தித்திக்குதே 7

 ஏழு

கழுத்தில் அணிந்திருந்த மாலையை பயபக்தியோடு கழட்டியவன் அதே பக்தியோடு டேஷ் போர்டை திறந்து உள்ளே வைத்தான்… செல்லும் இடம் மருத்துவமனை… கொண்டு செல்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதே சமயத்தில் தனது பக்தி உணர்விற்கும் நெருடல் நேர்ந்து விட கூடாது என்று இது போன்ற வேளைகளை சந்திக்கும் போது அவன் மாலையை கழட்டிவிடுவான்.

எப்போதும் போல அரசு பொது மருத்துவமனை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது… வேனை மின்னல் வேகத்தில் அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு போய் நிறுத்தியவன்… வேகமாக இறங்கி… அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களிடம் ஸ்டெச்சரை எடுத்து வர செய்தான்.

வேனில் அமர்ந்திருந்த நந்தினிக்கு வியர்த்து கொட்டியது… என்னதான் தைரியமான பெண் என்றாலும் இது போன்ற சூழ்நிலைகளை அவள் இதுவரை எதிர்கொண்டதில்லை… பாதுகாப்பாக கூட்டில் வைத்து வளர்க்கப்பட்டவள்.

உதவிக்கு வந்த இருவரும் சக்திவேலுடன் உள்ளுக்குள் சென்றிருக்க… திடீரென அடிபட்ட ஒரு பெண் வித்தியாசமான ஒலியோடு உடலை முறுக்கினாள்… நந்தினிக்கு அதை கண்டவுடன் நடுங்க ஆரம்பித்தது.

அவசரமாக வேனை விட்டு கீழிறங்கி அவசர சிகிச்சை பிரிவை நோக்கி வேகமாக நடந்தாள்… அந்த வழியாகத்தானே சக்திவேல் சென்றதும் என்ற நினைவில் செல்ல… அவனே எதிர்கொண்டு வந்தான்… ஸ்டச்சரோடு!

“என்னம்மா… பதட்டமாக கேட்டவனிடம்

“இல்ல… அந்த பொண்ணு ஏதோ ஒரு மாதிரி பண்ணுச்சு… பயமா இருந்துச்சு… அதான் உங்களை தேடி வந்தேன்… அவனோடு அவசரமாக ஓடி கொண்டே அவள் கூற.

“சரி ஒரு நிமிஷம் வெயிட் பண்ணும்மா… இவங்களை அட்மிட் பண்ணிட்டு உன்னை அனுப்பறேன்… இந்த டென்ஷன்ல உன்னை இறக்கி விட மறந்து போச்சு…

“ஹய்யோ பரவால்ல… இது ரொம்ப முக்கியம்… என்று அவசரமாக கூறியவளை ஒரு நிமிடம் திரும்பி பார்த்து புன்னகைத்தான்!

வாகனத்தின் அருகில் கொண்டு சென்று மற்றவர்கள் உதவியுடன் ஒவ்வொருவரையாக இறக்கி உள்ளே அழைத்து போக… ஒருவாறாக அட்மிட் செய்துவிட்டு அங்கிருந்த சேரில் ஒரு பெருமூச்சோடு அமர்ந்தான்… உடன் துணைக்கு வந்த அந்த கல்லூரி இளைஞர்களை பார்த்து.

“ரொம்ப தேங்க்ஸ் பிரதர்… என்று ஆசுவாசமாக கூற

“என்னண்ணா நீங்க… அவங்க உங்களுக்கு என்ன மட்டும் உறவா? நீங்களும் யோசிக்காம தானே இறங்கினீங்க… என்று அதில் ஒருவன் மனதார கூற

“இந்த எண்ணம் தான் முக்கியம்… ரோட்டுல யாராச்சும் அடிபட்டு கிடந்தா நமக்கென்னன்னு போய்டாம… இந்த மாதிரி ஹெல்ப் பண்ணினா தான் சப்போஸ் நாளைக்கு நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா மத்தவன் வருவான்… அப்படியே வரலைன்னாலும் இதுல நமக்கு கிடைக்கற மன நிறைவே போதும்பா… என்று கூற… அவர்களும் தலையசைத்து ஆமென்றனர்!

