தாரகை – 5

அந்த நாதஸ்வர மேள சப்தத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒலித்தது அந்த ஆடவனின் குரல்.

அதுவரை சிரத்தையாக ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்து கொண்டு இருந்த காவ்ய நந்தன் அந்த குரலைக் கேட்டு சடாரென நிமிர்ந்தான்.

அது அவன் ஜென்ம எதிரி திலக் வர்மாவின் குரல்…

ஏன் சண்டை போடுவார்கள், எதற்கு சண்டை போடுவார்கள் என தெரியாது.  ஆனால் பார்க்கும் போது எல்லாம் மண் உருள சண்டை போடுவார்கள். அப்படி ஒரு வியாதி இருக்கிறது இருவருக்குள்ளும்.

திலக் வர்மாவை கண்டதும் ஆத்திரமாய் மணமேடையில் இருந்து எழுந்து நின்றான் காவ்ய நந்தன்.

மணமகன் கோலத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் மறந்து தழைய இருந்த வேட்டியை குதிங்காலால்  தூக்கி பிடித்து தோரணையாய் மடித்து கட்டியவன் சீற்றத்துடன் கர்ஜித்தான்.

“கதவு தொறந்து இருந்தா நாய் மாதிரி உள்ளே நுழைஞ்சுடுவியா… போடா வெளியே” என்றான் ஆங்காரமாக.

“பண்ண கூடாத வேலை எல்லாம் பண்ணிட்டு தோரணையா வேற நிற்கிறியா… வேட்டியை இறக்கு டா நாதாரி…” என்றான் பதிலுக்கு கோவம் குறையாமல் திலக்.

“நான் என்ன டா பண்ண கூடாத வேலையை பண்னேன். உன்னை மாதிரி ரோட்டுலே போற பொண்ணுங்க சேலையை பிடிச்சு வம்பிழுத்தனா?” என காவ்யன் கேட்கவும் கோப நரம்புகள் முறுக்கேற இரண்டே எட்டில் காவ்யனின் சட்டையை பிடித்து இருந்தான் திலக் வர்மா.

“நாயே நானாவது பொண்ணுங்க தெருவுலே இருக்கும் போது பொதுவா தான் டா வம்பிழுப்பேன்… ஆனால் நீ…” என நிறுத்திய திலக்கின் பார்வை அங்கே அனாதரவாய் நின்று கொண்டு இருந்த எழில்மதியின் மீது விழுந்தது.

குழந்தை போல் இருக்கும் அவளை இந்த நிலையில் நிற்க வைத்ததை எண்ணி திலக்கிற்குள் வருத்தம் தான். ஆனால் இந்த வாய்ப்பை இழந்துவிட்டால் இனி மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதே.

இடறிய தொண்டையை சரி செய்து கொண்டவன், “என் தங்கச்சியை நாசம் பண்ணிட்டியேடா… என்னை பழி வாங்க என் தங்கச்சி கற்பை அழிச்சுட்டியேடா பாவி” என்று கத்திய திலக்கின் கரங்கள் இடியாய் காவ்யநந்தனின் கன்னத்தில் விழுந்திருந்தது.

தன்னை அடித்தது கூட காவ்யனை பாதிக்கவில்லை… ஆனால் தன் மீது போட்ட பழியை தான் காவ்ய நந்தனால் சிறிதும் தாங்க முடியவில்லை.

பெண்களையே நிமிர்ந்து பாராதவன். தன் ஜென்ம எதிரியின் தங்கையை தொட்டு இருப்பானா? அதுவும் அவள் கற்பை அழித்து இருப்பானா?

இத்தனை பெரிய பழியை  தன் மீது போட்டவனை கொல்லும் ஆத்திரம் வந்தது நந்தனுக்கு.

“இவ்வளவு நாள் என் கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியலைனு, ஒரு பொண்ணை வெச்சு சூழ்ச்சி பண்ணி என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறியாடா… அது இந்த ஜென்மத்துலே நடக்காது. எவனோ ஒருத்தன் உன் தங்கச்சியை தொட்டு விட்டுட்டு போனனா, அந்த பழியை என் மேலே போட பார்ப்பியா?” எனக் கேட்டபடி திலக்கின் கன்னத்தில் குத்துவிட எழில்மதி ஊசியாய் குத்திய அவன் வார்த்தைகளில் கலங்கிப் போய் நின்றாள்.

