தண்ணிலவு தேனிறைக்க… 7

TTIfii-a8e8dd2b

தண்ணிலவு தேனிறைக்க… 7

தண்ணிலவு – 7

பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்

இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்

மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே

காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே

கலைந்து பிரிந்த மேகங்கள்…

இழந்த காதல் சோகங்கள்…

 

அரைமணிநேர அவஸ்தைகள் அவசரமாய் கழிய, சிந்தாசினிக்கு சிகிச்சையளித்து உறங்க வைத்திருந்தனர் மருத்துவமனை செவிலியர்கள். அமைதியாக மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருக்கு இன்னமும் பதட்டம் குறையவில்லை.

அந்த நேரமே இவளைப் பார்க்க வரும் மருத்துவரும் வந்துவிட, அடுத்தடுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்டபடியே, அவனுடன் பேச ஆரம்பித்தார்.

“நத்திங் டு வொரி மிஸ்டர் பாஸ்கர்… லைட்டா பீபீ பல்ஸ் ரேட் ஹை ஆகியிருக்கு. மத்தபடி எந்த ப்ராபளமும் இல்ல… வாட் ஹாப்பெண்ட்?” நடந்ததை அனுமானித்தபடியே கேட்க,

“கொஞ்சம் எமோசனல் ஆகிட்டா… தட்ஸ்ஆல் டாக்டர்!” பாஸ்கர் பட்டும் படாமலும் கூற,

“இட்ஸ் ஒகே… பட், இப்ப எதையும் திங் பண்ண வேண்டாம்னு அட்வைஸ் பண்ணுங்க… முடிஞ்சவரை அவங்க அமைதியா இருக்கட்டும்” அடுத்தடுத்து அவர் சொல்லிக் கொண்டேபோக, இவனுக்கு மனம் படபடக்க தொடங்கியது.

“எனிதிங் சீரியஸ் டாக்டர்? இங்கே வர்றதுக்கு முன்னாடியும் மயங்கி விழுந்தா… திரும்பவும் இப்ப…” என அச்சம் விலகாமல் கேட்டவனை ஆராய்ச்சியாக பார்த்த மருத்துவர் சிரித்துக் கொண்டார்.

‘பயப்பட வேண்டாம் பாஸ்கர்… இந்த காலகட்டத்துல இதெல்லாம் சாதாரணம்தான். உலகத்துல பாதிக்கும் மேல இப்படிதான் இருக்காங்க! முக்கியமா இருபதுல இருந்து முப்பத்தஞ்சு வயசுக்குள்ள இருக்குற லேடீஸ்க்குதான் இந்த பிரச்சனை வருது.”

“புரியல டாக்டர்? சாதரண மயக்கம்தானே இது?”

“ஐ திங், ஷி ஹாஸ் அஃபெக்டட் டு பார்டர்லைன் பெர்சனாலிட்டி(Borderline Personality). தனக்குதானே  அன்செக்யூர்டா ஃபீல் பண்றது, நெருக்கமானவர்களோட உதாசீனம், பழக்கமில்லாத வேலைப்பளு, எதிர்பாராம நடக்குற காதல், திருமணம், கர்ப்பகாலம், பிள்ளைபேறு இப்படி அடுக்கடுக்கா பெண்களைத் தாக்கும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட ஆரம்பிக்கிறாங்க… பதட்டம், பயம், நடுக்கம் வரும்போது ரொம்ப சீக்கிரமாவே இவங்களுக்கு மயக்கம் வந்திடும்!” என மருத்துவர் விளக்கம் கூறிக் கொண்டேவர, ஸ்தம்பித்து நின்றான் பாஸ்கர்.

சிந்தாசினியின் நிலையும் ஏறக்குறைய இப்படிதானோ! இவை எல்லாவற்றிக்கும் காரணம் நான் மட்டும்தானா என எண்ணும்போதே பிரச்சனை பூதாகாரமாகின்றதோ என மலைத்து விட்டான்.  

“இதனால ஒண்ணும் பிரச்சனை இல்லையே டாக்டர்? ட்ரீட்மெண்ட் எப்படி?” வார்த்தைகளை மென்று முழுங்கியபடியே பாஸ்கர் கேட்க,

“நல்ல சத்தான உணவு, நல்ல உறக்கம், அன்பான அரவணைப்பு, கொஞ்சம் கூடுதலான கவனிப்பு இதுவே போதும் இவங்க மீண்டு வர்றதுக்கு… இந்த பாதிப்பு வெளியே தெரியறதே ரொம்ப அபூர்வம்தான்.

ஷார்ட் பீரியட் கவுன்சிலிங் அண்ட் மைண்ட் ரிலாஸ்க் மெடிசன் எடுத்துக்கலாம். அதோட நீங்களும் கேர் எடுத்துக்கோங்க! தட்’ஸ் எனஃப்” மருத்துவர் சாதரணமாக கூறியதில், பிரமைதட்டியவன் போல் பாஸ்கர் நிற்க,   

“எல்லாருக்குள்ளேயும் இருக்குறதுதான், இவங்களுக்கு வெளியே தெரிஞ்சுருக்கு. ரிலாக்ஸ் மைடியர் யங்மேன்… கொஞ்சம் பக்குவமா எடுத்துச் சொன்னாலே புரிஞ்சுப்பாங்க, டேக்கேர்!” மீண்டும் அறிவுறுத்தி விட்டு மருத்துவர் சென்றுவிட, தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

எதையோ கேட்க நினைத்து வேறு எதையோ பேசி, இப்போது முற்றிலும் பாதை மாறிப்போன பயணமாக சூழ்நிலையே இவனை அடித்துப் போட்டு விட்டது. 

