தனிமை – 2

aass-cb2ce982

மழலையின் புன்னகை

ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்த ராமலிங்கம் தன் மகளோடு வீடு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் அவரின் சொந்த உழைப்பில் கட்டப்பட்ட வீடு இன்றும் கம்பீரமாக நின்றிருந்தது.

வீட்டின் வாசலில் நின்று கை, கால்களை அலம்பிவிட்டு “செல்வி” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்த கணவனின் குரல்கேட்டு வேகமாக சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் அவரின் மனைவி.

தன்னவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த மகளைக் கவனிக்காமல், “என்னங்க பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது? கல்யாணம் நல்லபடியாக முடிந்தது தானே?” அக்கறையுடன் கேட்டபடி கையோடு கொண்டு வந்த தண்ணீர் சொம்பை கணவனிடம் நீட்டினார்

கீர்த்தி கோபத்துடன் தாயைப் பார்வையால் சுட்டேரித்தவள், ‘இங்கே ஒருத்தி நிற்பது இந்த அம்மா கண்ணுக்குத் தெரியவே இல்ல போல’ தனக்குள் புலம்பிய மகளை அப்போதுதான் கவனித்தார் செல்வி.

“என்னடா ஹாஸ்டல் சாப்பாடு அலுத்துபோச்சு போல.. அதுதான் என் கையில் சாப்பிட ஓடி வந்துட்டியா செல்லம்?” தன் மகளின் மீதான கோபத்தை அவளின் கையிலிருந்த பேக்கை வாங்கும் வேகத்தில் காட்டினார்.

தந்தையின் அருகே தொப்பென்று அமர்ந்த மகளோ, “அப்பா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” ஓரக்கண்ணால் தாயைப் பார்த்தபடி கேட்டாள்.

“என்ன கீர்த்தி?” என்று விவர இல்லாமல் அவரும் கேட்டு வைக்க,

“எங்க ஹாஸ்டலில் வேலை செய்யும் மனோகரி ஆன்ட்டி அம்மாவைவிட சூப்பரா சமையல் செய்வாங்க. அதுதான் ஹாஸ்டலில் நான் தங்க மெயின் ரீசன். இங்கே அம்மா சமையல் பெருமையைக் கேட்டதும் எனக்கு அவங்க நினைவுதான் வருதுப்பா” சோகமாகக் கூறிய மகளின் தலையில் நறுக்கென்று கொட்டினார் செல்வி.

“என் சமையலை கேவலமா பேசற இல்ல. நீ முதலில் வந்து சமையல் செய்யக் கத்துக்கோ. அப்போதான் அடுத்த வீட்டுக்குப் போனால் உன்னை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. என்னதான் பெண்கள் பட்டப்படிப்பு படிச்சாலும் கடைசியில் சட்டிபானை கழுவித்தான் தீரணும்” என்று சர்வ சாதாரணமாகக் கூறிய தாயை முறைத்தாள் கீர்த்தனா.

அவளோ தந்தையின் தோளில் சாய்ந்தபடி, “சும்மா இதச் சொல்லியே பெண்களை மட்டம் தட்டாதீங்க அம்மா. இப்போ பொண்ணுங்களுக்கு ஈக்வலாகப் பசங்க எல்லா வேலையும் செய்யறாங்க” தாயிடம் சண்டைக்கு நின்ற மகளைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார் ராமலிங்கம்.

“விடுடா பாப்பா அவள் தான் புரியாமல் பேசற. நீயும் அவளோடு சரிக்கு சரி சண்டைக்கு நின்றால் என்ன அர்த்தம்?” என்றார் சிரிப்புடன்.

உடனே தந்தையிடமிருந்து விலகியவள், “சும்மா சமாளிக்காதீங்க அப்பா. இப்போகூட அம்மா சொன்னது தவறுன்னு அவங்களை திட்டாமல் என்னைத் தான் அமைதியாக இருக்க சொல்றீங்க” என்று வம்பு வளர்த்தாள் மகள்.

தன்னவன் தன்னை விட்டுகொடுக்காமல் இருப்பதை நினைத்துப் பெருமிதத்துடன், “நான் சொல்வதெல்லாம் நடக்குதா இல்லையான்னு பாரு” செல்வி மகளை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தார்.

