தீயாகிய மங்கை நீயடி – 12

ei34NQ073963-042ea8f9

அருந்ததியின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட சந்திரன் அவளின் முகத்தின் முன்னாள் சொடக்கிட்டு, “என்ன மேடம் அப்படியே ஜெர்க் ஆகிப்போய் நிற்கிறீங்க? என்ன நான் சொன்னதை செய்ய மாட்டேன்னு நினைக்கிறீங்களா? வேணும்னா இப்போது உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதே நான் சொன்ன விஷயத்தை செய்து காட்டவா? நான் சொன்னதை செய்ய எனக்கு ஒரு நிமிஷமும் ஆகாது. அதனால உங்களோட இந்த வெட்டி வீராப்பு, திமிரு எல்லாவற்றையும் உங்களோட வெச்சுகிட்டு மரியாதையாக கதிருக்கு பயந்து நடந்துக்கோங்க, புரிஞ்சுதா?” என்று கூற, அருந்ததியோ தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினாள்.

சந்திரனின் முகம் அவளது சிரிப்பைப் பார்த்து கோபம் கொள்ளத் தொடங்க மீண்டும் அவனைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க, சந்திரனுக்கோ கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.

தன் கோபம் தாளாமல் தன் முன்னாலிருந்த மேஜை மீது ஓங்கி தட்டியவன், “இப்ப எதுக்கு சிரிக்கிற?” சற்று தன் குரலை உயர்த்தி வினவ,

அவனைப் பார்த்து பயப்படுவது போல் பாவனை செய்த படியே தன் சிரிப்பை மறைத்தவள், “அது ஒண்ணும் இல்லை சிரிப்பு போலீஸ் சார்” எனவும்,

“ஹேய்!” என்றவாறே மறுபடியும் அவன் முறைக்க,

உடனே தன் கன்னத்தில் போட்டுக் கொண்டவள், “ஐயோ! சாரி, சாரி. மன்னித்துக் கொள்ளுங்க இன்ஸ்பெக்டர் சார். ஆக்சுவலி நீங்க பேசுவதைப் பார்க்கும் போது எனக்கு என்னை அறியாமலே சிரிப்பு வந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்க இன்ஸ்பெக்டர் சார்” என்றவள் அவன் முன்னால் எழுந்து நின்று,

