தாழையாம் பூமுடித்து🌺12

தாழையாம் பூமுடித்து🌺12

12

குடும்பம் என்பதை தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம் என வகைப்படுத்தலாமே ஒழிய, இப்படித்தான் குடும்பம் நடத்த வேண்டும் என எவராலும் வரையறுக்க முடியாது. வரையறுக்கப்பட்ட ஐன்ஸ்டீன் விதியோ, பிதாகரஸ் தியரமோ இதற்கென்று எதுவும் இல்லை. குடும்ப பாடத்திட்டத்திற்கு தனிப்பட்ட ஆசான் என்றும் எவரும் இல்லை. நித்தம் நித்தம் ஒரு அனுபவம் தான். 

வாழ்க்கைப் பாடத்தின் அரிச்சுவடி கூட அறியாதவள் சங்கரி. எடுப்பார் கைப்பிள்ளை. அம்மாவின் பேச்சும் சரி எனப்படும். மற்றவர்கள் பேச்சும் சரி எனப்படும். ஆனால், எது சரி என தனக்குத் தானே முடிவு செய்ய ஒரு‌ பக்குவம் வரவேண்டும். பக்குவப்பட அனுபவம் வேண்டும். அனுவப்பட தெளிவு வேண்டும். தெளிவு பெற அமைதி வேண்டும். இத்தனை வேண்டும்களுக்கு மத்தியில், வாழ்க்கையே வேண்டாம் எனற எண்ணம் வந்து விடும்.

அனுபவம் சிறந்த ஆசான் தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் அனுப்பவப்பட்டு தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனில் வாழ்க்கை முழுமையும் அதற்கே சரியாகிவிடுமே. 

அதற்கு தான் அனுபவப்பட்டவர்கள் கூறும் பொழுது சற்று செவி சாய்க்க வேண்டும் என்பது. தானே வழி கண்டுபிடித்து, தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து, கற்றுக் கொள்வதைவிட, இது… போட்டு வைத்த பாதையில் சௌகர்யமாக பயணம் செய்வது போல. பாதை யார் போட்டது என்பதைப் பொறுத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கைவீசி நடக்கலாம்.

அப்படிப்பட்ட அனுபவசாலி ஒருத்தர் தான் சங்கரியை அருகில் வைத்து பேசிக் கொண்டிருந்தார். அனுபவம் நல்லவிதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிபட்டவர்களின் அனுபவம் தான் நம்மை கீழே விழாமல் தடுக்கும். 

சங்கரியின் அம்மாவும், அம்மாச்சியும் பேசியது பிடிக்காமல்… இவர்களுக்கு டீ கொண்டு வந்த சுந்தரி அறையை விட்டு வெளியே வந்து விட்டார். அப்பொழுது தான், திரும்பி வந்த ஈஸ்வரன் வேகமாக வெளியேறுவது தெரிந்தது. இவர்கள் பேசியதை கேட்டிருக்கக் கூடும் என யூகித்தார். 

சிறிது நேரம் கழித்து, யோசனையாக தனியே அமர்ந்து இருந்தவளிடம் வந்தார்.

“வாங்க அத்தை!” என்றாள்.

“என்ன சங்கரி யோசனை எல்லாம் பலமா இருக்கு?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை!” என்றாள் சலிப்பாக.

“மூனாம் நாளே பேச்சு சலிப்புத் தட்டுதே ம்மா. இப்ப… இவங்க பேசினதப் போட்டு குழப்பிட்டு இருக்கியா சங்கரி?” எனக் கேட்க, அமைதியாக இருந்தாள். 

“யாரும் இருக்குற எடத்துல இருந்தா தான் மரியாதை சங்கரி.” என்றவரை, யோசனையாகப் பார்த்தாள்.

“நீ இவங்க பேச்சைக் கேட்டுட்டு, ஈஸ்வரன… வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்துர்றேன் வையி… நாளைக்கி பிரியாவுக்கும் கல்யாணம் ஆகும். அவளும் வீட்டுக்கு வந்து போவா. அப்ப அவளுக்கு இருக்குற மரியாதை உனக்கு இருக்காது. ஸ்ரீ க்கும் குடும்பம் வரும்.‌ அப்ப உன் நிலைமையும் என் நிலமை தான். அப்படியே தனிக்குடித்தனமே போனாலும் யாருமில்லாத ராஜ்யத்துக்கு ராணியா இருந்து என்ன பண்ணப்போற? உன் வீட்ல… உங்க ஊர்ல இருக்குற வரைக்கும் தான் நாட்டமைவீட்டு மருமகளா, ஈஸ்வரன் பொண்டாட்டியா உனக்கு ஊர்ல நல்ல மரியாதை இருக்கும். உங்க அத்தையும் உன்னைய ராணிமாதிரி பாத்துப்பாங்க. இன்னைக்கி காசு பணம் யாருகிட்ட இல்ல. ஆனா மரியாதை… அவங்ககிட்ட இருக்கு. இன்னைக்கும் உங்க அப்பாவும், சித்தப்பாவும் குலசாமி கும்பிடுக்கு, மொத ஆளா கெளம்பி வர்றாங்களே எதுக்கு. தோள்ல போடுற அந்த ஒன்றையணா துண்ட வாங்க முடியாமயா வர்றாங்க. மரியாதைக்காகத் தானே வர்றாங்க.” 

