தீயாகிய மங்கை நீயடி – 14

ei34NQ073963-1b99a49c

வைஜயந்தி பேருந்து நிலையத்தின் அருகில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து பதட்டத்துடன் அங்கே விரைந்து சென்று பார்க்க, அங்கே அருந்ததி முழங்காலிட்டு அமர்ந்திருக்க அவளெதிரில் நின்று கொண்டிருந்த கிட்டத்தட்ட ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளை அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுக் கொண்டு நின்றது.

வைஜயந்தி தான் காணும் காட்சி உண்மைதானா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு நிற்க, அவர் மட்டுமல்லாமல் அங்கே நின்று கொண்டிருந்த அனைவரும் அந்தப் காட்சியை ஆச்சரியமாகத் தான் பார்த்துக் கொண்டு நின்றனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு அருந்ததி அங்கே கோபமாக பேசிக் கொண்டு நின்ற தருணம் அவளைப் பார்த்து மிரண்டு போய் விலகி நின்ற பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நின்ற அவரது பிள்ளை சட்டென்று தன் அன்னையின் கையை உதறி விட்டு அருந்ததியின் அருகில் வந்து நின்று அவளது ஆடையைப் பிடித்து இழுக்க, தன் கோபமான பேச்சைக் கை விட்டு விட்டு கீழே குனிந்து பார்த்தவள் அந்தப் பிள்ளையின் முக பாவனையைப் பார்த்து சிறிது சிந்தனை வயப்பட்டவளாக அந்தப் பிள்ளையின் உயரத்திற்கு ஏற்றாற் போல் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.

அருந்ததி முழங்காலிட்டு அமர்ந்த அடுத்த கணமே அவளது கழுத்தைக் கட்டிக் கொண்ட அந்தப் பிள்ளை அவளது கன்னத்தில் முத்தமிட, அங்கே நின்று கொண்டிருந்த அனைவருமே அந்த செயலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர் என்றால் மிகையாகாது.

அந்தப் பிள்ளையின் திடீர் முத்தத்தில் ஒரு கணம் தன்னை மறந்து போன அருந்ததி அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்டு அந்தப் பிள்ளையை அணைத்துக் கொள்ள, அந்தப் பிள்ளையும் அவளை பாசமாக ஆரத்தழுவிக் கொண்டது.

“எதற்காக பாப்பா நீங்க எனக்கு திடீர்னு முத்தம் கொடுத்தீங்க?” அருந்ததியின் கேள்வியில் அவளது அணைப்பிலிருந்து விலகி நின்ற அந்தப் பிள்ளை,

“எங்க அம்மா சொல்லியிருக்காங்க, நமக்குப் பிடித்த யாராவது கோபமாக இருந்தாங்கன்னா அவங்களுக்கு இப்படி முத்தா கொடுத்தால் அவங்க கோபம் பறந்து போயிடுமாம், அதுதான் உங்களுக்கு முத்தா கொடுத்தேன், பார்த்தீங்களா? உங்க கோபம் பறந்து போயிடுச்சு” என்று கூற,

கண்கள் கலங்க அந்தப் பிள்ளையை மீண்டும் அணைத்து விட்டு விடுவித்தவள், “அப்போ என்னை உங்களுக்கு பிடிக்குமா?” என்று வினவ, அந்தப் பிள்ளை வேகமாக ஆமென்று தலையசைத்தது.

“நிஜமாகவே உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” அருந்ததி தவிப்புடன் அந்தப் பிள்ளையைப் பார்த்து வினவ,

அவளைப் பார்த்து மறுபடியும் ஆமோதிப்பாக தலையசைத்த அந்தப் பிள்ளை, “நீங்க தானே என்னை அன்னைக்கு ஒருநாள் வாகனத்தில் அடிபடாமல் காப்பாற்றுனீங்க, அப்போ இவங்க எல்லாரும் உங்களைத் திட்டுனாங்க, ஆனா நீங்க சிரிச்சுக்கிட்டே போனீங்க இல்லையா? அப்போ இருந்து உங்களை எனக்குப் பிடிக்கும். நான் ஒவ்வொரு நாளும் நீங்க இந்த வழியாக போகும் போது உங்களைப் பார்த்துட்டேதான் இருப்பேன், தெரியுமா?” என்று கூற, அருந்ததி மட்டுமின்றி வைஜயந்தி கூட அந்தப் பிள்ளையின் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போய் நின்று கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?”

