தீயாகிய மங்கை நீயடி – 20 (Pre-final)

ei34NQ073963-5db8c998

தன் தங்கையின் நடவடிக்கைகளைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் சிவகுரு ஒரு புறம் தயங்கி நிற்க, மறுபுறம் தங்கள் மகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாளோ என்கிற கவலையான உணர்வுடன் அவனது பெற்றோரும் மனம் வருந்தியவர்களாக நின்று கொண்டிருந்தனர்.

சிவகுருவும், அவனது பெற்றோரும் கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு உடனே தன்னையும், தன் மனதையும் நிதானப்படுத்திக் கொண்ட அருந்ததி, “என்னாச்சு? இவ்வளவு நேரமும் நான் ஸ்டாப் ரேடியோ மாதிரி ஆளாளுக்கு பேசிட்டு இருந்தீங்க, இப்போ திடீர்னு அமைதியாகிட்டீங்க! என்ன சிவகுரு பிரசாத் சார், பார்டிக்கு வர சொல்லிட்டு அப்படியே அனுப்பி வைக்கலாம்ன்னு ஐடியாவா?” என்று வினவ,

அவளைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவன், “என்ன அருந்ததி நீங்க? நான் அப்படி எல்லாம் பண்ணுவேனா? அது வந்து பைரவி…” என்றவாறே இடை நிறுத்த,

அவனைப் பார்த்து புன்னகை செய்தவள், “அவங்க சின்ன பொண்ணு சார், இப்படித்தான் அடிக்கடி கோபம் வரும், அப்புறம் தானாக வந்து பேசுவாங்க, இதையெல்லாம் பார்த்து நம்ம சங்கடப்படலாமா? அதோடு உண்மையாகவே அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கலாம், நமக்கு தெரியாது இல்லையா? அதுமட்டுமல்லாமல் அண்ணன், தங்கைன்னாலே இப்படி செல்ல செல்ல சண்டைகள் எல்லாம் இருக்கத் தானே செய்யும்? இந்த கோபம், சண்டை இல்லாமல் ஒரு உறவு முழுமையாகாது, அதனால நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம். நானோ, வைஜயந்திம்மாவோ பைரவியைப் பற்றி தப்பாகவே நினைக்கல” என்று கூற, காயத்ரியும், ரத்னவேலும் அவளை வியந்து போய் பார்த்துக் கொண்டு நின்றனர்.

தங்களை நேரடியாக அவமானப்படுத்தும் விதமாக பேசிய ஒரு நபருக்காக ஒருவர் ஆதரவாகப் பேசுவது என்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.

தன் வியப்பு மாறாதவராக அருந்ததியின் கையைப் பிடித்துக் கொண்ட கார்த்திகா, “நீ வெளித் தோற்றத்தில் பார்ப்பதற்கு எந்தளவுக்கு அழகாக இருக்கிறாயோ, அதே அளவுக்கு உன் மனதும் ரொம்ப ரொம்ப பரிசுத்தமானதாக இருக்கு அருந்ததி. இந்த சமூகம் வேணும்னா உங்களைப் புறக்கணித்து இருக்கலாம், ஆனா உன்னை மாதிரி ஒரு நல்ல மனிதனை ஒதுக்கி வைத்திருப்பது இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு” என்று கூற,

அதற்கும் பதிலாக புன்னகை செய்தவள், “உண்மையாக சொல்லப் போனால் எங்களோட வாழ்க்கை ஆரம்ப கட்டத்தில் இந்த மாதிரியான சில மனது நோகும்படியான பேச்சு மற்றும் செயல்களை எல்லாம் பார்த்து நாங்க கவலைப்பட்டிருக்கோம், அதையே நினைத்து பல நாட்கள் தூக்கம் இல்லாமலும் இருந்திருக்கோம் ஆன்டி, ஆனா நாளாக நாளாக அந்த மனது நோகும்படியான வார்த்தைகள்தான் எங்களுக்குப் பெரிய உந்து சக்தின்னு நாங்க புரிஞ்சுக்கிட்டோம், அதுமட்டுமல்லாம எல்லா வகையான தடைகளையும் தாண்டி வாழவும் கத்துக்கிட்டோம், அதற்கெல்லாம் நன்றி சொல்லணும்னா எங்களை அவமானப்படுத்த நினைப்பவர்களுக்குத்தான் சொல்லணும், ஏன்னா அவங்கதான் எங்களை இந்தளவுக்கு தைரியமானவர்களாக மாற வைத்திருக்காங்க” என்று கூற, அவரோ அவளைக் கண்கள் கலங்க தாவி அணைத்துக் கொண்டார்.