” நீங்க நிறைய சினிமா படங்கள் பார்ப்பீங்க போல இருக்கு. அதுதான் இப்படி சின்ன புள்ளத்தனமாக மிரட்டுறீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் மறந்து போச்சுன்னு நினைக்கிறேன். நீங்க எந்த சட்டத்தைப் பற்றி படித்து இந்த போலீஸ் வேலைக்கு வந்து இருக்கீங்களோ, அதே சட்டங்களைப் பற்றி படித்து தான் நானும் இந்த வக்கீல் வேலைக்கு வந்திருக்கேன், நீங்க என்னை மடக்க ஏதாவது எக்குத்தப்பாக செய்வீங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா இந்தளவுக்கு இறங்கிப் போவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. இருந்தாலும் பரவாயில்லை, இவ்வளவு நேரம் நீங்க பேசுனீங்க நான் கேட்டேன், இப்போ நான் பேசுறேன் நீங்க கேட்டுக்கோங்க” என்று விட்டு அவன் சற்று முன்னர் கிழித்துப் போட்ட காகிதங்களை தன் கையில் அள்ளி எடுத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் எத்தனை முறை கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் அதற்கான நிலைமை இதுதான்னு எனக்கு புரிஞ்சு போயிடுச்சு, அதனால இனிமே இந்த சட்டம், நீதி, நியாயம்ன்னு பேசி அதை நம்பி எந்தவொரு விஷயத்தையும் நான் செய்யப்போவதில்லை, அதற்குப் பதிலாக நீங்க எந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கீங்களோ அதே வழியில் தான் நானும் இனி பயணம் செய்யப் போறேன்.
இனிமேல் உங்க வாழ்க்கையை வருகிற ஒவ்வொரு நாளும் எதற்காக இந்த அருந்ததியை சீண்டினோம்ன்னு நீ மட்டும் இல்ல, அந்த கதிர், அவனோட அப்பன்னு எல்லாருமே பயந்து பயந்து சாகப் போறீங்க. அந்தளவிற்கு ஒரு பெரிய மறக்க முடியாத பரிசை நான் உங்க எல்லோருக்கும் கொடுக்க போறேன். இதை நீங்க என்னோட மிரட்டலாக எடுத்தாலும் சரி, இல்லைன்னா கணக்கிலேயே எடுக்காமல் போனாலும் சரி, ஆனா நிச்சயம் உங்க எல்லோரோட மரண ஓலத்தையும் கூடிய விரைவில் இந்த உலகத்திற்கு கேட்க வைப்பேன்.
ஒருவேளை உங்களை எல்லாம் மிரட்டியதற்காக என் மேல நீங்க கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயிலில் போட நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை, ஏன்னா நான் முன்னாடி சொன்ன மாதிரி நானும் இந்த சட்டத்தை பற்றி படித்தவள்தான், அதனால இந்த சட்டத்தை வைத்து ஒருத்தருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்ன்னா, அதே சட்டத்தை வைத்து என்னைக் காப்பாற்றவும் எனக்குத் தெரியும். அதனால இனி வரப்போற ஒவ்வொரு நாளும் நீயும், உன்னோட ஃப்ரண்ட் கதிரும் இந்த அருந்ததி என்ன பண்ண போறான்னு நினைச்சு நினைச்சு பயந்து சாகத் தயாராக இருங்க. அதற்கான கவுண்டன் இப்பவே ஸ்டார்ட் ஆயிடுச்சு.
அட, பாருங்களேன் இன்ஸ்பெக்டர் சார், கொஞ்ச நேரம் உங்க கூட பேசியதற்கே எனக்கும் சினிமாவில் வர்ற மாதிரி டயலாக் பேச வந்துடுச்சு, எது எப்படியோ நான் சொன்னதை மறந்துடாதீங்க, நான் வரேன்” என்றவள் தன் கையிலிருந்த காகிதத்தை அவன் முன்னால் கொட்டி விட்டுச் சென்றுவிட, சந்திரனுக்கு அவளது பேச்சைக் கேட்டு ஒரு கணம் சப்த நாடிகளும் அடங்கித்தான் போனது.

அவளது பேச்சை வெறும் பேச்சாக மாத்திரம் அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவள் பேசிய போது அவளது முகத்திலும், கண்களிலும் அத்தனை ரௌத்திரம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.

அவள் சொன்னது போல உண்மையாக தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது கெடுதல் நடந்து விடுமோ என்று பயத்தில் சிறிது தடுமாற்றம் கொண்ட சந்திரன் முதலில் இதைப்பற்றி கதிரிடம் சொல்லியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தக் கொண்டு தன் தொலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பை மேற்கொள்ள மறுபுறம் நாட் ரீச்சபிள் என்று வந்தது.

பலமுறை அவன் அழைப்பை மேற்கொண்டும் மறுபுறம் எந்தவொரு பதிலும் இல்லாது இருக்க சிறு கோபத்துடன் தன் தலையைக் கோதிக் கொண்டவன், “இந்த கதிர் எங்க போனான்னே தெரியல, ஏதாவது முக்கியமான விஷயம் பேசணும்னு நினைக்கும் நேரத்தில் தான் போனை எடுக்கவே மாட்டேன். அந்த அருந்ததி நம்மையே மிரட்டும் அளவுக்கு வந்துட்டா இல்லையா? இதற்கு அப்புறம் அவளை சும்மாவே விடக்கூடாது, அவளை ஏதாவது பண்ணியே ஆகணும்” என தனக்குள்ளே பேசிக்கொண்டவன் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக ஸ்டேஷனில் இருந்து வெளியேறி செல்ல, அவனது வருகைக்காக காத்திருந்தது போல சற்று தள்ளி நின்று கொண்டு அவனைக் கண்காணித்துக் கொண்டு நின்ற அருந்ததி தான் நினைத்தது நடந்து விட்ட திருப்தியோடு அவனை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.

