தித்திக்குதே எட்டு

 எட்டு

சக்திவேல் அதிர்ந்து நின்றது ஒரு சில நொடிகள் தான்… ஆனாலும் அவனது வாழ்நாளில் இப்படி ஒரு அதிர்வை அவன் சந்திக்கவில்லை… இத்தனை காலமாக கௌரவமாக தங்கள் வீட்டு பெண்களை சக்தியை நம்பி வேனில் அனுப்பி வைக்கலாம் என்று அந்த சுற்றுவட்டாரத்தில் நம்பிக்கையைசம்பாதித்தவனை ஒரே நொடியில் தலைகீழாக நினைக்க வைத்துவிட்டாளே என்ற கோபம் அவனது மனதில் சுனாமியாய் எழுந்தது… ஆனால் நந்தினி அவன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தையே கொடுக்கவில்லை.

“ஒரு நிமிஷம் இரும்மா… அவளை பேசுவதிலிருந்து தடுக்க முற்பட… அதற்கு அவள் செவி சாய்க்கவே இல்லை… மீண்டும் அவளை கோபமாக இடையிட.

“ப்ளீஸ் சக்தி… இன்னும் இந்த விஷயத்தை எல்லாம் நாமமறைச்சு வெச்சு பேச கூடாது… என்று தயங்காமல் கூறியவளை முறைத்தான் சக்திவேல்.

அப்படி என்ன இருக்கிறது இருவரிடையில் என்று அவனுக்கு இன்னமும் புரியவில்லை… எதை சொல்ல வருகிறாள் என்பது கூட சக்திவேலுடைய சிறிய மூளைக்கு எட்டவில்லை… ஆனால் அவளோ தன் தந்தையை நோக்கி.

“அப்பா… இவங்களை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது… முதன்முறையாக தந்தைக்கு எதிராக அவரை எதிர்த்து வாதாடி கொண்டிருந்தாள்… அதுவரையில் அதிர்ச்சியில் பேச முடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்த வேலுச்சாமி… ரவுத்திரமாக முன்னே வந்தார்.

“என்ன சொன்ன… இந்த அநாதை பயலை தான் கல்யாணம் பண்ணிக்குவியா? சனியனே… முளைச்சு மூணு இலை விடலை… அதுக்குள்ளே ஆம்பிளைய தனியா தேடிக்கிறியா?” பளாரென அவளை அறைய நிலைகுலைந்து சுழற்றியடித்து கீழே விழுந்தாள்.

. கால்கள் வேரோடி போன சக்திவேலுக்கு நடப்பதை பார்க்க முடிந்தாலும் அவன் வார்த்தைகளுக்கு தவித்து கொண்டிருந்தான்… மூளை அந்த அளவு வேலைநிறுத்தம் செய்திருந்தது… கீழே விழுந்தவளோ சற்றும் அசராமல்.

“ஆமா நீங்க எவ்வளவு அடிச்சாலும் என்னோட பதில் ஒன்னு தான்… இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… தீவிரமாக கூறியவளை… வெறி பிடித்தார் போல பார்த்தார் வேலுச்சாமி… அவளது முடியை கொத்தாக பற்றியவர் அப்படியே இழுத்து தூக்கினார்… நந்தினிக்கு வலி உயிர் போகும் போல இருந்தது… அவளது அன்னை செல்வி பதறியடித்து கொண்டு வந்தார்.

“ஏங்க புள்ளைய விட்டுடுங்க… நான் சொல்ற விதமா சொல்லி அவளை வழிக்கு கொண்டு வந்துடறேன்… வேணாங்க… இத்தனை பேரையும் வெச்சுகிட்டு மாப்பிள்ளை வீட்டையும் வெச்சுக்கிட்டு இப்படி அசிங்கபடுத்தாதீங்க… வேலுச்சாமியின் காலில் விழாத குறையாக கெஞ்ச.

“இவளை இப்படி எல்லார் முன்னாடியும் வெச்சு தோலை உறிச்சாத்தான் இவளுக்கு அறிவு வரும்… ஊருக்கெல்லாம் நியாயம் சொன்னவன்டி நான்… என் முன்னாடியே இந்தளவுக்கு பேச எவ்வளவு துணிச்சல் இருக்கணும் இந்த நாயிக்கு… கண்கள் சிவக்க நந்தினியை பார்த்து கொண்டு பேச.

“நந்தினி… வேணாம் நந்தினி… அந்த பையனை வேணாம்ன்னு சொல்லிடு… உன்னை கெஞ்சி கேக்கறேண்டி… எனக்கு நீ ஒத்தை புள்ளைடி… அவளிடம் கெஞ்சினார் செல்வி.

