தூறல் போடும் நேரம் – 15

பகுதி – 15

“ஏய்! ஏன் அழுவுற?” எனத் தன் குட்டி கையை நீட்டிய சிறுவன், அங்கு அழுது கொண்டிருந்த இரட்டைக் குடும்பி சிறுமியின் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்தான்.

“ம்ம்ம்… ம்ம்… நாளிக்கு லீவுல அதா அழுவுறேன்…” எனப்  பதில் சொல்லி அழுது கொண்டே, உடன் வந்த ஆயா பின்னே நடந்தது.

சிறுவனும் தன் குட்டி தங்கையின் கைப்பற்றியபடி, அவளையும் இழுத்து கொண்டு இவனும் அந்தச் சிறுமியின் பின்னே ஓடி, “லீவுனா சாலியா தா இருக்கும்… நெய்ய நேரம் விலாடலாம்… நீ ஏ அளவுற” என்றான்.

“ம்ம்… ஆனா இன் கூட பிலாட யாடுமே இல்லியே” எனக் கூறினாள்.

“ஏ… உன்கு பாப்பா இல்லியா?”

“ம்ம்ஹூம்…”

“எங் வீடுல நெண்டு பாப்பா இடுக்கே… ஒன்னு ஏ பாப்பா… இன்னொன்னு இங்கன்னே பாப்பா” எனச் சொன்னதோடு நில்லாமல், “நீ பேணா இந்த பாபாவ வச்சுகிடியா” எனக் கொடை வள்ளலாய் தன் உடன் பிறந்தவளை, தன் புதிய தோழிக்கு பாப்பாவாக தாரைவார்க்க தயாராய் இருந்தான், நம் ராம்.

அவன் அப்படி கேட்கவும், நடையை நிறுத்தி விட்டு, மலங்க மலங்க விழித்தாள் சிறுமி. வேறு ஒன்றும் இல்லை இவ்வளவு பெரிய பாப்பாவை எப்படி வீட்டிற்கு தூக்கி செல்வது என எல்கேஜி பயிலும் உதயாவை உற்று பார்த்தாள், அந்த ஒன்னாப்பு பயிலும் சிறுமி.

இது எதுவும் தெரியாத உதயா அண்ணனின் கையைப் பற்றி கொண்டு, தன் கையில் இருந்த மிட்டாயை சுவைத்து கொண்டிருந்தாள்.

“என்ன கூட்டிட்டு போடியா” எனத் தமக்கையை தள்ளி விடவே முடிவெடுத்து விட்டான்.

“இல்ல பாப்பான்ன குட்டியா… எல்லாம் கைல தான இடுக்கும். இது… பெருசால இருக்கு” என தன் அழுகை, கவலை என அனைத்தையும் மறந்தாள் அச்சிறுமி.

“எங் வீடுல இதா பாப்பா. குட்டி பாப்பால இல்ல. ஆனா எங் மாமிட்ட குட்டி பாப்பா இடுக்கே” எனக் குதூகலித்தான்.

சிறுமிக்கோ இவனுக்கு மட்டும் எப்படி இத்தனைப் பாப்பா இருக்கிறது என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்ததனால், மௌனமாய் நடந்து கொண்டிருந்தாள்.

சிறுமியின் வீடு வந்ததும், ஆயா அவளின் அம்மாவிடம் பையையும் குழந்தையையும் ஒப்படைக்க, “ம்மா… இந்த பாப்பாவ இனக்கு பிலாட தரேன்னு, இவே சொல்லுதாமா…” என ராமைச் சுட்டிக் காட்டினாள்.

அவனைக் கண்ட தேனம்மை, “அது அவங்க பாப்பா டா… பாப்பா இங்க இருந்தா, பாப்பாவோட அம்மா அப்பா, பாப்பா காணோம்னு அழுவாங்கள…” என எடுத்து சொல்லி, ஆயாவிடம் யார் என விவரம் கேட்க, அவரும் இவர்களுக்கு பக்கவாட்டு தெருவில் வசிக்கும் ராமின் குடும்பத்தைப் பற்றி கூறினார்.

