தாழையாம் பூமுடித்து🌺9

                       9

“என்ன அம்மாச்சி! இந்நேரத்துக்கு வெளிய நிக்கிறீங்க?” என வீட்டு வாசலில் நின்றிருந்த திவகவதியைப் பார்த்து கேட்டுக் கொண்டே வந்தான் ஈஸ்வரன். 

வேட்டியின் முனையை, இடக்கையில் பிடித்துக்கொண்டு, வலக்கையால் கலைந்த முடியை கோதிக்கொண்டே, தங்களை நோக்கி நடந்து வந்தவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சங்கரியும். 

இன்னும் மஞ்சள் கறை படிந்த வேட்டி சட்டையிலேயே அவன் இருப்பதைப் பார்த்தவள், 

‘அத்தை மக மஞ்சத்தண்ணி ஊத்துன ட்ரெஸ்ஸ மாத்தக்கூட மனசு வரல போலியே.’ என மனதினுள் கருவிக்கொண்டாள். அத்தை மகளோடு தான் அவனது திருமணம் என யூகித்த பின்பு, அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோபப்பட ஏதோ ஒரு காரணம் தேவைப்பட்டது சங்கரிக்கு‌. தங்கை பிரியாவும் சேர்ந்து தான் அவன் மீது மஞ்சத்தண்ணீர் ஊற்றினாள் என்பதை வசதியாக மறந்தும் போனாள். 

அவனுக்கு எங்கே உடை மாற்றுவதற்கு எல்லாம் நேரம் இருந்தது. திருவிழாவிற்கு வந்தவர்கள் கலைந்து செல்லும் முன், முக்கியஸ்த்தர்களோடு வரவு செலவு கணக்கு பார்க்க அமர்ந்து விட்டனர். சாமி நகைகளை கணக்குப் பார்த்து முடித்ததும், வரி கணக்கு வழக்குகளை சரிபார்த்தனர்.‌ திருவிழா செலவு போக, வரிப்பணத்தில் மீதிப்பணம் இருந்ததால், அதை கேட்பவர்களுக்கு, கோவில் சார்பில் வட்டிக்கு கொடுத்தனர். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு, நகைப்பெட்டியை வைக்க, பெரியவீட்டிற்கு ஈஸ்வரன் வருவதற்குள் இரவு ஆகிவிட்டது. 

அந்நேரத்திற்கு திலகவதியும்,‌ சங்கரியும் வாசலில் நின்றிருக்க… பார்த்துவிட்டு தான் வீட்டினுள் சென்றான். நகைப்பெட்டியை பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தான்.‌ 

இன்னும் அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருக்க, அப்படியே விசாரிக்காமல் செல்ல மனம் வரவில்லை. என்னவென்று வந்து விசாரித்தான்.

“உங்க சின்ன மாமன் இன்னும் வீட்டுக்கு வரல ஈஸ்வரா.” என கவலையாகக் கூற,

“அவரு என்ன சின்னப்பிள்ளையா அம்மாச்சி? பழைய ஃப்ரன்ட்ஸ்களப் பாத்திருப்பாரு. பேசிட்டு வருவாரா இருக்கும்.‌ நீங்க உள்ள போங்க. நான் பாத்தா வரச்சொல்றே.” என கூறிவிட்டு, விரலில் பிடித்திருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு திரும்பினான்.

“அது இல்லப்பா…” எனத் தயங்கி நிற்க, அவனும் என்ன… என்பது போல் திரும்பி பார்த்தான்.

“ஊருக்கு வந்தாலே உங்க மாமனுக்கு கன்ட்ரோல் இருக்காது. ரெண்டு நாளா திருவிழானு எங்கேயும் போகல.‌ நாளைக்கி காலையில ஊருக்கு வேற கெளம்பணும். இன்னைக்கி அதிகமாகி எங்கேயாவது…” எனும் பொழுதே, அவருக்கும் மகனைப் பற்றி பேச சங்கட்டமாக இருந்ததோ என்னவோ நிறுத்திக் கொண்டார்.

“இப்பவும் மகனப்பத்தி கவலை படுறீங்களா? இல்ல… எங்கேயாவது விழுந்து கெடந்து, உங்க மானத்த வாங்கிடுவாரோனு பயப்படறீங்களா அம்மாச்சி.” என‌ சற்று கடுமையாகத் தான் கேட்டான். 