“அம்மா… இல்லம்மா… என்னால முடியாது… நான் அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… அவளது தலைமுடி தந்தையிடம் இருக்க… தலையை பிடித்து கொண்டு வலியில் ஹீனமாக கூறியவளை இன்னும் வெறியோடு பார்த்தார் வேலுச்சாமி.

அவளது முடியை கொத்தாக பற்றியவாறே இழுத்து கொண்டு கல் சுவரை நோக்கி போனவரின் நோக்கம் புரிந்து செல்வி ஐயோவென கத்த… பதறிய சக்திவேல்… வேலுச்சாமியை நோக்கி ஓடினான்.

அந்த கல் சுவற்றில் வேகமாக அவளது தலையை மோத போனவரை பிடித்து தள்ள… நந்தினியை விட்டு சற்று தள்ளி போய் விழுந்தார்… நிலைதடுமாறி கீழே விழ போன நந்தினியை இறுக்கி பிடித்தான்.

திரும்பி சக்திவேலை பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன… உனக்கு இது தேவையா என்று என்று அவன் கண்களால் கேட்க… அவளது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டது.

“வேலுச்சாமி… எதுக்குய்யா பொண்ணை அடிக்கற… இதோ இந்த அநாதை பயலை அடிச்சு கொல்லனும்… பொண்ணு மனசை கலைச்சு இந்தளவு பேச சொல்லி கொடுத்தது இவனாத்தான் இருப்பான்… அங்கிருந்த இன்னொருவர் சவுண்டு விட… அவளை நிலைநிறுத்திய சக்திவேல்… ரவுத்திரமாக திரும்பினான்.

“வாங்கய்யா வாங்க… எவனுக்கு என் மேல கைய்ய வைக்கிற துணிச்சல் இருக்கோ என் முன்னாடி வாங்க… நீங்களா நானான்னு ஒரு கை பார்த்துடலாம்… என்று கூட்டத்தினரை பார்த்து முஷ்டியை மடக்கியவன்… திரும்பி நிலைகுலைந்து கீழே விழுந்து கிடந்த வேலுச்சாமியை பார்த்து.

“யோவ்… இன்னும் ஒரு தடவை அந்த பொண்ணு மேல கைய்ய வெச்ச… அப்புறம் உனக்கு கை இருக்காது சொல்லிட்டேன்… உங்களுக்கு தான் அருவாள தூக்க தெரியும்ன்னு நினைக்காதீங்க… எனக்கும் தெரியும்… காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணை வெஷம் வெச்சு கொன்ன பேடிபசங்க தானேய்யா நீங்கள்லாம்… உனக்கே இந்த வெறி இருக்கும் போது… எவனோட காசுலையும் உடம்பை வளர்த்தாத எனக்கு எவ்வளவு இருக்கும்… இன்னொரு அடி அந்த பொண்ணு மேல விழுந்துது… ஒரு பய வீடு போய் சேர மாட்டீங்க… ருத்திர தாண்டவம் ஆடியவனை பார்த்து விக்கித்து நின்றது அந்த கூட்டம்.

“டேய்… என்ன சவுண்டு ஓவரா இருக்கு… நாங்க நினைச்சா ஒரே நிமிஷத்துல உன் சோழிய முடிச்சு காவேரில வீசிட்டு போயிருவோம்… அடிச்சு போட்டா கேக்க யாருமில்லாத அநாதை நாயி நீ… இவ்வளவு பேசும் போது… ஒரு ஆத்தா அப்பனுக்கு பொறந்த எங்களுக்கு எவ்வளவு இருக்கும்… அந்த மனிதன் சக்திவேலை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்த… சக்திவேல் கோபத்தில் அவனை நோக்கி பாய போக… நந்தினி அவசரமாக தடுத்து நிறுத்தினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க… என்று தனது முடியை முடிந்தவள்… பேசிய அந்த மனிதனை நோக்கி.

“யாருங்க ஆத்தா அப்பன் தெரியாதவங்க? நீங்க ஒரு ஆத்தா அப்பனுக்கு பொறந்து இருப்பீங்களான்னு எனக்கு தெரியாது… ஆனா தெருவுக்கு நாலு வப்பாட்டி வெச்சுருக்க நீங்கள்லாம் ஒசந்தவங்க… இன்னொரு பொண்ணு முகத்த கூட நிமிர்ந்து பார்க்காத சக்தி உங்களுக்கு தாழ்ந்தவங்களா? இருந்துட்டு போகுது… அதை பத்தி கவலைப்பட வேண்டியது நான் தான்… நீங்க இல்ல… நிமிர்ந்து நின்று தெளிவாக கூறியவள்… மாப்பிள்ளை வீட்டினரை நோக்கி போனவள்.