“நீங்கச் சொல்றதெல்லாம் நடக்காதும்மா. அப்பா எனக்குச் சமையல் நல்லா செய்ய தெரிஞ்ச மாப்பிள்ளையை தான் செலக்ட் பண்ணுவார்” எனச் சூளுரைத்தாள் மகள்.

அவள் கண்ணில் கனவுகள் மின்னிட கூறுவதை கண்டு, “நீ இப்படியே கனா கண்டுட்டு இரு. உனக்கு நல்ல பையனாக பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன். அவன் உன்னைச் சமையல் செய்யச் சொல்லி படுத்தி எடுக்கும்போது என்னோட ஏண்டா போட்டி போட்டோம்னு வருத்தபடப் போற பாரு” என்றார்.

“அதை நடக்கும்போது பார்க்கலாம்” என்று சொல்லியபடி தன் அறைக்குள் சென்ற மகளைக் கண்டு வாய்விட்டுச் சிரித்த கணவனை முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்று மறைந்தாள் செல்வி.

ராமலிங்கம் பிறந்து வளர்ந்தது அனைத்தும் அன்னூரில் தான். ஆனால் சூழ்நிலை காரணமாகப் பிழைக்க வந்த ஊரிலேயே பெண் பார்த்துக் கல்யாணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தாய் – தந்தையின் எதிர்ப்பை மீறிக் கரம்பிடித்த மனைவியை இன்று வரை யாரிடமும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. இவர்களின் காதலுக்கு அடையாளமாக வந்து பிறந்தவள் தான் கீர்த்தனா. இப்போது தர்மபுரியில் இஞ்சினியரிங் படித்துப் கொண்டிருக்கிறாள். மனைவியின் மீது கொண்ட காதலைவிட மகளின் மீது பாசம் அதிகம் வைத்திருக்கும் தந்தை.

தன் மகள் அங்கிருந்து நகர்ந்ததும், “செல்வி ஒரு  நிமிஷம்” என்று அழைத்தவர் பஸ்ஸில் அரவிந்தனை சந்தித்துப் பற்றி கூறினார்.

கடைசியில், “என் நண்பன் இவ்வளவு சீக்கிரம் இறந்து போவான்னு நினைக்கவே இல்ல செல்வி. அரவிந்தன் கைக் குழந்தையோடு தனியாகப் செல்வதை பார்த்தபோது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு” என்றவருக்கு எப்படி  சமாதானம் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தாள் .

அவர் மனைவியிடம் தறிபட்டரைக்கு கிளம்புவதை கேட்டுகொண்டே அறைக்குள் முடங்கினாள் கீர்த்தனா. அவளின் அறையின் ஜன்னலின் வழியாக வானத்தை வெறித்தவளின் கலகலப்பு தற்காலிகமாக அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றது.

அவள் சிந்தனையோடு அமர்ந்திருக்க, “ஏய் குழந்தையைக் கவனமாகப் பிடிச்சு உட்காரு” ஒரு ஆணின் அதட்டலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

ஒருவன் பைக்கை ஸ்டார்ட் செய்து நின்றிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறிய மனைவிடம் ஏதோ பேசியதைக் கண்டு அவளின் மனதில் வலி அதிகரித்தது. அந்தக் குழந்தையின் மீதே நிலைத்தது கீர்த்தியின் பார்வை.

அவனின் பளிச்சென்ற முகம் மனதினுள் தோன்றி மறைய, ‘இவரோட முகம் எதுக்காக ஞாபகம் வருது?’ என்ற சிந்தனையில் மனம் குழம்பியது.

திடுமென, “கீர்த்தி சாப்பாடு ஆகிடுச்சு குளிச்சிட்டு சாப்பிட வாம்மா” என்றழைத்த தாயின் குரல்கேட்டு அவளின் சிந்தனை கலைந்தது.

“இதோ வரேன் அம்மா” எழுந்து செல்ல அடுத்தடுத்து வந்த நாட்கள் அவளுக்கு இயல்பாகவே கழிந்தது.