அவன் கேட்ட தொனியில், அருகில் நின்றிருந்த சங்கரிக்கு கோபம் வந்தது.

“சென்னையா இருந்தா, அளவுக்கு மீறினாலும் ரூம்லதான் இருப்பாரு. எங்கேயும் போக மாட்டாரு. அதனால பயம் இல்ல. இப்ப எங்க இருக்காருனே தெரியல. அதனால பயப்படுறாங்க. அதுக்கு எதுக்கு அப்பத்தாவ அதட்டணும்?” என எல்லாவகையான கோபத்தையும் பேச்சில் வைத்து படபடத்தாள் என்பதை விட சிடுசிடுத்தாள் என்று சொல்லலாம்.

“அப்படினா… வீட்டுக்குள்ளேயே குடிச்சுட்டு விழுந்து கெடந்தா பரவாயில்லையா?” என்றான். 

“என்ன ஈஸ்வரா இப்படி கேக்குற? உங்க பெரிய மாமனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? ஊருக்குப் போயி அசிங்கப்பட்டு வந்துருக்கீங்கேனு பேசுவானே.” என்ற திலகவதியின் பேச்சில் பெரிய மகனை நினைத்து பயம் கொள்வது தெரிந்தது.

“அப்ப… பெரிய மகனோட கௌரவத்தப் பாக்குறீங்களே தவிர, சின்ன மகனோட மனசப் பாக்க மாட்டேங்குறீங்க.” என்றவன்,

“நீங்க போய் படுங்க. நா… தேடிப்பாத்துட்டு வர்றே. அநேகமா எங்க போயிருப்பார்னு தெரியும்.” என்று திலகவதியை வீட்டினுள் செல்லுமாறு கூறினான். அவனையே பார்த்து நின்ற சங்கரியிடம்,

“உனக்கு வேற தனியா‌ சொல்லணுமா? அவங்க தான் பெரியவங்க. பயப்படுறாங்க. தைரியம் சொல்லி வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறத விட்டுட்டு நீயும் சேந்து வீதியில நிக்கிற. அவங்கள கூட்டிட்டு உள்ள போ.” என்றவன் பேச்சில் அத்தனை கண்டிப்பு.

‘பெரிய சண்டியர்னு நெனப்போ. அதட்டுற வேலையெல்லாம் உன் அத்தை மக கிட்ட வச்சுக்கோ. எங்கிட்ட வச்சுக்காதே.‌’ என பதில் பேச வாய் துடித்தாலும், அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டு பேசாமல் உள்ளே சென்றாள்.

‘அதென்ன? இவன் எதைச்சொன்னாலும், மறுபேச்சு பேசாம‌ செய்யுறோம்.’ என்று தான் மனதில் ஓடியது. 

அவர்களை அதட்டி உள்ளே போக சொன்னவன், மாமனைத் தேடி அழைத்து வருவதாகவும் கூறிவிட்டு சென்றான்.‌

முத்துவேல் ஊருக்கு அதிகம் வரமாட்டார். இந்த வருடம் ஏதோ‌ அத்தி பூத்தாற்போல, ஊருக்கு வர சம்மதிக்கவும்,‌ அதுவும் இரண்டுமூன்று நாட்களாக, ஊரில் தங்கவும், பழைய நினைவுகளில், போதை அதிகமாகி, எங்கே நிதானம் தப்பி விழுந்து கிடப்பாரோ என்ற பயம் திலகவதிக்கு.‌ ஊருக்குள் பெரிய குடும்பம். பெரிய குடும்பம் என்றாலே எதுவும் வெளியே தெரியாமல் நடக்க வேண்டும். ஊர் அறிந்த ரகசியமாகவே இருந்தாலும் அம்பலத்தில் ஏறாது. அப்பொழுது தான் அது பெரிய குடும்பம்.

ஸ்ரீப்ரியனுக்கும் ஊர் பழக்கமில்லை.‌ அதனால் அவனை அனுப்பியும் தேடச் சொல்ல முடியாது. எனவே வெளியே‌ வந்து வாசலையே பார்த்து நிற்க, அப்பத்தாவோடு சேர்ந்து சங்கரியும் சித்தப்பனை எதிர்பார்த்து நின்றிருந்தாள். 

