தித்திக்கும் தீச்சுடரே – 1

தித்திக்கும் தீச்சுடரே – 1

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்,

 கதை நிகழ்காலம், கடந்த காலம் என்று எதைத் தொட்டுச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Disclaimer:

This is a work of fiction. All the names, characters, businesses, places, events and incidents in this story are imagination or used in a fictitious manner. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.

தித்திக்கும் தீச்சுடரே – 1

அதிகாலை மூன்றை மணி. அந்த இடமே விழா கோலம் பூண்டிருந்தது.  கூட்டம் என்று சொல்ல முடியாது. எறும்புகள் கூட நுழைய முடியாத ஜனக்கூட்டம் என்று சொல்லலாம். இல்லை… இல்லை, அந்த கூட்டத்தின் அளவை குறிக்க ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். அத்தனை மனிதர்கள்.

 அங்கு ஒரு உருவப்படம். அங்கு நின்று கொண்டிருந்த பெரும்பாலோரின் பார்வையும் அந்த உருவப்படத்தின் மீது தான் இருந்தது. மிக அழகான ஓர் இளைஞனின் உருவப்படம். அவன்  கை உயர்த்தி அசைப்பது போல் இருந்தது. அதன் மீது பால் குடம் குடமாக வழிந்து கொண்டிருந்தது. அந்த உருவப்படத்தில் மிக பெரிய மாலை தொங்கி கொண்டிருந்தது.

“முகிலன்…முகிலன்… முகிலன்…” என்று ஒரே ஆரவாரமாக இருந்தது.

“தலைவா… தலைவா… தலைவா…” என்ற கோஷம் அந்த இடத்தில இடி போல் முழங்கி கொண்டிருந்தது.

“தலைவா….” என்று ஓர் இளைஞன் புத்தி சுவாதீனம் இல்லாதவன் போல் சட்டையை கழற்றி சுற்றி கொண்டிருதான். அங்கு அவனைப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், சற்று நேரத்தில் அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தண்ணீர் குடிக்கும் விதத்தில் அவன் பைத்தியம் அல்ல, சினிமா பைத்தியம் என்று தெரிந்தது.

அந்த நெருக்கடியான கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டிருந்தாள் அவள். அவள் முகத்தை அசூயையாக சுளித்தாள்.

அவள் என்று சட்டென்று சொல்ல முடியாதபடி உடை அணிந்திருந்தாள். தொளதொளவென்று ஒரு முழு நீள சட்டை. அவள் அங்க வடிவின் அழகை அந்த உடை முழுதாக மறைந்திருந்தது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாள். கொஞ்சம் அழுக்கு தோய்ந்து இருப்பது போல் இருந்தாலும், கூர்ந்து பார்த்தால் இன்றைய நவீன உடை என்று தெரிந்து கொள்வது போல் இருந்தது.

தன் முடியை தூக்கி சொருகி தொப்பி அணிந்திருந்தாள். மொத்தத்தில் தான் பெண் என்று காட்டிக் கொள்ள விரும்பாத உடை.

‘மீரா’ அவள் தன் மனதிற்குள் சிடுசிடுத்துக் கொண்டாள். ‘இப்படி கூட்டத்தில் இந்த படம் பார்த்தே ஆகணுமா? நீ என்ன இந்த முகிலனுக்கு அப்படியொரு ரசிகையா?’ தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞன் மடமடவென்று “தலைவா… தலைவா…” என்று கத்திக்கொண்டு அந்த உருவப் படத்தின் மீது ஏறி அந்த உருவப்படத்தின் கன்னத்தில் முத்தமிட்டான்.

மீராவுக்கு முகம் அஷ்டகோணலாகிப் போனது. “லூசு பையனா இருப்பான் போல” முணுமுணுத்துக் கொண்டாள் மீரா.

அப்பொழுது அவன் மொந்தென்று கீழ விழ, அங்கு நின்று கொண்டிருந்த சிலர் அவனை பிடிக்க முயன்றனர். அவன், “தலைவா…. முகில் அண்ணா…” என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தான். அங்கு கூட்டம் சூழ்ந்தது.  அந்த இளைஞனை சுற்றி ஓர் கூட்டம் கூடியது.

சிலர் அவனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். சிலர், ‘ஐயோ இதனால் படம் பார்க்க முடியாமல் போய்டுமோ?’ என்று கவலை கொண்டனர். “மண்டையில் அடி. பிழைக்க மாட்டான்” அங்கிருந்த சிலர் முணுமுணுத்து கொண்டார்கள்.