“ஆமாம்ணா… ஆனா நம்ம சனங்களுக்கு ஒன்னு நூத்தியெட்டு வரணும் இல்லைன்னா போலீஸ் வரணும்… அதுக்குள்ளே அடிபட்டவங்களுக்கு உசுரே போய்டலாம்… ஆனாலும் திருந்த மாட்டேங்கறாங்க… ஒருவன் குறைபட

“அவங்களை சொல்லியும் தப்பில்லை பிரதர்… போலிஸ் வந்து சாட்சிய கலைச்சுட்டீங்க அதை பண்ணிட்டீங்க இதை பண்ணிட்டீங்கன்னு நெம்பி எடுத்துடுவாங்க… அந்த பயம் தான் காரணம்… எங்களை மாதிரி டிரைவர்ஸ் நிறைய பேருக்கு ப்ரோசீஜர் ஓரளவு தெரியும்… அதனால நாங்கல்லாம் துணிஞ்சு இறங்கிடுவோம்… சரி அவங்களோட செல்போன் எங்க?” அவர்கள் இருவரையும் பார்த்து கேட்க அதுவரை அமைதியாக அவர்களை பார்த்து கொண்டிருந்த நந்தினி தன்னிடம் இருந்த அந்த கைபேசியை அவனிடம் கொடுத்தாள்.

“அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டியா?” கைபேசியை ஆராய்ந்தபடி அவன் கேட்க… அவளுக்கு அப்போதுதான் அது தோன்றியது… நாம் அந்த வேலையை செய்திருக்கலாமோ என்று… அவளுக்கு தோன்றியிராததால் செய்யவில்லை… இல்லையென்று தலையசைத்தாள்!

அந்த கைபேசியில் அடிக்கடி அழைத்த எண்ணிற்கு அழைத்தவன்… விஷயத்தை கூற… அவர்கள் பதறியபடி வருவதாக கூறினர்! அவன் கைபேசியில் பேசியபடியிருக்க… உடன் இருந்த இருவரும் நந்தினியிடம் பேச முயன்று கொண்டிருந்தனர்!

“நீங்க எந்த இயர்?” அவர்களில் ஒருவன் கேட்க… அவனுக்கு பதில் சொல்வதா வேண்டாமா? என்று புரியாமல் விழித்தாள்.

“நீங்க என்ன மேஜர்?” என்று கேட்டு அவர்களது விவரங்களை அவர்கள் ஒப்புவிக்க… சக்திவேலை பரிதாப பார்வை பார்த்தாள்… அதற்குள் அவன் கைபேசியை வைத்துவிட்டு அவர்களை நோக்கி.

“பிரதர் அவங்க ரிலேடிவ்ஸ் வந்துடறாங்களாம்… நீங்க கிளம்பிக்கங்க… ஏதாவது என்குயரின்னாலும் நான் பார்த்துக்கறேன்… என்று கூறி அவர்களை அப்புறப்படுத்தினான்… அவர்கள் சென்ற ஐந்து நிமிடத்துக்கு உள்ளாக காவல் நிலையத்திலிருந்து விசாரணைக்கு வர… அனைத்தையும் முடித்து விட்டு வர இரவு எட்டாகியிருந்தது… அப்போதுதான் நந்தினியின் நினைவும் வந்தது.

“அட கடவுளே… இந்த பொண்ணை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னேனே… என்று உள்ளுக்குள் பதறியபடியே அவள் இருந்த இடத்திற்கு வர… அவள் சேரில் அமர்ந்த வாக்கில் உறங்கியிருந்தாள்.

திருமணபேச்சு நடந்து கொண்டிருக்கும் போது இப்படி தன்னுடன் சுற்றி கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்று அவனுக்கும் புரியாமல் இல்லை… அவளை மறந்துவிட்டு விபத்து விசாரணை வேலைகளுக்கு போனது தவறு என்று புத்தி இடித்துரைத்தது… ஆட்டோ பிடித்தாவது அனுப்பியிருக்கலாமே என்று தன்னை நொந்து கொண்டு அவளை எழுப்பினான்!

“நந்தினி… நந்தினி… முதல் முறையாக பெயரை கூறி மென்மையாக அழைக்க… உறக்கத்தில் இருந்து விழித்தவள் தனக்கு முன் இருந்த சக்திவேலை பார்த்து அரண்டு போனாள்… பின்னர் ஸ்மரணை வர… இருப்பது மருத்துவமனை என்ற உணர்வு வந்தது.

“ஐயோ… டைம் என்ன?” பதறிக்கொண்டு அவள் சக்திவேலிடம் கேட்க.

