தீங்கனியோ தீஞ்சுவையோ

தீங்கனியோ தீஞ்சுவையோ

 கண்ணங்களில் கைகளைத் தாங்கிய படி மேசையின் மீது கிடந்த அந்த அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உத்ரா.

ஒரு கணம் அலைபேசியைப் பார்ப்பதும் அடுத்த கணம் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் இருந்த அவளின் தலையின் மீது தட்டினார் மீனாட்சி.

” ஏன்டி பைத்தியமே அதான் அந்த போன்லயே தான் டைம் தெரியும்ல, அதுலயே பார்க்காம ஏன்டி லூசு மாதிரி போனை ஒரு வாட்டி கடிகாரத்தை ஒரு வாட்டி பார்த்துகிட்டு இருக்க “

” அட ஆமாம்ல ஏன் மா இது எனக்கு தெரியாம போச்சு “

” மூளைனு ஒன்னு இருந்தா அதெல்லாம் தானா தெரிஞ்சு இருக்கும்… உனக்கு எங்கே அது இருக்கு… அதான் இப்படி பைத்தியக்காரி மாதிரி சுத்திக்கிட்டு இருக்க… “

” அம்மா பெத்த பொண்ணுனு கூட கருணை காட்டாம இப்படி என்னை கலாய்க்கிறியே இது நல்லா இல்லை மா. “

” சரி நல்லா இல்லாமயே இருக்கட்டும்… ஏன் அந்த போனை இப்படி வெறிச்சுப் பார்த்துட்டு இருக்க. “

” அந்த ப்ரணவ் போன் பண்ணவே இல்லை மா… எப்பவும் இந்த டைம்ல கரெக்டா போன் பண்ணுவான்… ஆனால் இன்னைக்கு அவன்  பண்ணலயா… அதான் போனை வெறிச்சு பார்த்திக்கிட்டு இருக்கேன்… ஆனாலும் வர வர உன் அண்ணன் பையனுக்கு ரொம்ப தான் கொழுப்பு ஏறிப் போயிடுச்சு… என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான். “

” ஏய் என்ன டி என் அண்ணன் பையனை ரொம்ப தான் திட்டுறே….  அவன் ரொம்ப பொறுப்பான பையனாக்கும்… உன் கிட்டே லாம் பேசி டைம்மை வேஸ்ட் பண்ணாம அந்த நேரத்துல பொறுப்பா வேலை பார்த்துக்கிட்டு இருப்பான். “

” ஐயோ ரொம்ப தான் சப்போர்ட் பண்ற அவனுக்கு… நீ தானே நேத்து அவனைப் பார்த்து நல்லா திட்ட சொன்ன, ஒழுங்கா போன் பண்ண மாட்டேங்குறானு… இன்னைக்கு என்னமோ அவனுக்கு வறிஞ்சு கட்டிக்கிட்டு வந்து வக்காலத்து வாங்குற… “

” ஆமாம் நான் அவனுக்கு வக்காலத்து வாங்குவேன் தான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் கிட்டே போன்ல பேசினான்… இந்த அத்தையை ரொம்ப மிஸ் பண்ணதா சொன்னான்…  அப்படி பாசமா பேசுன அந்த குழந்தைக்கு நான் வக்காலத்து வாங்கலனா வேற யாரு வாங்குவா??”

” அம்மா என்னமா சொல்ற அவன் உன் கிட்டே பேசுனானா??”

” ஆமாம்டி நேத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் நாலு வாட்டி போன் பண்ணி பேசுனான் குழந்தை”

” மா போதும் நிறுத்து நல்லா தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கிறவனைப் பார்த்து குழந்தைனு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்… அடுப்புல என்னமோ கருகுற வாசனை வருது போய் என்னனு பாரு…. “

” எனக்கு என்னமோ அடுப்புல இருந்து வந்தா மாதிரி தெரியல… உன் வயித்துல இருந்து வரா மாதிரி தான் தெரியுது…. “

” அதான் தெரியுதுல என்னை ஏன் மா இப்படி வெறுப்பு ஏத்துற… ஒழுங்கா போ , போய் சமையல் வேலையைப் பாரு… எனக்கு பசிக்குது… ” என்று அவரை அனுப்பிவிட்டு மீண்டும் வந்து அலைபேசியைப் பார்த்தாள்.அதை எடுத்து உடைத்துப் போடும் அளவிற்கு கோபம் வந்தது.

அவன் அவளிடம் பேசாமல் அவள் தாயிடம் பேசியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்னும் நினைப்பே மருந்து போல் கசந்தது. அவன் அன்பு அவன் நேரம் முழுமையும் முதலில் தனக்கு கிடைக்காமல் போனது அவளை வருத்தியது.

