தமிழரசியின் கதிரழகி -நிறைவு பகுதி

தமிழரசியின் கதிரழகி -நிறைவு பகுதி

அத்தியாயம் – 45

அந்த விஷயத்தில் அன்று இரவு என்ன நடந்தது என்று அவனுக்கும் இன்று வரை புரியவில்லை.. மினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவளின் முகம் பார்க்க ஒரு பெருமூச்சை வெளியிட்டு நிமிர்ந்தாள் மினி.

“அவன் தன்னிலை மறந்த நிலையில்கூட உன்னோட நினைவில்தான் இருந்தான்.. அன்று அவன் ஏதோ ஒரு கனவின் தாக்கத்தில், ‘நான் தெரிந்தே எந்த தவறும் செய்யல.. எல்லாம் என்னை மீறி நடந்துவிட்டது..” என்றவனின் உளறல் கேட்டு கண்விழித்தேன்.

அப்பொழுது அவன் சொன்னதைக்கேட்டு, ‘என்னை இங்கே கெடுத்துட்டு இன்னும் அவளோட நினைவில் இருக்கிறான்’ என்ற கோபத்தில் தான் அவனை அடித்தேன். நான்தான் பிரபாவைத் தவறாக புரிந்து கொண்டேன்.ஒரு பெண் இந்த விசயத்தில் பொய் சொல்ல மாட்டாள் என்று அவனும் நான்  கொடுத்த அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டான்” அவளின் தலை
தானாக கீழே குவிந்தது.

பிரபா திரும்பி மனைவியைப் பார்க்க அவள் அவனின் மார்பில் சாய்ந்து கொள்ள, “அன்னைக்கு நீ ரூம் விட்டு வெளியே போன பிறகு மதன் அவனோட கல்யாணம் முதல் தாயின் இறப்பு வரை அப்புறம் பிரபாவின் காதல் பற்றி சொன்னான்.. கடைசியாக மதன் என்னிடம் ஒரு விஷயத்தை மட்டும் சொன்னான்..” என்றதும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.

மதன் அவளின் அருகில் சென்று, “மினி..” என்றதும், “ஒரு பெண்ணை இத்தனை வருடமாக காதலிக்கும் பிரபா கண்டிப்பாக தப்பு செய்திருக்க வாய்ப்பு இல்ல.. நீதான் அவனைத் தவறாக புரிந்து வைத்திருக்கிறாய்.உன்னிடம் காதலை சொல்ல தைரியம் இல்லாத நான்தான் கோழையாக ஒரு விஷயத்தை யோசிக்காமல் செய்துவிட்டேன். அதன் பின் விளைவை கண் முன்னாடி பார்த்துவிட்டேன். ஆனாலும் பிரபா
அப்படிப்பட்டவன் கிடையாது என்று எனக்கு புரிய வைத்து ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போனான். கடைசியாக அவன் அவனோட பிரிண்ட் மேல் வைத்த நம்பிக்கைதான் ஜெய்த்தது..” என்றதும் பிரபாவின் பார்வை மதனைத் தழுவியது.

என்னதான் அவன் தவறு செய்யவில்லை என்று ஜெயாவிற்கு தெரிந்தாலும் அதை மினியின் வாயால் கேட்பதால் அவளின் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.

“இந்த உண்மையை நீங்க அன்றே சொல்லியிருக்கலாம் இல்ல..” என்று கேட்க, “நான் அவனை அடித்துவிட்டு, நமக்கு இடையே எதுவுமே நடக்கல என்று நான் சொன்ன பிரபா என்னை நம்புவாரா? இல்ல மதன் சொன்னால் நம்புவாரா? அதற்கு மறுநாளே நானும் மதனும் திருமணம் பண்ணிகிட்டோம்..” என்றதும் அங்கே பலத்த அமைதி நிலவியது.

“சில விஷயங்கள் தானாக புரிவது கூட நல்லதுதான் மினி. அப்பொழுது தான் வாழ்க்கையில் சந்தேகத்திற்கு  டமிருக்காது..” என்றான் பிரபா.

