தாழையாம் பூமுடித்து🌺11

                      11

இவங்க குடும்பத்து ஆளுக எப்பவுமே இப்படித்தான் சங்கரி. இவங்களுக்கு முதல்ல அம்மா, அப்பா, தங்கச்சி, அதுக்கு அப்பறம் தான் போனாப் போகுதுன்னு பொண்ட்டாட்டிகிட்ட வருவாங்க. வீட்ல வேலக்காரி மாதிரி தான் வர்றவங்களுக்கு எப்பவும் வடிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கணும்.” என ரெங்கநாயகி அலுத்துக் கொள்ள, 

“இப்பக்கூட பாரு. மறுவீட்டு விருந்துக்கு வந்துருக்கீங்க. ஒருநாள் கூட முழுசா தங்கவிடல. எங்கே பொண்டாட்டி பக்கம் போயிறுவானோன்னு, உடனே தங்கச்சிக்கி இடுப்பு வலின்னு ஃபோன் போட்டாச்சு.” என இதுவரை மகளை அருகில் அமர்த்தி பேசியிறாத கயல்விழி கூட மகளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்.

சங்கரி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நீ சென்னையிலேயே வளந்தவ சங்கரி. இங்க உனக்கு சரிப்பட்டு வராது. சிட்டியிலேயே பிறந்து வளந்த உங்க அப்பாவே, உங்களை எல்லாம் ஸ்லீவ்லெஸ்ஸோ, ஜீன்ஸோ போடவிட்டது இல்ல. இவங்க எல்லாம் அதுக்கு மேல இருப்பாங்க. உன்னால நைட்டி கூட போட முடியாது. உனக்கு காஃபி இல்லாம இருக்க முடியாது. இவர் என்னடான்னா காஃபி பழக்கமே இல்லைங்கறாரே?” என்றார் கயல்விழி. 

இவர் திருமணம் முடித்து வந்த புதிதில் நைட்டி உடுத்தியதற்கு, “இதெல்லாம் மெட்ராஸ்ல இருக்கும் போது போட்டுக்க சொல்லுடா. நம்ம ஊருக்கு வந்துட்டா, ஊருக்கு தகுந்த மாதிரி உடுத்த சொல்லு.” என சின்னவர் சக்திவேலிடம் கூறிவிட்டார். அதை மனதில் வைத்துகொண்டு இப்பொழுது மகளுக்கு புத்திமதி கூறுகிறார்.

“ஆமா சங்கரி… இதுக்கு மேல இன்னொன்னு இருக்கு. பீரியட்ஸ் நாள்ல வீட்டுக்குள்ளயே விடமாட்டாங்கடி. மாட்டுக் கொட்டம் ஓரமா ஒரு ஒட்டுத்திண்ணை இருக்கும். கொசுக்கடியில அங்க தான்  மாட்டோட மாடா இருக்கணும்.‌” 

“கறிக்கொழம்பு, மீன் கொழம்புனா அல்பத்தனமா, தெரியாம எடுத்து தனியா வச்சுக்குவாங்க. இதெல்லாம் யோசிச்சு தான் சொல்றே. எப்படியாவது உம்புருஷன கூட்டிக்கிட்டு சென்னைக்கு வந்துரு. நமக்கு இல்லாத பிஸினஸ்ஸா. அங்க இருந்தா உன்னையும் மாடு மேய்க்க விட்டுறுவாங்க சங்கரி.” என மறுவீடு வந்தவளுக்கு வாழும் வழிமுறைகளை அம்மாவும் அம்மாச்சியும் போதித்துக் கொண்டிருக்க, முதல் நாள் அனைவரும் சங்கரி‌ தான்‌‌ மாடு மேய்க்கணும் என்று கேலிபேசி சிரித்தது அவளுக்கு நினைவில் வந்து போனது.

