தீங்கனியோ தீஞ்சுவையோ- 13

 

கீழே விழப் போனவளது கைகள் ஏதேச்சையாக ப்ரணவ்வை நோக்கி நீண்டது. ப்ரணவ் உத்ராவை கீழே விழாமல் பிடிக்க ஏனோ வினய்யின் மனம் திடீரென்று சஞ்சலம் உற்றது.

அவன் நீட்டிய கைகள் அவளை நோக்கியபடியே இருந்தது.  அதை மீட்டு எடுக்க தோன்றாமல் அப்படியே நின்றவனை இயல்புக்கு கொண்டு வந்தது உத்ராவின் குரல்.

“வினய் ” என்றழைத்தவளை திரும்பிப் பார்த்தான்…

” னநான் போய் மருதாணி வெச்சுட்டு வரேன்… நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.. ” என்று அங்கிருந்து பறந்து சென்றுவிட்டாள்.

கடற்கரை மணலில் வினய்யும் ப்ரணவ்வும் அமர்ந்தனர்.

இருவரது பார்வையும் கடலையே வெறித்தது. இருவரிடையில் ஒரு மௌனச் சுவர். அந்த சுவரைப் ப்ரணவ்வின் குரல் தகர்த்து இடித்தது.

“கஷ்டமா இல்லையா வினய்?” என ப்ரணவ் திரும்பி அவனைப் பார்த்து கேட்க முதலில் அவன் எதைக் கேட்கிறான் என்று வினய்க்கு புரியவில்லை.

பிறகு உத்ரா தன் காதலை ஏற்றுக் கொள்ளாததைப் பற்றி தான் பேசுகிறான் என்று உணர்ந்தவுடன் இதழ்களில் சின்ன சிரிப்போடு சொன்னான்.

“அவள் சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நான் ஏன் கஷ்டப்படணும் ப்ரணவ்? என்னை விட இன்னொரு பத்திரமான கையிலே அவள் இருக்கிறது எனக்கு சந்தோஷம் தானே தவிர வருத்தம்லாம் இல்லை. அவள் சந்தோஷமா இருக்கிறதாலே என் மனசுல இருக்கிற காதலோட இழப்பு ஒன்னும் எனக்கு  பெருசா தெரியல” என வினய் சொல்ல ப்ரணவ் அவனை புன்னகையுடன் பார்த்தான்.

“u are really gentle man வினய் ” என ப்ரணவ் சொல்ல அவன் புன்னகையுடன் மறுத்தான்.

“இல்லை ப்ரணவ் நீங்க தான் உண்மையாவே gentleman.  தான் காதலிக்கிற பொண்ணு கிட்டே காதலை சொன்னவனை யாரும் நண்பனா ஏத்துக்க மாட்டாங்க. பட் நீங்க வேற லெவல் ப்ரணவ். “

“அட இல்லை வினய்… இந்த காலத்துல காதலை ஏத்துக்காதவங்க மேலே ஆசிட் கொட்டி அவங்களை தப்பு தப்பா பேசி வன்மத்தை தீர்த்துக்குறவங்களுக்கு மத்தியில , நீங்க  காதலியோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் னு நினைக்கிறீங்க பார்த்தீங்களா…யூ ஆர் ரியலி க்ரேட்.  “

“போதும் போதும் ப்ரணவ்.. முடியல.. “

” உண்மையா சொல்றேன் வினய், அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் பொண்ணா பிறந்து உங்க காதலை அனுபவிக்கனும்னு நினைக்கிறேன். யூ ஆர் சோ ஸ்வீட் வினய்..”  என ப்ரணவ் சொல்ல வினய் வெட்கமேப்பட்டுவிட்டான்.

“ஐயோ போதும் ப்ரணவ் முடியல.. ” என வினய் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க அதில் ப்ரணவ்வின் சிரிப்பொலியும் சேர்ந்து ஒலித்தது.

” என்ன ஒரே சிரிப்பா இருக்கு.. என்ன காமெடி னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்லை.. ” என்று  கேட்டபடியே அவர்களின் நடுவே வந்து உத்ரா உட்கார இருவரும் ஒரு சேர ஒன்றும் இல்லை என தலையாட்டினார்கள்.