“உன்னைப் பற்றி சிவா அடிக்கடி பேசிட்டே இருப்பான், அப்போ இருந்தே எனக்கு உன் மேலே தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது அருந்ததி, ஆனா அந்த மதிப்பும், மரியாதையும் இப்போ உன்னை நேரில் சந்தித்த பிறகு இல்லை, ஏன்னா அந்த மதிப்பு, மரியாதையை விட உனக்கு அதிகம் அதிகம் கொடுக்கணும்”

“ஐயோ! ஆன்டி, நீங்க என்னை ரொம்ப பாராட்டுறீங்க, இந்தப் பாராட்டு மழையில் நனைந்து எனக்கு ஜலதோஷம் வந்துடப் போகுது” அருந்ததி வேண்டுமென்றே அவரைப் பார்த்து தும்மல் வருவது போல பாவனை செய்ய,

அவளது தோளில் செல்லமாக தட்டியவர், “நீ இதே மாதிரி எப்போதும் சந்தோஷமாக இருக்கணும்மா, உன்னோட வைஜயந்தி ம்மா உண்மையாகவே உன்னை ரொம்ப நல்ல விதமாக வளர்த்து இருக்காங்க” என்று கூற, அருந்ததி முகம் நிறைந்த புன்னகையுடன் வைஜயந்தியைத் திரும்பிப் பார்த்தாள்.

அருந்ததி தன்னைத் திரும்பிப் பார்க்கும் போது தன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டு அவளைப் பார்த்து புன்னகை செய்தவர் அதன் பிறகு அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கியிருக்க, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு பைரவியின் செயலால் அந்த இடத்தில் நிலவிய ஒரு வருத்தமான சூழ்நிலை இப்போது முழுமையாக மறைந்தே போய் இருந்தது.

சிறிது நேரத்தில் சிவகுருவின் உறவினர்களும், நண்பர்களும் அந்த இடத்திற்கு வரத் தொடங்கியிருக்க, அருந்ததி மற்றும் வைஜயந்தி சிறிது தள்ளி ஒரு மர நிழலின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த இடத்தை வேடிக்கை பார்த்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களை மறந்து மிகவும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த தருணம், “ஹலோ! லாயர் மேடம்! எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு? ரொம்ப செழிப்பாக இருக்கீங்க போல?” என்று குரல் கேட்க, இதற்கு முன்பு அந்தக் குரலை அடிக்கடி எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்கிற யோசனையுடன் தன் பின்னால் திரும்பி பார்த்த அருந்ததி தன் எதிரே நின்று கொண்டிருந்த கதிரைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நின்றாள்.

“நீ தானா?” அருந்ததி தன் திடுக்கிட்ட தோற்றத்தை உடனே சரி செய்து விட்டு கதிரைப் பார்த்து ஏனோ தானோ என்பது போல வினவ, அவளது பாவனையில் கதிரின் முகமோ அவமானத்தால் சிறுத்துப் போனது.

“என்ன உன் திமிரு இன்னும் அடங்கலயா? எத்தனை தடவை உனக்கு அடி கொடுத்தாலும் நீ திருத்த மாட்ட? அவ்வளவு கொழுப்பு” கதிர் வேண்டுமென்றே அருந்ததியைப் பார்த்து கோபமாகப் பேச,

அவளோ தன் பொறுமையை சிறிதும் கை விடாமல், “ஊரு, உலகத்தில் இருக்கும் எல்லா அயோக்கியத்தனத்தையும், தப்பையும் பண்ணுற நீயே திருந்தாமல் ஊரைக் கெடுத்துட்டு திரியும் போது, மற்ற மனுஷங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற நான் எதற்காக மாறணும் மிஸ்டர், சேச்சே! உனக்கு எல்லாம் எதற்கு மரியாதை? பொறுக்கி கதிர் அவர்களே!” என்று வினவ, அவனோ கோபத்துடன் அவளை நோக்கி இரண்டடி முன்னோக்கி நகரப் பார்க்க, அருந்ததி தன் பார்வையாலேயே அவனை மேலும் நகர விடாமல் அடங்கிப் போகச் செய்திருந்தாள்.

இதற்கிடையில் வைஜயந்தி அவர்கள் இருவரும் ஏதாவது பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவார்களோ என்கிற அச்சமான மனநிலையுடன் அருந்ததியின் கையைப் பற்றி இழுத்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயல, அவளோ அந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்பது போல பிடிவாதமாக நின்று கொண்டிருந்தாள்.

