தாரகை – 2

ஊட்டி.

தேயிலை மணம் வீசும் எழில் தேசம்.

சுற்றி எங்கும் மலை தேவியின் சுக எழுச்சி.

சிகரங்களின்  உயரத்தையே தோற்கடிக்கும் நோக்கில் நிமிர்ந்து நின்றது  நந்தன் பேலஸ்.

பெயருக்கு ஏற்றாற் போல நந்தவனம் தான் அது. அத்தனை செழுமை அங்கிருந்த ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும்.

சுற்றிலும் பல வண்ண மலர்களின் அணிவகுப்பு. ஒளிர் விளக்குகளின் கண்பறிப்பு. வரிசையாய் பழைய கால சிற்பங்கள்.

மொத்தத்தில் அந்த கால அரண்மனையை நினைவுப்படுத்தியது நந்தன் பேலஸ்.

சுற்றி எங்கும் வேலையாட்கள் நிறைந்திருக்க அவர்களை சீராக இயக்கியபடி முகத்தை துடைத்துக் கொண்டு வந்தார், லட்சுமி. இந்த அரண்மணையின் ராணி.

வயது ஐம்பத்தைந்தை கடந்திருந்தாலும் அவரது உடலில் புது உற்சாகம், உத்வேகம்.
பின்னே இருக்காதா!

தன் ஆசை மகன்களுக்கு கல்யாணம் நடந்தேறி இருக்கிறதே. எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்த லட்சுமியின் தோளில் கொடியாய் படர்ந்தது ஒரு கரம்.

அந்த ஸ்பரிசம் பட்டதும் அதுவரை கலக்கமாய் இருந்த லட்சுமியின் முகத்தில் ஆசுவாசமான புன்னகை.

திருமணமாகி முப்பது வருடங்கள் கடந்திருந்தாலும் இன்னும் அந்த  தொடுகையில் இந்த உடல் சிலிர்த்து தான் போகிறது.

புன்முறுவலுடன் திரும்பிப் பார்த்தார். எதிரே ராஜ மாணிக்கம். வயது அறுபதை கடந்திருந்தாலும் முகம் நாற்பதை தான் பிரதிபலிக்கும். இந்த நந்தன் பேலஸ் உருவாவதற்காக பதினேழு வயதிலிருந்து உழைத்தவர், இப்போது பொறுப்பை தன் மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு இளமையில் தொலைத்த சின்ன சின்ன சந்தோஷங்களை முதுமையில் புதுப்பித்து கொண்டிருப்பவர்.

“என் பொண்டாட்டி இப்படி ஆடி ஓடி வேலை செஞ்சா எனக்கு இங்கே அதிருதே” என்று  லட்சுமியின் கரத்தை எடுத்து தன் நெஞ்சின் மீது வைக்க ஏற்கெனவே சிலிர்த்து போயிருந்த லட்சுமி சிவந்துப் போய்விட்டார்.

“என்னங்க இது ஹாலிலே இப்படி பண்றீங்க” என்று நெளிந்தவர் நிமிர்ந்து ராஜ மாணிக்கத்தைப் பார்த்தார்.

உதடுகள் பெயருக்கு சிரித்தாலும் அந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை. அவர் முழுசிரிப்பை வெளிக் கொணரும் நோக்கோடு லட்சுமி திரும்பினார்.

“இப்படி ஹீரோ  டயலாக் பேசி எல்லாம் தப்பிக்க முடியாது. ஒழுங்கா ஜாகிங் போயிட்டு வந்தா தான் காபி கையிலே வரும்” என விளையாட்டாக சொல்லி கையைப் பிடிக்கவும் அவர் கைகளில் நடுக்கம்.

தன் பிள்ளைகளின் எதிர்காலம் அவர் கையை நடுங்க வைத்திருந்தது. இதற்கு மேலும் போலி புன்னகையை அணிய முடியாமல்  நிமிர்ந்தவர் மூடி இருந்த இரண்டு அறையையும் மாறி பார்த்தார்.

“லட்சுமி ரெண்டு பேரும் சரியாகிடுவான்களா?” எனக் கேட்டவரின் குரலில் அத்தனை கலக்கம்.

லட்சுமிக்கும் உள்ளூர நடுக்கம் தான். ஆனால் தன் வருத்தத்தை வெளியே காட்டிவிட்டால் கணவன் முகமும் வாடிவிடுமே.

உடனே முகத்தை சரி செய்து கொண்டவர் புன்னகையை வர வைத்துக் கொண்டு, “அதெல்லாம் நம்ம மருமகள்கள் சரி பண்ணிடுவாங்க. நீங்க கவலைப்படாம வந்து உட்காருங்க” என அவரை டைனிங் டேபிளில் அமர வைத்த நொடி சடாரென எதிரிலிருந்த இரண்டு அறைக் கதவும் திறந்து கொண்டது.

அக்னியே உருவெடுத்து நின்றாற் போல அனலில் நின்று கொண்டிருந்தனர் அந்த புதல்வர்கள் இருவரும்.

