் எல்லாரும் தவிச்சுப்  போயிட்டோம்” அன்றைய சூழ்நிலையை விளக்க, ‘இதெல்லாம் கூட நடந்திருக்கா’ என இவளின் மனம் அதிர்ந்து விட்டது.

“உன்னை, நான் தூக்கினதும்தான், நீ மயங்கிட்டேன்னு விபுக்கு விளங்கியிருக்கும் போல… பாவம், தம்பி பயந்து போயி அழ, அவனைப் பார்த்து எல்லா குழந்தைகளும் அழ ஆரம்பிச்சுட்டாங்க!” வருத்தம் தோய்ந்த குரலில் கணவன் சொல்லச்சொல்ல,

‘அடகடவுளே! குழந்தைகளையுமா சேர்த்து பயமுறுத்தி வச்சேன்’ என பரிதவித்தவள், நொடியில் கணவனை பார்த்து,

‘போயும் போயும் உன் கையில தானா நான் சவாரி செய்யணும்?’ உள்ளுக்குள் தன்னைதானே கடிந்து கொண்டாள்.

“டாக்டர் அப்படி திட்டுறாரு! ஒத்துக்காதுன்னு தெரிஞ்சுமே கூலிங் அயிட்டம் ஏன் இவ்வளவு எடுத்துக்கறீங்கன்னு கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல சிந்தாசினி. இனிமே இவ்வளவு அசால்ட்டா இருக்காதே! Hb லெவல் ரொம்ப கம்மியா இருக்காம்… இப்டி இருக்குறது நல்லதுக்கில்லன்னு சொல்றாங்க! ஒழுங்கா மருந்து எடுத்துக்கோ!” அவன் அறிவுறுத்தலை கேட்டுக் கொண்டதின் அடையாளமாக, இவள் அமைதியாக இருந்தாள்.

வேறென்ன செய்ய முடியும்? இவனுடன் வார்த்தையாடுவதற்கு இவளுக்கு இப்பொழுது தெம்பும் இல்லை பிடித்தமும் இல்லை. பேசப் பிடித்தால்தானே மனமார சண்டையும் போட முடியும்?

‘ச்சே… என்ன வாழ்க்கையோ? இவரோட சண்டை போடுறதுக்கு கூட பேசப் பிடிக்கல…’ உள்ளுக்குள் நொந்தவளிடம்,

‘பேசாமா இருந்து சண்டை போட மட்டும் பிடிக்குதா?’ எகத்தாளமாய் கேட்ட, மனசாட்சியை அடங்கு சாத்தானே என அதட்டி, அடக்கி வைத்தாள்.

இரண்டு நாட்களாக பேசாமடந்தையாக நாட்களைக் கழிக்க, பாஸ்கரும் மடிக்கணினியில் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இவளின் அருகினில்தான் இருந்தான்.

கண்ணே, கண்மணியே என்றெல்லாம் உருகவோ, மனமுருகி தோள் சாய்த்துக் கொள்ளவோ என அதிகப்படியாக எதையும்  இவன் செய்து விடவில்லை. என்ன தேவையோ அதை பொறுப்பாய் பார்த்து கவனித்தான். அதில் இம்மியளவும் குறை வைக்கவில்லை.

உணவை அருகில் எடுத்து வைக்க மட்டுமே அனுமதிப்பவள், சிறிதளவு உணவையும் பிடிவாதமாக தானாகவே கரண்டியின் மூலம் எடுத்துக் கொள்வாள் சிந்தாசினி. கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

அவசரதேவைக்கும் கூட தானாகவே டிரிப்ஸ் எடுத்து விட்டு சென்றுவரும் அளவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

இன்றும் நெபுலைசர் முடிந்த சிறிது நேரத்தில் மதியம் குடிக்கும் சூப் வந்துவிட்டிருக்க, ஸ்பூன் மூலம் அதை கொடுக்க முயன்றவனை தடுத்து இவளாகவே எடுத்துக் கொள்ள, கைகளும் நடுக்கம் கொண்டது.

