தாரகை – 8

கூண்டில் அடைப்பட்ட சிங்கமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் காவ்ய நந்தன்.

எண்ண எண்ண அவனுக்கு ஆற்றாமை அடங்கவில்லை. தன்னை அத்தனை பேர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திய மனைவியை கொல்லும் ஆத்திரம் வந்தது.

ஆனாலும் சிறு வயதிலிருந்து அவன் கேட்டு வளர்ந்த வார்த்தைகள் இன்னும் அழியாமல் மனதுக்குள் பசுமரத்தாணி போல பதிந்து இருந்ததால் மனைவியை எதுவும் செய்யாமல் விட்டு வைத்து இருக்கின்றான்.

அவள்  செய்து வைத்த அசிங்கத்தால் எஸ்டேட் பக்கமே செல்ல முடியாத நிலை. தன் மீது போட்ட பழியால் ஊரார் முன்பும் தலை காட்ட முடியவில்லை.

கற்பை இழந்தால் பெண்ணை மட்டுமே இந்த உலகம் கேவலமாய் பார்க்காது. ஆண்களையும் கீழ்த்தரமாய் பின்னால் எள்ளல் செய்யும் என அவனே உணர்ந்து கொண்ட தருணம் அது.

ஒரு பழி ஒரே ஒரு பழி அவனை தலை நிமிராமல் செய்ததை எண்ணி அவனுக்குள் எரிமலை கொந்தளித்து கொண்டு இருந்தது.

சிறுவயதிலிருந்தே அவன் பாட்டி தாத்தாவிடம் ஒட்டுதலாக இருப்பான். தாய் தந்தையரை விட அவர்களின் அரவணைப்பில் இருந்தது தான் அதிகம்.

ஆனால் திருமணம் என்ற ஒன்று என்று நடந்ததோ அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் பெண்கள் பேச்சு மட்டுமே எடுபடும் ஏற்ற இறக்கம் கொண்ட சமூகம் அல்லவா இது. இவன் வார்த்தைகள் கேட்கப்படுமா என்ன!

ஒரு பெண் இழந்தால் மட்டும் தான் கற்பா?
ஆண் இழந்தாலும் அது கற்பு தானே!
ஏன் இந்த சமூகத்திற்கு புரியவில்லை.

என் பாட்டி தாத்தாவிடம் சொன்னால் புரியுமா? என்னை நம்புவார்களா?

உள்ளுக்குள் எழுந்த கேள்வியுடன் கதவைத் தட்டினான்.

“எப்போதும் வா ராசா” என முகம் கொள்ளா புன்னகையுடன் உள்ளே அழைக்கும் முகத்தில் அவனைக் கண்டு இன்று மலர்ச்சி இல்லை.

“பாட்டி” என அவன் அழைக்க பதில் பேசாமல் முகத்தை நொடித்து திருப்பிக் கொண்டார்.

“என்னை நீங்களுமா நம்பலை?” கேட்கும் போதே அவன் குரல் மழையில் நனையும் மலராய் உடைந்திருந்தது.

அவனைக் கண்டு பரிதவித்து அந்த மூத்தவர்கள் திரும்பினாலும் உதட்டை திறந்து பேசவில்லை.

“நான் உங்க வளர்ப்பு பாட்டி… தப்பு பண்ண மாட்டேன்” அவனின் கலங்கிய குரல் கண்டும் ஆலமரமாய் அசையாமல்  நின்றார்கள்.

அவர்களை எப்படி பேச வைப்பது என நந்தன் திணறிக் கொண்டிருந்த  நேரம் பார்த்து எழில்மதி “காப்பி”  என்று டம்ளரை நீட்டினாள்.

ஏற்கெனவே பாட்டி தாத்தா பேசவில்லை என்ற கோபத்தில் இருந்தவன் இவள் குரலை கேட்டதும் கொதித்து எழுந்துவிட்டான்.

‘எல்லாம் இவளால் தான்… இவள் வந்த பிறகு தான் வாழ்க்கை சூன்யமாகிப் போனது’ உள்ளுக்குள் எழுந்த கோபத்தோடு அவள் கையிலிருந்த காப்பியை வேகமாய் தட்டிவிட்டான்.