“நாயே நீ தான்டா… என்னை பழி தீர்க்க என் தங்கச்சியை பலிகடவா ஆக்கிட்ட… எல்லாத்துக்கும் சொம்பு எடுத்துட்டு நாட்டாமை பண்ற நாய்ங்க எங்க போச்சு? இந்த ஊரு பெரிய மனுஷன்றதாலே உன்னை எதுவும் தட்டி கேட்கா முடியாம அமைதியா நிற்கிறானுங்களோ. ஏழைகளுக்கு இந்த உலகத்திலே நியாயமே கிடைக்காதா” என திலக் உச்சஸ்தானியில் கத்த காவ்யநந்தன் அவன் செய்யும் நாடகத்தை அருவெறுப்பாய் பார்த்தபடி நின்றான்.

அவன் நினைவில் ஒரு வாரத்திற்கு முன்பு திலக் பேசிய வார்த்தைகள் அச்சுபிசகாமல் நினைவிற்கு வந்து தொலைந்தது.

ஊருக்கே திருமண பத்திரிக்கை  கொடுத்து எல்லோரையும் மகிழ்ச்சியாய் வரவேற்றவன் திலக் வர்மாவின் முகத்தில் மட்டும் கல்யாண பத்திரிக்கையை விசிறி அடித்தான், “தயவு செஞ்சு என் கல்யாணத்துக்கு வந்து தொலைஞ்சுடாதேடா” என்ற கோரிக்கையோடு.

“என் மச்சான் கல்யாணத்துக்கு நான் வராமயா? நீ வர வேண்டாம்னு சொன்னாலாம் கண்டிப்பா வருவேன் மச்சான்… உன் கல்யாணத்தை பார்க்கிறதுக்காக இல்லை, நிறுத்துறதுக்காக” என்றான் திலக் மீசையை முறுக்கி கொண்டு.

“முடிஞ்சா நிறுத்தி பாருடா… ஊரே வாய் மேலே கை வைக்கிறா மாதிரி அத்தனை பவுசா என் கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்டா” என்று காவ்யநந்தன் சொல்லவும் திலக்கிடம் நக்கல் புன்னகை.

“உன் கல்யாணத்துலே உன்னை தலை குனிஞ்சு நிற்க வைக்கலை… நான் திலக் இல்லைடா. போ போ அசிங்கப்படுறதுக்கு ரெடியா இரு”  என்று திலக் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று செவிப்பறையில் மோதி ஒலிக்க வேகமாய் அவன் சட்டையை பிடித்து கன்னத்திலேயே ஒரு அறைவிட்டான்.

“நீ கேடு கெட்டவனு எனக்கு தெரியும்டா… ஆனால் உன் தங்கச்சியை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்துற அளவுக்கு கேவலமானவன்னு தெரியாது. என் கல்யாணத்தை நிறுத்த இப்படி கீழ்த்தரமான வேலையை ஏன்டா பார்க்கிற” என ஆற்றாமையாக கேட்கவும் திலக்கின் முகத்திலிருந்த பாவனை கொஞ்சமும் மாறவில்லை அவன் சொன்ன குற்றச்சாட்டையும் மாற்றிக் கொள்ள முயலவில்லை.

“கீழ்த்தரமான வேலையை பார்த்தது நீ தான்டா… ஒழுங்கா என் தங்கச்சி கழுத்துலே தாலியை கட்டு. இல்லை இங்கே கொலை விழும்” என அதே பல்லவியையே மீண்டும் பாடி கொண்டிருந்தவனிடம் பேசி எந்த பயனில்லை என்று உணர்ந்தவன் நேராக எழில்மதியிடம் வந்தான்.

காவ்யநந்தன் அருகில் வர வர அவள் இமைகள் சிற்றோடைப் போல படபடத்தது.

இது நாள் வரை தூரத்திலிருந்து தான் அவளைப் பார்த்திருக்கின்றான். ஆனால் இன்று தான் வெகு அருகில் பார்க்கின்றான்.

எழிலோவியத்திற்கு சேலை கட்டியது போல இருந்தாள். ஆனால் எத்தனை அழகு இருந்து என்ன?

தன் அண்ணன் பொய்யிற்கு ஒத்து ஊதும் இந்த அழகு இருந்தால் என்ன போனால் என்ன?

கொஞ்சம் கூட  கூசாமல் நின்றிருந்தவளைக் கண்டு அவன் தாடை இறுகியது. முகம் வெறுப்பை சுமந்தது.