“அது உன்‌ வீடு சங்கரி. நீ தான் அதிகாரம் பண்ணனும். உன் வீட்ல இருந்துகிட்டு தான் இவங்கள நீ வாங்கனு கூப்பிடணும். அதுதான் உனக்கு மரியாதை. அதுக்கு நீ அங்க தான் இருக்கணும். இப்ப என்னையே எடுத்துக்க. இங்க… உங்க அம்மாகிட்ட ஆகட்டும், உங்க சித்தப்பா, அப்பத்தா கிட்ட ஆகட்டும் ஏதாவது மரியாதை இருக்கா? அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. பொண்ண கொடுத்த வீட்லயே குடும்பத்தோட வந்து உக்காந்தா யாரு மதிப்பாங்க சொல்லு. கழுத்தப் புடுச்சு தள்ளாத குறையா, உங்க சித்தப்பா வேற வீடு பாத்து வச்சாரு.  இதுவே உங்க மாமா கூலிவேலை பாத்தாவது எங்களை எல்லாம் தனியா வச்சுருந்தா, தனி கெத்தோட,‌ நாத்தானார் வீட்டுக்கு விருந்துக்கு சீராட வந்து போவேன். அப்பா எவ்வழியோ மகனும் அவ்வழினு சந்துருவுக்கும் உடம்பு வளைய மாட்டேங்குது. என் பேச்சையும்  கேக்குறதில்ல. இருக்குற இடத்துல இருந்தா‌ தான் நாளைக்கி நம்ம புள்ளைக கூட நம்மல மதிக்கும் சங்கரி. மனசுக்குப் பிடிச்சவங்களோட இருக்கும் போது இடம் முக்கியமாப்படாது ம்மா.” என்று சற்று நிறுத்தினார். அமைதியாக இருந்தவளை ஒருகணம் கூர்ந்து பார்த்தவர், 

“உனக்கும் இருக்குல்ல?” என்று கேட்க,

“என்னாது அத்தே?” என்றாள் யோசனையாக.

“அபிப்ராயம், விருப்பம்… ஈஸ்வரன் மேல? இருக்கும்… இல்லைனா அத்தனை பேர் முன்னாடி சரிக்கொடுப்பியா? எல்லாம் எங்க அப்பா பாத்து சொன்னா சரித்தான்னு,‌ உங்க அப்பா தலையில வச்சுட்டு ஒதுங்கியிருப்ப.” 

“இப்பவும் சொல்றே.‌ புடிச்ச வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது. உனக்கு அமைஞ்சிருக்கு. அத தக்கவச்சுக்கறது உன் கையில தான் இருக்கு. அம்மா சொன்னாங்க, அம்மாச்சி சொன்னாங்கனு, உன் தலையில நீயே மண்ண வாரி போட்டுக்காதே. இன்னொன்னும் சொல்றே. நான் இவ்வளவு பேச வேண்டிய அவசியமே இல்ல. ஏன்னா, நீ கூப்புட்டவுடனே ஈஸ்வரன் வர்ற ஆள் கிடையாது. இவங்க பேச்சைக்கேட்டு சின்னப் பிள்ளைத்தனமா தேவையில்லாம நீ பிரச்சினையை ஆரம்பிச்சுறக் கூடாதேங்குற கவலைல தான் இவ்வளவும் சொல்றே. ஏன்னா, இன்னும் உனக்குப் பக்குவம் வரல. கல்யாணமான ரெண்டு நாள்ல எல்லாம் வராது. உங்கம்மாவே இன்னும் அவங்க அம்மா பேச்சுக்கு தானே தலையாட்டுறாங்க. நான் சொல்றத சொல்லிட்டே. புத்திசாலியாப் பொழச்சுக்க.” என்று சுந்தரி நாத்தனார் மகளை அருகே அமர்த்தி பேசிக் கொண்டு இருக்க, பேசிய அத்தையை மரியாதை பொங்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன சங்கரி… அப்படிப் பாக்குற?”

“இல்ல… நாட்டாமை மருமகள்னு சொன்னீங்களே. அப்ப அடுத்த நாட்டாமை ஈஸ்வரன் தானே. அப்ப நாங்க சாரட் வண்டியில வரும் போது, நாட்டாமை பாதம் பட்டானு ரெண்டு பக்கமும் நின்னு பாட்டு பாடுவாங்களா அத்தே…” என கேட்டு சிரிக்க,

“இல்ல… கொட்டப்பாக்கும்… கொழுந்து வெத்தலையும்… பாட்டு போடுவாங்க.”

“எனக்கென்னமோ இவங்க சொல்றத எல்லாம் வச்சுப்பாத்தா, கையில சொம்ப வச்சிக்கிட்டு, செண்பகமே… செண்பகமே… தான் பாடுவேன்னு தோனுது அத்தே.” எனக்கூறிவிட்டு கலகலவென சிரித்தவளை,

“இந்த லொள்ளு தானே வேண்டாங்கறது.” என தோளில் செல்லமாக அடித்தார்.

“அத்தை, கவலையே படாதீங்க. உங்க நாத்தனார் பொண்ணு அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துற மாட்டா. ஏன்னா, எனக்கு என் மரியாதையும் முக்கியம். என்ற புருஷர் மரியாதையும் முக்கியம்.” என்று கட்டிக் கொண்டு சிரித்தவளை உச்சிமுகர்ந்தார் அத்தை. 

எங்கே இவள், அவர்கள் பேச்சைக் கேட்டு, சிறுபிள்ளைத் தனமாக, ஏதாவது பிரச்சினையை இழுத்து விட்டு வந்துவிடுவாளோ எனப் பயந்தார்.‌ 

ஈஸ்வரன் வந்து சென்றதை கூறவில்லை. எல்லாவற்றையும் பாடம் நடத்த முடியாது. சில விஷயங்களை அவளாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட்டு விட்டார். 

எண்ணம் போல் வாழ்க்கை எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. சுந்தரிக்கும் அப்படித்தான். தங்கராசுக்கும் உடம்பு வளையாது. எந்த வேலைக்குப் போனாலும் மாதக் கணக்கு தான். என் தகுதிக்கு ஏத்த வேலை இது இல்லை என வந்து விடுவார். 