“தம்பி, உங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம், இது மற்றவங்க சந்தோஷமாக இருக்கும் இடம், இந்த இடத்தில் வீணாக சண்டை போட்டு அவங்க சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம், ப்ளீஸ், இங்கே இருந்து போயிடுங்க” என்றவாறே வைஜயந்தி கதிரைப் பார்த்து கெஞ்சிக் கேட்க,

அவனோ அவரை மேலிருந்து கீழாக அளவிடுவது போல பார்த்து விட்டு, “நீதான் இதுங்களுக்கு எல்லாம் லீடரோ? முதல்ல உன்னைப் போட்டு இருக்கணும், பரவாயில்லை, அடுத்த டார்கட் நீதான், அதற்கு அப்புறம் இதுங்களை எல்லாம் அடையாளமே இல்லாமல் அழிச்சுடலாம்” என்று கூறி முடிக்க முன்னரே அருந்ததியின் கரம் அவனது கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

அருந்ததியின் நல்ல நேரமோ என்னவோ அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் மற்றைய நபர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று விலகி இருந்ததால் இந்தப் பிரச்சினை எதுவும் மற்றைய யாரின் பார்வைக்குள்ளும் அகப்படவில்லை.

அருந்ததி தன்னை அடித்து விட்டாள் என்கிற கோபமான மனநிலையுடன் அவளை நெருங்கி செல்லப் பார்த்தவன், “அடடே! கதிர், நீ இங்கே என்னப்பா பண்ணுற?” என்கிற ரத்னவேலுவின் குரல் கேட்டு தன் நடையை நிறுத்தி விட்டு அவரைத் திரும்பியும் பாராமல் சென்று விட, அவரோ சிறு குழப்பத்துடன் அருந்ததியின் எதிரே சென்று நின்றார்.

“அருந்ததி, கதிர் ஏதாவது பிரச்சனை பண்ணானா?”

“சேச்சே! அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க” ரத்னவேலுவின் கேள்விக்கு அருந்ததியை முந்திக் கொண்டு வைஜயந்தி பதிலளிக்க,

அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர், “அப்படின்னா ஏதோ நடந்திருக்கு, அதனால தான் அருந்ததி கிட்ட கேட்ட கேள்விக்கு அவங்க அம்மாகிட்ட இருந்து பதில் வருது, பரவாயில்லை ஆனா அதைப் பற்றி நான் எதுவும் கேட்க மாட்டேன்ங்க, ஷோ டோண்ட் வொர்ரி. உண்மையைச் சொல்லப் போனால் இந்தக் கதிர் இருக்கும் இடத்தில் பிரச்சினை இல்லாமல் இருந்தால் தான் அதிசயம், என்ன பண்ணுறது? சொந்தக்காரனாகப் போயிட்டான், அதனால இங்கே இருந்து போயிடுன்னும் சொல்ல முடியல” என்று கூற,

“சொந்தக்காரனா?” அருந்ததியும், வைஜயந்தியும் ஒரே சமயத்தில் அவரைப் பார்த்து அதிர்ச்சியாக வினவ, அவரும் ஆமோதிப்பாக தன் தலையை அசைத்தார்.

“என்னோட கூடப் பிறந்த தங்கையோட மகன் தான் இந்த கதிர், என் தங்கை சரஸ்வதி ரொம்ப அப்பாவி, அவளோட கணவன் மாணிக்கம் ரொம்ப நல்லவன்னு நம்பித்தான் அவனுக்கு என் தங்கையை கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம், ஆனா நாளாக நாளாகத்தான் அவன் ஒரு பச்சோந்தின்னு புரிஞ்சது. எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர்றதுக்கு இடையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துடுச்சு, இனி அந்தக் குழந்தைகள் தன்னோட உலகம்னு அவ வாழ ஆரம்பிச்சுட்டா. அந்த மாணிக்கத்தோட பாவம் அப்படியே இந்தக் கதிராக வந்து பிறந்திருக்கு, ஆனா என் தங்கையோட மக பார்வதி, ரொம்ப தங்கமானவ, அப்படியே என் தங்கையோட குணம். இருந்தாலும் என்ன பண்ணுறது? ஒரு நல்ல விஷயம் இருக்கிற இடத்தில் தான் ஒரு கெட்ட விஷயமும் சேர்ந்திருக்கு” என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டவர்,

“சரி, நடந்ததைப் பற்றி பேசி எந்தப் பயனுமில்லை, நீங்க வாங்கம்மா, கார்த்திகா உங்களை ரொம்ப நேரமாக தேடிட்டு இருக்கா” என்றவாறே அவர்கள் இருவரையும் தன் கையோடு அந்த இடத்திலிருந்து அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.

