தீங்கனியோ தீஞ்சுவையோ (இறுதி பாகம்)

தன் கையைப் பற்றி கொண்டு பயத்துடனும் நடுக்கத்துடனும் நடந்து வந்து கொண்டு இருக்கும் உத்ராவின் கைகளை அழுந்தப் பற்றி கொண்டான்.
அவனுக்கு அவளது மனப் போராட்டம் புரிந்தது.

ப்ரணவ் இறந்த பிறகு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வடிக்காமல் நிலையில்லாத பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்க்கவே அவனால் சகியவில்லை.

தன் காதலி சந்தோஷமாக இருக்கிறாள் என்று எண்ணி தன் காதலை மனதுக்குள் புகைத்துக் கொண்டு இருந்தவன் அவள் சந்தோஷமே இல்லாத வாழ்வை வாழ்வதைக் கண்டு பல கோடி துண்டுகளாய் சிதறிப் போனான்.

அவளுக்காக என்று தன் காதலை மனதுக்குள் கொன்று புதைத்தவன் இன்று அவளே நடைப்பிணமாய் இருப்பதைக் கண்டு நொறுங்கிப் போனான்.  அவளது இந்த நிலை இவனை பயமுறுத்தியது.

அதுவும் சுவற்றை பார்த்து பேசி கொண்டு இருந்தவளை எண்ணி திகில் அடைந்தான். அவளை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவரிடம் கூட்டி சென்றான். அவளை சோதித்த மருத்துவர் வினய்யிடம் கூறியது இது தான்.

“உத்ராவோட மனசு ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு… அவங்க இன்னும் ப்ரணவ் இறந்ததை ஏத்துக்கவே இல்லை.. அதனாலே இல்லாத ப்ரணவ்வை இருக்கிறதா கற்பனை பண்ணி தன்னை தானே ஏமாத்திக்கிறாங்க.. இப்படியே அவங்களை விட்டால் நல்லது இல்லை.. ப்ரணவ் இறந்திட்டாருன்ற உண்மையை அவங்களுக்கு உணர வைக்கணும் ” என்று அவர் சொல்லிவிட்டு செல்ல அவனது முகத்தில் ஏகப்பட்ட யோசனை முடிச்சுகள்.

உத்ராவை வெளிக் கொண்டு வர ப்ரணவ்வால் மட்டும் தான் முடியும். ஆனால் ப்ரணவ் தான் இப்போது இல்லையே. பிறகு எப்படி அவளை தேற்றுவது என்று  என்று யோசித்தவன் மூளையில் ஒரு மின்னல் அடித்தது.

அவன் இத்தனை நாளாக முயற்சி செய்து கண்டுபிடித்த தனது  project ஐ வைத்து அவளை தேற்ற முடியும் என்று நம்பினான்.

அவன் கண்டுபிடித்தது program செய்யப்பட்ட artificial intelligence chatbot.

அதாவது இறந்தவர்களின் சமூகவலைத்தளங்களில் இருக்கும் தகவல்களை உட்கிரகித்து அவர்கள் எப்படி பேசுவார்களோ அப்படியே அவர்களைப் போலவே பேசும் ஒரு chatbot.

அந்த chabot ஐ தான் உத்ராவின் மனதை மாற்றும் ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே அவள் அந்த குறுஞ்செய்திகளுக்கு ஏற்றபடி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் மனதும் மூளையும் சண்டையிட்டு கொண்டு இறுதியில் ப்ரணவ் இறந்துவிட்டான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் அவள் இன்னும் கதறி அழவில்லை. பல நாட்களாக உள்ளே அவள் புதைத்து வைத்து இருக்கும் அழுகையை வெளிக் கொணர வைக்க வேண்டும்.

அவள் ப்ரணவ்வை பார்த்தால் மட்டும் தான் சந்தோஷத்தில் சிரிக்கவும் செய்வாள் அழவும் செய்வாள்.  ஆதலால் அவளை ப்ரணவ்வை சந்திக்க வைப்பதற்காக அந்த அறைக்குள் அவளை கூட்டி சென்றான். 