“இவங்களுக்கு வசதி இருந்தாலும் அனுபவிக்க தெரியாது. ஆடுமாடு,  தோப்புதுரவுன்னு அதையே கட்டிக்கிட்டு அழுவாங்க. உங்க தாத்தா மாதிரி அப்பவே சொத்தெல்லாம் வித்துட்டு சென்னைக்கு வந்திருந்தா இன்னும் பெரிய ஆளா ஆகிருக்கலாம். நீயாவது கூறுவாறோட பொழைக்கிற வழியப்பாரு.”

“அம்மாச்சி சொல்றதும் சரிதான். வீட்டோட மாப்பிள்ளையா போறது ஒன்னும் அவங்களுக்கு புதுசு இல்ல. அவங்க அப்பாவும் வீட்டோட மாப்பிள்ளையா வந்தவர் தானே சங்கரி.” என அறைக்குள்‌ அமர்ந்து மாற்றி மாற்றி அவளது மூளையை, சர்ஃப் போட்டு துவைக்க, அதாங்க ப்ரைன்வாஷ் செய்து கொண்டிருக்க,

மனைவியையும் உடன் அழைத்து செல்லலாம் என திரும்பி வந்தவன் காதுகளில் அத்தனையும் அட்சரசுத்தமாய் விழ, அதற்கு சங்கரி எந்த மறுமொழியும் பேசாமல் அமைதியாக இருந்தது அவனை கோபப்படுத்தியது. வந்த சுவடு தெரியாமல் திரும்பி விட்டான். 

இன்று காலை தான் மறு வீட்டு விருந்திற்கு வந்தனர். வந்தவர்களை வாசலில் நிறுத்திவிட்டு, பிரியாவை மட்டும் உள்ளே அழைத்த திலகவதி, அவள் கையில் ஆரத்தி தட்டை கொடுக்க, 

கொழுந்தியாள் ஆரத்தி எடுத்தாள். மாமன்காரன் ஆரத்தி தட்டில் காசுபோட, 

ஸ்ரீ, “எனக்கு இல்லைய மாமா?” என்றான்.

“சீர் கொண்டு போகும் போது தான்டா மச்சானுக்கு ட்ரெஸ்ஸும், நகையும் எடுத்து தருவாங்க.” என முத்துவேல் மகனுக்கு வழமையை எடுத்துரைத்தார்.   

மருமகன் என்ற மரியாதையை கயல்விழியும் மறுக்காமல் வழங்கினார். இல்லை எனில் முத்துவேலிடம் பேச்சு கேட்பது யார். என்னதான் சக்திவேல் மனைவி பக்கம் என்றாலும், இந்த மாதிரி விஷயங்களில் தம்பி பக்கம்தான். இவரது நாத்தனார் சுந்தரியும் உடன் இருந்தார். சக்திவேலோடு தங்கராசு மட்டுமே சென்னைக்கு கிளம்பியிருந்தார்.

காலையிலேயே மட்டன் குருமா,‌ இட்லி, வடை, வழமை மாறாமல் இடியாப்பம் என விருந்து ஆரம்பமாகியது. மாப்பிள்ளை மறுவீட்டு விருந்தில் இடியாப்பம், தேங்காய்ப்பால் கட்டாயம் இடம்பெறும். 

மதிய விருந்திற்கு ஊருக்குள், நாட்டுக்கோழி சொல்லி வைத்திருக்கிறார் முத்துவேல்.

காலை விருந்து முடிந்து காஃபி கொடுக்க, எனக்குப் பழக்கமில்லை என ஈஸ்வரன் மறுத்து விட்டான். அவனுக்கு கண்ட நேரத்தில் காஃபி குடித்துப் பழக்கமில்லை. ஆனால் சங்கரிக்கு காலை டிஃபன்‌ முடித்து சூடாக காஃபி குடிக்க வேண்டும்.

விருந்தெல்லாம் ஜருராகத்தான் நடந்தது. ஆனால் சங்கரி தான் அமைதியாகவே இருந்தாள். முன்தினமே, “பிரியாவிற்கு கட்டில் இல்லாமல் தூங்க முடியாது.” என ஈஸ்வரனிடம் கூறிவிட்டு, மலர்க்கொடியோடு தங்கிக் கொள்கிறேன் என்ற தங்கையை மல்லுக்கட்டி,‌ தன்னுடன் வைத்துக் கொண்டாள். 

