தாழையாம் பூமுடித்து🌺4

                      4

“பெரியம்மா, சித்தி, அத்தைக எல்லாம் கொஞ்சம் ஏங்கூட வாங்க. பரிசம் போட வரிசத்தட்ட எடுத்துட்டு வரணும்.” 

ஊரார் முடிவு செய்ய, மாமன் மறுக்கமுடியாமல் மௌனித்து நிற்க, மாப்பிள்ளை வீட்டார் கோபத்தோடு வெளியேற, அமர்ந்திருந்த சொந்தபந்தங்களைப் பார்த்து வரிசைத்தட்டுகளை எடுத்துவர அழைத்தான், ஈஸ்வரன்.

“பூங்கோதை அத்தை! எந்திரிங்க!” அம்மா உங்ககிட்ட சொன்னா, எல்லாத்தையும் பாத்துக்குவீங்கனு சொன்னாங்க. நீங்க என்னடான்னா கூப்புட்டும் கம்முனு உக்காந்திருக்கீங்க.” என, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டவர்களில், ஒருவரை உரிமையோடு அழைக்க, 

“எந்திரிங்கடி… நாளைக்கி சிவகாமி மூஞ்சில முழிக்க வேண்டாமா? நம்ம பாத்துக்குவோம்னு பையன ஒத்தையில அனுப்பியிருக்கா. எல்லாரும் வாங்க.” என அதட்டி மற்றவர்களை அழைத்தார். இதுதான் கிராமத்து மனுஷங்க. கொஞ்சம் உரிமை எடுத்து பாசம் காட்டினாலே போதும்… இறங்கி தாமாகவே உரிமை எடுத்துக் கொள்வார்கள். 

எழுந்து வந்த பெண்களை அழைத்துக் கொண்டு, விசேஷம் நடந்த பெரிய வீட்டிற்குள் சென்றான் ஈஸ்வரன். 

இந்த வீட்டிற்குள் இவனுக்கென்ன வேலை என்று யாரும் சந்தேகமாகப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வயது வரைக்கும் ஈஸ்வரன் தாய் தந்தையோடு வளர்ந்தது இதே வீட்டில் தாத்தனோடு தான்.

ஏனெனில் இது அவனது தாய்வழி தாத்தா சின்னவரின் வீடாயிற்றே.  

இந்த வீட்டுக் கதையைப் பற்றி இப்பொழுது சிறுகுறிப்பு.

இரட்டைவீடு என ஊராரால் அழைக்கப்படும் பெரிய வீட்டில் ஒன்று, இவ்வீடு.

அந்தக்காலத்தில் ஈஸ்வரனின் முப்பாட்டன் காரைக்குடிப்பக்கமாக ஒரு விசேஷத்திற்கு சென்றவர்,‌ அங்கிருந்த வீடுகளைப் பார்த்துவிட்டு, அதே போல் தொட்டிக்கட்டுவீடு கட்ட வேண்டும் என்கிற ஆசையில், காசை காசாகப் பார்க்காமல் தண்ணியாக இரைத்து, தனது வயலிலேயே செங்கல் சூளை அமைத்துக்கொண்டு, இரண்டு மகன்களுக்கும் கட்டிய வீடு. இரண்டு வீட்டிற்கும் ஒரு குறுக்குச்சுவர் தான் இடையில். முன்பு, தலை தெரியும் வகையில் இடுப்பளவிற்குதான் குறுக்கு சுவர் இருந்தது. பிரிவிற்குப் பிறகுதான் ஆறடிக்கு மேல் சுவர் வளர்ந்து விட்டது. 

விவசாயம் பார்க்க முடியாது என நிலபுலன்களைத்தான் தம்பிக்கு கிரையம் செய்து கொடுத்தாரே தவிர, ஊருக்கு வந்து செல்ல, வீடு வேண்டும் என வீட்டை வைத்துக் கொண்டார் பெரியவர். 