“ஓ! அவுகளா… எங்க பக்கத்து தோட்டக்காரவுக தான். தெரியும், ஆனா பழக்கம் இல்ல” என விவரிக்க, ஆயாவும் அவர்களின் குடும்பக் குழந்தைகள், எனச் சுந்தர் தொடங்கி, உதயா வரை அறிமுகப்படுத்தி விட்டு செல்ல தொடங்கினார்.

ஆயா கிளம்பியதும், அம்மாவின் சொற்கள் எல்லாம் பறந்து போக, பாப்பா வேண்டும் என்று மறந்திருந்த அழுகையைத் தொடர ஆயத்தமானாள் தேனம்மையின் ஒரே அருந்தவப் புதல்வி அழகு மீனாள் என்ற மீனா.

பின் அவ்வழியே வந்த வெங்கடாசலம் தான், சிறிது நேரம் மீனுவுக்காக ராமையும், உதயா மற்றும் உமையாளையும் விட்டு அவர்களின் பள்ளிச் சுமைகளை ஆயாவிடம் வாங்கிக் கொண்டு, சுந்தருடன் வீடு வந்தார்.

இப்படி ஏற்பட்ட நட்பு நாளடைவில், உதயாவுடன் விளையாட்டுகளில் சண்டை ஏற்பாட்டால், “மீனு, வா நம்ம வீட்டுல போய் விளையாடலாம்” என்று மீனுவின் வீட்டிற்கு ராம் செல்வான்.

சிறுவயதிலேயே அவர்கள் வீட்டினை, “எங்க வீடு” என்றும், மீனுவின் வீட்டினை “நம்ம வீடு” என்றும் அடைமொழி வைத்திருந்தான். அதே போல் அவளின் அம்மா அப்பாவும், இவனுக்கு இன்னொரு அம்மா அப்பாவாக மாறினர்.

இச்சிறார்களின் நட்பினால், இரு குடும்பமும் நட்புமுகம் பாராட்ட தொடங்கி, ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால், மற்றவர்களுக்கு தான் முதல் அழைப்பு என மிகவும் நெருக்கத்துடன் சொந்தங்களாய் பழகினர்.

ராம் மற்றும் அவனது சகோதர சகோதரிகளால், மீனாவுக்கு தான் ஒற்றைக் குழந்தை என்ற நினைவே இல்லாது போயிற்று.

பால்வாடியில் தொடங்கிய அவர்களின் நட்பு பருவ வயதிலும் தொடர்ந்தது. இருவரும், தங்களின் தனிப்பட்ட விஷயங்கள் தொடங்கி நேற்று அன்னையிடம் திட்டு வாங்கியது வரை அனைத்தையும் யோசிக்காமல் பகிர்ந்து கொள்வார்கள்.

பள்ளிப்படிப்பை ஒன்றாய் முடித்தவர்கள், உயர்கல்வி படிப்பினை மட்டும் தனி தனியே தேர்வு செய்து முதன் முறையாய் பிரிந்தார்கள்.

ராம் இயந்திர பொறியியல் படிப்பினை அவர்கள் ஊரில் இருக்கும் கல்லூரியிலும், மீனு மருத்துவ படிப்பினை மதுரையில் இருக்கும் மருத்துவக்கல்லூரியில் படிக்க முடிவு செய்திருந்தார்கள்.

முதன் முறையாய் மதுரைக்கு செல்லும் போது, பேருந்து நிலையத்தில் அவளை வழியனுப்ப வந்தவன், “கவனமா இரு மீனு. யார் கூடயும் ரொம்ப பேசாத, அளவா பேசு. இந்த காலேஜ்ல படிக்கிற பசங்க எல்லாம் மோசமா இருப்பாங்க. எதுனாலும் என்ட்ட சொல்லு. நான் இருக்கேன்கிறத மறந்திடாத…” எனக் கூறியவனிடம் தலையை தலையை ஆட்டினாள் மீனு.

“அதே மாதிரி நீயும் கவனமா இரு. நான் பக்கத்துல இல்லங்கற தைரியத்துல, பொண்ணுங்கள எல்லாம் ஓவரா சைட் அடிக்காத… உதி செல்லத்துக்கிட்ட வம்பிழுக்காத. அவளையும், உமையாவையும் பார்த்துக்கோ.” என அவள் கூறியதற்கு எல்லாம் தலையைக் கோதியப்படி சிறிது அசட்டையாக இருந்தான்.