“பார்ரா இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்த அப்புறம் என்னை  கழட்டிவிட்டுட்டீங்கள?.. நடத்துங்க.. நடத்துங்க.. ” என அவள் பொறாமைப்பட இருவரும் அவளைப் பார்த்து சிரித்தனர்.

அந்த நேரம் பார்த்து வினய்யிற்கு கால் வர அதை எடுத்துப் பேசியவன் முகத்திலோ ஆனந்தம் தாண்டவமாடியது. அவனையே பார்த்துக் கொண்டு இருந்த உத்ராவும் ப்ரணவ்வும் அவன் போனை வைத்த பிறகு என்ன விஷயம் என்று பார்வையாலேயே கேட்க அவன் பெரிய சிரிப்புடன் சொன்னான்.

“நான் புதுசா ஒரு technology  கண்டுபிடிச்சுட்டு இருக்கேனு சொன்னேன்ல உத்ரா. அந்த ப்ராஜெக்ட்க்கு sponsor பண்ண ஒரு பெரிய கம்பெனி ஒத்துக்குச்சு. எல்லாமே முடிஞ்சு இப்போ final stage ல என் ப்ராஜெக்ட் இருக்கு. இப்போ அவங்க  sponsor  பண்ண போறதாலே world wide க்கு நான் கண்டுபிடிச்ச விஷயம் ரீச் ஆகிடும்.. இப்போ demo காமிக்க கூப்பிடுறாங்க.. நான் போய் அவங்க கிட்டே காமிச்சுட்டு வரேன்.. ” என்று சொல்லி எழுந்தவனை இருவரும் ஆனந்தமாக பார்த்தனர்.

“ஆமாம் நீங்க என்ன கண்டுபிடிச்சு இருக்கீங்க வினய்??” என ப்ரணவ் கேட்க

“அது surprise “என சொல்லி வினய் கண்ணடித்தான்.

“ப்ரணவ் நான் கூட பல முறை கேட்டுட்டேன்.. ஆனால் இந்த வினய் என் கிட்டே கூட சொல்லல தெரியுமா.. இந்த எருமை புதுசா ஏதோ கண்டுபிடிக்க போறேனு சொல்லி அடிக்கடி ஓடிடுவான்.. இவனோட வொர்க்லாம் சேர்த்து நான் தான் பார்ப்பேன்.. ஆனால் இந்த பன்னி என் கிட்டே கூட எதும் சொல்லல” என்று உத்ரா குறைபட

“டாம் இவங்க மட்டும் ஒத்துக்கட்டும் நான் கண்டிப்பா என்ன கண்டுபிடிச்சேனு சொல்றேன் ஓகே வா.. ” என வினய் சமாதானம் சொன்னான்.

“டபுள் ஓகே ஜெர்ரி.. all the best டா.. எல்லாமே successful ஆ முடியும்.. ” என்று உத்ரா சொல்ல ப்ரணவ்வும் ” all the best ” சொல்லி அவனை வழியனுப்பி வைத்தான்.

செல்லும் அவனையே மகிழ்ச்சியுடன் பார்த்த இருவரும் மீண்டும் திரும்பி கடலைப் பார்த்தனர்.

“ஹே உத்ரா…  வினய் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டி.. உண்மையா ரொம்ப நல்ல பையன்.. எனக்கு அடுத்து  அவனாலே மட்டும் தான்டி உன்னை நல்லா பார்த்துக்க முடியும்.. “

“ஆமாம் ப்ரணவ்.. அவன் ப்ரெண்டா இருக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சு இருக்கணும் தெரியுமா.. நான் எவ்வளவு வலியைத் தந்தாலும் பதிலுக்கு அன்பை மட்டும் தான் அவன் எனக்கு தருவான்… “

” ம்ம்ம்ம்ம் டி.. ஆமாம் மருதாணியை என் கிட்டே காட்டவே இல்லையேடி ” என அவன் சொல்ல தன் உள்ளங்கையை அவனிடம் நீட்டினாள்.