மூத்தமகன் காவ்ய நந்தன். அழுத்தக்காரன். உணர்வுகளை வெளிப்படுத்தாத சிட்டி 2.0. கோபத்தின் மறு உருவம். அடித்து செவுலை கிழித்த பிறகு தான் நின்று பேசுவான்.

இளைய மகன் முகில் நந்தன். இவன் அண்ணனுக்கு அப்படியே நேர் எதிர். அவன் அழுத்தக்காரன் என்றால் இவன் அடாவடி காரன். அவன் அடித்துவிட்டு பேசுவான் என்றால் இவன் பேசியே சாகடிக்கும் ரகம்.

இந்த இரண்டு டிஃபரெண்ட் வெர்ஷனையும் தன் கைக்குள் ரிமோட்டாக அடக்க பிறந்தவர்கள் தான் எழில் மதி, மேகா ஶ்ரீ! நம் நாயகிகள்…

எழில் மதி. அமைதி என்றால் என்னவென்று கேட்பவள். வாயிலேயே  பத்து கிலோமீட்டர் தூரம் டிரெயின் ஓட்டுவாள். இவளிடம் நின்று பேசுவதும் தலை கீழாக தண்ணீர் குடிப்பதும் ஒன்றே. பாவம் காவ்ய நந்தன் இவளிடம் பல முறை தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேகா ஶ்ரீ. அமைதிக்கு தத்துப் பிள்ளை. என்ன சொன்னாலும் மறுக்காமல் செய்யும் ரகம். காகம் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என்று சொன்னாலும் சந்தேகப்படாமல் நம்பும் அப்பாவி ஜீவன். முகில் நந்தனை இனி எப்படி சமாளிக்கப் போகிறாளோ. இனி இவளுக்கு தான் வெளிச்சம்…

கதவை திறந்து கொண்டு நின்ற இரண்டு மகன்களின் முகத்தை மாறி மாறி சல்லடை போட்டு பார்த்தார் லட்சுமி.

என்ன தான் வலுக்கட்டாயமாக திருமணம் செய்திருந்தாலும் ஒரு சின்ன நட்பாசை தான். ஏதாவது கசமுசா நடந்து இருக்குமா என்று…

அதைக் கண்டு பல்லை கடித்த முகில் நந்தன் தாயை கோபமாக பார்த்தான்.

“இங்கே பாருமா… நீ அந்த பொண்ணு கழுத்துலே தாலி கட்ட சொன்ன ஒரே காரணத்திற்காக தான் கட்டுனேன். ஆனால் அவள் கூட குடும்பம் நடத்துவேனு கனவு கூட கண்டுடாதே” என அவன் முடிவாக சொல்லிவிட்டு திரும்பி உள்ளே பார்த்தான்.

அங்கே நத்தையாய் சுருண்டு படுத்து கிடந்தாள் மேகா ஶ்ரீ. அவள் தான் தன் மனைவி என்பதை இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை.

நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என கண்களை பல முறை மூடி மூடி திறந்தான்.

நிழல் மறையும், ஆனால் நிஜம் மறையுமா?

மறையா காட்சிப் பிழையாக அவன் மனைவி  கண் முன்னால் படுத்து கிடக்க நடப்பது நிஜம் தான் என்பதை அவன் மனது நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இங்கோ காவ்ய நந்தன் ஒரு வார்த்தை பேசவில்லை. இறுகிய முகத்துடன் தன் அறையையே எட்டி பார்த்தான்.

ரோஜா குவியல் போல உறங்கி கொண்டிருந்தவள் அவன் கண்களுக்கு மட்டும் பொய் குவியலாக தெரிந்தாள்.

தன் மனைவியை ஆயாசமாய் பார்த்தவாறே சோபாவில் ஒரு புறம் காவ்ய நந்தன் விழ மறுபுறம் முகில் நந்தன் விழுந்தான்.

சந்தோஷத்தை துடைத்த தன் மகன்களின் முகத்தை கண்டு லட்சுமி ஆதூரமாய் அவர்களின் தலைமுடியை கோதிவிட முயல, இருவரின் கையும் சட்டென்று அவரை தட்டிவிட்டது.

“இங்கே பாருங்க… இது வரை நீங்க எங்களுக்கு பண்ண நல்லதே போதும். இனி எதுவும் பண்ண வேண்டாம்” என காவ்ய நந்தன் கையெடுத்து கும்பிட்ட நொடி உள் அறையிலிருந்து எழில்மதி குரல் கொடுத்தாள்.

“அத்தை ஒரு காஃபி” என்று.

அவள் குரல் கேட்ட லட்சுமி அடுத்த நொடி பரபரப்பாகி வேகமாய் காஃபி எடுத்து கொண்டு உள்ளே ஓட, “நியாயப்படி அவளுங்க நமக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்திருக்கணும். இந்த வீட்டுலே தான்டா எல்லா சீனும் மாறி மாறி நடக்குது” என தலையில் அடித்து கொண்டனர் தவப்புதல்வர்கள் இருவரும்.

