தூறல் போடும் நேரம் – 10

பகுதி 10

ராதா கிளம்பி, தன் பைகளைச் சுமந்து கொண்டு கீழே இறங்கி வந்தாள். இனி இரவு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

அவள் இறங்கவும், வள்ளியம்மை “அம்மாடி… பொண்ணு, இந்தா” என ஒரு சம்படத்தை அவளிடம் நீட்டினார்.

அவளோ புரியாமல், “என்ன ஆன்ட்டி இது?” என வினவ, “பணியாரம்த்தா… நீ தா ஆசையா உண்ணுறேல எடுத்திட்டு போ.” என மறக்காமல் சொன்ன வாக்கைக் காப்பாற்றினார்.

“பரவாயில்ல ஆன்ட்டி, பைல இடமில்ல… இருக்கட்டும் நீங்க வச்சு… உதயாவுக்கு கொடுத்து விடுங்க” என நாகரீகமாய் மறுத்தாள்.

“அவளுக்கும் இருக்கு… நீ கொண்டு போ. உமையா… அந்த சாப்பாடு பைய எடுத்து கொடு மா” எனக் குடிநீர் பாட்டில், உணவு பொட்டலம், இரண்டு பொட்டலம் நொறுக்கு தீனி என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கட்டைப் பையில், இந்தச் சம்படத்தையும் திணித்து விட்டார்.

லேசான பதார்த்தமாய் இரவு உணவை உண்டு விட்டு கிளம்பி சென்றனர் இருவரும். முதலில் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி, பேருந்து நிலையம் அடைந்தனர்.

அங்கிருந்து சென்னை செல்வதற்கு, தான் பதிவு செய்திருந்த பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். ராமும் அவளுடனே காத்திருக்க, “நான் ஏறிக்குவேன்… நீங்க கிளம்புங்க. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.” என அவனைக் கிளப்பினாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” எனப் பதில் நவின்றவன், பேருந்துக்காக, அவள் ஜன சந்ததியை தாண்டி, நின்ற இடத்திலிருந்தே எட்டிப் பார்க்க, அப்போது அவளுடனே முன்னே சென்று அவளின் முகத்தை எட்டிப் பார்த்தத் திருப்தியில், மீண்டும் பின்னே வரும் ஜிமிக்கியின் லயத்தில், அவனின் இதயமும் லப்டப் என அதனோடு தாளம் தப்பாமல் மன சஞ்சாரத்தில் ஆடியது.

“உங்களுக்கு என்ன பஸ்? எப்போ டைமிங்?” என அவள் வினவவும், கலைந்தவன், “உங்களுக்கு அப்புறம் தான்” என வாயில் வந்ததை உளறி வைத்தான்.

மீண்டும் மன சஞ்சாரத்தில் விட்ட கவிதையை தொடர்ந்தான்.  அப்படி எட்ட நின்று பார்க்கும் அழகை, அவளின் காதணி மட்டுமல்ல, கார்கால கூந்தலும் எட்டி தான் பார்த்தது.

மேலும் அதை ஒற்றை விரலால், தன் காதோரமாய் அவள் அடக்குவதும் அவனுக்கு அழகாய் தெரிய, அந்த ஒற்றை விரலில் தான் அவன் சிக்குண்டு போனான். அவளின் நீண்ட மெலிதான தளிர் விரல்களின் ஊடே தன் ஐவிரலும் செல்லாதா என ஏக்கமாய் பார்த்து கொண்டு நின்றான்.

தான் ஏன் அவளை இவ்வாறு ரசனையோடு பார்க்கிறோம்? தான் பார்க்காத பெண்ணா? அலுவலகத்தில், உடன் பயின்றவர்கள் என இவளை விட அழகான பெண்களை எல்லாம் கடந்து வந்தவன் தான்.

ஆனால் இவளிடம் மட்டும் ஏன்? இவள் என்ன அவ்வளவு அழகா? இல்லை தான். ஆனால் ஏதோ ஒன்று ராமை தொடர செய்தது. அது அவள் நாசூக்காய்… பட்டு தெரித்தார் போல் பேசும் பேச்சா? அல்லது அவனுக்கு மட்டும் புதிராய் தோன்றும் அவளின் மனதா?

ஏதோ ஒன்று அவளைப் பார்க்கச் செய்தது. அது எது என்று தெரியவில்லை. அவனும் நிரம்ப அலசவில்லை. அவளுடன் இருக்கும் வரை தன் பார்வை மாறும் என அவனுக்கு நம்பிக்கையில்லை.