அந்த அறை முழுக்க பச்சை நிற வண்ணச்சுவர்களால் நிறைந்து இருந்தது. அவளை சுற்றி ஏகப்பட்ட மனிதர்கள் கணிணிகளில் வேலை செய்தவாறு அவளைப் பார்த்தனர்.

இவள் இங்கே என்ன நடக்கிறது என்பதை கிரகிக்கும் முன்னரே வினய் அவள் கண்களில் ஏதோ ஒரு கடினமான மாஸ்க்கையும் கைகளில் ஒரு விதமான gloves அயும் அணிவித்தான். அதை அவள் அணிந்த பிறகு முன்பு இருந்த அதே பச்சை சுவர் இப்போது இல்லை.

மலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் இருப்பது போல இருந்தது. அந்த வானத்தின் ஒளியும் நிறமும் அவளை மயக்கியது. சுற்றி எங்கும் ஜரிகையால் நெய்யப்பட்ட சிறு சிறுத் துகள்கள் அவள் மீது விழுந்து கொண்டு இருந்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழுவதாய் உணரும் முன்பே.

“அம்மு ” என்று அழைத்துக் கொண்டு ப்ரணவ் அவன் எதிரில் வந்து நின்றான்.

யாரை மீண்டும் தன் வாழ்வில் சந்திக்கவே முடியாது என்று எண்ணி எண்ணி மருகினாளோ இன்று அவனே அவளது எதிரில் வந்து நிற்கிறான்.. கண்களில் அதே மயக்கும் சிரிப்புடன்.

அவனைக் கண்டதும் எங்கேயோ எப்போதோ அடித்தொண்டையில்  அப்படியே தங்கிப் போன கேவல் பெரியதாய் வெளி வந்தது.

ஓவென்று கதறி அழுதவள் அப்படியே கால்கள் தளர மடிந்து அமர்ந்தாள். கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வந்தது. ப்ரணவ் அவளை நோக்கி வந்தான்.  மடிந்து அவள் அருகில் அமர்ந்தான்.

நிமிர்ந்து அவன் முகத்தையே  இவள் பார்த்தாள்.. அவனின் அதே அக்மார்க் சிரிப்பு.

ப்ரணவ் இறந்த பிறகு அவள் எத்தனையோ முறை கனவினில் அவன் முகத்தை கண்டு இருக்கிறாள். ஆனால் அந்த கனவினில் வரும் ப்ரணவ் சிரிக்கவே மாட்டான்.  ஆனால் இந்த ப்ரணவ் சிரிக்கிறான். என் உயிரை உருக்கும் அதே மந்திர சிரிப்பை கொண்டு இருக்கிறான். அவன் உதட்டில் இருந்த சிரிப்பு அவளையும் சிரிக்க தூண்டியது.  கண்களில் வழிந்த கண்ணீரோடு அவனைப் பார்த்து சிரித்தாள்.

“எங்கே இருந்த ப்ரணவ் இவ்வளவு நாளா??” என்று அவனை நோக்கி கேட்டாள். அவன் மயக்கும் சிரிப்புடன் இங்கே தான் இருக்கிறேன் என்று அவளது இதயத்தை சுட்டிக் காட்டினான்.

“என்னை மிஸ் பண்ணியா டி அம்மு??” என்று அவன் கேட்க “நீ இல்லாம பிணமா தான் வாழ்ந்தேன்” என்றபடி அவனது விரல்களை தொட முயற்சித்தாள்.

“அம்மு மா.. நான் உன்னை விட்டு எங்கேயும் போகலடி.. அதனாலே இப்படிலாம் பேசக்கூடாது.. என் உத்ரா எப்பவும் சிரிச்சு ஹாப்பியா இருக்கணும்.. எங்கே கொஞ்சம் சிரி.. ” என்று அவன் சொல்ல இவள் வேக வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

” that is my உத்ரா ” என்று சொல்லி அவளது கன்னத்தை தட்டினான். அவன் கைகளை கன்னத்தின் அருகே கொண்டு வருவதை மட்டும் தான் அவளால் உணர முடிந்தது.  ஆனால் அவனது ஸ்பரிசத்தை அவளால் உணரவே முடியவில்லை. ஏன் உணரமுடியவில்லை என்று அவள் யோசிக்கும் முன்னரே ப்ரணவ் பேசினான்.