சரி… மச்சானின் கீழ் வேலை செய்தாலாவது பொறுப்பாக நடந்து கொள்வார் என நினைத்து தான்‌ குடும்பத்தோடு சென்னை வந்ததே. இங்கு வந்தபிறகு இன்னும் சொகுசு கண்டார்.‌ தங்கை கணவன் பின்னாலேயே, அவருக்கு வால் பிடித்துக் கொண்டு திரிய ஆரம்பித்தார். கட்டிட வேலைகளை மேற்பார்வை பார்க்குமாறு நியமித்தனர். 

அதற்கும், “நான்… எங்க, எப்படி, இருக்க வேண்டியவன்,‌ இங்க வந்து மேஸ்த்திரி வேல பாக்க வேண்டியிருக்கு.” என அலுத்துக் கொள்வார். 

அவர்கள் கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நடக்கும் இடங்களுக்கு ஜம்பமாக போவதும், ஆட்களை அதட்டி வேலை வாங்குவது போல மெப்பனை செய்வதும் என இருப்பார். அதுவும் சக்திவேல் உடன் இருக்கும் பொழுது மட்டும் தான். மற்ற நேரங்களில் அங்கேயே படுத்து தூங்கிவிடுவார்.

தொழில் நடக்கும் இடத்தில் தூக்கமா என, முத்துவேலிற்கு இவரது நடவடிக்கை பிடிக்காமல், அவரை பில்டிங் பக்கமே வரக்கூடாது என கூறி விட்டார். 

வேறு வேலை எதுவும் தெரியாத பட்சத்தில், அவர்களது கன்ஸ்ட்ரக்ஷனுக்கே மறைமுக புரோக்கராக இருக்கிறார். மெட்டீரியல்ஸ் சப்ளையரிடமும் கமிஷன் வாங்கிக் கொள்வார். சக்திவேல் எதையும் கண்டு கொள்வதில்லை. 

“மதியாதோர் தலைவாசல் மிதியாதேன்னு சொல்லுவாங்க. இங்க நமக்கு மரியாதை இல்ல. வேற வேலையப் பாருங்க.” என சுந்தரி கூறினாலும்,

“இது என் தங்கச்சி வீடு. என் மச்சானோட சம்பாத்தியம். நானும் தான் அவர் கூடவே நாயா சுத்துறே. எல்லாத்தையும் கணக்குப் பாத்தா எனக்கு இவங்க லாபத்துல ஷேர் தறணும்.” என்பார். இவருக்கு புத்திமதி சொல்லியே அலுத்து விட்டார். பிறவிக் கூனுக்கு தப்பை கட்டி நிமிர்த்த முடியாது என விட்டுவிட்டார்

எனவே தான் சங்கரியும் அவசரப்பட்டு முடிவெடுத்து விடுவாளோ என அவளை அருகே அமர்த்தி புத்திமதி சொல்லிக் கொண்டு இருந்தார். 

சற்று நேரத்தில் குழந்தை பிறந்த தகவலோடு முத்துவேல் வர, சௌந்தரபாண்டியும் ஃபோனில் அழைத்து தகவல் கூறினான். அதன் பிறகு தான் சித்தப்பாவும் மகளும் மருத்துவமனை கிளம்பி வந்தனர். 

ஈஸ்வரனும் வீட்டில் யாரும் இல்லை எனக் கிளம்ப, தானும் உடன் வருவதாக கூறிக்கொண்டு வந்துவிட்டாள். 

காரை நிறுத்தி விட்டு அனைவரும் உள்ளே வர, பேச்சியம்மா வாசலிலேயே இவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்.

“ஆத்தா, உனக்கு கொள்ளுப்பேரன் பொறந்துருக்கான்.” என தவசி குனிந்து சத்தமாகக் கூற,

“பேரன்தா பொறப்பாங்கறது எனக்கு எப்பவோ தெரியும்டா. புள்ள எப்ப பொறந்துச்சு. நல்லா இருக்கானு மட்டும் சொல்லு?”

“குழந்தை நல்லா இருக்கான் ஆத்தா.” என தவசி கூற,

“அம்மத்தா… வெத்தலையில மைபோட்டு பாத்தியா. பேரந்தான்னு எப்படி கரெக்டா சொல்ற?” என மலர்கொடி கேட்டாள்.

“கை புண்ணுக்கு எதுக்குடி கண்ணாடி. எம்பேத்தி எப்பவும் சோத்தாங்கைய ஊனி எந்திரிக்கும் போதே தெரியும்… பேரந்தான்னு. நொட்டாங்கைய ஊனி எந்திருச்சா தான் பொட்டப்புள்ள பொறக்கும்.”

“சரி… சரி… நீ தான் பத்து புள்ள பெத்த ஆளாச்சே. எல்லாம் கண்டு வச்சுருப்பே. பனியில உக்காராம உள்ள வா!” என பேச்சியம்மாவை கைபிடித்து எழுப்பி உள்ளே அழைத்து வந்து விட்டவள், மாமனிடம் காலையில் வருவதாக சொல்லிக் கொண்டு, மலர்க்கொடியும், சௌந்தரபாண்டியும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். பேச்சியம்மா பெத்தது பத்து. அதுல எஞ்சியது ஆண் இரண்டு, பெண் ஒன்று என மூன்று தான்.

“எல்லாரும் சாப்புட்டீங்களா டா?” என பெரிய மனுஷியாக விசாரிக்க,

“அதெல்லாம் ஆச்சு அப்பத்தா. நீ சாப்டியா?” 

