தீயாகிய மங்கை நீயடி – 05

ei34NQ073963-b4c676ac

அன்றோடு அருந்ததியின் வழக்கறிஞர் ஆவதற்கான பலநாள் ஆசைக்குரிய பரீட்சைகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றிருந்தது.

சிறுவயது முதல் தனது மனதிற்குள் பொதிந்திருந்த ஆசைக்காக பலவிதமான தடைகளையும், அவமானங்களையும் தாண்டி இன்று அதற்கான முதல் படியில் வெற்றிகரமாக நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே அவளுக்குள் புதிதாக ஒரு உத்வேகம் எழுந்தது போல இருந்தது.

தன்னுடைய இந்த பரீட்சை முடிவுகள் வெளிவந்ததும் தன்னைப் போலவே இந்த சமூகத்தினாலும், குடும்பங்களினாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு அவர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க தன் இறுதி மூச்சுள்ள வரை போராட வேண்டும் என்கிற எண்ணத்துடன் நடந்து சென்று கொண்டிருந்த அருந்ததி தன் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த கதிரைப் பார்த்ததும் தன் சிந்தனை மொத்தமும் கலைந்து போக அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே அவனெதிரில் சென்று கொண்டாள்.

“ஹாய் கதிர், எப்படி இருக்கீங்க? எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணீங்களா?”

“எங்க அருந்ததி நல்லா பண்ணுறது? எந்த ஒரு விஷயத்தையும் பண்ண மனசே வர மாட்டேங்குது. உன் கிட்ட மறைச்சு என்ன பண்ண? ஓபனா சொல்லுறேன், நீ கடைசியாக என் கிட்ட பேசிட்டுப் போனதிலிருந்து எனக்கு நாள் பூராவும் உன் ஞாபகம் மட்டும்தான், இன்னும் சொல்லப்போனால் எக்ஸாம் பேப்பரை பார்க்கும் போது கூட உன் முகம்தான் அதிலேயும் தெரிஞ்சதுன்னா பார்த்துக்கோயேன்”

“கதிர்! ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க? படிப்பு விஷயத்தில் பர்சனல் விஷயத்தை இன்வால்வ் பண்ணுறது எனக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” அருந்ததி சிறு கோபத்துடன் கதிரைப் பார்த்து வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பது போல தலையசைத்தவன், “அதெல்லாம் எனக்காக ரொம்ப நல்லாவே தெரியும் அருந்ததி, ஆனாலும் புத்தி சொல்லுவதை மனசு கேட்க மாட்டேங்குதே. எப்போ என்னோட வாழ்க்கையில் உனக்காக ஒரு நிரந்தரமான இடம் கிடைக்குமோ அப்போதான் இந்த பிரச்சினை என்னை விட்டுப் போகும் ” என்று கூற, அருந்ததி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன அருந்ததி எதுவும் பேச மாட்டேங்குற?”

“எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு சத்தியமாக தெரியல கதிர். உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், நான் யாரு? இந்த சமூகத்தில் எனக்காக கொடுக்கப்பட்டிருக்கும் பெயர், அங்கீகாரம் என்ன? எதற்காக நான் இத்தனை அவமானங்களைக் கடந்து இந்த படிப்பை படிச்சேன்னு எல்லாமே உங்களுக்குத் தெரியும், இந்த படிப்பும், இதற்கு அப்புறமான வாழ்க்கையும் எனக்கு எந்தளவிற்கு மிகவும் முக்கியமானதுன்னு உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படியிருந்தும் நீங்க ஆரம்பத்தில் இருந்த மாதிரியே இப்போ வரைக்கும் பிடிவாதமாக இருக்குறீங்களே. அதுதான் என்னால எதுவுமே பேச முடியல”

“நான் ஒண்ணும் உன்னோட இலட்சியத்திற்கோ, உன்னோட கனவுகளுக்கோ தடையாக இருப்பதாக சொல்லவே இல்லையே அருந்ததி. இனி நீ உன் வாழ்க்கையில் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியிலும் துணையாக நானும் இருக்கிறேன்னு தானே சொல்லுறேன், உனக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, உன் நிழலாக உன் கூடவே என் கடைசி மூச்சு வரைக்கும் இருக்கணும்னு தான் எனக்கு ஆசை” என்றவாறே அருந்ததியை சற்று நெருங்கி வந்து நின்ற கதிர்,