 “அப்புறம் அம்மா அப்பாவையும் பார்த்துக்கோடா… நான் இல்லாம தவிச்சு போயிடுவாங்க, அதுனால டெய்லி ஈவ்னிங் போய் பாருடா” எனத் தன் பெற்றோரின் மீதுள்ள பாசத்தால் அவனுக்கு அன்பு கட்டளையிட்டாள். ஆனால் அவனோ ஒரு ‘ம்’ கொட்டலோடு நிறுத்திக் கொண்டு, கண்ணை இங்கும் அங்கும் அலைபாய விட்டான்.

அவளுக்கு புரிந்தது, தன்னை முதன் முதலாய் பிரிய நேரும் அவனின் உள்ளம் ஊசாலடுகிறது. கண்கள் குளம் கட்டி, எங்கே மற்றவருக்கு காட்டிக் கொடுத்திடுமோ என அவனின் கண்கள் ஓடி விளையாடுவதை உணர்ந்தவளால், தன் கண்ணோரம் நீர் கசிவதை நிறுத்த முடியவில்லை.

விவரம் அறியா வயதில் இருந்து அவன் கைப்பற்றி விளையாடி, இதோ விவரம் அறிந்த வயதிலும், வேதனை மிகுந்த தருணத்தில், அவனின் ஒற்றை கையழுத்தம் சொல்லும் ஆறுதலுக்கும், அது தரும் பலத்திற்கும் உவமையேதும் இல்லை இவ்வுலகில் என்பதை உணர்ந்தவள் என்பதை விட அனுபவித்தவள் அவள் என்று சொன்னால் மிகையாகாது.

 இவ்வாறாக சென்று கொண்டிருந்த அவர்களின் நட்பில் இடைப்புகுந்தவன் தான் சுதர்சன். முதன் முதலில் சுதர்சனைப் பற்றி அவள் கூறிய நாள் கூட இன்னும் அவன் நியாபகத்தில் இருந்தது.

“ராம்…” என அலைபேசியில் வழக்கமில்லாத பழக்கமாய் பெயரை சொல்லி மீனா அழைக்கும் போதே, ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான் ராம்.

இவன் அழைத்தால், வழக்கமாய் ‘என்னடா?’ எனக் கேட்பதும், அவள் அழைத்தால், ‘என்ன பண்ணுற’ எனத் தொடங்குவதும் தான் வாடிக்கை.

இப்போது பெயரைச் சொல்லி அவள் அழைக்கையிலே, அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ அந்நியத்தன்மை அநியாயமாய் புகுந்ததை உணர்ந்தான் ராம்.

அதனால் ‘ம்’ கொட்டினான். அதற்கு அவளோ “ஏய்… என்னடா? என்னாச்சு?” என விளக்கமாய் கேட்டு, பதறி ராமின் நெஞ்சில் பால் வார்த்தாள்.

“ஒண்ணுமில்ல… நீ ஏன் போன் பண்ண? என்ன விஷயம்? ஏதோ வித்தியாசமா தெரியுதே” என எடுத்த எடுப்பிலேயே தன் மனதில் உள்ளதைக் கொட்டினான்.

“எப்படிடா கண்டுப்பிடிச்ச? உன்ன மாதிரி ஒரு பிரண்டு கிடைக்க நிஜமாவே நான் கொடுத்து வச்சிருக்கணும்”

“போதும் நீ அளந்தது” எனக் கடுப்படித்தான்.

“சரி டா… அத விடு… லேப் கஷ்டமா இருக்குன்னு சொன்ன, இப்போ எப்படி போகுது? பிக் அப் பண்ணிக்கிட்டியா?” என அவனது வெதும்பலினால் சிறிது விசயத்தை விட்டு விலகி பேசினாள்.

“ம்ம்… போகுது மீனு, சீனியர் ஒருத்தர் ஹெல்ப் பண்ணார். இப்போ கொஞ்சம் பிக் அப் பண்ணிக்குறேன். சரி சொல்லு என்ன சொல்ல வந்த? எதுவும் பிரச்சனையா? சேஃப்பா இருக்கேல” என அக்கறைப்பட்டான்.

