இந்த இரண்டு மாதங்களாக பிரணவ் அவளை பார்ப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவன் அவளை தனிமைக்கு பழக்கி இருந்தான்.அந்த தனிமை அவளுக்கு பயங்கரமாய் இருந்தது. ஏன் இப்படி ப்ரணவ் மாறிப் போனான்.
ஏன் அவன் பக்கத்து விளக்கங்களை கூட என்னிடம் சொல்லி என்னை சமாதானப்படுத்தவில்லை?
காதலை சொல்லும் வரை இந்த காதலை பாதுகாக்கும் பொறுப்பு அவனிடம் இருந்தது. காதல் சொல்லிய பின்பு அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டான்.
நான் காதலை ஏற்கும் வரை நிறைய சாகசங்கள் அவன் செய்தான். நான் காதலை சொல்லிய பிறகு அந்தக் காதலை காப்பாற்றி கொள்ள இப்போது என்னை நிறைய சாகசங்கள் செய்ய வைக்கின்றான்.
நான் அவனுக்கு கிடைப்பதற்கு முன் என்னை பண்டிகைப் போல கிடைத்தற்கு அரிய பொக்கிஷத்தைப் போல கொண்டாடியவன், இப்போது நான் கிடைத்தவுடன் எங்கேயோ தூக்கி தூரப் போட்டுவிட்டான். கிடைக்கும் வரை தான் கொண்டாடப்படுவோம் போல.
விரக்தியில்
இதழ்கள் சுழிந்தது..
இப்போது கூட என்னை காக்க தான் வைக்கின்றான். வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிறது. இன்னும் அவன் வந்த பாடில்லை.
இன்று அவர்கள் காதல் சொல்லி இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது.
இந்த பூங்காவில் சந்திக்கலாம் என்று நேற்றே அவனிடம் சொல்லி இருந்தாள். ஒரு வேளை மறந்துப் போய் இருப்பானோ?
நேற்று கூட அவனிற்கு நினைவுப்படுத்தினேனே. மறுபடியும் நினைவுப்படுத்துவதற்காக அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவிட்டு காத்து இருந்தவள் கண்களை சுழலவிட்டாள்.
தூரத்தில் ஒரு ஜோடி காதலில் திளைத்து இருந்தது. கண்களிலே காதல் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் காதல் கூத்தாடியது. அவர்களின் பேச்சின் முகபாவனையில் காதலின் அச்சு பொறிந்து இருந்தது. அவர்களைப் பார்த்ததும் பெருமூச்சுவிட்டாள் உத்ரா.
காதலின் துவக்கத்தில் இப்படி தான் இருக்கும். எல்லா செயலிலும் காதல் வழியும். போக போக தான் காதலின் சுயரூபம் தெரியும் என்று அவர்களைப் பார்த்து சலித்துக் கொண்டாள்.
நாமும் ஒரு காலம் இப்படி தானே இருந்தோம். இப்போது இந்த நிலையில் காதல், என்னை நிற்க வைத்துவிட்டதே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு தான் அந்த சலிப்பு.. அந்த பெருமூச்சு.
“என்ன டாம் பெருமூச்சுலாம் பலமா இருக்கு.” என்று வினய்யின் குரலைக் கேட்டு திரும்பினாள்.
“ஒன்னும் இல்லை ஜெர்ரி.. ”
“இல்லை டாம் நீ என் கிட்டே பொய் சொல்ற. உண்மையை சொல்லு. இப்போ எல்லாம் உன் முகத்துல சிரிப்பே இல்லை. உன் செயல இப்போ எல்லாம் துருதுருப்பும் இல்லை. முன்னாடி எவ்வளவு ஜாலியா ஹேப்பியா இருப்ப. இப்போ ஏன் ஏதோ சோர்ந்து போய் இருக்கு. உன் பிரச்சனையை வெளிப்படையா சொல்லு டாம். நான் எனக்கு தெரிஞ்ச solutions சொல்றேன்.”
“இதுவரை என் எல்லா ப்ராப்ளமும் நான் உன் கிட்டே சொல்லி இருக்கேன் ஜெர்ரி… ஆனால் இதை என்னாலே சொல்ல முடியல.. ஏதோ ஒன்னு என்னை தடுக்குது .. ”
“என்ன தடுக்குது டாம்??”