என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றான் இவன்? ஏன் என்னை ஒதுக்குகிறான்?அவனுக்கு மட்டும் தான் என்னை ஒதுக்க தெரியுமா??

நானும் அவனுக்கு சளைத்தவள் இல்லை. அவன் என்னை அலைபேசியில்  அழைக்கட்டும் அந்த அழைப்பை  ஏற்காமல் தவிக்க விடுகிறேன் அவனை.

அவன் என்னை புறக்கணித்தது போல நானும் பதிலுக்கு அவனை புறக்கணித்துக் காட்டுகிறேன்.
என அவன் அழைப்பிற்காகவும் அந்த அழைப்பை புறக்கணிப்பதற்காகவும் மீண்டும் அந்த அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

புறக்கணிப்பதற்காகவே நெருங்கும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்து கொண்டு இருக்கும் முட்டாள்தனம் எங்கும் உண்டோ? உண்டு இந்த காதலில் உண்டு.

“ஏன் டா சீக்கிரமா கால் பண்ணி தான் தொலையேன்.  நான் நீ பண்ற காலை கட் பண்ணிட்டு உன் கிட்டே பேச முடியாதுனு கோபமா  சொல்லிட்டு தூங்கப் போகணும். ” என்று அந்த அலைப்பேசியை பார்த்தபடியே பேசிக் கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்தில் உறங்கியும் போனாள்.

இங்கேயோ அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு இருந்த ப்ரணவ்வின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் சோர்ந்து போனது.

“நான் கால் பண்ணலனா அவளா எனக்கு கால் பண்ணி பேசுவானு நினைச்ச என் நினைப்பு எல்லாம் இப்படி பொய்யா போச்சே. நான் கால் பண்ணாதது அவளுக்கு அப்போ பெருசா தெரியலயா???. இயல்பா அதை ஏத்துக்கிட்டு கடந்து போய்ட்டாளே?? அவளுக்கு நான் ஸ்பெஷல் இல்லையா?? என் ஒதுக்கம் அவளுக்கு வருத்தத்தை தரலயா?? அவளை விட்டு தள்ளி நிற்கிறதே அவள் என் கிட்டே நெருங்கி வரதுக்காக தானே… ஆனால் அவள் என்னை விட்டு இன்னும் தூரமா போனா மாதிரி இருக்கே… இதுக்கு மேலே கண்டிப்பா அவள் போன் பண்ண மாட்டா… நல்லா கும்பகர்ணியாட்டம் தூங்கியிருப்பா… ஆனால் அவள் கிட்டே பேசாம எப்படி என்னாலே தூங்க முடியும்… பேசாம நாமளே அவளுக்கு போன் பண்ணி பேசிடுவோம் ” என எண்ணியவன் அவளை அழைக்க எதிர்முனையில் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தவள் அந்த உறக்கத்தினூடே போனை தேடிக் கண்டுபிடித்து காதுகளில் வைத்தாள்.

யார் அழைத்தார்கள் என்று அவள் மொபைலின் திரையில் பார்க்கவில்லை. அவளுக்கு தெரியாதா யார் அழைத்து இருப்பார்கள் என்று.

வேகமாக ஆன் செய்து ” நான் உன் கிட்டே பேசப் போறது இல்லை… பாய்… போ உன் சொத்தை கிட்டேயே பேசு என் கிட்டே பேச இனி உனக்கு எங்கே டைம் இருக்கப் போகுது…. இனி எனக்கு கால் பண்ற வேலை வெச்சுக்காதே…. நான் கோபமா போனை வைக்கிறேன். ” என்று படபடவென பேசியவள் போனை அணைத்ததற்கான அறிகுறியாய் டொய்ங் டொய்ங் என்ற ஒலி எதிர்முனையில் அவன் காதுகளில் ஒலித்தது.

ஒரு நிமிட உரையாடல் என்றாலும் அது  உயிர் வரை சென்று வறண்டு போய் இருந்த இதயத்தை முழுதாய் குளிர்வித்தது.

அவள் தன்னை தேடியிருக்கிறாள். தன்னிடம் பேசுவதற்காக காத்துக் கொண்டு இருந்து இருக்கிறாள். பேசவில்லை என்றதும் கோபம் அடைந்து இருக்கிறாள். அந்த கோபத்தினால் விளைந்த சுடுசொற்கள் தான் இவை.

ஏனோ அந்த சுடுசொற்கள்  இவன் நெஞ்சை எரிப்பதற்கு மாறாக குளிர்வித்து சென்றது.