“ம்ம்… நமக்கென்ன கவலை… அதான் நம்மள பந்தோபஸ்து பண்ண தான் அடியாளு ஒருத்தர் இருக்காரே” எனக் கூறியவள், கேட்டவனை நேரில் கண்டிருந்தால் பாதி வாக்கியத்திலேயே வாயை மூடியிருப்பாள்.

அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. அதே சமயம் அந்த சுதர்சனின் மீது கொலைவெறியானான்.

அவளின் கல்லூரியில் படிக்கும் சுதர்சன், ஏதேச்சையாய் அவளை ராக்கிங்கில் இருந்து ரட்சித்து பாதுகாத்தான் என்றதில் இருந்து, அவன் புராணம் தான் படுகிறாள் மீனா என்பது அவன் மனதின் குற்றச்சாட்டு.

அவளோ இயல்பாய் தான் பேசுவாள், ஆனால் எப்படியேனும் அவனைப் பற்றிய ஒரு வரி அவர்களின், பேசி உரையாடலில் வந்து விழுகும். அது அவனுக்கு குற்றமாகவும், இவளுக்கு எதார்த்தமாகவும் பட்டது.

அந்த வரிகளில் இருந்து சில, அவள் “அவன் உன்ன மாதிரி இல்ல… நல்லா படிக்கிறான்.”

அவன் ‘அப்போ அவன் கூடவே பேசிக்கோ’ மனதிற்குள் தான் கூற முடிந்தது அவளிடம் ‘ம்’ மட்டுமே கொட்ட முடிந்தது.

“நல்லா பழகுறான்… அப்போ அப்போ உன்ன நியாபகப்படுத்துவான். நாம இப்படி தானே அடிக்கடி பேசிக்குவோம்.

அதுவும் அன்னிக்கு நாம குளத்தங்கரைல உட்கார்ந்து பேசிட்டே இருந்தோம்ல… அப்போ கூட நீ பாம்பு பாம்புன்னு வேவு பார்க்க வந்த உதயாவ பயமுறுத்துன நியாபகம் இருக்கா” என அவள் சுதர்சனை மறந்து, அவனுடன் கழித்த கடந்த காலத்திற்குள் கலந்து விடுவாள்.

ஆனால் இவன் தான் “பழகுறானா… பழகட்டும் பழகட்டும்… அப்படியே இங்க கூட்டி வந்து நாமளும் பழகிட்டா போச்சு” எதிர்மறையாய் எதிர்காலத்திற்குள் சென்று விடுவான்.

இப்படியாக ஒரு வருடம் கடந்த நிலையில் தான் இன்று “ராம்” என விளித்தாள்.

அப்படி அவள் விளித்தாலே எதையோ சொல்ல தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறாள் என்ற பொருள், அதனுள் ஒளிந்து கொண்டு இருக்கும் என்று அவனுக்கு தெரியும்.

அதனால் “சொல்ல வந்தத சொல்லி முடி” எனக் கூற, அவளோ தயங்கி மயங்கி “நா இப்போ உனக்கு ஒரு மெயில் பண்ணிருக்கேன். பார்த்துட்டு சொல்லு” என்றாள்.

“என்ன சொல்ல? எதுக்கு மெயில் அனுப்புற? அதான் பேசுறோம்ல… போன்லயே சொல்ல வேண்டியது தான” சலித்தான் அவன்.

“இல்ல ராமூஉ… அத… சொல்ல முடியாம தான்… மெயில் பண்ணிருக்கேன்” எனச் சிலிர்த்தாள் அவள்.

அவனும் உடனே இணைய மையம் சென்று அவள் அனுப்பிய மின்னஞ்சலை உடனே பார்த்தான். அதில் அவள் சுதர்சன் தன்னிடம் காதலைச் சொன்னதாகவும், அவனிடம் பதிலுக்கு தான் என்ன சொல்வது என இவனைக் கேட்டிருந்தாள்.

அதைப் படித்த அடுத்த நொடி, அங்கிருந்தே அவளுக்கு அலைபேசியில் அழைத்தான். “ம்ம்ம்… அவன சாக சொல்லு” என அவன் கத்தியதில் அருகில் இருந்த அனைவரும் அவனை எட்டிப் பார்த்தனர்.

