தாழையாம் பூமுடித்து🌺10

தாழையாம் பூமுடித்து🌺10

                        10

அண்ணன் பிள்ளைகளோடு… அத்தை வீடுவந்த முத்துவேலை, பரபரப்பாக வரவேற்றார் சிவகாமி.

“வா முத்து! வாங்க ப்பா!!’ என வரவேற்றவருக்கு சந்தோஷத்தில் நிலை கொள்ளவில்லை. காலையிலேயே வந்து நின்றிருந்தனர். 

அப்பொழுது தான் ஈஸ்வரனும், தவசியும் மாடுகளுக்கு தீனி வைத்துவிட்டு, பின்வாசல் வழியாக உள்ளே வந்தனர். 

“ஹாய்…‌ மாம்ஸ்!” என பிரியா கை அசைக்க, 

“வாங்க மாமா! வா பிரியா! வா மாப்ள!” என தனித்தனியாக வரவேற்றான்.

“என்ன மாப்ள? மாட்டுக்கு குட்மார்னிங் சொல்லிட்டு வர்றீங்களா?” என மாமன் கேட்க,

“ஆமா மாமா! காளையன மட்டும், ஊர்ல இருக்கும் போதெல்லாம் நாம தான் பாக்கணும்.‌”

“யாரு மாமா அவ்ளோ பெரிய வி.ஐ.பி?” என பிரியா கேட்க,

“ஜல்லிக்கட்டு மாடு பிரியா.” 

“வாவ்… மாமா அப்ப நீங்க ஜல்லிக்கட்டுக்கு எல்லாம் போவீங்களா?”

“நாம போறதில்ல. வளக்குறவங்கள பிடிக்கவிட மாட்டாங்க. நம்ம காளையன் தான் போவான். இப்ப வயசாயிருச்சு. அப்பத்தா பேச்ச தட்ட முடியாம வச்சுருக்கோம்.” என்றான். 

வழிவழியாக இவர்கள் குடும்பத்தில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பார்கள். இந்த தலைமுறையில் கவனிக்க முடியாமல் விற்று விடலாம் என தவசி கூற, பொங்கிவிட்டார் பேச்சியம்மா. 

“இதென்னடா பேச்சு. குலசாமிய விக்கிறேங்கறது. என் கண்ணு அடையறவரைக்கும் கட்டுத்தரையில(மாட்டு கொட்டம்) ஜல்லிக்கட்டு மாடு நிக்கணும். எங்காலத்துக்கு பின்னால நீங்க என்னமோ பண்ணிக்கோங்க.” என்று கூறிவிட இன்னும் வைத்து பராமரிக்கிறார்கள். 

ஈஸ்வரன் ஊரில் இருக்கும் பொழுதெல்லாம் அவன் தான் பார்த்துக் கொள்வான். 

மற்ற நேரங்களில் பெண்கள் முதற்கொண்டு யார் நெருங்கினாலும் பையன் பரமசாது தான். ஆனால் அவனே வாடிவாசல் திறந்துவிட்டால் எவராலும் கிட்டே நெருங்க முடியாது. துவைத்து துவம்சம் செய்து விடுவான்.‌ இப்பொழுது வயதாகிவிட்டதால் வாடிவாசலுக்கு அனுப்புவதில்லை.

“இன்னும் நீங்க தூங்கிட்டு இருப்பீங்கன்ல நெனச்சே. அக்கா எங்கே மாமா?” என பிரியா ஆர்வமாக வினவ,

இன்னும் எந்திரிக்கல, என வாய்வரை வந்த வார்த்தைகளை வாய்க்குள்ளேயே சிறை செய்துவிட்டு, சட்டென, “குளிக்கிறா.” என்றான். 

இன்னும் தூங்குறா என பதில் கூற,‌ இவ பாட்டுக்கு எல்லார் முன்னாடியும் ஏடாகூடமாக ஏதாவது கேட்டு வைத்தால் என்ன செய்வது. 

“அக்காவோட பேக்க கொண்டு வந்திருக்கோம் மாமா. ரூம் எங்கேனு சொல்லுங்க. கொடுத்துட்டு வர்றே.” என்றவளிடம்,

“பரவாயில்ல, கொடு.‌ நானே எடுத்துட்டு போறே. உனக்கு எதுக்கு சிரமம்.” என பேக்கை வாங்கியவன் அவள் பதில் பேசும் முன் படியேறி இருந்தான். 

வந்தவர்களுக்கு சிவகாமி காஃபியை எடுத்து வர, அப்பொழுது தான் தீபிகாவும், சௌந்தரபாண்டியும் எழுந்து வந்தனர். அவளைப் பார்த்த மாமன் நலம் விசாரிக்க, 

அவளும் வந்தவர்களை வரவேற்க,‌ இருந்த சொந்த பந்தங்களும் எழுந்து வந்து ஒன்று கூடினர். 

வெகுநாள் கழித்து வந்தவர்களை அவர்களும் நலம் விசாரிக்க, பிரியாவும்,‌ ஸ்ரீ யும் கூட்டத்தினரைப் பார்த்து மலைத்துப் போயினர். 