அவசர அவசரமாக இணையத்தில் மருத்துவர் சொன்னதை வைத்து அலசிப் பார்த்ததில், அவர் விளக்கி கூறியதே இருந்தது. கூடுதல் விவரத்துடன்….

‘பார்டர் லைன் பர்சனாலிட்டி – எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு… இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் படிப்பு, காதல், எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுவார்கள். சிலநேரம் மிகவும் சந்தோஷமாகவும், சிலநேரம் மிகவும் கவலையாகவும் இருப்பார்கள்.

இவர்களின் அனைத்து உணர்ச்சிகளும், மிகவும் உச்சமாக இருக்கும். இவர்களின் எதிர்மறை உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, யதார்த்த உலகுக்கு அழைத்து வருவது மிகவும் எளிது. இது இளமை பருவத்தில்தான் அதிகமாக காணப்படும். இதை குணப்படுத்த நல்ல தீர்வுகள் உள்ளன.

இவர்களுடைய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும். ஆனாலும், இவர்கள் பிறரின் கஷ்டத்தை எளிதாக புரிந்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். அந்த உறவுக்காக, தன் உடலைகூட விட்டுத்தர தயங்க மாட்டார்கள்.

அடிக்கடி ஏமாற்றப்படும் போது, சிறு வயதிலேயே இதன் தாக்கம் தொடங்கி விடுகிறது. பிறருடைய கஷ்டத்துக்கு வழி சொல்வார்கள். ஆனால், தன் கஷ்டத்துக்கு தீர்வு காண முடியாதவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வுகளை, போதுமான மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம். மனதை ஒருநிலைப்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்கலாம். வயது ஏறஏற தானாகவே இந்த பாதிப்பிலிருந்து விடுபவதும் உண்டு.’

 

‘இவள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவளா? அப்படித்தான் இருக்குமோ? நான் பார்த்தவரையில் இவளும் சட்டுசட்டென்று தன்னை மாற்றிக் கொண்டு எல்லோரையும் கலங்கடித்துக் கொண்டும் இருக்கிறாளோ?’ பாஸ்கரின் மனம் நடந்து முடிந்த அனைத்தையும் இணைத்துப் பார்க்க, நினைவுகள் தன்னால் மனைவியை முதன்முதலாக பார்த்த நாளிலிருந்தே, அவளின் நடவடிக்கையை அலசி ஆராய சென்றுவிட்டது.  

**********************

ஒன்பது வருடங்களுக்கு முன்… பாஸ்கர் சிந்தாசினியை முதன்முதலாகப் பார்த்தது, தயானந்தன் குடும்பத்தோடு இவர்கள் வீட்டின் மாடியில் வீடுகட்டி குடிவந்த அன்றைக்குதான்.

மரகதம் கிரஹப்பிரவேஷத்திற்கு முறையாக பாஸ்கரின் வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றிருக்க, வேண்டுமென்றே போகாமல் தவிர்த்து விட்டார் மஞ்சுளா.

வீட்டு உரிமையாளனான தயானந்தனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிராகரிக்கத் தொடங்கியிருந்தார் அவர்.  

கீழ்வீட்டு வாடகை குடித்தனக்காரர்கள் அன்று வராத காரணத்தால் பூஜை செய்த சர்க்கரை பொங்கல், இனிப்பு, பாயாசம், வடை, போன்றவற்றை, அவர்கள் வீட்டிற்கு சென்று கொடுத்துவிட்டு வருமாறு மரகதம் உத்தரவிட, நர்மதாவின் பெண் ஸ்வேதாவுடன் கீழே வந்தாள் சிந்தாசினி.

கிராமத்து காற்றை மட்டுமே சுவாசித்து வளர்ந்தவள், அதிர்ந்து பேசத் தெரியாத வெகுளிப்பெண். இவளுக்கு தெரிந்ததெல்லாம் அன்பு காட்டி பிறரை மகிழ்விப்பது மட்டுமே…

தாங்க முடியாத கடன் சுமையுடன் எதிர்காலத்தை தேடி சென்னைக்கு வந்த தயானந்தனோடு, தானும் ஒரு சுமையாக வந்திறங்கிய சிந்தாசினியின் அப்போதைய வயது பதினெட்டு. பதின்மவயதும் இளமையும் எத்தகைய அபாயங்களை உண்டாக்கக் கூடும் என்பதை அறியாத பேதையாக இருந்தாள்.

அண்ணன் தயானந்தன், வளர்ப்பு தந்தை நாராயணன் மற்றும் முறைமாமன் தமிழ்செல்வன் மட்டுமே இவள் அறிந்து பேசிப் பழகிய ஆண்கள் எனலாம்.