ரத்னவேல் சொன்ன விடயங்களைக் கேட்டதிலிருந்து அருந்ததிக்குத் தான் அங்கே நடப்பது எதுவும் சரியாகவே தோணவில்லை.

அதுவும் அந்தக் கதிர் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த போது அவனிடம் இருந்து வந்த கெட்ட வாடை வேறு அவளை ‘எதற்கும் அவதானமாகவே இரு’ என்பது போல எச்சரித்துக் கொண்டேயிருக்க, சிறிது நேரம் தனிமையில் அமர்ந்திருந்தால் இந்த மனநிலை சற்றே மாறலாம் என்று எண்ணிக் கொண்டவள் வைஜயந்தியிடம் சிறிது நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு அந்த ஆசிரமத்தை சுற்றி மெல்ல நடை போட ஆரம்பித்தாள்.

சிவகுருவின் பெற்றோரின் திருமண நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி வந்திருந்தவள் அங்கே ஒரு நாற்காலி தனியே கிடப்பதைப் பார்த்து விட்டு அங்கே சென்று அமர்ந்து கொள்ளப் போகும் தருணம் ஏதோ ஒரு முனங்கல் சத்தமும், பொருட்கள் கீழே விழும் சத்தமும் மாறி மாறிக் கொண்டிருக்க, ஒரு கணம் அவளது இதயம் நின்று துடிப்பது போல இருந்தது.

“இந்த இடத்தில் என்ன இப்படி ஒரு சத்தம்? இங்கேதான் யாருமே இல்லையே?” சிறிது அச்சத்துடன் அந்த இடத்தை நோட்டம் விட்டபடியே மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தவள்,

அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது தள்ளி மூடப்பட்டிருந்த ஒரு அறையைப் பார்த்து விட்டு, “ஒரு வேளை இந்த ரூமில் இருந்து தான் சத்தம் வந்து இருக்குமோ?” என்றவாறே அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க, அங்கே அவள் கண்ட காட்சி அவளை மொத்தமாக உறைந்து போகச் செய்திருந்தது.

போதையின் உச்சத்தில் இருந்த கதிர் சிவகுருவின் தங்கை பைரவியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று கொண்டிருக்க, அவளோ அவனது பிடியிலிருந்து தப்பிக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

கதிரை அந்த இடத்தில் பார்த்ததுமே அத்தனை நாளாக அவன் மீதிருந்த வெறுப்பு அத்தனையும் அருந்ததியின் பொறுமையை தகர்த்தெறிந்திருக்க, தன் மொத்த பலம் கொண்டும் அந்த அறையின் கதவை உடைத்து தள்ளியவள் பைரவியை தன் புறம் இழுத்தி நிறுத்தி விட்டு அவனை சாரமாரியாக அடித்து துவம்சம் செய்திருந்தாள்.

போதையில் வெகுவாக மூழ்கிப் போயிருந்த கதிரினால் அவளது அடிகளையோ, அவளையோ சமாளிக்க முடியாமல் போக அப்படியே அவள் காலடியில் விழுந்தவன் அந்த நிலையிலேயே மயங்கியும் விழுந்திருந்தான்.

அருந்ததியின் அந்த ருத்ரதாண்டவத்தைப் பார்த்து பைரவி திகைத்துப்போய் நிற்க, அவளது தோளில் தன் கையை வைத்து அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்த அருந்ததி, “பைரவி! உங்களுக்கு எதுவும் ஆகல தானே?” என்று வினவ, அவளோ தேம்பித் தேம்பி அழுது கொண்டே அவளது தோளில் தன் தலை சாய்த்துக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சுடுங்க அருந்ததி, கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நான் உங்களை ரொம்ப அவமானப்படுத்திட்டேன், ஆனா நீங்க அது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. என் வாழ்நாள் முழுவதும் இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்” தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடியே அருந்ததியைப் பார்த்து பைரவி நன்றி சொல்ல,

அவளது கைகளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவள், “எனக்கு ஒரு தங்கை இருந்து அவளுக்கு இப்படி ஒரு ஆபத்து ஏற்பட்டிருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா? அதுபோலத்தான் நீங்க என் மேலே கோபப்பட்டிருந்தாலும் நான் உங்களை என் தங்கையாகத் தான் பார்க்கிறேன்” என்று கூற, பைரவி புன்னகை முகமாக அவளை இறுக அணைத்து விடுவித்தாள்.