“ஊர்ல ஏதாவது திருவிழாவா அத்தை.” என ஸ்ரீ கேட்க,

“இல்லையே!! ஏம்ப்பா அப்படி கேக்குற?”

“இவ்ளோ பேரு இருக்காங்களே?”

“ஈஸ்வரன் கல்யாணத்த கேள்விப்பட்டு வந்தவங்கப்பா. உள்ளூர்ல இருக்குறவங்க, சின்ன அத்தைக எல்லாம் நேத்தே வேலையிருக்குனு போயிட்டாங்க. இன்னும் ரொம்ப பேருக்கு தெரியாது.” 

“கேள்விப்பட்டு வந்தவங்களே இவ்வளவு பேரா?” என வாயைப் பிளந்தாள் பிரியா.

சொந்தபந்தம் என சென்னையில் அவர்கள் வீட்டிற்கு யாரும் வந்தது இல்லை. தாய்வழி சொந்தமும் அவர்களோடே இருந்தனர். வரவேண்டிய தந்தைவழி சொந்தமும் போக்குவரத்து இல்லை. யார் வந்தாலும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் கிளம்பிவிடும் நட்பு வட்டங்கள் மட்டுமே. எனவே அவர்களுக்கு இவ்வளவு சொந்தங்களைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது. 

காஃபியை குடித்த முத்துவேல் அத்தையை பார்க்க எழுந்தார். அதற்குள் ஈஸ்வரனும், சங்கரியும் கீழே இறங்கி வந்தனர். 

அக்காவைப் பார்த்தவள் ஓடிச்சென்று கட்டியணைத்துக் கொண்டாள்.‌ சித்தப்பாவோடு, தம்பி தங்கையை சந்தோஷமாக சங்கரி வரவேற்க… இவர்களும் சேர்ந்து, பேச்சியம்மாவின் அறைக்கு சென்றனர்.

கட்டிலில் படுத்திருந்தவரை அருகே சென்று முத்துவேல் அழைக்க,‌ கண்திறந்து பார்த்தவர் அடையாளம் தெரியாமல், கண்சுருக்கிப் பார்த்தார். 

“நான் தான் அத்தை, முத்துவேல்.” என கூற, அதுவும் வயோதிகத்தின் காரணமாக நிதானம் பிடிபட சிலகணங்கள் பிடித்தது பேச்சியம்மாவிற்கு. 

“பெரியமாமா மகன் முத்துவேல் ஆத்தா.” என சத்தமாக தவசி கூற, சுருங்கிய கண்களை மேலும் சுருக்கியவர் நினைவிற்கு… யாரென்று பிடிபட, 

“எய்யா… ராசா…” என அந்த வயதிலும் வாரிச்சுருட்டி, தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தார். 

“அய்யா!! ராசா!! ஏஞ்சாமி!! வந்துட்டியா! இந்தக்கட்டை காடு போயி சேர்றதுக்குள்ள இந்த அத்தைய வந்து பாக்கணும்னு இப்பவாவது தோணுச்சே.” என ஒளிமங்கித் தெரிந்த, அண்ணன் மகனின் கை, முகம், தாடையெல்லாம் நடுங்கும் கைகளால் தடவிப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் பேச்சியம்மா. 

ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு மன்னரின் ஆட்சி முடிவிற்கு‌ வந்தது போல், பாசாங்கு இல்லாத, இம்மாதிரியான பாசங்களும், சென்ற தலைமுறைக்கு முந்தின தலைமுறையோடு காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. கன்னம், தாடை தடவி கொஞ்சும் பாட்டிகளைக் காண முடிவதில்லை. ஸ்கிரீன் தடவி கொஞ்சும் பாட்டிகளைத்தான் பார்க்க முடிகிறது.

(என்னடா ஒரேடியா அந்தக்காலம்னு  இருக்கேன்னு தோனுதா. என்னங்க பண்றது. பேரன் வெளிநாட்டிலேயே பிறந்ததால க்ரீன் கார்டு ஈஸியா கெடச்சுருச்சுனு, ஸ்கைப்ல பேரனப்பாத்து பெருமைப்பட்டுக்கிட்டு, பேரன கூட்டியாந்து கண்ணுலயே, காட்ட மாட்டுறாங்கனு ஏங்கும் தாத்தா, பாட்டிகளப் பாத்துவந்த ஃபீலிங்க்ஸ். அதே பேரனுக தான் தாத்தா, பாட்டி சாவ ஸ்கைப்ல பாத்துட்டு, துக்க எமோஜி போட்டுட்டு போறானுக. சொன்னா பூமர்னு சொல்லுவாங்க. இல்லைனா பொறாமைம்பாங்க.)

கட்டிலில் அத்தையின் அருகே அமர்ந்து, அத்தையின் கைக்குள் தன் கையை கொடுத்திருந்த, முத்துவேலிற்கும் கண்கள் நீர்பூத்து நின்றது. 

