தூறல் போடும் நேரம் – 3

பகுதி 3

மறுநாள் காலை, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கு சாட்சியாய், வீட்டின் முன் இருந்த வெட்ட வெளியிலும், வாசலுக்கு வெளியே தெருவில் சிறு இடத்தை அடைத்தப்படி தென்னமோலையில் பந்தல் அமைத்து இருந்தனர். மேலும் குழந்தைகளின் விளையாட்டு கூச்சலும், ஓடியாடும் அழகும் அதை மெருகேற்றுவது போல் இருந்தது.

ஏதேனும் விசேஷம் என்றால் ஓலை பந்தலும், கண்ணைக் கவரும் வண்ண வண்ண காகிதங்களின் வடிவங்களும், குழந்தைகளின் குதூகலமே போதும், அந்த வீட்டின் விழாவை ஊருக்கே பறைசாற்றி விடும்.

மேலும் அழகு சேர்க்க இரவுகளில், ஒளிரும் அந்த வர்ண வர்ண கண்ணாடி தாள்களை, ஆடையாக கொண்ட அந்தச் சின்னஞ்சிறு கோலிக்குண்டு பல்ப்புகளும் அங்கு அமைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

இப்படி வேலையாட்கள் ஒவ்வொருவராய் தங்களின் பணிகளைச் செய்ய, இதையெல்லாம் இவ்வாறு ரசித்தப்படியே, முன் வாசலில் நடைப் பயின்று கொண்டிருந்தாள் ராதா. மேலும் எதையோ சிந்தித்தப்படி இருந்தாள்.

அப்போது, சரியாக சுந்தரம் வாயிலில் ஒரு மூன்று சக்கர மிடிவண்டியுடன் வந்து இறங்க, “இப்போ தான் நினச்சேன், ஓலைப் பந்தல், கலர் பேப்பர் டெகரேஷன், சீரியல் பல்பு, குழந்தைங்க சத்தம் எல்லாம் இருக்கே, ஒன்னு மட்டும் மிஸ் ஆகுதேன்னு நினச்சேன். அத கரெக்டா கொண்டு வந்துட்டீங்க.” எனப் பேசியவளை புரியாமல் பார்க்க, “அய்யோ… மைக் செட் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல கேட்டது” எனச் சிறு குழந்தையாய் அகமகிழ்ந்தாள்.

இப்போது தான் சுந்தரத்திற்கு விஷயமே புரிந்தது. பின், “எனக்கும் ரொம்ப பிடிக்கும் ராதா. அதான் தேடி கண்டுப்பிடிச்சு தூக்கிட்டு வந்துட்டேன்.” எனத் தன் வீரதீர பராக்கிரமத்தை மேலும் விளக்கிக் கொண்டு இருந்தான்.

இவர்களுக்கு இடையே இரு தேன்சிட்டுகள் புகுந்து, “ஹைய்யா ஜாலி ஜாலி ஸ்பீக்கர் வந்திருச்சு” எனக் கோரஸ் பாடின.

அவர்கள் வேறு யாருமல்ல, வள்ளியம்மைக்கும் வெங்கடாசலத்திற்கும் பிறந்த பெண் மகவு, உமையாளின் இரு சிட்டுகள். அவை இரண்டும் பெண் சிட்டுகள் என்பது மிகவும் சிறப்பு.

“மாமா மாமா… பீகிள் பாட்டு போடு மாமா… அதும்… அந்த மீசிக் மட்டும் வடுமே… அது மட்டும் போடு மாமா” எனத் தன் தாய்மாமனுக்கு ஆணையிட்டது ஒன்றாம் வகுப்பு படிக்கும் உலகம்மை என்ற மீனா கூறினாள்.

“உத்தரவு மேடம். சின்ன மேடம் உங்களுக்கு எந்த பாட்டு வேணும்” என அவன் வினவ,  அதுவோ, “னா… பீகி பீகி மாமா…” என அந்த இரண்டரை வயது, சின்ன வாண்டான வள்ளிக் கண்ணுவும் அதே பாட்டைக் கேட்டது.

தன் தமக்கை ரத்தினங்களின் ஒலிச் சித்திரத்தைக் கேட்ட சுந்தர் சிரிக்க, அவனோடு ராதாவும் சிரித்தவள், “சுந்தர்… என்ன கேக்க மாட்டீங்களா எனக்கும் பாட்டு போடுவீங்களா” என்று குழந்தைகளோடு குழந்தையாய் மூன்றாவது சிறுமியாய் அவள் வினவ, சுந்தரோ “உங்களுக்கு எல்லாம் பாட்டு போட முடியாது மேடம்” என்றான்.