“சாரிம்மா… மணி எட்டாகிடுச்சு… விசாரிக்கறேன்னு இழுத்தடிச்சுட்டாங்க… உன்னையாவது அப்போவே எப்படியாவது அனுப்பியிருக்கணும்… சாரி… மனதார மன்னிப்பு கேட்க.

“ஹய்யோ பரவால்ல… என்று அவனுடனே வேனை நோக்கி நடந்தபடியே வாய் கூறினாலும்… காலையில் அன்னை ஆயிரம் முறை படித்து கூறியது நினைவுக்கு வந்தது.

“நந்து… சாயங்காலம் ஆறரை மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்ல வந்துடுவாங்க… எந்த காரணமும் சொல்லிட்டு லேட் பண்ணிடாத… ஒழுங்கா பர்ஸ்ட் டிரிப் வேன்ல வந்துடனும்… அவரது குரல் காதுகளில் ஒலிக்க… தனது தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்ற பயம் உள்ளுக்குள் சூழ்ந்தது.

அப்போதுதான் கவனித்தாள் சக்திவேலை… சட்டை முழுக்க ரத்தம் பட்டிருந்தது… அடிபட்டவர்களை தூக்கும் போது பட்ட ரத்தமாகத்தான் இருக்க வேண்டும்… ஆனாலும் அப்படி அவனை பார்க்க மனதின் ஒரு மூலையில் பிசைய… அவளது பார்வை செல்லும் இடத்தையும் அந்த கண்களின் பாவத்தையும் பார்த்தவன் பதில் ஒன்றும் கூறாமல் வேனின் பின்புற கதவை திறந்து அந்த டிஷர்ட்டை கழட்டிவிட்டு… அங்கு எப்போதும் இருக்கும் அவனது இன்னொரு டிஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டான்.

“என்ன ஓகே வா… டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு அவன் கேட்க… அதை கேட்டவளுக்கு புன்னகை மலர்ந்தது! ஆஹா தான் நினைத்ததை தான் கேட்கிறான்… அதே புன்னகையோடு தலையாட்ட.

“ கலெக்டரம்மாக்கு என்னாச்சுன்னு தெரியல… வாயே திறக்காம இருக்காங்க… சிரித்து கொண்டே அவன் கூற… அந்த புன்னகை மாறாமல் நந்தினி.

“ஈவினிங் மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தவங்க எந்த பொண்ணை பார்த்து இருப்பாங்கன்னு தெரியலை… அதான் பேசாம இருக்கேன்… என்று வெகு இயல்பாக கூற… திடுக்கிட்டு திரும்பினான்!

“என்னம்மா முதலிலேயே சொல்லி இருக்கலாம்ல… இப்போ என்ன பிரச்சனையாக போகுதோ தெரியலையே… என்று அவனது கைபேசியை எடுத்து பார்த்தவன்… வேலுச்சாமியிடம் இருந்து வந்திருந்த பத்து மிஸ்ட் கால்களை பார்த்து கலங்கி போனான்.

நந்தினியை காணாமல் அவளது வீட்டில் துடித்திருப்பார்களே… மற்ற நேரமாக இருந்தாலும் ஏதாவது சொல்லி சமாதானப்படுத்த முடியும்… பிரச்சனை சூழ்ந்த இந்த சமயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் நந்தினியை பார்த்தான்.

“என்ன… அப்பா கிட்ட இருந்து மிஸ்ட் காலா?” அதற்கும் இயல்பாக கேட்க.

“ம்ம்ம்ம்… என்ன சொல்றதுன்னு யோசிக்கறேன்… புருவத்தை நெரித்து கொண்டு யோசிக்க.

“ப்ச்… ஒன்னும் சொல்ல வேண்டாம்… நான் சமாளிச்சுக்கறேன்…

“எப்படி?”

“ம்ம்ம்… எப்படியோ… பார்க்க வந்த மாப்பிள்ளை மட்டும் ஓடியிருந்தா போதும்… என்று சிரிக்க… அது அவளது முட்டாள்தனமா சிறுபிள்ளைத்தனமா என்று வகைப்படுத்த முடியாமல் அவளை முறைத்தான்.

“இதுல எல்லாம் விளையாட கூடாதும்மா… கொஞ்சமாச்சும் மெச்சுர்ட்டா திங்க் பண்ணு… அவளுக்கு எடுத்து கூற

“ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கப்பா ஆரம்பிச்சுட்டாங்க… அவளது குறும்புத்தனம் எட்டி பார்த்தது! சரியான அறுந்த வாலு என்று மனதில் நினைத்து கொண்டு உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான்.

