தீயாகிய மங்கை நீயடி – 17

ei34NQ073963-2c71693a

அருந்ததியும், சிவகுருவும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை.

அதிலும் அருந்ததி மறந்தும் கூட சிவகுருவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவள் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் மாறி மாறி ஓடிக் கொண்டேயிருக்க, அவள் எண்ணம் முழுவதும் அவள் சிந்தனைகளிலேயே லயித்திருந்தது.

அருந்ததியின் வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்த பின்னரும் அவள் பலத்த சிந்தனையில் மூழ்கியிருப்பதைப் பார்த்து தன் கையை அவளது தோளில் வைக்கப் போனவன், பின் சிறு தயக்கத்துடன் தன் கையைப் பின்னிழுத்துக் கொண்டான்.

சிவகுரு ஒவ்வொரு முறையும் தன்னை மறந்து அவளைத் தொட்டுப் பேச எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒரு தயக்கம் அவனை அப்படி செய்ய விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது.

முதன்முதலாக அந்தப் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் வைத்து அவளது பேச்சையும், கம்பீரத்தையும் பார்த்து வியந்து போன சிவகுரு இன்று வரை அவளை ஒவ்வொரு முறை காணும் போதும் வியந்து கொண்டே தான் இருக்கிறான்.

அவன் இதுவரை தன் வாழ்நாளில் மூன்றாம் பாலினத்தவர்களை ஏதோ ஒரு தவறான வகையில் சித்தரிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் தான் அவன் சந்தித்திருக்கிறான், ஆனால் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்கள் மேல் அவன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றுவது போலத்தான் இருந்தது அருந்ததியுடனான சந்திப்பும், அவளுடனான இத்தனை நாள் நட்பும்.

‘அவளை இப்படியே பார்த்து வியந்து கொண்டிருந்தால் அன்றைய நாள் முழுவதும் அப்படியே இருந்து விடுவோம் போல’ என்றெண்ணியபடியே தனக்குள் சிரித்துக் கொண்டவன்,

“அருந்ததி! உங்க வீடு வரைக்கும் உங்களை கூட்டிட்டு வந்திருக்கேன், அது கூட தெரியாமல் என்ன பலத்த யோசனை? ஒருவேளை இவனை இப்படியே அனுப்பி வைச்சுடலாமான்னு யோசிக்குறீங்களா?” என்று வினவ,

அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தவள், “உங்களுக்கு எப்போ பார்த்தாலும் நக்கல் தானா? எங்க வீடு வரைக்கும் துணைக்கு வந்த மனுஷனை வாசலிலேயே வைத்து திருப்பி அனுப்பும் அளவுக்கு நான் ஒண்ணும் அவ்வளவு கொடுமைக்காரி இல்லைங்க, நான் ஏதோ ஒரு யோசனையில் இருந்துட்டேன், அதற்குள்ள எவ்வளவு பேச்சு? நீங்க உள்ளே வாங்க, உங்களுக்கு காஃபியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைப் போட்டுத் தர்றேன்” என்று கூற, அவனோ அதிர்ச்சியானது போல பாவனை செய்தபடி தன் வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.

“என்ன உலகம்டா இது? தேடி வந்து உதவி செய்தால் இப்படித்தான் நடக்குமோ?”

“அட போதும்! போதும், முதல்ல உள்ளே வாங்க, எங்க அம்மா அன்ட் எங்களோட உறவுக்காரங்க எல்லோரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்”

“கண்டிப்பா, நானும் உங்க ஃபேமிலியைப் பார்க்க ரொம்ப ரொம்ப ஆவலாக இருக்கேன்” என்றவாறே சிவகுரு தன் காரில் இருந்து இறங்கிக் கொள்ள, மறுபுறம் அருந்ததியும் சிறு புன்னகையுடன் அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

இத்தனை நாட்களில் சிவகுரு அந்தப் பகுதியைப் பெரிதாக கவனித்துப் பார்த்ததே இல்லை, அதிலும் அந்தப் பக்கமாக கடந்து செல்லும் போது ஏதேச்சையாக எப்போதாவது ஒன்றிரண்டு தடவைகள் அந்தப் பகுதியை அவன் பார்த்திருக்கக்கூடும், மற்றபடி பெரும் சிரத்தை எடுத்து அந்தப் பகுதியை உற்றுக் கவனிக்க அவன் நினைத்ததும் இல்லை, அதை விரும்பியதும் இல்லை.

