தாரகை – 12

ஓலை வேய்ந்த வீடு அது.

சுற்றிலும் மரங்கள் அடர்ந்து ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருந்த இடத்தையே தன் கண்களால் அளவிட்டான். அந்த வீட்டை ஒட்டி ஒரு சிறிய அறை கம்பிகளை கொண்டு கட்டியிருந்தனர்.

புருவமுடிச்சோடே அருகில் சென்று பார்த்தவன் அங்கே கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றான்.

அந்த மனிதருக்கு அறுபது வயதிற்கு மேல் இருக்கும். ஆனால் சிறு குழந்தையின் சிறு முதிர்ச்சி கூட முகத்தில் இல்லை.

இடுப்பில் கட்ட வேண்டிய வேட்டியை முதுகில் போர்த்திக் கொண்டு சாப்பிட்ட வாயைத் துடைக்காமல் ஒழுகிய உதட்டோடு  தான் அடைக்கப்பட்டிருந்த அறைக் கதவைத் தட்டினார்.

மூளையின் தொடர் சங்கிலி அறுப்பட்டதால்  கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருந்தது.

“காஞ்சனா நீ மட்டும் இந்த அறைக் கதவைத் திறக்கலை… நான் என் கையை நானே கடிச்சுப்பேன்” என்று கத்தினார் ஆங்காரமாக.

உதட்டிலும் கண்ணிலும் நொடிக்கு நொடி அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தது அவருக்கு.

தனது உணர்வுகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாததன் விளைவால் அவரை சங்கிலி போட்டு கட்டுப் போட்டு இருந்தனர்.

அவரைப் பார்த்த அடுத்த கணமே முகிலின் விழிகளில் தன்னால் விழிநீர் மீறியது.

நடுங்கிய விரல்களை சமன்படுத்த கம்பிகளை இறுகப் பற்றியவன் அந்த இடைவெளியின் ஊடே அந்த மனிதரின் முகத்தை அங்குலம் அங்குலமாய் பார்த்து அப்படியே நின்றான்.

“ஐயோ இந்த மனுஷனோட முடியலையே… நீ கையை கடிச்சாலும் சரி உன்னையே கடிச்சுக்கிட்டாலும் சரி. கதவைத் திறக்க முடியாது” என்று அங்கலாய்த்தபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மேகா ஶ்ரீயின் அம்மா காஞ்சனா, அங்கே நின்றிருந்த முகிலைக் கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்தார்.

அந்த ஸ்தம்பிப்பு, அவனை இங்கே எதிர் பார்க்கவில்லை என்பதை சொல்லாமல் சொன்னது.

ஒரு நிமிட அதிர்ச்சியை முகத்தில் காட்டியவர், பின்பு வேகமாய் தன்னை சரி செய்து கொண்டு, “வாங்க மாப்பிள்ளை” என்றார் வரவேற்கும் பாங்கோடு.

அவரைக் கண்டு ஆமோதிப்பாய் தலையசைத்தவன், மீண்டும் அந்த அறையிலிருந்தவரையே இமைக்க மறந்துப் பார்த்தான்.

அவன் பார்வை சென்ற திசை கண்டு காஞ்சனா மெல்லியதாக சங்கடப்பட்டார்.

“தம்பி, வெளியே வெக்கையா இருக்கு… உள்ளே வாங்க”  அவனை உள்ளுக்குள் அழைக்கவும் திரும்பி அந்த மனிதரைப் பார்த்துவிட்டு மௌனமாய் உள்ளே நுழைந்தான்.

“மாப்பிள்ளை, காஃபி குடிப்பீங்களா, இல்லை டீ குடிப்பீங்களா?

“எதுவும் வேண்டாம்” என்று மறுத்தான்.

“மேகா எப்படி இருக்காபா…?” என்றவரின் கண்களில் ‘அவளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கக்கூடாதா?’.என்ற ஏக்கம் தெரிந்தது.

“நல்லா இருக்காமா… அடுத்த தடவை வரும் போது கூட்டிட்டு வரேன். நீங்களும் வீட்டுக்கு வந்து உங்க மகளைப் பார்க்க வரலாமே” என்றான் கனிவான முகத்தோடு.

அவர் ஏதோ பதில் சொல்ல வரும் போது
வெளியிலிருந்து, “காஞ்சனா என்னை திறந்து விடுடி. பாகிஸ்தான் காரனுங்க என்னை கொல்ல வராணுங்க” என்ற குரல் வந்து இறுகிக் கிடந்த சூழலை மேலும் கனமாக்கியது.

மருமகன் முன்னே காஞ்சனா நெளிந்தார். எந்த விசனம் வரக்கூடாது என்று மருமகனை இங்கே அழைக்காமல் இருந்தாரோ அதே சங்கடம் இப்போது ஏற்பட்டு கொண்டிருந்தது.

“அது கொஞ்சம் அவருக்கு…” என மேலும் சொல்ல முடியாமல் வார்த்தைக்கு காஞ்சனா திணற, “புரியுது” என்ற ஒற்றை வார்த்தையில் அவர் தயக்கத்தை முறித்தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கால்கள் தரையில் பாவாமல் நெளிய, சுற்றி முற்றி பார்வையை ஓட்டினான்.

நேற்று மேகா திரும்ப திரும்ப சொன்ன தம்பி என்னும் வார்த்தைக்கு உரியவனை காண கண்கள் ஏக்கம் கொள்ள உதடும் கேட்டுவிட்டது.

“அம்மா, மேகாவோட தம்பி எங்கே காணும்?” என்றவன் கேட்கவும் காஞ்சனா முகத்தில் நொடிப் பொழுதில் வானிலை மாற்றம்.

வெறுமையான விழிகளோடு பின்னால் சுட்டிக் காட்டவும் முகில் குழப்பமாய் திரும்பினான்.

அங்கே சட்டமிடப்பட்டிருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான், பதினெட்டுகளின் இறுதியில் ஒரு இளைஞன்.

“அவள் தம்பி, இறந்து ஒரு வருஷம் ஆகப் போகுது…” என்றவர் சொல்லவும் அவன் திகைத்துவிட்டான்.

தம்பி இறந்ததையே இன்னும் உள்ளுக்குள் ஏற்காமல் மேகா தவிக்கிறாளா என்ற பரிதவிப்போடு எழுந்தவன், “எப்படி?” என்றான் அதிர்ச்சியாக.

“எல்லாத்துக்கும் காரணம் அவள் அப்பா தான்…” என்று காஞ்சனா விசும்பவும் முகிலின் விழிகளில் அதிர்ச்சி வலை பின்னியது.