சுப்பையா, சுப்பிரமணி என்ற பெயர்களே சின்ன சுப்பு, பெரிய சுப்பு என அழைக்கப்பெற்று, பின்பு பெரியவர், சின்னவர் என மருவியது. இருவரும் ராமர் லட்சுமணன் எனத்தான் ஊருக்குள் பெயர் வாங்கினர். அண்ணனை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் தம்பி எடுத்ததில்லை. இராமர், இலட்சுமணன் என இருந்தால் கூடவே கூனியும் வந்தாக வேண்டும் அல்லவா? அது பெரியவர், பெரிய மகனுக்கு பெண்ணெடுத்த வகையில் வந்து சேர்ந்தது.

சின்னவருக்கு மூன்றும் பெண் குழந்தைளாகிப் போக, சின்னவரின் மறைவிற்குப் பின், அவரது பெண்பிள்ளைகள் எடுத்த முடிவு தான், அவர்களது தாயும்தந்தையும் வாழ்ந்த வீட்டை அவர்கள் கோவிலுக்கே தானமாக எழுதி வைத்தது. எங்களுக்கு நிலபுலன்கள் போதும். இந்த வீட்டை கோவிலுக்கே எழுதி வைக்கிறோம் என எழுதி வைத்தனர். 

பொதுவாக பேர் சொல்லத்தானே பிள்ளைகள் கேட்பது. அதுவும் ஆண்பிள்ளைகள் வேண்டும் என்பதும்.

இராஜராஜ சோழனின் பெயரை ஆண்டாண்டு காலமாக அவரது வாரிசுகளா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை கோபுரம் அல்லவா நிமிர்ந்து நின்று பரைசாற்றுகிறது. ஒருவர் பெயர் விளங்குவது வம்சத்தால் அல்ல. அவரது செயல்களால் மட்டுமே. இரண்டு மூன்று தலைமுறைகள் வரைக்கும் தான் முன்னோர்கள் பெயர் விளங்கும். முப்பாட்டன் பெயர் எதுவென கேட்டால் நம்மில் பலருக்கும் தெரியாது.

அதை முடிவு செய்தே…

 “ஏன்? ஆம்பளப்புள்ள இருந்தா தான் எங்கள பெத்தவங்க பேரு இந்த ஊர்ல நிலைக்குமா. காலத்துக்கும் எங்க அப்பா பேர இந்த வீடு சொல்லட்டும்.” என முடிவெடுத்தே, இரட்டை வீட்டில் சின்னவர் வீட்டை, அவர்களது குலசாமிக்கு எழுதி வைத்து விட்டனர். 

பங்காளிகளின் குடும்ப விசேஷங்கள், திருவிழா எனில் வெளியூர் பங்காளிகள் வந்து தங்கி செல்ல என தானமாக வழங்க, இந்தவீடு இப்பொழுது மண்டபமாகவும் உபயோகமாகிறது ஊரார்க்கும், உற்றார்க்கும். விசேஷங்களில் வரும் வாடகை வீட்டின் பராமரிப்பிற்கு உபயோகித்துக் கொள்வர். இப்பொழுது அதன் பொறுப்பை ஈஸ்வரன் பார்த்துக் கொள்கிறான். 

முன்தினம் இரவு அண்ணன் மகளோடு பேசிக்கொண்டிருந்த சின்ன மாமனை ஃபோனில் அழைத்ததே, வரிசைத்தட்டுகளை உள்ளே கொண்டு வந்து வைக்கத்தான். பல அறைகள் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறை மட்டும் இவர்கள் உபயோகத்திற்கு என்று இருக்கும். அதன் கதவைத் திறந்து விட, அங்கு அத்தனை வரிசைத்தட்டுக்களும் இருந்தன. ஆளுக்கொன்றாக எடுத்து வந்து சபை நிறைத்தனர் உறவுப்பெண்கள். 

