பல கனரக வாகனங்களும், சின்னஞ்சிறு வாகனங்களும் கடந்து செல்லும் பூஞ்சோலைநகர் எனும் வளர்ந்து வரும் அந்த நகரின் பிரதான வீதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்த குடியிருப்பு பகுதி காலை நேரத்திற்குரிய எவ்வித பரபரப்பும் இன்றி வெகு அமைதியாக காணப்பட்டது.
அந்தப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சில வீடுகள் அடிப்படை வசதிகளுடனும், இன்னுமொரு சில வீடுகள் அடிப்படை வசதிகளின்றியும் காணப்பட, சூரியனின் கதிர்களின் அளவில்லா வெளிச்சம் கண்டு அந்தக் குடியிருப்பு வாசிகள் மெல்ல மெல்லத் தங்கள் வீடுகளிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தனர்.
ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்து கொண்டிருந்த அந்தக் குடியிருப்பு வாசிகளைப் பார்க்கும் போதே தெரிந்தது அந்தப் பகுதி மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கியிருக்கும் பகுதி என்பது.
ஊரை விட்டு சற்று வெளியே தனிமையில் அமைந்திருக்கும் அந்த பகுதி மூன்றாம் பாலினத்தவர்கள் தங்குவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பகுதிதான் அங்கிருக்கும் அனைவருக்கும் சுவர்க்க பூமி.
மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் போது அதில் திருநம்பிகள், திருநங்கைகள், இடையிலிங்க பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இன்னும் சில பிரிவினரும் அடங்குவர்.
இப்படியான மூன்றாம் பாலினத்தவர்களில் இடையிலிங்கப் பிரிவைச் (intersex) சேர்ந்தவர்களுள் ஒருவள்தான் நம் நாயகி அருந்ததி.
அருந்ததி பார்ப்பதற்கு எல்லாப் பெண்களையும் போல சாதாரணமானவளாக வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும், அவளது உள் உட்கட்டமைப்பு ஆண்களுக்கான கட்டமைப்பை ஒத்தது.
அருந்ததி பிறக்கும் போதே அவளது இந்த உடல் வேறுபாட்டைப் பற்றி அவளது பெற்றோரிடம் வைத்தியர்கள் தெரிவித்திருக்க, அதை ஏதோ ஒரு பாரிய தவற்றை போல நினைத்த அவளது பெற்றோர் அவள் பிறந்த அடுத்த நாளே அவளை இந்தப் பகுதியில் விட்டுவிட்டு வேறு ஊருக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
தன் தாயின் கருவறைச் சூட்டைக் கூட மறந்திராத ஒரு பச்சிளம் குழந்தையை அனாதரவாக விட்டுச் சென்றிருக்கும் அந்த குழந்தையின் பெற்றோரை எண்ணி வியந்து போன அந்த மக்கள் அந்தக் குழந்தையை தங்களில் ஒருவராக நினைத்து வளர்க்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினர் அந்தக் குழந்தையை பொறுப்பெடுத்து பார்க்கத் தொடங்கியிருக்க, அந்தக் குழந்தையை பார்த்த நொடி முதல் அதன் மீது இனம் புரியாத ஈர்ப்பைக் கொண்டிருந்த வைஜெயந்தி என்பவர் அந்தக் குழந்தையை தனது குழந்தையாக எண்ணி வளர்க்க ஆரம்பித்திருந்தார்.
வைஜெயந்தியும் மூன்றாம் பாலினத்தவரை சேர்ந்த ஒரு நபர்தான்.
வைஜெயந்தி பிறப்பால் ஆணாக இருந்தாலும் நாளாக நாளாக அவருக்குள் பெண்களுக்கான உணர்வுகளே சுரக்க ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் அவரது நடவடிக்கை மாற்றங்களைப் பார்த்து உடல் ரீதியாக அவரைத் தண்டித்த அவரது பெற்றோர் அவரது பிடிவாதக் குணத்தைப் பார்த்து சமூகத்தின் கேலிப் பேச்சுக்கு அஞ்சி அவரை உயிருடன் எரிக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.
ஆனால் அந்த இறைவனின் கருணையினால் அங்கிருந்து தப்பிச் சென்றவர் இன்று வைஜயந்தியாக அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஒரு தலைவராக, அருந்ததியின் அன்னையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது.