இன்னும் திருவிழா கொண்டாட்டங்கள் முழுமையாக அடங்காத நிலையில், இளவட்டங்கள் இருசக்கர வாகனத்தில், வீதியில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு, மீண்டும் மீண்டும் அதே தெருவில் சில வண்டிகள் வட்டமிட்டன. அதனாலேயே அவனுக்கு அவ்வளவு கோபம். 

இருவரையும் உள்ளே அனுப்பி விட்டு அவன் தேடி வந்த இடம்… ஊரை ஒட்டியிருக்கும், அவர்களது வயலுக்கு மத்தியில் இருந்த பழைய மோட்டார் ரூம். ஒரு யூகத்தில் தான் வந்தான்.‌ ஆனால் சற்று தொலைவில் அவன் வரும் பொழுதே ஒலித்த பாடலும், சிகரெட் வாசனையும் அவர் இங்கு தான் இருக்கிறார் என்பதை ஊர்ஜிதம் செய்தது.

இளம்வயதில் ஊருக்கு வரும் பொழுது, சின்னவருக்குப் பயந்து கொண்டு, முத்துவேல் சிகரெட் பிடிக்க, தனியாக வரும் இடம் இது எனத் தெரியும். அவனுக்கு தெரிந்தது அது மட்டும் தான். ஆனால் அவருக்கு அந்த இடம், தன் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுச் சின்னம் என்பது தெரியாது. 

அமைதிக்கு பெயர்தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

நீ கொண்ட பெயரை

நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில்

நான் கண்டு கொண்டேன் சாந்தி

………………………

உன்னோடு வாழ்ந்த சில காலம்

போதும் சாந்தி

மண்ணோடு மறையும் நாள் வரை

நிலைக்கும் சாந்தி

கண்ணோடு வழியும்

நீர் என்று மாறும் சாந்தி

கண்ணோடு வழியும்

நீர் என்று மாறும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி...

என்ற பாடல் வரிகள், 

அந்த இருளின் அமைதியையும் சற்று சலனப்படுத்திவிட்டு காற்றில் மிதந்து வந்தது. இதமான பாடல்வரிகள் தான், அந்நேரத்திற்கு கேட்பவர்கள் மனதை கனமாக்கும் பாடல்.

காதல் தோல்வியால் கனத்த மனதிற்கு மேலும் பாரமேற்றி, மனதை இறுக்கிப் பிழியும் பாடல் வரிகள். அதுவும் உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி… எனும் வரிகளே‌ மீண்டும் மீண்டும் ரிபீட்டட் மோடில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

பழைய மோட்டார் ரூம். பம்ப் செட் ஒரு‌ ஓரமாக இருக்க, ஆதிகாலத்து குண்டு பல்பின் மெல்லிய வெளிச்சம் மட்டுமே. சரியாக பராமரிப்பு இல்லாத, அறையில் நெற்றி மீது கை மடக்கிவைத்து, தனிமையில், அவர் தரையில் மல்லாந்து படுத்திருந்த கோலம், பார்த்தவன் மனதை பாறாங்கல்லாய் கனக்க செய்தது.

சிறுவயதில் இவர்களுக்கு சின்னமாமன் தான் ஹீரோ. பட்டணத்தில் இருந்து வரும் பொழுது, அவரது தோற்றமும், கம்பீரமும், கன்னியரை மட்டுமல்ல பிள்ளைகயும் கட்டியிழுக்கும். 

அதுவும் ஈஸ்வரனுக்கு தாத்தனும், சின்ன மாமனும் தான், உடல் மொழியில் ரோல்மாடல். நடை, உடை, பாவனை எல்லாம் முத்துவேலைப் பார்த்து தான் கற்றுக் கொண்டான். 

பெரிய மாமன் என்றால் சிறிது பயம். சற்று விலகியே நிற்பார். ஆனால் சின்ன மாமன்‌ என்றால் அனைவருக்கும் ஜாலி. பிள்ளைகளோடு பிள்ளைகளாக ஒன்றி விடுவார். எப்பொழுது ஊருக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருப்பர். 

அப்படிப்பட்டவர் படுத்திருந்த கோலம், மனதைப் பிசைய, பெருமுச்சொன்றை இழுத்து விட்டான்.

