தாரகை -10

வர்ண தூரிகைகளால் வரையப்பட்டவள் போல அழகாய் நின்றிருந்தாள் மேகா ஶ்ரீ. அவளைக் காண காண முகில் நந்தனுக்குள் இதயம் எம்பி குதித்தது.

திருமண வாழ்க்கையைப் பற்றி அவன் இதுவரை பெரியதாக கனவுகள் கண்டதில்லை. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பின்பு பல கனவுகள் உருவாவதை அவனால் தடுக்கவும் முடியவில்லை.

எல்லா தம்பதியர்களை போலவும் இல்வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் பிராவாகித்து எழும்ப, மேகா ஶ்ரீயின் அசைவிற்கு மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போல மயங்கினான்.

அவளை அவசரமாய் உள்ளே அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டவன் முகத்தில் மோக சாரல் வீசியது. இத்தனை வருட ஆண்டு காலத்தில் முதல் முறையாக அவனை நனைக்கும் பருவ மழை இது.

ஆனால் அவன் வலுக்கட்டாயமாக  மேகத்தை சிறை பிடித்து சுகமாய் தான் மட்டும் நனைய கூடாதல்லவா!

தன் கோப முகத்தைக் கண்டு மனைவி பயந்து தானாய் வந்திருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் இதற்கு அவளுக்கு சம்மதமா என்று தான் அவனுக்கு புரியவில்லை.

அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தவன் புன்முறுவலோடு அவளை நெருங்கி மூக்கோடு தன் மூக்கை செல்லமாக உரசினான்.

“என் மேகாமா பயந்துட்டாங்களா? நான் கோவப்பட்டதைப் பார்த்து…” எனக் கேட்கவும் மௌனமாய் அவனை வெறித்தாள்.

“எனக்காக நீ உனக்கு விருப்பமில்லாத ஒன்னை செய்ய வேண்டாம் சரியா… உன் மனசு மாற வரைக்கும் என்னாலே காத்துட்டு இருக்க முடியும். அதுவரை இப்படியே தள்ளி…” என முகில் முழுவதாய் முடிப்பதற்குள் அவன் வார்த்தைகளை மேகா ஶ்ரீயின் உதடுகள் தின்ன துவங்கியிருந்தது.

தன்னை நோக்கி மனைவி வைத்த முதல் அடியில் முகில் நந்தனுக்கு தலை கால் புரியவில்லை.

திகைப்பில் ஒரு நொடி ஸ்தம்பித்தவன் அவள் உதடுகளில் கரைந்து சட்டென்று அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

இது தான் இருவருக்கும் முதல் முத்தம் என்பதை அவர்களுக்குள் வழிந்த தடுமாற்றம் பறைசாற்றியது.

பிடிமானத்திற்காக அவள் இடையை பற்றியவனின் விரல்களில் மெல்ல மெல்ல இறுக்கம் கூடியது.

அவள் இதழ்களில் முத்தாட துவங்கியவன் அவளை முழுதாய் முத்தாடும் நோக்கோடு கட்டிலில் கிடத்தி, ஆசையாய் பருகிய அவள் இதழ்களை மீண்டும் மையல் கொண்டு  வருட, மேகாவோ “ஹாஹா முடியலையே…” என பெருங்குரலெடுத்து முணகவும் முகில் யோசனையாய் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.

இந்த சிறு தொடுகைக்கு இப்படி ஒரு அலறலா! என எண்ணியபடி, “பயப்படாதே மேகாமா…. உன்னை காயப்படுத்த மாட்டேன்” என சொல்லியபடி அவள் கழுத்து வளைவில் அவன் உதடுகள் சங்கமிக்கும் போது, “ஐயோ அம்மா முடியலையே வலிக்குதே” என்றாள் தீனமான குரலில்.

என்ன இது!  நாம் லெஃப்டில் போகும் போனாள் இவள் ரைட்டில் போகிறாள் என குழம்பியவன், அவள் தளிர்விரல்களை எடுத்து ஆதூரமாய் இதழ் பதிக்க, “ஐயோ இவளோ வேகம் வேண்டாமே… பொறுமையா” என அவள் முணகவும் ‘ஏதே இது வேகமா’ என குழம்பியவன் பட்டென்று  எழுந்து அவளைப் பார்த்தான்.