மகள் வீடு வருவதற்கு முன்னர் புதிய எண்ணிலிருந்து போன் வந்தது. அதில் சொல்லபட்ட தகவல்களைக் கேட்டுத் தாயின் மனம் பதறியது. ஆனால் மறுபக்கம் பேசிய நபர் பக்குவமாக அவருக்குப் புரிய வைக்கத் தன் மனதைத் தேற்றிக் கொண்டார்.

தன் மகளின் மீது தவறில்லை என்ற ஒரே விஷயம் மட்டும் அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. ஒரு மகளுக்குத் தாயாக மட்டும் யோசித்தவர் மகளின் மனக்காயத்தின் வீரியத்தை உணராமல் போனதுதான் கவலைக்குரியது.

தனக்கு விஷயம் தெரியும் எனக் காட்டிகொள்ளாமல் வலம் வரத் தொடங்கிய செல்வி வழக்கத்திற்கு மாறாக நாள் தவறாமல் கோவிலுக்குச் சென்றார். அவரின் மனக்கவலைகளை இறக்கி வைக்கத் தெய்வ சந்நிதானம் தான் சிறந்தது என்று நினைத்தார்.

காலையில் நேரம் பதினோரு மணியைத் தொட சூரியனோ சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அன்னூரில் வந்து இறங்கிய அரவிந்தன் தன் பார்வையைச் சுழற்றினான்.  எத்தனை வருடங்கள் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான நேசம் நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை.

தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்த ஊரில் இனி தனித்திருக்க போவதை நினைத்து அவனின் மனம் வலித்தது. தன் மனதைத் தேற்றிக்கொண்டு அவன் நிமிர வேகமாக ஒரு பைக் வந்து சடர்ன் பிரேக் போட்டு நிற்கத் திடுக்கிட்டு இரண்டடி பின்னே நகர்ந்து நின்றவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.

 “ஏய் ஆள் நிற்பது கண்ணுக்குத் தெரியல?!” எனக் கேட்கத் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்டிவிட்டு,

“ஸாரிங்க.. நான் வேணும்னு இப்படி பண்ணல” என்றான் வசீகரமான புன்னகையுடன்.

பிளாக் கலர் ஷர்ட் மற்றும் ஒயிட் கலர் பேன்ட் அணிந்து பைக்கில் கெத்தாக அமர்ந்திருந்தவனின் பேச்சில் பணிவு வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரு சிலர் பேசினாலே எரிச்சல் வரும். ஆனால் வயதிற்கு உரிய கோபம் மின்றி தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பவனிடம் சண்டைப் போட தோன்றவில்லை.

“பரவால்ல இனிமேல் கொஞ்சம் நிதானமாக இருங்க” அவனை விலகி நடக்க அவனை பார்த்துத் தலையை உலுக்கிய அந்தப் புதியவன் தன் வேலையைக் கவனிக்க சென்றான்.

பஸ் ஸ்டாண்ட் விட்டு வெளியே வந்ததும் ஒரு ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்திய அரவிந்தன் இடத்தின் பெயரைச் சொல்லிப் போகுமா என்று கேட்க, “ம்ம் ஏறுங்க ஸார்” என்றான்.

அவன் தன் பேக்கை எடுத்து உள்ளே வைத்துவிட்டு குழந்தையோடு வண்டியில் ஏறியமர்ந்தான். கால் மணி நேரத்தில் தான் சொன்ன முகவரிக்குப் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த ஆட்டோ டிரைவருக்கு  நன்றி சொல்லிப் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கினான்.

முன்பக்கம் படிக்கட்டுடன் கூடிய திண்ணையுடன் கம்பீரமான தோற்றம் மாறாமல் அப்படியே இருந்தது வீடு. கேட்டைத் திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தான். அரவிந்தன் வலது கையில் வைத்திருந்த பெட்டியைத் திண்ணையில் வைத்துவிட்டு மற்றொரு கையில் குழந்தையைச் சுமந்தபடியே பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

ஏற்கனவே இங்கே வருவதாக இருந்த காரணத்தினால் இடையே ஒரு முறை வந்து வீட்டைச் சுத்தம் செய்து வைத்திவிட்டு சென்றிருந்த காரணத்தினால் வீடு ஓரளவிற்கு பயன்படுத்தும் நிலையிலேயே இருந்தது.