“இட்லி கொண்டு வந்து கொடுத்தாளுக. சாப்புட்டே.” என்றார். அக்கம் பக்கம் எல்லாரும் சொந்தம் பந்தம் என்பதால் யாராவது வந்து கவனித்து கொள்வார்கள்.

அப்பத்தாவை படுக்கையில் விட்டுவிட்டு ஈஸ்வரனும், சங்கரியும் மாடிக்கு செல்ல, தவசி மாட்டுக் கொட்டம் பக்கமாக சென்றார். 

உள்ளே வந்தவன், மருத்துவமனையில் இருந்து வந்ததால், குளித்து விட்டு வந்தான். உடையை மாற்றி விட்டு, தலையணை போர்வையை அள்ளிக் கொள்ள, அவனையே பார்த்து நின்றவளை,

“என்ன லுக்கு?” என்றான் புருவம் தூக்கி.

ஒன்னுமில்லை எனும் விதமாக தலையை இடம் வலமாக ஆட்ட,

“கீழ, அப்பத்தா தனியா இருக்கும். ராத்திரில அடிக்கடி எந்திரிக்கும். நிதானம் இருக்காது. அதனால… நான் ஹால்ல படுக்கப் போறேன்.” என்றவனை, அதனால எனக்கென்ன என்பவள் போல் பார்த்து நின்றாள்.

சில பிள்ளைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து நமது கவனத்தை ஈர்க்கும். சில பிள்ளைகள் கோபம் வந்தால் அமைதியாக தனியாக அமர்ந்து நமது கவனத்தை ஈர்க்கும். இதில் சங்கரி இரண்டாவது வகை.  

‘ஏதாவது வாயத்தொறந்து பேசுறாளா பாரு! பேசுனா வாயிலிருந்து முத்தா உதுந்துரும்.’ என எண்ணிக் கொண்டு, அதையும் வாய்விட்டு கேட்கவும் செய்தான்‌. 

கேட்டதுதான் தாமதம்… 

“என்ன… என்ன… இப்ப மட்டும் எதுக்கு எங்கிட்ட சொல்லிட்டுப் போற. நீபாட்டுக்கு பொட்டி படுக்கைய கட்டிட்டுப் போக வேண்டியது தானே? எங்க போறேன்னு யாராவது உங்கிட்ட இப்ப கேட்டாங்களா? அதக் கேக்க நான் யாரு?” என இவ்வளவு நேரமாக, எப்பொழுது வெடிக்கலாம் என காத்திருந்தவள், கொதிக்கும் எண்ணெயில் பட்ட தண்ணீராய் வெடித்துச் சிதற, இதை எதிர்பார்க்காதவனோ,

“இப்ப எதுக்கு கத்திப் பேசுற? இது ஒன்னும் சிட்டி இல்ல. கீழ நல்லா சத்தம் கேக்கும்.” என அவளை கண்டிக்க,

“கேட்டா கேக்கட்டுமே. அவங்களுக்கும் தெரியட்டும் மகனோடு லட்சணம்.” என வெடுக்கென கேட்க, அவ்வார்த்தை அவனை சீண்டிவிட்டது.

“ஏய்! இப்ப நீ, என்னோட லட்சணத்துல என்ன கொறையக் கண்டுடட்ட. என்ன… உன்னோட அம்மாவும்…உங்க அம்மாச்சியும் சொன்னத வச்சு ஏதாவது பிரச்சினை பண்ணி, என்னைய இங்கிருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போகலாம்னு பாக்குறியா? அதுக்கு தான், மாமா கூப்பிட்டும் போகாம, இப்பவே என்னோட கெளம்பி வந்தியா? அது மட்டும் கனவுலயும் நடக்காது. நீ இழுத்த இழுப்புக்கு நான் வருவேன்னு மட்டும் நெனச்சுறாதே.” என்றான் சீற்றமாக.

இவன்… அவர்கள் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு இவள் பேசுவதாக எண்ணிக் கொள்ள, அவளுக்கோ… வலிய இவன் பின்னால் வந்ததும், தன்னை இளக்காரமாக எண்ண வைத்ததோ எனத் தோன்ற, சட்டென கண்கள் ஈரம் கசிந்தது.

“உங்க அம்மா… உங்க அம்மாச்சியா?” என்றாள் தொண்டை அடைக்க.

“நான், உங்க அம்மான்னு சொன்னா மட்டும் மொறச்சுப் பாக்க தெரியுதுல்ல. உன்னோட அத்தைனு அழுத்தி சொல்லத் தெரியுது. ஆனா‌, நீ மட்டும் அந்த மரியாதைய அவங்களுக்கு கொடுக்க மாட்ட. ஆமா… ரூம்ல பேசுனது உனக்கு எப்படி தெரியும்? இதென்ன பழக்கம்… பொம்பளைக பேசுறத மறைஞ்சு நின்னு கேக்குறது.” என இவள் பதிலுக்கு கேட்க, தன்னை மறைந்து நின்று கேட்டதாகக் கூறியது அவனுக்கு இன்னும் கோபத்தை கிளறியது.

“என்னையப் பத்தி இவ்வளவு மட்டமா எடை போடுவேன்னு நெனச்சுக்கூடப் பாக்கல. நான் ஒன்னும் ஒழிஞ்சு நின்னு கேக்கல. குழந்தை சீக்கிரம் பொறந்துரும்னு சொல்லவும், உன்னையும் கூடவே கூட்டிட்டுப் போகலாம்னு ஆசையா வந்தேன். மொதமொதன்னு ரெண்டு பேருமா குழந்தைய பாக்கணும்னு ஆசப்பட்டு வந்தா, அப்ப தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி உனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அதுக்கு நீ மறுத்துப் பேசவே இல்ல. அந்த கோபத்துல தான், நான் அவங்களுக்கும் உனக்கும் ஃபோனும் பண்ணல.” என அவனும் கோபமாகக் கூற,

அவன் தன்னை அழைத்துப் போக வந்திருக்கிறான் எனத் தெரிந்து, பொங்கியது மட்டும்தான் சற்று அடங்கியது. ஆனால் சூடு குறையவில்லை.