அந்நிய ஆடவனுடன் பேச்சு என்பதெல்லாம் இவளைப் பொறுத்தமட்டில் எட்டாத கிட்டாத வாய்ப்புதான். அப்படி ஒரு அதிசயமாகத்தான் பாஸ்கரை அன்று கண்டாள் சிந்தாசினி.

மாடிப்படியை அடுத்த பத்தடி நடையிலேயே, பாஸ்கர் வீட்டு சமையல்கட்டின் வாசற்படியிருக்க, அங்கே நின்றுகொண்டே வீட்டில் உள்ளோரை அழைத்தாள் சிந்தாசினி.

“அக்கா… வீட்டுல யாரும் இல்லையா?” குரல் கொடுக்க யாரும் வெளியில் வரவில்லை.

“என்ன சித்தி? ஒரே அமைதியா இருக்கு… பேய் இருக்குமோ?” பயமுறுத்திய ஸ்வேதா சுற்றும் முற்றும் பார்த்து, தன் முயற்சியாக அவளும் அழைத்து, கதவை பலமாகத் தட்டினாள்.

“பேய் இருந்தா இப்டி கதவு திறந்திருக்காது ஸ்வேகுட்டி! யாரோ பொறுப்பில்லாம கதவை தொறந்து போட்டு தூங்குறாங்கன்னு நினைக்கிறேன்” சிந்து, தான் நினைத்ததை கூற,

“உனக்கெப்படி தெரியும் சித்தி?” என கேட்டாள் ஸ்வேதா.

“அண்ணன் சொல்லிச்சு… இந்த வீட்டுல யாரும் சரியில்லடா! பேச்சு வார்த்தை எதுவும் வச்சுக்காதேன்னு என்கிட்டே சொல்லிட்டுதான் வெளியே போச்சு!” இவள் விளக்கம்  கூறிய நேரத்தில் அங்கே வந்து நின்றான் பாஸ்கர்.

அந்த வருடம்தான் கணிணிப் பொறியியல் இறுதியாண்டு முடித்து வீட்டினில் இருந்தான் இருபத்தியொரு வயது பாஸ்கர். தனது மந்தமான சுபாவத்தில், கல்லூரி பாடத் தேர்வுகளில் தேர்ச்சியடையாமல்(arrears) இருக்க, அதையே காரணமாக்கி தற்காலிக வேலைக்கும் செல்லாமல் வீட்டில் சுகமாய் இருந்தான்.

உழைக்காமல் சோம்பித் திரிபவன் என்று அவனை பார்த்தாலே புரிந்து போனது சிந்துவிற்கு… மொழுமொழுவென்ற உடலமைப்பும் ஒழுங்கற்று வளர்ந்திருந்த தாடியும், அடர்ந்த சரியாக வாரப்படாத கேசமும் சேர்ந்து அவனை ஏனோதானோ என்றே மதிப்பிடத் தோன்றியது.

பழைய டிசர்ட், பெர்முடாசுடன் நிலைப்படியில் வந்து நின்றவனை பார்த்து, முதல் பார்வையிலேயே முகம் சுளித்தாள் சிந்து.

‘ஐயோ ஆளப்பாரு… அரைகுறையா வெளைஞ்ச பூசணியாட்டம் அசிங்கமா வளந்து நிக்குது’ சிந்து மனதிற்குள் அவனை எடை போட்டுக் கொண்டு நிற்க, தோரணையாக இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவளை முறைத்தான் பாஸ்கர்.

“யார் நீங்க? முன்வாசல்ல நிக்காம, உங்களை யார் பின்கட்டு வரைக்கும் வரச் சொன்னது?” இவன் அதிகாரமாய் கேட்க,

“நாங்கதான் மேல குடி வந்திருக்கோம். உங்க வீட்டுல இருந்து யாரும் இன்னைக்கு வராததால, எங்கம்மா பாயாசமும், பிரசாதமும் குடுத்துட்டு வரச் சொன்னாங்க!” என்றவாறே நான்கு கிண்ணங்களை நீட்டினாள் சிந்து.

இரண்டு கிண்ணங்களை இவள் பிடித்துக் கொண்டு நிற்க, ஸ்வேதா மீதம் இரண்டை கையில் வைத்திருந்தாள்.

“ஓ… அடாவடி ஹவுஸ்ஓனர் அடிச்சு புடிச்சு குடிவந்துட்டார் போல…” நக்கலாய் தயாவைப் பற்றி பாஸ்கர் கூற, சிந்துவிற்கு கோபம் ஏறிக் கொண்டது

“இங்கே பாருங்க… எங்க அண்ணனை இப்படியெல்லாம் பேசினா, கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் ஆமா!” பதிலுக்கு இவளும் எகிறி நிற்க,

“பாருடா கோபத்த… நீ சொன்னா, நான் சும்மா இருக்கணுமா? உன் அண்ணனுக்கு பேருதான் தயானந்தன்… ஆனா பேசுற பேச்செல்லாம் முசுடு முனியசாமிக்கு அப்பனாட்டம் தான்!” என நையாண்டியுடன் சொல்லி முடித்தான் பாஸ்கர்.