“தாராளமாக கேளும்மா, என்ன கேட்க போற?”

“எதுக்காக ஆன்ட்டி, எங்க அம்மாவும் இங்க இருக்கிறவங்களும் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் திட்டுறாங்க?” அந்தப் பிள்ளையின் கேள்வியில் அருந்ததி சட்டென்று நிமிர்ந்து தன்னெதிரே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்க்க, அவர்களோ தங்கள் செயலுக்கு என்ன நியாயம் சொல்வது என்று தெரியாமல் அமைதியில் உறைந்து நின்றனர்.

” சரி, நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?”

“ம்ம்ம்ம்ம்ம், கேளுங்க”

“நீங்க பாயா? கேர்ளா?” அருந்ததியின் கேள்வியில் களுக்கென்று சிரித்த அந்தப் பிள்ளை,

“நான் கேர்ள் ஆன்ட்டி, என் ட்ரெஸ், ஹேர் எல்லாம் பார்த்தால் உங்களுக்குத் தெரியலையா?” என்று வினவ,

பதிலுக்கு அந்தப் பிள்ளையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “நீங்க கேர்ள் தான், அதோ அந்த ஆங்கிள் பாய் தான், அதேமாதிரி நானும், இங்கே இருக்கிற இந்தப் பசங்களும் தர்ட் ஜென்டர், அதாவது மூன்றாம் பாலினத்தவர்கள். அப்படின்னா பாய், கேர்ள் மாதிரி இன்னொரு ஜென்டர்” என்று கூற, அவள் பேசுவதையேப் பார்த்துக் கொண்டு நின்ற அந்தப் பிள்ளை தன் கன்னத்தை தட்டி சிறிது நேரம் யோசிப்பது போல பாவனை செய்து கொண்டு நின்றது.

“என்ன பாப்பா யோசிக்குறீங்க?”

“தர்ட் ஜென்டர்னா எப்படி இருக்கும்?”

“அதை அப்படி ஈஸியாக உங்களுக்குப் புரியும் மாதிரி சொல்ல முடியுமான்னு தெரியலையே. பரவாயில்லை, நான் உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லுறேன்” என்றவள் அந்தப் பிள்ளையை தன் அருகே நிற்கச் செய்து விட்டு,

“நம்ம எல்லாம் படைத்த கடவுள் இருக்காரு இல்லையா? அவரு ஒவ்வொரு ஆட்களையும் படைக்கும் போதே நீங்க கேர்ள், நீங்க பாய்ன்னு சொல்லி படைச்சுடுவாரு, அதற்கு அப்புறம் நம்மளும் இந்த உலகத்திற்கு வந்துடுவோம். அதற்கு அப்புறம் நம்ம வளர, வளர நம்ம படைத்த கடவுள் இருக்காரே அவரு குறிப்பிட்ட சில ஆட்களுக்கு மட்டும் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பாரு” என்று கூற,

“சர்ப்ரைஸா? என்ன அது?” அந்தப் பிள்ளை இப்போது ஆவலாக அவளது கையைப் பிடித்துக் கொண்டு வினவியது.

“அது என்னன்னா சில ஆளுங்களை கடவுள் பாய் மாதிரி படைச்சு இருப்பாரே, அவங்களுக்கு வளர வளர ஒரு கேர்ள் மாதிரி டிரெஸ் பண்ணணும், முடி வளர்க்கணும், ஒரு கேர்ள் மாதிரியே வாழணும்னு ஆசையைக் கொடுத்துடுவாரு. அதே மாதிரி கேர்ள் மாதிரி படைச்சவங்களுக்கு ஒரு பாய் மாதிரி வாழணும்னு ஆசையைக் கொடுத்துடுவாரு. அதேமாதிரி இன்னும் கொஞ்ச பேருக்கு கேர்ள் மாதிரியும், பாய் மாதிரியும் இரண்டும் சேர்ந்து இருக்கிற மாதிரி அந்தப் கடவுள் படைச்சு வைச்சுடுவாரு. இப்படி அந்தப் கடவுள் எல்லாவற்றையும் பண்ணி வைத்த பிறகு இப்போ அந்த ஆளுங்க அந்த ஆசையைக் கை விடவும் முடியாமல், அவங்களை சுற்றி இருக்கும் ஆளுங்ககிட்ட அதைப் பற்றி சொல்லவும் முடியாமல், அப்படி மீறி சொன்னாலும் அதை அவங்க ஏற்றுக்கொள்ளாமல் அவங்களை அடிச்சு, வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவாங்க.