கவலைப்படாதீங்க ராசா… இனி நிறைய தடவை இதே மாதிரி தலையிலே அடிச்சுப்பீங்க…

உள்ளே கட்டிலில் உருண்டு கொண்டிருந்த எழில் மதியின் அருகே போனவர் வாஞ்சையாய் அவள் தலையை வருடி “ஏதாவது நடந்துச்சாமா?” என்றார் ஏக்கமாக.

உடனே வேகமாக எழும்பி அமர்ந்த எழில், “அதெல்லாம் பக்காவா நடந்துச்சு அத்தை. உங்க பையன் அதுலே ரொம்ப மோசம். பாருங்க கட்டிலிலே ஒரு பக்கம் கால் உடைஞ்சு போச்சு” என்று கீழே குனிந்து கட்டில் காலை காட்ட அவள் பேச்சு ஹாலில் அமர்ந்திருந்த காவ்யநந்தன் காதில் விழவும் பற்களை நறநறத்தான்.

அருகில் அமர்ந்திருந்த முகிலோ தன் அண்ணனை மேலும் கீழுமாய் பார்த்து வைத்தான்.

“ஏன்டா பிடிக்கலை பிடிக்கலைனு சொல்லிட்டு இப்படி தான் கட்டில் காலை உடைக்கிற அளவுக்கு பண்ணிட்டு வருவீயா?” என்று நக்கலாக கேட்க, காவ்யன் பார்த்த ஒற்றைப் பார்வையில் சட்டென்று அடங்கிப் போனான்.

உள்ளே அவன் மனைவி மேலும் நிற்காமல் கதை அளந்துவிட்டு கொண்டிருக்க பொறுத்துப் பார்த்த காவ்யநந்தன் சடாரென எழுந்து தன்னறைக்குள் நுழைந்து அன்னையை வெளியேறும்படி கண்ணசைத்தான்.

அவன் கட்டளையிட்ட பின்னும் அங்கேயே நிற்க முடியுமா… மருமகளை பாவமாக பார்த்தபடியே வெளியே செல்ல கதவை மூடிவிட்டு நிறுத்தி நிதானமாய் அவளைப் பார்த்தான்.

“நான் அந்த விஷயத்திலே மோசாமாடி” என்றான் அவள் உதட்டை தன் விரலால்  அழுத்தி பிடித்தபடி.

“என்னவோ என் கூட படு__ எழுந்தவ மாதிரி பேசுற? எவனோ ஒருத்தன் குழந்தைக்கு அம்மா தானேடி நீ” என அவள் உதட்டை மேலும் தன் கரங்களால் நசுக்க, அவன் வன்முறை வார்த்தைகளில் அவள் இதயமும் சேர்ந்து புல்லாய் நசுங்கியது.

திரும்ப திரும்ப எவனோ ஒருவன்  குழந்தை என்று அவன் சொல்வதை சகித்து கொள்ள முடியாமல் “என் வயித்துலே குழந்தையே இல்லை போதுமா” என்றாள் ஆங்காரமாக.

அந்த ஒரு வார்த்தை அந்த ஒரே வார்த்தை காவ்ய நந்தனை முற்றிலும் செயல் இழக்க வைத்தது.

ஆக இதுவும் பொய். தன்னை அடைவதற்காக எத்தனை பெரிய பொய்யை சொல்லியிருக்கிறாள்.

தன்னை ஊர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி தலை குனிய வைத்தவளின் சிரத்தை கொய்யும் வெறி அவன் நரம்புகளில் பாய்ந்த நொடி அவன் காதை வந்தடைந்தது அவள் தேன் குரல்.

“மாமா நான் உன்னை லவ் பண்ணேன்… அதுக்காக நான் என்னையே அசிங்கப்படுத்திக்க கூட தயங்கலை. ஆனால் உனக்கு என் மேலே லவ் கொஞ்சமும் வரலையா?” என்றவள் கேட்க அவள் கன்னத்தை தன் இரு கரங்களால் வெளிப்பிடித்தாற் போல பிடித்தான்.

“ஒரு துரோகி மேலே எப்படிடி காதல் வரும். இந்த உலகத்திலேயே நீ தான் கடைசி பொண்ணா இருந்தாலும் நான் உன்னை காதலிக்கவே மாட்டேன்…” என்றவன் அவளை கட்டிலில் மீது தள்ளிவிட்டுப் போக அழுவதற்கு பதில் அவனை வெறித்துப் பார்த்தாள்.

“நான் நார்மல் மேக் இல்லை மாமா. உனக்காகவே ஆர்டர் பண்ணி கடவுள் ரெடி பண்ண ஸ்பெஷல் மேக்… பார்க்கலாம் எப்படி என்னை காதலிக்காம போறேனு” என்றவளின் பார்வை ஆசையாய் அவனௌ வருட அவன் விழிகளோ உக்கிரமாய் அவளை முறைத்தது.