அவரது இறுக்கத்தையும் தளர்த்தும் விதமாக, “பக்கத்துல ஒரு பாட்டிலும், நாய்க்குட்டியும் தான் மிஸ்ஸிங்.” என்றான். குரல் கேட்டு வேகமாக, தலைமீது மடக்கிவைத்த கைய எடுத்துப் பார்த்தார். 

“டேய் மாப்ளே!!! ஏன்டா… இருட்டுக்குள்ள வந்திருக்க?” என இரவில் அந்நேரத்திற்கு, வரப்பில் நடந்து வந்ததை கடிந்து கொண்டே வேகமாக எழுந்து அமர்ந்தவர், கைபேசியை எடுத்து ஒலித்த பாடலை நிறுத்தினார். திலகவதி பயந்தது போல் நிதானம் தவறி இல்லை. தெளிவாகத்தான் இருந்தார்.

எழுந்து இருவரும் வெளியே வந்தனர். நிலா வெளிச்சம் பால் போல் காய்ந்தது. கதிர் அறுப்பு முடிந்த வயல். அடுத்த நடவிற்கு நெல் நாற்று விடப்பட்டிருந்த பாத்தியிலிருந்து நாற்றுகளின் பச்சை வாசம் வீசியது. 

“கால் அடிய, சூதானமா, பாத்து வச்சுப்போடா மாப்ள.” என தனக்கு முன்னால் வெளியே சென்ற மருமகனுக்கு, எச்சரிக்கை செய்து கொண்டே, கைபேசியில் டார்ச்சை ஒளிரவிட்டு இருவரும் வெளியே வந்தனர். அவருக்கு இன்னும் அவன் சிறுபிள்ளை என்ற நினைப்பு.  

“மாமா! நான் பிறந்து வளந்தது எல்லாம் இந்த ஊருதான். ஞாபகம் இருக்கட்டும்.” என்றான்.

“எனக்கு நெனப்பு இருக்குடா. பாம்புக்கும் அந்த நெனப்பு இருக்குமானு தெரியலியே?” என கேலி செய்தார். 

“அங்க என்னடான்னா… மகனக் காணோமேனு அம்மாச்சி வாசல்லயே நிக்கிறாங்க. நீங்க ஜாலியா சோகப்பாட்ட போட்டுட்டு படுத்து இருக்கீங்க. உங்களுக்குனே டி.ஆர். எழுதி வச்சுருக்கார் போல.” என மாமனை இலகுவாக்க கேலி பேசினான் மருமகனும்.

மருமகன் கேலியைக் கேட்டு மாமன் சிரித்தார். ஆனால் மனம்விட்டு சிரித்தாரா எனத் தெரியாது. ஏதோ ஒரு நினைவில், வெறுமையாக சிரித்தார் என்பது மட்டும் உண்மை. அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.   

“அவளும் இதையே தான்டா சொல்லுவா. அவளுக்கு டி.ஆர். பாட்டு கேட்டாலே பிடிக்காது. எல்லாம் லவ் ஃபெயிலியர் படம்னு திட்டுவா. எங்க கதையும் அது மாதிரித்தான்டா ஆகிப்போச்சு.” என்றவரின் பேச்சில் அத்தனை விரக்தி. மேலும் பழைய நினைவுகளைத்தான் கிளறி விட்டது அவனது பேச்சு. இருவரும் பேசிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியின் திட்டில் அமர்ந்தனர்.

“இப்ப எல்லாம்… திரிஷா, இல்லைனா நயன்தாரான்னு போயிக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா, எத்தனை வருஷம் ஆனாலும், வயலின் வாசிக்கிறத விடமாட்டீங்க போலியே?” என்றான். கேலியாகக் கூறினாலும், அதில் சற்று சோகமும் இழையோடியது‌ மாமனின் நிலையை நினைத்து.

அவன் பேச்சைக் கேட்டதும் தன் நிலையை நினைத்து அழுவதா, இன்றைய தலைமுறையை நினைத்து சிரிப்பதா எனத் தெரியவில்லை முத்துவேலுக்கு.