வீட்டை விட்டு வெளியே வந்தாலும் இதையெல்லாம் வெளியே யாருகிட்டயும் பகிர்ந்து கொள்ள முடியாமல், மற்ற ஆளுங்க கூட சகஜமாகப் பழக முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த உலகத்திலேயே கிட்டத்தட்ட நரகத்தோட வாயில் வரை போயிட்டு வர்றது போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பாங்க. இதுதான் எங்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ், இந்த உலகத்தைப் பொருத்தவரை பெரிய ஒரு தவறான காரியம்” அருந்ததி சொன்ன விடயங்களை அந்தப் பிள்ளை புரிந்து கொண்டதோ என்னவோ ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அவளது குரலில் இருந்த வலி அப்பட்டமாக புரிந்தது என்றால் மிகையாகாது.

அருந்ததி தன் மனவலியை மறைக்க முயன்றபடியே அந்தப் பிள்ளையை விட்டும் விலகிச் செல்லப் பார்க்க, அதற்குள் அந்தப் பிள்ளை அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டது மட்டுமின்றி அவளது கையை விடாமல் தன் அன்னையின் முன்னால் சென்று நின்று, “அம்மா, நீங்க என்கிட்ட ஒரு விஷயம் சொல்லி இருக்கீங்க, நம்ம தப்பு பண்ணால் அந்த தப்பு பண்ண யாரு ரீசனோ அவங்களுக்குத்தான் தண்டனை கொடுக்கணும்ன்னு. அப்படின்னா இந்த ஆன்ட்டி எந்த தப்பும் பண்ணலையே, கடவுள் தானே தப்பு பண்ணி இருக்காங்க? அப்போ தண்டனையும் அவருக்குத் தானே கொடுக்கணும்? கரெக்டா?” என்று வினவ, அந்தச் சிறு பிள்ளையின் கேள்வியில் அருந்ததி மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே வியந்து போய் நின்றனர்.

அந்தச் சிறு பிள்ளைக்கு இருக்கும் தெளிவும், நிதானமும் இத்தனை தூரம் படித்து, பெரிய பெரிய பதவியில் இருக்கும் நமக்கு இல்லையே என்ற குற்றவுணர்வில் அங்கிருந்த அனைவருமே தலை குனிந்து நிற்க, சட்டென்று தன் பிள்ளையை வாரி அணைத்துக் கொண்ட அந்தப் பெண் அருந்ததியைப் பார்த்து தன் இரு கரம் கூப்பி மன்னிப்பு வேண்டி நின்றார்.

“தயவுசெய்து என்னை மன்னிச்சுடும்மா, என் பிள்ளைக்கிட்ட இருக்கும் தெளிவு என் கிட்ட இல்லைன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியாக இருக்கு. ஜாதி இல்லை, மதம் இல்லைன்னு பெருமையாக பேசிட்டு இருக்கோம் ஆனா இந்த சின்ன விஷயத்தை இதுவரைக்கும் நாங்க யாருமே மனதளவில் கூட ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கோமேன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையாக இருக்கு. இத்தனை காலமாக தெரிந்தும், தெரியாமலும் உங்க எல்லாரையும் வருத்தப்பட வைத்ததற்கு ரொம்ப ரொம்ப சாரி” என்று கூறிய அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து ஆதரவாக அழுத்திக் கொடுத்தவள்,

“நீங்க சொன்னது போலவே இங்கே இருக்கிற எல்லோரும் எல்லோரையும் சரிசமமாக மதித்தாலே போதும், அதுவே எங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பெரிய பரிசுதான்” என்று கூற, அத்தனை நேரமும் அவர்களை அருவருப்பாக நோக்கிய அத்தனை பேரும் அவர்களின் அருகில் வந்து அவர்கள் அனைவருடனும் சகஜமாக சிரித்துப் பேச ஆரம்பித்திருந்தனர்.