“அது நீ என்னை propose பண்ணல அது தான் தடுத்குது ஜெர்ரி.. இல்லாட்டி நான் இந்த பிரச்சனையை முன்னாடியே ஷேர் பண்ணி இருப்பேன்.. ”
“ஹே பைத்தியம் நீ அதை மறந்துடு.. எப்போ உன் மனசுல வேற யாரோ இருக்காங்கனு தெரிஞ்சுதோ அப்பவே நான் உன் கிட்டே என் லவ்வை express பண்றதை நிறுத்திட்டேன்.. இப்போ friendship ஐ தான் express பண்ணிட்டு இருக்கேன்..
உன் மேலே இருக்கிற காதல் அப்படியே இருக்கு அது நிஜம் தான்..ஆனால் நான் அதை உன் கிட்டே காட்டி உன்னை சங்கடப்படுத்த மாட்டேன். உன்னை அடைய முயற்சிலாம் பண்ண மாட்டேன். அது சத்தியம்.. உனக்கு நம்பிக்கை இருந்தா என் கிட்டே ஷேர் பண்ணலாம்” என்றான்.
அவன் மேல் அவள் வைத்து இருக்கும் நம்பிக்கை அவளை வாய் திறந்து பேச வைத்தது. அவனையும் ப்ரணவ்வையும் தவிர்த்து அவள் வாழ்க்கையில் நட்பு பாராட்ட யாரும் இல்லை. தன்னுடைய ஆதங்கத்தை அவளின் இன்னொரு நண்பனான வினய்யிடம் கொட்ட ஆரம்பித்தாள்.
“ஜெர்ரி,
லவ் சொன்ன கொஞ்ச நாளிலேயே பசங்களுக்கு அந்த லவ் சலிச்சு போயிடுதே ஏன்?” என கேட்க அவளை புன்னகையுடன் பார்த்தான்.
“அட லூசு டாம் , அதெல்லாம் இல்லை. ஆமாம் நீ எதை நீ எந்த காரணத்தை வெச்சு சலிச்சு போயிடுச்சுனு சொல்ற.. ”
“முன்னாடிலாம் நிறைய ஐ லவ் யூ சொல்லுவான்.. இப்போலாம் சொல்றதே இல்லை.. ”
“ஐயோ டாம் அப்படி இல்லை.. எப்போ ஐ லவ் யூ ஐ, லவ் யூ னு சொல்லறது கம்மியா ஆகுதோ அப்போ தான் அந்த வார்த்தை இல்லாமயே நம்ம காதல் தனிச்சு இயங்குற அளவுக்கு வளர்ந்துடுச்சுனு ஒரு ஆண் புரிஞ்சுக்கிறான்.. அதனாலே தான் அவன் ஒரு கட்டத்துக்கு மேலே நிறைய ஐ லவ் யூ சொல்றது இல்லை. அந்த ஒரு சின்ன வார்த்தைக்குள்ளே அவன் காதலை அடைச்சி வைச்சுட முடியாதுனு அவன் உணர டைம் ஐ லவ் யூ சொல்றது கம்மி ஆகி இருக்கும்.’
“வினய் உண்மையாவா சொல்ற??.. சரி நீ சொல்றது உண்மைனே வெச்சுப்போம்.. ஆனால் இப்போ எல்லாம் சரியா என்னை கவனிக்கக்கூட மாட்டேங்குறான்..”
“ஹே டாம்.. ஆரம்பத்துல கொடுத்த அதிக முக்கியத்துவம் தான் இப்போ சின்ன நிராகரிப்பை கூட தாங்க முடியாத அளவுக்கு உன் மனசை மாத்தி வெச்சுடுச்சு. நீங்க காதல்க்கு நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சு இருக்கீங்க. அதான் சின்ன சின்ன விஷயம் கூட உன்னை காயப்படுத்துது. ”
“அப்படின்ற வினய்… ”
“அப்படி தான் உத்ரா.. ”
“கண்டிப்பா ப்ரணவ் பக்கம் நியாயம் இருக்கும். அவன் பக்கத்து நியாயத்தை உன் கிட்டே சொல்லைலன்றதுக்காக அவன் மேலே நியாயமே இல்லைனு அர்த்தம் இல்லை. அவனுக்கு சொல்ல சமயம் வாய்க்கல டாம். அவன் சரியான நேரத்துல அவனைப் பத்தி explain பண்ணுவான். நீ அதிகம் யோசிக்காம, இப்படி உன் மூளையை பிச்சுக்காம இரு டாம்… ” என்று அவன் சொல்ல மனம் கொஞ்சம் சமன்பட்டாலும் முழுதாய் சமன்படவில்லை.