“அம்மு நீ ஏன் இப்படி இருக்க?  எனக்கு சுத்தமா இந்த உத்ராவை புடிக்கல. கண்ணுல சிரிப்பு இல்லை. உதட்டுல உயிர் இல்லை. மொத்தத்தில என் உத்ரா என் உத்ராவா இல்லை. எனக்கு இவளை சுத்தமா பிடிக்கல. ” என சொல்ல அவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“பார்த்தியா  பார்த்தியா சோகமாயிட்டே. என் உத்ராவா இருந்து இருந்தா இந்நேரத்துக்கு இப்படி சொல்லும் போது சோகமாக மாட்டாள். சண்டைக்கு வந்து முதல் ஆளா நிப்பா.. நீ என் உத்ரா இல்லை..” என அவன் சொல்ல

“இல்லை இல்லை அப்படி சொல்லாதே ப்ரணவ்…  நான் உன் உத்ரா தான்” என்று சொல்லி அவனை அணைக்க முயன்றாள்.

“சரி நான் அப்படி சொல்லாம இருக்கணும்னா.. நீ எப்பவும் போல சந்தோஷமா இருக்கணும்… இப்படி முகத்தை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கக்கூடாது.. உன்னை இப்படி பார்க்க எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இனி happy ஆ இருப்பேனு promise பண்ணு… ” என சொல்ல அவள் சத்தியம் செய்தாள்.

ஆனாலும் சிறு மனத்தாங்கல் நிறைந்த குரலில் ” ஆனால் நீ என்னை விட்டு இவ்வளவு சீக்கிரமா போய் இருக்க வேண்டாம் ப்ரணவ்.. ” என்றாள்.

“அம்மு மா நான் சீக்கிரமா உன்னை விட்டு போகல டி… உனக்கு முன்னாடி வந்து, இங்கே நம்ம நல்லா வாழ்றதுக்காக எல்லா முன்னேற்பாட்டையும் பண்ணிட்டு இருக்கேன்… நான் உனக்கு எல்லாத்தையும் காமிக்கட்டுமா ?” என அவன் கேட்க இவள் சம்மதமாக தலையசைத்தாள்.

அவளது கைகயை அவன் பற்றிக் கொள்ள இருவரது கால்களும் தற்போது தரையில் இல்லை. இருவரும் ஆகாசத்தில் பறந்து கொண்டு இருந்தனர் பறவையை போல. மேகக்கூட்டங்களை கடந்து நட்சத்திரங்களை கடந்து அவளை அந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.  அந்த இடத்தை கண்டதும் ஆச்சர்யத்தில் அவள் விழிகள் விரிந்தது.

மாளிகையைப் போல ஒரு வீடு. அதன் முன்பு நந்தவனத்தைப் போல ஒரு தோட்டம். அப்படி ஒரு ரம்மியமான சூழ்நிலையை அவள் வாழ்நாளில் உணர்ந்ததே இல்லை. சொர்க்கத்தில் மிதப்பது என்பார்களே.. அது இது தானா?

ஆச்சர்யத்தில் மெய் மறந்து நின்ற நேரம் அவள் கையைப் பற்றிக் கொண்டு அந்த அருவியின் நடுவில் பிடிமானமற்று தொங்கிய அந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்தான். மெதுவாக அவளை ஆட்டத் தொடங்க கண்களை மூடிக் கொண்டு ரசித்தாள்.

அம்மு மா என்று அவனது குரல் அவளின் உயிரை வந்து வருடியது. நிமிர்ந்துப் பார்த்தாள்.