“அம்மா! எனக்கு ஒரு கப் காஃபி” தலை முதல் கால் வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தன் குரலை மட்டும் வெளிப்படுத்தியபடி கட்டிலில் படுத்துக் கிடந்த அருந்ததியின் அருகில் வந்து நின்ற வைஜயந்தி,
“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், காலையில் பல்லு கூட விளக்காமல் என்கிட்ட காஃபி கேட்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?” என்றவாறே அவளது போர்வையை விலக்க,
“ம்மா! போர்வையைக் குடும்மா, ரொம்ப குளிருது” என்றபடியே தன் கண்களைக் கசக்கி கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“இப்போ என்ன, நான் பல்லு விளக்காமல் காஃபி கேட்கக்கூடாது அவ்வளவு தானே? இப்போ பாருங்க” என்று விட்டு தன் தலையணைக்கு அருகில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தனது பிரஷ் மற்றும் பேஸ்ட்டை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டு அவரைப் பார்த்து புன்னகைக்க, அவரோ அவளை முறைத்துப் பார்த்துபடி நின்று கொண்டிருந்தார்.
“வை மம்மி, வை? காலையிலேயே எதற்காக இவ்வளவு கோபம்? நீங்க இப்படியே கோபமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோட்டில் ட்ராஃபிக் லைட்டே தேவைப்படாது, உங்க ரெட் பேஸையே சிவப்பு விளக்குக்கு பதிலாக பயன்படுத்தலாம், பாருங்களேன்” என்றவாறே அவரது கன்னத்தில் தன் கையை வைக்கப் போக,
அவளது கையை தள்ளி விட்ட வைஜயந்தி, “உன் வாய்க்கு ஓய்வே கிடையாதா? எப்போ பாரு லொட லொடன்னு பேசிட்டே இருக்கும். போ, போய் சீக்கிரம் ரெடியாகு, காலேஜுக்கு லேட் ஆகுது” என்று விட்டு அங்கிருந்து செல்லப் போக,
“இந்த லொட லொட பேச்சைக் கேட்கலேன்னாதான் என் செல்ல அம்மாவுக்கு தூக்கமே வராதே” என்றவாறே அருந்ததி அவரது கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டு விட்டு ஓடி விட,
“அருந்ததி, உன்னை அடி வெளுக்கப் போறேன், பார்த்துக்கோ. வாயில் பேஸ்ட்டை வைச்சுட்டு என் கன்னத்தை இப்படி பண்ணிட்டியே, நீ குளிச்சிட்டு வா, உனக்கு இருக்கு” என்றவாறே அவள் சென்ற வழியைப் பார்த்து சத்தமிட, அதற்கிடையில் அருந்ததியோ அங்கிருந்து சிட்டாகப் பறந்திருந்தாள்.
வைஜயந்தியுடன் தனது காலை நேர வம்பைத் தொடர்ந்தபடியே தங்கள் வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டவள் அந்த வழியாக சென்று கொண்டிருந்தவரைப் பார்த்து, “வசந்திக்கா! எப்படி இருக்கீங்க? இரண்டு நாளாக ஆளையே காணோம், கல்யாணம் நடக்கப் போகுதுன்னு ஒரே குஷிதான் போல? டேட்டிங் என்ன? அவுட்டிங் என்ன? வாட்சப் ஸ்டேட்ஸ் எல்லாம் சும்மா எகிறுதே, என்ன சங்கதி?” என்று வினவ,
அருந்ததியினால் வசந்தி என்று அழைக்கப்பட்ட அந்த நபர், “உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சுடி அருந்ததி. நீயும் வேணும்னா பாரு, உன் வாயை அடைக்கணும்னே ஒரு மகராசன் வருவான்” என்று கூற,
அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள், “அட காலங்கார்த்தாலேயே காமெடி பண்ணாமல் போங்கக்கா. நம்மளை மாதிரி ஆளுங்களை எல்லாம் இங்கே இருக்கும் ஆளுங்க சக மனுஷனாக பார்க்கவே அவ்வளவு யோசிக்குறாங்க, இதில் கல்யாணம் ஒண்ணுதான் குறை” எனவும்,
அவளின் அருகில் வந்து அவளது தலையைக் கோதி விட்டவர், “ஏன் அருந்ததி அப்படி சொல்லுற? என்னையே ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருக்கும் போது உன்னையும் கல்யாணம் பண்ண ஒருத்தன் வராமலேயே இருந்துடுவானா என்ன? நிச்சயம் வருவான்” எனவும்,
அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “வருவான், வருவான். அப்படி ஒருத்தன் வரும்போது பார்த்துக்கலாம். சரி, அதெல்லாம் விடுங்க. கல்யாணத்துக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிட்டீங்களா?” என்று தன் பேச்சை மாற்றியவள் சிறிது நேரம் அவருடன் பேசி விட்டு அவரை வழியனுப்பி வைத்து விட்டு அவர் சென்ற பாதையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அருந்ததியினால் வசந்தி என்று அழைக்கப்பட்டவரும் பிறப்பால் ஒரு ஆண்தான், ஆனால் இப்போது ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் தன்னை அவர் முழுமையாக பெண்ணாக மாற்றியிருந்தார்.