அவர்களின் பார்வையில் நிதானத்திற்கு வந்தவன், பணம் செலுத்தி விட்டு, அந்த மையத்தை விட்டு வெளியேறியவன், “என்ன ராமு இப்படி பேசுற” என அவள் இழுக்கையிலேயே,

“உன்ன… உனக்குலா அறிவே இல்லையா… படிக்க தான போன… படிக்க போய் இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல. ஒரு செமஸ்டர் எழுதவுமே மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்களோ?” என இடித்துரைத்தான்.

“டேய்… நான் இன்னும் ஒன்னும் சொல்லல டா… அவரா தான்…” என்றவளை “அவன் சொல்ற அளவுக்கு நீ ஏன் பழகுற” என இடைமறித்தான்.

“அப்படிலாம் இல்ல ராமு… நான் சும்மா… தா… சரி விடு, உனக்கு பிடிக்கலன்னு தெரியுது” என அரைமனதாய் அதை விடுத்தாள்.

காதல் வந்தால், பெற்றவர்களையே அது மறந்து போக செய்து விடும். நண்பனையா நினைக்க வைக்கப் போகிறது. அதனால் மீனாவும் சுதர்சனின் அறிவுரைப்படி இல்லை இல்லை காதல் விதிப் படி, எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது, மற்றவர்களின் பிடித்தம் எதற்கு? எனக் காதலை வளர்க்க ஆரம்பித்தார்கள்.

விடுமுறைக்கு, ஊருக்கு திரும்பியவள், ஒரு நாள் சுதர்சனைக் காதலிப்பதை தெரியப்படுத்த… இதை அவன் எதிர்பார்த்ததால் அவனுக்கு பெரிதாய் எதுவும் தோன்றவில்லை.

ஆனால், அதனைத் தொடர்ந்து புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த அவன் புகைப்படத்தையும் காட்ட… அவள் காண்பிக்க எடுத்து கொண்ட இரண்டு நொடி, ஏதோ பெரிய யுகமாய்… நகத்தைக் கடித்து தன் பதற்றத்தைக் காட்ட… அதே சமயம் அவனின் புகைப்படமும் அவன் கண்களில் பட… ஏனோ ராமிற்கு ஒப்பவே இல்லை.

தன் நட்பு பறிபோகும் என்ற பயம் கூட இல்லை அவனுக்கு. ஆனால், இந்த அழகு தேவதைக்கு ஏற்ற வரனா இவன் என அவனை ஏற்க மறுத்தது அவன் நெஞ்சம். அதைச் சொல்லியும் காட்டினான்.

“ஐயோ… மீனா… உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? போயும் போயும் இந்த மூஞ்சிய…” என அதற்கு மேல் அவனுக்கு சொல்ல தெரியவில்லை.

ஒரு இரண்டு நடை குளத்தங்கரைப் படிக்கட்டில் நடந்தவன், “எப்படி… மீனு… இவன போய்… என்னால சகிக்கவே முடியல” என ஒவ்வாமையை முகத்தில் காட்டிச் சுழித்தான்.

அது நேரம் வரை, வழக்கம் போல் இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுகொண்டிருந்த உதயா, “டேய் அண்ணா… உனக்கென்னடா… ஏதோ நீ கட்டிக்கப் போறவன் மாதிரி நோட்ட சொல்லிட்டு இருக்க… மீனுவுக்கு பிடிச்சிருக்கு லவ் பண்ணுறா. உனக்கென்ன…” என வினவினாள்.

எப்போதும் இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு, அதில் ராமிற்கு எதிரான விசயங்களை தனியே எடுத்து, வீட்டில் வத்தி வைக்கும் உதயாவிடம் கூட கோபம் கொள்ளாமல், “இல்ல உதயா… நம்ம மீனுக்கு போய்… இப்படி ஒருவனான்னு… ஜீரணிக்க முடியல” என குணா கமல் போல் பாதி பாதி வசனம் பேசியவனை உதயா தான் தட்டி வைத்தாள்.

“அதான்டா அண்ணா காதல். காதலுக்கு கண்ணு இல்லன்னு சொல்வாங்கள… அது மாதிரி நம்ம மீனுக்கா காதலுக்கு கண்ணு இல்லையோ என்னவோ” என அவனிடம் பதிலிறுத்து விட்டு, “எங்க போட்டோ காட்டு மீனுக்கா” என மீனாவிடம் இருந்த சுதர்சன் புகைப்படத்தைக் கேட்டு பெற்றாள்.