தனது அப்பா தலைமுறையின் கடைசி வேர். வேரைச்சுற்றி, அவரது கிளைகளும், விழுதுகளும் நின்றிருந்தனர். பலவருடங்கள் கழித்து அத்தை வீடு வந்திருக்கும் அண்ணன் மகனைப் பார்த்து, பேச்சியம்மாவின் குழிவிழுந்து பூத்துப்போன கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.

எத்தனை வயதானால் என்ன? பிறந்த வீட்டு சொந்தத்தைப் பார்த்தாலே அலாதி சந்தோஷம் தான் பெண்களுக்கு.

“மூளி அலங்காரி வீட்ல பொண்ண எடுத்து, எங்க அண்ணே குடும்பமே அந்தலை சிந்தலையா ஆகிப்போச்சு. தெருவுல ஒடச்ச தேங்கா மாதிரி ஆளுக்கொரு பக்கமா செதறிப்போச்சுக.” என அந்தக்கால மனுஷியாக, அவர்பாட்டிற்கு தன் அண்ணன்மார் குடும்பம் பிரிந்தபோன ஏக்கத்தை, புலம்பலாக அண்ணன்‌ மகனிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

கிராமத்து மனுஷியின் பேச்சு இப்படித்தான் இருக்கும். பேச்சியம்மாவின் ஆதங்க பேச்சில் அந்த அறையில் நின்றிருந்த, சங்கரியின் முகம் பொழிவிழந்தது. 

அவர் குறை சொல்வது அவளது அம்மாச்சி குடும்பத்தை ஆயிற்றே. ஆயிரம் தான் இருந்தாலும் இவளும் தன் சொந்தங்களை விட்டுக் கொடுக்க முடியாது. பேச்சியம்மாளுக்கு அவர் பிறந்த வீட்டு சொந்தம் பெருசு என்றால்,‌ சங்கரிக்கும் அதே தானே. 

என்னதான் ஒன்றுக்குள் ஒன்று என்றாலும்,‌ சண்டை என வந்தால் இரண்டு பக்கமுமே வார்த்தைகள் தடித்திருக்கும். யாரும் விட்டுக் கொடுத்து பேசியிருக்கப் போவதில்லை. அப்படியிருக்க ஒரு சாராரை மட்டும் குறை கூறுவதாகப்பட்டது அவளுக்கு.

சங்கரியின் முகவாட்டத்தை கவனித்த ஈஸ்வரனும், தந்தையைப் பார்க்க, யாராக இருந்தாலும் பிறந்தவீட்டு ஆட்களை குறை கூறினால் கோபம் வரும். அதுவும் வந்த மறுநாளே இத்தகைய பேச்சு, புது மருமகளுக்கு சங்கடத்தை தரும் என உணர்ந்தவர், 

“ஆத்தா பழச எல்லாம் பேசாதே! இருந்திருந்து மச்சானும் புள்ளைகளும் வந்துருக்காங்க. நல்ல பேச்சு பேசுவியா. அதைவிட்டுட்டு ஆகாத பேச்சு பேசுற.” என சற்று கடிந்து பேசினார். 

“பழச எல்லாம் பேச வேண்டாம் அத்தே. இனிமே நடக்க வேண்டியத பாப்போம்.” என முத்துவேலும் அத்தையை ஆறுதல் படுத்தினார். 

“அதுவும் சரித்தான். போனதப்‌ பத்திப்பேசி என்ன‌ செய்யப் போறோம். செவாமி… உம் பொறந்தவன கவனி.” என மருமகளை அழைக்க,

சிவகாமியும் கண் கலங்கித்தான் இருந்தார். அவருக்கும் நெடுநாள் கழித்து தம்பியும், அண்ணன் பிள்ளைகளும் வீடு வந்த சந்தோஷம். 

“வா முத்து. டிஃபன் ரெடி ஆகிருச்சு. சாப்பிடலாம்.” என தம்பியை அழைத்தார். அனைவரும் பேச்சியம்மாவின் அறையை விட்டு வெளியே வந்தனர். 

தவசி, மச்சினனை இருக்கையில் அமர்த்திக் கொண்டார்.

“டேய் ஸ்ரீ! கொஞ்ச நேரத்துல ஒரு பாரதிராஜா பட சீனே ஓட்டிட்டாங்கடா. ஆனாலும் இந்தக் கெழவி நம்ம அம்மா குடும்பத்த ரொம்ப டேமேஜ் பண்ணிருச்சுடா.” என மெதுவாக உடன்பிறப்பிடம் கூற,

“வயசானவங்கள மரியாதையா பேசு.” என கடிந்தான்.

“நானென்னமோ குமரிய கெழவின்னு சொன்ன மாதிரி கோவிக்கிற?” என்றாள். 

                  *********

திருமணம் முடித்து சங்கரியை அழைத்துக் கொண்டு இந்தப்பக்கம் ஈஸ்வரன் வந்துவிட, அந்தப்பக்கம் சக்திவேல் கொதித்துக் கொண்டு இருக்க, அவரது மாமியாரும் மச்சினனும் சேர்ந்து மேலும் மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தனர்.‌ 

விசேஷத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றிருந்தனர். இனி குறைந்தது ஒரு வாரத்திற்காவது ஊருக்குள் இதுவே பேச்சாக இருக்கும். 