“ஆனால் இந்த விஷயம் அப்பாவிற்கு தெரியும் இல்ல..” அந்த மௌனத்தை கலைத்த ஜெயாவிற்கு மினி தன் புன்னகையைப் பதிலாக தந்தாள்.

“எல்லோரின் வாழ்க்கையும் இப்படி இருக்குமா? இல்ல நம்மை போல எல்லோரும் இருப்பாங்களா?” என்று மினி அவளிடம் சந்தேகம் கேட்க புன்னகைத்தவளோ, “இல்ல மினி அக்கா. வாழ்க்கையில் அப்படி வரையறுத்து சொல்ல முடியாது..” என்றவள் தொடர்ந்து, “உங்களை மாதிரியும், என்னை மாதிரியும் இப்பொழுது யாரும் இல்ல.

உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் இருக்கலாம்.. ஆனால் அவர்களை நாம் கண்டுபிடிக்க முடியாது..” என்றாள்.

“உன்னோட நிலையில் வேற யார் இருந்திருந்தாலும் இன்னைக்கு பிரபாவைப் புன்னகை முகமாக பார்க்க முடியாது ஜெயா..” என்றான் மதன்.

“அண்ணா இவரோட இடத்தில் வேற யார் இருந்திருந்தாலும் அங்கே தவறு நடந்திருக்கும். அந்த சூழ்நிலையில் அவனை கல்யாணம் செய்யும் பெண் கண்மூடித்தனமாக  இருக்கக்கூடாது . அவன் தனக்கு ஏற்றவன் என்ற நிலையில் அவன் தவறே செய்திருந்தாலும் அவனை திருத்தி வாழ நினைக்கலாம்.. ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு சதவிதம் அங்கே தவறு நிகழ வாய்ப்பு இருக்கு.. நான் என்னோட பிரபா அப்படி சபல புத்திக்காரன் கிடையாது நூறு சதவிதம் நம்பினேன்..” என்றதும் பிரபாவின் பார்வை மனைவியின் மீது படிந்தது.

“நம்ம வாழ்க்கையில் நடந்த மாதிரி யாரோட வாழ்க்கையில் நடந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையே திசை மாறி போயிருக்கும். ஒருவர் மீது வைக்கும் கண்மூடி தனமான அன்பிற்கும், தூய அன்பிற்கும் வித்தியாசம் இருக்கு மினி.
அந்த அன்புதான் நம்ம வாழ்க்கையை புரட்டி போடுகிறது.. நான் மலர் மீது வைத்த அன்பும் அத்தகையதுதான்..” என்று புன்னகைத்த கணவனின் தோளில் சாய்ந்தாள் ஜெயா.

அவளின் உச்சி முகர்ந்து அவளின் நெற்றில் பட்டும் படாமல் முத்தமிட்டான்.அத்துடன் மினி அமைதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் அவளின் வாய்க்கு அன்று வாஸ்து சரியில்ல.

“நான் அவனிடம் உண்மையை சொன்னால் அவன் என்னை அடிப்பான்..அதன் நான் உண்மையைச் சொல்லவே இல்ல..” என்றதும், ‘ஐயோ அவனின் கோபத்தை தூண்டி விடுகிறாளே..’ என்று தலையில் கை வைத்து அமர்ந்தான்.

பிரபாவின் பார்வை மனைவியைத் தழுவிச் செல்ல அவனின் மனநிலையை புரிந்து கொண்ட ஜெயா, “அண்ணா நீங்க இந்தப்பக்கம் வந்துவிடுங்கள்..”என்று சொல்ல, “அவதான் புரியாமல் பண்ற. நீயும் அவளோட சேர்ந்து அவனின் கோபத்தைத் தூண்டி விடுகிற..” பாவமாகக் கேட்டான்.

மினி அவர்கள் இருவரையும் புரியாமல் பார்க்க, “இப்போ மட்டும் உன்னை அடிக்காமல் விடுவேனா?” சோபாவில் இருந்து எழுந்த பிரபா அவளை அடிக்க வர, “டேய் மதன் இதுக்குதான் பெங்களூர் பக்கமே வரக்கூடாது என்று முடிவில் இருந்தேன்..” என்று எழுந்து ஓட பார்த்தாள்.