“நான் மறுத்துப் பேசல தான். ஆனா, அவங்க சொன்னதுக்கு எல்லாம் சரின்னும் தலைய ஆட்டலைல்ல. வந்த மறுநாளே, அம்மத்தாவும் தான்… மூளி அலங்காரிக, அவளுக வந்து தான் எங்க அண்ணே குடும்பமே பிரிஞ்சு போச்சுன்னு, அவங்கள மட்டமா பேசுச்சு. அப்பவும் தான் நான் எதுவும் பேசல. அதெப்படி, வந்த மூனா நாளே, இத்தன வருஷமா பெத்து வளத்தவங்க பேச்ச தட்டிப்பேசிட்டு, உங்க பக்கம் மட்டுமே பேசணும்னு நினைக்கிறே? இதுவே நாளைக்கி, பிரியாவுக்கு கொழந்த பொறந்து, மருமகன் உனக்கு சொல்லலைனா சும்மா விடுவீங்களா? உங்க வீட்ல மருமகன மதிக்கலைனு சொல்ல மாட்டீங்க?” என கண்ணில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,

“அன்னைக்கும் சபையில வச்சு நீ கேட்டவுடனே, எங்க அப்பாவையும் பாக்காம, அம்மாவையும் கேக்காம சம்மதம் சொன்னேன்ல. இன்னைக்கும் நீ, வர்றீயானு கூட கூப்புடல. வீட்ல யாரும் இல்லைனு சொல்லவும், நமக்கு இந்த வீட்டுப் பழக்கம் எதுவும் தெரியலைனாலும், என் வீடு, என் புருஷன்னு உன் கூட வலிய வந்ததும், நான் உனக்கு எளக்காரமா போய்ட்டேன்ல. மத்த பொண்ணுக மாதிரி பின்னாடியே சுத்த விட்டுருக்கணும்.” என அழுகையும், ஆத்திரமுமாக பொங்கித் தீர்த்தவளை, இவள் இவ்வளவு பேசுவாளா எனப் பார்த்து, இவன் மலைத்து நின்றது தான் மிச்சம். கண்களில் நீர் வடிய பேசியவளைப் பார்க்கவும், மனம் பதறியது. இதை அவன் எதிர் பார்க்கவில்லை.

“ஹேய்ய்ய்… சிவா! என்னடீ இது?’ என சட்டென அவள் கையைப் பிடிக்க, கையை கோபமாக உதறினாள்.

“இப்ப கூட பாரு! என்னைய சிவான்னு கூப்புட உனக்கு மூனு‌நாளு ஆகியிருக்கு. அம்மா‌வுக்காகன்னு வந்தவன் தானே? ஆசைப்பட்டா வந்தே. உனக்கு தான் இத்தன மொறப்பொண்ணுக உன்ன சுத்தி இருக்கும் போது, எம்மேல எப்படி ஆசை வரும்.” என மனதில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் வார்த்தைகளாக கொட்டிக் கொண்டிருந்தாள்.

இது வேறயா… என இவனுக்கு உள்ளுக்குள் மனம்‌ துவண்டு போனது. அவன் ஏதோ விளையாட்டாக இவளை சீண்டிப் பார்த்தது, அவளை இந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கும் என நினைக்கவில்லை. இவனுக்கு அது சகஜமான ஒன்று. ஆனால் இவளுக்கு முற்றிலும் பழக்கப்படாத சூழல்‌.

அப்பொழுதாவது எனக்கும் உம்மேல ஆசைதான், கொள்ளை பிரியம் தான், காதல் தான்… கண்றாவி தான்‌, அதனால தான் உங்க அப்பாவையே எதிர்த்து பெண் கேட்டேன் என்று, அனுமான் மாதிரி நெஞ்சைப் பிளந்து காட்டியிருக்க வேண்டாம். வாய் வார்த்தையிலாவது சொல்லி இருக்கலாம். அவன் தான், அவளது  கண்ணீரைப் பார்த்ததும்,‌ அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல், வாயடைத்துநின்று விட்டானே. கன்னியரின் கண்வீச்சுக்கு பித்தம் கொள்ளாதவன் கூட, கண்ணீர் வீச்சுக்கு சித்தம் கலங்கித் தான் போகவேண்டும் போல. 

‘என்னடா இது மூனு‌ நாளைக்கே கண்ணக் கட்டுதே.’ என ஒன்றும் புரியாமல், கண்கள் பிதுங்கியது.

‘அவனவன் இருபது, முப்பது வருஷம் வாழ்ந்து பாத்தே, இங்கே ஒருத்தனுக்கும் ஒரு ஆணியும் புடுங்க முடியலியாம். உனக்கு மூனே நாள்ல புரியணும்னு நெனைக்கிறது ரொம்ப பேராசைடா தம்பி.’ என்று மனசாட்சி அவனை பங்கம் பண்ணியது. 