“நீங்க எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் டா. வேற என்னத்த சொல்லச்சொல்ற?” என ஈஸ்வரனின் வாடிய முகத்தைப் பார்த்து சகஜமாக முயன்றவர்,

“ஒருவேள, கல்யாணம் பண்ணிட்டுப் போனவ, சந்தோஷமா இல்லாட்டியும், உசுரோட இருந்திருந்தாலாவது, நானும் எங்கிருந்தாலும் வாழ்கனு பாடிட்டு, என் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருப்பேனோ என்னவோடா. ஒருநாள் கூட வாழாம, என்னைய மறக்கவும் முடியாம, செத்துப் போனவள, நான் மட்டும் எப்படிடா மறக்க முடியும்? இதுல, உங்க கடைசி சித்திக்கு எம்மேல பயங்கர கோபம். இன்னும் கூட எங்கிட்ட பேசாது. அதோட ஃப்ரென்ட் என்னால தான் செத்துப் போயிட்டாளாம். ஆனா, அவதான் என்னைய உசுரோட கொன்னு புதைச்சுட்டுப் போயிட்டாங்கறது தெரியல.” என ஆயாசமாக பெருமூச்சு விட்டார். 

இத்தனை வருடங்கள் கழித்தும், இந்த இடத்திற்கு வந்ததாலோ என்னவோ பழைய நினைவுகளில் மனம் புழுங்கி, உள்ளத்தில் உள்ளதை எல்லாம் மருமகனிடம் கொட்ட ஆரம்பித்தார். 

ஈஸ்வரனுக்கும் முழுதும் தெரியாது எனினும், அவ்வப்பொழுது பெரியவர்கள் பேசுவதையும், பேச்சியம்மா தன் அண்ணன் மகனின் வாழ்க்கை பட்டுப்போனதை நினைத்து புலம்புவதையும் சாடைமாடையாகக் கேட்டிருக்கிறான். 

“நாங்களும் மனசுல ஒருத்திய நெனச்சுட்டா மாற மாட்டோம் மாமா. என்ன… இப்ப இருக்குற ஜெனரேஷன் கொஞ்சம் நடைமுறை எதார்த்தம் பாக்குறோம் மாமா. உங்க ஜெனரேஷன் மாதிரி எமோஷனலா அரெஸ்ட் ஆகுறது இல்ல.”

“எமோஷன் ஆகாமத்தான், ஆசிட் அடிக்கிறீங்களாடா? ஆமா… எமோஷனே இல்லாம எப்படிடா லவ் பண்ணுவீங்க. அப்படி பண்ணினா அதுக்கு பேரு, ஒப்பந்தம் டா. காதல் சக்ஸஸ் ஆச்சுனா கல்யாணம் பண்ணுவோம். இல்லைனா பிரிஞ்சுறுவோம்கற மனசளவுல ஒரு மியுட்சுவல் அக்ரிமென்ட்டோட தானே இப்ப எல்லாம் லவ்வே பண்றீங்க. செட் ஆச்சுனா வச்சுக்குவோம். இல்லைனா ரிட்டர்ன்ல போட்டுறுவோம்கற ஆன்லைன் ஷாப்பிங் மாதிரி ஆகிப்போச்சு டா உங்க லவ் எல்லாம்.” என நிகழ்கால நிதர்சனத்தை மாமன் பேச,

“மாமா… அந்தக்கால காதலா? இந்தக்கால காதலானு, நீயா? நானா? டாபிக்கெல்லாம் நமக்கு வேண்டாம். வாங்க போகலாம். அங்க தூங்காம உக்காந்து இருப்பாங்க… அம்மாச்சியும், உங்க செல்ல்ல்ல்லப் பொண்ணும்.” என நக்கலாகக் கூறினான்.

“அம்மாச்சி தூங்கலைனு கவலையா. இல்ல, என் செல்லப்பொண்ணு‌ தூங்கலைனு கவலையாடா?”

“உங்க மக தூங்கலைனா நீங்க தான்‌ கவலைப்படணும். நான் எதுக்கு கவலைப்படணும்.” என விட்டேத்தியாக பதில் கூற,

“பாம்பின் கால் பாம்பறியும்டா மாப்ள! உன் கண்ணு போற போக்கு மத்தவங்களுக்கு வேணும்னா‌ புரியாம இருக்கலாம். நானும் ஒரு பொண்ண லவ் பண்ணவன் தான்டா.” என மருமகனை உற்றுப் பார்த்து, நோட்டம் விட்டார்.