வீட்டை காலி செய்துகொடு என்று தயா கேட்டு, மஞ்சுளா மறுத்திருக்க, அதனைத் தொட்டே சிலபல வாக்குவாதங்கள் நடந்து, இரு குடும்பத்திற்கும் மனக்கசப்பில் முடிந்திருந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு பாஸ்கர் பேச, சிந்துவிற்கும் இவன் சொல்ல வருவது நன்றாகவே புரிந்து போனது.

“எங்க அண்ணன், ஒண்ணும் வேணும்னு சண்டை போட்டிருக்காது. எல்லாத்துக்கும் காரணகாரியம் இருக்கு!” வெடுக்கென்று கூறியவள், உள்ளே வந்து கிண்ணங்களை வைத்து விட்டு செல்ல முயல,

“இதையெல்லாம் எடுத்து போ பொண்ணு! உங்க வீட்டுப் பாயாசம் வேணும்னு நாங்க ஒண்ணும் தவம் கெடக்கல…” என அடுத்த தர்க்கத்திற்கு வழிவகுத்தான் பாஸ்கர்.

“கொடுத்தத இப்படியெல்லாம் திருப்ப கூடாதுங்க… உங்கம்மாட்ட குடுங்க… ஒண்ணும் சொல்ல மாட்டாங்க!” தன்மையுடன் சொல்லிவிட்டு மீண்டும் புறப்பட்டு நிற்க,

“ஏய் சொன்னா கேக்க மாட்ட… எடு முதல்ல!” என குரலை உயர்த்தினான் பாஸ்கர்.

“இங்கே பாருங்க… ஏய்னு கூப்பிடுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். தன்மையா நடந்துகிட்டா உங்களுக்கும் நல்லது. ஒரு ஆம்பள, இப்டியா மரியாதை தெரியாம பொண்ணுகிட்ட பேசுறது?” சட்டென்று மூண்ட கோபத்தில், கடிந்து கொண்டவளை ரசனையுடன் பார்த்தான் பாஸ்கர்.

எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் மஞ்சள் பூசிய முகத்துடன் இருந்தவளை, அவள் கட்டியிருந்த மஞ்சள் தாவணியும் சேர்த்து தேவதையாக காட்டியது.

அதே நிறத்தில் இருந்த பாவடையில் மாம்பிஞ்சும், கொடிகளும் பச்சை நிறத்தில் சுற்றியிருக்க, வெந்தயமும் சாம்பலும் கலந்த பார்டரில் அன்னம் மிதந்துகொண்டு நின்ற பாவையவள், ஆடவனின் பார்வைக்கு விருந்தாகிக் கொண்டிருந்தாள்.

இடைதாண்டிய கூந்தலும், தோள்களில் புரண்ட மல்லிகைச் சரமும் பெண்ணின் அழகை மிகுதிபடுத்திக் காட்டிட, பாஸ்கரின் பொல்லாத கண்களும் மனமும் பெண்ணை கள்ளத்தனமாய் ரசித்துக் கொண்டு நின்றது.

“உன் பேர் தெரிஞ்சா, நான் எதுக்கு ஏய்னு சொல்லப் போறேன்!” எகத்தாளமாய் இவன் பதில் கேள்வி கேட்டதில்,

“சித்தி பேரு சிந்தாசினி!” ஸ்வேதா முந்திக் கொண்டு சொல்ல,

“இல்ல… என் பேரு சிந்து!” சுருக்கி கூறியவள், ஸ்வேதாவை பார்த்து, “சும்மா இரு குட்டி! மாமாவுக்கு சிந்தாசினின்னு கூப்பிட்டா பிடிக்காது” என அவளிடத்தில் சொல்ல, அதைக் கேட்டவன்,

“அட… அடாவடி அண்ணனுக்கு சிந்தாசினினு கூப்பிட்டா பிடிக்காதா? இனிமே அதைச் சொல்லியே கூப்பிடுறேன்! சிந்தாசினி… சிந்தாசினி… இதையெல்லாம் எடுத்துட்டுப் போ சிந்தாசினி! எங்கம்மா வந்தா, ஏன்டா இதையெல்லாம் வாங்கி வைச்சேன்னு என்னை தான் திட்டுவாங்க சிந்தாசினி!” பாஸ்கர் மூச்சுக்கு மூச்சு சிந்தாசினியை ஏலம்விட,

‘வெவஸ்த கெட்ட மடையனா இருக்கானே!’ என மனதிற்குள் அவனை கரித்துக் கொட்டிய சிந்து,

“ஐயோ அண்ணே… கொஞ்சம் நிப்பாட்டுங்களேன்!” நொந்த குரலில் காதினை மூடிக் கொள்ள,

“என்னது? அண்ணனா! இங்கே பாரு… உங்க குடும்பத்து காத்து கூட படக்கூடாதுன்னு நினைக்கிறேன்! நீ என்னடான்னா… பாசப்பயிரை வளக்கப் பாக்குறியா? ஒழுங்கா பாஸ்கர்னு கூப்பிடு!” மிரட்டலுடன் பேச, இரண்டு பெண்களும் ஒன்றாக பயந்து பின்னடைந்தனர்.