அவனது பதிலில் முகம் சுருங்கியவளாய் திரும்ப எத்தனித்த வேளையில், “உங்களுக்காகலாம் பாட்டு போட முடியாது, நீங்க கேட்குற பாட்ட வேணா போடலாம்” என அவன் நிதனாமாய் சொல்ல, அவன் கிண்டல் பேசியதைக் கூட பொருட்படுத்தாமல், நிஜமாவா போடுவீங்களா என முகம் மலர்ந்தவள், அவனும் ஆமென்பது போல் தலை சாய்க்கவும், “இருங்க நான் போய் என் லேப்ல இருந்து பென்ட்ரைவ்ல பாட்டு ஏத்தி கொண்டு வரேன்” எனச் சிட்டாய் பறந்து விட்டாள்.

உமையாள் முதல் நாள் மாலையே, அதவாது நம் அரசு அருணாச்சலத்திடம் மாட்டிக் கொண்டு நின்றானே, அப்பொழுது தான் தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வந்து இறங்கினாள்.

உமையாள், காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கீழ பூங்குடியில் தன் கணவன் மற்றும் மாமி, மாமா, மஞ்சான் மற்றும் கொழுந்தன்களோடு கூட்டுக் குடும்பமாய் இருக்கிறாள். எப்படியோ தன் மாமியை சமாளித்து அவர் அன்னையின் விருப்பம் போல் இரண்டு நாள் முன்பே வீட்டிற்கு வந்திறங்கினாள்.

வந்ததும் தன் தமையன் தந்தைமார்களின் முன் நிற்பதைப் பார்த்து, “ஏ! அரசு எப்ப வந்த? ஒரு போன் போட்டு சொல்லக் கூட இல்ல, எங்கள எல்லாம் மறந்துட்டேல” என அவள் முடிப்பதற்குள், அவளின் தந்தை வெங்கடாசலம் “உமையா அவனும் இன்னிக்கு தான் வந்தான். உடனே மல்லுக்கு நிக்காம, மாப்பிள்ளைய கூட்டிட்டு உள்ள போ. அரசு… நீயும் உள்ளாற போ” என அவனையும் சேர்த்து காப்பாற்றி உள்ளே அனுப்பி வைத்தார்.

பிள்ளைகள் இருவரும் இவர்களுக்கு முன்பே உள்ளே சென்று பாட்டிமார்களுக்கு தங்கள் அன்பு மழையை முத்தங்களின் வாயிலாக பொழிய தொடங்கி இருந்தனர். மாலை இவர்களின் வரவால் குதூகலமான வீடு, இரவு உணவிற்கு பின் தான் சற்று அமைதியுற்றது.

ராதாவிற்கு அந்தச் சூழலே மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் சிறு வயதில் இருந்தே தன் பாட்டியுடன் தனித்து இருந்தவள், இந்தக் கூட்டு குடும்பத்தின் கூட்டத்தில் தன்னை மறந்து அகமகிழ்ந்தாள்.

அதற்கு வாய்ப்பு கொடுத்த உதயாவிடம் “தாங்க்ஸ் உதி, நான் இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு சூழல்ல இருந்ததே இல்ல. மனசு நெறைய சந்தோஷம்… சந்தோஷம் மட்டுமே இருக்கு” என நன்றி நவின்றாள்.

“எனக்கு உன்ன பத்தி தெரியாதா ராது. அதான் உன்ன கட்டாயப்படுத்தி லீவ் போட வச்சு கூட்டிட்டு வந்தேன்.”

“ஐயோ லீவ்னு கூட சொல்லாத… இப்போ தான் எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம ப்ரீயா இருக்கேன். இந்த நாலு நாளும் ஆபீஸ் பத்தி நினைக்கவே கூடாதுன்னு முடிவோட இருக்கேன்” என அவளின் ஐடி அலுவலகத்தின் நினைப்பை துறந்தாள்.

“ஹா ஹா… பிறகேன் அந்த வேலைல இருக்க, பேசாம விட்டிட வேண்டியது தான”

“விட்டுடலாம் ஆனா, கொஞ்சம் அமௌன்ட் செட்டில் பண்ணனும், சிலதுலாம் மீட்கணும். சோ எல்லா வேலையும் முடிஞ்சிருச்சுன்னா… இந்த வேலைக்கே டாட்டா காட்டிட்டு, இங்கயே வந்திடுவேன்.” என தன் மனதில் இருக்கும் திட்டத்தை மேலோட்டமாய் கூறினாள்.

“என்ன இங்க வர்றியா?” எனக் கேட்டது வேறு யாருமல்ல, நம் அழகேசன் தான்.

இருவரும் திரும்பி அவன் பக்கம் பார்க்க, “இங்கன்னா… இங்க இல்ல… இந்த ஊர் பக்கம்… உங்களுக்கு புரியுற மாதிரியே சொல்றேன் அண்ணா. தமிழ்நாட்டு பக்கம் வரணும்னு இருக்கேன்” என விளக்கமளித்தாள்.