அவளோ அவன் எழுந்ததைக் கூட அறியாமல் கையில் ஒளித்து வைத்திருந்த குட்டி பேப்பரை பார்த்தபடி, “ஹா அப்படி தாங்க… சூப்பரா இருக்கு” என கமெண்ட் கொடுக்கவும் சட்டென தாவி அவள் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த பேப்பரைப் பிடிங்கினான்.

கூடல் வேளையில் அவள் சொல்லிய வார்த்தைகள் அனைத்தும் அந்த பேப்பரில் வரிசையாய் எழுதி இருக்க தலையிலடித்துக் கொண்டு மேகா ஶ்ரீயைப் பார்த்தான்.

“என்னது டி இது!”

“அது… நீங்க அந்த டைம்லே எனக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியலைனு சொன்னீங்கலே… அதான் என் ப்ரெண்ட் கிட்டே கேட்டு என்ன பேசணும் எப்படி பேசணும் கேட்டு நோட்ஸ் ப்ரீபேர் பண்ணேன்” என்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தான்.

பிட்டு சீனில் பிட்டு பேப்பர் வைத்திருக்கிறாளே, ஐயோ!

அவனும் எவ்வளவு நேரம் தான் வலிக்காதது போல் நடிப்பான்.  அவனால் அவளை சமாளிக்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத நிஜம்.

“மேகா…! நான் உன்னை கம்பெல் பண்ணானா? உன் மனுசு மாறுற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு தானே நினைச்சேன்… ஆனால் நீ தான் விடாமல் கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்க… ஏன்டி இப்படி இருக்க” என கேட்கவும் அவள் பாவமாய் அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு பிடிக்காததை செஞ்சா என்னை ஏதாவது பண்ணிடுவீங்களோனு பயமா இருக்கு.ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க… ஏதாவது செஞ்சுடாதீங்க…  நான் அந்த அஞ்சு வார்த்தையையும் மனப்பாடம் பண்ணி இந்த முறை தப்பு பண்ணாம ஒப்பிக்கிறேன்” என்றவள் சொன்னதோடு நில்லாமல், மீண்டும் அந்த டயலாக்குகளை மனனம் செய்து கொண்டிருக்க நொந்த நூடூல்ஸ் ஆகினான் முகில் நந்தன்.

“மேகா எனக்கு இப்போ தான் பயங்கரமா கோவம் வருது… என்னைப் பார்த்தா கொடூரன் மாதிரி இருக்கா உனக்கு? நான் சொன்னதை செய்யலைனா அடிச்சு கொன்னு போடுற ராட்சஷன் மாதிரியா இருக்கேன்” என கத்தியவன் நிதானத்தை இழந்து கையில் கிடைத்த எல்லா பொருளையும் எடுத்து விசிறி அடித்தான்.

முதன் முறையாய் முகில் நந்தனின் அரக்கத்தனமான கோபத்தைப் பார்த்தவளின்  கால்கள் தன்னால் பின் வாங்கியது.

உடல் முழுக்க மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் உதற அவள் விழிகளோ விட்டத்தில் சொருகிக் கொண்டு கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.

“ஐயோ என்னை எதுவும் பண்ணிடாதீங்க… நீங்க சொல்றதை நான் செய்யுறேன். என் தம்பி பாவம் அவனை விட்டுடுங்க… அவனை விட்டுடுங்க… என்னை வேணா அடிங்க… அவன் பாவம்” என அவள் இல்லாத உருவத்தோடு வெறும் காற்றில் யாரிடமோ கெஞ்சி மண்டியிட்டு அலறவும் முகில் நந்தன் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தான்.

மனைவியின் இந்த பித்து நிலை அவனை வெட்டிக் கூறு போடுவதாய்.