தலையனை, போர்வையை அள்ளி கையில் கொடுத்தவளை… சிரிப்போடு பார்த்து நிற்க…

“என்ன லுக்கு?” என்றாள்.

“ம்கூம்… ஒன்னுமில்ல.” என்று தலையாட்டிவிட்டு, சிரித்துக் கொண்டே, மச்சானை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான். 

அவளது கோபமும், தன்மீது அவள் காட்டும் உரிமையும் பிடித்திருந்தது அவனுக்கு. அவள் சிறுபிள்ளையாய் முகம் திருப்புவதை ரசிக்க ஆரம்பித்தான்.

காலையில் எழுந்து கீழே இறங்கி வருவதற்குள் அக்காவும்‌ தங்கையும் கிளம்பித் தயாராக இருந்தனர். 

இவனைத் தவிர, மற்றவர்களிடம் நன்றாகத்தான் பேசினாள்.

நாலுபேரும் விருந்திற்கு கிளம்பி வந்துவிட்டனர். 

கயல்விழியும், சுந்தரியும் அனைவரையும் அமரவைத்துப் பரிமாற, பிரியா தான் இடையிடையே ஏதாவது பேசினாளே தவிர இவள் எதுவும் பேசவில்லை. 

இவளது அமைதி தான் இவளுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லையோ என அம்மாவையும் அம்மாச்சியையும் எண்ணம் கொள்ள வைத்தது. எனவே தான் குட்டையை குழப்பிக் கொண்டு இருக்கின்றனர்.

மதிய உணவு வேளைக்குப் பிறகு, சற்று ஓய்வெடுக்கலாம் என, சங்கரியின் அறைக்குள் செல்ல, அங்கே அவனுக்கு முன்‌ படுத்து கண் மூடியிருந்தாள். 

முத்துவேல் ஸ்ரீ யை அழைத்துக் கொண்டு நிலக்கோட்டை பாத்திரக் கடைக்கு சென்றுவிட்டார். நகை, பாத்திரம் என்றால் சுற்றுவட்டார கிராமத்தார் எல்லாம் நிலக்கோட்டை தான் வரவேண்டும். 

நாளை மணமக்களை வழியனுப்பும் பொழுது பலகாரச்சீர் கொடுத்துவிட வேண்டுமே. 

ஏற்கனவே அதிரசம், முறுக்கோடு மற்ற பலகாரங்களை ஆர்டர் கொடுத்திருந்தார். அவற்றோடு பாத்திரங்களையும் வாங்கி வந்துவிடலாம் என மகனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 

உள்ளே வந்து படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது கைபேசி அழைக்க, அறைகுறை தூக்கத்தில் எடுத்துப் பார்த்தான். சிவகாமியிடம் இருந்து தான் அழைப்பு.

அழைப்பை ஏற்று விபரம் கேட்க, தீபிகாவிற்கு இடுப்புவலி வந்துவிட்டதாக தகவல் கூறினார்.

அப்பொழுதும் மகனை வாவென்று அழைக்கவில்லை. மருத்துவமனை செல்வதாக மட்டும் தான் கூறினார். ஈஸ்வரன் தான் உடனே கிளம்பினான்.‌ 

சங்கரி தூங்கிக் கொண்டிருக்க, எழுப்ப வேண்டாம், குழந்தை பிறக்கவும் அழைத்து செல்லலாம் என கிளம்பியவன், வெளியே வர, கயல்விழியும், ரெங்கநாயகியும் கூடத்தில் இருக்க, அவர்களிடம் கூறிக்கொண்டு சென்று விட்டான். 

சிறிது நேரங்கழித்து, எழுந்து வந்தவள், ஈஸ்வரனைத் தான் தேடினாள்.‌ 

“ம்மா… அவங்க எங்க?”