“சரி என் கல்யாணத்தை பத்தி இவ்ளோ கவலைப்படறீங்களே… உங்களுக்கு எப்போ கல்யாணம்? ஏதாவது பொண்ணு ரெடியா இருக்கா?” குறும்பாக கேட்பது போலவே அவளுக்கு தேவையான பதிலை பெற அவனிடம் தூண்டிலை வீச… பதில் வருவதற்குள் அவளது மனதில் திக் திக் என்ற பதட்டம் சூழ்ந்தது.

“ஹஹா கல்யாணமா… எனக்கா? பண்ணி வைக்க யாரிருக்கா?” இயல்பாக அவளிடம் கேட்டுவிட… அந்த கேள்வி அவளது மனதை பிசைந்தது… உனக்கு நானிருக்கிறேன் என்று அவனை அணைத்து கொள்ள மனம் துடிக்க… அவளது அந்த எண்ணபோக்கு அவளுக்கே பயத்தை தருவித்தது! மெளனமாக அவனை பார்க்க.

“ப்ச்… வெல்விஷர்ஸ்னா வெற்றி அண்ணன் மாதிரி அப்புறம் செந்தில் அதுக்கப்புறம் என்னை சுத்தி இருக்க நீங்க எல்லாம் தான் எனக்கு சொந்தம் பந்தம் எல்லாம்… என் வேன்ல வர்ற எல்லா பொண்ணுங்களுமே எனக்கு தங்கச்சி தான்மா…

அதுவரையில் அவளுடைய மனதை பிசைந்து கொண்டிருந்தவன்… கடைசியில் இடியை இறக்கி விட… நந்தினி அதிர்ந்து… நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்… அவளது காதல் கொண்டுவிட்ட மனம் அந்த நேரத்தில் சித்ராவை மறந்துவிட்டு… உனக்கு நான் தங்கை இல்லை என்று அரற்ற… அதே உணர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பார்க்கலாம்… நமக்குன்னு ஆண்டவன் என்ன எழுதி வச்சு இருக்கானோ… அது தானே நடக்கும்… என்று முடிக்க… நிமிர்ந்து அவனை நேராக பார்த்து

“நானும் உங்களுக்கு தங்கச்சியா?”

“ஏன் மா இப்படி கேட்கற?” புன்னகையோடு அவன் அவளிடம் கேட்டு கொண்டிருந்த போது வேன் வாங்கலை அடைந்திருந்தது… அவளது வீட்டை நோக்கி செலுத்தி கொண்டு அவன் கேட்க.

“இல்லை… அந்த நினைப்ப அழிச்சுடுங்க… உங்களை அண்ணான்னு கூப்பிட்டிருந்தாலும் நான் வாபஸ் வாங்கிக்கறேன்… ஒரு தீவிரத்தோடு அவள் கூற… சக்திவேலின் முகம் யோசனையாக சுருங்கியது.

“ஏன்…

“ஏன்னா எனக்கு உங்களை அண்ணான்னு கூப்பிட பிடிக்கல… வேகமாக தீவிரமாக கூறியவள்… அவனது இறுகி போன முகத்தை பார்த்து… மெலிதான குரலில் கூறினாள்.

“மாமான்னு கூப்பிடத்தான் பிடிச்சுருக்கு… என்று முடிக்க… சக்திவேல் அதிர்ந்தான்! அவனையும் அறியாமல் கால்கள் பிரேக்கை மிதிக்க… வேன் நின்ற இடம் நந்தினியின் வீடு!

அதிர்ந்த முகத்தோடு அவளை பார்த்தவன்… திரும்பி அவளது வீட்டை பார்க்க… அவனது முகம் இன்னும் அதிகமான அதிர்ச்சியை உள்வாங்கியது!

வீட்டின் முன் கூட்டம் கூடியிருக்க… அனைவரும் திரும்பி வேனை பார்த்து கொண்டிருந்தனர்.

“ஏன்பா புள்ளை வந்துடுச்சு போல இருக்கு… யாரோ ஒருவர் சப்தமாக கூற… அது அவன் வரையில் கேட்டது.

“இறங்கு முதல்ல… பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தவன்… தன்னால் நேர்ந்து விட்ட தவறுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என்ற நினைவில் யோசனையாக கீழே இறங்கினான்.