அநேகமான மூன்றாம் பாலினத்தவர்களைப் போல அவருக்கும் ஆரம்பத்தில் குடும்பத்தினாலும், சமூகத்தினராலும் பல பிரச்சனைகள் உருவாகியிருக்க, அவற்றை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டவர் நான்கு வருடங்களுக்கு முன்புதான் இந்தப் பகுதியில் வந்து தஞ்சம் அடைந்து கொண்டார்.
தங்களைப் போல சமூகத்தினால் ஒதுக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவி செய்வதே வசந்தியினதும், வைஜயந்தியினதும் மிக முக்கியமான நோக்கம்.
அப்படியான ஒரு உதவி செய்யும் சந்தர்ப்பத்தில்தான் மாறன் என்னும் ஒரு வழக்கறிஞர் வசந்தியை திருமணம் செய்து கொள்ள அவரிடம் சம்மதம் கேட்டிருந்தார்.
ஆரம்பத்தில் தனது நிலையை எண்ணி அவரைத் தவிர்த்து வந்த வசந்தியை அருந்ததிதான் பலவாறாக பேசி இந்த திருமணத்தை செய்ய சம்மதிக்க செய்திருந்தாள்.
இன்னும் இரண்டு வாரங்களில் வசந்திக்கு திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி பேசியபடிதான் தன் அன்றைய காலைப்பொழுதை செலவிட்டுக் கொண்டிருந்தாள் அருந்ததி.
எப்போதும் போல வழக்கமான தனது சேட்டைகளை செய்து கொண்டும், வைஜயந்தியை வம்பிழுத்துக் கொண்டும் தன் கல்லூரி செல்வதற்காக தயாராகிக் கொண்டு நின்றவள் தன்னைறக் கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தைப் பார்த்து ஒரு சில நொடிகள் அமைதியாகிப் போனாள்.
வெளித்தோற்றத்தில் எல்லாப் பெண்களையும் போன்று தனது உடல் கட்டமைப்பு இருந்தாலும் அவளைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறது அவளை சுற்றியுள்ள சமூகம்.
தன்னுடைய இருபத்து நான்கு வருட வாழ்க்கையில் தினமும் அவளுக்குள் தோன்றும் கேள்விதான் இப்போதும் அவளுக்குள் அவளது விம்பத்தைப் பார்க்கும் வேளையில் தோன்ற ஆரம்பித்தது.
தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களினால் தங்களை ஏன் ஒரு சிலர் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க எண்ணுகின்றனர்?
ஆண், பெண், மூன்றாம் பாலினம் என்கிற நிலையைத் தாண்டி நாம் எல்லோரும் மனிதர்கள் என்கிற உணர்வு அநேகமான மக்கள் மனதில் அழிந்தது போனது எதனால்?
இந்த வேறுபாடுகளும், பாகுபாடுகளும் நீங்கும் நாள்தான் எப்போது?
சிறு வயது முதலே தனது நிலையைப் பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து அருந்ததியின் மனதிற்குள் எழும் இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை அவளால் பதில் காண முடியவில்லை.
தன்னுடைய இந்தக் கேள்விகளுக்கும், இனி வரும் காலங்களில் தனக்குள் வரப்போகும் கேள்விகளுக்கும் என்றாவது ஒருநாள் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது பையையும், புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு தனது அறையிலிருந்து வெளியேறி வந்தவள் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த வைஜயந்தியை பின்னால் இருந்தவாறே அணைத்துக் கொண்டாள்.