“சரிங்க… நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அவங்க வேண்டாம்ன்னு வந்துடறேன்… என்று கூறி நிறுத்தியவள்… சக்திவேலை திரும்பி பார்த்தாள்… ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டி துணைக்கழைத்தவள்… ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து… மனதில் சக்தியிடம் மன்னிப்பை வேண்டி.

“ஆனா நான் இப்போ மூணு மாசம்… என்னை கட்டிக்க நீங்க ரெடியா?” அந்த மாப்பிள்ளையை பார்த்து கேட்க… அங்கிருந்த அனைவரும் அரண்டு நின்றனர்.

சக்திவேலோ லட்சம் பகுதியாக உடைந்து விழுந்தான்… ஆயிரம் முறை இறந்து பிறந்தான்… இது என்ன மாதிரியான வார்த்தை என்றாவது இந்த பெண் உணர்ந்து பேசுகிறதா? விளையாட்டுத்தனம் இதிலுமா? இதை விட ஒரு அசிங்கம் தனக்கு இருக்க முடியுமா… தன்னை நம்பி கல்லூரிக்கு அனுப்பி வைத்த பெண்ணிடம் வரம்பு மீறுபவனா இந்த சக்திவேல்?

அந்த மனிதன் பேசிய வார்த்தைகள் செய்த காயத்தை விட… அந்த காயத்திற்கு மருந்திட முனைந்தவள் செய்த காயம்… அவனது உயிர் வரை சூறையாடியது… ஒரே நிமிடத்தில் அவளது பேச்சை இல்லையென்று மறுத்து விட முடியும்… ஆனால் அவனுக்காக தன்னை பணயம் வைத்து அந்த கௌரவர்களின் சபையில் சூதாடி கொண்டிருந்தவளின் தன்மை அவனை இழுத்து பிடித்தது… அவளின் நோக்கம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது தான்.

அவளது படிப்பு… அவளது கனவு!

இந்த சந்தர்ப்பத்தை அதற்காக உபயோகப்படுத்தி கொண்டாள் என்பது அவன் அறிந்தது தான்… ஆனாலும் அதற்காக இந்த அளவு பொய் சொல்ல முடியுமா? அதுவும் ஒரு பெண்ணால் இந்தளவு தன்னை கேவலப்படுத்தி கொள்ள முடியுமா?

உறைந்து நின்றவனின் மனதில் சூறாவளி அடிக்க… வேலுச்சாமி தலையில் கையை வைத்து அமர்ந்து இருந்தார்… செல்வியோ வாயடைத்து போய் அமர்ந்திருந்தார்.

நந்தினியை பொறுத்தவரையில் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை… அவளுக்கு அவளது படிப்பும் வேண்டும் அதோடு சக்தியும் வேண்டும்… சக்தியை திருமணம் செய்துகொண்டால் தனது படிப்புக்கு இடையூறு வராது என்று மட்டுமே நம்பினாள் அந்த பேதை… அதை விட அவள் கண்ட அவனது பல்வேறு புதிய முகங்கள் அவளை பேதலிக்க செய்ய… அவளால் சக்தியை விட்டு கொடுக்க முடியாமல் போனது.

அந்த சூழ்நிலையை அவளும் எதிர்பார்க்கவில்லை… நேற்று வரையில் அவளுக்கு அவன் மேல் காதல் வரவில்லை… நாள் பார்த்து கோள் பார்த்து வருவதல்ல காதல்… அன்று தோன்றிய அந்த உணர்வு, அவனை விட்டுவிடாமல் பற்றி கொள்ள சொன்ன மனம்… வேறு வழியில்லாமல் அந்த முரட்டு மனிதர்களின் வாயை அடைக்க அவள் அப்படியொரு பொய்யை கூறினாள்… பின்விளைவுகளை பற்றி பெரிதாக உணர்ந்தறியாத கவலைப்படாத சிறு பெண் என்று அவனுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தினாள்.

வெகு மெளனமாக இருந்தது அந்த கூட்டம்… சற்று நேரம் தீவிர யோசனையில் இருந்த அவளது தந்தை அமைதியாக எழுந்து… தனது மகளை பார்த்து.