ஆனால் அருந்ததியுடனான நட்பின் பின்னர் என்றாவது ஒருநாள் இந்த இடத்திற்கு வந்து இங்கே இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும் என்கிற ஆசை அவனையும் அறியாமல் அவன் மனதிற்குள் வித்திட்டிருந்தது.

எதற்காக தனக்குள் அப்படி ஒரு ஆவல் எழுந்தது என்பதை ஆராய விரும்பாமலேயே அருந்ததியுடன் இணைந்து நடந்து சென்றவன் அந்தப் பகுதியைச் சுற்றி தன் பார்வையை படரவிட்டான்.

அந்தப் பகுதியில் எப்படியும் ஏறத்தாழ இருபத்தைந்தில் இருந்து முப்பது வீடுகளே இருக்கக்கூடும், அதிலும் பத்திற்கும் குறைவான வீடுகளே முழுமையான ஒரு வீட்டைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்டது.

மீதி வீடுகள் எல்லாம் பாதி இடிந்தும், கூரைகள் இன்றியும் ஏதோ ஒரு யுத்தத்தில் சிக்கி தப்பித்த கட்டடங்கள் போலவே காணப்பட்டது.

ஆனால் என்னதான் அந்தப் பகுதியில் வீடுகள் முறையாக இல்லாமல் இருந்திருந்தாலும் அந்த இடத்தின் நேர்த்தி அவனை ஒருகணம் பிரமித்துப் போகத்தான் செய்தது.

ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஏதாவது ஒரு பெரிய மரம் நடப்பட்டிருக்க, அதைச் சுற்றி சிறிய சிறிய காய்கறிச் செடிகளும், கொடிகளும் படர விடப்பட்டு அந்த இடத்தின் குறையை அவை இல்லாமல் செய்வது போல் இருந்தது.

“என்ன ஆச்சு? ரொம்ப நேரமாக இந்த இடத்தையே சுற்றி சுற்றிப் பார்க்குறீங்க, அப்புறம் வைச்ச கண்ணு வாங்காமல் ஒரே இடத்தைப் பார்த்துட்டு நிற்குறீங்க? என்னங்க ஆச்சு?” அருந்ததியின் கேள்வியில் பெருமூச்சு விட்டபடியே அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நீங்க எங்க ஆசிரமத்திற்கு வந்திருந்த நேரம் ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு உங்களுக்குள்ள வந்ததுன்னு சொன்னீங்க இல்லையா? அதே உணர்வு இப்போ எனக்கும் வந்துடுச்சு” என்று கூற,

அருந்ததியோ சிறு புன்னகையுடன், “இது தான் எங்க வீடு, உள்ளே வாங்க” என்றவாறே தங்கள் வீட்டிற்குள் அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“வைஜயந்தி ம்மா, வைஜயந்தி ம்மா, கொஞ்சம் வெளியே வந்து யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க” அந்த வீடே அதிரும் அளவிற்கு சத்தமிட்டுக் கொண்டு வைஜயந்தியைத் தேடி அருந்ததி சென்று விட, சிவகுரு அந்த வீட்டை மேலோட்டமாக நோட்டம் விட ஆரம்பித்தான்.

பெரிதாக அந்த வீட்டினுள் எந்தவொரு நவீன வசதிகளும் இல்லாவிட்டாலும் அங்கங்கே அருந்ததியின் சிறு வயது புகைப்படங்களும், வைஜயந்தியின் புகைப்படங்களும் மாட்டப்பட்டிருந்தது.

அதற்கெல்லாம் நடுவில் ஒரு இளைஞனின் புகைப்படம் மாலையிடப்பட்டு மாட்டப்பட்டிருக்க, அது யாராக இருக்கக் கூடும் என்கிற யோசனையுடன் சிவகுரு நின்று கொண்டிருந்த தருணம், “வாங்க தம்பி, வாங்க” என்ற குரல் கேட்கவும் சட்டென்று அந்தப் பக்கமாக திரும்பிப் பார்த்தான்.

அருந்ததியின் அருகில் நின்று கொண்டிருந்த வைஜயந்தியைப் பார்த்து இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தவன், “எப்படிம்மா இருக்கீங்க?” என்று வினவ, அவனது அம்மா என்ற அழைப்பில் வைஜயந்தியின் கண்கள் சட்டென்று கலங்கிப் போனது.