அதற்குள் அவளின் காதைப் பிடித்து திருகியவன், “என்னோட நண்பனை ஐந்து வருடம் என்னிடமிருந்து பிரிச்சிட்ட இல்ல..” என்று குறும்புடன் கேட்க,“பிரபா வேண்டாம் ரொம்ப வலிக்குது..” என்று கெஞ்சும் மனைவியைப் பார்த்து, “விடாதே பிரபா நல்ல அந்த காதை திருகு. இவளுக்கு வர வர வாய்
அதிகமாகி போச்சு..” என்றான் மதன் அவன் பங்கிற்கு.

“என்னை வந்து காப்பத்தாமல் இப்படி போட்டு கொடுக்கிறீங்க. உங்களை வீட்டிற்கு வாங்க கவனிச்சுக்கிறேன்..” என்றவளின் காதை விட்டுவிட்டு, “வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுதான் நடக்கும்..” என்றவன் புன்னகையுடன்.

“நாங்க கொஞ்சம் உள்ளே வரலாமா?” வாசலில் நின்று குரல் கொடுத்தான் கண்ணன்.

தம்பியை அங்கே எதிர்பார்க்காத ஜெயா, “டேய் இது என்ன கேள்வி வீட்டிற்குள் வாடா..” என்று அழைக்க அவனின்  பின்னோடு பூனை போல நுழைந்த விஜியை கவனித்துவிட்ட பிரபா, “ஏய் வாலு..” என்றழைத்தான்.

பிரபாவின் குரல்கேட்டு திரும்பிய மதன், “மினி இவள்தான் விஜி..” என்று அவளை அறிமுகபடுத்த, “ஹாய் விஜி..” என்றாள்.

“அண்ணா நீங்க இருவரும் பேசிட்டீங்க இல்ல..” அவள் சந்தேகத்துடன் இழுக்க, “ஓஹோ நீயும் அவனும் கூட்டு சேர்த்துட்டு அப்பாவிற்கு உடம்பு சரியில்லன்னு சொன்னீங்களா?” என்ற ஜெயாவின் பார்வை இருவரின்
மீதும் சந்தேகத்துடன் பதிந்தது.

“ம்ம் நான்தான் அக்கா இப்படி ஒரு போன் போட சொன்னேன்..” என்று அவளுக்கு பதில் முன்னே வந்து நின்றான் கண்ணன்.

“எதுக்குடா இப்படி செய்தாய்?” ஜெயா அவனை மிரட்ட, “இந்த பிசாசு தொல்லை தாங்க முடியல. உன்னோட வயசுதானே இவளுக்கும். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் லூசு புலம்பிட்டே இருக்கு அதன் அப்படி செய்தேன்..” அவன் ஒப்புகொள்ள,

“ஹி.. ஹி.. ஹி.. ஸாரி அண்ணி..” என்றாள் விஜி. நீங்க அவங்க இருவரையும் தப்பாக பார்க்க கூடாது. கண்ணனும் , விஜியும் நல்ல நண்பர்கள்!

“எப்படியோ உங்க இருவரையும் ஒன்றாக சேர்த்துவிட்டேன்.. கண்ணா உன்னோட ஐடியா சூப்பர்..” என்றவள் கண்ணனுக்கு ஹை – பை கொடுக்க,

“உங்களோட வாலுத்தனத்திற்கு அளவே இல்லையா? ங்களோட
விளையாட்டுக்கு நான்தான் கிடைத்தேனா?” என்றபடியே வீட்டிற்குள் பேத்திகளுடன் நுழைந்தார் கோபிநாத்.

“கண்ணா இதுக்கு பதில் சொல்லுடா..”என்றான் பிரபா குறும்புடனே..அவன் திருதிருவென்று விழிக்க, “உங்களுக்கு முடியல என்றதும்தான் அவங்க அங்கிருந்து வந்திருக்கிறீகாங்க..” விஜி தன் நண்பனைக் காப்பாற்றினாள்.

“மினிம்மா..” என்ற அழைப்பு கேட்டு திரும்பிய மின்மினி, “மணிக்கா..” என்று பாசத்துடன் அழைக்க, “அக்கா அப்படி கூப்பிடாதே..” தன்னுடைய கணவன் மற்றும் குழந்தையுடன் வீட்டின் உள்ளே நுழைந்தாள் ருக்மணி.