“எல்லாம் எங்க அண்ணே கொண்டு வந்த சம்பந்தம்கறதால தான நீங்க மதிக்கல. எப்பவுமே உங்க வீட்டு ஆளுகளுக்கு என் பிறந்த வீட்டு ஆளுகன்னாலே எளக்காரம் தான். உங்க தங்கச்சி பையன்கறதால தானே மறுபேச்சு பேசாம என் பொண்ண அனுப்பி வச்சுட்டீங்க.” என கயல்விழியும் தன் பங்கிற்கு கணவனுக்கு தூபம் போட,

“ஏன்டி! இப்ப என்ன நடந்திருக்கு. இப்ப போயி உன் பொறந்த வீட்டு பெருமைதான் பெருசா போச்சா. நானே ஒரு சின்னப்பைய, சபையில வச்சு எம்முகத்துல கரியப் பூசிட்டானேனு கொதிச்சுப் போயிருக்கே. வாயக்கொடுத்து வாங்கி கட்டிக்காதே.” என கோபத்தை தன் மனைவியிடம் காட்ட,

“இதுக்கு யாரு தம்பி காரணம்? பிள்ளைய நம்ம கைக்குள்ள வைக்காம, தம்பி பொறுப்புலயும், உங்க அம்மா பொறுப்புலயும் விட்டீங்க. அவங்க புள்ள மனசக் கெடுத்துட்டாங்க. இல்லைனா சங்கரிக்கும் இவ்வளவு துணிச்சல் ஏது?” என ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசிக் கொண்டு இருக்க, முத்துவேல் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

எப்படியும் இவர்கள் ஆரம்பிப்பார்கள் எனத் தெரியும். எனவே பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

இவர் வாயைத் திறந்தால் போதும். அதையே சாக்காக வைத்து இன்னும் ஊதி பெருசாக்கிவிடுவர். எனவே திலகவதிக்கும் கண்களால் அமைதி காட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 

“எம்பிள்ள அந்தப் பட்டிக்காட்டுல எப்படி காலம் தள்ளுவா? சென்னையில எப்படி இருந்தவ. எதையுமே யோசிக்காம, ஊர் ஆளுக பேச்சைக் கேட்டு தலையாட்டிட்டு நின்னீங்க. பெத்தவ எங்கிட்டக்கூட ஒரு வார்த்தை கேட்கணும்னு தோனல உங்களுக்கு. அவ்வளவு தான் இந்த வீட்ல எனக்கு மரியாதை. உங்க வீட்ல எனக்கு எப்ப மரியாதை இருந்துருக்கு. இப்ப இருக்க?” என கயல்விழியும் மூக்கால் அழுதார். 

சபையில் கேட்கப்பட்டது பெண்ணின் சம்மதம் மட்டும் தான், பெற்றோரின் சம்மதம் இல்லை என்பது இவருக்குப் புரியவில்லை. 

“சரியான காட்டானுக. ஏதொன்னுக்கும் கை ஓங்குவானுக.” என்று கயல்விழி மேலும் கூற,

“நம்மலும் அந்தக் கூட்டம் தான் மதினி. என்னமோ வானத்துல இருந்து குதிச்சு மாதிரி பேசுறீங்க. அவன் ஒன்னும் யாரோ எவரோ இல்ல. உங்க அண்ணே கொண்டு வந்த சம்பந்தம் தான் யாரு எவருன்னே தெரியாது. ஆனா இவன சின்ன வயசுல இருந்து பாத்துருக்கோம். நம்ம சங்கரிக்கு இவன் தான் சரியான மாப்பிள்ளை.” என‌ இவ்வளவு நேரமாக தன்னைப் பற்றி பேசும் போது அமைதி காத்தவர்,‌ ஈஸ்வரனைப் பற்றி பேசவும் வாய் திறந்தார். 

இனிமேலும் அமைதி காக்க முடியாது. இனி அவன் இந்த வீட்டின் மூத்த மருமகன். அவனுக்குரிய மரியாதை கிடைத்தே ஆகவேண்டும். இன்னும் இவரது அண்ணன் குடும்பத்தை நாட்டாமை பண்ண விடமுடியாது. 

அவனும் வேற்று‌ ஆள் கிடையாது. ஒருபக்கம் சித்தப்பாவின் பேரன். மறுபக்கம் அத்தைக்கும் பேரன். அக்காவின் மகன். இப்பொழுது மூத்த மருமகன்.

“ஊருக்கு முன்னாடி வச்சு, முறைப்படி தாலி கட்டி கூட்டிட்டு போயிருக்கான். கல்யாணம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இன்னைக்கு முறுக்கிக்கிட்டு நிக்கலாம். இப்படியே சொந்தம் அத்துப் போகாது. நாளப்பின்ன ஒன்னு சேராமலா போயிருவோம். அப்ப… எனக்கு எதுவும் முறைப்படி நடக்கலைனு பிள்ள மனசுல ஏக்கம் வந்துறக்கூடாது.” என முத்துவேல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அஸ்த்திவாரம் போட, 

“அதுக்கு இப்ப என்ன பண்ணனும்கறீங்க?” என்றார் தங்கராசு. 