“எங்க சுந்தரி அத்தை கூட சொன்னாங்க. உனக்கு ஈஸ்வரன் மேல ஆசை இருக்கவும் தான் சம்மதிச்சே… இல்லைனா உங்க அப்பா முடிவுல விட்டுருப்பேனு சொன்னாங்க. அப்ப தான் எனக்கும் உம்மேல இருக்கறது வெறும் க்ரஷ் இல்ல… ஜென்மச்‌சனி மாதிரி காதல் கெரகம் தான் என்னையும் புடுச்சு ஆட்டுதுனு. அது தான் என்னைய இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.” என அவள் பாட்டுக்கு புலம்ப ஆரம்பிக்க, அவளது உள்ளத்தில் உள்ளதை, அவளும் அறியாமல் அவனிடம் உளறிக் கொண்டே போக, 

என்னாது க்ரஷ்ஷா! காதல் கெரகமா! என ஒரு கணம் ஸ்தம்பித்தவனுக்கு,‌

எகிறி குதித்தேன்

வானம் இடித்தது

பாதங்கள் இரண்டும்

பறவையானது

விரல்களின் காம்பில்

பூக்கள் முளைத்தது

புருவங்கள் இறங்கி

மீசையானது என 

கத்தத் தோன்றியது… பெண்ணின் மனதைத் தொட்டவனாக, பெருமிதம் வந்து போனது. அவன் எதிர்பார்த்ததும் இதுதான். ஆனால், அவள் மனதைக் தெரிந்து கொண்ட முகூர்த்தம் தான் சரியில்லை. 

“யாரும் இந்த அழகுல காதல சொல்லியிருக்க மாட்டாங்கடி.” என சிரித்தான். 

“எம் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குல்ல? பெத்தவங்க ஒன்னு சொல்றாங்க. மத்தவங்க ஒன்னு சொல்றாங்க. நீ கண்டுக்க கூட மாட்டேங்கிற. அவங்க சொன்னதெல்லாம் விட்டுட்டு நாய்க்குட்டி மாதிரி, இனி நீ தான்னு உம்பின்னாடி வந்தேன்ல. என்னயப் பாத்தா உனக்கு சிரிப்புதான் வரும்.”

“சிவா… என்னடா… நாய்ன்னு எல்லாம் சொல்ற?” என மென்மை குழைத்து அழைத்துக் கொண்டு, அருகே வர,

“என்னைய அப்படி கூப்புடாதே!” என பின்னால் தள்ளிப் போனாள்.

“நீயும் வேணும்னா என்னைய நித்தியானு கூப்புட்டுக்கோ. எனக்கு கோபமே வராது.” என்றான் சிரிப்போடு. இப்பொழுது அவன் இருக்கும் மனநிலைக்கு நித்தியா என்ன… நாயே… பேயேன்னு கூப்பிட்டால் கூட சிரித்துக் கொண்டுதான் பார்ப்பான். அவளை சமாதானப் படுத்த, சிறுபிள்ளையில் அவனை அழைத்து, வெறுப்பேற்றிய பெயரை அழைக்குமாறு சிரித்துவாறே கூற,

“எதுக்கு… அதுதான் பேருக்கேத்த மாதிரி, உன்னைய சுத்தி அத்தன சிஷ்ய கோஷ்ட்டிகள வச்சுருக்கியா?” 

“அதையே திரும்ப திரும்ப சொல்லாதேடி. சும்மா உன்னைய வெறுப்பேத்தலாமேனு பண்ணினேன். இப்படி எல்லாம் நீ பேசுவேனு சத்தியமா எதிர்பாக்கல டி.”

“வேற எப்படி எதிர்பார்த்த. சொல்லு… நீ எதிர்பார்த்த மாதிரி மாற முயற்சி பண்றே.”

“அதெல்லாம் வேண்டாம். நீ ஏன் பேசவே மாட்டேங்குறேன்னு நெனச்சே. ஆசையா, எப்ப பேசுவேன்னு எதிர்பார்த்தே. ஆனா நீ உன் மனசுல இருக்குறத சொல்லியும் இன்னும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன் பாரேன். இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல.” எனப்‌ பேசிக்கொண்டே அருகே வந்திருந்தான்.

“இப்பவும் நீ டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு. என்னைய கொஞ்சம் தனியா விடு. எனக்கு தல வலிக்குது.” என அவனை தள்ளி நிறுத்தினாள்.

“தைலம் தேச்சு விடவா? டேப்ளட் போடுறியா?” என கேட்டவன், அவளைவிட்டு நகர்ந்து, அலமாரியில் இருந்து தைலத்தை எடுத்தான். 

“அதெல்லாம் வேண்டாம்.” என நைட்டியைக் கூட மாற்றாமல் அப்படியே படுத்துக் கொண்டாள்.  அவளுக்கும் மனதின் அழுத்தம் எல்லாம் தலைக்கு ஏறி, பாரமாக அழுத்தியது. கண்களை மூடிப் படுத்துவிட்டள். 

அம்மா பேசியதும், அத்தை பேசியதும்,‌ இவனும் அவர்கள் மீது கோபங்கொண்டு, இவள் மீது பாராமுகம் காட்டியதும் என எல்லாம் சேர்ந்து அவளை குழப்பியது, தலை வலியில் வந்து நின்றது. இதில் இவனும் கோபமாகப் பேசியது, அழுதது என தலைவலியை இன்னும் அதிகமாக்கி விட்டது. 

தைலத்தை எடுத்தவன், மெதுவாக நெற்றியில் பூசிவிட்டு, தலையை அழுத்திக் கொடுக்க, சற்று இதமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டே,

“நீ கீழ போ! அம்மத்தா எந்திரிச்சு கிந்திருச்சு விழுந்துறப் போகுது.” என்றாள்.

“இருக்கட்டும், அப்பா இருக்காரு.”

“அவரும் தூங்க வேண்டாமா? காலையில சீக்கிரம் எந்திரிக்கணும். நீ போ!”

“நைட்டிய மாத்திக்கிட்டு தூங்கு! நான் கீழ போறே.”

“ம்ம்ம்…” என கண்களை மூடிக்கொண்டாள்.