“உங்கிட்ட சொல்லலியா?”

“சொல்லிட்டுப் போயிருந்தா நம்மகிட்ட வந்து ஏன் கேக்கப்போறா கயல்.” என்றார் ரெங்கநாயகி. 

“உன் நாத்தானாவுக்கு இடுப்பு வலி வந்துருச்சாம். ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். இதக்கூட பொண்டாட்டி கிட்ட சொல்லல.”

“என்னது! தீபிகாவுக்கு குழந்தை பொறக்கப்போகுதா ம்மா!” என இவள் சந்தோஷமாக ஆர்வம் காட்ட,

“நீ தான் துள்ளுற. ஆனா அவங்க உன்னய கண்டுக்கற மாதிரி தெரியல. உன்னையும் சேத்து கூட்டிட்டுப் போகணும்னு கூட தோனல பாரு?” என இருவரும் ஆரம்பித்தனர். 

ஃபோன் செய்து விசாரிக்கலாம் என அறைக்குள் வந்தாள். அவள்‌ பின்னாடியே வந்தவர்கள் தான், மகளிடம் கணவனோடு தனியே பிரிந்து வந்துவிடுமாறு போதித்துக் கொண்டு இருக்கின்றனர். 

மாலை நேரத்து டீ யோடு வந்த சுந்தரியும் அங்கு தான் இருந்தார்.

காரை ஓட்டிக்கொண்டே நிலவரம் என்னவென்று அம்மாவிடம் கேட்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை பொறந்திரும்னு சொல்றாங்க டா. வீட்லயே பனிக்குடம் உடஞ்சிறுச்சு. அதனால சீக்கிரம் பொறந்திரும்.” என மகனுக்கு பதில் கூறியவர், மகன் வருவதை அறிந்து மருமகளையும் உடன் அழைத்து வருமாறு கூறினார். இவனுக்கும் அதுதான் சரி எனப்பட்டது. குழந்தையை இருவரும் சேர்ந்து பார்க்க வேண்டும் என எண்ணினான்.

சின்ன மாமனுக்கு தகவல் கூறிவிட்டு, சங்கரியையும் உடன் அழைத்து செல்லலாம் என‌ வீடு வந்தவன் தான் இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு திரும்பிவிட்டான். 

மருத்துவமனை சென்ற சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறக்க, தாய்மாமன் ஆன சந்தோஷம் அவன் முகத்தில். மருத்துவமனை என்றும் பாராமல் 

“தாங்க்ஸ் டா மாப்ளே!” என, சௌந்தரபாண்டியை அலேக்காக தூக்கி சுற்றிவிட்டான். 

“டேய் இறக்கி விடுடா. நான் போயி எம்பொண்டாட்டிய பாக்கணும். உள்ளே விடச் சொன்னா விட மாட்டேங்குறாங்க.”

“நீ போலீஸ்னு சொல்ல வேண்டியது தானடா?”

“அதையும் சொன்னேன்டா. அதுக்காக எல்லாம் உள்ள விடமுடியாதுன்னு அந்த நர்ஸ் சொல்லிருச்சுடா.”

“சிரிப்பு போலீஸ்னு நெனச்சுட்டாங்க போலடா.” என மாமன் ஆன சந்தோஷத்தில் மச்சானை கேலி பேசிக் கொண்டு இருக்க, 

இங்கே சௌந்தரபாண்டியோ மனைவியைப் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரமும் அவளது சத்தம் மட்டும் தான் வெளியே கேட்டது.

உடனே தனது மாமனை அழைத்து சந்தோஷத்தை தெரிவித்தான் ஈஸ்வரன்.

வீட்டிற்கு வந்த முத்துவேல் அனைவரிடமும் கூறினார்.

சௌந்தரபாண்டியும் தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை முறைப்படி சங்கரிக்கு அழைத்து பேசியவன், அவளது ஃபோன் வழியாகவே பெரியவர்களுக்கும் தகவல் கூறினான். 