“உங்களுக்காவது சாதி குறுக்க நின்னுச்சு. எனக்கு குடும்பமே குறுக்க நிக்கும். மறுபடியும் ஒரு பிரச்சினைய கிளப்ப விரும்பல மாமா.” என்றவன் பேச்சு, என்னமோ தனக்கு எதிலும் விருப்பம் இல்லை என்பது போல், பட்டும் படாமலும் இருக்க,

“நீ சொல்றதும் சரித்தான்டா. உனக்கு எதுக்கு வீண் பிரச்சினை. இப்ப கூட ரெண்டுமூனு‌ சம்பந்தம் வந்திருக்கு. ஏதாவது நல்லபடியா அமையும்டா. அதுக்கு தான் கோவிலுக்கு வந்ததே.” என அவரும் உனக்கு நான் விட்டவன் இல்லை எனும் விதமாக, பிடிகொடுக்காமல் பேச,

“என்ன மாமா!! பட்டுனு ஜகா வாங்கிட்டீங்க!!” என்றான் வேகமாக.

“வேற என்னடா பண்ணச்சொல்ற?”

“சின்னப்பிள்ளைல ஊருக்க வர்றப்ப எல்லாம் எம்பொண்ணு உனக்குத் தான்டானு சொல்லிட்டு,‌ தடால்னு இப்படி மாத்தி பேசுறீங்களே?”

“நீ தான் பிரச்சினை வேண்டாம்னு ஒதுங்குற ஆளாச்சே. எதார்த்தம் பாக்குறவன். உனக்கு எதுக்கு வீண் வம்பு?”

“மாமா! பொண்ணு எனக்கு தான்னு முடிவு பண்ணிட்டா, நீங்க ஏழுகடல், ஏழுமலை தாண்டி கொண்டு போய் வச்சாலும், எப்படியாவது வந்து தூக்குவோம்.”

“இப்ப சொன்னீயே… இது ஆம்பளைக்கு அழகு. அதவிட்டுட்டு,‌ பிரச்சினை வரும்னு பம்முறவனுக்கு, வலிய வந்து பொண்ணு கொடுக்க சொல்றியா?”

“நான் மாப்பிள்ளை கெத்து காமிச்சா, எம்பொண்ணு உனக்கு தான்டானு சொல்லுவீங்கேனு நெனச்சே. உடனே துண்ட உதறி தோள்ல போட்ட மாதிரி பேசுறீங்களே?” என மாமனிடம் உரிமையாக சலுகை காட்டினான்.

“டேய் மாப்ளே! மாடு எளச்சாலும் கொம்பு எளைக்காதுடா. என்னதான் நீ அக்கா மகனா இருந்தாலும், வலிய வந்து பொண்ணு தரமாட்டோம். அந்தக் காலத்திலேயே எங்க அத்தைய, நடையா நடக்க வச்சுத்தான் எங்க சித்தப்பா, உங்க அப்பாவுக்கே பொண்ணு கொடுத்தாரு. அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சதாலதான். அது மாதிரி வெத்தலபாக்கு தட்டு தூக்கிட்டு வா. பொண்ணு உனக்கு தான்‌. அதுக்கு நான் பொறுப்பு.” 

“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. நான் பொண்ணு கேட்டு வந்தா, பெரிய மாமா தந்துட்டு தான் மறு வேல பாப்பாரு பாருங்க.”

“கேக்குற விதத்துல கேக்கணும் டா. என்னால பிரிஞ்ச குடும்பம். உன்னால தான்டா ஒன்னு சேரணும். அதுக்கு உங்க கல்யாணத்த தான் நம்பி இருக்கேன் மாப்ள.” என தனது எதிர்பார்ப்பை மருமகனிடம் வெளிப்படுத்தியவர்,

“அதுக்கு நீ உறுதி கொடுத்தா தான் மாப்ள, நான் துணிஞ்சு எறங்க முடியும். சிவாவ உண்மையிலேயே உனக்கு புடிச்சிருக்கா. ஏன்னா… கல்யாணத்துல ஜாதகப் பொருத்தத்தை விட மனப்பொருத்தம் ரொம்ப முக்கியம்டா.”

“அவ, என்னோட சிவா மாமா.” என ஒற்றை வரியில் உள்ளத்தில் உள்ளதை ஒழிக்காமல் பட்டென கூறியவன் முகத்தில் அப்படியொரு மிளிர்வு. குரலில் அப்படியொரு கனிவு. நிலவொளியிலும் நன்கு தெரிந்தது மாமனுக்கு.