“சிவா அண்ணா சொன்ன மாதிரி நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க தான், நான் தான் உங்களைப் புரிஞ்சுக்கவே இல்லை”

“ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை ம்மா. அது சரி, நீங்க இப்படி இந்த இடத்திற்கு வந்தீங்க? அதுவும் இவன் இருக்கும் இடத்திற்கு?”

“அதை நான் என்னன்னு சொல்லுறது க்கா, நான் உங்க கிட்ட கோபமாக பேசிட்டு அப்படியே ஒரு ஓரமாக போய் போன் பார்த்துட்டு இருந்துட்டேன். அப்போ திடீர்னு எங்கே இருந்து தான் இவன் வந்தானோ தெரியலை, அவனோட தங்கச்சி பார்வதி என் பிரண்ட் தான், அவ என்னை அவசரமாக வரச் சொல்லுறான்னு சொன்னான், நான் அதை நம்பல, உடனே அவளுக்கு கால் பண்ணேன், நாட் ரீச்சபிள்ன்னு வந்துச்சு. அப்போ தான் உண்மையிலேயே அவளுக்கு ஏதாவது பிரச்சனையோன்னு பயந்து அவன் கை காண்பித்த பக்கமாக போனேன், ஆனா இந்தப் பொறுக்கி என் கிட்ட இப்படி எல்லாம்…சே! இவனை எல்லாம் எதற்காக உயிரோடு வைக்கணும்னு இருக்கு?” என்றவாறே பைரவி அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு சென்று கதிரின் தலையில் போடப் பார்க்க,

அவசரமாக அவளைத் தன் புறமாக இழுத்துக் கொண்ட அருந்ததி, “இப்படியான ஜென்மங்களுக்கு எல்லாம் எப்படி தண்டனை கொடுக்கணும்னு நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்க உங்க கையை அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் பைரவி. அப்புறம் இங்கே நடந்த எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம், இப்படி ஒரு கேடு கெட்டவனுக்காக உங்க அப்பா அன்ட் அவங்களோட தங்கைக்கு இடையே இருக்கும் உறவு கெட்டுப் போய் விடக்கூடாது, ஒரு சரியான நேரம் பார்த்து சிவகுரு பிரசாத் சார் கிட்ட நானே இதைப் பற்றி பேசி புரிய வைக்கிறேன், நீங்க இதைப்பற்றி எதுவும் யோசிக்காமல் பங்ஷன் நடக்கும் இடத்திற்கு போங்க” என்றவாறே அவளை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு, முழுமையாக மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த கதிரின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

“உனக்கு இந்த உலகத்தில் இருக்கும் எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்தாலும் நீ திருந்த மாட்ட, அதனால உனக்கு இந்த சட்டம், நீதி, நியாயம்ன்னு சொல்லி அந்தப் பக்கமாக மெனக்கெட்டு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் எந்தவொரு பயனுமில்லை. அதனால இனி நீ உயிரோடு இருக்கப் போகிற இந்த ஒரு வார காலமும் உனக்கு இந்த அருந்ததியோட உலகத்தில் இருக்கும் தண்டனைகள் தான் கிடைக்கப் போகிறது. அது என்ன ஒரு வாரம்ன்னு யோசிக்கிறியா? நானே உனக்கான இறுதி அஞ்சலி செலுத்த நாள் குறித்து இருக்கேன், என்னோட தம்பி கிருஷ்ணா இறந்து சரியாக மூணு மாதம் முடியும் போது உன் உயிரும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்கும். இப்போ நான் பேசுவது எல்லாம் உனக்கு கேட்குதா? இல்லையான்னு கூட எனக்குத் தெரியல, ஒரு வேளை கேட்டால் நல்லா கவனிச்சுக்கோ, இன்னும் ஒரு வாரத்தில் உன்னோட ஆட்டம் மொத்தமாக அடங்கப் போகுது கதிர், ஆல் தி பெஸ்ட்” என்றவாறே கதிரின் தலையைப் பிடித்து உலுக்கியவள் அவனை அப்படியே போட்டு விட்டு அவனை அடியோடு அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள்…….