ஒரு சிறு பிள்ளையின் கேள்வி அந்த சமுதாயத்தில் எத்தனை பெரிய மாற்றத்தை இத்தனை சீக்கிரமாக உருவாக்கக்கூடும் எதிர்பார்த்திராத அருந்ததி அங்கே நடந்து முடிந்திருந்த அந்த சம்பவத்தை எண்ணி சந்தோஷம் கொண்டவளாக தன் கண்களின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே திரும்பி பார்க்க, அதே சமயம் வைஜெயந்தியும் அங்கே நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மெய் மறந்து போய் நின்று கொண்டிருந்தார். வைஜெயந்தியை அங்கு எதிர்பார்த்திராத அருந்ததி தன் சந்தோஷம் இன்னும் அதிகரிக்க, “வைஜயந்தி ம்மா!” என்றவாறே ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொள்ள, அவரும் தன் கண்களைத் துடைத்து விட்டபடியே அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.

“நீங்க எப்போ வைஜயந்தி ம்மா இங்கே வந்தீங்க?”

“உன்னை காணோம்னு தான் வெளியே வந்து பார்த்தேன், இங்கே சரியான கூட்டமாக இருந்தது. மறுபடியும் ஏதாவது பிரச்சினையோன்னு பயந்து போய் இங்கே வந்து பார்த்தால் எல்லாமே நல்ல விஷயமாக நடந்து கொண்டிருக்கிறது” என்று கூற அருந்ததி சிறு புன்னகையுடன் அவரை மீண்டும் ஆரத்தழுவி விடுவித்தாள்.

“நீங்க அன்னைக்கு சொன்னது சரிதான் வைஜயந்தி ம்மா, இந்த உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, நல்லவங்களும் நிறைய பேர் இருக்காங்க தான்”

“அதற்குத்தான் பெரியவங்க சொல்லுறதையும் கேட்கணும்னு சொல்லுறது”

“சரி, சரி. நான் போக வேண்டிய பஸ் வந்துடுச்சு, மீதியை நான் ஈவ்னிங் வந்த பிறகு பேசிக்கலாம், பாய் வைஜயந்தி ம்மா” என்றவாறே அருந்ததி பேருந்தில் ஏறி சென்று விட, வைஜயந்தி ஆனந்தக் கண்ணீரோடு அவள் அமர்ந்திருந்த பேருந்து சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

எத்தனை வருடங்களாக இந்த ஒரு தருணத்திற்காக அவர் ஏங்கியிருப்பார்? ஆரம்பத்தில் அவர் ஒரு திருநங்கையாக அந்தப் பகுதிக்கு வந்த போது அவரைக் காண்போர் எல்லாம் கல்லெறிந்தும், தடியால் அடித்தும் விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அதையும் மீறி தன்னைப் போன்றிருக்கும் நபர்களை எல்லாம் ஒன்றிணைத்து இன்று அத்தனை பேருடனும் ஒரே குடும்பம் போல் வாழ்வது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை.

பெற்றோரின் அரவணைப்பின்றி, நண்பர்களின் ஆறுதலின்றி, சகோதரர்களின் உறுதுணையின்றி ஒரு தனிநபராக அந்த வன்மம் கொண்டிருந்த சமூகத்தை எதிர்த்துப் போராடி அன்றைய காலகட்டத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

அத்தனை பெரிய தடைகளையும் மீறி தங்களுக்கு கிடைக்காத கல்வியும், மற்ற மற்ற வசதிகளும் இப்போது வளர்ந்து வரும் மற்றைய மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எத்தனை அவமானங்களையும், ஏச்சு பேச்சுக்களையும் அவர் வாங்கியிருப்பார் என்று அவருக்கே கணக்கில் இல்லை.

தான் சந்தித்த ஒவ்வொரு அவமானங்களையும் தான் செல்லும் பாதையின் படிக்கற்களாக பயன்படுத்தியதனால் தான் இன்று அவருக்கு இந்த சமூகத்தில் ஒரு சிறு மதிப்பேனும் இருக்கிறது.

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டபடியே வைஜயந்தி தங்கள் வீட்டை வந்து சேர்ந்திருக்க, மறுபுறம் அருந்ததி தனது அலுவலக அறைக்குள் என்றுமில்லாத சந்தோஷமான மனநிலையுடன் வந்து சேர்ந்திருந்தாள்.