நாளையோடு சரி, அதன் பின் அவளைப் பார்க்கப் போவது இல்லை. அதன் பின் தன் மனம் தெளியலாம் என எண்ணினான்.

அவள் செல்ல வேண்டிய பேருந்து வரவும், அவள் “தேங்க்ஸ்ங்க… நான் போயிட்டு வரேன்” என அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல், ஏறி பேருந்தின் உள்ளே சென்று விட்டாள்.

தன் மனலோகத்தில் இருந்து அவன் பூலோகத்தில் குதிப்பதற்குள், அவள் அவன் கண்ணில் இருந்து மறைந்து விட, சட்டென சுதாரித்தான்.

தனது ஜென்னலோர இருக்கையைக் கண்டுப்பிடித்து அமர்ந்தவள். லேசாய் கண்ணாடியை விலக்கி, வெளிக் காற்று உட்புகவும், கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தாள். தன்னருகே பக்கத்து இருக்கையில் யாரோ அமரும் அரவம் உணர்ந்து கண்ணைத் திறந்தாள்.

திறந்தவளின் விழிகள் மேலும் விரிய, “நீங்க… இங்க…” என வார்த்தையின்றி திணறியவள், சட்டென கண்களை மூடி திறந்து, தன்னை நொடியில் நிலைப்படுத்தியவள், “என்னாச்சு? ஏன் வந்தீங்க?” எனக் கேட்டாள்.

“பேக்க… மிஸ் பண்ணிட்டு வந்துட்டீங்க” எனக் கட்டப் பையை சுட்டிக் காட்டி, அவளின் கால் அருகே, கீழே வைத்தான்.

“ஓ! தேங்க்ஸ்…” எனப் பையை அவ்விடத்தில் சரியாய் வைத்து நிமிரவும், அவன் அருகில் அமரவும் சரியாய் இருந்தது.

அவள் சற்றே திகைத்தாலும், பார்வையாலே ‘இன்னும் என்ன?’ என வினவினாள்.

அவனோ தோள்களைக் குலுக்கி விட்டு பேசாமல் அமர்ந்திருக்க, அவளுக்கு தான் பேசாமல் அமர்ந்திருக்க முடியவில்லை.

‘சட்டென பேருந்தை எடுத்து விட்டால், என்ன செய்வது? இடையில் நிறுத்தவா முடியும்? நிறுத்தினால் சும்மா விடுவார்களா? எல்லோரும் தன்னையும் அவனையும் தவறாய் நினைக்க மாட்டார்கள். அவனுக்கென்ன இறங்கிவிடுவான். அகப்படுபவள் நானல்லவா? எல்லோருக்கும் அவலாய் போய் விடுவானேன்’ என எண்ணியவளாய், “இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் எடுத்திருவாங்க” பரிதவிப்புடன் கூறினாள்.

“ம்ம்… ஆமா, கேட்டேன்… ஷார்ப்பா டென்னுக்கு கிளம்பிடுமாம்” எனக் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.

சரியாய் பத்தாக இரு முழு நிமிடங்கள் இருக்க, மணி ஒன்பது ஐம்பத்து எட்டாகிக் கொண்டிருந்தது. ஏதோ வெடிக்குண்டு வெடிக்க இன்னும் இரண்டு நிமிடம் இருப்பது போல், “ஐயோ டைம் ஆச்சு… எழுந்திருங்க” எனப் பதறினாள்.

“ம்ம்… இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கே” என அவளின் பதற்றத்தைப் பந்தாடினான்.

“என்ன ஓடுற பஸ்ல இருந்து குதிக்கப் போறியா?” எங்கே மானத்தை வாங்கி விடுவானோ என்ற பயத்தில் அவளிடத்தில் பன்மை பறிபோனது.

அப்போது சரியாய் பேருந்தின் பணியாள் “எல்லோரும் எறியாச்சுல… பஸ்ஸ எடுக்கப் போறோம்” எனக் கடைசி நேர எச்சரிக்கை விட, எச்சில் விழுங்கிய தொண்டையோடு “சார்… ஒரு நிமிஷம்” எனத் தயங்கினாள்.

தயங்கியவளின் அருகே, “என்னம்மா?” என வந்தவர், “சார் நீங்களா! அதான் சார் பக்கத்துல தான உட்கார்ந்திருக்கார். அப்புறம் என்னம்மா?” எனக் கேட்கவும், அருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

“எல்லாம் ஓகே தான சார்?” எனப் பணியாள் அவனிடம் முடிக்க, “டபுள் ஓகே” என அவன் தன் கைக் கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்தான்.