“இந்த கருமம் எல்லாம் ஆகாதுன்னு தான், இவளுக சங்காத்தமே வேண்டாம்னு அத்துவிட்டது. இப்ப மறுபடியும் ஆரம்புச்சுட்டாளுக.” என வரிசைத்தட்டுகளைப் பார்த்து வாயும் வயிறும் எரிந்தது சக்திவேலின் மாமியார்க்கு. அதை புலம்பலாக அருகில் நின்ற மூத்த மருமகளிடம் வெளிப்படுத்த, 

“உங்க மகவயித்துப் பேத்திக்கு, கல்யாணத்துக்கு வந்த வரிசத்தட்டு. அதப்பாத்து கருமம்னு சொல்றீங்க. நம்மையும் வீட்ல வச்சுருந்தாங்க பாருங்க. இவங்கள சொல்லணும்.” என மாமியாரின் பேச்சைக்கேட்டு முகம் சுழித்த, மருமகளைப் பார்த்து, 

“நீ எப்பவும் அவளுக பக்கந்தான பேசுவ.” என்றவாரு கோபமாக மகள் கயல்விழி அருகே சென்று நின்று கொண்டார்.

பட்டும், நகை செட்டும் என ஆனபண்டம் அத்தனையும் பரிசச் சீராக அடுக்கினான் ஈஸ்வரன். 

“ஏம்ப்பா… ஏற்கனவே திட்டம் போட்டுதான் எல்லாம் பண்ணுனியா?” என, பக்கத்து ஊரு பெருசு ஒன்று கேட்டு சிரிக்க,

“திட்டமெல்லாம் போடல தாத்தா! உன் மாமன் மக சம்மதிச்சா, இத எல்லாம் கொடுத்து பரிசம் போட்டு கூட்டி வா… இல்லைனா, கல்யாணத்துக்கு அத்தைக நலுங்கு சீரா, எங்க அண்ணே மகளுக்கு கொடுத்துட்டு வான்னு சொல்லித்தா அனுப்புனாங்க.” என்றான் சங்கரியின் முகம் பார்த்துக் கொண்டே.

இப்பொழுதும் சம்பந்தம் கலக்க, பெண்ணின் தாய்மாமனையும், மாப்பிள்ளையின் தாய்மாமனையும் அழைக்க, இவனுக்கு தாய்மாமனாகிய பெரியமாமன் சக்திவேலோ முறுக்கிக் கொண்டு நிற்க,‌ சின்னமாமன் முத்து வேல் முன்னுக்கு வந்தார். 

இருவரும் சம்மந்தம் கலந்து, பரிசத்தட்டை எடுத்து, சிவசங்கரியிடம் கொடுத்தனர். 

“புடவைய மாத்திட்டு சீக்கிரம் வாங்கம்மா. நல்ல நேரம் போகுது.” என பெரியவர்கள் வழமை மாறாமல் கூற, வேகமாக வந்து அக்காவோடு சேர்ந்து கொண்டாள் ஸ்ரீப்ரியா. 

“ஒரு நிமிசம்.” என நிறுத்தினான் ஈஸ்வரன். தட்டை வாங்கிக் கொண்டு திரும்பியவள், என்னவென்று மீண்டும் திரும்பி பார்க்க,

“இதெல்லாம் உங்க அத்தை, அண்ணே மகளுக்குனு கொடுத்துவிட்டது. ஆனா, இது அவங்க மருமகளுக்கு கொடுத்து விட்டது.” என ஒரு‌ நகைப்பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்தான். 

கையிலிருந்த தட்டை தங்கையிடம் கொடுத்துவிட்டு, அதை வாங்கிக் கொண்டாள். 

திறந்து பார்த்தவள்… அவனை நிமிர்ந்து பார்க்க,

“என்ன… பழைய நகையா இருக்கேனு பாக்குறியா? இல்ல… பாத்த மாதிரி இருக்கேனு பாக்குறியா?” என மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு, புன்னகையுடன் தலைசாய்த்து கேட்க,

“உங்க அம்மாவோட நகை தான?” என்றாள் கண்களில் ஆச்சர்யம் மின்ன.