அந்த மருதாணியிட்ட  ரேகைகளை அவன் வருட அதை விட அதிகமாக சிவந்து போனாள் பெண்ணவள்.

ஏற்கனவே சூரியன் அங்கே தன் பொற்கிரணங்களை நீல வானத்தில் தூவி அதை செவ்வானமாய் மாற்றி  கொண்டு இருக்க இவளோ அந்த செவ்வானத்தை விட அதிகமாக சிவந்து போனாள்.

அவளது வெட்கத்தை ரசித்தவாறே எழுந்தவன் அவளுக்கு கைக்கொடுத்து எழுப்பினான்.

இருவரும் அந்த கடற்கரையை விட்டு வெளியே வரத் தொடங்கினர். அங்கே ஒரு கடையில் அரிசியில் பெயர் எழுதி கொண்டு இருப்பதை பார்த்தவள் அவனை நிறுத்தினாள்.

“டேய் ப்ரணவ் நம்ம ரெண்டு பேரையும் ஒரே அரிசியில எழுதிக்கலாமா டா? அப்படியே வினய் பேரையும் தனியா ஒரு அரிசியில எழுத சொல்லி அவனுக்கு கிப்ட் பண்ணலாம்” என அவள் கேட்க  அவன் சரி என்று தலையாட்டிவிட்டு பைக்கை எடுக்க சென்றான்.

இவள் அந்த கடையில் சென்று அவன் பேரையும் தன் பேரையும் சொல்லி அரிசியில் எழுத சொன்னாள்.  அவர்கள் எழுதிய அரிசியை ஒரு சின்ன கண்ணாடி பேழையில் அடைத்து அவள் கையில் தந்தனர்.

அதை வாங்கி ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவளை அழைத்து வினய்யின் பெயர் கொண்ட அரிசியையும் தந்தனர்.

இரண்டையும் கையில் வாங்கி கொண்டு அவள் திரும்பிய நேரம் அந்த காட்சியை கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். கைகள் பிடிமானம் இழந்தது. அந்த இரண்டு அரிசியும் கீழே விழ அதில் உத்ரா ப்ரணவ் என்று எழுதப்பட்ட அரிசி குறுக்குவாக்கில் உடைந்து ப்ரணவ் என்ற பெயர் மட்டும் எங்கோ சென்று விழுந்துவிட உத்ராவின் பெயர் வினய்யின் பெயர் கொண்ட அரிசியோடு உருண்டு போய் சேர்ந்தது.

திக்பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே நின்றாள். அவளது  முகத்தில் ஈயாடவில்லை. ஒரு நொடிக்குள் நடந்து முடிந்த அந்த சம்பவம் அவளது வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது.

மூளையில் பதிவான காட்சியை அந்த காட்சியை மீண்டும் ஓட்டிப் பார்த்தாள்.

அவள் திரும்பிய நேரம் ப்ரணவ் சாலையை நோக்கி ஓடிக் கொண்டு இருந்தான். அங்கே சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒரு சிறுவனை ஒரு கார் இடிக்க வர அந்த சிறுவனை காப்பாற்றி சாலையின் ஓரமாய் தள்ளிவிட்டு அவன் திரும்பிய நேரம்  அவசரகதியில் வந்த ஒரு லாரி அவனை விழுங்கிவிட்டு இருந்தது.

💐💐💐💐💐💐💐

னசடசடெவன்று கடந்த கால நினைவுகள் கலைந்தது.

அன்று நடந்த அந்த விபத்து இன்று நடந்ததை போல அவள் இதயம் மீண்டும் பதறியது.

இறந்த காலத்தில் நடந்த சம்பவங்களால் இன்று இறந்து போன பிணமாய் நிற்கின்றேனே. வேகமாய் வந்து ப்ரணவ்வை மோதிய அந்த வாகனம் என்னுடைய இதயத்தையும் தானே மோதி சுக்கு நூறாய் உடைத்துவிட்டு சென்றது. அன்று உடைப்பட்ட இதயம் இன்னும் சரியாகவே இல்லை.