“உனக்கு உன் வீட்டுக்காரர் ஃபோன்‌ பண்ணாப்லயா சங்கரி?” என கயல்விழி விசாரிக்க,

“இல்லம்மா?” என்றாள்.

“போகும் போதும் சொல்லிட்டுப் போகல. போன பின்னாடியும் குழந்தை பிறந்த தகவலையும் சொல்லல. வீட்டுக்கு வந்த மருமகனுக்கு நமக்கெல்லாம் சொல்லணும்னு தோனல. இவ்வளவுதான் உனக்கு அங்க மரியாதை. பாத்து நடந்துக்கோ.” என மகளை மேலும் குழப்பி விட்டார்.

தனக்கு தனிப்பட்ட முறையில் அழைத்துக் கூறவில்லையே என சங்கரிக்கும் மனம் சுணங்கியது.

திருமணம் முடிந்து முழுதாக மூன்று நாட்கள் கூட முடியவில்லை. தனிமையும் குறைவு. புரிதல் என்பது இருவருக்குள்ளும் இன்னும் நெல்முனையளவு கூட ஆரம்பிக்கவில்லை. வெறும் ஈர்ப்பு என்பது எந்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.  

இவனோ பெரிய சொந்தபந்தங்களோடு வளர்ந்த, பாசத்துக்கு கட்டுப்பட்ட பாசாங்கு இல்லாதவன். இவளோ தன் குடும்பத்தினரோடு மட்டுமே பழகிய பட்டணத்து பழக்கவழக்கங்களுக்கு பழக்கப்பட்டவள். 

“அதான் பிள்ளையப் பெத்தவன் முறைப்படி நமக்கெல்லாம் சொல்லிட்டான்ல. இப்பவே ஆரம்பிக்காதீங்க. நான் குழந்தைய பாக்கப் போறே.” என முத்துவேல் மருத்துவமனை கிளம்ப, குழந்தையைப் பார்க்க தானும் வருவதாக சித்தப்பாவோடு கிளம்பினாள். மற்றவர்கள் நாளை செல்வதாக கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் ஒரு கும்பலே கூடியிருந்தது. சிவகாமி, ஜெயந்தி, மலர்க்கொடி, ஈஸ்வரனின் சித்தப்பா மனைவி என பெண்களும், ஆண்களுமாக அனைவரும் அங்கு இருந்தனர். 

“என்ன சித்தப்பா இவ்ளோ கும்பலா இருக்கு. குழந்தைக்கு ஏதும் பிரச்சினையா?” என இவளுக்கு பயம் வந்தது.

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா. என்ன விசேஷம்னாலும் எல்லாரும் ஒன்னு கூடிருவாங்க. நாளைக்கி வந்து பாரு. இன்னும் கூட்டம் இருக்கும்.” என இவர்கள் பேசிக்கொண்டே தீபிகா இருக்கும் அறையை சமீபிக்க,

“ஏம்மா, கூட்டம் போடாதீங்கனு எத்தன தடவ சொல்றது. பிள்ளைய, பெத்தவங்ககிட்ட கொடுங்கம்மா. பசியமத்தட்டும். ஆளாளுக்கு மாத்தி மாத்தி கையில வைக்காதீங்க.” என ஒரு நர்ஸ் இவர்களை சமாளிக்க முடியாமல் கத்திவிட்டு சென்றார். அவர்கள் அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இவர்கள் வருவதைப் பார்த்தவர்கள்,

“இந்தா டா. உன்னோட அத்தை வந்துட்டா. மருமக வந்த நேரம் வீட்ல அடுத்தடுத்து சந்தோஷம் தான். காலையில தான் நம்ம மாடும் கன்னு போட்டுச்சு.” என சிவகாமி மருமகளை சந்தோஷமாக புதுப்பேரனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். 

அப்பொழுதுதான் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டு ஈஸ்வரனும், சௌந்தரபாண்டியும் வந்தனர். 