அருந்ததி நினைத்தது போலவே சந்திரனின் வாகனம் கதிரின் வீட்டில் முன்னால் நிற்க, தான் வைத்த முதல் அடியே வெற்றியாக முடிந்து விட்டது என்கிற திருப்தியோடு தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டவள் அதே திருப்தியான மனநிலையுடன் தங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

அருந்ததியை வெகு நேரமாக காணாமல் தவித்துப் போய் நின்று கொண்டிருந்த வைஜயந்தி அவளைப் பார்த்ததுமே அவளருகில் ஓடி வந்து, “இவ்வளவு நேரமாக எங்க அருந்ததி போயிட்ட? உனக்கு எத்தனை தடவை கால் பண்றது? அப்படி போனைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கே போயிட்ட? உனக்காக எவ்வளவு நேரமா காத்திட்டு இருக்கேன்னு தெரியுமா? இல்லை வர லேட் ஆகும்னா அதைக் கூட சொல்ல மாட்டியா? அதைவிட எங்க போறன்னு கூட சொல்லாம கிளம்பி போயிட்ட, அப்படி எங்கதான் போன?” என்று கேட்க,

அவரை மேலும் கீழும் மேலே இறங்கப் பார்த்தவள், “ஏன் உங்களுக்கு என்னாச்சு வைஜயந்தி ம்மா? எதற்காக இவ்வளவு பதட்டமாக பேசுறீங்க?” என்று கேட்க அவரோ அவளது கையைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“எனக்கு என்ன நடந்ததுன்னு விசாரிக்க முதல் உனக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு? நானும் இரண்டு நாளாக உன்னைப் பார்த்துட்டு தான் இருக்கேன். கிருஷ்ணா இறந்து போனதிலிருந்து நீ சரியாகவே இல்லை. இரண்டு நாளா எங்கேயும் வெளியே வராமல் உன் ரூமிலேயே அடைந்து கிடந்த, இன்னைக்கு திடீர்னு வெளியே வந்த, வெளியே முற்றத்துக்கு ஓடின, அப்புறம் வீட்டுக்குப் பின்னாடி ஓடின, அப்புறம் அவசர அவசரமாக உன் பேக்கை எடுத்துக் கொண்டு எங்கேயோ போன. அப்படி என்னதான் நடக்குது? ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்ல மாட்டியா?” என்று கேட்க, அவரது தோளில் தன் கை வைத்து அழுத்திக் கொடுத்தவள் அங்கிருந்த நாற்காலியில் அவரை அமரச் செய்துவிட்டு சிறு புன்னகையுடன் அவரின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“அம்மா, நான் இதைப்பற்றி ஆரம்பித்திலேயே உங்ககிட்ட பேசி இருக்கணும், ஏதோ ஒரு பதட்டத்தில் சொல்லாமல் விட்டது என் தப்புதான். அதுவந்து என்னன்னா கிருஷ்ணாவோட மரணத்தில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, அதுதான் அதை தெளிவுபடுத்த கொஞ்சம் வெளியே போயிருந்தேன்” என்று கூற,

அவளை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்த வைஜயந்தி, “நீ என்ன சொல்ற அருந்ததி? அதுதான் நான் என்ன நடந்ததுன்னு அன்னைக்கே சொன்னேனே, அதற்கு அப்புறம் என்ன குழப்பம்?” என்று வினவ, அவளோ சிறு சலிப்புடன் தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டாள்.

“அம்மா! நீங்க இன்னுமா அதை நம்புறீங்க? இத்தனை காலமாக நாமும் இதே ஏரியாவில் தான் இருக்கோம், எத்தனையோ தடவை அவங்களோட சேர்ந்து சகஜமாக பொது வாகனத்தில் பிரயாணம் செய்து இருக்கோம், அப்படி இருக்கும் போது அத்தனை நாளாக நம்மை எதுவும் செய்யாதவங்க அன்னைக்கு மட்டும் அந்த சின்னப் பையனிடம் அவங்க வன்மத்தைக் காட்டுவாங்களா?” அருந்ததியின் கேள்வியில் சிறு பதட்டத்துடன் அவளது கையைப் பிடித்துக் கொண்டவர்,

“அப்படின்னா கிருஷ்ணாவோட மரணத்திற்கு என்ன காரணம்?” என்று வினவ, அவளோ கிருஷ்ணாவின் கையிலிருந்து தான் எடுத்த காகிதத்தைப் பார்த்து தனக்கு ஏற்பட்ட சந்தேகம் முதல் சிறிது நேரத்திற்கு முன் சந்திரனுடன் நடந்த தனது உரையாடல் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