கீழே அவன் இறங்கி வந்து பாயை விரிக்க, அப்பத்தாவின் அறையில் சத்தம் கேட்டது. பேச்சியம்மா தடுமாறிக் கொண்டே, வெளியே வர, 

“என்ன அப்பத்தா… பாத்ரூம் போகணுமா?” என்றான், வேகமாக வந்து கைபிடித்துக் கொண்டே.

“இல்லடா… மேல என்னடா சத்தம்?” என பேரனிடம் வந்து விசாரித்தார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்பத்தா.” என்றான்.

“ஏன்டா, அவ போடுற சத்தம் காதடைச்சவளுக்கே நல்லா கேக்குது.”

“குழந்தை பொறந்தத அவளுக்கும், அவங்க வீட்டுக்கும், மொறப்படி நான் சொல்லலையாம்.”

“சொல்லணும்ல டா. இதுவே நாளைக்கி அவங்க வீட்ல இருந்து உனக்கு எதுவும் சொல்லலைனா உனக்கும் கோபம் வரும்ல?”

“அவளும் அதையே தான் கேட்டா.”

“சரியாத்தானே கேட்டுருக்கா.”

“அதானே! உங்க அண்ணே பேத்திய எப்படி விட்டுக் கொடுப்ப. நீயும் அவளோட வர்க்கம் தான. அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. இருட்டுக்குள்ள தடுமாறிட்டுக் கெடப்பியேனு வந்தேம்பாரு. என்னைய சொல்லணும்.”

“ஏன்டா கூறுகெட்டவனே! மல்லிச் செடிய விட்டுட்டு கள்ளிச் செடிக்கு காவலுக்கு வந்துருக்க. கொமரிய விட்டுப்புட்டு கெழவிக்கி காவலுக்கு வந்தேனு சொல்றியே… என்னைய என்ன காக்காவா வந்து தூக்கிட்டுப் போயிரும்?” எனக் கேட்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார்.

‘வெளியே எவ்வளவு கெத்தா திரிஞ்சாலும், நம்ம இமேஜ ஒரு செகண்ட்ல டேமேஜ் பண்ண, இந்த பொம்பளைங்களால மட்டும் தான் முடியும்.’ என மனதிற்குள் மட்டும் தான் புலம்பிக் கொண்டான்.

“டேய்! இது நான் அம்பது வருஷத்துக்கு மேல வாழ்ந்த வீடு. எதெது… எங்க எங்க இருக்குனு தடவிப் பாத்தே சொல்லுவே. ஒரு வயசுக்கு மேல நிதானத்துலயே தான்டா வாழணும்.”

“பெத்து வளத்த வீட்டாளுகள எத்தன வருஷம் ஆனாலும் பொட்டச்சிக விட்டுக் கொடுக்க மாட்டாளுகடா. இது எங்குடும்பம், எம்‌புருஷன்னு ஒட்டுதல் வர்றதுக்கே அஞ்சாறு வருஷம் ஆகும். அதுவும் புள்ளகுட்டினு வந்தா தான். அதனாலதான் சொல்றது கல்யாணம் முடிச்ச கையோட புள்ளைகளப் பெத்துக்கணும்னு. அப்ப தான் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் நம்ம குடும்பம்னு ஒரு‌பிடிப்பு வரும்.”

“அப்பத்தா! மூனு நாளைக்கே கண்ணக்கட்டுது. நீ என்னடான்னா அஞ்சாறு வருஷம் ஆகும்கற?”

“அது… நீ நடந்துக்கறதப் பொறுத்துடா. அவளுக்கு எந்த அளவுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்குறியோ,‌ அவ்வளவு சீக்கிரம் அவ உம்பக்கம் வந்துருவா. மொதல்ல மேல போடா! வந்துட்டான்… அப்பத்தாவுக்கு காவலுக்குனு.”‌ என தட்டுத்தடுமாறி கால்களை தேய்த்துக் கொண்டே நிதானமாக நடந்து தனது அறைக்கு சென்றார் பேச்சியம்மா. 

அவருக்கும் தெரியும் தன் நிலமை. இரவில் எழுந்திருப்பவர், நிதானம் இல்லாமல் பாத்ரூம் என நினைத்து, சமையலறைக்கோ, பூஜை அறைக்கோ சென்று கதவை தள்ளிக் கொண்டு இருப்பார். இயற்கை உபாதையைக் கட்டுப் படுத்த முடியாமல் பாத்ரூம் செல்வதற்குள் சில நேரங்களில் அவரது கட்டுப்பாட்டை இழந்து விடும். அதே ஈரத்தில் சில சமயங்களில் வழுக்கி நிலை தடுமாறி இருக்கிறார். அதனால் தான் அவரை கவனித்துக் கொள்ள, அவனும் கீழே வந்து படுத்ததும். 

இது மூதாட்டிகளின் தலையாயப் பிரச்சினை. பிரசவத்தின் போதும், வயோதிகத்தின் காரணமாகவும் இடுப்புத் தசைகள் தளர்ந்து விடுவதால் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இருந்தாலும் பேரனை மேலே போகுமாறு அதட்டிவிட்டுப் போனார்.

அவன் திரும்பி மேலே பார்க்க, நைட்டியை மாற்றிவிட்டு, அப்பத்தாவின் குரல் கேட்கவும், அறையை விட்டு வெளியே வந்தவள், அறையின் முன் நின்று கொண்டு “வந்த… கொன்றுவே.” என வாயசைத்து, விரலை‌ நீட்டி எச்சரிக்க,

‘இப்ப மேலே போனா, ரூம் வாசல்லதான்‌ படுக்கணும். அதுக்கு மரியாதையா இங்கேயே படுத்துக்குறே.’ என எண்ணியவனாக, போர்வையை தலையோடு இழுத்துப் போர்த்தினான். 