பார்த்தவள், “அப்படி ஒன்னும் குறை சொல்ல முடியாது. நம்ம மீனு கலர் இல்லைனாலும், நிறமா தான் இருக்கான். அப்புறம்…” எனப் புகைப்படத்தை இங்கும் அங்கும் தூரத்தே வைத்து பார்த்து விட்டு, “லட்சணமா தான் இருக்கான். எனக்கு ஓகே பா” எனக் கூறியவளை, முறைத்தான் ராம்.

“அப்படிச் சொல்லுடி என் உதி குட்டி” என உதயாவை கொஞ்சியபடி அவனைத் தனியே விட்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்த பின்னும் அவனின் ஆதங்கம் அடங்கவில்லை. “எப்படி உதயா அவனைப் போய்… அவனும் அவன் மூஞ்சியும்… எனக்கு சுத்தமா பிடிக்கல” எனப் புலம்பி தள்ளினான்.

அவனின் அலம்பல்களைப் பொறுக்க முடியாமல், “டேய் அண்ணா… அவளுக்கு நீ ப்ரண்ட் தான… இல்ல…” என அவள் இழுக்கையில் தான் அவனின் புலம்பல்கள் தேங்கி தயங்கியது.

“ஏய்… ஏன் இப்படி கேட்குற? அறிவில்லாம பேசாத” என உடனே பாய்ந்தான்.

“அப்புறம் ஏன் இப்படி குமுறுற?”

“இல்ல உதயா… அத எப்படி சொல்றது… எனக்கு அவள்னா… ரொம்ப ஸ்பெஷல்… அவளோட வாழ்க்கை மேல எனக்கு அக்கறை இருக்கக் கூடாதா?” என அவளைப் பற்றி, அவர்களின் நட்பு பற்றி எப்படி விளக்குவது… எனத் தெரியாமல் திண்டாடியது அவனது பக்குவப்படாத பருவ வயது.

அவனுக்கு அவள் மீதான நட்பு ஏன் அவ்வளவு உயர்வாய் தோன்றியதெனில், சிறு வயதில் தன்னை நம்பி நட்பு கரம் நீட்டி, தன்னை ஒரு ஹீரோ வொர்ஷிப் செய்து, அவனை ஒரு ஹீரோவாய் உணர செய்த குட்டி தேவதை அவள். இதை சொல்லால் சொல்வதைக் காட்டிலும் உணர்ந்தால் தான் தெரியும். ஏனெனில் அவனாலேயே, அவன் அனுபவிக்கும் உணர்வினை வார்த்தைகளில் வடிக்கத் தெரியவில்லை.

அப்படிப்பட்ட தேவதையை… குட்டி புறாவை, ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கவே விரும்பினான். மேலும், அவளிடத்தில் தன்னுடைய இடம் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம் தான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கூட கனவு வைத்திருந்தான். எதிர்காலத்தில், திருமணம் நடந்தால், இருவரின் துணையும், தங்களைப் புரிந்து கொண்டு, அவர்களும் நட்புடன், தங்களுடன் பழக வேண்டும் என்ற கனவை வளர்த்து இருந்தான்.

என்றுமே தன் வாழ்வில் மீனுவுக்கு தான் முதலிடம் பின் தான் அவனின் தங்கைகள் கூட, இதையே எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என நினைத்திருந்தான். இது நிகழ வேண்டுமெனில் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மண முடித்தால் தான் தன் திட்டத்திற்கு உதவும் எனவும் கருதி வைத்திருந்தான்.

ஆனால் இவள் இப்படி செய்வாள் என அவன் நினைக்கவும் இல்லை, மேலும் சுதர்சனைக் கண்டால், அவ்வளவு நல்லவனாய் அவனுக்கு படவும் இல்லை. ஏதோ உள்ளுணர்வு அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.

மேலும் நான்கு வருடம் இதே கதைத் தொடர, இந்தக் கதையில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. அவர்கள் காதல் வளருவதும், ராமின் வெறுப்பு வளரவில்லை என்றாலும், சற்றே ஒதுங்கி இருந்தது.