“வயசுல பெரியவங்கள பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுங்க!” அப்பாவியாக சிந்து அறிவுரை கூற ஆரம்பித்த நேரத்தில், மேலிருந்து மரகதம் அழைத்து விட்டார்.

“சிந்து… இன்னும் அங்கே என்ன பண்ற? வேலை கெடக்கு… வெரசா வா!” தாய் அழைக்க,

“உங்கம்மா திட்டுவாங்கன்னா, நீங்களே எல்லாத்தையும் இப்பவே சாப்பிட்டு முடிச்சுருங்க!” அவசரமாக கூறி மாடிக்கு சென்று விட்டாள் சிந்தாசினி.

இரண்டு பெண்களும் வேகமாக மாடியேறிச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கர், ’ம்‌ம்… தாவணியில, நல்ல அம்சமாதான் இருக்கா… மஞ்சளழகி. கிராமம் கிராமம்தான்’ என ரசித்தவனின் மனமும் சில்லென்று குளிர்ந்திருந்தது.

பாஸ்கரின் தாய் மஞ்சுளா வந்ததும், கிண்ணங்களை பார்த்து அதற்கும் ஒரு பாட்டினை பாடிமுடிக்க, தாயை முறைத்துக் கொண்டே சிந்தாசினி கொடுத்து விட்டுச் சென்ற அனைத்து உணவு பதார்த்தங்களையும் உள்ளே தள்ளினான் பாஸ்கர்.

‘சாப்பாட்டு விசயத்துல எப்பவும் சோஷியலிசம் ஃபாலோ பண்ணிடனும். அப்போதான் ரோஷமில்லாம எல்லாத்தையும் உள்ளே தள்ள முடியும்… நமக்கு சோறு முக்கியம் பாஸு’ என்ற பகுமான தத்துவம் வேறு அவன் மனதில் எழுந்து நக்கலடித்தது.

இரண்டுநாள் கழித்து, காலை பத்துமணியை தாண்டிய வேளையில் சிந்தாசினி, மீண்டும் பாஸ்கர் வீட்டு வாசலுக்கு வந்து நிற்க,

“இன்னைக்கு என்ன கொண்டு வந்துருக்க? எதுவும் குடுக்கிற வேலை வச்சுக்க வேணாம்னு அன்னைக்கே சொன்னேனா இல்லையா?” தெனாவெட்டாக பாஸ்கர் கேட்டுவிட,

“அய்ய… ரொம்ப ஆசைதான் உங்களுக்கு… அன்னைக்கு குடுத்த பாத்திரத்தை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன். தினமும் வந்து குடுக்க நீங்க என்ன எங்களுக்கு ஒட்டா உறவா?” என நொடித்துப் பேசியவள்,

“நாங்க குடுத்தத சாப்பிட்டீங்களா? இல்ல, எங்கமேல இருக்குற கோபத்துல கீழே கொட்டுனீங்களா?” துடுக்காக கேட்டாள் சிந்து.  

“பிடிக்காதவங்க குடுத்தாலும் சாப்பாட வீணடிக்கிற ஜாதியில்ல நாங்க… அம்மா வேண்டாமுனு ஒதுக்கினாங்கதான்! வேஸ்ட் பண்ண வேண்டாம்னு நான்தான் எல்லாத்தையும் காலி பண்ணேன்!” என பெரிய மனதுடன் உண்டதாகச் சொல்ல,  

“நம்பிட்டேன்… நம்பிட்டேன்!” நமட்டுச் சிரிப்பினை உதிர்த்து விட்டு,

“உங்கம்மா இன்னைக்கும் இல்லையா? இப்டி என்கூட பேசுறது தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என சிந்து கேட்க,

“ஐயோ… தெரிஞ்சா அதுக்கு தனியா ஒரு பாட்டம் திட்டி முடிப்பாங்க! எங்க அக்காவ வேலைக்கு கொண்டு போயி விட்டுட்டு வந்த கையோட, அம்மாவையும் கோவிலுக்கு விட்டுட்டு வந்துடுவேன். தினமும் அவங்க கோவிலுக்கு போயிட்டு அப்டியே மார்க்கெட்டுக்கு போயிட்டும் வர பனிரெண்டு மணி ஆகிடும். அதுவரைக்கும் நான் தனியாதான் இருப்பேன்!” என்று கூறியவன்

“உங்கம்மா வீட்டுல இல்லையா? நீ கீழே வந்துருக்க…” பதிலுக்கு கேட்டான் பாஸ்கர்

“அம்மாக்கு பீபீயும் சுகரும் ஏகக்துக்கு இருக்கு… அண்ணனுக்கு சமைச்சு குடுக்கன்னு நேரமே எழுந்திருக்கிறதால காலையில மாத்திரை போட்டதும் தூங்கிடுவாங்க! அவங்க எந்திருக்க பனிரெண்டுக்கு மேல ஆகிடும்.

சாமானெல்லாம் அக்காங்க இருக்கிறப்பவே, அடுக்கி முடிச்சாச்சு. எனக்கும் பொழுது போகலன்னு வெளியே வந்தப்பதான், உங்க வீட்டுல பாத்திரம் குடுத்த ஞாபகம்… அதை வாங்க வந்தேன்” என்றவள் அப்போதுதான் அந்த வீட்டின் வெளிப்புறத்தை நன்றாக சுற்றிப் பார்த்தாள்.