வேகமாக துடிக்கும் அந்த இதயத் துடிப்பை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கைகளால் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு வாசலின் ஓரம் நின்று கொண்டு இருந்த நேரம் அவளை நோக்கி இன்னொரு கார் வந்து கொண்டு இருந்தது.. ஏற்கனவே அந்நாள் விபத்தில் துடித்துப் போன அவளது இதயம் தன்னை நோக்கி வரும் வாகனத்தை கண்டு அதிவேகமாய் துடித்தது. கைகளை தலையின் மீது வைத்துக் கொண்டு கண்களை பயத்தில் இறுக மூடிக் கொண்டாள். அவளை உரசியபடி ஒரு கார் வந்து நின்றதை உணர்ந்தவள் மெதுவாய் கண் திறந்து பார்க்க அங்கே வினய் நின்று கொண்டு இருந்தான்.அவனை கண்டதும் தான் நின்று போன மூச்சு அவளுக்கு திரும்ப வந்தது.

” என்ன உத்ரா பயந்துட்டியா?” என்ற வினய்யின் குரலுக்கு ஆமாம் என்று தலையசைத்தாள்.

“சாரி டா.. ” என அவன் சொல்ல இவள் ஒன்றும் இல்லை என தலையாட்டிவிட்டு

“சரி வா வினய்…  விமல் ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கான்.. நீ வந்ததும் சாப்பிடலாம்னு” என அவள் சொல்ல அவன் சரியென்று தலையாட்டிவிட்டு உணவு மேசைக்கு வந்தான்.விமலும் அங்கே வந்து சேர்ந்தான்.

விமல் சாப்பிட்டுவிட்டு உள் அறைக்கு சென்றுவிட  உத்ரா ப்ரணவ்வை பார்த்தாள். அவளது முகபாவனைகளை வைத்தே அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவன்

“சொல்லு உத்ரா” என்றான்

“வினய், எனக்கு ப்ரணவ் நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சு… ”

“ஓ அப்படியா? எத்தனை நாளா?”

“இரண்டு மாசமா வினய்.. ”

“இரண்டு மாசமா என் கிட்டே இதைப் பத்தி சொல்லக்கூட தோணலைல உத்ரா.. என்னை ஒரு ப்ரெண்டா கூட நீ மதிக்கலல”

“இல்லை வினய்.நானே குழப்பத்தில இருக்கும் போது எப்படி உன் கிட்டே சொல்றதுனு தயங்கிட்டு இருந்தேன். ஆனால் இன்னைக்கு ப்ரணவ் என்னை சந்திக்கணும்னு சொன்ன உடனே உன் கிட்டே சொல்லியே ஆகணும்னு தோணுச்சு.  அதான் சொல்லிட்டேன்.”

“ஓகே இப்போவாவது சொல்ல தோணுச்சே… சரி வா  அவனைப் பார்க்க போகலாம்.. ”

“என்ன வினய் அவனை எப்படி பார்க்க முடியும்?  இல்லை வினய் நான் வர மாட்டேன்.. நோ நோ.. ” என கத்தியவளை அவன் சட்டை செய்யவில்லை.

“அதை நேர்ல போய் பார்த்து தெரிஞ்சுக்கலாம்.. நீ வா.. ” என அவளை விடாப்பிடியாய் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு காரில் ஏற்றினான்.

அவளுக்கு எங்கே  போகிறது இந்த பாதை என்று புரியவில்லை. எப்படி அவனைப் பார்க்க போகிறோம் என்றும் தெரியவில்லை. கண்ணை மூடிக் கொண்டாள்.

ப்ரணவ்வுடன் கைக்கோர்த்து செல்லும் வரை தான் அவளுக்கு பாதை இருந்தது. அவன் எப்போது அவள் கையை விட்டானோ அப்போதே அவளது பாதையும் பயணமும் அங்கேயே நின்றுவிட்டது. எங்கே தன் பயணம் நின்று போனதோ மீண்டும் அங்கே சென்று தன் நினைவுகளை மீட்டிப் பார்க்க ஆரம்பித்தாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தன் உயிரான ப்ரணவ் இறந்துவிட்டான்  என்று எழுதி இருந்த அந்த மருத்துவ அறிக்கையை தாங்கியபடி ஆம்புலன்ஸில் அவனது உயிரற்ற உடலோடு பயணித்துக் கொண்டு  இருந்தாள் உத்ரா.