நான்காம் வருடம் முடிந்த நிலையில் மருத்துவ துறையில் பயிற்சி மருத்துவராய் மீனு படிப்பை முடித்து, ஒரு பெரிய மருத்துவமனையில் வேலைக்கு சென்ற சமயம் தான், அவர்களுக்கு நடுவில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை, மீனுவின் தற்கொலை செய்தி தான் இவனை எட்டியது.

அதன் பின் சுதர்சனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது தான் அவளிடம் அவனைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கூட கேட்க தவறிய தன் நட்பின் லட்சணத்தை எண்ணி நொந்தான்.

அவனுக்கு பிடிக்கவில்லை தான், ஆனால் அவனைப் பற்றி முழுவதும் தெரியாமல், எதுவும் விவரம் கூட கேட்காமல் வெறுப்பை வளர்த்து விட்ட தன் மடமையை எண்ணி எண்ணி கரைந்தான். என்ன தான் கரைந்தாலும், புரண்டாலும் அவன் கண் முன் மீனு… அவன் மீனுவாய் வரவா போகிறாள்.

அதற்கு மேலும் அவனுக்கு நொந்துக் கொள்ள நேரம் இருக்கவில்லை. அப்போது தான் அவனும் பட்டப்படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்திருந்தான்.

புது சூழல், தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டிய பருவம் என பல விஷயங்கள் அவனை ஆக்கிரமிக்க, மீனுவின் நினைவும் நட்பும் பகுதி நேரமாய் போய் விட்டிருந்தது. ஆனால் அவள் சொன்னது போல், இன்று வரை அவளின் தாய் தந்தையரை பார்த்து கொண்டு தான் இருந்தான்.

எல்லாவற்றையும் கேட்ட ராதா, “அப்போ சுதர்சன பழி வாங்க தான் என்ன கல்யாணம் பண்ணிருக்கீங்க?” என முடிவுக்கு வந்தாள்.

“ஒரு திருத்தம் பழி வாங்க இல்ல, நீ பலி கடவா ஆகிடக் கூடாதுன்னு தான்… உன்ன அவன்ட்ட இருந்து பாதுகாக்க வந்தேன்” என அவளின் முடிவை திருத்தினான்.

“அவர் கல்யாணத்த நிறுத்தி, அவமானப்படுத்தினது பழி வாங்கல் இல்லையா?” என தன் முடிவை நிலைநாட்ட விரும்பினாள். தன் புரிதலை ஒருவன் குறைக் கூறுவதா?

“நான் இன்னும் பழி வாங்கவே ஆரம்பிக்கல… இப்போ தான பார்த்திருக்கேன். இனிமே தான் வாங்கணும்” என உண்மையைக் கூறினான்.

“எப்படி வாங்க போறீங்க?” ஏதோ கறிகாய் வாங்க போவது போல் அவள் கேட்க, “அத பத்தி இன்னும் யோசிக்கல… ஆனா செய்யணும்… கண்டிப்பா வச்சு செய்யணும்” என்று வன்மையோடு கூறினான்.

‘இவன் பண்ண காரியத்துக்கே இவன இவங்க வீட்டுல வச்சு செய்வாங்க… இவன் அவன செய்ய போறானா? ஆனா… இவனுங்க சண்டைல நம்ம மண்டைய போட்டு உருட்டாம இருந்தா சரி’ என எண்ணியவள், “சரி கிளம்பலையா? மழை விட்டிருச்சு” என நடப்பிற்கு வந்தவள், அவனையும் இழுத்து வந்தாள்.

“எங்க?” என அவன் விழிக்க, “ஊருக்கு… சென்னைக்கு…” என அவள் இழுக்கும் போதே, “இல்ல போகல” என பதிலிறுத்ததும், “சரி வாங்க சாப்பிடலாம்” என அழைத்து சென்றாள்.

சாப்பிட்டு முடித்ததும், அவனுக்கு ஒரு அறையை காட்டி, “இங்க படுத்துக்கோங்க” என அவனை விட்டு சென்றவள், வரவேற்பறை மின்விளக்கை அணைத்து, விடிவிளக்கை எரிய விட்டவள், மேலே தன் அறைக்கு செல்ல எத்தனிக்கையில் “நீ எங்க போற?” என அறையின் வாயிலில் வந்து கேட்டான் அவளின் கணவன் ராம்.

 

தூறல் தூறும்…