“நீ என்ன அருந்ததி சொல்லுற? நான் ஏதோ அவங்க பாக்கத்தான் முரட்டுத்தனமான ஆளுங்க என்று நினைத்தேன், ஆனா அவங்க இத்தனை கொடூரமானவா்களாக இருக்க கூடும் என்று நான் கனவில் கூட நினைக்கல. எந்த தப்பும் பண்ணாத அந்த சின்ன பையனைக் கொலை செய்யும் அளவிற்கு அத்தனை கொடூரமானவங்களா அந்த கதிரும், அவனோட அப்பாவும்?” வைஜயந்தியின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள்,

“நான் கூட அவங்க முரட்டுத்தனமான ஆளுங்கன்னு தான் நினைத்தேன், ஆனா இப்படி கொடூரமான கொலைகாரப் பாவிகளாக இருப்பாங்கன்னு நினைக்கல. ஆனா, இதுக்கப்புறம் நான் அவங்க யாரையும் சும்மா விடப்போவதில்லை வைஜயந்தி ம்மா, அவங்க அந்த சட்டத்தை ஏமாற்றி தங்களை நல்லவங்களாக இந்த உலகத்திற்கு காண்பிக்கலாம், ஆனா என் கிட்ட இருந்து அவங்க தப்பிக்கவே முடியாது. அவங்க செஞ்ச தப்புக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கத்தான் போகுது, அதுவும் இந்த அருந்ததியின் கையால்” என்று கூற, வைஜயந்தி சிறு பதட்டத்துடன் அவளது தோளில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்து விட்டு வேண்டாம் என்பது போல தலையசைத்தார்.

“இல்லை அருந்ததி, நீ அப்படி எதுவும் செய்யக்கூடாது. இந்த உலகத்தில் அவங்க செய்ய தப்புக்கு நிச்சயமாக கடவுள் தண்டனை கொடுப்பார். அது கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகுது, ஆனா அதற்காக நீ உன் வாழ்க்கை வீணாக்க கூடாது” வைஜயந்தியின் கூற்றில் சற்று அதிர்ந்து போனவளாக அவரைத் திரும்பிப் பார்த்த அருந்ததி,

“அப்போ அவங்க வேணும்னே நம்மைக் கீழ தள்ளி ஏறி மிதித்து விட்டுப் போவாங்க, நாமும் அவங்களுக்கு அமைதியாக நல்லா எங்க மேலே ஏறி மிதித்திட்டுப் போங்கன்னு இடம் கொடுக்கணும்னு சொல்லுறீங்களா?” என்று கேட்க மறுபுறம் வைஜயந்தி அமைதியாக அமர்ந்திருந்தார்.

“உனக்கு இப்போ நான் சொல்றது எல்லாம் புரியாது அருந்ததி, ஏன்னா நீ கோபத்தில் இருக்க. கோபத்தில் இருக்கும்போது யாரு என்ன சொன்னாலும் அது நமக்கு தப்பாகவேபடும், ஆனால் அந்தக் கோபம் எல்லாம் கலைந்து போன பிறகு மற்றவங்க சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்குன்னு புரியும், அதேபோல நீயும் அமைதியாக இருந்து யோசித்துப் பாரு, நான் சொல்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்குன்னு உனக்கும் புரியும். கிருஷ்ணாவுக்கு நடந்தது தப்புத்தான், நான் இல்லைன்னு சொல்லலை, ஆனா அதை நீ இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கணும், அப்போதுதான் இன்னொரு தடவை யாரும் அந்த தப்பை செய்ய நினைக்க மாட்டாங்க, அதை விட்டுட்டு நீ இப்போ சொன்ன வழி இருக்கே, நிச்சயமாக அது அவங்க வாழ்க்கையை மட்டும் இல்லை, உன் வாழ்க்கையையும் சேர்த்து நாசம் பண்ணிடும்.
யாரோ ஒருத்தவங்களுக்காக என் பொண்ணு அவ வாழ்க்கையை இழந்துடக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன். நீ படித்த படிப்பு நிச்சயமாக உன்னைக் கைவிடாது அருந்ததி, நீ சட்டரீதியாக என்ன செய்ய நினைத்தாலும் செய், நிச்சயமாக நான் உனக்கு எல்லா விதத்திலும் ஆதரவாக இருப்பேன், ஆனா அதை விட்டு நீ வேறு ஏதாவது பண்ண நினைத்தால் நிச்சயமாக உனக்கு எதிராக நிற்கும் ஆளில் முதல் ஆளாக நான் இருப்பேன்”