“இவ்வளவு வீக்கா இருக்கும் போதும் நீயாவே எடுத்துக்கனுமா? நான் குடுக்கறேன்…” பாஸ்கர் வாங்கப் போக,

“போதும்…” என்ற ஒற்றை பதிலில் அமர்ந்த நிலையிலேயே கண்களை மூடிக் கொண்டாள்.

அவ்வளவுதான் பேச்சு முடிந்தது. இனி அடுத்து எதையாவது இவனாக கொடுக்கும் போது மட்டுமே பேசுவாள். அதுவரையில் அலைபேசியில் பாட்டும் அமைதியும் மட்டுமே அந்த அறையில் நிறைந்திருக்கும்.

ஒன்றும் செய்ய இயலாதவனாக மனைவியின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கும், இதற்குமேல் தனது பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. இப்பொழுது இவளின் ஒற்றை பதிலில் வெகுண்டவன்,

“நான் இடையில வாங்க வராம இருந்திருந்தா, நீ முழுசா இந்த சூப்பை எடுத்திட்டு இருப்பே தானே சிந்தாசினி?” என அடிக்குரலில் சீறியபடியே கேட்க, இவளுக்கும் பதிலுக்கு சீற்றம் வந்தாலும் பல்லைக் கடித்து அமைதி காத்தாள்.

“என்னை பழி வாங்கறதா நினைச்சு உன்னை, நீயே பலவீனப்படுத்திக்கிற… கொஞ்சம் சகஜமா இரேன்!” அக்கறையாக சொன்னவனின் குரலில் கண்ணைத் திறந்தவள்,

“ம்ப்ச்… போதும் உங்க கரிசனமெல்லாம்… சகிக்கல எனக்கு…” கணவனின் முகத்திற்கு நேராகவே வெடித்து,

“பெரிசா வந்துட்டார்… இவ்வளவுநாள் எங்கே போயிருந்தாராம்?” என்றவளின் ஆற்றாமை மொழி அவனுக்கும் கேட்கத்தான் செய்தது.

‘இதென்னடா புது வம்பு? இதுபோல இன்னும் எத்தன சொல்லப்போறாளோ?’ நினைக்கும்போதே இவனுக்கு மனம் அயர்ந்து விட்டது.

‘இவள் விலகி நின்றதில் தவறில்லை, நானாக வந்து பார்க்காதது மட்டும்தான் தவறா’ மனைவியின் பதிலில் அதிர்ந்து தெளிவாக குழம்பிக் கொண்டான் பாஸ்கர்.

இருவர் மீதும் தவறிருக்கும் பட்சத்தில் அன்புடன் பொறுமையாக பேசிக் கொண்டாலே சரியாகப் போய்விடுமே… அதையே முயற்சிப்போம் என்ற காலம் கடந்த யோசனையை இப்போது செயல்படுத்த முனைந்தான்.

“ரியலி வெரி சாரி! உனக்கு மட்டுமில்ல எனக்குமே நிறைய கஷ்டங்கள்… தப்பு ரெண்டு பக்கமும் இருக்கு…  போதும் முற்றுப்புள்ளி வைக்கலாமே! விபுவை பார்க்க வேண்டாமா?” மகனின் நினைவும் சேர்ந்துகொள்ள நிதானமாகப் பேசினான் பாஸ்கர்.  

“உங்களைப் பொறுத்தவரை, நான் எப்பவும் யூஸ் அண்ட் த்ரோ டிஷ்யூ பேப்பர்தானே? இப்ப என்ன புது அக்கறை?” தேளின் கொடுக்காக இவள் வார்த்தைகளை கொட்ட,

“ஏன் இப்படி? ஒரு சக மனுசனா கூட உன்னை தாங்கிக்க கூடாதா?” கேட்டவனுக்கும் ஆத்திரம் வந்துவிட,

“இப்படிதான் நானும் நினைச்சேன்! அப்ப எல்லாம், யாருக்கோ வந்த விருந்து மாதிரிதானே நின்னுட்டு இருந்தீங்க!” வெகுண்டவளின் குரலில் கனன்ற கோபத்தை கண்களில் ஏற்றாமல் இருக்க அரும்பாடுபட்டாள்.