இடது புறம் சமையலறை பக்கத்திலேயே டைனிங் ஹால், ஸ்டோர் ரூம் மற்றும் அரவிந்தனின் தாய் – தந்தையின் படுக்கை அறை மற்றும் பூஜையறை இருந்தது. ஹாலைக் கடந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் அருகே விருந்தாளிகள் வந்து தங்கிட இரண்டு அறைகளும் அமைத்திருந்தது. அந்கிருக்கும் படிகட்டுகளில் ஏறிச் சென்றால், இரண்டு படுக்கையறைகள் எதிர் எதிரே அமைக்கபட்டு நடுவே இருந்த இடம் விசாலமாக விடபட்டு அதில் சோபா போடப்பட்டிருந்தது.

வீட்டின் முன்பக்கமிருந்து வரும் சூரிய வெளிச்சம் பரவியது. தொட்டியில் வைக்கப்பட்டிருந்த மணிபிளான்ட் செடி அங்கிருந்த பால்கனியின் தூண்களில் படர்ந்து அந்த இடத்தின் அழகிற்கு அழகு சேர்த்தது.

அதற்கு நேர் எதிரே வீட்டின் முற்றத்தில் வானைத் தொடும் அளவிற்கு வளைந்து நின்றது தென்னை மரம். தாய் ஆசையுடன் வைத்த வாழை மரம் டிசம்பர் பூச்செடி, கனகாம்பரம் செடி என்று அந்த இடமே ரம்மியமாகக் காட்சியளித்தது. தானாக வளர்ந்து நின்ற வேப்பமரத்தின் காற்று அவனின் உடலைத் தழுவிச் சென்றது.

தன் கையில் வைத்திருந்த குழந்தையோடு சோபாவில் அமர்ந்த அரவிந்தன், “பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துட்டோம். இங்கேதான் உன்னோட பாட்டி, தாத்தா எல்லோரும் சந்தோசமாக இருந்தோம்” என்றவனின் பார்வை வீட்டை மீண்டும் ஒரு முறை வலம் வந்தது.

“இனிமேல் நீயும், நானும் இந்த வீட்டில் இருக்கப் போறோம்” என்றவுடன் கிளுக்கென்று சிரித்தாள் மகள்.

மழலையின் கள்ளம் கபடமில்லா புன்னகையில் மனதைப் பறிகொடுத்த அரவிந்தன், “என் செல்லத்துக்கு சிரிப்பு வருதா?” செல்லமாகக் குழந்தையின் நெற்றியில் முட்டி வாய்விட்டுச் சிரித்தான். இருவரின் சிரிப்பொலியும் வீடெங்கும் எதிரொலித்தது.

அதுவரை அந்த வீட்டை ஆக்கிரமித்திருந்த தனிமை சற்று விலகிச் சென்றிட, அந்த இடத்திலேயே தொட்டில் கட்டி தன் மகளைப் படுக்க வைத்தவன், வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை முடித்துக் குளித்துவிட்டு வரும் வரையில் தூங்கிய குழந்தை பசியில் சிணுங்கியது.

உடனே ராகி மாவில் கூழ் காய்ச்சி எடுத்துகொண்டு மாடிக்குச் சென்றவன் மகளைத் தூக்கி மடியில் போட்டு, “என் குட்டிமாவிற்கு இப்போதான் பசிக்குதா?” என்று பேசியபடியே குழந்தைக்கு அந்தக் கூழை ஊட்டினான்.

அவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடி மகள் சாப்பிட தொடங்கினாள். கிட்டதட்ட ஒன்பது மாதங்களாக அவன் அனுபவித்த தனிமைக்கு முற்றுபுள்ளி வைத்திட வந்த மகளின் மீதான பாசம் அவனுக்கு அதிகரித்தது. அன்றையப் பொழுது ஓடி மறைந்தது.

காலையிலிருந்து இரவுவரை வேலை செய்த தன்னிடம், “சாப்பிட்டியா?” என்று கேட்க ஆளில்லாத நிலையை எண்ணி வருத்தமாகவே இருந்தது.