“அவன் என் அன்பை மதிக்காம இருந்தா கூட நான் இப்படி ஃபீல் பண்ணி இருக்க மாட்டேன்.. ஆனால் என் கோபத்தைக் கூட பொருட்படுத்தாது தான் மனசு கஷ்டமாக்கிடுச்சு ஜெர்ரி..”
“டாம் இப்போ அவன் பார்த்து பார்த்து உன்னை கவனிச்சுக்க நீ என்ன அவன் விருந்தாளியா??.. எப்பவோ அவன் சொந்தக்காரி ஆகிட்ட… நீயே புரிஞ்சுப்பேனு அவன் நினைச்சுட்டு இருக்கான்.. அவன் கொஞ்சம் ப்ரீ ஆனதும் அவன் கூட மனசு விட்டு பேசு டாம்.. உன் கோவத்தை எல்லாம் கொட்டிட்டு அவன் மேலே இருக்கிற காதலை மட்டும் திரும்ப எடுத்துக்கோ.. அவன் கிட்டே பேசுன அப்புறம் எல்லா மனத்தாங்கலும் பறந்து ஓடிடும் பாரு” என்று அவன் சொல்ல பல நாட்கள் கழித்து மனம் விட்டு புன்னகைத்தாள்.
மனதில் அமுங்கி இருந்த பாரம் எல்லாம் வெளியே வந்துவிட்டது. பல நாட்கள் கழித்து மீண்டும் பழைய உத்ராவாக மாறி இருந்தாள். கண்களில் தெறித்த துள்ளலுடன் வினய்யை நோக்கினாள்.
“எனக்கு உன்னையும் ப்ரணவ்வையும் தவிர்த்து ப்ரெண்ட்ஸ்னு யாருமே இல்லை… அவன் மேலே இருக்கிற மனத்தாங்கலை கூட உன் கிட்டே ப்ரீயா ஷேர் பண்ண முடியாம மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிட்டு இருந்தேன் தெரியுமா?.. ஆனால் நீ ரியலி ஸ்வீட் வினய்… நான் உன் காதலை மறுத்தும் கூட எப்போவும் போல என் ப்ரெண்டா இருக்க.. என் மனத்தாங்கலை தீர்த்து வைக்கிற.. ரியலி யூ ஆர் ஸ்வீட்…. நான் மட்டும் ப்ரணவ்வை சந்திக்கிறதுக்கு முன்னாடி உன்னை சந்திச்சு இருந்தா உன்னை தான் காதலிச்சு இருந்து இருப்பேன்… ” என்று சொல்லி அவனை கட்டி அணைத்தாள்.
அந்த அணைப்பு தாய்மையின் அணைப்பு, சந்தோஷத்தின் அணைப்பு ஆனால் காதலின் அணைப்பு மட்டும் அல்ல என்று வினய்யிற்கு நன்றாக தெரியும். ஆதலால் சலனப்படாமல் நின்று கொண்டு இருந்தான்.
அவனை அணைத்தவள் மெதுவாக அவன் காதுகளில் ரகசியம் சொன்னாள்.
“ஆனால் பாரு இந்த ராட்சஷி ப்ரணவ்க்கு தானு எழுதி இருக்கு… ” என்றவளது வார்த்தைகள் காதுகளில் பாய அவன் மெல்லியதாய் சிரித்தான். ஆனால் அந்த சிரிப்பினில் வலி கலந்து இருந்தது.
அவள் அவனிடம் இருந்து தன் அணைப்பை விலக்கிக் கொண்டு திரும்பி பார்த்தாள்.
பல மாதங்கள் தாகித்து இருந்த விழிகளுக்கு அமிர்தம் கிடைத்தது போல இருந்தது. ப்ரணவ் என்றாள் காதல் வழிந்த குரலில்.. ஆனால் அவன் பார்வையிலோ கோபம் வழிந்து கொண்டு இருந்தது.
“இங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாமா?” என்ற ப்ரணவ்வின் குரலில் கோபத்தின் உச்சம் தெரிந்தது.