“அத்தனை பேர் முன்னாடி, அம்மாவை எதிர்த்து பேச முடியுமா?” தனது நியாயத்தை இவன் முன்வைக்க,

“அதுக்கு என்னைத்தான் உயிரோட புதைக்கணுமா?” வார்த்தைக்கு வார்த்தை கணவனை கூறு போட ஆரம்பித்தாள் சிந்தாசினி.

இவளின் பேச்சை கேட்ட பாஸ்கருக்கும் எதுவும் ஓடவில்லை. ‘இதுக்குதான் எதுவும் பேசமா இருந்தது’ அலுப்பாக நினைத்துக் கொண்டே,

“ம்ப்ச்… இன்னும் என்னடி… எதையும் மறக்க மாட்டியா?” சலிப்பு தட்டியபடி கேட்க,

“உங்கள மறந்தாதானே, நடந்த எல்லாமும் மறந்து போறதுக்கு..” என்றவளின் உடல்மொழியும் விசும்பலை அரங்கேற்ற தயாராக இருந்தது.

வெறுப்புடன் சொன்னாலும் உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பூசிமொழுகாமல் சொல்லி விட்டாள்.

மனைவியின் இந்த பதிலில் கணவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என்னை மறக்க முடியவில்லை என்கிறாளா அல்லது நடந்த அவலத்தை மறக்கவே மாட்டேன் என்கிறாளா?

“அப்படின்னா… முடிஞ்சு போனத நினைச்சுட்டே, இப்படியே இருக்குறதா முடிவு பண்ணிட்டியா? நம்ம வாழ்க்கை அவ்வளவு தானா?” இயலாமை இழையோடியது பாஸ்கருக்கு…

“நான் விலகிப் போகவும், விட்டது தொல்லைன்னு ஒதுங்கிப் போயிட்டீங்க! இதுல நம்ம வாழ்க்கை எங்கே இருந்து வந்தது?” இடைவெளியில்லாமல் குற்றச் சாட்டுகளை அடுக்கிகொண்டே போக, எப்படி சமாதானப்படுத்துவது என்று இவனுக்கு தெரியவே இல்லை.

முன்னபின்ன செத்தாதானே சுடுகாடு தெரிவதற்கு… அப்படிதான் இவனது நிலைமையும்… மனைவியை ஆறுதல்படுத்துவது எப்படி என்ற பயிற்சி வகுப்பு இருந்திருந்தால், முதல் ஆளாக ஓடிபோய் சேர்ந்திருப்பான் பாஸ்கர். இப்போது எதுவும் தெரியாமல், புரியாமல் அமைதியாக நின்றிருந்தான்.

இவனைப் பொறுத்தவரையில் பெரிய மனதுடன் தவறையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டேன், இனி நீயாகத்தான் சரியாகி வரவேண்டும் என்ற மேம்போக்கான எண்ணமிருந்தது. இன்று வரையிலும் அதே எண்ணத்துடன் தான் மனைவிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். 

ஆனால் இவள் சொல்வதைப் பார்த்தால் எல்லாமே தலைகீழ்… நான் மட்டுமே குற்றவாளி; இவள் என்றுமே நியாயவாதி என்று முழங்கிக் கொண்டிருக்கிறாள்.

“இப்பவும் உங்க கௌரவத்த ஊருக்கு காட்டத்தான் நான் தேவைபட்டுருக்கேன்… இல்லன்னா இன்னமும் அங்கதானே உட்கார்ந்திட்டு இருந்திருப்பீங்க? இருக்கேனா செத்தேனான்னு கூட பார்க்க முடியலல்ல…” நடுங்கும் குரலில் தன் வேதனையை, கணவனின் குற்றமாகவே சொன்னாள்.  

“நான் அன்னைக்கு பேசினேனே சிந்தாசினி… நீதான் பேசல…” அன்று மகனின் மூலமாக பேச அழைத்ததை பாஸ்கர் கூற,

“ம்ம்… எப்போ? ஏழு வருஷம் கழிச்சு… உங்க குடும்ப மரியாதைக்கு, உங்க கௌரவத்துக்கு நான் தேவைபடுறப்ப தானே உங்களுக்கு என் ஞாபகம் வந்தது!” கோபமும் குரோதமும் ஆட்சி செய்து, கண்ணீரும் கீழிறங்க, பதட்டத்துடன் தண்ணீரை குடிக்க வைத்தான் பாஸ்கர்.