சுட சுட காப்பி அவள் உடலை வஞ்சனையில்லாமல் பதம் பார்த்து செல்ல வலியோடு நிமிர்ந்தாள். ஆனால் காவ்ய நந்தனின் முகத்தில் சற்றும் இரக்கம் இல்லை.

“இனி என் கண் முன்னாடி வந்தா பொறுமையா இருக்க மாட்டேன். விபரீதமாகிடும்” என அவன் கத்தவும் அதுவரை பேசாதிருந்த பாட்டி கோபமாய் கத்தினார்.

“அடப்பாவி பயலே வயித்துப் பிள்ளைக்காரி மேலே கொதிக்க கொதிக்க காஃபியை ஊத்திட்டியே. என் வளர்ப்பு பொய்யா போச்சே. என் முன்னாடியே கட்டுனவளை கை நீட்டி அடிக்கிறானே” என்று பதறவும் அவனுக்கு எரிச்சல் மூண்டது.

‘என்னை தவிர வீட்டில் உள்ள எல்லோரையும்  மயக்கி வெச்சு இருக்கிறா’ ஆற்றாமை மேலிட வேகமாய் நிமிர்ந்தான்.

“வெந்து சாகட்டும் பாட்டி. பொய் பேசுறவ இருந்தா என்ன, போனா என்ன? அவள் வயத்துலே எந்த குழந்தையும் இல்லை அவளே தன் வாயாலே ஒத்துக்கிட்டா” என்று சொல்லவும் பாட்டி அதிர்ந்துப் போய் எழில்மதியைப் பார்த்தார்.

பாட்டியை மௌனமாய் வெறித்தவள் பதில் பேசாமல் குனிந்து கொள்ள, அந்த பாட்டியின் கண்களில் நீர் சூழ்ந்தது. வெறுமையாய் திரும்பி பேரனைப் பார்த்தார்.

“பாட்டி நான் தப்பு பண்ணலை என் கிட்டே பேசு. இந்த உலகமே என் பின்னாடி பேசி கைத்தட்டி சிரிக்கிறா மாதிரி இருக்கு. எனக்கு யாரையும் பிடிக்கலை… நிமிர்ந்து நின்ன என்னை தலைய குனிய வைச்சுட்டா. எல்லாம், இவளும்  இவள் அண்ணன் காரன் போட்ட நாடகத்தாலே தான்” என சொன்னவனின் விழிகளில் தன்னை மீறி கண்ணீர் வழிந்தது.

ஒரு ஆண்மகன் அழுகின்றான். அதுவும் தன் கற்பு நிலை கலங்கப்பட்டதற்காக அழுகின்றான். ஆனால் அவன் உள்ளத்து வேதனையை வருத்தத்தை அங்கே கேட்போர் யாரும் இல்லை. அவனை ஆதூரமாய் வருடி கொடுக்க கரங்கள் இல்லை.

தன்னிரக்கத்தில் அவனுக்கு மேலும் கண்ணீர் சுரக்க எழில்மதிக்கு அவனை அள்ளி எடுத்து அணைக்க எழும்பிய கரங்கள் அவன் வெறுப்பு கக்கும் முகத்தை கண்டு அப்படியே நின்றது. 

பதிலுக்கு பதில் பேசுபவள் ஒரு வார்த்தை பேசாமல் அங்கிருந்து நகர்ந்து தன்னறைக்குள் புகுந்து கொள்ள செல்லும் அவளையே வெட்டும் பார்வை பார்த்தான்.

பெண்களுக்கு ஒன்று என்றால் மட்டும் தான் பஞ்சாயத்தை கூட்டுவார்களா?

நான் கூட்டுறேன்டா பஞ்சாயத்தை… என் கற்பை கலங்கம் பண்ணவளை விட மாட்டேன். ஊர் முன்னாடி வெச்சு அவள் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்துறேன் என்ற முடிவோடு கையை மடக்கிக் கொண்டு நிமிர்ந்தான்.

💐💐💐💐💐💐💐💐

என் சோக கதையை கேளு தாய்குலமே பாட்டிற்கு பக்காவாக பொருந்திப் போகும்
மெட்டீரியலாக எழில் நந்தன் சில நாட்களிலேயே மாறியிருந்தான்.