அருந்ததியின் திடீர் அணைப்பில் திடுக்கிட்டுப் போனவர், “அருந்ததி, உனக்கு எத்தனை தடவைதான் சொல்லுறது? இப்படி சத்தமில்லாமல் வந்து பயமுறுத்தாதேன்னு. ஒருநாள் இல்லை ஒருநாள் பாரு, நீ இப்படி பண்ணும் போது எனக்கு நெஞ்சு அடைச்சுக்கப் போகுது, அப்போ தெரியும்” என்று கூற,
அவரைக் கோபமாக தன் புறம் திருப்பியவள், “உங்களுக்கு மேல் மாடியில் கொஞ்சம் கூட மசாலா இல்லையாம்மா? காலங்கார்த்தாலேயே அப்படி பண்ணுற, இப்படி பேசுறன்னு எனக்கு வாய் ஓயாமல் அட்வைஸ் பண்ணுவீங்க, ஆனா நீங்க என்ன பேச்சு பேசுறீங்க? இன்னொரு தடவை இப்படி ஏதாவது பேசுனீங்க அப்புறம் உங்களை ” தன் விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட, வைஜயந்தி சிறு புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவளது கையைப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தார்.
“நீங்க எதுவும் பேச வேண்டாம், நான் உங்க மேலே செம்ம கோபத்தில் இருக்…” அருந்ததி வாய் திறந்து தான் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிப்பதற்குள் அவளது வாயில் சாம்பாரில் நனைந்த இட்லியை வைத்தவர்,
“உன் வாயை அடைக்கணும்னா இது ஒண்ணு தான் வழி” என்றவாறே மறுபடியும் இன்னொரு துண்டை வைக்க, அருந்ததி அவர் கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டே அவரை அணைத்துக் கொண்டாள்.
“நான் ஏதோ விளையாட்டுக்கு அப்படி சொன்னேன் ராணிம்மா, உன்னை விட்டுட்டு நான் தனியாக எங்கேயும் போக மாட்டேன் டா”
“நீங்களே போக நினைத்தாலும் நான் உங்களை எங்கேயும் அனுப்ப மாட்டேன். எனக்கு இந்த உலகத்தைப் பார்க்க தெரிந்த நாளிலிருந்து நான் அம்மான்னு பாசமாக, செல்லமாக பேசுறது, சண்டை போடுறது எல்லாமே உங்க கூடத்தான். என் சொந்தம், பந்தம், நட்பு, எக்ஸட்ரா, எக்ஸட்ரா எல்லாமும் நீங்கதான். அப்படியிருக்கும் போது நீங்க இப்படி பேசுனா எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கும், சொல்லுங்க?”
“சரி வக்கீல் அம்மா, தயவுசெய்து மன்னிச்சுடுங்க. இன்னும் வக்கீல் ஆகவே இல்லை, அதற்கிடையில் இப்படி வாதாடுனா இனி நீ வக்கீல் ஆகிய பிறகு அந்த ஜட்ஜே கோர்ட்டை விட்டு ஓடுனாலும் அதிசயமில்லை” என்றவாறே வைஜயந்தி அருந்ததியின் தலையையும், உடைகளையும் சரி செய்து விட,
அவரை இறுக அணைத்து விடுவித்தவள், “நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க வைஜயந்தி மேடம், நான் ஒரு பெரிய வக்கீலாகி நம்ம எல்லோருக்கும் நிச்சயமாக பெருமை தேடித் தரத்தான் போறேன், பாருங்க” என்று கூற, அவரோ அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.
“நிச்சயமாக உன் ஆசை நிறைவேறும். சரி, சரி பஸ் வர்ற நேரம் ஆச்சு, வா, போகலாம்” என்றவாறே அவளது பையை எடுத்துக்கொண்டு வைஜயந்தி முன்னால் நடந்து செல்ல, அவரோடு சிரித்துப் பேசியபடியே அருந்ததி அவரைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.
அருந்ததி தற்போது அவர்கள் ஊரில் இருக்கும் பிரபல்யமான சட்டக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அருந்ததி பிறந்த போது எவ்வாறான கஷ்டங்களை அனுபவித்தாலோ அதுபோலத்தான் அவளது படிப்பிற்கான தேடல் பாதையும் மிகவும் கடினமானது.
சிறு வயதில் அவளது வயதை ஒத்த பிள்ளைகள் எல்லாம் தங்கள் பெற்றோருடன் புதிய உடைகள் அணிந்து ஒவ்வொரு விதமாக பள்ளிக்கூடம் செல்வதைப் பார்த்து அவளுக்குள்ளும் அந்த ஆசை துளிர் விட ஆரம்பித்தது.