“ம்ம்கூம்… உன் அத்தையோட நகை.” என திருத்தினான்.

அவளது கண்களில் கண்ணீர் மின்னியது, உள்ளே இருந்த வைர அட்டிகைக்கு இணையாக. சிறுபிள்ளையில் விசேஷம் என ஊருக்கு வரும் பொழுதெல்லாம் அத்தையிடம் இதைக் கேட்டு அடம் பிடித்தது நினைவிற்கு வந்தது. அவரும் ஆசையாக கழட்டிப்போட்டு அழகு பார்ப்பார், அண்ணன் மகளை. இருந்தாலும் விலை உயர்ந்த நகையை, சிறுபிள்ளை கழுத்தில் அதிக நேரம் போட்டுவிட முடியாமல், வாங்கிக் கொள்வார் மனசே இல்லாமல். 

“உன்ன தூக்கி கொஞ்சுறப்ப எல்லாம், இதப்புடிச்சு இழுப்பியாம். அப்பவே உங்க அத்தை சொன்னாங்களாம். இதையே பரிசமா போட்டு, உன்னைய மருமகளா அழச்சுட்டு வர்றேனு. நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சா இதக் கொடுக்க சொன்னாங்க. ஏன்னா… இது எங்க அப்பத்தா நகை. அடுத்து மருமகளா வர்ற பொண்ணுக்கு தான் கொடுக்கணும்.” என்று கூற, கைகள் பாசமாய் தடவியது அத்தையின் அட்டிகையை.

புடவையை மாற்றிக்கொண்டு வர, ஊரார் முன்னும், உற்றார் முன்னும் உரிமைப் பட்டவன், உடமைப்பட்டவளை மங்களநாண் பூட்டி, சங்கரியை சரிபாதி ஆக்கிக் கொண்டான் ஈஸ்வரன். 

             ***********************

அப்பனே முருகா! ஞானபண்டிதா! குமரா! வேலா! வடிவேலா! கந்தா! கடம்பா! சுப்ரமணியா! என தமிழ் அழகனின் அத்தனை பெயர்களையும் வழக்கம்போல் மனப்பாடமாக… வள்ளிமணாளனை கும்பிட்டு அழைத்து விட்டு, இறுதியாக ஐயனாரப்பா! என குலசாமியையையும் கும்பிட்டு, ஏ… வம்சம், கைகால் சொகத்தோட… நூறு ஆயுசுக்கு நல்லா இருக்கணும். அதுக்கு நீதாம்ப்பா தொணையா வரணும்.” என இடுங்கிய கண்களை மூடி வேண்டிக்கொண்டு, காலில் விழுந்தெழுந்த புதுமணத் தம்பதிகளுக்கு நடுங்கும் கைகளால், தலையில் சிறிது விபூதியை போட்டுவிட்டு, நெற்றியிலும் பூசி விட்டு, விரலில் ஒட்டியிருந்த மீதி விபூதியை கழுத்திலும் தடவினார் பேச்சியம்மா. பிள்ளைகள் கைகால் சுகத்தோடு இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவரது வேண்டுதல். அதுதான் பெரிய சொத்து இந்த வயதான மனுஷிக்கு.

மணமக்கள் வந்த கார், வாசல் வர, ஆலத்தி தட்டை ஏந்திக்கொண்டு நிறைமாத வயிறும், வாய்நிறைந்த சிரிப்புமாக, அசைந்து வந்தாள் தீபிகா, அண்ணனையும், அண்ணியையும் வரவேற்க. 

அதற்குள் தகவல் தெரிந்து ஈஸ்வரனின் தாய் வழிச் சொந்தங்களும், தந்தை வழிச் சொந்தங்களும் வர ஆரம்பித்தனர்.