“ஐயோ! என்னங்க ஆச்சு? நான் ஏதாவது தப்பாக பேசிட்டேனா?” சிவகுரு சிறு பதட்டத்துடன் அருந்ததியைத் திரும்பிப் பார்க்க,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. என்னோட வைஜயந்தி ம்மா என்னைத் தவிர வேறு யாராவது அவங்களை அம்மான்னு கூப்பிட்டால் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப எமோஷனல் ஆகிடுவாங்க, அவ்வளவுதான்” என்று கூற, அப்போதுதான் அவனுக்கு நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

“நான் கூட ஏதாவது தெரியாம தவறுதலாக வார்த்தையை மாற்றிப் பேசிட்டேனோன்னு கொஞ்சம் பயந்து போயிட்டேன் போங்க”

“அதெல்லாம் நீங்க அடிக்கடி பண்ணுறது தானே? ஆனா என்ன இன்றைக்கு தான் நீங்க ஏதோ கொஞ்சம் தெளிவாக பேசி பேசியிருக்கீங்க” அருந்ததியின் பேச்சைக் கேட்டு அவளது தோளில் தட்டிய வைஜயந்தி,

“சும்மா இரு அருந்ததி, எப்போ பார்த்தாலும் நக்கல் பேச்சுத்தான் உனக்கு” என்றவர்,

சிவகுருவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, “தம்பி, நீங்க எதுவும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம், இவ எப்போவுமே இப்படித்தான்” என்றவாறே அருந்ததியைத் திரும்பிப் பார்த்து,

“போய் தம்பிக்கு காபி போட்டு கொண்டு வா” என்று கூற,

அவனோ, “காஃபியா? ஐயோ! வேண்டாம்” என்று அவசரமாக மறுப்புக் கூற வைஜயந்தி அவனைக் குழப்பமாகத் திரும்பிப் பார்த்தார்.

“என்ன ஆச்சு தம்பி? எதற்காக இவ்வளவு பதட்டமாக பேசுறீங்க? ஒருவேளை நீங்கள் காஃபி சாப்பிட மாட்டீங்களா?” வைஜயந்தியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவன்,

“அதெல்லாம் சாப்பிடுவேன் ம்மா, ஆனால் அருந்ததி போட போறான்னு சொன்னீங்க இல்லையா? அதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு” என்று கூற, இப்போது அருந்ததி அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நான் ஏதோ ஒரு விளையாட்டுக்கு உங்களுக்கு அப்படி சொன்னா நீங்க உண்மையாகவே என்னை அவ்வளவு பெரிய கொடுமைக்காரியாக முடிவு பண்ணிட்டீங்க இல்லையா? இந்த பேச்சுக்காகவே உங்களுக்கு காபியில் சர்க்கரை இல்லை உப்பு தான்” என்று விட்டு அருந்ததி சமையலறை நோக்கி சென்று விட, வைஜயந்தி சிரித்துக்கொண்டே சிவகுருவின் பக்கம் திரும்பி பார்த்தார்.

“நீங்க ஒன்னும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தம்பி. அவ எப்போவுமே இப்படித்தான், ஏதாவது துடுக்குத் தனமாக பேசிக்கிட்டே இருப்பா. அவ ரொம்ப வித்தியாசமானவ” என்று கூறிய வைஜயந்தியைப் பார்த்து ஆமோதிப்பது போல தலையசைத்தவன்,

“ஆமாம்மா, அருந்ததி உண்மையிலேயே ரொம்ப ரொம்ப வித்தியாசமானவங்க தான்” என்று விட்டு,

அங்கே மாட்டப்பட்டிருந்த அந்த இளைஞனின் புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி, “நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்க வேண்டாம்மா, இது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? ஆக்சுவலி உங்க எல்லோருக்கும் கூடப் பிறந்தவங்க யாரும் இங்கே இருக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும், அதுதான்” என்றவாறே சிறு தயக்கத்துடன் நிறுத்த வைஜயந்தி பெருமூச்சு விட்டபடியே எழுந்து சென்று அந்தப் புகைப்படத்தில் தெரிந்த கிருஷ்ணாவின் விம்பத்தை மெல்ல வருடிக் கொடுத்தார்.