“வாங்க மாமா!” என்றான்.

“ஈஸ்வரா! மாமங்கிட்டயும் சேன தொட்டு வக்கச்சொல்லுப்பா!” என சிவகாமி கூற,

“நல்லா வாழ்ந்தவங்க வைக்கட்டும்க்கா.” என்றார் முத்துவேல். 

“எல்லாரும் வச்சாச்சு. நீயும் மறுக்காம வைடா!” என சிவகாமி அதட்டல் போட, தேனை நுனிவிரலில் லேசாகத்தொட்டு வைத்தார். 

“அத்தைக்காரி நீயும் வையி சங்கரி!” என கூற, 

“இதெல்லாம் பண்ணக் கூடாது. குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகும் அத்தே.” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. காலங்காலமா வைக்கிறோம். நம்ம என்ன சீக்கு புடுச்சுப்போயா இருக்கோம். சும்மா சாங்கியத்துக்கு லேசா தொட்டு, நீயும் வையி.” என்று ஜெயந்தியும் கூற, மறுக்க முடியாமல், ஆசையாக குழந்தையை கையில் கேட்டாள்.

துணியில் சுருட்டி முகம் மட்டும் தெரிய, இளம்சிவப்பு நிறத்தில் இருந்த குழந்தையை வாங்கினாள். 

குழந்தையைப் பார்த்த ஆசையில் கேட்டுவிட்டாள். ஆனால், கை மாற்றவும் குழந்தை நெளிய, இவளுக்கு கை கூசியது. வாங்கியவள் பிடிக்கத் தெரியாமல் தடுமாற, 

ஈஸ்வரன் அவளது கையோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு, அவளது இடக்கையில் லாவகமாக, குழந்தையை படுக்க வைத்தான். மாமன் விரலைக் கொடுக்க இறுக்கிப் பிடித்துக் கொண்டது.  

‘இதெல்லாம் நல்லா தெரியுதே. அப்ப நாளைக்கு நமக்கு பிரச்சினை இல்ல.’ என எண்ணிக் கொண்டே, தேனை நுனிவிரலில் தொட்டு வைக்க சப்புக் கொட்டியது சிறு மொட்டு. 

“நல்லா சிவப்பா இருக்கான்ல அத்தே.” என குழந்தையைப் பார்த்து சங்கரி கேட்க, 

”எல்லாம் அவங்க அப்பனாட்டம் கருப்பா‌ தான்‌ வருவான். குழந்தை வளற‌வளற, காது இருக்குற கலர்ல தாம்மா வரும்.” என தவசி, மருமகனை கிண்டல் பேச, சங்கரியும் காதுமடலைப் பார்த்தாள். அது டார்க் சாக்லேட் கலரில் இருக்க, பார்த்துவிட்டு சிரித்தாள். 

“மாமா! இந்த கருப்பன பாத்துதான் பொண்ணு கொடுத்தீங்க. அதெல்லாம் நாங்க எங்க மகன கலராக்கிருவோம். அப்ப என் மகனசுத்தி தான் உங்க பேத்திக எல்லாம் வரணும்.”

“போலீஸ்காரன்னு ஏமாந்து பொண்ணு கொடுத்துட்டேன்டா மருமகனே! இப்ப பேரனப் பாக்கவும் தான் யோசனை பண்ண வேண்டியதா இருக்கு.” என தவசி கூறியதைக் கேட்டு அனைவரும் சிரிக்க,

“எம் பொண்டாட்டி எம்பக்கத்துல இல்லைங்குற தைரியத்துல பேசுறீங்க மாமா. நீங்க பேசுனத அவ கேட்டுருக்கணும். அப்ப தெரிஞ்சிருக்கும் இந்த கருப்பனோட மகிமை.” என இவர்கள் கேலி பேச, மெதுவாக குழந்தை சிணுங்கியது. கை ஏதோ சூடாக உணர, 

“அத்தே! என்னான்னு பாருங்க. கை சுடுது.” எனப் பதறினாள். 