“மறுவீட்டு விருந்துக்கு அழைக்கணும்னு சொல்றே.”

“மச்சினன அசிங்கப்படுத்திட்டு பொண்ண கூட்டிட்டு போயிருக்கான். அவன நடுவீட்ல கூட்டியாந்து வச்சு விருந்து போடணும்னு சொல்றீங்களா?” என தங்கராசே மீண்டும் துள்ளினார். 

“வார்த்தைய பாத்துப் பேசுங்க தங்கராசு. இப்ப அவன் இந்த வீட்டுக்கு மூத்த மருமகன். அந்த நெனப்ப இருக்கட்டும். யார் யாரோ எங்க வீட்ல உக்காந்து திங்கும் போது என் மருமகன் வரக்கூடாதா?”

“இப்பவும் பாருங்க. யார் யாரோனு எங்க வீட்டு ஆளுகளத்தானே சாடை பேசுறீங்க. எங்க அண்ணே ஒன்னும் சும்மா இல்ல. அவர்கூட நாயா உழைக்குறாரு.”

“அவங்க உழைப்பெல்லாம் எந்த அளவுக்குனு வெளிய வரும் போது தெரியும் மதினி. தேவையில்லாம பேசி ஏற்கனவே குடும்பத்த பிரிச்ச மாதிரி இப்பவும் பிரிக்க வேண்டாம். அவங்களாவது ஒன்னுவிட்ட அக்கா தங்கச்சிக. உங்க சங்காத்தமே வேண்டாம்னு ஒதுங்கிப் போயிட்டாங்க. ஆனா சங்கரி இந்த வீட்டுப் பொண்ணுங்கறது எல்லாருக்கும் நெனப்பு இருக்கட்டும்.” என தங்கராசுவை பார்த்து கூறினார். 

“எங்களாலயா குடும்பம் பிரிஞ்சது. சாதிவிட்டு சாதி லவ் பண்ணது நீங்க. அதுக்கு தூது போனது உங்க தங்கச்சி. அதனால நீங்களும் உங்க சித்தப்பா குடும்பமும் பிரிஞ்சீங்க.” என ரெங்கநாயகி பழையதைத் தூண்டிவிட்டுப் பேச,

“அந்தப்பிள்ளைக்கி கடைசி வரைக்கும் எதுவுமே தெரியாது. உங்க மகனுக்கு, எங்க சித்தப்பா சுதாவைக் கொடுக்கலைனு, வஞ்சம் வச்சு நீங்க தான் பிரச்சினைய பெருசு பண்ணுனீங்க.” என முத்துவேலும் குரலை உயர்த்தினார். 

“இதென்ன வீடா. இல்ல சந்தக்கடையா?” என இதுவரை அமைதி காத்த சக்திவேலின் குரல் ஒலிக்க அங்கு நிசப்தம் நிலவியது.

பழைய சம்பவங்களைப் பேசினால் வீண் விதண்டாவாதம் தான் வளரும். தனது சின்ன மகனுக்கு, சுதாவை பெண் கேட்டார் ரெங்கநாயகி. சின்னவர் பெண் கொடுக்கவில்லை. அந்த கோபம் ரெங்கநாயகிக்கு எப்பொழுதும் உண்டு. 

சின்னவருக்கு, கயல்விழியை, இவர்கள் குடும்பத்தில் இருந்து பெண் எடுத்ததே பிடிக்கவில்லை. அதில் பெண்ணும் கேட்டால் கொடுப்பாரா என்ன? மறுத்துவிட்டார். 

தம்பி முத்துவேல் கூறியதை வைத்து சக்திவேலும் சற்று யோசித்தார்.‌ தங்கைகளின் சொந்தத்தை முறித்துக் கொண்டதுபோல், இதையும் முறித்துக் கொள்ள முடியாது. மகளாயிற்றே. மனிதனுக்கு வயதாகும் பொழுதுதான் மனம் சொல்வதைத் கேட்க ஆரம்பிக்கிறான். 

இளம்வயது, எனக்கு யாரும் தேவையில்லை என அசட்டையாகத் துள்ளும் வயது. சின்ன விஷயம் எனினும் பெரிதாக கௌரவம் எதிர்பார்க்கும். வயோதிகம் ஆலோசிக்கும். அனுபவம் ஆலோசிக்க வைக்கும். அப்பொழுதுதான் அவன் பெரிய மனிதனாக மதிக்கப்படுவான். இல்லையெனில், “பெரிய மனுஷனாய்யா நீ? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?” என, யார் வேண்டுமானாலும் தெருவில் போகுற போக்கில் யோசனை கூறும் நிலை வந்துவிடும். வயதிற்குத் தக்கன பக்குவம் வந்தே ஆகவேண்டும். 