என் ப்ரணவ் என்னை விட்டு சென்றுவிட்டானா? அவளால் நம்பவே முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு கூட  ஆசையாக என் விரல்களை வருடினானே, ஆனால் இப்போது அவன் கரம் இப்போது சில்லிட்டு போய் இருக்கிறேதே.

“ஏன் ப்ரணவ் என்னை விட்டு பிரிந்து போனாய் ”  என்று அவனைப் பார்த்து கேட்க கூட தோன்றவில்லை.

மூளை செயலிழந்துப் போய் இருந்தது. திடீரென்று தோன்றும் துயரங்களில் அழவே தோன்றாது. அப்படி தான் அவளும் உணர்வற்றுப் போய் இருந்தாள்.

ஆமாம் நான் ஏன் அழ வேண்டும்?

என் ப்ரணவ் என்னைவிட்டு போகவில்லை. எத்தனையோ செய்தித்தாள்களில் பார்த்தது இல்லையா இறந்தவர்கள் மீண்டும் திரும்பி எழுந்த வந்த கதைகளை…

என் ப்ரணவ்வும் என்னிடம் வந்துவிடுவான். அவனுக்கு தெரியும் அவன் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என்று.

வந்துவிடுவாய் தானே ப்ரணவ்.. வந்துவிடேன் ப்ளீஸ் ப்ளீஸ்.. என்று அவள் சொல்லி முடிக்கும் போது ஆம்புலன்ஸ் திடீரென்று நின்றது.

கதவு திறக்கப்பட்டு அவனது உடலை வீட்டின் முன்பு கிடத்திவிட்டு மீண்டும் அந்த ஆம்புலன்ஸ் பறந்து சென்றது.

அங்கே நின்று இருந்தவர்களின் முகத்தில் இருந்த துயரம் ப்ரணவ் இந்த பூமியில் இருந்து சென்றுவிட்டான் என்பதை உணர்த்திவிட்டது.

ஆனாலும் அவள் அழவில்லை.. அழுகையை உள் இழுத்து கொண்டாள். என் ப்ரணவ் என்னை விட்டு செல்லமாட்டான் என்று எண்ணியபடியே அவனது உடலின் அருகே அமர்ந்து இருந்தாள்.

சுற்றி இருந்த உறவினர்கள் அவனது உடலை இறுதி ஊர்வலத்திற்கு கொண்டு செல்ல எத்தனித்தனர்.

“ப்ரணவ் உன்னை என் கிட்டே இருந்து பிரிக்கப் பார்க்கிறாங்க டா.. ப்ளீஸ் ப்ரணவ்  எழுந்து வந்துடு.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ் எழுந்துடு ப்ரணவ்” என்று அவள் கத்தி கொண்டு இருக்கும் போதே அவனது உடலை எடுத்துவிட்டனர்.. இவள் முன்னே போகும் அவன் உடலோடு செல்ல எத்தனிக்க எல்லோரும் அவளை தடுத்தனர்.

“வேணாம் கண்ணு.. சுடுகாட்டுக்கு பொம்பளைங்க போகக்கூடாது.. அவங்க பின்னாடியே போகாதே மா'” என சுற்றி இருந்த பெண்கள் தடுக்க அவள் திரும்பி தன் அத்தையைப் பார்த்தாள்.

அவளது முகத்தில் இருந்த அந்த வேதனை கல்யாணியை வருத்த அவர் அவளை போக சொல்லி அழுகையுடன் தலையசைத்தார். வேகமாக வீட்டுற்குள் ஓடியவள் எதையோ எடுத்துக் கொண்டு திரும்பி மீண்டும் இறுதி ஊர்வலத்தின் பின்னே ஓடினாள்.