“சரிம்மா… இந்த அளவு ஆனதுக்கு அப்புறம் எனக்கும் வேற வழி தெரியல… உனக்கும் இந்த பயலுக்குமே கல்யாணத்தை முடிச்சு வெச்சுடறேன்… என்று அவர் கூறியபோது… பளீரென மலர்ந்தது நந்தினியின் முகம்… சக்தி அதிர்ந்தாலும் நம்பாத தன்மையோடு அவரை பார்க்க.

“அப்பா… கண்ணீரோடு அவளது அன்னைக்கு அருகில் சென்றவள் அன்னையை அணைத்து கொண்டாள்… வேலுச்சாமியை வெறித்து பார்த்த செல்வி தன் மகளை இறுக்கி அணைத்து கொண்டார்… சக்திவேலையும் நந்தினியையும் பார்த்து.

“ஆமா… நல்ல நாள் பார்த்து நானே கல்யாணம் முடிச்சு அனுப்பி வைக்கிறேன்… அது வரைக்கும் பொறுமையா இருப்பியா நந்தினி… அவளை பார்த்து கைகளை குவித்து தொழுதவரை குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள் நந்தினி.

“என்னங்ப்பா இப்படி பேசறீங்க… நான் உங்க பொண்ணுப்பா… நா தழுதழுத்தவளை பார்த்து.

“இல்லம்மா நீ என் பொண்ணு இல்ல… இவனோட பொண்டாட்டி… என்னோட பொண்ணு இப்படி செஞ்சிருக்க மாட்டா… அவனை நம்பி அனுப்பி வெச்சதுக்கு எனக்கு என்னோட பொண்ணை இல்லாம பண்ணிட்டானே… தலையில் கை வைத்து அழுதவரை பார்க்க அவளால் முடியவில்லை… இந்த நிகழ்வுகளை பார்த்து கொண்டிருந்த சக்திக்கு எங்கோ இடறியது.

“சரி உள்ள போ… மிச்சத்தை காலைல பார்த்துக்கலாம். செல்வி… புள்ளைய உள்ள கூட்டிட்டு போ… என்று செல்வியிடம் கூறிவிட்டு அவரது உறவினர்களை பார்த்து.

“சரிப்பா எல்லாரும் கிளம்புங்க… நாளைக்கு மிச்சத்தை பேசிக்கலாம்… என்று முடித்து விட்டு எழ.

“ஒரு நிமிஷம்… சக்திவேல் அவர் முன்னே வந்தான்.

“என்ன… அவனை நேராக பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கேட்டவரை.

“நந்தினியை உங்க கிட்ட விட்டுட்டு போக முடியாது… ஒரே வரியில் கறாராக முடித்தான்… அருகில் நின்று கொண்டிருந்த நந்தினியின் அன்னை நிம்மதி பெருமூச்சோடு அவனை நன்றியாக பார்க்க… வேலுச்சாமியோ கோபம் கொப்பளிக்க அவனை பார்த்தார்.

“இப்போ வரைக்கும் அவ என் பொண்ணு தான்… அதை புரிஞ்சுக்கோ…கோபத்தில் வார்த்தைகளை மென்று துப்பியவரை பார்த்து.

“இப்போ தான் உங்க பொண்ணே இல்ல… என் பொண்டாட்டின்னு சொன்னீங்க…

“சொன்னா… அதுக்காக இப்போவே வாடா மருமகனேன்னு உன்னையும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?” இருவரது பேச்சும் நந்தினியின் மனதில் கிலியை பரவ செய்தது… தந்தை ஒப்பு கொண்டாரே… ஏன் சக்தி பிரச்சனை செய்கிறான் என்று கோபம் கூட வந்தது.

“நீங்க என்னை அழைக்க வேணாம்… நானும் உங்க வீட்ல எந்த காலத்துலையும் விருந்தாட வர மாட்டேன்… ஆனா இப்போ உங்க கிட்ட நந்தினியை விட முடியாது…

“என் பொண்ணை நான் வீட்ல வெச்சிக்க உன் கிட்ட எதுக்கு அனுமதி கேக்கணும்…?”

