தீயாகிய மங்கை நீயடி – 06

ei34NQ073963-4f94ef45

தங்கள் கல்லூரி செல்லும் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அருந்ததி மிகவும் பதட்டம் சூழ்ந்தவளாக தன் கையிலிருந்த கடிகாரத்தையும் வீதியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க, அவளது பொறுமையை சோதிக்காமல் சிறிது நேரத்திலேயே கதிர் அந்த இடத்தை வந்து சேர்ந்திருந்தான்.

“கதிர்!” அவனை அங்கே பார்த்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் உடனே அவனருகில் சென்று அவன் மேல் சாய்ந்து கொண்டவள்,

“உங்களைக் காணோம்னு ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா?” எனவும்,

அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தவன், “நான் வரமாட்டேன்னு நினைச்சியா அருந்ததி?” என்று கேட்க, அவளோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள்.

“நான் அப்படி எல்லாம் எதுவும் நினைக்கல கதிர், ஆனா ஏனோ தெரியல மனசுக்கு ரொம்ப பதட்டமாக இருக்கு”

“எதற்காக இவ்வளவு பதட்டம் அருந்ததி? நான்தான் உன் கூடவே இருக்கேனே, இனி எதற்காக பதட்டம்?”

“தெரியலையே கதிர்” அருந்ததி சிறு கவலையுடன் கதிரின் கையைப் பிடித்துக் கொள்ள,

அவளது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவன், “இனிமேல் நோ டென்ஷன், எல்லாம் நீ எதிர்பார்த்ததை விட ரொம்ப சிறப்பாக அமையும் அருந்ததி, நீ கண்டிப்பாக இனிமேல் நடக்கப் போகும் விஷயங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவ பாரு” என்றவாறே அருந்ததியின் வண்டியை இயக்கி அவளை அமரச் செய்தவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தான்.

கதிர் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நேரம் முழுவதும் அமைதியாக அமர்ந்திருந்தவள் வெகு நேரமாகியும் அவன் வண்டியை எங்கேயும் நிறுத்தாமல் செலுத்தாமல் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து சிறு குழப்பத்துடன், “கதிர், நம்ம ஊரைத் தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டோம் போல இருக்கே. நாம இப்போ எங்கே போயிட்டு இருக்கோம்?” அவனது தோளைத் தொட்டு வினவ,

முகப்புக் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “உன்னைக் கடத்திட்டுப் போறேன் அருந்ததி” எனவும்,

அவளோ புன்னகைத்தபடியே, “போங்க கதிர், உங்களுக்கு எப்போதும் விளையாட்டுத்தான்” என்றவாறே அவனோடு மேலும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

‘பைத்தியக்காரி, நான் உண்மையைச் சொன்னாலும் அதை நம்ப முடியாத அளவிற்கு என் மேலே இவ்வளவு பித்துப் பிடித்துப் போய் இருக்கா. அதுவும் நல்லதுதான், இந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கை தான் எனக்கு மிகப்பெரிய ஒரு காரியத்தை செய்து தரப்போகிறது’ கதிர் தன் மேல் காதல் மயக்கத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்த அருந்ததியைப் பார்த்து குரூரமாக சிரித்தபடியே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்தத் தொடங்கினான்.

சிறிது நேரப் பயணத்திற்குப் பின்னர் ஒரு அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் இருக்கும் கோவில் ஒன்றின் முன்னால் தங்கள் வண்டியை நிறுத்தியவன், “வா அருந்ததி” என்றவாறே அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல, மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத அச்சம் சூழ்ந்தவளாக அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டவள் அவனைப் பின் தொடர்ந்து நடந்து செல்ல ஆரம்பித்தாள்.

இதற்கு முன்னர் இப்படியான ஒரு வனப்பகுதிக்கோ, அல்லது இருளடர்ந்த பகுதிக்கோ வந்திராத அருந்ததி அந்த இடத்தைப் பார்த்து மிரண்டு போய் நிற்க அவளது தோளில் தட்டிய கதிர், “என்னாச்சு அருந்ததி? எதற்காக இப்படி மிரண்டு போய் நிற்கிற?” என்று வினவ,

அவனைப் பார்த்து, ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையசைத்தவள் மனமோ அந்த இடத்தில் ஏதோ ஒரு தவறான காரியம் நடக்கப் போகிறது என்று அவளை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

‘எனக்கு என்னவோ நான் பண்ணப் போகும் காரியம் ரொம்ப தப்புன்னு என் மனசு சொல்லுது. இந்த இடமும், இந்த சூழ்நிலையும் எனக்கு சரியாகவே தோணல. முதல்ல இங்கேயிருந்து போயிடலாமா?’ அருந்ததி தன் மனதிற்குள் சூழ்ந்திருந்த அச்சவுணர்வு தாளாமல் கதிரைத் திரும்பிப் பார்க்க, அவனோ அங்கே ஒரு சில புதிய நபர்களுடன் எதைப்பற்றியோ மும்முரமாக பேசிக் கொண்டு நின்றான்.