எனினும் சக்திவேலிற்கு கௌரவப் பிரச்சினை தலைதூக்க… பிள்ளைப் பாசம் குறுக்கே வழி மறித்தது. 

முத்துவேல் மறுவீடு அழைக்கப் போவதாகக் கூற, மறுக்கவும் இல்லை. சரிக்கொடுக்கவும் இல்லை. 

சிறுவயதில் இருந்து சங்கரியை வளர்த்தது எல்லாம் முத்துவேலும் அம்மாவும் தான். ஒரே வீட்டில் இருந்தாலும் சங்கரி தந்தையிடம் வந்து நின்றதை விட, சித்தப்பனிடம் தான் ஒட்டுதல் அதிகம். 

கயல்விழிக்கும் ஆளாளுக்கு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள, வசதியாகப் போயிற்று. பிள்ளைகளின் தேவையை ஊன்றி கவனித்ததில்லை. அவருக்கு கணவர் தான் முக்கியம். எங்கே வசதி இல்லாத தன்னை இளக்காரமாக எண்ணிவிடுவாரோ என, கணவனை கட்டுக்குள் வைப்பதிலேயே அவரது பிரயத்தனம் இருந்தது. 

சக்திவேல் தனக்கு வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி விட்டார். கயல்விழிக்கும் உடன் செல்ல எண்ணம் தான். ஆனால் சக்திவேல் மறுத்து விட்டார். அவருக்கு தான் கௌரவம் தடுத்தது. எனவே மனைவி மட்டுமாவது இருக்க வேண்டும் என, உடன் அழைத்து செல்லவில்லை. வருவது மகளும், தங்கை மகனும் ஆயிற்றே. பாசம் விட்டுப்போகாதே. 

அண்ணன் மறுப்பு சொல்லாமல் கிளம்பிவிடவும், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, மணமக்களை மறுவீடு அழைக்க வந்துவிட்டார்.

அனைவரையும் வரிசையாக கீழே அமர வைத்து சிவகாமி பரிமாற, காலை பலகாரம் சாப்பிட்டு முடித்தனர். 

பிறந்த வீட்டு ஆட்களைப் பார்த்ததும் மதிய விருந்திற்கு கோழிகள் விரட்டி பிடிக்கப்பட்டன.  

முறைப்படி தாம்பூலம் வைத்து முத்துவேல் புது மணமக்களை மறுவீட்டு விருந்திற்கு அழைக்க, சிவகாமிக்கு ஆச்சர்யம். 

சங்கரியின் பேக்கை கொடுத்துவிட்டு, பார்த்துவிட்டுப் போக வந்திருப்பதாகத் தான் நினைத்திருந்தனர். எனவே தவசியின் முகம் பார்த்தார். 

“என்னைய ஏன் பாக்குற சிவகாமி.” எனக்கேட்க,

“இல்லீங்க… அண்ணே இன்னும் கோபமாத்தான் இருக்கும். எப்படி அனுப்புறது. தகுந்த மரியாதை கெடைக்குமா?”

“உம்மகனுக்கு மரியாதை வேணும்னு நீ நெனச்சுருந்தா, நாமலும் முறைப்படி போயிருக்கணும். எங்க ஆத்தா எப்படி பிறந்த வீட்டு உறவு அத்துப் போகக்கூடாதுனு என்னைய வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வச்சதோ, அதே மாதிரி நீயும் பொறந்த வீட்டு உறவுக்காக உன் மகன அனுப்பி வச்ச. அப்ப மரியாதைய எதிர்பாக்கக் கூடாது.” என நியாயம் பேச,

“பஞ்சாயத்துல பேசுற மாதிரியே நியாயம் வளக்க உங்கள கூப்புடல. மகனுக்கு அப்பாவா உங்க அபிப்ராயம் தான் நாங்கேட்டது. ஏன்னா எங்க அண்ணனப் பத்தி‌ நல்லா தெரியும். வீம்பு புடிச்சது. அவ்ளோ சீக்கிரம் இறங்கி வராது.” என சற்றே சிடுசிடுத்தார்.

“எனக்கு அவன் மாமன் மகனும் கூட சிவகாமி. அவனைப் பத்தி நீ சொல்லித்தான் தெரியுமா என்ன?” 

தவசிக்கும் சக்திவேலிற்கும் பெரிய வயது வித்யாசம் இல்லை என்பதால் சிறுவயதில் இருந்தே மரியாதை கொடுத்து பேசிப் பழக்கமில்லை. 

“இங்க பாருக்கா. குற்றம் பாத்தா சுற்றம் இல்ல. அப்படி பாக்க ஆரம்பிச்சா, நீ இதப்பண்ணினே, நான் அதப்பண்ணினேனு மாத்தி மாத்தி பேச்சு வளரும். அதான் நான் வந்திருக்கேன்ல. அண்ணே வந்தா என்ன? நான் வந்தா என்ன? பிள்ளைகள மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கா.” என பொதுவாகக் கூற, மறுப்பதற்கான காரணம் இருந்தும், தம்பிக்காக, மூன்றாம் நாள் கணக்கில் மறுநாள் அனுப்புவதாக ஒத்துக் கொண்டனர். 