“ம்ப்ச் என்ன இது? உடம்பு சரியில்லாத நேரத்துல… நான் வேற… அழுகாதடி!” கண்ணீரை துடைத்த கணவனின் அக்கறையில் இவளுக்கு இன்னமும் அழுத்தத்தை தந்தது.

“எதுவும் தேவையில்ல… எப்பவுமே சுயாம நிக்க தெரியாத ஆளு… இப்ப யார் சொல்லி இதையெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்க?” ஒட்டுமொத்த தன்மானத்தையும் உரசிப்பார்த்த மனைவியின் கேள்வியில், ரோசம் பொத்துக் கொண்டு வந்தது பாஸ்கருக்கு…

“ஆமாடி… அம்மாவுக்காக நாலு பேருக்கு முன்னாடி கேவலப்பட்டு நின்னேன்… பொண்டாட்டி விருப்பமும், பேச்சும்தான் முக்கியம்னு, அவள திரும்பி பார்க்காம இருந்தேன்! நான் சூடு சொரணை இல்லாதவன்தான்.

நீதான் எல்லாமே அதிகமா இருக்குற ஆளாச்சே… நீ எதுக்கு உன் உரிமையை விட்டுக் கொடுத்துட்டு நின்ன? புருஷன் சட்டைய பிடிச்சு கேள்வி கேக்கறத விட்டுட்டு, உன்னை யாரு ஓடி ஒளியச் சொன்னா?

நாலுபேர் முன்னாடி பாவமா உன்னை யாரு நிக்கச் சொன்னா? சண்டை போட்டுருக்க வேண்டியதுதானே… ஏன் செய்யல?” சினமேறிய குரலில் இவன் ஆவேசமாய் கேட்க, சிந்துவின் உடல் மொத்தமும் நடுங்கத் தொடங்கியது.

இத்தனை கோபத்தை இவள் பார்த்ததில்லை? இவளை திட்டியிருக்கிறான்தான்… ஆனால் இப்படி முகம் சிவந்து குரோதத்துடன் பேசியதில்லை.

சற்று முன்னால் கனிவாய் நோக்கியவனும் இவன்தான்… இப்போது கோபத்தில் கேள்விகள் கேட்டு வதைப்பவனும் இவன்தான்! இன்னும் எத்தனை முகங்களோ இவனுக்கு…

மனம் தன்போக்கில் கணவனை எடைபோட்டுக் கொண்டிருக்க, சிந்தாசினிக்கு நடுக்கத்தோடு படபடப்பும் கூடிப் போனது. மனைவியின் உடல்மொழியை கூட கவனத்தில் கொள்ளாது தனது கோபத்திலேயே நின்றவன்,

“என்ன ஊமையாகிட்ட? நீ ஏன் உன் உரிமைய விட்டுக் கொடுத்த? புள்ளைக்கு அப்பாவா மட்டுமே இருன்னு வீரமா பேசிட்டா, நீ தைரியசாலியா? அதைச் சொல்ல நீ யாரு? ரொம்ப தெளிவுன்னு நினைப்பா உனக்கு…

நீ சுத்த கோழைடி… எங்கே, என்கூட நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாதோன்னு பயம் வந்துடுச்சு உனக்கு… என்மேல நீ நம்பிக்கை வைக்கல… கேட்டா நான் சரியில்லன்னு அரதப்பழசான உன்னோட நியாயத்தை கட்டிட்டு தொங்க ஆரம்பிச்சுடுவ… அப்படிதானே?” காறித் உமிழாத குறையாக மனைவியின் கண்களை உறுத்து விழித்தான். 