“உம் மருமகன், உம்மேல பாசத்தை காமிச்சுருக்கான். கொண்டா துணிய மாத்துவோம்.” என சிவகாமி வாங்கிக் கொள்ள, அப்பொழுது தான் குழந்தை ஈரம் பண்ணியிருப்பது புரிந்தது. அவள் தூக்கும் முதல் கைக்குழந்தை. எனவே என்னவென்று சட்டென்று புரியாமல் பயந்து விட்டாள். 

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, குழந்தையின் கையில் காசு கொடுத்துவிட்டு கிளம்பிய‌ முத்துவேல், ஈஸ்வரனைப் பார்க்க,

“மாமா… நாளைக்கி இவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரணும். தீபிகாவுக்கு கடை‌ சாப்பாடு கொடுக்க முடியாது. நாங்க கெளம்பி வந்த பின்னாடி மாடும் கன்னு போட்டுருச்சாம். அம்மா இங்கேயே இருப்பாங்க. அப்பாவால எல்லாத்தையும் கவனிக்க முடியாது. அதனால நீங்க சிவாவ கூட்டிட்டுப் போங்க. நான் வந்து கூப்புட்டுக்கிறேன்.” என ஈஸ்வரன் கூற, 

“அதுவும் சரித்தான் மாப்ள. நாளைக்கி சீரோட உங்க ரெண்டு பேரையும் அனுப்பி வைக்கலாம்னு பாத்தே. தீபிகாவ வீட்டுக்கு அழச்சுட்டுப் போனதும் நாங்க கொண்டுட்டு வர்றோம்.” என்றவர் சங்கரியை உடன் அழைக்க, அவள் தயங்கி நின்றாள். 

தானும் ஈஸ்வரனோடு செல்வதாகக் கூற,

“இல்லம்மா! முறைப்படி சீரோட தான் ரெண்டு பேரும் போகணும். மாப்ள வந்து உன்னைய கூப்புட்டுக்குவான்.” என முத்துவேல் கூறினார்.

“பரவாயில்ல முத்து. நம்ம வீடுதானே. நீ எப்ப வேணும்னாலும் சீர்‌ கொண்டு வா! சங்கரி ஈஸ்வரன் கூடவே போகட்டும்.” என்று சிவகாமியும் கூற, சரி என ஒத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

இரவு சிவகாமியும், ஜெயந்தியும் மருத்துவமனையில் தீபிகாவுடன் தங்கிக் கொள்ள, மற்றவர்கள் கிளம்பினர். 

ஈஸ்வரன் வந்த காரிலேயே அனைவரும் கிளம்ப, யாரடி நீ மோகினி படம் லெவலுக்கு தான் அனைவரும் ஒருத்தர் மடியில் ஒருத்தர் என அமர்ந்து வந்தனர். 

“நம்ம குடும்பத்துக்கு எல்லாம் லாரி தான் மாப்ளே கரெக்ட். கார் எல்லாம் சரிப்படாது.” என சௌந்தரபாண்டி காரை ஓட்டிக் கொண்டே சிரிக்க,

“லாரியா இருந்தா, இத்தன பேரு முன்னாடி சங்கரிய மாமா மடியில உக்கார வச்சு கூட்டிட்டு வர முடியுமா?” என மலர்க்கொடி ஈஸ்வரனை கிண்டல் செய்தாள்.‌

கிட்டத்தட்ட சங்கரியும், ஈஸ்வரன் மடியில் தான் அமர்ந்திருந்தாள். 

ஆனால் அவனுக்கோ, புதுப் பொண்டாட்டி மடியில் இருக்கும் எந்த ஃபீலிங்கும் இல்லை.‌ 

‘இவ எதுக்கு நம்ம கூடவே கெளம்பினா. அவங்க அம்மாவும் அம்மாச்சியும் சொன்னத வச்சு, தனியா ஏதாவது பேசப் போறாளோ?’ என யோசனை மனதிற்குள் ஓடினாலும், கார் குலுங்கும் பொழுது, தன்னவள் மடியிலிருந்து நழுவி விடாமல் இருக்க, கை லாவகமாக இடையை வளைத்துப் பிடித்திருந்தது.