ஈஸ்வரனையும், சங்கரியையும் தனியாக ஒருமுறை முறைப்படி அழைத்துவிட்டு முத்துவேல், மதிய விருந்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

கிளம்பு முன் மருமகனும், மாமனும் தனியாக வெளியே வந்தனர்.

“அஸ்வின் குடும்பம் என்ன பண்ணுவாங்கனு தெரியலடா. தங்கராசு மகன் சந்துருவும், அஸ்வினும் ஃப்ரன்ட்ஸ். அத்தனை சம்பந்தம் வந்ததுல இவங்களுக்கு மட்டும் தான் தங்கராசு முக்கியத்துவம் கொடுத்தான்.”

“பாத்துக்கலாம் மாமா. ஸ்கூல் மேனஜ்மென்ட்ல கவனமா இருங்க. கன்ஸ்ட்ரக்ஷன்லயும் மெட்டீரியல்ஸ நல்லா செக் பண்ணுங்க.”

“சரிடா மாப்ள. அண்ணே கூப்புடலையேனு நினைக்காத. கோபம் கொறைய கொஞ்ச நாளாகும். வீம்பு புடிச்ச மனுஷ.” என சின்னமாமனும் அண்ணனுக்கு வக்காலத்து வாங்க,

“நீங்க வந்துருக்கீங்கள்ல. போதும் மாமா. உங்க மக மனசுல தான் என்ன ஓடுதுன்னே தெரியல.”

“அது உன்னோட டிபார்ட்மெண்ட்ரா. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல.” என்று கூற, ஈஸ்வரன் சிரித்து விட்டான். 

“பொண்டாட்டிக மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு புருஷங்களுக்கு தெரிஞ்சுட்டா, உலகமே தலைகால் புரியாம சுத்தாதா மாமா?’

“குடும்ப சூட்சுமம்‌ புரிஞ்சுருச்சுடா. பொழச்சுக்குவ.” என மருமகனை தட்டிக் கொடுத்தார்.

ஸ்ரீ யையும், பிரியாவையும் இருந்து அழைத்துக் கொண்டு வருமாரு கூறிவிட்டு, மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க முத்துவேல் ஊருக்கு கிளம்பி விட்டார். 

மலர்க்கொடியும், பிரியா வந்திருப்பது தெரிந்து மாமன் வீட்டிற்கு வந்துவிட்டாள். தீபிகாவும் இவர்களோடு ஒன்று சேர மற்ற அத்தை பிள்ளைகளோடு வீடே கலகலத்தது. 

சங்கரி யோசனையாகவே இருப்பதாகப் பட்டது ஈஸ்வரனுக்கு. தவசி கூறியது தான் அவளது மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. உண்மையிலேயே அம்மாவின் ஆசைக்காகத்தான் வந்தானா? நம் மீது சிறிதும் ஈடுபாடு இல்லையா? நாமும் நிச்சயம் வரைக்கும் வந்தது போல,‌ மலர்க்கொடியை மனதில் வைத்துக் கொண்டு, அம்மாவின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் திருமணம் செய்தானா? என பலவாறாக யோசனை ஓடியது அவளுக்கு. 

“மாம்ஸ், உங்க கலாட்டா கல்யாணத்தால நான் போட்டு வச்சுருந்த திட்டம் எல்லாம் கெட்டுப் போச்சு.” என பிரியா அலுத்துக் கொள்ள,

“அப்படி என்ன ஐந்தாண்டுத் திட்டம் போட்டு வச்சுருந்த.” என்றான்.

“அக்கா கல்யாணத்த சாக்கா வச்சு, பாரிஸ், டி.நகர், பாண்டிபஜார்னு ஒரு பெரிய ஷாப்பிங் லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தே தெரியுமா? எல்லாம் சொதப்பிருச்சு.”

“இப்ப என்ன? ஷாப்பிங் தானே போகணும்? நம்ம ஊர்லயும் வாராவாரம் சந்தை கூடும். சனிக்கிழமை நிலக்கோட்டை சந்தை, செவ்வாய்கிழமை வாடிப்பட்டி சந்தை, வெள்ளிக்கிழமை செம்பட்டி சந்தை, அப்புறம் மணப்பாறை, ஒட்டன்சத்திரம், அயலுர் இப்படி வாரம் பூரா சந்தை இருக்கு. மாமா உன்னைய ஒவ்வொரு சந்தைக்கா கூட்டிட்டு போறேன் பிரியா.” என ஈஸ்வரன் கூறியதைக் கேட்டு மலர்க்கொடி கலகலவென சிரித்தாள்.

“பிரியா… மாமா சொல்றது எல்லாம் ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை.‌ உன்னைய மாடு வாங்கி மேய்க்க சொல்றாரு.” என்று கூற,

“மாம்ஸ்… என்னைய பாத்தா மாடு மேய்க்கிறவ மாதிரியா இருக்கு?” என சிலிப்பிக் கொள்ள, 

“ஆமா… நம்ம வீட்டுக்கு வந்துட்டா மாடு‌ மேய்க்கணும், சாணி அள்ளணும், வரட்டி தட்டணும்.” என ஈஸ்வரன் கொழுந்தியாளை கேலி பேசினான்.