மோட்டார் அறை சிறியதாக ஒன்றும், அதற்கு பக்கத்தில் சிறிய இடமாக இருந்தாலும், பூந்தொட்டிகள் அழகாக பராமரிக்கப்பட்டு இரண்டு வரிசைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு மேலே அதிக வெயில் படாதவாறு பலகை ஒன்றும் அடிக்கபட்டிருந்தது.

பல்வேறு நிறத்தில் ரோஜாசெடிகள், கனகாம்பரம், துளசி, சாமந்தி அதனுடன் குரோட்டன்ஸ் என பூச்செடிகள் மட்டுமே நடப்பட்டு, அந்த இடமே அத்தனை குளிர்ச்சியைக் கொண்டிருந்தது.  

“என்ன அப்டி பாக்குற? உங்க வீட்டை அழகா வச்சுருக்கோமா?” என கேட்டவன், அவளின் மலர்ந்த முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க,  

“அது தெரியல… ஆனா இந்த ஓரத்துல வரிசையா வச்சிருக்குற ரோஜாசெடிங்கதான் என் கண்ணுக்கு அழகா தெரியுது… மஞ்சரோசு, பட்டுரோசு, வெள்ளைரோசு, ஆரஞ்ரோசுன்னு எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு…” என சிலாகித்து சொன்னவள், ஆர்வ மிகுதியில் நன்றாக மலர்ந்திருந்த மஞ்சள்ரோஜாவை பறித்து விட்டாள்.

“ஏய் சிந்தாசினி! எதுக்கு இப்போ பூவ பறிச்ச? எங்கக்காக்கு தெரிஞ்சா என்னை வெட்டிப் போட்டுடும்… அதிகப்பிரசங்கி!” பாஸ்கர் அவளை கடிந்து கொள்ள,

“பிளீஸ்… பிளீஸ்… இன்னைக்கு ஒருநாள் மட்டும் எதையாவது சொல்லி உங்க அக்காவ சமாளிச்சுக்கோங்க!” என கண்களை சுருக்கி கெஞ்சவும், அவனின் தலை தன்னால் அசைந்து சரியென்றது.

மரகதத்தின் காலைநேர ஓய்வும் மஞ்சுளாவின் காலைநேர நகர்வலமும் ஒரே நேரத்தில் இருக்க, இளையவர்களின் சந்திப்பு அவர்களின் வீட்டினருக்கு தெரியாமலேயே தொடர ஆரம்பித்தது.

தினமும் பத்துமணிக்கு மேல், கீழே ரோஜாச்செடிகளை பார்க்க வருபவள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொள்ள, பாஸ்கர் அதில் தடுமாறி விழ ஆரம்பித்தான்.

பூவைக்கு பூவின் மீது ஏக்கம்; ஆடவனுக்கு பாவை மீது ஏக்கம் வந்து தன்னால் கூடிக்கொண்டே போனது. இந்த நாட்களில் சிந்து, அவனை பாச்சு என்றும் அழைக்க தொடங்கியிருந்தாள்.

“வாங்க, போங்க எல்லாம் விட்டுதள்ளு! பேர் சொல்லி கூப்பிடு!” என பாஸ்கர் வற்புறுத்தியிருக்க, சரியென்றவள் பாச்சுவாக அவனை மாற்றியிருந்தாள்.

காரணம் கேட்டதற்கு அவள் தோழி பஞ்சவர்ணத்தை பாச்சுவென அழைப்பேன் என்றும், அந்த நினைவில் இவனையும் அழைப்பதாகவும் கூற இருவரிடையேயும் பேச்சு சுவாரசியம் கூடிப்போனது.

இரண்டு நாட்கள் தொடர்ந்து பூவை பறிக்க வேண்டாமென்று கூறியதும் பெண்ணின் முகம் வாடுவதை பார்த்தவனின் மனது அத்தனை எளிதில் ஆறவில்லை.

அக்கா மிதுனாவிடம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக் கொள்ளலாம் என்கிற குருட்டு தைரியத்தில், தினமும் ஒரு ரோஜாப்பூவை தன் கைகளாலே பறித்து வைத்து, இவள் கீழே வந்ததும் கொடுக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

“வெளியாளுங்க கையால பூ வாங்கக்கூடாது பாச்சு!” என சிந்து முதலில் வாங்கிக் கொள்ள தயங்க,

“இதுக்கெல்லாமா செண்டிமெண்ட் பாப்பாங்க? எங்க அக்காவுக்கு தெரியாம, எங்கம்மா இல்லாத நேரத்துல உனக்காகன்னு பறிச்சு வைச்சா, நீ சாக்குபோக்கு சொல்லிட்டு இருக்க…” இவன் முகத்தை சுருக்கிக் கொள்ள,

“எங்க கிராமத்துல அப்டிதான்! ஒரு பொண்ணுக்கு அப்பா, அண்ணா இல்லன்னா கட்டிக்க போறவங்கதான் பூ வாங்கி குடுப்பாங்க!” சிந்து கூறிய விளக்கத்தில் ஏமாற்றம் அடைந்தான் பாஸ்கர்.