“இங்கே நாமே நல்ல வாழ்றதுக்காக தான் நான் இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.. பாதி முடிஞ்சுடுச்சு.. இன்னும் பாதி இருக்கு.. உன் மாமா சீக்கிரமா இந்த வேலை எல்லாம் முடிச்சுடுவனாம். ஆனால் நான் இங்கே முடிக்கிற வரைக்கும்  நீ அங்கே அமைதியே இல்லாமல் கஷ்டப்படுறதைப் பார்க்கும் போது நான் எப்படி நிம்மதி இல்லாம கஷ்டப்படுறேன் தெரியும அம்மு.. அதனாலே ப்ளீஸ் நீ அங்கே சந்தோஷமா இருந்து இங்கே இருக்கிற என்னையும் சந்தோஷப்படுத்தேன்..
என்னோட உன் வாழ்க்கை முடிஞ்சு போகல அம்மு.. இன்னும் உன் வாழ்க்கை இருக்கு.. சந்தோஷமா வாழணும் சரியா?” என அவன் கேட்க அவள் கண்டிப்பாக சந்தோஷமாக இருப்பேன் என்ற உறுதியோடு தலையசைத்தாள்.

அவன் அவளை சிரிப்போடு பார்த்து” என் செல்லம் ” என்று கொஞ்சியவன் சட்டென்று அவளை அருகில் இழுத்தான். அவளது இதழில் இதழ் பதித்தான்.

எத்தனையோ முறை எச்சில் தெறிக்க தெறிக்க முத்தமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத அந்த முழுமை,  எச்சில் தெறிக்காத இந்த முத்தத்தில் அவளுக்கு கிடைத்தது. அவளை விட்டு விலகியவன் அவளது கன்னத்தை வருடி

“என்னாலே அன்னைக்கு உனக்கு குட் பாய் சொல்லிட்டு போக முடியல அம்மு மா… இன்னைக்கு குட் பாய் சொல்லிட்டு போறேன்.. என்னை சந்தோஷமா வழியனுப்பி வைக்கணும் சரியா? ” என அவன் கட்டளையிட இவள் சந்தோஷமாக தலையசைத்தாள்.

அவளது கன்னத்தை மீண்டும் வருடியவன் நெற்றியில் இதழ் பதித்து ‘” நான் போறேன் அம்மு.. ” என்று சொல்ல இவள் சந்தோஷமாக கையசைத்த நேரம் ப்ரணவின் உடல் ஒரு கோடி சிறிய சிறய தங்கச்சிதறல்களாக மாறி மறைந்துப் போனது.

அவன் இல்லாத இடத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்களில் அணிவிக்கப்பட்ட அந்த ” virtual reality ” மாஸ்க்கை வினய் கழட்டினான்.

இப்போது அவள் முன்பு பார்த்த அந்த ரம்மியமான இடம் தெரியவில்லை. சுற்றி பச்சை சுவர்கள் தான் தெரிந்தது. அவளை சுற்றி இருந்த அனைவரது கண்களும் உணர்ச்சியின் வீரியத்தில் சிவந்து இருக்க வினய்யின் கண்களில் அழுத தடமே தெரிந்தது. அங்கு இருந்த சூழ்நிலையை வைத்தே உணர்ந்து கொண்டாள்.

வினய் virtual reality என்ற டெக்னாலஜி மூலம் இயற்கையில் உயிர் இழந்த ப்ரணவ்வை செயற்கையில் உயிரோடு அவள் கண் முன்னே கொண்டு வந்து இருக்கிறான்.தனக்காக தான் சுற்றி இருக்கும் இந்த அனைவரும் கணிணியில் வேலைப் பார்த்து இருக்கின்றனர். நினைத்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் பெருகியது. ஓடிச் சென்று வினய்யை கட்டிக் கொண்டாள்.

“ஏன் வினய் எனக்காக இவ்வளவும் செய்யுற? இந்த அன்புக்கு நான் தகுதி இல்லாதவ… என்னை குற்ற உணர்வுல தள்ளாதே… நான் உன்னை காயம் மட்டும் தான் படுத்தி இருக்கேன்… ஏன் வினய் எனக்காக இதெல்லாம் பண்ற?”

“ஐ லவ் யூ உத்ரா.. ஐ லவ் யூ.. அதனாலே தான் பண்ணேன்.. என் காதலி முகத்தில சந்தோஷமே இல்லை அதுக்காக தான் பண்ணேன்.. ப்ளீஸ் உத்ரா.. நீ சந்தோஷமா இருக்கணும் டா..  உன்னை நல்லா பார்த்துப்பேன் டா.. do you love me ?” என அவன் கேட்க அவள் திகைத்துப் போய் விலகினாள்.