அவனுக்கு சாத்தான் வேதம் ஓதியது தான் தெரியும். அதன் பிறகு அவளுக்கு கீதாஉபதேசம் நடந்தது தெரியாதே.  

அவளுக்கோ, ‘எங்கிட்ட‌ சொல்லணும்னு தோணல. வீட்டுக்கு போகும் போது நீயும் வர்றீயானு கூப்பிடத் தோணல. நானே வலிய வரவேண்டி இருக்கு.’ என எண்ணங்கள் ஓடினாலும், கை அவனது கழுத்தை கோர்த்து கட்டியிருந்தது.

இவளுக்கு அவன் திரும்பி வந்ததும், தங்கள் பேச்சைக் கேட்டதும், அதனால் கோபமாக சென்றதும் தெரியாதே.

இந்த எண்ண ஓட்டமெல்லாம் சிறிது நேரம் தான்.‌ சற்று நேரத்தில், காரின் குலுங்கலில், தேகங்களின் உரசலில், காரின் ஏசி குளுமையில், வளைத்துப் பிடித்திருந்த அவனது கைகளின் சூட்டில், அவளுக்குள் மெதுவாக குளிர ஆரம்பிக்க… அவனுக்கோ இளமை தனது இருப்பை உணர்த்த, இருவருக்கும் இருக்கும் இடம் மறந்து போனது.

வீடு வந்ததும் பெரியவர்கள் நாசுக்காக இறங்கிக் கொள்ள,

“ம்க்கும்… எங்களுக்கும் நாளைக்கி ஆள் வருது. நாங்களும் மடியில உக்காந்து வருவோம்.” என மலர்க்கொடியின் சத்தத்தில் தான் நினைவிற்கு வந்தனர். சங்கரி சட்டென விலகிக் கொள்ள,

“வருண் நாளைக்கி வர்றானா? ஃபோன் பண்ணும் போதுகூட சொல்லவே இல்ல?” என, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, ஆச்சர்யமாகக் கேட்டான்.  

“நமக்கு எப்படி மச்சான் சொல்லுவான். சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லுவான்.” என சௌந்தரும் தங்கையை கேலி செய்தான். 

“குழந்தையப் பாக்க வர்றதா சொன்னாங்க‌ ண்ணா.” என்றாள்.

“கேட்டுக்கோ டா மாப்ளே. குழந்தையைப் பாக்க மட்டும் தான் என் பங்காளி வர்றானாம். அதனால வந்த வேல முடிஞ்சதும், வத்தலக்குண்டுலேயே வச்சு சென்னைக்கி பஸ் ஏத்தி விட்டுருவோம்டா.” என ஈஸ்வரனும் கேலி பேச,

“இன்னைக்கி என் மருமகன் பொறந்த நாளாச்சேனு உங்களைய சும்மா விடுறே. பொழச்சு போங்க.” என கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

குழந்தை பிறந்த தகவல் தெரிந்து ஈஸ்வரனின் சித்தப்பா மகன் வருண் மறுநாள் வருவதாக மலர்க்கொடியிடம் கூறியிருந்தான்.

அடுத்த தலைமுறையினரின் முதல் வாரிசு. அதனால் ஒன்றாக வளர்ந்த இளவட்டங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அதிக சொந்தபந்தங்களுக்குள் பிறக்கும் முதல் குழந்தை எப்பொழுதும் அதிர்ஷ்டசாலி தான்.

‘அவங்க அவங்க வேண்டப்பட்டவங்களுக்கு தகவல் சொல்றாங்க. உனக்கு தான் சொல்லணும்னு தோணல.’ என சங்கரி தான் உள்ளுக்குள் அவனை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

   

 

 

error: Content is protected !!