காரை விட்டு இறங்கிய மணமக்களுக்கு ஆலத்தி சுற்றி, திருஷ்டி எடுத்தவள்,

“அண்ணே! காச கணக்குப் பாக்காம போடு. நானும் எம்பிள்ளையும் சேந்து ஆலத்தி எடுத்துருக்கோம்.” எனக் கேட்க,

“இப்ப தாம்மா கணக்கே பாக்கணும். நாளைக்கி எம்மருமகனுக்கு எம்புட்டு சீரு செய்ய வேண்டி இருக்கு. இப்ப நானும் குடும்பஸ்த்தன் ஆகிட்டே. இதே மாதிரி எனக்கும் பிள்ளைக வரும். அதனால அளந்து தான் போடணும்.” என கூறிக்கொண்டே ஆலத்தி தட்டில் ஐநூறு ரூபாய் தாளை எடுத்துப் போட்டான் ஈஸ்வரன். 

“அண்ணி… உங்க கல்யாணத்தப்ப எங்க அண்ணே எனக்கு ஆயிரம் ரூபா போட்டுச்சு. உங்க அண்ணே என்னடான்னா பிசினாரித்தனமா ஐநூறு ஓவா போடுறாங்க.” என மலர்க்கொடி வம்பு மூட்டிவிட,

“எங்க அண்ணேங்கிட்ட எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும். நாளைக்கி மருமகன் வந்து அவன் பங்க வாங்கிக்குவான். இது எம்பங்கு.” என அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு, ஆலத்தியை வாசலில் ஊற்றப் போனாள் தீபிகா. 

வீடு சொந்த பந்தங்களால் நிறைந்து விட்டது. திருமணம் முடித்து வருகிறான் எனத் தெரிந்ததும், அவன் ஊரு வந்து சேருவதற்குள், ஈஸ்வரனின் வீடும், உடனடிப் பந்தல் எனும் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. தோப்பில் இருந்த வாழைமரம் அடுத்த நொடி வாசல் வந்தது. மைக்செட் மரம் ஏறியது. வீடு கல்யாணக் கலை கட்டிவிட்டது நிமிடத்தில். 

அண்ணன் மகளை ஆசையாக கண்குளிர பார்த்தவர்,‌ வரவேற்று பூஜையறை அழைத்து சென்றார் சிவகாமி. விளக்கேற்றி சாமி கும்பிட, பேச்சியம்மா தனது மூன்றாம் தலைமுறைக்கு, திருநீறு பூசி இருவரையும் ஆசிர்வதிக்க, வீட்டுப் பெரியவர்களும் திருநீரு போட்டு, ஆசிர்வதிக்க, நெற்றியும், தலையும் அதற்குள் சாம்பல் பூத்துவிட்டது இருவருக்கும். 

வந்தவர்களுக்கு வீட்டின் பின்பக்க வாசலில் சமையல் தயாராகிக் கொண்டு இருந்தது. வீட்டின் அகன்ற வாசல் முன் சேரும், டேபிளும் போட்டு பந்திக்கு தயாராகியது.

சங்கரிக்கு இடம் மட்டும் தான் புதிது. ஆனால் சொந்த பந்தங்கள் எல்லாம் பழசு. எல்லாரும் சிறுவயதில் உடன் விளையாடிய அத்தை பிள்ளைகளும் மற்ற சொந்த பந்தங்களே. எனினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்க அனைவரிடமும் மாற்றங்கள் அதிகம்.

பூஜை முடித்து வெளி வந்தவர்களை அமர வைத்து பால்பழம் கொடுக்கப்பட்டது. 