“உனக்கு போயி பாவம் பார்த்தேனே!” வெளிப்படையாக  நொந்து கொண்டவன் அந்த பூவை வீசப்போக,

“வேண்டாம்… வேஸ்ட் பண்ணாதீங்க! நான் வைச்சுக்கறேன்” என்றவள்,

“பூ, செடியில இல்லன்னு உங்கவீட்டுல கேட்டா, என்ன காரணம் சொல்வீங்க?” என சிந்து கேட்க,

“நிறைய காரணம் இருக்கு. எதையாவது ஒண்ணு எடுத்து விட வேண்டியதுதான்!”

“அப்போ பொய் சொல்வீங்களா பாச்சு?”

“பின்ன… உண்மைய சொல்லி, ரெண்டு குடும்பமும் இதுக்காக இன்னொரு சண்டைய போடுவாங்க… நம்ம ரெண்டு பேருக்கும் செமத்தியா திட்டு விழும். அதையெல்லாம் வாங்கிக்கணுமா?” என விடாமல் கேட்க, அரைகுறை மனதுடன் தலையசைத்தாள்.

“இனிமே உனக்கு பூ வேணாமா சிந்தாசினி? என் கையால வாங்கிக்க மாட்டியா?” தொடர்ந்த ஏமாற்றத்துடன் பாஸ்கர் கேட்க,

“வேணும்தான்… ஆனா உங்க கையால எப்படி? அதுவும் தினமும்…” இவள் இழுக்க,

“எந்த காலத்துல இருக்க? வேணும்னா பூவ பறிச்சு, ஒரு கவர்ல போட்டு வைக்கிறேன். டெய்லியும் வந்து எடுத்துக்கோ… சரியா?” இவன் யோசனை சொல்ல, அதற்கு சந்தோசத்துடன் சரியென்றாள் சிந்து.

ரோஜாப்பூவை காரணம் காட்டி இருவரும் சந்தித்துக் கொள்வது தினப்படி நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் பாஸ்கர், வீட்டிற்குள் அமர்ந்து பேசுவோம், தான் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று காரணத்தை கூறி அழைக்க, உள்ளே வருவதற்கு வெகுவாக யோசித்தாள் சிந்து.

“உன்னை கடிச்சு திங்கமாட்டேன் சிந்தாசினி! பயப்படமா வா! எனக்கு பசிக்குது, நான் சாப்பிட்டு முடிச்ச பிறகு, வெளியே உக்காந்து பேசுவோம்” என வற்புறுத்தி அழைத்ததில் நம்பிக்கையுடன் உள்ளே சென்று அமர்ந்தாள்.

நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட வீட்டினை இவள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, பாஸ்கர் தொலைக்காட்சியில் லயித்து விட்டான். இவளும் சற்றுநேரம் அதில் கவனம் செலுத்த,

“உங்க வீட்டுல என்ன டிஷ் இருக்கு சிந்தாசினி? ஏர்டெல், சன், இல்ல கேபிளா?” பாஸ்கர் கேட்க, 

“எங்க வீட்டுல டி‌வியே இல்ல பாச்சு!”

“அச்சோ… அப்ப நீயும் உங்கம்மாவும் பொழுது போறதுக்கு என்ன பண்றீங்க?”

“என்ன பண்றது? அம்மா கஷ்டம் வந்தத சொல்லிச் சொல்லியே அழுதுட்டு இருப்பாங்க… நான் அவங்களை அழாதே, கவலபடாதம்மான்னு சொல்லிட்டு இருப்பேன்”

“ஏன் நீ வீட்டுலயே அடைஞ்சு கெடக்க? உனக்கு எந்த வேலையும் தெரியாதா? வெளியே வேலைக்கு கேட்டு பார்க்கலையா?” 

“ம்ஹூம்… எனக்கு எந்த வேலையும் தெரியாது…. சின்னபொண்ணுன்னு வீட்டுல என்னை எதையும் செய்ய விடமாட்டாங்க! அண்ணனுக்கு நான் வேலைக்கு போறதெல்லாம் பிடிக்காது. பிளஸ்டூ மட்டுமே படிச்சுட்டு என்ன வேலை தேடுறதுன்னு எனக்கும் தெரியல…” என்றவள்,

“நீ வேலைக்கு போறதில்லையா பாச்சு?” என கேட்டாள்.

“தேடுறேன்… கிடைக்கிற வழியதான் காணோம்” இவன் இழுத்துச் சொல்ல,

“எஞ்சினியரிங் தானே படிச்சிருக்க… ஈஸியா கிடைக்குமே! நிறைய பாடத்துல அரியர்ஸ் வச்சுருக்கியா? அதான் கிடைக்கலையா?” அவனது வண்டவாளத்தை, இவள் தண்டவாளத்தில் ஏற்றிக் கொண்டே போக,

“ஹிஹி… அரியர்ஸ் எல்லாத்தையும் ஒரே மூச்சா முடிச்சுட்டுதான் வேலைக்கு போற ஐடியால இருக்கேன்” என்றவன் பேச்சினை மாற்றும் வண்ணம்

“இனிமே காலையில இங்கே வந்து டி‌வி பாரு! யாரும் இருக்க மாட்டாங்க! உனக்கும் ரிலீஃப் கிடைக்கும்” என ஆறுதல் கூற, தினமும் இவர்களின் சந்திப்பு பாஸ்கரின் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு என்றானாது.