நான் அழைப்பதற்காக ஏங்கி இருந்து இருக்கிறாள். நான் அலைபேசியைப் பார்த்து  தவம் இருந்தது போல் தான் அவளும் அலைபேசியைப் பார்த்து  காத்து கொண்டு இருந்து இருக்கிறாள்.

சே இதுவரை விளையாடியது போதும்.  இனி அவளை ஏங்க வைக்கக்கூடாது. இனி அவளை காயப்படுத்தி தன் மீது அவள் காதல் கொண்டு இருக்கிறாளா என அறிய முற்படக்கூடாது. அவளுக்கு என் மீது காதல் இருக்கிறது தான். ஆனால் அந்த கள்ளி தான் நடித்துக் கொண்டு இருக்கிறாள்.

எப்படி நிலா தன்  பிரகாசத்தை முழுதாக மறைத்துக் கொள்வதாய் எண்ணி முகிலின் ஊடே சென்று மறைந்து கொண்டாலும் அங்காங்கே ஒளி சிதறி காட்டிக் கொடுப்பதை போல அவளது காதலும் சிதறல் சிதறலாய் இவனுக்கு தெரிய தான் செய்தது. அந்த சிதறல் காதலினூடே ஒளிந்து இருக்கும் முழுக் காதலை முழுதாய் நான் கண்டுபிடிக்க தான் போகிறேன்.

ஐயோ கண்டுபிடித்துவிட்டாயா என  அவள் சமாளிக்கும் குழந்தை சிரிப்பை கண்டு ரசிக்க தான்  போகிறேன் என்று பல பல சிந்தனைகளோடு அவளோடு மனதிற்குள் பேசியபடியே உறங்கியும் போனான்.

அதிகாலை விழித்ததும் முதல் வேலையாய் அவளுக்கு போன் செய்தான்.  ஆனால் மறுமுனையில் இருந்து அவனுக்கு பதிலாய் டொய்ங் டொய்ங் என்ற சத்தம் தான் கேட்டது.

ராட்சஷி பழி வாங்குகிறாள் என்று செல்லமாய் கடிந்து கொண்டான். அன்று ஒரு நாள் மட்டும் பத்து நிமிடத்திற்கு ஒரு தரம் என்ற வீதம் அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் மறுமுனையில் இருந்து புறத்கணிப்பு மட்டுமே பதிலாக வந்தது.

” ஓ இப்போ மேடமோட ரிவெஞ்ச் டைம்மா. பார்க்கிறேன் எவ்வளவு நேரத்திற்கு தான் இப்படி அவாய்ட் பண்ற அப்படினு. ” என்று எண்ணியவாறே தொடர்ந்து கால் செய்து கொண்டே இருந்தான். அழைத்தவனுக்கு எப்படியோ ஆனால் நிராகரித்த அவளுக்கு மனம் மகிழ்ந்தது.

தன் அன்பிற்காக ஏங்குபவனை நிராகரிப்பதில் மனம் அளப்பரிய சந்தோஷம் கொண்டது. அதுவும்  திரும்ப திரும்ப தன்னை நெருங்க முயற்சிப்பவர்களை நிராகரிப்பதில் பெரு மகிழ்ச்சியே.

அவன் மீண்டும் அழைப்பான் என்ற மனதின் நம்பிக்கையே அந்த போலி நிராகரித்தலுக்கு விதையாய் இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் அவள் தனக்கு வந்த கால்களை கட் செய்து கொண்டே இருந்தாள்.

ஆனால் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அழைத்தவன் கடந்த ஒரு மணி நேரமாய் அழைக்கவில்லை என்றதும் மனம் கவலை கொண்டது.

” ஐயையோ விடாம கட் பண்ணதுல கடுப்பு ஆகிட்டானோ??. என்ன போனையே காணோம்… ரொம்ப தான் வெறுப்பு ஏத்திட்டோம் போல… சே பாவம் குழந்தை என் கிட்டே பேச ஆசையா போன் பண்ணி இருப்பான்… ஆனால் நான் தான் மடச்சி மாதிரி அந்த காலை எல்லாம் கட் பண்ணி விட்டுட்டேன்… இப்போ கோபமா இருப்பானோ? மறுபடியும் போன் பண்ண மாட்டனோ???” என்ற யோசனையில் இருக்கும் போதே மீண்டும் அழைப்பு வந்தது.  முதல் ரிங்கிலேயே அட்டென்ட் செய்தவள் ஹலோ என்று சொல்ல எதிர் முனையில் அவனிடம் மௌனம் நீடித்தது.