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா அருந்ததி?” என்று வினவ,

அவளோ, “உங்க அம்மா, அப்பா?” சிறு தயக்கத்துடன் அவனைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடிப்பாங்கதான், ஆனா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி போய் நின்றால் அவங்களால் எதுவும் பண்ண முடியாது. எப்படியும் நம்மளை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்”

“ஆனா கதிர்…”

“உஸ்ஸ்ஸ், நீ என்னை விரும்புறியா? இல்லையா? அதை மட்டும் சொல்லு அருந்ததி”

“கதிர், என்ன இதெல்லாம்?”

“ப்ளீஸ் அருந்ததி, நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லு. நீ என்னை விரும்புறியா? இல்லையா?”

“……”

“சொல்லு அருந்ததி. எஸ் ஆர் நோ?”

“…..”

“அருந்ததி ஏதாவது சொல்லு”

“எஸ், எஸ், எஸ். நானும் உங்களை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் கதிர், ஆனா இந்த சமூகம் நம்மளை ஏற்றுக் கொள்ளுமா?”

“அவங்களை எல்லாம் விட்டுத் தள்ளு அருந்ததி, அடுத்தவங்க கஷ்டப்படும் போது கை கட்டி வேடிக்கை பார்க்கவும், அவங்க கஷ்டத்தை இன்னமும் அதிகரிக்கவும் தான் இங்க இருக்கிற பல பேர் ஆசைப்படுவாங்க, அதனால நீ வேறு யாரைப் பற்றியும் யோசிக்காதே! இப்போ நீ என்னை நம்புற மாதிரி எப்போதும் நம்பு, அது ஒண்ணு மட்டும் போதும்” என்றவாறே அருந்ததியின் கரத்தை மெல்ல அழுத்திக் கொடுத்தவன்,

“நம்ம எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் அருந்ததி, அப்போதான் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து விட்டு உன்னோட இலட்சியப் பாதையில் நீ பயணிக்க இலகுவாக இருக்கும், அதனால நம்ம அடுத்த வாரமே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூற,

அருந்ததியோ, “அடுத்த வாரமா?” என்றவாறே அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமா அருந்ததி, ஏன்னா நம்ம கிட்ட நேரம் இல்லை, நம்ம இனி வெளியே எங்கேயும் சந்தித்துப் பேச முடியுமான்னு கூட நமக்குத் தெரியாது. ஒருவேளை நம்ம தனியாக சந்திப்பதைப் பார்த்து வெளியாட்கள் யாராவது, ஏன் சபரி கூட நமக்கு எதிராக ஏதாவது செய்து விட வாய்ப்பு இருக்கு, அதனாலதான் சொல்றேன் நம்ம கல்யாணம் விஷயம் உன் பக்கமும், என் பக்கமும் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். நம்ம எல்லா சம்பிரதாயங்களையும், பார்மாலிட்டிஷையும் முடிச்சுட்டு நம்ம ஃபேமிலி கிட்ட சொல்லலாம், அதுவரைக்கும் நீயும் உங்க அம்மா கிட்ட இதைப்பற்றி சொல்லாதே. அப்புறம் அவங்க வேறு ஏதாவது எங்க வீட்டில் பேசப் போய் அப்புறம் நம்ம இரண்டு பேரும் சேரவே முடியாமல் போனாலும் போகலாம்”

“அய்யய்யோ! அப்படி எல்லாம் சொல்லாதீங்க கதிர். நான் யாருக்கிட்டயும் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன். என் மேலே சத்தியம்” அருந்ததி பதட்டத்துடன் கதிரின் கையில் தன் கையை வைத்து சத்தியம் செய்து கொடுக்க,

சிறு புன்னகையுடன் அவளது கையை அழுத்திக் கொடுத்தவன், “எனக்குத் தெரியும் அரும்மா, நீ அப்படி எல்லாம் எதுவும் அவசரப்பட்டு பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு விஷயம், நீ எதற்காகவும் பயப்படாதே அரும்மா. என்ன பிரச்சினை வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம். நான்தான் உன் கூட இருக்கேன் இல்லையா? நான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறேன். சரி அருந்ததி, ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நீ இப்போ நிம்மதியாக வீட்டுக்குப் போ, நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டு உனக்கு கால் பண்ணுறேன். அதற்கு அப்புறம் நம்ம எங்கே, எப்போ மீட் பண்ணலாம்னு உனக்கு சொல்லுறேன் சரியா?” என்றவாறே அவளது கன்னத்தில் கை வைத்து வருடப் போக,