‘இவங்க எல்லாம் யாரு? இந்த இடத்திற்கு எப்படி வந்தாங்க? கதிர் தான் எங்க கல்யாண விஷயத்தை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தானே? அப்போ இவங்க எல்லாம் யாரு?’ அங்கே நின்று கொண்டிருந்த புதிய நபர்களைப் பார்த்து குழப்பம் கொண்டவளாக கதிரின் அருகில் சென்று நின்றவள்,

“கதிர், இவங்க எல்லாம் யாரு?” என்று வினவ,

அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “இவங்க எல்லாம் எனக்குத் தெரிஞ்சவங்கதான் அருந்ததி, நம்ம கல்யாணத்துக்கு உதவி பண்ண வந்திருக்காங்க” என்று கூற,

“ஓஹ்! அப்படியா?” என்றவாறே அந்த நபர்களின் புறம் திரும்பியவளுக்கு ஏனோ அந்த நபர்களை எல்லாம் சிறிதும் பிடிக்கவே இல்லை.

அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளது மனதிற்குள் சூழ்ந்திருந்த அச்சவுணர்வு மேலும் அதிகரிப்பது போல இருக்க, “நான் இதோ வர்றேன்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றவள் அந்த கோவில் மண்டபத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டு தன் கண்களை மூடி தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“இல்லை அருந்ததி, நீ வீணாக உன் மனசை குழப்ப வேண்டாம். கதிர்தான் உன் கூடவே இருக்கானே, அப்புறம் எதற்காக நீ கண்டதையும் யோசித்து உன் மனசை குழப்புற? கதிர் உன் கூட இருக்கும் வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது” என்று அருந்ததி தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்ற நேரம் அவளது தோளில் ஒரு கரம் பதிய,

“நான் இப்போதான் என் மனதில் உங்களைப் பற்றி நினைச்சேன், அதற்கிடையில் நீங்களே என்னைத் தேடி வந்துட்டீங்களே கதிர்” என்றவாறே முகம் நிறைந்த புன்னகையுடன் திரும்பியவள் அங்கே தன் எதிரில் நின்று கொண்டிருந்த அந்த புதிய நபரைப் பார்த்து தன் புன்னகை மொத்தமும் தொலைந்து போனவளாக அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.

“நீங்களா?”

“ஏன் நான் வரக்கூடாதா?” அந்த நபரின் கேள்வியில் சட்டென்று அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல அருந்ததி முயற்சிக்க,

அவளை நகர விடாமல் அவளது வழியை மறித்தவாறு நின்று கொண்டவன், “ஏய்! எங்கே ஓடிப் போகப் பார்க்குற? என்னவோ இதெல்லாம் உனக்குப் பழக்கமே இல்லாதது போல நடிக்குற? இதுவரைக்கும் இது மாதிரி எத்தனை பேரைப் பார்த்து இருப்ப? நாங்க இப்போ இங்கே ஐந்து பேருதான் இருக்கோம், அதுவும் உனக்குப் பழக்கம் தானே?” என்று வினவ,

கோபமாக அந்த நபரை முறைத்துப் பார்த்தவள், “மரியாதையாக வழியை விடு, இல்லைன்னா இங்கே நடக்கிறதே வேறு” என்று சத்தம் போடத் தொடங்க, அவள் போட்ட சத்தத்தில் கதிர் மற்றும் மற்றைய நபர்கள் உட்பட அனைவரும் அவளை நோக்கி விரைந்து வந்து நின்றனர்.

“என்னாச்சு அருந்ததி? எதற்காக இப்படி சத்தம் போடுற?”