மாலைவரை வேலை செய்து களைப்புடன் வீட்டிற்குள் நுழையும்போதே, “சீக்கிரம் கைகால் அலம்பிட்டு வாடா சாப்பிடலாம்” என்று கட்டளையிடும் தாயின் நினைவு மனத்திரையில் வந்து சென்றது.

தன் கட்டுப்பாட்டை மீறிக் கடந்த கால நினைவுகளுக்குச் செல்ல நினைத்த மனதிற்கு கடிவாளமிட்டான். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர்களின் இழப்பு பெரிதாகவே தெரிந்தது.

அவனின் மன வருத்தம் அவனின் மகளில் காதுகளுக்கு எட்டியதோ என்னவோ வீரிட்டு அழுதாள். அதில் அவனின் சிந்தனை மீண்டும் மகளின் மீது திரும்பிவிட குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு நடைபயின்றான்.

இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ், “ரொம்ப நாளாகவே பூட்டியிருந்த வீட்டில் இன்னைக்கு லைட் எரியுதே?! ஒருவேளை புதுசாக யாராவது குடி வந்திருப்பாங்களோ?” என்ற கேள்வியுடன் பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு சாவியைச் சுழற்றியபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

கண்ணில் சாந்தம் நிலவிட வெள்ளை நிற முடியை மொத்தமாகச் சுருட்டிக் கொண்டையிட்டு இருந்தார். சற்று பூசினார்போல இருந்த நிர்மலாவின் மாநிறத்திற்கு சிவப்பு சேலை மிகவும் பந்தமாகப் பொருந்தியிருந்தது.

அவனின் காலடி ஓசைகேட்டு, “இவ்வளவு லேட்டாக வீட்டிற்கு வந்திருக்கிற? வேலை ரொம்ப அதிகமா?” என்று அக்கறையுடன் விசாரித்தவர் மகனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்.

காலையிலிருந்து வேலை செய்த களைப்பில் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தவன், “இல்லம்மா வருகின்ற வழியில் பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்னுபோச்சு” என்றான்.

“ஒரு போன் பண்ணியிருக்கலாம் இல்லப்பா” என்றவர் சொல்ல விக்கி எழுந்து சென்று கைகால்கள் அலம்பி உடையை மாற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

திடீரென்று அந்த நினைவு வர, “எதிர் வீட்டிற்கு யார் குடிவந்திருக்காங்க?” என்றான் மகன் சாப்பிட்டபடி.

“அந்த வீட்டோட சொந்தக்காரங்க ரொம்ப நாளாகச் சென்னையில் இருப்பதாகக் கேள்விபட்டேன். அவங்க விபத்தில் இறந்தபிறகு இடையே ஒருமுறை அவங்க மகன் இங்கே வந்துட்டுப் போன ஞாபகம். அதுக்குபிறகு யாரும் வந்தமாதிரி தெரியலயே?” மகனுக்கு சாப்பாடுப் பரிமாறுவதில் கவனமாக இருந்தார்

“இதுக்கு நான் உங்களிடம் கேட்காமலே இருந்திருக்கலாம்” என்றவன் தலையில் அடித்துக்கொண்டு சாப்பிட தொடங்கினான்.

நிர்மலா மற்றவர்கள்போல அடுத்த வீட்டில் நடக்கும் விஷயத்தை விமர்சிக்கும் குணமுடையவர் அல்ல. அவரைப் பொறுத்தவரை தான் உண்டு. தன் வேலையுண்டு என்று இருப்பவர். தன்னால் முடிந்தால் ஒருவருக்கு உதவி செய்வார் முடியவில்லை என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிட்டு விலகிவிடுவார்.

 திடீரென்று எதிர் வீட்டைப் பற்றி மகன் விசாரிக்க, தனக்கு ப் பதிலை சொல்லிவிட்டு விலகிச் சென்றார். அடுத்தடுத்து நாட்கள் வேகமாகச் சென்று மறைய தொடங்கியது.

தாயும், மகனும் எதிர்வீட்டை பார்க்கும்போதோ, அரவிந்தனை இயல்பாகப் பார்க்க நேர்ந்தாலோ ஒரு புன்னகையுடன் கடந்து சென்றனர். அவனும் ஒரு சிநேகப் புன்னகையுடன் விலகிவிடுவான்.