ப்ரணவ்வுடைய உடல் அந்த இடுகாட்டை வந்தடைந்தது. விறகு வைத்து அடுக்கப்பட்ட அந்த படுக்கையில் அவனது உடல் கிடத்தப்பட்டது. முழுவதும் வறட்டி வைத்து அவன் உடல் மூடப்பட, முகம் மட்டும் தான் தெரிந்தது. அவனுடைய முகத்தை விழியகலாது கண்களாலேயே பருகிக் கொண்டு இருந்த நேரம் அவனது முகமும் மூடப்பட்டு அவன் உடலை தீயில் இட்டனர்.

அந்த உடல் தீயிற்கு இரைப்பட்டு காற்றோடு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு இருந்தது.

அவளது உயிரின் உடலை அதன் இறுதி வாசத்தை  முழுவதுமாய் தன் நாசியில் நிறைத்துக் கொண்டாள். அவன் உடலின் அணுக்களை அவளது  உடம்புக்குள் வாங்கிக் கொண்டது போல் இருந்தது. இப்போது அவனது உயிரும் உடலும் எங்கேயும் விட்டுப் போகவில்லை அவளது மனதிலும் நாசியிலும் முழுவதாய் நிறைத்துக் கொண்டுவிட்டாயிற்று.

உள் இழுத்துக் கொண்ட அந்த சுவாசத்தை வெளிவிடாமல் வேகமாக அங்கிருந்து ஓடி மரத்தின் பின்னால் நின்று கொண்டு அந்த விஷ பாட்டிலை வேக வேகமாக திறந்தாள்.

உள்ளே இழுக்கப்பட்ட அவனின் உயிர் மூச்சு வெளியே விடுவதற்குள் தன் உயிரின் மூச்சை நிறுத்திவிட வேண்டும் என்று அவள் அந்த விஷத்தை உள்ளே நிறைக்க முயன்ற போது அந்த பாட்டில் தட்டிவிடப்பட்டது.  அவள் திரும்பி நோக்க அங்கே வினய் நின்று இருந்தான்.

அவனை கோபமாக முறைத்தவள் கீழே விழுந்த அந்த விஷ பாட்டிலை தேடி மீண்டும் குடிக்கப் போனாள். அவளிடம் இருந்து அதை விடாப்பிடியாக பிடிங்கியவனை கொல்லும் பார்வை பார்த்தாள்.

“ஏன் வினய் தட்டிவிட்ட.. நான் ப்ரணவ் கிட்டே போணும்… என்னை விடு.. என்னை சாகவிடு.. ” என்று அவனது மார்பில் வேக வேகமாக அடித்தவளை அவன் தடுக்கவில்லை. அடித்து அடித்து ஓய்ந்துப் போய் அவளே தளர்ந்து கீழே அமர்ந்தாள்.

“உத்ரா ப்ளீஸ் டி.. நீ இப்படி ஒரு முடிவை எடுக்கிறதை பார்த்து ப்ரணவ் சந்தோஷப்படுவான்னா நினைக்கிற? கண்டிப்பா இல்லை.. என் உத்ராவா  இந்த மாதிரி முட்டாள்தனமான முடிவை எடுத்தானு உன்னை வெறுக்க தான் செய்வான்.. நீ  ப்ரணவ்வோட வெறுப்பை சம்பாதிக்க போறீயா?” என அவன் கேட்க இவள் இல்லை இல்லை என்று தலையாட்டினாள்.

“அப்படினா இந்த முட்டாள் தனமான முடிவை எடுக்காதே உத்ரா.. ப்ரணவ் உன்னை விட்டு எங்கேயும் போகல மா. உன் மனசுக்குள்ள தான் இருக்கான்.. அவன் உயிரை இந்த சின்ன பையனுக்கு கொடுத்துட்டு தான் போய் இருக்கான்…” என்று வினய் ப்ரணவ்வால் விபத்தில் காப்பாற்றப்பட்ட அந்த பையனை காண்பித்தான்.  இவள் நிமிர்ந்து அந்த குழந்தையை பார்த்தாள்.