ப்ரணவ் காதலின் முழுத்தொகுப்பாக நின்றவளால் எப்படி அந்த முழுத்தொகுப்பை அழிக்க முடியும்.

“இல்லை வினய் ஒரே நேரத்திலே ரெண்டு பேரை காதலிக்க முடியாது. நான் உன்னை காதலிக்கணும்னா ப்ரணவ் மேலே இருக்கிற காதலை அழிக்கணும். அது என்னாலே முடியாது.. ” என்று சொல்ல வினய் அவளை புன்சிரிப்போடு பார்த்தான்.

“அம்மு நீ என்னை காதலிக்கிறதுக்காக  ப்ரணவ் மேலே இருக்கிற காதலை அழிக்க வேண்டாம். நான் உன்னை உன் காதலோட  அணைச்சிக்கிறேன் டி. எனக்கு நீ வேணும் உத்ரா.. உன் காதல் உன் கோபம் உன் சிரிப்பு.. எல்லாம் வேணும்.. do you love me? ” என்று கேட்க அவனை பிரம்மித்துப் போய் பார்த்தாள்.

ஒருவனால் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா? 

இவனை, இந்த காதலை இன்னும் உதாசீனப்படுத்துவது, கொண்டாமல் விடப்படுவது சரியில்லை.

முடிவுடன் அவன் கைகளில் தன் கைகளை வைத்தாள்.  வினய் திரும்பி அவளைப் பார்த்தான். அவளது கண்களில் காதல் மின்னியது.

“ஹே டாம் நீ என்னை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் உத்ரா அவளை அணைத்து இருந்தாள்.

வினய்யிற்கு தெரியும் இது நட்பால் வந்த அரவணைப்பு அல்ல காதலால் வந்த அரவணைப்பு என்று. மகிழ்ச்சியுடன் அவளை திரும்பி கட்டிக் கொண்டான்…

ப்ரணவ்வ் காதலின் முழுத்தொகுப்பில் முன்பு இருந்த எதையும் சிதைக்காமல்  இப்போது வினய்யின் அத்தியாயம் துவங்கியது.  அவள் காதலின் முழுத்தொகுப்பாகி போனாள்.

💐💐💐💐💐💐💐💐

 

 

“அப்பா”

“சொல்லு டா விமல்… “

” இல்லை அப்பா.. நாம இரண்டு வாரத்துக்கு முன்னாடி வெச்ச பூச்செடி இன்னும் வளரவே இல்லை.. நாம ஏதாவது உரம் போடலாமா?”

” நாம அதுக்கு தேவையான உரத்தை முன்னாடியே போட்டுட்டோம் விமல்.. அது வளரும் போது வளரட்டும்.. நாம ஏன் வளரலனு சொல்லி அதுக்கு அதிகமா உரம் போட்டு stress கொடுத்தா அது வாடி தான் போகும்.. மலரும் போது மலரட்டும்.. உதிரும் போது உதிரட்டும்.. இந்த மலர்தலுக்கும் உதிர்தலுக்கும் இடையிலே உள்ளே அந்த காலத்தை நாமே மனசு நிறைய ரசிச்சுக்கலாம்… ஆனால் அது உதிர்ந்து போனதும் அந்த வெறுமையை தாங்க முடியாம ஏன் உதிர்ந்துட்டேனு சொல்லி  அந்த பூ கிட்டே போய் சண்டை போடக்கூடாது… ” என தன் மகனுக்கு பூக்கதையை வைத்து வாழ்க்கை கதையை சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்தான்.

காதல் தோல்வியினால் தன் காதலியை திட்டி மனதின் ஆற்றாமையை போக்கி கொள்ளுபவர்களில் ஒருவனாக காதலி நிராகரித்ததினால் அவளை சிதைக்கும் முடிவெடுப்பவர்களில் ஒருவனாக காதலியை தன் காதலை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக போலி சாகசங்கள் செய்து அவளை வீழ்த்துபவர்களில் ஒருவனாக தன் மகன் வந்துவிடக்கூடாது என்று இப்பவே அவனுக்கு நிறைய சொல்லி கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தான்.