அன்றைய தினம் அவளுக்கு அளவில்லா சந்தோஷத்தை அள்ளி வழங்கியிருக்க, அதை எண்ணிப் பூரித்துப் போனவளாக அவள் அமர்ந்திருந்த தருணம் அவளது அறையின் கதவு தட்டப்பட, “எஸ் கம் இன்” என்றவள் தன்னைப் பார்க்க யார் வந்திருக்க கூடும் என்கிற எதிர்பார்ப்புடன் அந்தப் கதவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆகாய நீல நிற முழுக்கை சட்டை மற்றும் கறுப்பு பேண்ட் அணிந்து காற்றில் மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்த தன் தலை முடியைக் கோதி விட்டபடியே வாட்டசாட்டமாக இருந்த ஒரு இளைஞன் முகம் நிறைந்த புன்னகையுடன் அவளெதிரில் வந்து நிற்க, பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகை செய்தவள் அவன் யார்? என்ன விடயமாக வந்திருக்கிறான் என்று கேட்கலாம் என எண்ணி தன் வாயைத் திறக்க, அதற்குள் அவனோ, “ஐயோ! மேடம், உங்க ரூம் ரொம்ப நீட்டா இருக்கு, சான்ஸே இல்லை போங்க. அதுவும் அந்த வெளியே கதவு கிட்ட இரண்டு தொட்டியில் மரம் வைத்து இருக்கீங்க இல்லையா? அட! அட! என்ன ஒரு அழகு தெரியுமா? அது மட்டுமில்லாமல் இந்த ரூமிலேயும் சின்ன சின்ன தொட்டியில் அழகு அழகாக குட்டி, குட்டியான மரம் வைத்திருக்கீங்க தானே? அது எல்லாவற்றையும் விட ரொம்ப அழகாக இருக்கு, அப்படியே ஒரு நேச்சுரல் ஃபீலை அள்ளிக் கொடுக்கிறதுன்னா பாருங்களேன். அது மட்டுமா? நீங்க இந்த ரூமை ஆர்கனைஸ் பண்ணி இருக்கிற விதம் இருக்கே! அப்பப்பா! அவ்வளவு அழகாக இருக்கு” என்றவாறே அருந்ததியைப் பேசவே விடாமல் தன் பாட்டிற்கு படபடவென பேசிக் கொண்டே செல்ல, அவளோ அவனது பேச்சைக் கேட்டு திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

“ஹலோ! ஹலோ மிஸ்டர்! ஒரு நிமிஷம் இருங்க. நீங்க யாரு? என்ன? எதுவுமே சொல்லாமல் திடுதிப்புன்னு வந்து எதை எதையோ பேசிட்டு இருக்கீங்க. ஆக்சுவலி நீங்க யாரு? இங்கே எதற்காக வந்திருக்கீங்க?” அருந்ததியின் கேள்வியில் சட்டென்று ஏதோ நினைவு வந்தது போல தன் தலையில் தட்டிக் கொண்டவன்,

“அடடா! பாருங்களேன் மேடம், உங்களையும், உங்க ரூமையும் பார்த்த ஒரு பிரமிப்பில் நான் வந்த விஷயத்தையே சொல்ல மறந்துட்டேன்” என்றவாறே அருந்ததிக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளும் அவனை மேலிருந்து கீழாக அளவிடுவது போலவே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“முதல்ல நான் என்னோட பேரை சொல்லுறேன். ஐ யம் சிவகுரு பிரசாத், சன் ஆஃப் ரத்னவேல் அன்ட் கார்த்திகா. பேசிக்கலி என் ஃபேமிலி அன்ட் ரிலேட்டிவ் என்னை சிவான்னு கூப்பிடுவாங்க, என் பிரண்ட்ஸ் அன்ட் ஆஃபிசியல் மேட்ஸ் எல்லாரும் பிரசாத்ன்னு கூப்பிடுவாங்க. இதுவரைக்கும் யாரும் என்னை குருன்னு கூப்பிட்டதே இல்லை, ஷோ நீங்க என்னை சிவான்னு கூப்பிட போறீங்களா? இல்லை பிரசாத்ன்னு கூப்பிடப் போறீங்களா? இல்லை புதுசா, ஸ்பெஷலா குருன்னு கூப்பிடப் போறீங்களா?” சிவகுரு பிரசாத்தின் கேள்வியில் அவனை சிறிது முறைத்துப் பார்த்தவள்,

“மிஸ்டர். சிவகுரு பிரசாத், நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க, அவளின் சிவகுரு பிரசாத் என்ற அழைப்பில் தன் இதழோரம் தவழ்ந்த சிரிப்பை மறைத்தபடியே அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அந்தப் புதியவன்………