“மாமா…‌ அத்த மககிட்ட தப்புச்சுட்டு, மாமன் மககிட்ட மாட்டிக்கிட்டே. நானும் நம்ம சங்கரி தானேன்னு விட்டுக் கொடுத்துட்டே.” என மலர்க்கொடி மாமன் மகனை கிண்டல் செய்ய, 

“இப்பவும் ஒன்னும் நட்டமில்ல மலர். அடுத்த வாரம் தான உன்னோட நிச்சயதார்த்தமும். அங்கேயும் வந்துருவோம். ஒருபக்கம் சங்கரினா, நீ ஒருபக்கம் கங்கையா இருந்துட்டுப் போ.” என்க,

“அங்க எல்லாம் உன் பப்பு வேகாதுடி மாப்ள. சின்னமாமன் மகன் தான என் தங்கச்சிக்கி மாப்பிள்ளை. இங்க அந்நியம்கவும் தான் உன் ஜம்பம் பலிச்சது.” என பதில் பேசியவாறு வந்தான் தங்கை தீபிகாவின் கணவன் சௌந்தரபாண்டி. பந்திக்கான ஏற்பாடுகளை கவனித்துவிட்டு அப்பொழுதுதான் வந்தான்.

இவர்களது கேலிப்பேச்சைக் கேட்ட சங்கரியின் கண்கள் கானமிளகாயாய் காந்தியது.

“அப்படி சொல்லுடா மாப்ள. இவரு எல்லா வீட்டு நிச்சயித்துக்கும் போவாராம். உடனே பொண்ண தூக்கி கொடுத்துருவாங்களாமா?” என மற்றொரு சித்தி மகன் வந்தான். இளவட்டங்கள் ஒன்றுகூட கேலிக்கும் சிரிப்பிற்கும் பஞ்சமில்லாமல் அவ்விடம் கலகலத்தது. இவர்கள் பேசிக்கொண்டிருக்க, 

“என்னம்மா, அமைதியா இருக்க. எல்லாம் சின்ன வயசுல பாத்துப் பழகினவங்க தான சங்கரி. என்ன… இடையில உனக்கு கொஞ்சம் டச் விட்டுப் போச்சு.” என சௌந்தர், இவளது அமைதியைப் பார்த்து சகஜமாக்க பேச்சுக் கொடுத்தான்.

“ஏங்க… அண்ணிக்கா பேசத் தெரியாது. வந்தவுடனே ஆரம்பிக்க வேண்டாமேனு அமைதியா இருக்காங்க. இல்ல அண்ணி?” என தீபிகா கேட்க, அனைவருக்கும் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி அமர்ந்திருந்தாள் சங்கரி.

           ********************

“ஏன்டி, திருநெல்வேலில இருக்குற உங்க அக்காவே வெல்லனா வந்துட்டா. இங்கன இருக்குற சோழவந்தான்ல இருந்து வர்றதுக்கு இம்பூட்டு நேரமா.” என பேச்சியம்மா அப்பொழுதுதான் உள்ளே வந்த ஈஸ்வரனின் இரண்டாவது சித்தியை கேள்வி கேட்க,

“விடிஞ்சா கல்யாணம்… புடிடா வெத்தல பாக்கங்கற மாதிரி, ஃபோன் பண்ணி கல்யாணம் முடிச்சுட்டு வர்றான்னு சொன்னா, போட்டது போட்டபடியா வர முடியும்? தவசி மாமா மாதிரியா? பொண்டாட்டிய வீட்டவிட்டு வெளியேத்தாம வேல பாக்குற மனுஷனயா கட்டி வச்சுருக்கீங்க. நம்ம போகலைனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது. வயல்ல தொழிஉழவு போய்க்கிட்டு இருக்கு. அதெல்லாம் பாத்து விட்டுட்டு வரவேண்டாமா?” என தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்ட அத்தையிடம் நீட்டி முழக்க,

“என்னமோ நீயே எறங்கி ஒழவு ஓட்டுறவளாட்டடம் பேசுற. வரப்புல நின்னு பண்ணாட்டு பண்ணப் போற. இதுக்கு இம்பூட்டு சலுச்சுக்குற. ஆஃபிஸ் போற புருஷ வேணும்னு கேட்ட. அப்ப மத்த வேலை எல்லாம் நீதான பாக்கணும். ஆஃபீசு போறவனா வந்து பாப்பான். இப்ப இருக்குற பொம்பளைகளுக்கு எல்லா நோகுது.” என வந்தவரை பேச்சியம்மா நொடித்துக் கொள்ள,