“என் கிட்ட எதற்காக கேட்குற கதிர்? நீ கூட்டிட்டு வந்து இந்த ஆளுகிட்ட கேளு, இவன் என்ன பேசுனான்னு”

“அவன் எதுவும் வேணும்னே பேசி இருக்க மாட்டான் அருந்ததி, சும்மா விளையாட்டுக்கு ஏதாவது சொல்லி இருப்பான்?”

“எது விளையாட்டுக்கா? அவன் பேசுன பேச்சு விளையாட்டா?”

“அப்படி என்ன பேசுனான்னு சொன்னால் தானே அருந்ததி தெரியும்?’

“அந்த அசிங்கத்தை நான் சொல்ல மாட்டேன், நீங்களே அந்த ஆளுகிட்ட கேட்டுக்கோங்க”

“ஐயோ! சத்தியமாக என்னால முடியல டா. டேய்! என்னடா ஆச்சு? நீயாவது சொல்லேன்டா” கதிர் அருந்ததியின் முன்னால் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து வினவ,

அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே கதிரின் புறம் திரும்பியவன், “நீ எதற்காக அவளை இங்கே கூட்டிட்டு வந்தியோ அதைப்பற்றித்தான் நான் அவகிட்ட பேசிட்டு இருந்தேன், ஆனா இவ என்னவோ ரொம்ப நல்லவளாட்டம் ஓவரா சீன் போடுற. இவ இங்கே வந்ததே பணத்திற்காகத் தானே? இவ போட்ட இந்த டிராமாவைப் பார்த்து நான் ரொம்ப கடுப்பாகிட்டேன், அதனால இவளுக்கு ஒரு சல்லிக்காசு கொடுக்கக் கூடாது” என்று சொல்லி முடித்த அடுத்த கணம் கதிரின் கரம் அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“கதிர்!” அங்கே சுற்றியிருந்த அனைத்து நபர்களும் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க, அருந்ததி சிறு பதட்டத்துடன் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

“கதிர், வீணாக பிரச்சினை எதுவும் வேண்டாம். முதல்ல இவங்க எல்லோரையும் இங்கேயிருந்து போகச் சொல்லுங்க, அதற்கு அப்புறம் நம்ம கல்யாண வேலையைப் பார்க்கலாம்”

“இல்லை அருந்ததி, இவன் ஒருத்தன் பண்ண தப்புக்காக எதற்காக எல்லோரையும் இங்கேயிருந்து அனுப்பணும்? இவனை மட்டும் இங்கேயிருந்து போகச் சொல்லலாமே?”

“இல்லை கதிர், எனக்கு என்னவோ இதெல்லாம் சரியாக வரும்ன்னு தோணல, முதல்ல இவங்க எல்லோரையும் இங்கேயிருந்து போகச் சொல்லுங்க, அதற்கு அப்புறம் என் கிட்ட சொல்லுங்க நான் வர்றேன். இப்போ நான் இங்கேயிருந்து கிளம்புறேன்” என்றவாறே அருந்ததி கதிரின் கையிலிருந்த தன் வண்டி சாவியை வாங்கப் போக,

சட்டென்று தன் கையை பின்னிழுத்துக் கொண்டவன், “ஒரு நிமிஷம் நான் சொல்ல வர்றதைப் பொறுமையாகக் கேளேன் அருந்ததி” எனவும், அவளோ தன் தலையை மறுப்பாக அசைத்துக் கொண்டே அவனது கையிலிருந்த தன் வண்டி சாவியை வாங்க முயன்று கொண்டு நின்றாள்.

ஒரு நிலைக்கு மேல் கோபம் தாளாமல் கதிரின் கையை இறுகப் பிடித்துக் கொண்டவள், “கதிர், என்ன விளையாட்டு இது? முதல்ல என் வண்டி சாவியைக் கொடுங்க” என்றவாறே சிறு அதட்டலுடன் அவனை முறைத்துப் பார்க்க,

அவனோ இத்தகைய பிரச்சினை உருவாக காரணமாக இருந்த அந்த நபரின் சட்டையைக் கொத்தாகப் பற்றி, “உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? இப்படி எல்லாம் பேசாதே, பேசாதேன்னு பல தடவை சொன்னேனா இல்லையா? இவ கழுத்தில் நான் தாலி கட்டும் வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு, பொறுமையாக இருன்னு எத்தனை தடவைதான்டா உனக்கு சொல்லுறது? இவளை இந்தக் கல்யாண டிராமா வரை கூட்டிட்டு வர்றதுக்கே எனக்கு எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா? சொல்லுடா தெரியுமா? உன்னோட அவசரப் புத்தியால் இப்படி எல்லாவற்றையும் நாசம் பண்ணிட்டியேடா” என்றவாறே அந்த நபரின் சட்டையை உதற, இப்போது அதிர்ச்சியாகி நிற்பது அருந்ததியின் முறையாகிப் போனது.