கிராமத்து வெகுளிப் பெண்ணிற்கு அந்த காலகட்டத்தில் பாஸ்கரின் மேல் மிகநல்ல அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்தது. பாஸ்கருக்கும் அப்படியே…

தன்னுடன் பேச தனது வயதையொத்த ஒரு சிநேகிதி என்றே அவளுடன் பழகி வந்தான்.

‘எனக்கொரு சிநேகிதி… சிநேகிதி…

தென்றல் மாதிரி…’ என அவ்வப்போது சிந்துவை கேலியும் செய்வான்.

தனது நண்பர்கள் வட்டத்திலும் தனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வீட்டில் இருக்கிறாள் என்று தெனாவெட்டாக சட்டைகாலரை தூக்கிக்கொண்டு சொல்லவும் செய்திருந்தான்.

ஒரு மாதம் கடந்த நிலையில் அன்று தொலைக்காட்சியில் பிரபல மியூசிக் சானலில் படுவிரசமான பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, ஏகத்திற்கும் பார்வையை அலைய விட ஆரம்பித்தாள் சிந்தாசினி.

கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கர், இவளைப் பார்த்து,

“இதுல என்ன இருக்குனு இப்டி நெளியுற? இதெல்லாம் ஜஸ்ட் ஆக்டிங்தானே!” எனச் சொல்ல,

“உவ்வக்… விட்டா எல்லாமே படம் புடிச்சு காமிப்பாங்க போல” அருவெறுப்பாய் முகத்தை சுருக்கினாள்.

“அதெல்லாம் வகைவகையா வருது. உனக்குத்தான் தெரியல!”

“அய்ய இதெல்லாம் பார்ப்பீயா பாச்சு… கெட்ட பையனா நீ?”

“ஆமான்டி! இந்த மாதிரி படத்தை பாக்குறவன் எல்லாம் கெட்ட பையன்… காதலிக்கிறவன் எல்லாம் கெட்ட பையன்னு சொல்லிச சொல்லியே உன்னை கெடுத்து வச்சுருக்காங்க! சுத்த வேஸ்ட்டுடி நீ!” என உரிமையுடன் ‘டி’ போட்டு பேச, அவனை முறைக்க ஆரம்பித்தாள் சிந்து.

“இங்கே பாரு பாச்சு… இந்த டி போட்டு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத…” என கோபத்தில் வெடிக்க,

“ஏன்… ஏன் கூடாதுன்னு சொல்ற? ஃப்ரெண்டா நினைச்சு,நீ என்னை பேர் சொல்லிக் கூப்பிடும் போது, நான் உன்னை டி போடக்கூடாதா?”

“அதான், நீயும் சிந்தாசினின்னு நீட்டி முழக்கி கூப்பிடுறியே! அதோட நிப்பாட்டிக்கோ! இந்த வாடிபோடி எல்லாம்  வீட்டுக்காரன் இல்லன்னா அப்பா அண்ணாதான் கூப்பிடனும்” இவள் வெகுளியாக சொல்ல,

“அப்ப்டின்னா… அப்டியே ஆகிட்டு போறேன்!” என்றான் விளையாட்டாக…

“என்னது? என்ன சொல்ல வர்ற?” விளங்காத பாவனையில் இவள் கேட்க,

“உன்னை கட்டிக்கிட்டா போச்சுன்னு சொல்றேன்!” சற்றும் யோசிக்காமல் பாஸ்கர் சொல்ல, ஆத்திரத்தில் படபடக்க ஆரம்பித்தாள் சிந்தாசினி.

“இனி இந்த மாதிரி கிறுக்குத்தனமா பேசினா, நடக்கிற கதையே வேற…. உன்னை நல்லவன்னு நம்பி வந்தேன் பாரு, என்னை சொல்லணும்” சட்டென்று அவனிடம் விரல் நீட்டி எச்சரிக்க, அவளது விரல்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன், 

“அப்படியென்ன தப்பா பார்த்துட்டேன்னு என்னை கெட்டவன்னு முடிவு பண்ற? நானும் நல்லவன்தான்டி! ரெண்டு அக்கா, அம்மா என்னை நம்பி இருக்காங்க… நீ, என்னை நம்பமாட்டியா?” என கோபத்தில் கேட்டு ஆதங்கமாய் முடித்தான் பாஸ்கர்.

“தொட்டு பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம் பாச்சு! நீ நல்லவனா இருந்தா, அது உன் குடும்பத்தோட… என் கூட பேசும்போது பார்த்து பேசணும். இதுக்கு மேல எனக்கு விளக்கம் சொல்லத் தெரியல… கிளம்புறேன்!” என்று கடுகடுத்துக்கொண்டே சென்றவள், அடுத்தடுத்த நாட்களில் அவனை எட்டியும் பார்க்கவில்லை.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!