“சரி என் கிட்ட கேக்க வேணாம்… இன்னும் அஞ்சு நிமிஷத்துல போலீஸ் வந்துடும்… அவங்க கிட்ட கேட்டுக்கங்க… என்றுவேண்டுமென்றேஅவர்களை மிரட்டுவதற்கு கூற… வேலுச்சாமியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“நீங்க உங்க பொண்ணை ஏமாத்த முடியும்… என்னை முடியாது… அந்த புனிதா பொண்ணு விஷயம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா… இப்போ நந்தினியை விட்டுட்டு போனா நாளைக்கு அவளும் வயித்து வலியால வெஷத்தை குடிச்சதா ஒரு கதைய சொல்வீங்க… என்கிட்டே குத்தாதீங்க… காது! படு கோபமாக கூறினாலும் அதுதான் உண்மைஎன்பதால் வேலுச்சாமிக்கு ரத்தம் கொதித்தது.

அதுவரை அவர் காப்பாற்றி வந்த கௌரவத்தை, தனது சாதி சனத்தின் முன் நியாயம் பேசுபவராக இருந்து வந்த தன் பிம்பத்தை உடைக்க வந்தவனாக தெரிந்த அவனை முழுவதுமாக வெறுத்தார்… எரித்து விடுவதை போல பார்த்து.

“அவ என் பொண்ணு… வீட்ல வெச்சிருப்பேன் இல்ல உயிரோட வெட்டி போடுவேன்… அது என் இஷ்டம்… உனக்கென்ன… உன்னை விட்டு வெச்சுருக்க திமிர்ல பேசறியா? உன்னையெல்லாம் வெட்டி பொலி போட்டாதான்டா என் ஆத்திரம் அடங்கும்…

கடுங்கோபத்தில் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் பேச… நந்தினி தன் அன்னையை ஆற்றாமையோடு பார்த்தாள்… அவர் கண்ணீரை துடைத்து கொண்டே அவளுக்கு மட்டுமே கேட்பது போல.

“எனக்கு நீ ஒத்தை பொண்ணுடி… பேசாம அவன் கூட இப்போ போய்டு… கண்ணீரோடு கூறிய அன்னையை கசப்பாக பார்த்தாள் நந்தினி… அவர் கூறிய அந்த ஒற்றை பெண் என்கிற வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு அப்போது விளங்கியது.

“மா… உன்னோட ஆசீர்வாதம் மட்டும் எனக்கு போதும்மா… என்று அவரிடம் மெல்லிய குரலில் அவள் கூற.

“எங்க இருந்தாலும் நீ உசுரோட இருந்தா போதும் நந்து… என்று அவர் கண்ணீர் விட… நந்தினிக்கு அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டது.

“உங்களுக்கு மட்டும் தான் வெட்ட தெரியுமா? ஏன் எனக்கு தெரியாதா?... போலீஸ் வந்துட்டு இருக்கு… அவங்க கிட்ட எழுதி கொடுத்துடுங்க… நந்தினிக்கு ஏதாவது ஒண்ணுன்னா அதுக்கு முழு காரணமும் அவளுடைய தகப்பனாராகிய நானேன்னு எழுதி கொடுங்க… நான் பேசாம போய்டறேன்… அதை விட்டுட்டு என் கிட்ட பூச்சி காட்டிகிட்டு இருந்தீங்கன்னா நானும் சும்மா இருக்க மாட்டேன்…

தன் எதிரில் நின்று சிறிதும் பயமில்லாமல் அவரையே மிரட்டி கொண்டிருந்த சக்தி அவருக்கு மிக பெரிய எதிரியாக தோன்றினான்! ஆனால் போலீஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவரை சூழ்ந்தது… புனிதாவின் பெயரை இழுத்து, போலீஸ் வருகிறது என்றதும் கூட்டத்தில் இருந்த ஒருவரொவராக தாங்கள் அதில் மாட்டிகொள்வோமோ என்று பயந்து ஜகா வாங்கி கொள்ள… அவரது குரலுக்கு ஆதரவு தெரிவிக்க ஆட்களும் குறைவாக இருக்க… ஆதரவற்றவராக தரையில் பொத்தென அமர்ந்தார்.

தனது தந்தையை வெறித்து பார்த்த நந்தினி எதுவும் பேசாமல் மெளனமாக சக்திவேலின் வேனில் ஏற… அங்கிருந்தவர்களை வெறுப்பாக பார்த்தவன்… வேனில் அமர்ந்து ஒரு கணம் சிந்தித்து… தீர்க்கமான முடிவை எடுத்தவன்… வாகனத்தை உயிர்ப்பித்தான்!

நந்தினியின் மேல் மலையளவு கோபமிருக்க… அவளது உயிரை காப்பாற்ற வேண்டி மட்டும் அவளை அழைத்து கொண்டு… பயணத்தை துவங்கினான்!

வாழ்க்கை பயணத்தையும்!