எல்லாம் இவனின் ஏற்பாடு என்பது புரிய, “என்ன சொல்லி ஏறுனீங்க?” எனச் சரியான புள்ளியைத் தொட்டு, மீண்டும் பன்மையைப் பற்றியிருந்தாள்.

“உண்மைய சொன்னேன். உனக்கு உடம்பு முடியல. அடிக்கடி மயங்கி விழுந்திருவ, சோ, பத்திரமா கூட்டிப் போகணும்… எமர்ஜன்சியா ஒரு டிக்கெட்… சோ… சோ… சோ ஆன்.” என அவள் உணராத வகையில், அவனும் பதவிசாய் பன்மையை விட்டு விலகினான்.

அந்தப் பணியாள் சவுகரியத்தைக் கேட்ட விதத்திலேயே அவன் பணத்தைக் கொடுத்து சரி கட்டியிருப்பான் என அவளுக்கு புரிந்தது.

“ஏன் இப்படி செஞ்சீங்க?” என விளக்கம் வேண்டினாள்.

“நான் ஒன்னும் செய்யல. வீட்டுல தான்… உன்ன சூதானமா, சென்னை வர விட்டுட்டு போ சொன்னாங்க” என அவன் சொல்லியதை, அவள் நம்பாத பார்வைப் பார்த்தவள், இனி உன்னிடம் எது கேட்டும் உண்மை பெயராது என்பது போல் மௌனமாய் கண்ணை மூடி, அவனிடம் இருந்து தப்பிக்க ஆரம்பித்தாள்.

அவளின் மூடிய விழிகளுக்குள் தான் நுழைவது கடினம் எனத் தெரிந்தவன், அந்த மூடிய சிப்பிக்குள் இருக்கும் முத்தினைச் சந்திப்பதற்காக, “என்ன அதுக்குள்ள தூக்கம் வந்திருச்சா?” எனக் கேட்டான்.

விழித்து பார்த்தவள், எதுவும் கூறாமல், தன் கைப்பையில் இருந்து மாத்திரையை எடுத்து, தன் உள்ளங்கையில் வைத்து அவனிடம் காட்டி விட்டு, தன் வாயில் போட்டு நீரைப் பருகி விழுங்கினாள். அதனோடு பேச்சையும் சேர்த்து விழுங்கிக் கொண்டாள்.

அவளின் செய்கையில், மாத்திரையால் உறக்கம் வருகிறது எனச் சொல்லாமல் சொன்ன சங்கதி அவனுக்கு விளங்கியது.

அவளைப் பொறுத்த வரை, நான்கு நாட்கள் தோழி வீட்டிற்கு, விஷேசத்திற்கு வந்தோம்… பங்கு கொண்டோம்… கிளம்பினோம் என்று தான் இருக்க விரும்பினாள்.

தேவையில்லாத இடைச் சொருகலுக்கு இடமளிக்க அவள் விரும்பவில்லை. அது தன்னை மட்டும் அல்ல, தன் தோழியையும் பாதிக்கும் எனத் தொலைநோக்கு சிந்தனையுடன் அவனைத் தூரத்தே நிறுத்தியும் வைத்தாள்.

தூரத்தே வைத்தாலும், துரத்திக் கொண்டு வந்தான் அவன். கண் மூடி, சாளரத்தின் பக்கமாய் திரும்பி அவள் உறங்கும் அழகை ரசித்தவன்.

மீண்டும் அவள் விழிகளைத் திறக்கும் மந்திர வார்த்தைகளை அவள் காதுள் ஒலித்தான். “ஐ லவ் யூ” என மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம், அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் ஹஸ்கி குரலில் கூறினான்.

படக்கென விழித்தவளின் விழிகள் படவென படவென கொட்ட, ‘தன் காதுக்குள் கேட்டது அந்த வார்த்தை தானா? இல்லை தனக்கு எதுவும்… ஏதோ சொல்வார்களே… ம்ம்… பிரமை என அது போல் தோன்றுகிறதா’ என எண்ணினாள்.

நெற்றி சுருங்க தன்னை நோக்கியவளிடம், நேசமாய்(?)… மீண்டும் “ஐ… லவ்வ்வ்… யு…” என நெடிந்துரைத்தான்.