ஆண்டாடுகள் கழித்து அவள் குரலைக் கேட்பதுப் போல் ஒரு பிரம்மை. அவள் தன்னிடம் பேசாமல் இருந்தது ஒரே ஒரு நாள் தான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஒரு யுகப் பிரிவை இந்த ஒரே நாளில் அடைந்ததாய் உணர்ந்தது அந்த மாயை மனம். அந்த பிரிவின் வேதனை உந்தியதாலோ என்னவோ இவன் குரல் வளையில் இருந்து ஒலியே வரவில்லை.

” டேய் என்னடா என் கிட்டே பேசவே மாட்டேங்குற… நான் சும்மா தான் கட் பண்ணிட்டு இருந்தேன்… கோபம்லாம் படாதே ப்ளீஸ்… என் கிட்டே பேசு ப்ரணவ்” என்று அந்த நிமிட நேர மௌனத்தைக் கூட பொறுக்க முடியாதவளாக பேசினாள்.

ஆனால் இவள் தான் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தால் இதே இவள் தான் இப்போது அவன் வெறுப்பாகிவிட்டானோ என எண்ணி வருத்தப்பட்டும் கொண்டு இருக்கிறாள்…

அவனை வருத்தி சந்தோஷம் காணலாம் என நினைத்தால் இந்த பாழாய் போன மனம் அவனை விட இரண்டு மடங்கு வருத்தம் கொள்கிறது. இந்த மனதிற்கு என்ன தான் ஆயிற்று. காதலாகிப் போனாளே இது தான் நிலையோ??

இன்னும் அவனிடம் இருந்து எதிர்மொழி வரவில்லையே என தவிக்கும் இதே மனம் தானே அவன் எதிர்மொழி பேசக்கூடாது என்று சொல்லி அழைப்பை ஏற்க மறுத்தது.

இப்போதானால் அவன் பேசவில்லை என்று கண்ணீர் வடிக்க தயாராய் கண்களை வைத்துக் கொண்டு இருக்கிறது. ஏய் மனமே உனக்கு என்ன தான் வேணும்???… என்று கேட்க அது பதிலிற்கு அவன் தான் வேண்டும் அவன் அன்பு ஒன்று தான் வேண்டும் என்று பதிலளித்தது.

” உத்ரா ” என சில நிமிடங்கள் கழித்து ப்ரணவ்வின் குரல் ஒலிக்க அதுவரை கண்களின் ஓரம் உறைந்து போய் இருந்த கண்கள் திரவப் பாகாய் பெருக்கெடுத்தது.

” ப்ரணவ்” என்று சொல்லியவளின் குரலில் கண்ணீர் தடம்.அதைக் கண்டுகொண்டவனின் குரல் இப்போது பதற்றமாய் ஒலித்தது.

” ஹே என்னடி ஆச்சு. அழறயா உத்ரா??. ” என்று அவன் கேட்க இவளோ அவன் போனில் பேசுகிறான் என்பதையே மறந்து நேரில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையசைத்து கொண்டு இருந்தாள்.

அலைப் பேசியில் மறுமொழி வராததைக் கண்டவன் ” ஏதாவது பேசு உத்ரா… ஏன் அழற??… என்ன ஆச்சு… எனக்கு பதில் சொல்லு ” என்று கத்தினான்.

அவனது கத்தலில் இயல்புக்கு வந்தவள் ” நான் முன்னாடியே தலையசைச்சு ஆமாம்னு பதில் சொல்லிட்டேன்.. நான் அழுதுகிட்டு இருக்கேன் ப்ரணவ்… “

” ஹே பைத்தியம் போன்ல தலையசைச்சா எனக்கு எப்படி தெரியும்… ஏன்டி அழற??”

” நீ நேர்ல இருக்கிறா மாதிரி தோணுச்சு அதான் தலையசைச்சேன். ஏனோ தெரியல ப்ரணவ். எனக்கு அழணும் போல இருக்கு… என்னை அழ விடு… ஏதோ பல யுகம் கழிச்சு உன் குரலை கேட்கிறா மாதிரி இருக்கு.”

” எனக்கும் அப்படி தான் இருக்கு… இந்த பைத்தியத்தோட குரல் கேட்காம அந்த நாளே கடந்து  போகாத மாதிரி இருக்கு. “

” யூ யூ ப்ரணவ்… யாரைப் பார்த்து பைத்தியம் னு சொல்ற… “

“உன்னை தான் மெண்டல் சொல்ற “

” நானா மெண்டல் நீ தான் டா மெண்டல்… அரை வேக்காடு… அரை போதை… கரப்பான்பூச்சி மண்டையா… “

” அடிங்க என்னையா கரப்பான்பூச்சி மண்டைனு சொல்ற”

” yes of course ” என்று அன்பில் ஆரம்பித்து செல்ல சண்டையாய் தங்கள் பாசத்தை அந்த அலைபேசி வழியாய் அளவளாவி கொண்டு இருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!