சட்டென்று அவனை விட்டு விலகி நின்று கொண்டவள், “இது எல்லாம் ஒரு வாரத்திற்கு அப்புறம்தான்” என்று விட்டு சிறு புன்னகையுடன் அங்கிருந்து சென்று விட, கதிரோ அவள் சென்ற வழியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றான்.

“ஒண்ணு இல்லை, இரண்டு இல்லை, முழுசா மூணு வருஷம் உனக்காக காத்துட்டு இருக்கேன் அருந்ததி. என்னைக்காவது ஒரு நாள் நீ கண்டிப்பாக என் வலையில் விழுவேன்னு தெரியும், அந்தநாள் இப்போ என் கைக்கு எட்டும் தொலைவில் வந்துடுச்சு. இனி நீ என் பக்கம் வர்றதை யாராலும் தடுக்க முடியாது, கூடிய சீக்கிரமே நான் நினைத்ததை நடத்திக் காட்டுறேன் அருந்ததி. உன்னை என்ன எல்லாம் பண்ணப் போறேன்னு பொறுத்திருந்து பாரு அருந்ததி, இனி உன் வாழ்க்கையில் என்னை ஒரு போதும் நீ மறக்கவே முடியாத அளவிற்கு உனக்கு சிறப்பான விஷயத்தை எல்லாம் நான் உனக்கு கொடுப்பேன், ஜஸ்ட் வெயிட் அன்ட் வாட்ச்” கதிர் தன் மனதிற்குள் அருந்ததியை தன் பக்கம் இழுத்து விட்டதாக எண்ணி வெற்றிக் களிப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, அவனது அந்த குரூரமான எண்ணம் நிறைவேறுமா? இல்லையா? காத்திருந்து பார்க்கலாம்.

**********

சிறிது நேரத்திற்கு முன்பு கதிருடனான தனது உரையாடலை நினைத்துப் பார்த்தபடியே தங்கள் வீட்டை வந்து சேர்ந்திருந்த அருந்ததி அங்கே அவளது வருகைக்காக பெரும் ஆவலுடன் காத்திருந்த தன் அன்னையைப் பார்த்து ஒரு கணம் விக்கித்துப் போய் நின்றாள்.

தனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பருவத்திலிருந்து தனக்காக மட்டும் இதுநாள் வரை வாழ்ந்து வரும் ஒரே ஒரு நபர்தான் அவளது யாதுமாகிய அன்னை வைஜயந்தி.

அவரது உடல் மாற்றத்தினால் இந்த சமூகம் அவரைப் புறக்கணித்திருந்தாலும் இதுநாள் வரை தன் மன வேதனைகளை, ஆசைகளை, கவலைகளை என எதையுமே அவர் வெளிப்படையாக காண்பித்துக் கொண்டதில்லை, மாறாக அருந்ததிக்கு இது பிடிக்கும், அருந்ததிக்கு அது தேவைப்படும் என்று நித்தமும் அருந்ததி, அருந்ததி என்றே அவர் மனம் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும்.

தான் பெறாத மகள் மீது அவர் அள்ளி வழங்கும் அந்தப் பாசத்தைப் பார்த்து பலர் அவரைக் கேலி செய்தாலும் அதை எல்லாம் ஒரு போதும் அவர் கணக்கில் எடுத்ததே இல்லை, அவருக்கு இந்த உலகமே அருந்ததி தான்.