‘படிக்குற வயசில் படிக்காம, இப்படி படம் பார்த்துக்கொண்டு அலையுற ஒருத்தன் இருந்தா என்ன? இல்லைனா என்ன? பூமியின் பாரத்தில் ஒன்னு குறைவு’ என்று தான் மீராவால் சிந்திக்க முடிந்தது. ‘இவனுக்கெல்லாம் அம்மா அப்பா இருக்காங்களா? இல்லையா? செவுட்டில் நாலு விட்டு இவனை எல்லாம் கண்டித்திருந்தா இவன் இப்படி கீழ விழுந்து கிடப்பானா?’ என்று அவன் பெற்றோரையும் சேர்த்து திட்டினாள்.

சிறிது நேரத்தில் திரையரங்கின் கதவுகள் திறக்கப்பட, கூட்டம் அடித்து பிடித்து உள்ளே நுழைந்தது.

சென்னையின் முக்கியமான இடத்தில் இருந்த திரையரங்கின் வாசல் இப்பொழுது அமைதியாக இருந்தது. ஆனால், திரையரங்கிற்குள் ஆட்டமும் பாட்டமும் சத்தமும் சவ்வை கிழித்து கொண்டு இருந்தது.

படம் முடிந்து வெளியே வந்தாள் மீரா. தலையை பிடித்துக் கொண்டாள். அருகே இருந்த உணவகத்திற்குள் சென்று சூடான இட்லியை தேங்காய் சட்னியோடும் சாம்பாரோடும் சாப்பிட்டாள். “சூடா, ஸ்ட்ராங்கா காபி” என்று அவள் கேட்க,  சில நிமிடங்களில் ஆவி பறக்க காபி வந்தது.

அதை நிதானமாக குடித்தாள். அவள் தலை வலி சற்று மட்டுப்பட்டது. பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்து அவள் பைக்கின் மீது ஏறி அமர்ந்து அதை ஓங்கி ஒரு மிதி மிதித்தாள். அவள் பைக் குதிரை போல் சீறி பாய்ந்தது.

*** **** ***

அதே நேரம் முகிலன்.

“நதி…” அவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து அவளை ரசித்து ஆழமான குரலில் அழைத்தான் முகிலன்.  அவன் அழைப்பில் அவள் தன்னையும் மறந்து அவன் தோளில் முகம் புதைத்து முணுமுணுத்தாள்.

அவன் அதரங்கள் அவளை அழைக்க, அவள் செவ்விதழ்கள் அவனை அழைக்க ஆசை கொண்ட அவன் கரங்கள் அவளை அணைத்து கொண்டது. அன்பு கொண்ட அவன் மனம் அவளை அரவணைத்து கொண்டது.

கனிவான அவன் முகத்தில் காதல் வழிய, அதில் அவள்  நனைய, “என்னடி பிரச்சனை உனக்கு?” அவன் அரவணைப்பில் அவள் மீதான அவன் கரங்களின் அழுத்தம் கூடியது.

அந்த தீண்டல் அவள் பிரச்சனையை சரி செய்து விடாதா? இல்லை அவள் பிரச்சனையை தாங்கியேனும் கொள்ளாதா? என்றும் விதமாக! அவன் குரல் அக்கறையையும் அன்பையும் மட்டுமே எதிரொலித்தது. அவன் முகத்தில் காதல்! காதல்! காதல்! மட்டுமே.

“எனக்கு என்ன பிரச்சனை? நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது” அவள் குரல் அவன் செவியோரமாக கிசுகிசுப்பாக ஒலித்தது. அவள் சுவாச காற்று அவனை தீண்டி அவன் மீதான உரிமையை காட்டியது. அவள் குரல் அவன் மீதான நம்பிக்கையை மட்டுமே தேக்கி கொண்டு ஒலித்தது.

அவள் தேகத் தீண்டலில், அவள் நம்பிக்கை கீற்றில் அவன் முகத்தில் புன்னகை கீற்று.

‘இவள் என்னவள்’ அவன் முகத்தில் பெருமிதம் மின்ன, அவன் கைகள் அவள் சுற்றி வளைக்க, அவன் முகத்தில் ஏமாற்றம். அவன் இன்னும் இறுக்க, அவன் கைகளுக்கு இடையில் பொசுங்கி கொண்டிருந்த தலையணை இன்னும் இன்னும் பொசுங்கியது.

அவன் தூக்கம் கலைந்தது. விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.  அவன் கண்களில் ரௌத்திரம். தன் கைகளை இறுக மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து தோற்றான்.

