தந்தையை போல்…

0AFEBE44-BADA-49A1-81BC1B0877541D26_source-a607250a
தந்தையை போல்...

ஆதவன் தனது பொன்னிற கதிர்களை, வானெங்கிலும் படர செய்திட, கருமை நீங்கி மஞ்சள் பூசியது. அதனை மேலும் அழகாக்க, பறவைகள்  “கீச் கீச்சென”, தேனினும் இனிய குரலில்.அங்கும் இங்கும் பறந்தபடியே பாடிக்கொண்டு, சூரியனை வரவேற்கும் காலை பொழுது.

     தனது பள்ளி சீருடையை அணிந்துக் கொண்டு, அவசர அவசரமாக தன் தாய் செல்வி சமைத்த உணவை பெயருக்கென உண்டுவிட்டு, தன் மிதிவண்டியில் காற்றோடு போட்டிப் போட்டுப் பள்ளி வந்தடைந்தான் பத்தாம் வகுப்பு மாணவனான சக்தி.

     மிதிவண்டியை நிறுத்திவிட்டு, தன் வகுப்பறைக்குள் நுழைந்தவனை நண்பர்கள் படை சூழ்ந்துக் கொண்டது. சற்று நேரத்தில் காலை பிரார்த்தனை நேர மணியோசை கேட்க, அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பிரார்த்தனை கூடத்திற்கு வந்தனர்.

    கடவுள் வாழ்த்து, கொடிப் பாடல், தேசிய கீதம் என்று ஒவ்வொன்றாக முடிந்ததும்…பள்ளியின் தலைமையாசிரியர் பேசத் தொடங்கினார்.

     பேசுவதற்கு ஏதுவாக ‘ஒலிவாங்கி’யை சரி செய்து, தொண்டையை செருமிக்கொண்டவர். அனைவருக்கும் தனது காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு…பின் பேச்சைத் தொடங்கினார்.

      “மாணவர்களே! சென்ற வாரம் நமது பள்ளியில் கவிதைப் போட்டி நடந்தது…அதில் பங்கேற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எனது பாராட்டுக்களை…முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்…இந்த போட்டியில் தனது எண்ணங்களை எழுத்தால் அற்புதமாக கூறிய ஒரு மாணவருக்கு…இப்போது விருது அளிக்கப் போகிறோம்”, என்றவர் கையில் வைத்திருந்த விருதினை காண்பித்தார்.

      அவர் கூறியதை கேட்டு மாணவர்கள் தங்களுக்குள் சலசலக்க…அனைவரையும் அமைதியாக இருக்கும்படி ஆசிரியர் கட்டளையிட…அமைதி நிலவியது.

     தலைமையாசிரியர் பேசினார், “சிறந்த கவிதைக்கான விருதினைப் பெறுவது ‘பத்தாம் வகுப்பு மாணவன் சக்தி, என்றதும் சக்தி மேடை ஏறி…தலைமையாசிரியரிடம் மகிழ்ச்சியுடன்…சக மாணவர்களின் கரகோஷம் ஒலிக்க விருதினைப் பெற்றான். அன்றைய நாள் முழுவதும் சக்திக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே இருந்தது.

   மாலை வீடு வந்தடைந்ததும்…கூலி வேலை செய்து வியர்வை வழிய களைப்புடன் வந்த தன் தாய் செல்வியை களிப்பூட்டும் விதமாக தனது வெற்றியை பகிர்ந்தான் சக்தி. அந்த விருதில், “மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் 2021″ , என்று எழுதியிருந்ததை சக்தி படித்துக் காண்பிக்க…கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்த தன் கணவனின் புகைப்படத்தை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தார்.

      அவனை பெருமையுடன் அணைத்துக் கொண்டவர் மனதில், ‘தன் மகன் தந்தையைப் போல் வளரமாட்டான்’, என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

          
                                          _(முடிந்தது)….