வாய் பேசி கொல்லும் மனைவியை தான் இது நாள் வரை அவன் கேள்விப்பட்டு இருக்கின்றான். ஆனால் வாய் பேசாமல்
சாகடிக்கும் மனைவியை இன்று தான் பார்க்கின்றான்.

காலையில் தன்னை சுற்றிக் கொண்டே தனக்கான தேவைகளை ஓடி ஓடி செய்து கொண்டிருந்தவளை பெருமூச்சோடு பார்த்தான்.

அவள் நில் என்றால் நிற்பாள். உட்கார் என்றால் உட்காருவாள்.

நான் ஏன் நிற்க வேண்டும்? உட்கார வேண்டும்? முடியாது… என பதிலுக்கு பதில் பேச மாட்டாளா என ஏங்கியபடி பல கட்டளைகளை இட்டான். பல வேலைகளை செய்ய சொன்னான்.

எல்லாவற்றிற்கும் ஆம் என்ற பதில் தான். ஒன்றை கூட எதிர்த்து கேள்வி கேட்கவில்லை பேசவில்லை என்றதும் அவன் சைண்டிஸ்ட் மூளை குழம்பியது.

எப்படி போனாலும் முட்டு சந்து வருகிறதே… என்ன செய்ய… எந்த ரூட்டுலே போகலாம் என பேனாவை தலையில் தட்டிக் கொண்டே யோசித்தான்.

அவன் கையில் இருந்த நோட்டில் “மனைவியை கோபப்பட வைப்பது எப்படி?” என்ற வாசகமும் அதற்கு கீழே நிறைய எழுதி எல்லாம் தோற்றுப் போனதன் தடமாக அடிக்கப்பட்டும் இருந்தது.

அடுத்து என்ன செய்து கோவத்தை வர வைக்கலாம் என அவன் யோசனையாய் பேனாவை சுற்றி கொண்டிருந்த நேரம் அவன் நண்பனிடமிருந்து போன் வந்தது.

எடுத்து காதில் வைத்து பேசிக் கொண்டே நிமிர, “நீங்க சொன்ன இந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்துட்டேன்” என்று அவள் எதிரே மேகா ஶ்ரீ வந்து நின்றாள்.

முகில் நண்பனிடம் பேசிக் கொண்டே  கண்ணை கோலி குண்டாய் உருட்டினான்.

அவன் கட்டி வர சொன்ன உடை. வேப்பிலை வேப்பிலை வெங்காளியம்மன் வேப்பிலையில் நாயகி கட்டியிருக்கும் வேப்பிலையால் நெய்த ஆடை.

அணிய மாட்டாள் என எண்ணி கொடுக்க, அணிந்தே விட்டாள் ஐயா மொமெண்ட்…

‘ஐயையோ என்ன சொன்னாலும் அப்படியே கேட்குறாளே… நான் என்ன பண்ணுவேன்’ என உள்ளுக்குள் பதறியவன் நண்பனின் போனை மியூட்டில் போட்டுவிட்டு மேகா ஶ்ரீயை நோக்கினான்.

“அம்மா தாயே பரதேவதை இப்படியே வெளியே போயிடாதேமா… இங்கேயே நில்லு” என சொல்லவும் வேகமாய் தலையாட்டி ஆமோதித்து அப்படியே நின்றாள் மேகா ஶ்ரீ.

நண்பனிடம் பேசிக் கொண்டே வண்டியை எடுத்து காலையில் கிளம்பி போனவன் இரவு ஒன்பது மணி தாண்டியே வீட்டிற்குள் வந்தான்.

எப்படி அவளை நிற்க வைத்துவிட்டு போனானோ அதே பொசிஷனில் மனைவி  நின்று கொண்டிருக்கவும் முகிலுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘நான் சொன்ன ஒரே வார்த்தைக்காகவா ஆடாம அசையாம இதே இடத்துலே நின்னா? கடவுளே, என்ன விதமான டிசைன் இவள்’ என்ற பீதியோட அவளருகில் சென்றவனுக்கு தலை பிய்த்துக் கொண்டது.

ஒரு மனுஷனை பீதியிலே வெச்சு இருக்கலாம். ஆனால் பீதியாவே வெச்சு இருக்கக்கூடாது. பாவம்டா முகிலு நீயு.