“இவனோட பேரு கிருஷ்ணா! அருந்ததிக்கும், எனக்கும் புதிதாக கிடைத்த ஒரு சொந்தம். ஆனா அவனுடைய அந்த சொந்தம் எங்களுக்கு நிலைக்கவே இல்லை. பல பல கனவுகளோடு வந்த அந்தப் பையனோட வாழ்க்கை ஒரே நாளில் சின்னபின்னமாகிப் போயிடுச்சு” என்றவர் கிருஷ்ணாவுக்கு அங்கே நடந்த கொடுமையான விடயங்களைப் பற்றிக் கூற சிவகுருவிற்கோ தான் கேட்பது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது.

“இப்படியான கொடுமைக்காரர்கள் எல்லாம் இந்த உலகத்தில் இன்னும் இருக்காங்களா? தன்னோட வாழ்க்கையைத் தேடி வந்த பையனை இப்படி சிதைச்சுட்டாங்களே. இப்படி ஒரு அநியாயத்தை பண்ண எப்படித்தான் அவங்களுக்கு மனசு வந்ததோ?” என்றவாறே சிவகுரு தன் கண்களின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டிருந்த தருணம்,

“இந்த உலகத்தில் எதையுமே நம்பக்கூடாது என்பதற்கு சாட்சிதான் எங்க கிருஷ்ணாவோட மரணம்” என்றவாறே அருந்ததி காஃபி டம்ளருடன் சமையலறையை விட்டு வெளியே வந்து நின்றாள்.

“அதுதான் அது கொலைன்னு உங்களுக்குத் தெரியும் தானே? அப்புறம் எதற்காக நீங்க கம்ப்ளைன்ட் எதுவும் பண்ணல?” கிருஷ்ணாவின் கேள்வியில் வாய் விட்டுச் சிரித்த அருந்ததி தான் சட்டரீதியாக எடுத்த முயற்சிகளைப் பற்றிக் கூற சிவகுருவிற்கோ அதைக் கேட்டு மேலும் கவலைதான் வந்து சேர்ந்தது.

“என்ன பண்ணுறது தம்பி? ஒரு சிலர் எதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு ஏற்று நடந்துக்கிறாங்க, ஆனா ஒரு சிலர் இன்னும் அந்த வன்முறையான வாழ்க்கை முறையை விட்டு வெளியே வர விரும்ப மாட்டேங்குறாங்க.நாம என்ன பண்றது? துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்லுற மாதிரி ஏதாவது ஒரு ஆபத்து நம்மைத் தேடி வருதுன்னு தெரிந்தால் நம்மதான் விலகிப் போகணும், அதுதான் இப்போதைய காலகட்டத்தின் நியதி” என்று கூறிய வைஜயந்தியின் கூற்றில் இருந்த உண்மை நிலையைப் புரிந்து கொண்டது போல அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு,

“மறுபடியும் இன்னொரு விஷயம் நான் கேட்கிறேன்னு தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இங்கே இருக்கிற வீடுகள் எல்லாம் ரொம்ப இடிந்து, பழைய காலத்து கட்டடம் மாதிரி இருக்கே, அதை எல்லாம் நீங்க புதுப்பிக்க எதுவும் முயற்சி பண்ணலயா?” என்று கேட்க, வைஜயந்தியும், அருந்ததியும் ஒருவரையொருவர் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

“என்னங்க ஆச்சு? ஏதாவது சொல்ல முடியாத விஷயம்னா பரவாயில்லை விடுங்க” என்று கூறிய சிவகுருவைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த அருந்ததி,

“நீங்க என்கிட்ட ரொம்ப நேர்மையாக நடந்துகிட்டீங்க, அதேமாதிரி நானும் உங்க கிட்ட நேர்மையாக இருக்கணும்” என்று விட்டு கதிருக்கும், தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றியும், அவனால் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பது பற்றியும் விளக்கிக் கூற, சிவகுருவிற்கோ அதை எல்லாம் கேட்க கேட்க மேலும் மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்னங்க சொல்லுறீங்க? உண்மையாகவே இப்படியெல்லாம் நடந்ததா? எனக்கெனவோ இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு, இப்படியான விஷயங்கள் எல்லாம் சினிமாவிலும், நாடகங்களிலும், கதைகளிலும்தான் நான் கேள்வி பட்டிருக்கேன், ஆனா நிஜத்தில் இப்படி ஒரு தனி மனிதரை பழிவாங்க இவ்வளவு பெரிய காரியத்தை எல்லாம் செய்வாங்கன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. சே! இவங்களெல்லாம் என்ன மாதிரி மனுஷங்க?” சிவகுருவின் கோபமான பேச்சைக் கேட்டு அருந்ததியின் கையைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொண்ட வைஜயந்தி,