“யாரை நினைக்க கூடாதுன்னு நினைக்குறேனோ, அவ மூஞ்சியும் குரலும் திரும்ப திரும்ப தூக்கத்திலையும் கனவுலயும் நிஜத்துலையும் வந்து தொலைக்குது.” முணுமுணுத்தபடி,  அருகே இருந்த வேலைப்பாடு நிறைந்த கண்ணாடியால் ஆன அலங்கார பொருளை தூக்கி சுவரில் எறிந்தான்.

அது சுக்கு நூறாக தெறித்து விழுந்தது.

அவள் மீதான அவன் கோபமும் வெறியும் அடங்கவில்லை. அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். கண்ணாடி துகள்கள்  அவன் பாதங்களை பதம் பார்த்தது. அவன் கால்களில் இரத்தம் கசிந்தது.

பாதங்களின் வலி அவன் மனதை தொடவில்லை. மனதில் ஏற்பட்ட ரணம் அவனை வெகுவாக தாக்க, அதை தன் கைகளால் அழுத்தினான்.

‘நதி அங்கே இருக்கிறாள். அவளுக்கு வலிக்கும் ‘ அவன் மனம் துடிக்க, ‘வலிக்கட்டும்… நான் கொடுக்கும் வலியில் அவள் சாகட்டும்’  என்பது போல் அவன் கரங்கள் அவன்  நெஞ்சை அழுத்தி அவன் கண்கள் சோகத்தை காட்டியது.

எத்தனை நொடிகள்? எத்தனை நிமிடங்கள்? எத்தனை மணித்துளிகள் அவன் அவள் நினைவுகளில் சுழன்றானோ, அவனுக்கு தெரியவில்லை.

அவன் பெயரை அழைக்கும் சத்தத்தில் தன் முக பாவனையை சரி செய்து கொண்டு, தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

அவன் பாதங்களில் கசிய ஆரம்பித்த ரத்தத்தின் கரை நடக்கும் வீடெங்கும் பதிய ஆரம்பித்தது.

அங்கு  காவல் துறையினரை பார்த்து தன் கண்களை மூடி நிதானித்து கொண்டான். அதன் பின் தன் முதல் அடியை எடுத்து வைத்தான். ஸ்டைலாக மிக ஸ்டைலாக.

கம்பீரமான தன் நடையில் இன்னும் கம்பீரத்தை ஏற்றிக்கொண்டான்.

நிதானமாக அவர்கள் அருகே சென்றான்.  அதிர்ச்சியை மறைத்து, அவன் கண்கள் நிதானத்தை ஏந்தி கொண்டது.

காவல் துறை கூறிய செய்தியில், கிஞ்சித்தும் அசராமல்  “ஓ…” என்றான் அவன் சாதாரணமாக. அவன் தலையை ஆட்டிக்கொண்டு, கழுத்தை மெலிதாக அசைத்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

“கட்…” என்று அங்கு ஒரு சத்தம் எழ, அந்த காட்சி படப்பிடிப்பு அங்கு நிறுத்தப்பட்டது. அவன் முன்னே நகர்ந்து கொண்டிருந்த கேமரா சற்று தூரத்திற்கு நகர்த்தப்பட்டது. அவனுடன் நடித்த நடிகை பவ்யமாக விலகி நின்று கொண்டாள்.

“சூப்பர் சார்.  உங்க முக பாவனை செம்மையா வந்திருக்கு. கோபம், காதல், வருத்தம் இப்படி எல்லாம்…” அங்கு உள்ளவர்கள் பாராட்ட, அவன் மெல்லிய புன்சிரிப்போடு  மரியாதையாக தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டு  அங்கிருந்து விலகி வந்தான்.

அவன் மேலாளர் அவனை தொடர்ந்து வர, “இன்னைக்கு ரீலிஸ் ஆன படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கு?” என்று அவன் மேலாளருக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக கேட்டான்.

“சார்…  ஃபென்ஸ் ரொம்ப ஹாப்பி” அவன் இழுக்க, “நம்ம ஃபென்ஸ் எப்பவும் ஹாப்பி தான். பொது மக்கள் எப்பவும் பிரச்சனை கிடையாது. மெதுவா தான் பார்ப்பாங்க. யூடியூபெர்ஸ், நெட்டிசன் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?” என்று தன் கண்களை சுருக்கி கூர்மையாக கேட்டான்.