தனக்கு தாயாக, தந்தையாக, தோழியாக, சகோதரனாக, சகோதரியாக, எல்லாமுமாக இருக்கும் வைஜயந்தியிடம் கதிர் மீதான காதலையும், அவனுடான இரகசியத் திருமணத்தைப் பற்றியும் சொல்லாமல் மறைத்து வைக்க அவள் மனது இடமளிக்காது தவித்தாலும், அவள் புத்தியோ அவள் மனதை பெரிய தடுப்புச் சுவற்றைப் போட்டு பூட்டி வைப்பது போல கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

தான் செய்வது சரியா? தவறா? என்கிற பலத்த சிந்தனையுடன் அருந்ததி நின்று கொண்டிருந்த தருணம், தன் வண்டியிலிருந்து இறங்கி வெகு நேரமாகியும் அருந்ததி இன்னமும் வீட்டிற்குள் வராமல் வாயிலிலேயே தயங்கி நிற்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட வைஜயந்தி, “அருந்ததி, என்னம்மா ஆச்சு? ஏன் வாசலிலேயே நிற்கிற? ஏதாவது பிரச்சினையா? எக்ஸாம் சரியா பண்ணலயா?” அவளது தலையை வருடிக் கொடுத்தபடி வினவ,

அவரைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள், “ஐயோ! அதெல்லாம் எதுவும் இல்லைம்மா. என் நோட்ஸ் கொஞ்சம் ஃபிரண்ட் கிட்ட இருந்துச்சு, அதுதான் அதை எல்லாம் வாங்கிட்டேனா, இல்லையான்னு ஒரு தடவை யோசித்துப் பார்த்தேன், அவ்வளவுதான்” என்று விட்டு அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்று விட அவளது அந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து வைஜயந்தியின் குழப்பம் மேலும் அதிகமானது போல இருந்தது.

“இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? இன்னைக்குத்தான் கடைசி எக்ஸாம், இதற்கு அப்புறம் கூடிய சீக்கிரமே நானும் ஒரு பெரிய லாயர் ஆகிடுவேன், அதற்கு அப்புறம் நம்ம எல்லோரோட பிரச்சினைகளையும் எப்படி பட்டு சட்டுன்னு தீர்த்து வைக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு காலையில் வீட்டிலிருந்து கிளம்பி போகும் போது அவ்வளவு சந்தோஷமா கிளம்பி போனவ முகத்தில் அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை போல இருக்கே. ஒருவேளை காலேஜில் ஏதாவது பிரச்சினை ஆகியிருக்குமா? என்ன ஆச்சுன்னே புரியலையே” தன் மகளை எண்ணிக் கலக்கம் கொண்டவராக அவளைப் பின் தொடர்ந்து சென்ற வைஜயந்தி,

அங்கே அவளது அறைக் கட்டிலில் கண் மூடி உறங்கிக் கொண்டிருந்த அருந்ததியைப் பார்த்து விட்டு, “எக்ஸாம், எக்ஸாம்ன்னு ஒரு மாதமாக இராப்பகலாக படிச்சு, முடிச்சு களைத்துப் போய் வந்த பொண்ணைப் பார்த்து நான்தான் தேவையில்லாமல் ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன் போல. நான் ஒரு அவசரக்குடுக்கை” என்றவாறே தன் தலையில் தட்டியபடி அங்கிருந்து நகர்ந்து சென்று விட, அவர் அங்கிருந்து சென்றதை உறுதிப்படுத்தி விட்டு தன் கண்களைத் திறந்து கொண்ட அருந்ததி பெரும் தவறிழைத்த நபர் போல முகம் எல்லாம் வாடிப்போக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

“ஐ யம் சாரிம்மா! என்னால இப்போ எதையும் உங்க கிட்ட சொல்ல முடியாது, ஆனா நான் ஒருபோதும் உங்களைக் கஷ்டத்தில் தவிக்க விடமாட்டேன்ம்மா. நான் கதிருக்கு கொடுத்த வாக்குப்படி எங்க கல்யாணம் முடிந்ததும் முதல் வேலையாக உங்களைத் தேடி வந்து நடந்த எல்லா விடயத்தையும் உங்க கிட்ட சொல்லிடுவேன் ம்மா, அதற்கு அப்புறம் நானும், கதிரும் உங்களை எங்க கூடவே வைத்து சந்தோஷமாக பார்த்துக்குவோம்மா. இது சத்தியம்” வைஜயந்தியிடம் வெளிப்படையாக எதையும் பேச முடியாத தவிப்போடு தன் மனதிற்குள்ளேயே அவருடன் பேச நினைத்த விடயங்களை ஒப்புவித்துக் கொண்டு அருந்ததி அமர்ந்திருந்த நேரம் மறுபுறம் கதிர் தனது அறைக்குள் போதை தலைக்கேற மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

தங்கள் கல்லூரியில் முதன்முதலாக அருந்ததி வந்து சேர்ந்த போதே அவள் மீது அவனுக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு இருந்து கொண்டேதான் இருந்தது.