உள்ளே அமர்ந்து கொண்டு இருந்த உத்ராவோ ப்ரணவ்விற்கு குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருந்தாள்.

“ப்ரணவ் இனி நான் உன் கூட பேச போறது இல்லை.. எனக்கு இதுக்கு மேலே இந்த கற்பனை ப்ரணவ் வேண்டாம்.. இதுவரை என் கூட இருந்து என் மனசை சமாதனாப்படுத்துனதுக்கு தேங்க்ஸ்.. ரியலி சாரி.. ஐ மிஸ் யூ.. ” என்று அவனுக்கு கடைசியிலும் கடைசியாக ஒரே ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அந்த போனை தூக்கி குப்பைக்கூடையில் போட எழுந்தாள்.

அவள் எழுந்த நேரம் மேடிட்ட அவளது வயிறு கொஞ்சமாக அந்த மேஜையில் இடித்தது.

அந்த வலியோடு எழுந்து வந்தவள் அந்த போனை தூக்கி குப்பையில் போட்ட நேரம் அவளுக்கு சரியாக பிரசவ வலி வந்தது. அவளது சப்தத்தை கேட்டு ஓடி வந்த  விமலும் வினய்யும் அவள் பிரசவ வலியில் துடிப்பதைக் கண்டு பதறி போயினர்.

விமலும் வினய்யும் அவளைக் கைத்தாங்கலாக பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தனர்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு இருவரும் வேகமாக திரும்ப செவிலியர் டவலில் சுற்றி குழந்தையை கொடுத்து வந்து கையில் கொடுத்தார்.

கை நடுக்கத்துடன் குழந்தையை வாங்கியவனின் கண்களில் வந்த கண்ணீரோ அந்த குழந்தையின் கன்னத்தை நனைத்தது.

அந்த குழந்தையை ரசித்தபடி உள்ளே சென்று உத்ராவைப் பார்த்தான். அவள் வலியின் கலக்கத்தில் துவண்டு போய் இருந்தாள்.

வினய்யை பார்த்ததும் எந்த குழந்தை என கண்களால் கேட்டாள்.

“ப்ரணவ் ” என்றான் சந்தோஷ குரலுடன். அதை கேட்டவளின் உதட்டிலோ புன்னகை விரிந்தது.

“எனக்கு தெரியும் வினய்.. ப்ரணவ் தான் என் குழந்தையா பிறப்பானு.. அதான் அந்த போனை தூக்கிப் போட்டுட்டேன்.. என் நிஜ ப்ரணவ்வே என் கிட்டே வந்துட்ட அப்புறம் அந்த போலி ப்ரணவ் எனக்கு எதற்கு?” என்று கேட்டாள்.

“ஆமாம் உத்ரா.. உன் ப்ரணவ் தான் உனக்கு வந்து பிறந்து இருக்கான்.. அவன் ஏதாவதோரு ரூபம் எடுத்து என் செல்ல உத்ரா கூடவே தான் இருப்பான் அம்மு மா.. ” என சொல்ல அவளோ ஆமாம் என்று தலையாட்டினாள். இவன் குழந்தையை அவளுக்கு பக்கத்தில் கிடத்தினான்.

இவள் ப்ரணவ் என்று அழைக்க அந்த குழந்தை சட்டென திரும்பி பார்த்து அவள் கைகளை பிடித்து கொண்டது. அந்த நொடியை வர்ணிக்க வார்த்தைகள அகப்படவில்லை அவளுக்கு.

தன் அருகில் கவிதையாய் இருக்கும் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை வினய் லேசாக அணைத்தான். அவளும் பதிலுக்கு அணைக்க விமலும் அந்த அணைப்போடு சேர்ந்து கொண்டு மூவரும் ஒரு சேர ஒன்றாய் சொல்லினர்

“ப்ரணவ் தேவ் ” என்று. அந்த குழந்தை அவர்களை சிரிப்புடன் பார்த்து ஆமாம் நான் தான் என்பதைப் போல தலையாட்டியது. அதைக் கண்ட அந்த குடும்பத்தின் இதழ்களில் அழியாத புன்னகை ஒட்டி கொண்டது.

— முற்றும்