“நாம எல்லா முக்கியமான யூடியூபேர்ஸை கவனிக்க வேண்டிய விதமா கவனிச்சிட்டோம். நெட்டிசன்களை ஒன்னும் பண்ண முடியாது. அலப்பறையா தான் இருக்கு. ஆனால், யூடியூப்ல  ஒரு சேனல் மட்டும்…” முகிலனின் மேலாளர் இழுக்க, “யார்?” வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“யாரா இருந்தாலும் நம்ம ஸ்டைலில்…”  முகிலன் ஆரம்பிக்க, “சார், அவங்க பொண்ணு” அவன் மேலாளர் கூற, முகிலனின் முகம் கடுகடுத்தது. ‘பெண்’ என்ற சொல்லில் அவன் நெற்றி சுருங்கி அவன் முகம் அசூயையை காட்டியது. அனைத்தையும் உடைக்கும் வேகம் கிளம்பியது. ஆனால், தன் கோபம் வெளியே தெரியாத படி முகத்தில் புன்னகையை கொண்டு வந்தான்.

கண்களை சுருக்கி உதட்டை மடித்து ஓர் அழகான புன்னகை. அழுத்தமான புன்னகை. பெண்களை மயங்கி விழ வைக்கும் புன்னகை. ஆண்களுக்கு கம்பீரத்தை கற்று கொடுக்கும் புன்னகை. அனைத்தையும் என் புன்னகையில் முடித்துவிடுவேன் என்ற கர்வ புன்னகை.

அந்த புன்னகையை பார்த்த மேலாளருக்கு உடல் நடுங்கியது.

‘முகிலன்! இன்று நம்பர் ஒன் ஹீரோ. ஹீரோ மட்டுமில்லை. பிரொடியூசர். பல அரசியவாதிகளின்  நட்பு கொண்டு, பல மீடியாக்களை தன் கைகளுக்குள் வைத்திருப்பவன். புன்னகை மட்டுமே உதிர்ப்பவன். ஆனால், அந்த புன்னகைக்கு பின் ஒளிந்திருக்கு முகிலனின் மொத்த குணமும் உருவமும் எனக்கே முழுசா தெரியாதே. இந்த பொண்ணு யாரு? நிச்சயமா வெறும் யூடியூபெரா மட்டும் இருக்க முடியாது. ஆனாலும், முகிலனை எதிர்க்க முடியுமா? என்னவெல்லாம் பேசி வெச்சிருக்கு?’ அவன் மேலாளரின் சிந்தனையை படித்தவன் போல் முகிலன் சிரித்தான்.

முகிலன் அப்படித்தான். அவன் தன்னோடு இருப்பவர்களை படித்துவிடுவான். ஆனால், அவனை முழுதாக யாராலும் தெரிந்து கொள்ள முடியாது.

“நமக்கு முதல் ஐந்து நாள் கலக்ஷன் ரொம்ப முக்கியம். அந்த பொண்ணு பேசின வீடியோ லிங்க் எனக்கு வரணும். அந்த பொண்ணு யாருன்னு விவரமும் எனக்கு வரணும்” என்று புன்னகையோடு அடுத்த காட்சியில் நடிக்க தயாராக எத்தனித்தான் முகிலன்.

“சார், நீங்க பெரிய நடிகர். அந்த பொண்ணு சாதாரண யுடியூபெர். இப்படி ஒவ்வொரு விமர்சனத்துக்கும் நீங்க பதில் சொல்ல முடியுமா?” அவன் மேலாளர் இழுக்க, முகிலன் மீண்டும் சிரித்தான்.

“எத்தனையோ யுடியூபெர் மத்தியில் இந்த பொண்ணு வீடியோ மட்டும் ஏன் உங்க பார்வைக்கு வந்துச்சு? இன்னைக்கு நம்ம படத்துக்கு எத்தனை விமர்சனம் வந்திருக்கும்? இந்த விமர்சனம் மட்டும் ஏன் உங்க பார்வைக்கு வந்துச்சு?” அவன் கூர்மையாக கேட்டான்.

அவனுடைய மேலாளர் மௌனிக்க, “அந்த பொண்ணு விவரமில்லாம தெரியாம கூட பேசியிருக்கலாம். ஒரு சாதாரண இடத்து பெண்ணாவும் இருக்கலாம். அப்படி இருந்தா கண்டும் காணாமலும் விட்டிருவோம். ஆனால், அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியணும். அந்த பொண்ணு பேசினதும் எனக்கு வேணும்” அவன் அழுத்தமாக பேசிவிட்டு புன்னகையோடு தன் வேலையை கவனிக்க சென்றான்.

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!