“அம்மா!” வைஜயந்தியின் பேச்சைக் கேட்டு அருந்ததி திகைத்துப்போய் நிற்க, அவளை அழுத்தமாக ஒரு முறை நோட்டம் விட்டவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தன் அன்னையின் பிடிவாத குணத்தைப் பற்றி அருந்ததிக்கு ஏற்கனவே தெரியும் என்பதனால் அதற்கு மேலும் இந்த விடயத்தைப் பற்றி அவரிடம் வாதாட முடியாது என்று புரிந்து கொண்டவள் சிறு ஏமாற்றத்துடன் தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

தன் கண்ணுக்கு முன்னால் அநீதி நடக்கும் போது அதை கண்டும் காணாமல் இருக்க அவளால் முடியவில்லை, அதிலும் எந்த ஒரு விடயத்தை அவள் இந்த சமுதாயத்தை விட்டு அழிக்க நினைக்கின்றாளோ அந்த விடயத்தை வைத்தே அவர்களை மேலும் மேலும் அனைவரும் காயப்படுத்துவது அவளுக்கு மிகுந்த கவலை தரக் கூடிய விடயமாக இருந்தது.

அன்றைய உரையாடலுக்குப் பின்னர் அருந்ததி அந்த விடயத்தை பற்றி வேறு எதுவும் பேசவும் இல்லை, எதுவும் செய்யவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட வைஜயந்தி அவளை இயல்பாக வைத்திருக்கும் எண்ணத்துடன் வழக்கம் போன்று அவளுடன் பேச ஆரம்பிக்க, அருந்ததியும் தன்னால் முடிந்த மட்டும் தன்னை இயல்பாகக் காண்பிக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அன்றோடு கிருஷ்ணா இறந்து ஒரு வாரம் முழுமையாக முடிவு பெற்றிருந்தது, இந்த ஒரு வார காலத்தில் தான் அறிந்த சட்ட திட்டங்களை வைத்து சட்ட ரீதியாக அவனது மரணத்திற்கு நியாயம் வாங்கிக் கொடுக்க முடியுமா என்றும் அருந்ததி முயற்சி செய்யாமல் இல்லை, ஆனால் எந்த வழியிலும் அவளால் தன் இலக்கை அடைய முடியவில்லை என்பது தான் அவளுக்கு மிகுந்த கவலைக்குரிய விடயமாக இருந்தது.

இப்படியாக அருந்ததி மற்றும் வைஜயந்தி பழைய விடயங்களைப் பற்றி மறந்து மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த தருணம் அவர்கள் யாரும் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் அன்று இடம் பெற்றிருந்தது.

அருந்ததி வழக்கம் போன்று நீதிமன்றம் செல்வதற்காக தனது அறைக்குள் நின்று தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் வைஜயந்தி அவளுக்குத் தேவையான காலை உணவுகளை செய்து முடித்துவிட்டு தங்கள் வீட்டு வாசலில் கிடந்த அன்றைய நாளுக்கான பத்திரிகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

வழக்கமாக தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பத்திரிகை படிப்பவர் அன்று ஏதேச்சையாக அந்தப் பத்திரிகையின் முன்புறத்தைப் புரட்டிப் பார்க்க, அதில் அச்சிடப்பட்டிருந்த செய்தியோ அவரை மொத்தமாக புரட்டிப் போட்டு இருந்தது.

தன் கண்களை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அந்த செய்தியைப் படித்துப் பார்த்தவர் முகம் எல்லாம் சிவந்து போனவராக கோபமாக அருந்ததியின் முன்னால் சென்று, “அருந்ததி! நீ என்ன பண்ணி இருக்க?” என்றவாறே தன் கையிலிருந்த பத்திரிகையை அவளை நோக்கி விட்டெறிய, அவளோ அவரது செயலில் அதிர்ச்சியுற்றவளாக அவரைத் திகைத்துப்போய் பார்த்துக் கொண்டு நின்றாள்……..