ஆம் ஆம் ப்ரணவ்வின் உயிர் போகவில்லை. அவனின் உயிர் இந்த குழந்தையின் வடிவில் தான் இருக்கின்றது. தன் உயிரின் வெளிச்சத்தை  அவன் இந்த சிறுவனுக்கு கிடத்திவிட்டு அணைந்து போய்விட்டான்.  இந்த சிறுவனின் வெளிச்சத்தை நான் அணையவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். உறுதியுடன் நிமிர்ந்தாள். பாசத்துடன் அந்த சிறுவனைப் பார்த்து பெயர் என்ன என்று கேட்க அவன் முழித்தான்.

“இல்லை அக்கா.. எனக்கு பெயர்லாம் யாரும் வைக்கல.. சின்ன வயசுல இருந்து நான் அனாதை.. பிழைக்கிறதுக்காக தான் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்… ஒன்னுக்கும் ஆகாத இந்த உயிரை காப்பாத்துறதுக்காக அந்த அண்ணா ஏன் உயிரை விட்டுச்சுனு தெரியல” என்று பத்தே வயதான அந்த குழந்தை பெரிய மனுஷத்தனமாய் பேசினான்.

அந்த குழந்தையை காண காண அவள் கண்களில்  கனிவு பொங்கியது.

“நான் உனக்கு அக்கா இல்லை.. இனி உன் அம்மா.. உன் பேரு இனி மேல் இருந்து விமல் ” என்றாள்.

விமல் என்ற பெயரை தான் தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டும் என்று ஒரு முறை ப்ரணவ் சொல்லி இருந்ததால் அந்த பெயரை வைத்து அந்த சிறுவனை தன் மகனாகவே ஏற்றுக் கொண்டாள் உத்ரா.

ப்ரணவ்வுடைய அம்மாவும் வருத்தத்தின் வீரியம் தாங்காமல் சிறிது நாட்களிலேயே இறந்துவிட அவள் வாழ்க்கையின் சொந்தமாக இப்போது வினய்யும் விமலும் மட்டும் தான் மிஞ்சினர். விமலை வளர்க்க வேண்டும் என்பதற்தாக அவள் வாழ வேண்டுமே என்று நாட்களை தள்ளி கொண்டு இருந்தாள்.

அவள் ப்ரணவ் இறந்துவிட்டான் தன்னை விட்டு சென்றுவிட்டான் என்பதை நம்பவே இல்லை. ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை.

ப்ரணவ் இல்லை என்றால் என்ன?

அவளே இல்லாத ஒரு ப்ரணவ்வை தன் மனதினில் உருவாக்கிக் கொண்டாள். தினமும் அவனிடம் பேசுவாள்.. சிரிப்பாள்.. அந்த நாள் எப்படி கழிந்தது என்று ப்ரணவ் இருப்பதாய் நினைத்துக் கொண்டு ஆள் இல்லாத வெற்றிடத்தை நோக்கிக் கொண்டு பேசிக் கொண்டு இருப்பாள்.

அவனும் அவளும் சென்ற இடங்களுக்கு எல்லாம் மீண்டும் சென்று இல்லாத அவனுடன் தன் நேரத்தை செலவழித்துக் கொண்டு இருப்பாள்.  இந்த வாழ்க்கையின் மீதே பிடிப்பற்று போய் வாழாமல் வெறுமனே நாட்களை மட்டும் கடத்தி கொண்டு இருந்தாள்.

இந்த பூமியில் இருப்பதே அவளுக்கு நரகமாய் இருந்தது. எப்போது ப்ரணவ்வுடன் அவன் வாழும் உலகத்தில் சென்று வசிக்கப் போகிறோம் என தன் இறப்புக்காக காத்து கொண்டு  இருந்த அந்த நேரம் தான் அவன் தொலைபேசியில் இருந்து அவளுக்கு குறுஞ்செய்தி வந்து இருந்தது.அதைக் கண்டவள் அதிர்ந்துப் போனாள். அவள் ப்ரணவ் அவளை எப்படி அம்மு என்று அழைப்பானோ அதே போல அந்த குறுஞ்செய்தியில் அம்மு என்று அழைக்கப்பட்டு இருந்தது.

என் ப்ரணவ் இறந்துவிட்டான் தானே? அப்படி என்றால் என் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கும் இந்த ப்ரணவ் யார்? என்ற கேள்வி அவள் உள்ளத்தில்  எழுந்தது பெரியதாக.