‘நீ என்மேல் சுமத்திய குற்றங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? இதோ என் ஆட்டத்தைப் பார்’ என்ற எகத்தாளம் தொக்கி நின்றது அவனது பேச்சில்…

அழைக்காமல் வரவேண்டுமென்று மனைவி எதிர்பார்த்திருக்க, உரிமையோடு நிற்காமல் ஏன் உதறிக்கொண்டு போனாய் என கணவன் ஏமாற்றம் அடைந்திருக்கிறான். இழப்புகளும் தவறுகளும் இருபக்கமும் சரிசமம் தான்.   

ஆகமொத்தம் இருவரும் சளைக்காமல் பேசிக் கொண்டதில், சிந்தாசினி வீரியத்துடன் வீசிய பந்து, மீண்டும் அவளிடமே வீரியம் குறையாமல் தஞ்சமடைந்தது.

இத்தனை வருடங்களாக மனதிற்குள் இருந்த பாரம் இறக்கி வைத்ததைப் போல் பாஸ்கர் பெருமூச்சு விட்டுக்கொள்ள, இன்னும் அதிர்ச்சி மீளாமல் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்தாசினி.

இவளின் வெறித்த பார்வையே பரிதாபத்தை வரவழைக்க, ‘ச்சே… உடம்பு சரியில்லாதவட்ட போயி என் கோபத்தை காமிச்சுட்டேனே! சுத்த அறிவுக்கெட்டவன்தான் நான்’ என தன்னைதானே கடிந்து கொண்டவன்,

ஆறுதல்படுத்தவென அருகில் வந்து அவளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ள, மனைவியின் உடல் இன்னும் அதிகமாய் நடுக்கத்தை வெளிப்படுத்தியது. மீதமிருக்கும் கோபத்தை தன்மீது காண்பிக்க வருகிறானோ என முடிவு செய்து கொண்ட சிந்து,

“இப்போ என்னை அடிக்க போறீங்களா மாமா? அதுக்கெல்லாம் தயங்காதவர்தான் நீங்க…” நடுங்கிய குரலில் துணிந்து சொல்ல,

“என்ன பேசிட்டுருக்க நீ?” என பல்லைக் கடித்தவனுக்கு பொறுமையும் கைவிட்டுப் போய்விடும் அபாயத்தில் இருந்தது.

“நான் கோழையாவே இருந்துட்டு போறேன்! நீங்க சொல்ற என்னோட பயம்தான், உங்கமேல கோபமா மாறிடுச்சு… இன்னும் அது குறையல… இனியும் அது குறையாது. என்னை இப்படியே விட்டுட்டுங்க மாமா…” தடுமாற்றத்துடன் வந்து விழுந்த வார்த்தைகளில் கணவனை உரிமை கொண்டாடிக் கொண்டாள்.

“விசத்தோட மருந்த கலக்குறடி! மறக்கலன்னு சொல்ற… மாமான்னு கூப்பிட்டு, விலகியே நில்லுன்னு கொல்றியே? உனக்கே நியாயமா இருக்கா? நடந்த எல்லாத்தையும் மறந்திடுவோம்… புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்” கெஞ்சலாய் கோரிக்கை வைத்தான் பாஸ்கர்.

“மாட்டேன்… என்னால முடியாது” மறுப்புடன் வேகமாய் இவள் திரும்பிக் கொள்ள, டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கையும் சேர்ந்தே இழுக்கப்பட்டதில், ஊசி பிய்த்துக் கொண்டு வந்து வேகமாய் ரத்தமும் வெளியே வரத் தொடங்கியது.

“ஒஹ் காட்… என்ன காரியம் பண்ணிட்டடி? கொஞ்சமும் பொறுப்பில்ல உனக்கு” இவன் பதைத்துக் கொண்டே, பஞ்சை வைத்து அந்த இடத்தில் அழுத்தினாலும் நிற்காமல் ரத்தம் கசிய ஆரம்பித்தது.  

பாஸ்கர் அவசர உதவிக்கு சுவிட்சை அழுத்தும் நேரத்தில், ஏற்கனவே நடுக்கத்திலும் படபடப்பிலும் இருந்த சிந்தாசினி, அதிக ரத்தம் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.

 

நீ எது நான் எது

ஏனிந்த சொந்தம்

பூர்வ ஜென்ம பந்தம்…

இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்…

இது என்ன பாடம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!