கதிர் பேசிய வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் சில கணங்கள் திகைத்து நின்றவள் பின்னர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “கதிர்! நீ இப்போ என்ன சொன்ன?” என்று வினவ,

சிறு சலிப்புடன் தன் கையிலிருந்த சாவியை தூர விட்டெறிந்தவன், “ஆமா நான் உன்னை ஏமாற்றித்தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். உன்னைப் பழிவாங்கத்தான் இப்படி எல்லாம் பண்ணேன். போதுமா?” என்று வினவ, அவளோ கோபம் கண் மறைக்க அவனது சட்டைக் காலரைப் பற்றி அவனது கன்னத்தில் மாறி மாறி அடிக்கத் தொடங்கினாள்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு அடிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றவன் பின் சட்டென அவளைத் தன்னை விட்டும் தள்ளி விட அப்போதும் அவளது கோபம் குறையவே இல்லை.

“எதற்காக இப்படி பண்ண? சொல்லுடா எதற்காக இப்படி பண்ண? நான் உனக்கு அப்படி என்ன கெடுதல் பண்ணேன்?”

“ஓஹ்! அப்போ உனக்கு நீ என்ன பண்ணேன்னு ஞாபகம் இல்லையா?”

“நீ என்ன சொல்லுற? நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணேன்?”

“கெடுதல்ன்னு எல்லாம் சொல்லிட முடியாது, ஆனா என் ஈகோவை ஹர்ட் பண்ணிட்ட”

“என்ன?” கதிர் சொல்ல வரும் விடயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அருந்ததி விழித்துக் கொண்டு நிற்க,

அவளெதிரில் வந்து நின்று கொண்டவன், “நான் முதன்முதலாக உனக்கு ப்ரோபஸ் பண்ணது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, அவளும் சிறு தயக்கத்துடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“அன்னைக்கு நீ எவ்வளவு சீன் போட்டேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? அதற்கு அப்புறம் என்னை எப்படி எல்லாம் அளைய வைச்ச? நீ ஆரம்பத்திலேயே நான் ஒரு பொண்ணு இல்லை இன்பாக்ட் ஆம்பளையும் இல்லை, ஏன் நான் இரண்டுமே இல்லாத ஒரு அரைகுறைன்னு சொல்லியிருந்தால் நான் என் வழியில் போயிட்டே இருந்திருப்பேன், ஆனா நீ என்ன பண்ண? ஏதோ நீ ஒருத்திதான் அந்த காலேஜிலேயே பொண்ணு மாதிரி பந்தா பண்ணி, என்னை உன் பின்னாடியே லோலோன்னு சுற்ற விட்டு அதற்கு அப்புறம் தானே உன்னைப் பற்றிய பரம ரகசியத்தை சொன்ன? அதுதான் நீ என்னை அளைய வைச்ச அந்த ஒவ்வொரு நாளும் என் ஈகோ ரொம்ப ரொம்ப ஹர்ட் ஆயிடுச்சு.

ஒருவேளை நீ உண்மையாகவே ஒரு பொண்ணா இருந்திருந்தால் என் டீலிங்கே வேற மாதிரி இருந்திருக்கும், ஆனா நீ தான் அந்த ரகம் இல்லையே, அதுதான் உன்னை உன் வழியிலேயே வந்து லாக் பண்ணிட்டேன், அப்புறம் உன்னைப் பற்றி இவங்க கிட்ட சொல்லவும் பசங்களும் உன்னைப் பார்த்தே தீரணும்னு ஒரே பிடிவாதம், அதுதான் இலவச காட்சிக்காக அவங்களையும் கையோடு கூட்டிட்டு வந்துட்டேன்” என்று கதிர் சொல்லி முடித்த அடுத்த கணம் அவனது கன்னத்தை வலிய கரம் ஒன்று அழுத்தமாக பதம் பார்த்திருந்தது.

அருந்ததி தான் தன்னை மீண்டும் அடித்து விட்டாள் போலும் என்ற கோபமான எண்ணத்துடன் விருட்டென்று நிமிர்ந்தவன் அங்கே தன்னெதிரில் நின்று கொண்டிருந்த சபரியைப் பார்த்து திகைத்துப் போய் நின்றான்.