“அதெல்லாம் உங்க பொண்டாட்டிய பண்ண சொல்லுங்க. நான் ஏன் பண்ணனும்.” என்றாள்.

“பிரியா! அதுக்கு தான் நான் இங்க இருந்து எஸ்கேப் ஆகுறே.‌” என்றாள் மலர்க்கொடி.

“எப்படி?” எனக் கேட்க,

“நம்ம ஆளு ஐ.டி.ல வேல பாக்குறாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நாமலும் சென்னைவாசி தான். சங்கரி தான் இங்க வாக்கப்பட்டதால சாணி அள்ளணும்.” என‌ கேலி பேசி சிரித்தனர்.

இவர்கள் பேச்சைக் கேட்டவள், ‘ஒருவேள மலர்க்கொடி தான் பட்டணத்து மாப்பிள்ளை வேண்டும்.’ என, ஈஸ்வரனை மறுத்து விட்டாளா என மற்றொரு யோசனையும் ஓடியது. 

மொத்தத்தில் இவளுக்கு தன்னை இவனுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை கடமையேனு கல்யாணம் கட்டினானா எனத் தெரியவேண்டும். 

கோபியர் சூழ அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைப் போல, முறைப்பெண்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பவன்,‌ நீதான் என் ராதை என அவன் வாய் வார்த்தையாக கூற, இவளுக்கு கேட்கவேண்டும். 

உனக்குப் பிடித்திருக்கிறதா என எதிர்கேள்வி எழுந்தால், ‘பிடிக்காமல் தான் ஊரார் முன், அப்பாவிற்கு ஏற்படும் அவமானத்தையும் மீறி, பயத்தையும் தள்ளி வைத்துவிட்டு தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டினேனாக்கும்.’ 

‘சரி… நீ இதை இவன்கிட்ட சொன்னியா?’

‘சந்தர்ப்பம் கெடைக்கல.’ என தனக்கு சாதகமாய் பதில் சொல்லிக் கொண்டாள். 

என்னமோ அவன் மட்டும் இவளோடு மாதக் கணக்கில் பழகி, தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தாத மாதிரி.

இவர்கள் கேலி பேசி சிரித்துக் கொண்டிருக்க, இவளோ தனக்குள் விவாதம் நடத்திக் கொண்டு இருக்க,

“அக்கா… நாங்க எல்லாம் பேசிட்டு இருக்கோம்.‌ நீ எங்கே ட்ரீம்ல மிதந்துட்டு இருக்க?” என பிரியா உலுக்கினாள். 

அதற்குள் இவர்களுக்கு மாலைவேளை பலகாரமும் காஃபியும் எடுத்துக் கொண்டு சிவகாமி வர, மலர்க்கொடி எழுந்து போய் உரிமையாக வாங்கி வந்தாள்.

‘நாம இருக்கும் போது, இவ எதுக்கு எங்க அத்தை கிட்ட உரிமை எடுத்துக்கறா என அதற்கும் கோபம் வந்தது. அவள் உள்ளூரில் இருப்பவள். அதனால் அவளுக்கு இந்த வீடும், வீட்டு மனுஷர்களும் சகஜம், என்பது உரைக்கவில்லை. 

இருந்தாலும் தானும் அவளோடு சேர்ந்து கொண்டு, மற்வர்களுக்கு காஃபியை எடுத்துக் கொடுத்தவள், இதுவரை தங்கையின் அருகில் அமர்ந்திருந்தவள், இப்பொழுது உரிமையாக வந்து ஈஸ்வரன் அருகில் அமர்ந்தாள். 

அவளையே கவனித்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன். புதுப்பொண்டாட்டிய கவனிப்பது தவிர வேற வேல என்ன இருக்கு. 

அப்பொழுது தான் மலர்க்கொடி உரிமை எடுத்துக் கொள்வது பிடிக்கவில்லை எனத் தெரிந்தது. திருவிழாவிலும் மலர்க்கொடியோடு தன்னை பார்த்த பிறகுதான் முறைத்துக் கொண்டே திரிந்தாள் என, இப்பொழுதுதான் பொண்டாட்டியின் நாடியை சரியாகப் பிடித்தான்.

‘அடிக் கள்ளி. இதுவா உஞ்சங்கதி.’ என மனதினுள் சிரித்துக் கொண்டான். 

அதன்பிறகு இவளை சீண்டுவதற்கென்றே, மற்ற முறைப்பெண்களோடு அதிகமாக கேலிபேசி, சிரித்து என இவளை பொறாமையால் சூடேற்றி, கோபத்தால் சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான்.‌ 

இதுக்கு பேருதாங்க சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதுன்னும் சொல்லலாம். ஆப்ப தேடிப்போயி உட்கார்றதுனும் சொல்லலாம். 

error: Content is protected !!