“உன் அண்ணன் தான் புத்தி கெட்டு என்னை அசிங்கப்படுத்துறானா நீயும் இந்த பொது ஜனத்துலே அசிங்கப்படணுமா? ஒழுங்கா எல்லாம் பொய்னு சொல்லு… உன் வயித்துலே வளர குழந்தை என்னோடது இல்லைனு சொல்லு” என அவன் மிரட்டலாய் சொல்லவும் இதுவரை அதிராத சிற்பமாய் இருந்தவளின்  முகத்தில் முதன் முறையாய் வீணை தந்திகள் மீட்டியது போல அதிர்வு.

அவசரமாய் நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தாள். அவன் கையை மடக்கி அவளை கொல்லுவது போல எச்சரிக்கை செய்யவும் அவளிடம் மருட்சி இன்னும் கூடியது.

“இது உங்க குழந்தை தான்” என்றாள் தயக்கம் தந்தியடித்தபடி.

அந்த வார்த்தையில் கோபத்தின் உசச்த்திற்கு சென்றவன் எழில்மதியை வெறுப்பு மின்ன பார்த்தான்.

“பாவி நீயாவது நல்லவளா இருப்பேனு நினைச்சேன். ஆனால் அவன் ரத்தம்னு நிரூபிச்சுட்டலே… அவன் கூட சேர்ந்து ஊர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்த நினைக்கிற இல்லை. உன்னை கொல்லாம விட மாட்டேன்” என்று ஆங்காரமாய் கத்தியவன் அவள் கழுத்தை நெறிக்க வரவும் அதிரடியாய் ஒலித்தது லட்சுமியின் குரல்.

சுற்றி இருந்தவர்கள் மொத்த கவனமும் இப்போது லட்சுமியின் மீது படிய அவரோ வேகமாய் எழில்மதியின் அருகே வந்தார்.

“இந்த பொண்ணு மேலே இன்னொரு தரம் உன் கை பட்டது, உன் அம்மா வளர்ப்பு சரியில்லைனூ அர்த்தம்” என அவர் கத்த தன்னால் இறங்கியது காவ்யநந்தனின் கரம்.

“நந்தா அந்த தாலி எடுத்து இந்த பொண்ணு கழுத்துலே கட்டு” என எழில்மதியை அவர் சுட்டி காட்ட ஹை வொல்டேஜ் பாய்ந்தது போல வெடவெடத்து நிமிர்ந்தான் காவ்யன்.

“அம்மா என்ன பேசுறீங்க… இப்போ மட்டும் அந்த தாலியை எடுத்து இவள் கழுத்துலே கட்டுனா நானே இந்த தப்பை ஒத்துக்கிட்டது மாதிரி ஆகிடும். இதுக்கு ஒரு போதும் நான் சம்மதிக்க மாட்டேன்” என பிடிவாதமாய் நின்றான்.

“ஊர் முன்னாடி ஒரு பொண்ணை உன் வாயாலேயே தரங்கெட்டு பேசிட்டியே நந்தா. இனி அந்த பொண்ணு வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சியா? என்னை அம்மாவா நீ  மதிச்சா இன்னும் கொஞ்ச நேரத்துலே அந்த பொண்ணு கழுத்துலே தாலி ஏறி இருக்கணும்” என லட்சுமி விடாப்பிடியாக நிற்க காவ்யநந்தன் தளர்ந்து போய் அமர்ந்தான்.

இதுநாள் வரை அவன் அன்னையின் ஒரு சொல்லைக் கூட தட்டியது இல்லை. ஆனால் இன்று?

தன் அன்னை சொல்வதைக் கேட்டால் தன் வாழ்க்கையை தானே தலையை சுற்றி கிணற்றுக்குள் போட்டது போல் ஆகிவிடுமே!

சோர்வாய் நிமிர்ந்து அன்னையைப் பார்த்தான்.

“அம்மா ப்ளீஸ்…” என அவன் இறுதியிலும் இறுதியுமாய் கண்ணை சுருக்கி கேட்க, “இது தான் என் இறுதி முடிவு. அதை தட்டுனா உனக்கு உன் அம்மா இல்லை” என்றதும் மறுவார்த்தை பேசாமல் போய் மணமேடையில் அமர்ந்தான்.

அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த மணப்பெண் குடும்பத்தினரிடம் இப்போது பெரும் சலசலப்பு.