“வா ருக்மணி..” என்றழைத்த பிரபா, “ரஞ்சிகுட்டி இங்கே வாங்க..”என்று பிரபா அவனை தூக்க நினைக்க மறுப்பாக தலையசைத்து சீனிவாசனின் மார்பில் சாய்ந்து கொண்டான் ரஞ்சித்.

“ஏய் கேடி எப்படி இருக்கிற..” என்று மினி விசாரிக்க, “நான் நல்ல இருக்கிறேன்..” என்றவாளோ மதனின் பக்கம் திரும்பி,“என்னோட அக்காவை பாட்டுபாட்டியே கவுத்துட்டீங்க இல்ல மதன் அண்ணா..”

அவனை வம்பிற்கு இழுக்க கையெடுத்து கும்பிட்டான் மதன்..
“மினி அக்கா வருகின்ற விஷயம் உனக்கு எப்படி தெரியும் ருக்மணி..” என்று ஜெயா அவளிடம் கேட்க, “இவன்தான் சொன்னான்.. இல்லாட்டி எனக்கு எங்கே தெரிய போகிறது..” என்று மீண்டும் கண்ணனையே கைகாட்ட தம்பியை கொலைவெறியுடன் ஜெயா முறைக்க,

“அக்கா இவள்தான்..” என்று விஜியை கைகாட்டி கண்ணன் தப்பிக்க நினைக்க, “இல்ல அண்ணி இவன் பொய் சொல்றான்..” என்று மீண்டும் கண்ணனையே கைகட்டினாள் விஜி.

இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் கைகாட்ட வாய்விட்டு சிரித்த ஜெயா, “நல்ல விஷயத்தை யார் செய்தாலும் ஏற்றுகொள்ள வேண்டும் இல்ல அப்பா..”என்று கோபிநாத்தை அவள் பேச்சிற்கு இழுக்க, “ஜெயாம்மா என்னை விட்டுவிடுமா..” என்று பேத்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டார் அவர்.

ஆளுக்கு ஒரு சோபாவில் அமர்ந்து பேசவே, “ருக்மணி உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்..” என்றவள் அந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுக்க, “நீங்களும் புத்தகம் வாங்கி தந்துட்டீங்களா சுத்தம் சீனிவாசா இன்னைக்கும் உனக்கு சிவராத்திரிதான்..” புலம்பியவனைப் பார்த்து
வாய்விட்டு சிரித்தான் பிரபா.

“உன்னோட பிரச்சனை மட்டும் இன்னும் குறையவே இல்லையா?” என்று ரகசியமாக கேட்க, “அதை ஏன் கேட்கிற. இன்னும் அவளுக்கு புக் வாங்கி கொடுத்தே என்னோட பேங்க் பேலன்ஸ் குறைந்துகொண்டே வருதுடா.இவளோடு சேர்த்து எங்க அம்மாவும் கதை படிக்கிறாங்க. அவங்களும் மருமகளுக்கு போட்டியாக சாண்டில்யன், கல்கி என்று புக்லிஸ்ட் கொடுக்கிறாங்க..”என்று புலம்பியது கேட்டு,
“இதுக்கு என்னோட மினி பரவல்ல..” என்று வாய்விட்டே கூற, “இந்த வகையில் ஜெயா எவ்வளவோ பரவல்ல..” பெருமூச்சு விட்டான் பிரபா.

அதற்குள் பார்சலை பிரித்த ருக்மணியின் விழிகள் வியப்பில் விரிந்திட,“மினிக்கா என்னோட தோழி எனக்கு எழுதி கொடுத்த கவிதை” என்றவள் விழிகள் இரண்டும் கலங்க, “என்ன இது..” அவளின் கைகளில் இருந்து அந்த புத்தகத்தை பறித்தாள் ஜெயா.

அதில் ஜெயா ருக்மணிக்காக எழுதிய கவிதையை பார்த்தும் அவளின் விழிகளும் கலங்கிட, “தேங்க்ஸ் மினி..” என்றாள் ஜெயா.