நீட்டி மொழிந்தவனை, மொழியேதும் அறியா மௌனியாக்கினாள் ராதா.

“ராம்… இத நான் சொல்லியே ஆகணும், ஏன்னா… நான் அவ்ளோ அழகு இல்ல… என்ன விட அழகான பொண்ணுங்கள நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்கன்னு தெரியும். இருந்தும் உலகத்துலேயே நீ தான் அழகு, எனக்கு நீ தான் வேணும், நா ஐ லவ் யூ தா…ன்னு திருப்பி திருப்பி சொன்னாலும்,

இத நம்புறதுக்கு; பர்ஸ்ட் திங்; ஆம் நாட் க்ரேஸி. தென் இத ஏத்துக்கிறதுக்கு; செகண்ட் திங்; ஆம் நாட் ப்ரீ. காட் என்கேஜ்டு” என நீண்ட விளக்கமளித்தாள்.

தான் அழகு இல்லை என்று அவள் சொல்வது அவளின் தாழ்வு மனப்பான்மையைக் குறிப்பது அல்ல. தன்னைப் பற்றிய தெளிவான மனப்பான்மையைக் குறிப்பது. எப்போதுமே மற்றவர்களின் உள்ளீடுகளை, தன் உள்ளம் வரை கொண்டு செல்லாத உன்னத அழகி அவள்.

‘எப்படி அடிச்சாலும், திருப்பி நமக்கே ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிறாளேன்னு பார்த்தா… காட் என்கேஜுடா…’ என நினைத்ததன் விளைவாய் அவன் உதடுகள் வளைந்தன.

“என்ன நம்பலையா?” அவன் இதழ்களின் வளைவினால் உண்டான விளைவு வினா இது.

கண்களை உயரே தூக்கி இல்லை என தலையாட்டி, அவளின் சொல்லை ஏற்றான் என அவளுக்கு நம்பிக்கை ஊட்டினான்.

“என்ன லவ் பண்றதுக்கு தான், உங்க வீட்ல என் கூட உங்கள அனுப்பி வச்சாங்களா? எனக்கு பாதுகாப்புக்காக… அவங்க வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு எதுவும் அசம்பாவிதம் நேர்ந்திடக் கூடாதுன்னு, உங்கள எனக்கு துணையா அனுப்பிருக்காங்க. நியாபகம் வச்சுக்கோங்க.” என அவனைச் சம்பவம் செய்திருந்தாள். மேலும் அதற்கு பக்கப்பலமாய், தன்னுடைய கல்யாண பத்திரிக்கையையும், அவனுக்கு நீட்டியிருந்தாள்.

அதைக் கைகளில் வாங்கியவன், ‘அப்போ இதெல்லாம் தெரிஞ்சு தான் நம்பள நம்பி(?) இவ கூட அனுப்பிருக்காங்களா?’ என எண்ணினான்.

‘அதான எப்படி அப்பா கோவிக்காம… ஏன் பெரிப்பா சொல்லும் போது, தொண்டையக் கூட செருமாம இருக்கும் போதே யோசிச்சிருக்க வேண்டாமா? அதக் கூட விடு, பெரிம்மாவும் பழமொழி, சுடுமொழின்னு ஒரு மறுமொழி கூட சொல்லாம, உன்ன கூட அனுப்பும் போதே நீ தெளிஞ்சிருக்கனும் ராமு… நீ தெளிஞ்சிருக்கனும்… இப்படி வால்யுன்ட்டரா வந்து வெடிக்குண்ட வாங்கி மடில போட்டுக்கிட்டியே…’ என அவனின் மனமே அவனை இகழ்ந்தது.

சற்று நேர மௌனத்திற்கு பின், அவளிடம், “ஓ! அதான் நீ எதுக்கும் ரியாக்ட் பண்ணாம இருந்தியா?” எனச் சகஜமானான்.

“ஹெலோ… நான் என்கேஜ்டா இல்லாம இருந்தாலும் இப்படி தான் இருந்திருப்பேன்” எனச் சிடுசிடுப்பாய் ரியாக்ட் ஆனாள்.

அவளுக்கு ஏனோ எரிச்சலாய் வந்தது. பெண்களை, நீ அழகு, பேரழகு என்று சொன்னால், உடனே பதிலுக்கு பல்லைக் காட்டி, நாணப்பார்வைப் பார்க்க வேண்டும் என எல்லா ஆண்களும், அகம்பாவமாய் எதிர்பார்ப்பது ஏன்?

 

இன்னும் தூறும்…