“சபரி! நீயா?”

“ஆமாடா, நான்தான். ஏன் நீ என்னை இங்கே எதிர்பார்க்கல போல? என்ன இருந்தாலும் நீ என் பெஸ்ட் பிரண்ட், உன்னோட கல்யாணத்துக்கு நான் வரலேன்னா எப்படி?” என்றவாறே சபரி கதிரின் தோளில் தன் கையை வைக்க,

கோபமாக அவனது கை தட்டி விட்டவன், “இங்கே எதற்காக நீ வந்த? முதல்ல மரியாதையாக இங்கேயிருந்து போயிடு” என்று கூற, அவனோ அந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்பது போல நின்று கொண்டிருந்தான்.

“அருந்ததி, நீ முதல்ல இங்கேயிருந்து எப்படியாவது தப்பிச்சுப் போ. இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கேயிருந்தால் இந்த ராட்சசன் உன்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுவான். உன் நன்மைக்காகத்தான் சொல்லுறேன் தயவுசெய்து இங்கேயிருந்து தப்பிச்சுப் போயிடு அருந்ததி” என்றவாறே சபரி அருந்ததியின் புறம் திரும்பிப் பார்த்துக் கூற,

அவர்கள் அனைவரையும் கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றவள், “நான் தப்பிச்சுப் போகணுமா? நான் என்ன தப்பு பண்ணேன் சபரி? நான் எதற்காக தப்பிச்சு ஓடணும்? தப்பு பண்ணது இதோ நிற்கிறானுங்களே இவங்கதான். இவனுங்க தான் இங்கேயிருந்து தன்னோட உயிரைக் காப்பாற்ற தப்பிச்சு ஓடணுமே தவிர நான் இல்லை. இவனுங்க எல்லாம் உயிரோடு இருக்கவே தகுதியில்லாத ஜென்மங்கள். இவங்க எல்லோரையும் என் கையாலேயே வெட்டிப் போட்டாலும் என் ஆத்திரம் அடங்காது” என்றவாறே சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட அவள் தேடலைப் பூர்த்தி செய்வது போல பெரியதொரு மரக்கட்டை ஒன்று அவளை விட்டு இரண்டு மூன்று அடிகள் தள்ளி விழுந்து கிடந்தது.

உடனே அந்தக் கட்டையை தன் கையில் எடுத்துக் கொண்டவள் அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை பேரையும் சாராமரியாக அடிக்கத் தொடங்க, கதிரின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு நின்ற அனைவரும் அல்லோல கல்லோலப்பட்டு அங்கிருந்து தலை தெறிக்க ஓடத் தொடங்கினார்.

தன் உடம்பில் இருக்கும் மொத்த சக்தியையும் திரட்டி அவர்கள் அனைவரையும் ஓட விட்ட அருந்ததி தன் கோபம் சிறிதும் குறையாதவளாக கதிரின் முன்னால் வந்து நின்று அவனது சட்டைக் காலரைப் பற்றிப் பிடித்து, “நீ என்ன சொன்ன? ஒருவேளை நான் உண்மையாகவே ஒரு பொண்ணாக இருந்திருந்தால் நீ நடந்திருக்கும் விதமே வேறயா? அடச்சீ! இப்படி ஒரு வார்த்தையை சொல்ல உனக்கு அசிங்கமாக இல்லை? உன்னை மாதிரி ஒரு பிறவியை இந்த உலகத்திற்கு கொண்டு வந்ததும் ஒரு பொண்ணுதான்னு உன்னை மாதிரி கேடு கெட்டவனுக்கு எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் புரியாது. நீ எனக்கு மட்டுமில்ல இன்னும் எத்தனையோ பேருக்கு கெடுதல் பண்ணியிருப்ப, நிச்சயமாக அது எல்லாவற்றையும் தகுந்த ஆதாரத்துடன் நிருபித்து உனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை நிச்சயமாக வாங்கிக் கொடுப்பேன்” என்று விட்டு தன் கையை வேகமாக உதறியவள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லப் பார்த்த தருணம்,

அவளது தலையில் பலமாக எதுவோ தாக்க, “அம்மா! என்றவாறே தன் தலையைப் பிடித்துக் கொண்டவள் அப்படியே அந்த இடத்தில் மயங்கி சரிந்தாள்…..