“பணமும், பதவியும் இருந்தால் இந்தக் காலத்தில் என்ன வேணும்னாலும் பண்ணலாம் தம்பி, அதற்கு இந்த கதிரும், அவனோட அப்பாவும் சாட்சி. நான் முன்னாடி சொன்ன மாதிரி தான், நமக்கு கெட்டதுன்னு தெரிஞ்சால் அதை விட்டு விலகிப் போக வேண்டியது தான். இன்னைக்கு இவங்களை அழிக்கப் போறோம்ன்னு கிளம்பி நாளைக்கு அவனுங்களை மாதிரியே நாறு பேர் வந்து நின்றால் என்ன பண்ணுறது? அதனால தான் இதை எல்லாம் விட்டுட்டு அருந்ததியை அவ வேலையில் கவனம் எடுக்கச் சொன்னேன். நான் ஆசைப்பட்டது போலவே அவளுக்கு ஒரு நல்ல மாற்றத்தை அந்தக் கடவுள் உங்க மூலமா கொண்டு வந்து கொடுத்திருக்காரு, இப்போ அருந்ததிக்கு அவ கோபத்தை விட அவ திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்திருக்கு, இதற்கெல்லாம் உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும். ரொம்ப ரொம்ப நன்றி தம்பி” என்றவாறே வைஜயந்தி தன் இரு கரம் சேர்த்து நன்றி சொல்லப் பார்க்க,

அவசரமாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டவன், “ஐயோ! இதெல்லாம் ரொம்ப அதிகம்மா. நான் என்னோட தேவைக்காக வந்தேன் அவ்வளவுதான், மீதி எல்லாம் அவங்களோட திறமையால் நடந்தது” என்றவாறே அவர்கள் பேசிக் கொண்டு அமர்ந்திருந்த தருணம், அவர்கள் வீட்டு வாசலில் யாரோ இரு நபர்கள் வந்து நிற்பதைப் பார்த்து விட்டு வைஜயந்தி அருந்ததியிடம் சிவகுருவுடன் பேசிக் கொண்டிருக்கும் படி சொல்லி விட்டு வெளியே நின்று கொண்டிருந்த அந்த நபர்களை நோக்கி நடந்து சென்றார்.

பல நாட்கள் உண்ணப் பருக எதுவும் இன்றி பசியாலும், தாகத்தினாலும் வாடிப் போனது போல ஒரு வயதான தம்பதியர் அங்கே நின்று கொண்டிருந்தனர்.

அந்த நபர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்த வைஜயந்தி, “நீங்க யாரு? உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க,

அங்கே நின்று கொண்டிருந்த பெண்மணியோ, “இங்கே வைஜயந்தி ன்னு ஒருத்தங்க இருக்காங்களா?” என்று வினவ,

அவர்களைப் பார்த்து குழப்பத்துடன் தலையசைத்தவர், “ஆமா, நான்தான் வைஜயந்தி. உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அவர் கேள்வி கேட்ட அடுத்த கணமே அந்தத் தம்பதியினர் இருவரும் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறியழ ஆரம்பித்தனர்.

அவர்கள் இருவரும் அழும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அருந்ததி, சிவகுரு மட்டுமின்றி அங்கே‌ நின்று கொண்டிருந்த அத்தனை‌ பேரும் அந்த இடத்தை சூழ்ந்து கொள்ள, அவர்கள் இருவரையும் தன்னால் முடிந்த மட்டும் ஆறுதல் படுத்திய வைஜயந்தி, “முதல்ல அழுவதை நிறுத்திட்டு நீங்க யாரு? என்ன விஷயம்ன்னு சொல்லுங்கம்மா. இப்படி எதுவுமே சொல்லாமல் நீங்க அழுவதைப் பார்க்கும் போது எங்களுக்குப் பதட்டமாக இருக்கு” என்று கூற,

தன் கண்களைத் துடைத்து விட்டபடியே அவரை நிமிர்ந்து பார்த்தவர், “நாங்க எங்க பையனைத் தேடி‌ வந்திருக்கோம். அவனோட பேரு கிருஷ்ணா” என்று கூற, கிருஷ்ணா என்கிற பெயரைக் கேட்டதுமே அருந்ததி, வைஜயந்தி மட்டுமின்றி அங்கே நின்று கொண்டிருந்த சகலரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்……