இருவரையும் புன்னகையுடன் பார்த்த மின்மினி, “உங்களோட எதிர்பார்ப்பு இல்லாத நட்பைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கு.. நான் பதினாறு வயதிலிருந்து இப்பொழுது வரை உங்களோட நட்பு மட்டும் அப்படியே இருக்கிறது இல்ல. அதனால்தான் அந்த புத்தகம் மீண்டும் உன்னோட
கைக்கே வந்துவிட்டது ருக்மணி..” என்றாள் மினி புன்னகையுடன்.

“அவங்க நட்பு எதிர்பார்ப்பு இல்லாத நட்பு..” என்றான் கண்ணன் வேகமாக.

“ஏன் எங்களோட நட்பு கூட எதிர்பார்ப்பு இல்லாத நட்புதான்..” என்றான் பிரபா.

“ஆமா இந்த புத்தகம் உங்களோட கைக்கு எப்படி..” என்று ருக்மணி அவளிடம் சந்தேகம் கேட்க, “அந்த புத்தகத்தை மாற்றி கொடுத்த விதியே நான்தானே..” என்று அவர்களிடம் உண்மைச் சொல்ல, “ஓஹோ நீதானா அது..” என்று மூவரும் சேர்ந்து அவளை அடி வெளுத்துவிட, “அக்கா பாவம்
விடுங்க..” அவர்களிடமிருந்து விஜியை காப்பற்றினான் கண்ணன்.

பல நாட்களுக்கு பிறகு ஒன்று கூடியவர்கள் கதை பேசிகொண்டிருக்க நேரம் இனிமையாக நகர்ந்தது.கணவனின் பார்வை அடிக்கடி தன் மீது படிவதை உணர்ந்தும் ஜெயா அவனிடமிருந்து விலகியே இருக்க மனதிற்குள் சிணுங்கினான் பிரபா.

கடைசியாக சமையலறைக்குள் தனியாக மாட்டியவளை, “ஐ லவ் யூ மலர்..”என்று சொல்லி இமைக்கும் நொடிகளில் அவளின் இதழில் கவிதை எழுதினான் பிரபா.

இருவரும் சேர்ந்து புன்னகை முகமாக வெளிவர, “ஜெயா ஒரு கவிதை சொல்லு..” ஆசையுடன் கேட்டாள் மின்மினி.

“ஆமா ஜெயா ப்ளீஸ் ஒரு கவிதை சொல்லு..” என்றான் மதனும்..
இருவரும் சோபாவில் அமர, “அக்கா ஜெயா நொடியில் கவிதை எழுதுவதில் திறமைசாலி..” என்றதும், “அவள் என்னோட தங்கை..” என்றவனை முறைத்தாள் ருக்மணி.

கோபிநாத் பெத்திகளுக்கு விளையாட்டு கட்டிக்கொண்டே அங்கே நடப்பதைகவனிக்க, “மலர் ஒரே ஒரு கவிதை சொல்லுடா..” என்றவனின் குரல்கேட்டு நிமிர்ந்து அனைவரின் முகத்தையும் பார்த்தாள் ஜெயா..

“மலரும் மலர்களை போல
இதயம் மலர்ந்துவிடு கண்ணா!
முள்ளோடு இணைந்த வாழ்க்கையை
வாழ கற்றுகொள் கண்ணா!
அழகாக மலரும் மலர்களுக்குள்ளும்
பூநாகம் மறந்திருக்கும் கண்ணா!
பூவோடு முள்ளும் இணைந்த
வாழ்க்கையில் மலரோடு மனங்கள்
சேர்ந்தாலும் கூட முள்ளால்
சில காயங்கள் ஏற்படும்.