“ஏங்கேக்க மாட்ட. நின்னு பாத்தா தான் தெரியும். உன்னோட காலம் மாதிரி இல்ல த்தே. அப்ப எல்லாம் பொழுதுபரிய நெலத்துல எறங்கிட்டு, பொழுது சாயத்தான் காட்டவிட்டு மேல ஏறுவாங்க. இப்ப எல்லாம் செல்லுல டைம் பாத்துக்கிட்டே எறங்குறாங்க. அலாரம் வச்சு மேலே ஏறிறாங்க. கூலி கொடுத்து கட்டுபடியாகல. விவசாயத்தையே இழுத்து மூடலாம்னு பாக்குறே. புள்ளைகளும் பாக்குற மாதிரி தெரியல.” என புலம்ப,

“ஏன்டி லேட்டா வந்தேனு கேட்டா, இல்லாத கதையெல்லாம் சொல்லி, போகாத ஊருக்கு வழி சொல்ற.”

“உனக்கு பின்னாடி பொறந்ததுக எல்லாம் கெளம்பிருச்சுக. நீ மட்டும் இன்னும் ஓலைய தொலச்சுட்டு, வந்து நிக்கறதுக்குள்ள என்னைய கேள்வி கேட்டுட்டு இருக்க. நாங்க ஏதாவது கேட்டோமா?”

“நா… என்ன கேட்குறே? நீ என்னடி சொல்ற? மூனாவதும் பொட்டப் புள்ளைங்கவும், மருத்துவச்சி நீ பொறந்தப்பயே கேட்டா… கள்ளிப்பாலா, நெல்லானு. எங்க அண்ணேந்தா எத்தன பொம்பளப்புள்ளைனாலும் என்னால வளத்து கட்டி கொடுத்து சீர் செய்ய முடியும்னு சொல்லிருச்சு. அப்பவே கள்ளிப்பால ஊத்தியிருந்தா இன்னைக்கி இப்படி வந்து என்னைய கேக்க மாட்டே.”

“அந்தக் காலத்துல உனக்கே  எங்க தாத்தா கள்ளிப்பால் ஊத்தல. எனக்கா எங்க அப்பா ஊத்தவிடுவாரு.” என அத்தைக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்த, தங்கையை சிவகாமி அழைத்தார்.

“சுதா… வந்தவுடனே ரெண்டு பேரும் ஆரம்புச்சுட்டீங்களா? அங்க பந்தியப் போயி பாரு. கீதா மட்டும் நிக்குறா. எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க.” என வேலை கொடுத்து கூப்பிட, 

“சின்ன அண்ணன நம்பி இவன அனுப்பி இருக்கீங்க. எனக்கு அங்க நிம்மதியாவே இருக்க முடியல தெரியுமா? வேலைய எல்லாம் ஆளுககிட்ட ஒப்படச்சுட்டு அறக்கபறக்க ஓடியார்றே.” என அக்கா பின்னாலேயே வந்த சுதா கேள்வி கேட்க, 

“நல்லா கேளு சுதா. அவன மட்டும் அனுப்பி இருக்காங்க. சொல்லியிருந்தா ஆளும் பேருமா போயிருப்போம்ல. நம்ம எல்லாருக்கும் இவன் தான மூத்த மகன்.” என அக்காவை சடைத்துக் கொண்டு வந்தார் பெரிய தங்கை கீதா. 

இவர்கள் மூவருக்கும் செல்ல பிள்ளை, ஆண்வாரிசு இல்லாத வீட்டில் முதல் பையனாகப் பிறந்த ஈஸ்வரன் தான். சித்திகள் இருவருக்கும் ரொம்ப செல்லம். கல்யாணம் ஆகும்வரை இவர்கள் தான் அவனை வளர்த்தது. அப்படி இருக்க தங்களது செல்ல மகனின் திருமணம் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என பட்டென முடிந்ததில் சங்கட்டம் அனைவருக்கும். 