“மேகாமா… ஒன்னும் இல்லைடா… நான் எதுவும் பண்ணலை. அது கை தட்டி கீழே பொருள் விழுந்துடுச்சு… இங்கே பாருடா… அங்கே யாரும் இல்லை. ஏன் யாரையோ பார்த்து பேசிட்டு இருக்க. எனக்கு பயமா இருக்கே” அவன் பதறியபடி அவளை  தன்னை நோக்கி பார்க்க வைக்க முயல அவளோ கண்கள் சொருகியபடி எங்கோ பார்த்து பேசிக் கொண்டு நின்றாள்.

“என் தம்பி பாவம் அவனை விடுங்க… நான் என்ன சொன்னாலும் கேட்கிறேன். அவனை எதுவும் பண்ணிடாதீங்க” என திரும்ப திரும்ப ஒரே வார்த்தையை சொல்லி புலம்பியவளை தேற்ற முயன்று தோற்றுப் போனான் முகில் நந்தன்.

அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் திரும்ப திரும்ப தம்பி என்ற புள்ளியிலேயே வந்து நிற்க அவளை அந்த வார்த்தையை கொண்டு தான் தேற்ற முடியும் என ஊகித்தவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன்னை நோக்கிப் பார்க்க வைத்தான்.

“மேகா மா… சாரிடா… ப்ளீஸ் இப்படி அழாதே. உன் தம்பிக்கு எதுவும் ஆகாது. நீ தான் பிரேவ் கேர்ள் ஆச்சே… உன் தம்பியை நீ பத்திரமா பார்த்துக்க மாட்டியா?” எனக் கேட்டபடி கன்னத்தை தட்டி கொடுக்கவும் அவள் முகத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் நிதானம் எட்டிப் பார்த்தது.

கண்கள் அழுகையை நிறுத்த உணர்வுகள் வடிந்த முகத்தோடு மீண்டும் சீலிங் ஃபேனை வெறிக்க துவங்கியவளை கை வளைவில் வைத்துக் கொண்டு ஆதூரமாய் தட்டிக் கொடுக்கவும் அவள் விழிகள் தன்னால் மூடியது.

பல காலம் இப்படி ஒரு ஆறுதல் கொடுக்கும் தோளுக்காக ஏங்கியிருப்பாள் போல. இன்று அது கிடைத்தவுடன் அவள் கண்கள் உறக்கத்திற்கு தவழ்ந்துவிட்டது.

அவள் தூக்கம் கலையாதவாறு மெல்ல படுக்கையில் கிடத்தி போர்வையை போர்த்திவிட்டு அருகில் அமர்ந்தவன் முகத்தில் ஏகத்துக்கும் எண்ண சுழல்கள்.

புதிராக இருந்தவளின் மனம் கொஞ்சமே கொஞ்சமாய் அவனுக்கு புரிய துவங்கியது. மனதளவில் அதிகமாய் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அவளை பாதித்த விஷயம் என்ன என்பது தான் இன்னும் தெரியவில்லை.

இவளை சரி செய்ய வேண்டுமானால் முதலில் அந்த காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்தவன் தூங்கும் தன் மனைவியை திரும்பிப் பார்த்தான்.

உறக்கத்திலும் எதையோ எண்ணி இறுகிப் போயிருந்த அவள் முகத்தைக் கண்டு அவனுக்குள் தன்னால் இரக்கம் சுரந்தது.

ஆனாலும் இந்த பெரிய உண்மையை மறைத்து  திருமணமும் செய்து வைத்துவிட்டு ஒதுங்கி நின்ற அவள் குடும்பத்தை எண்ணி அவனுக்குள் கோபம் ஊற்றெடுத்தது.

“வரேன்… நாளைக்கு காலையிலே வந்து உங்க எல்லாரையும் வெச்சுக்கிறேன். முழு பூசணிக்காயை சோத்துலே மறைச்சா விளையாடி இருக்கீங்க? வாழ்க்கை என்ன உங்களுக்கு அவ்வளவு விளையாட்டா போயிடுச்சா?” என உள்ளுக்குள் கடுகடுத்தபடி மேகா ஶ்ரீயின் குடும்பத்தை நாளை விடியலில் சந்திக்க காத்திருந்தவனுக்கு வாழ்க்கை பல அதிர்ச்சிகளை அலட்டல் இல்லாமல் வைத்திருந்தது.

இனி பல முடிச்சுகள் அவிழும்.