மெளனமாக கீழே இறங்கியவள்… சக்திவேல் முன்னே செல்ல அவனை பின்தொடர்ந்தாள் நந்தினி… கடுகு போட்டால் வெடிக்குமளவு வெப்பமாக நின்றுகொண்டிருந்தார் வேலுச்சாமி… அவருக்கு பின் அழுது களைத்த முகத்தோடு அவளது அன்னை நிற்க… அவளது பாட்டி விட்டால் எரித்து விடுவது இருவரையும் போல முறைத்து கொண்டிருக்க… மாப்பிள்ளை வீட்டினர் கூடத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

வேலுச்சாமியின் முன்னே சென்றவன்.

“மன்னிச்சிருங்க சார்… நந்தினி மேல தப்பு இல்ல… நான் தான்… என்று ஆரம்பிக்க.

“ஏன்டா தராதரம் தெரியாத நாயே… உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேட்குதா? அந்தளவு துளிர் விட்டு போச்சாடா உனக்கு…

அருகில் நின்ற அவர்களது உறவினரொருவர் ஆவேசமாக வந்து அவனது சட்டையை பிடிக்க… அதிகபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினான் சக்திவேல்.

அதுவரையில் ஒரு சிறிய தவறும் நேர்ந்து விடாமல் எந்த அளவு எச்சரிக்கையாக இருந்தானோ… அதற்கு நேர்மாறாக நிகழ்வுகள் தன் கையை மீறி கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அதே சமயம் அந்த மனிதர் கூறிய வார்த்தைகள் அவனது தன்மானத்தை சீண்டி விட… முரட்டுத்தனமாக அவரது கையை எடுத்து விட்டான்… அவன் மேல் தவறில்லையே… அவன் கெட்ட பெயரை வாங்குவதோடு… நந்தினியின் நிலையை நினைத்தால் அவர் பேசும் பேச்சால் என்ன வேண்டுமானாலும் நடந்து விட கூடிய சாத்தியம் தென்பட.

“யோவ்… கைய எடுய்யா… என்ன பேசிட்டு இருக்கும் போது மேல கைய வைக்கிற… சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்ல விட மாட்டியா நீ… அதே கோபத்தில் அவரிடம் மல்லுக்கு நின்றான்.

“என்னடா சொல்ல போற… சொரக்காயிக்கு உப்பில்லைன்னு சொல்ல போறியா? எங்க பொண்ணை மனசை கெடுத்து கூட்டிட்டு போனதுமில்லாம சட்டமா வந்து நின்னுட்டு பேசறியா?” அந்த மனிதனது ஆவேசம்… சக்திவேலை தூண்டிவிட.

“இப்படியே பேசிட்டு இருந்தன்னா தூக்கி போட்டு மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன்… எவன்ய்யா என்னை கேள்வி கேக்கறவன்?... என்ன உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயந்துக்குவேன்னு நினைச்சியா… தப்பு என் பேர்ல இருக்குன்னு தான் இவ்வளவு பொறுமையா பேசறேன்… உன் உருட்டல் மிரட்டல் எல்லாத்தையும் வேற எங்கயாச்சும் வெச்சுக்க… முஷ்டியை மடக்கி கொண்டு முன்னே வர… அதிர்ந்து இன்ற நந்தினி சுயஉணர்வு வர பெற்றாள்!

விட்டால் கைகலப்பாகி விட கூடிய சூழ்நிலை அவளுக்கு பயத்தை கொடுத்தது… ஆனால் அவளது இன்னொரு மனம் அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ள தூண்டியது.

சக்திவேலுக்கு பின்னால் நின்று கொண்டு நடப்பதை பயத்தோடு பார்த்து கொண்டிருந்தவள்… தைரியத்தை வரவழைத்து கொண்டு முன்னே சென்று அவனது முரட்டு கையேடு தன் கையை சேர்த்தாள்… சக்திவேல் அதிர்ந்து அவளை திரும்பி பார்க்க… அவளோ அவனை திரும்பியும் பார்க்காமல்.

“சித்தப்பா… என்ன பேசுறதுன்னாலும் என்னை பேசுங்க… இவங்களைமரியாதை குறைவா பேசாதீங்க… என்று அவளது குதித்து கொண்டிருந்த சித்தப்பாவிடம் கூறிவிட்டு… தன் பெற்றோரிடம் திரும்பி.

“நான் இவங்களை தாங்க்ப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்… மெலிதான ஆனால் உறுதியான குரலில் கூறினாள்!

அனைவரும் அதிரும் முன்னரே… உச்சபட்சமாக அதிர்ந்து நின்றான் சக்திவேல்!