“நானும் எல்லாரும் போலாம்னு தான் சொன்னே கீதா. ஈஸ்வரன் தான் நீங்க எல்லாரும் வந்தா, அவங்க ஏதாவது பேசுனா… நீங்களும் ஆளுக்கொன்னா பேசுவீங்க. தேவையில்லாம பிரச்சினை ஆகும். நான் மட்டும் போனாத்தான் ஊரே எம்பக்கம் இருக்கும். எல்லாரும் போனா குடும்ப விவகாரம்னு ஊரு ஒதுங்கிக்கும்னு சொல்லிட்டான். நான் என்ன பண்றது. அதுதான் கல்யாணத்த டிவில போட்டு காட்டுனான்ல. செல்ஃபோன்லயும் வந்துச்சே.” என மகனின் திருமணத்தை லோக்கல் சேனலில் பார்த்து சந்தோஷப்பட்டதை, வேறு வழியில்லாமல் தங்கைகளிடம் கூறி சமாதானம் செய்தார். ஃபோனிலும் நேரடி ஒலிபரப்பு செய்திருந்தான்.

“இருந்தாலும் சின்ன அண்ணே பேச்சக்கேட்டு இவன் போனது பிடிக்கல.” என சுதா குறைபட்டுக் கொள்ள,

“ஏன் சுதா? இன்னமும் சின்ன அண்ணே மேல உனக்கு கோபம் கொறையலியா?”

“எப்படி கொறையும். அதால ஒரு உசிரு போயிருக்கு.” என முகம் சுண்டியது சுதாவிற்கு.

“போன உசிரு ஒன்னும் சும்மா போகல. அவன் உசிரயும்‌ தான சேத்து எடுத்துட்டு போயிருச்சு. இப்ப வெறும் ஆளாத்தான நடமாடிட்டு இருக்கான்.” என தம்பியைப் பற்றி கவலையாகப் பேச,

“நம்ம ஆளுக இல்லைனு தெரிஞ்சும் எதுக்கு லவ் பண்ணனும். இன்னொரு பெண்ணோட மனச கெடுக்கணும். அவ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பா.” என உயிர்த் தோழியின் நினைவில் சுதா கண்கலங்க, 

“அவளுக்கும் அந்த நெனப்பு இருந்திருக்கணும் சுதா. தெரிஞ்சே எதுக்கு மனச பறிகொடுக்கணும். காதலுக்கு கண் இல்லைனு சொன்னாங்களே தவிர, சாதி இல்லைனு சொல்லல. போனவ நிம்மதியா போயிட்டா. இப்ப நிம்மதி இல்லாம அலையறது நம்ம முத்து தான.” என தம்பிக்காக சிவகாமி பறிந்து பேச,

அப்பொழுதுதான் பாத்ரூம் தேடி வந்தவளின் காதுகளிலும்,‌அடுப்படியில் நின்று, அத்தைகள் பேசிக் கொண்டது தெளிவாக விழுந்தது.

“வா சங்கரி. என்ன வேணும்.” என மருமகளைப் பார்த்து கேட்க,

“ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” என்றாள். 

“பின்னாடி கொள்ளப்புறத்துல இருக்கு.” என்க,

“வா… நாங்கூட்டிப்போறே…” என சின்ன அத்தை உடன் வந்தாள்.

இவர்கள் பேச்சின் மூலம் சித்தப்பா மீது இவர்களுக்கு பாசம் இருக்கும் அளவிற்கு வெறுப்பும் இருக்கிறது என‌ப்புரிந்தது சங்கரிக்கு. சித்தப்பாவிற்கு காதல் தோல்வி என யூகம் இருந்தது. அதை இவர்கள் பேச்சு ஊர்ஜிதம் செய்தது.