மலருடன் முள்ளும் இணைந்திருக்கும்
வாழ்க்கை இதுதானடி பெண்ணே..
மலர்கள் மலரும் வேளையில்
அதோடு மலரும் வாசனை போல
மணந்து மனம் கவர கற்றுக்கொள்!
நீ மலராக இருக்கும் பொழுது
இதயங்கள் உனக்கு அடிமையாகும்..
நீ பூநாகமாக மாறும் தருணத்தில்
வாழ்க்கை மரணத்தை கூட பரிசளிக்கும்.
காதல் மலர்கள் மலரும் வேளையில்
மலரும் காதல் இதயங்கள்
அந்த காதல் மலர்கள் மெல்ல
பூத்து உதிரும் பொழுதும்
மனம் தளராதே பெண்ணே..
இறைவனின் படைப்பில்
அழிவில்லாத பொருட்கள்
இந்த பூஉலகில் இல்லையடி
மலர்கள் மீண்டும் மலரும் அடுத்த
சிலநாட்களில் மீண்டும் உதிரும்

மலராத மலர்களை கொண்டு
மாலை கட்ட முடியாது.
உதிர்ந்த மலர்களுக்காக வருத்தபட்டால்
வருத்தம் தீர்வது இல்லையடி..
மலரும் பொழுது மலர்களாகவும்
உதிரும் பொழுது மலரின்
வாசனையாக இருக்க கற்றுகொள்

உன் வாழ்க்கையே
வானவில்லாக மாறிவிடும்..
நிறம் மாறும் மனிதர்களின் நடுவே
நிறம் மாறாத மலர்களாக
வாழ்ந்து விட்டு செல்வோமடி..”என்று விழிமூடி கவிதை சொன்ன மனையாளின் கவிதையில் மனம் மகிழ்ந்தான் பிரபா.

“நிஜமாகவே கவிதை சூப்பர் ஜெயா..” என்று எல்லோரும் கோரஸாக சொல்ல, “பிரபா” என்று அழைப்புடன் தோள் சாய்ந்தவளை அதே காதலுடன் அணைத்துக் கொள்ள, “மது..”என்ற கணவனின் தோள் சாய்ந்தாள் மினி.

“சின்ன பிள்ளைகள் முன்னாடி என்ன பண்றீங்க..” என்றவனை முறைத்த விஜி, “அவங்களை எதற்குடா நீ பிரிக்கிற..” என்று அவளை கொட்ட வாய்விட்டு சிரித்தனர் ருக்மணியும் சீனிவாசனும்.

தன் பிள்ளைகள் நேரில் அனுபவித்த இன்னல்களை நேரில் பார்த்து பழகிய கோபிநாத், ‘இறைவன் அருளால் என்னோட பிள்ளைகள் இன்று போல என்று சந்தோஷமாக இருக்க வேண்டும்..’ என்று பூஜை அறையிலிருந்த தங்கை மற்றும் மனைவியின் முகம் பார்த்தார்.

காற்றோடு காற்றாக கலந்து இருந்த கற்பகத்தின் உள்ளம் கூட அவர்களின் ஒற்றுமையை பார்த்து தென்றலாக வீட்டின் உள்ளே நுழைந்து தன் மகன்களின் தலையைக் கலைத்துவிட்டு சென்றார்.

தூய அன்பும், நல்ல புரிந்தாலும் இருந்தால் வாழ்க்கை என்றும் அழகாக இருக்கும். அவனின் தூய அன்பை அவள் புரிந்து கொள்ள அவன் செய்யாத தவறு அவளுக்கு தெரிந்து அவர்களின் வாழ்க்கையே சோலையாக மாறியது.

பிரபாவின் உண்மையாக அன்பு அவளின் மீதிருக்க அவர்களை துன்பம் அணுக வாய்ப்பில்லாமல் போனது.சில விஷயங்களை தெளிவாக யோசித்தால் வாழ்க்கை நமக்கு முன்னே வைத்திருக்கும் கேள்விக்கான விடையை கண்டு பிடித்துவிடலாம் என்ற ஜெயாவின் சிந்தனை கூட அவனின் காதலை அவளுக்கு அடையாளம் கட்டியது.

இங்கே காதலில் இணைந்த இதயங்கள் இன்று நட்பால் மலர்ந்து மனம் வீச தொடங்கிவிட்டனர்.. இனிமேல் அவர்களுக்குள் பிரிவிற்கு வழியே கிடையாது.. அவர்களின் நட்பு இன்று போல என்றும் தொடரும்!

அவர்களின் நட்பு இப்படியே தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு விடை பெறுவோம்.

முற்றும் .

error: Content is protected !!