“ஆனா, சின்னது மாதிரி இவ சூட்டிகையா இல்ல மாமா. ஏதொன்னுக்கும் ரொம்ப யோசிக்கிறா.” என அலுத்துக் கொண்டான்

“பார்றா… ரெண்டு நாள்ல அந்த அளவுக்கு நோட்டம் விட்டுருக்க.” என சிரித்தார்.

“நீங்க எல்லாரும் திருவிழாவுக்கு வர்றீங்கனு தெரிஞ்சதும், அப்பாவ சரிக்கட்டி வர்றதுக்குள்ள நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும். வந்த வேலைய ஒழுங்கா பாக்க வேண்டாமா?” 

“அப்ப… சோழியன் குடுமி சும்மா ஆடல. கணக்கு வழக்கு பாக்க நீ வரல? மாமன் மகள கணக்குப் பண்ண வந்துருக்க.” 

“ஆமா… மாமன் மகள கணக்கு பண்ணிட்டாலும். எப்ப பாரு உர்ருனு மொறச்சுக்கிட்டே பாக்குறா. சின்னது மாதிரி கலகலனு பேச மாட்டேங்குறா.” என மாமன் மகளின் கடைக்கண் பார்வை கிடைக்காத ஆதங்கம் அவனது பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“சின்ன பிள்ளையிலிருந்தே சிவா அப்படித் தான்டா. சிறுசுக ரெண்டும் பொறக்கவும், எங்கூடயும் அம்மாகூடயுமே ஒட்டிக்கிச்சு. ரொம்ப செல்லம் கொடுத்தே இப்படி ஆகிப்போச்சுடா. எது வேணும்னே வாய்விட்டு கேக்காது. நாமலா பாத்து தான் செய்யணும். ஆனா, சின்ன வயசுல ஊருக்கு வரும்போது உங்கிட்டதானே எதுனாலும் வந்து கேக்கும். அப்பவே நீ தான் சிவாவுக்கு சரியான ஆளுன்னு தோணுச்சு டா.”   

“அப்பவும், இப்பவும்,‌ எப்பவும் அவளுக்கு நான் தான், எனக்கு அவதான் மாமா. அதுல எந்த மாற்றமும் இல்ல. யாருக்காகவும், எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அவள விட்டுக் கொடுக்க மாட்டேன் மாமா.” என்றவன் பேச்சில் அத்தனை உரிமையும், உறுதியும். 

“உன்னைய யார்றா விட்டு கொடுக்க சொன்னது. உன் முறைப்பெண். உன் உரிமை.” என பேசி சிரித்துக் கொண்டே எழுந்து வரப்பில், கைபேசி டார்ச் ஒலியில் நடக்க ஆரம்பித்தனர். 

வீடுவரை வந்தவன், வாசலில் சிறிது நேரம் நின்று பேசிவிட்டு செல்ல, முத்துவேல் உள்ளே வந்தார். 

அப்பத்தாவிற்கு தைரியம் சொல்லிவிட்டு, மாத்திரையை கொடுத்து தூங்க அனுப்பியவள், மாடிக்கு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நிற்பதை கவனித்தவளுக்கு, குடும்பங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை எனினும், மாமனும் மருமகனும் தொடர்பில் இருப்பதாகப்பட்டது.

மாமனை உள்ளே அனுப்பி விட்டு நடக்க எத்தனித்தவன் ஒரு கணம் நிதானித்தான். தரையில் விழுந்திருந்த நிழலைப் பார்த்து, நிமிர்ந்து மேலே பார்த்தான்.

நிலவொளியின் பின்னணியில்… நிழல் ஓவியமாய், உப்பரிகை காரிகையாய் அவள் கைகளை கட்டிக்கொண்டு நிற்பது தெரிந்தது. 

இவன் பார்ப்பது தெரிந்தும் அவள் நகரவும் இல்லை. அவன்மீது வைத்த பார்வையை விலக்கவும் இல்லை. 

இறுமாப்பாய் ஒரு இளஞ்சிரிப்பை இதழில் ஏந்தி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான், அவளே அறியாமல் வஞ்சியை வசியம் செய்த வாலிபனாய். 