தன் ஆசைகளை எல்லாம் வைஜயந்தியிடம் சென்று அவள் தெரிவித்திருக்க, ‘அது எல்லாம் நம்மைப் போன்ற நபர்களுக்கு எட்டாக்கனி’ என்று அவளை கட்டுப்படுத்தி வைத்தவர், நாளாக நாளாக அவளது பிடிவாதக் குணத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெகுவாகத் தவித்துப் போனார்.
அந்த வயதில் அவளுக்கு எதைச் சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக அவளை அழைத்துச் சென்றிருக்க, அங்கே அவர்களை அந்தப் பள்ளிக்கூட வாயிலில் கூட நிற்க விடவில்லை.
எதனால் தங்களுக்கு இந்த நிலை என்ற அருந்ததியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனவர் ஒரு நிலைக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லியிருந்தார்.
அந்த சின்னஞ்சிறு வயதில் அவர் சொன்ன விடயங்களை புரிந்து கொள்ள முடியாமல் தனது உடலில் ஏதோ ஒரு குறை உள்ளது அதனால் தன்னை யாரும் தங்களோடு சேர்த்துக்கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டவள் நாளடைவில் தனது அறைக்குள்ளேயே முடங்கிப் போக ஆரம்பித்தாள்.
அவளை இப்படியே விட்டாள் பிற்காலத்தில் அவளது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்று அச்சம் கொண்ட வைஜயந்தி பல சமூக ஆர்வலர்களுடனும், நலன்புரி அமைப்பினருடனும் உதவி கேட்டு, அலைந்து திரிந்து ஒருவாறாக அங்கேயிருந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்க வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
தங்களுடைய முதல் நாள் பள்ளிக்கூட வாழ்க்கை எப்படி இருக்கக்கூடுமோ என்கிற கனவுடன் சென்ற அந்தக் குழந்தைகளுக்கு அங்கே காத்திருந்ததோ, அவர்கள் முற்றிலும் எதிர்பாராத விடயங்கள்தான்.
பல்வேறு இன்னல்கள், அவமானங்கள் என்று நிறைந்து போயிருந்த தனது கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்த்தபடியே அருந்ததி பேருந்து நிறுத்தத்தை வந்து சேர்ந்திருக்க, சரியாக அவள் செல்லும் பேருந்தும் அங்கே வந்து நின்றது.
“அம்மா, பஸ் வந்துடுச்சு, சீக்கிரம் பையைக் கொடுங்க” வைஜயந்தியின் கையிலிருந்த தனது பையை அவசரமாக வாங்கிக் கொண்டவள்,
“பார்த்து பத்திரமாக வீட்டுக்கு போம்மா. நான் காலேஜ் போயிட்டு உனக்கு கால் பண்ணுறேன்” என்றவாறே பேருந்தில் ஏறிக் கொள்ள, அவரோ அவளைப் பார்த்து சரியென்று தலையசைத்தபடியே அவள் ஏறிய பேருந்து தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றார்.
அந்த இடத்தைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த ஒரு சில நபர்களின் அலட்சியமான பார்வையைக் கண்டும் காணாமல் தான் வந்த வழியில் வைஜயந்தி நடக்கத் தொடங்கியிருக்க, மறுபுறம் அருந்ததி தனது கல்லூரியை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள்.
அது அவள் வழக்கமாக செல்லும் பேருந்து என்பதனால் அவளைப் பற்றி தெரிந்த பல பேர் அவளைக் கணக்கெடுக்காதது போல அமர்ந்திருக்க, அந்த அலட்சியம் எதுவும் அவளை ஒன்றும் செய்து விடவில்லை.
இத்தனை வருடங்களில் அவள் எத்தனையோ விதமான நபர்களை சந்தித்திருக்கிறாள், அப்படியிருக்கையில் யாருடைய பாராமுகமும் அவளைக் காயப்படுத்தப் போவதில்லை என்கிற மனநிலையுடன் அருந்ததி அமர்ந்திருந்த நேரம், யாரோ தன்னை வெகுநேரமாக நோட்டம் விடுவது போல ஏற்பட்ட உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தவள் தன் பார்வை வட்டத்திற்குள் தெரிந்த அந்த ஒரு நபரின் முகத்தைப் பார்த்து திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்……