ஒருநாள் தைரியமாக அவள் முன்னால் சென்று அவளிடம் தன் காதலைச் சொன்ன நேரம் அவனை அசிங்கப்படுத்தியவள் அதோடு நிற்காமல் அவனின் மீது குற்றச்சாட்டையும் கல்லூரி முதல்வரிடம் வைத்திருக்க, அன்றிலிருந்து தான் அவளை தன் வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்கிற வெறி கதிரின் மனதிற்குள் பெரும் விருட்சமாக எழ ஆரம்பித்திருந்தது.

ஒவ்வொரு நாளும் அவள் முன்னிலையில் நல்ல நபரைப் போலத் தன்னைக் காண்பிக்க அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் அவனது படிப்பிலும் அவன் செலுத்தியிருந்தால் இன்று அந்தக் கல்லூரியிலேயே அவன்தான் முதல் மாணவனாக திகழ்ந்திருக்க கூடுமோ, என்னவோ?

கதிரும் பல வகையில் அருந்ததியைக் காதலிப்பதாக சொல்லி அவளை விடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்க, அவனது தொல்லைகளைத் தாங்க முடியாமல்தான் அருந்ததி தன்னைப் பற்றிய உண்மைகளை எல்லாம் அவனிடம் சொல்லியிருந்தாள்.

ஆரம்பத்தில் அவள் சொன்ன விடயங்களை நம்ப முடியாமல் அவளை விடாமல் அவன் நச்சரிக்க ஆரம்பிக்க, அதற்குப் பிறகுதான் தன்னைப் பற்றிய விடயங்கள் அடங்கிய மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் அவன் முன்னால் அள்ளி வீசியிருந்தாள் அருந்ததி.

தன் முன்னாலிருந்த உண்மைகளைப் பார்த்து ஒரு சில நாட்கள் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனவன் பின்னர் மீண்டும் அருந்ததியைக் காதலிப்பதாக சொல்லும் தன் பணியைக் கையிலெடுத்திருந்தான்.

அவளைப் பற்றிய உண்மை நிலவரங்கள் தெரிந்த பின்னரும் எதற்காக அவளைத் தன் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அவன் அத்தனை முனைப்பாக இருக்கின்றான் என்று அவனைப் சுற்றியுள்ள நபர்களுக்கோ, அவனை நெருங்கிய நபர்களுக்கோ இன்று வரை தெரியவில்லை.

கதிர் தன்னைச் சுற்றி இத்தனை பெரிய வலையை விரித்து வைத்து விட்டுத்தான் தன்னை பின் தொடர்ந்து வந்திருக்கின்றான் என்கிற உண்மையை அறியாமலேயே அவனது வார்த்தைகளை நம்பி ஒரு பெரிய காரியத்தை செய்ய அருந்ததி முன் வந்திருக்க கதிரைப் பற்றிய உண்மைகள் எல்லாம் அவளுக்குத் தெரிய வரும் நாளில் அவளின் நிலை என்னவாகுமோ? அந்த இறைவனுக்குத் தான் வெளிச்சம்.

**********

நாட்கள் அதன் பாட்டிலில் சக்கரத்தை கட்டி விட்டது போல வேகமாக நகர்ந்து சென்றிக்க, கதிர் அருந்ததியை சந்தித்து சரியாக ஐந்து நாட்களில் மீண்டும் அவளைத் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டிருந்தான்.

தங்களது திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டதாகவும் நாளை காலை நேரத்திற்கே தங்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அவளை வரும்படி சொல்லியிருந்தவன் இன்னும் ஒரு சில தைரியமளிக்கும் வகையிலான வார்த்தைகளையும் சொல்லி விட்டு தன் அழைப்பைத் துண்டித்திருக்க, நாளை தன் வாழ்வு முழுமையாக சந்தோஷமான ஒரு பாதையில் செல்லப் போகின்றது என்ற கனவோடு காலை விடியலை எதிர்பார்த்து அருந்ததி வெகு ஆவலுடன் அமர்ந்திருந்தாள்……