மகனைப் பார்த்துக் கொண்டே வந்த தவசியும், சிரித்துக் கொண்டே விளக்கை அணைத்து விட்டு சென்றுவிட்டார். 

சற்று நேரத்திற்கெல்லாம் அவளும், படுக்கையை எடுத்துக் கொண்டு கீழே வந்துவிட்டாள்.‌ 

அவன் விரித்திருந்த பாயிலேயே, தலையனையைப் போட்டவள்,‌  அவன் அருகே படுத்துக் கொள்ள, 

‘அடிப்பாவி!!” என எண்ணிக்கொண்டே போர்வையை விலக்கினான்.

“புது எடமா இருக்கா… அதான், தனியா படுக்கவும் தூக்கம் வரல.” 

“நீ பக்கத்துல வந்து படுத்தா எனக்கு தூக்கம் வராதே.” என்றான் மெதுவாக.

“அவஸ்த்தைப் படு. எனக்கென்ன… நேத்து என்னைய வெறுப்பேத்தையில குளுகுளுன்னு இருந்துச்சா? இது என்வீடு. நான் எங்க வேணும்னாலும் படுப்பே.”

“யாரு இல்லைனா. ஆனா… பழிவாங்கனும்னா வேற வழில பழி வாங்கிக்கோ. ரொம்ப சோதிக்காதடி. உள்ள போய் படு. அப்பத்தா மறுபடியும் எப்ப வேணாலும் எந்திரிச்சு வரும்.”

“இங்க பாரு! ஏற்கனவே தலை வலியோட இருக்கே. நொய்நொய்ங்காமப் படு. இல்ல… அம்மத்தாவ நானே கூப்புட்டுறுவே. அது எனக்கு தான் சப்போர்ட் பண்ணும்.” என கூறிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். 

“நல்லா வச்சு செய்றடி” என குப்புறப் படுத்து தலையணையை இருக்கிப் பிடித்து படுத்து விட்டான்.

சிறிது நேரம் அமைதி காத்தான்… அவனும் எவ்வளவு நேரம் தான் குப்புற படுப்பது. அவனும் ஆண்மகன் தானே. ஆசாபாசம் இருக்கும் தானே. மெதுவாக தலை தூக்கி, அப்பத்தாவின் அறையைப் பார்க்க, அமைதியாக இருந்தது.

தென்றல் வந்து என்னைத் தொடும்

சத்தமின்றி முத்தமிடும்…

என காதோரமாக மெதுவாகப் பாடிக்கொண்டே… கையை இடையோடு வளைய விட்டவன், வஞ்சியை தன்னோடு சேர்த்து இழுத்து அணைக்க…

“ரெண்டு மொத்து வேணா மொத்தும்.” என கையில் பட்டென அடித்தாள். 

“என்னடி அடிக்கிற!”

“ஏன்… நான் உன்னைய அடிச்சதே இல்லையா?” 

“அது சின்னப் பிள்ளையில…” என குழையப் பேசிக்கொண்டே… பின் கழுத்தோரமாக மீண்டும் இழைய, அவளுக்கும் உள்ளுக்குள் படபடத்தாலும், வெளியே ஜம்பமாக, சண்டை கோழியாக சிலுத்துக் கொண்டே, கையைப் பிரித்து விட்டாள். பிரித்த கையையும் விடாமல் சேர்த்துப் பிடித்து இறுக்கி அணைத்து, முதுகில் இதழ் பதிக்க, அங்கமெல்லாம் சிலிர்த்து அடங்கியது அவளுக்கும்.

உள்ளே பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. பட்டென போர்வையை உதறிவிட்டு வேகமாக எழுந்து பேச்சியின் அறைக்கு இருவரும் செல்ல, மறுபடியும் எழுந்து வந்தவர், தண்ணீர் செம்பை தட்டி விட்டிருந்தார். 

மன்மதன் எடுத்த அம்பை, மீண்டும் தூளியில் போட்டுக் கொண்டு, இதுக வேலைக்காதுக என, தலையில் அடித்துக் கொண்டு, ரதியோடு சென்றுவிட்டான்.

“அப்பத்தா என்னாச்சு?”

“கோழி கூவிருச்சுடா. வாச தெளிக்க வேண்டாமா? உங்க அம்மா வேற‌ இல்ல. பால்க்காரன் வேற வந்துருவான். மாடெல்லாம் புடிச்சுக் கட்ட வேணாமா? ஆசுபத்திரிக்கு சோறு கொண்டு போகணுமே.” 

“அப்பத்தாஆஆ! சாமக்கோழி தான் கூவியிருக்கு. அதெல்லாம் விடிஞ்சதும் பாத்துக்கலாம். உன்னோட அக்கறைக்கு ஒரு அளவே இல்லையா. இப்ப படு.” என கடுப்போடு அதட்டிப் படுக்க வைத்தான்.‌ 

அவருக்கு மனதில்… வீட்ல பொம்பள இல்ல, எல்லா வேலையும் பாக்கணுமே என்பது மட்டும் தான் நினைவில் இருக்கிறது. அதனால் தான் நிதானமில்லாமல் எழுந்து வர முயற்சி செய்திருக்கிறார். எத்தனை வயசானாலும் பொம்பளைங்க மாறப்போவதில்லை. என்வீடு, என் பிள்ளைகள் என்பதே உலகம் இவர்களுக்கு. 

சங்கரி அவனைப் பார்த்து, கண்களில் கண்ணீர் வர வாய்விட்டு சிரிக்க, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனாலும், அப்பாடா என ஆசுவாசமாக அவளையே பார்த்து நின்றான்… நெஞ்சம் நிறைந்த காதலோடு.

error: Content is protected !!