“அந்த பொண்ணு வாழ்க்கைக்காக என் பொண்ணு வாழ்க்கையை இப்படி குழி தோண்டி புதைக்கிறது என்ன நியாயம்” என மேகாவின் தாய் கோபமாய் கேட்கவும் அதுவரை நடப்பதை சிலை போல் நின்று பார்த்து கொண்டிருந்த முகிலின் கால்கள் வேகமாய் பின்னோக்கி நடந்தது.

‘ஐயோ இப்போ எல்லாரும் அங்கே பார்த்துட்டு… நம்மளை திரும்பி பார்ப்பானுங்களே… ஓடிடுறா முகிலு” என வேகமாய் நடக்க முயல அவனை சுற்றி அணையைப் போட்டது ஒரு கூட்டம்.

“ஏன்யா முகிலு… இங்கன வாயா…” என தாய் கூப்பிட அவனுக்கு மஞ்ச தண்ணியை தலை மேல் ஊற்றியது போல் இருந்தது.

இன்னும் கொஞ்சம் விட்டால் கிடா வெட்டு நடந்துவிடும் என ஊகித்தவன், “அம்மா நான் அங்கே வந்து என்ன பண்ண போறேன்… இங்கே இருந்தே அண்ணன் கல்யாணம் பார்க்கிறேன்” என்றவனை குண்டு கட்டாய் தூக்கிக் கொண்டு வந்து லட்சுமியின் முன்னால் நிறுத்தினர் மணமகள் வீட்டு சொந்தங்கள்.

“அம்மா சொன்னா கேட்பியாயா?” என லட்சுமி ஆரம்பிக்கவும் “கேட்க மாட்டேன் கண்டிப்பா கேட்க மாட்டேன்” என முந்திக் கொண்டான் முகில்.

“அந்த பொண்ணு வாழ்க்கை நம்ம குடும்பத்தாலே சீரழிஞ்சு போயிட கூடாதுலேயா… அம்மாவுக்காக கட்டிக்கோடா… இல்லை நம்ம குடும்ப மானம்” என தொடங்கியவரின் முன்பு வேகமாய் கை நீட்டி நிறுத்தினான்.

இதற்கு மேல் அவர்கள் பேசப் போவது தெரியாதா அவனுக்கு… எத்தனை தமிழ் சினிமா பார்த்து இருப்பான்.

கௌரவம், மானம், மரியாதை என பதினைத்து பக்க கேள்விக்கு எழுதும் வினா போல நிற்காமல் பல டயலாக்குகள் வரும். அதை எல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தாலியை கட்டி தான் தொலைய வேண்டும் என உணர்ந்தவன் ஒரு முடிவோடு நிமிர்ந்தான்.

“அம்மா எனக்கு சம்மதம் இல்லைனாலும் விட மாட்டிங்கன்றது எனக்கு தெரிஞ்சு போயாச்சு. ஆனால் அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு. அந்த பொண்ணு கிட்டே கேளுங்க. யாருனே தெரியாத என்னைய எப்படி கல்யாணம் பண்ணிப்பாங்க… அவங்க பாவம்லே. அவங்களுக்கு இந்த கல்யாணம் சங்கடமா இருக்கும்லே. அந்த பொண்ணுக்கு சம்மதம்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என பாலை அப்படியே மேகாவின் பக்கம் திருப்பினான்.

என்னால் தான் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை… நீயாவது சிக்ஸர் அடியேன் என்று அவன் பார்வை கெஞ்சி கொண்டிருந்தது.

ஆனால் அவளோ அவனை க்ளீன் போல்ட் ஆக்கி இருந்தாள்.

தன் பெற்றோர் தலையை ஆட்ட சொல்ல இவளும் தலையாட்டி வைக்க முகிலின் நிலை தான் அந்தோ பரிதாபம்.

அண்ணன் கல்யாணத்திற்காக  வந்தவன் இப்போது காலத்தின் சதிராட்டத்தால்  மணமகனாக மேகா ஶ்ரீயின் அருகில்  அமர்ந்திருந்தான்.

ஐயர் கெட்டி மேளம் சொல்லிய அடுத்த
நொடி நாதஸ்வரங்கள் நயனம் பாட, விருப்பமே இல்லாமல் தங்கள் இணைகளுக்கு மங்களநாண் சூட்டியிருந்தனர் மணவாளன்கள்.

காலம் இவர்களுக்குள் காதலை விதைக்குமா? இல்லை வெறுப்பை மேலும் வளர்க்குமா?

விடை விரைவில்.