இருப்பது ஒரு மனது

இதுவரை அது எனது என்னைவிட்டு

மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை

கலைத்திட விரும்ப வில்லை

கனவுக்குள் கனவாய் என்னை

நானே கண்டேனே

எனக்கென்ன வேண்டும்

என்று ஒரு வாா்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று

என சொல்லும் நாளும் என்று

மலா்களை அள்ளி

வந்து மகிழ்வுடன் கையில்

தந்து மனதினை பகிா்ந்திடவே

ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன

என்று தவிக்குது நெஞ்சம்

இன்று நதியினில் இலை

என நான் தோய்ந்து செல்கின்றேன்…

அவள் மனம் அவளிடம் இல்லை என்பதை உணர முடியாமல், குடும்ப பகையும், ஏற்கனவே அத்தை மகளோடு திருமணம் முடிவு செய்யப்பட்டவன் என்ற அனுமானமும் அவளை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்தியது. 

           ***********************

சென்னை வந்த பிறகு சிவசங்கரிக்கும் சம்பந்தம் பேசி முடிவானது. நிச்சயதார்த்தத்தை ஊரில் வைத்துக் கொள்ளலாம் என அண்ணனிடம் முத்துவேல் கூறினார். 

ஊரார் முன், உரிமையைக் கூறி பெண் கேட்டால், மறுக்க முடியாது என சின்னமாமன், ஊரின் வழமையை மருமகனுக்கு யோசனையாகக் கூற, அதன் படியே அவனும் வந்து பெண் கேட்க, சக்திவேலால் மறுக்க முடியவில்லை. அவன் ஆசைப்பட்ட மாமன் மகளை கல்யாணம் கட்டினான். 

திருவிழா நினைவுகளோடு, வெகுநேரம் கழித்தே இருவரும் உறக்கத்திற்கு சென்றனர். 

விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தவளை ஈஸ்வரன் தான் எழுப்பினான். 

கண் விழித்தவள், முதலில் இருக்கும் இடம் புரியாமல் புருவம் சுருக்கினாள். ஈஸ்வரனைப் பார்த்ததும் தெளிவிற்கு வந்தாள்.

“சின்ன மாமாவும், பிரியாவும், ஸ்ரீ யும் வந்திருக்காங்க.” என்றான். 

அதைக் கேட்டு, அறக்க பறக்க எழுந்தவள், அப்படியே வெளியே செல்ல எத்தனிக்க, 

“ஹேய்ய்… இப்படியேவா வெளிய போகப்போற?” என்றான். 

‘ஏன்… எனக்கென்ன?’ என்று குனிந்து பார்த்தவளிடம், குளித்துவிட்டு போகுமாறு கூறினான்.

“ட்ரெஸ் வேணுமே?” என தயங்கி நிற்க,

“அதெல்லாம் சின்ன மாமா எடுத்துட்டு வந்துட்டாரு. இங்க இருக்கு பாரு.” என அவளது பேக்கை காட்டினான்.

“இத மொதல்ல சொல்ல வேண்டியது தானே?”

“எங்க சொல்ல விட்ட. வந்துருக்காங்கனு சொல்லி வாய மூடல, தூங்கின மூஞ்சியக் கூட கழுவாம, துள்ளிக்கிட்டு ஓடுற. என்னைய பாத்தா கூட இவ்வளவு ஆசையா ஓடி வருவியான்னு தெரியலியே.”

“நான் எதுக்கு ஓடி வரணும்? அதான் தெருவுக்கு நாலு வச்சுருக்கியே? அவளுக வருவாளுக. துள்ளிக்கிட்டு.” என பழிப்பு காட்டினாள்.

“எதே!! தெருவுக்கு நாலா!! என்னா…..து?” என இழுவையாய் அதிர்ச்சி ஆனான். 

“ம்ம்… முறைப்பொண்ணுக தான்.”

“அதச்சொல்லு மொதல்ல. நீ பாட்டுக்கு தெருவுக்கு நாலு வச்சிருக்கேன்னு மொட்டையா சொல்லிட்டுப் போனா, நான் எதைன்னு நெனைக்கிறது. ஐத்த மகன் இமேஜ் டேமேஜ் ஆகுதா இல்லியா?” 

“ரொம்பத்தான்.” என நொடித்துவிட்டு, உடை இருந்த பேக்கை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.