ஆனால் உதயாவோ “உங்களுக்கு இங்க என்ன வேலை?” என முறைத்தாள். “இல்ல… நீ சாப்பிட போயி ரொம்ப நேரமாச்சே… இன்னும் ரூமுக்கு வரலையே… இன்னுமா சாப்பிடுறன்னு எட்டிப் பார்க்க வந்தேன் மா” எனப் பதில் கூறினான்.

மாடியின் உள் தாழ்வாரத்தில் தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர், அதனால் “அதான், இங்க தான் இருக்கோம்னு பார்த்துட்டீங்கள? அப்புறம் ஏன் நாங்க பேசுறத ஒட்டுக் கேட்டீங்க?” எனச் சரமாரியாய் கேள்விகனைகளைத் தொடுத்தாள்.

ஆனால் மன்மத கணைகளை ஏவ தயாராய் இருந்த அழகேசன், “நா அப்படிலாம் பண்ணல, ஏதோ பேசிட்டு இருக்கீங்களே… நாம வெயிட் பண்ணி கூட்டிட்டு போவோம்னு இருந்தேன்” எனச் சமரசமாய் சாமரம் வீசினான்.

அவனுக்கு தெரியும், இருவரும் பேச ஆரம்பித்தால், பேசிக் கொண்டே இருப்பார்களே ஒழிய ‘ஒரு புருஷன் இருக்கானேன்னு அவளுக்கும் தெரியாது, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சேன்னு இவளுக்கும் புரியாது. நல்லா சேர்ந்தாங்கடா பிரீண்ட்ஷிப்பு…’ என மனதில் நீட்டி முழங்கினான்.

அவனின் நிலை அவனின் வீட்டம்மாக்கு புரிந்ததோ இல்லையோ ராதாவுக்கு புரிந்தது. அதனால், “சரி உதி, நீ போய் அண்ணன்ன கவனி. நாம நாளைக்கு பேசலாம்” என்று விட்டு தன் அறைக்கு சென்றாள்.

‘என்ன பயபுள்ள ‘கவனி’ன்னு போட்டுக் கொடுத்திட்டு போகுதா… இல்ல நல்ல விதமா சொல்லிட்டு போகுதா?’ என யோசித்தவாறே அவள் போகும் திசையையே பார்த்து கொண்டு நின்று விட்டான்.

“என்னய கூப்பிட்டிட்டு… என்ன அங்கயே நிக்குறீங்க?” என்ற உதயாவின் அதட்டலான குரலில், தன் சிந்தையை விடுத்து, ‘ச்சே! ரொமான்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல… குரல பாரு… ஏதோ போர்களத்துக்கு ரெடியாகுற எபெக்ட்லயே கூப்பிட வேண்டியது’ என எண்ணியவாறே, “இதோ வரேன்மா” என உள்ளே சென்றான்.

அறைக்குள் வந்த ராதா, அங்கிருந்த மேஜையின் அருகே இருந்த நாற்காலியில் சிறிது ஓய்வாய் அமர்ந்தாள். ஏனோ உறக்கம் வரவில்லை, அதனால் தனது நாள்குறிப்பேட்டை திறந்து கவிதைப் புனைய ஆரம்பித்தாள்.

ஆரம்பித்தவள் தான், அதிலேயே லயித்து போன சமயம், யாரோ தன் அறையை நோட்டம் விடும் உணர்வு, அவளுள் உதித்தது. ஆனாலும் அதை விடுத்து, தன் கவிதைகளில் கவனம் செலுத்த முயற்சித்தாள்.

மறுபடியும் அதே உணர்வு தோன்ற, திறந்து கிடந்த அறைக் கதவை, அமர்ந்தவாறே சட்டென எட்டிப்பார்த்தாள். அதில் ஒரு ஆணின் நிழல் தேய்ந்து மறைவது புலப்பட, உடனடியாய் எழுந்து சென்றாள்.

லேசாய் கதவின் பக்கம் எட்டிப்பார்த்தவள், அந்த ஆண், அந்த வீட்டின் இளைய வாரிசு என்பது தெரிந்தது. அதனால் வேண்டும் என்றே கதவைப் பூட்டி விட்டு வந்தாள்.

‘காலையில் என்னமாய் குதித்தான்… இது அவனறை அவனறை என்று… இப்போது என்ன செய்வானாம்?’ என எண்ணியவாறு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.

‘ஒருவேளை மீண்டும் தன்னிடம் சண்டைப் போட வந்திருப்பானோ? கதவை அறைந்து சாற்றியது தவறோ?’ எனப் பலவாறாக சிந்தித்தப்படியே தன் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு ஆடலின் போது, அவள் கால்களில் ஒன்று எதையோ ஒன்றை மிதித்து தூர தள்ளிப்போட்டது. அது என்னவென்று குனிந்து பார்த்தாள்.

அதை எடுத்து பார்த்தவள் அதிர, மேலும் இன்னொன்றும் கட்டிலின் அடியே இருப்பது தெரிந்தது. ‘ஆக… இதற்கு தான் பட்சி இங்கேயே சுற்றுகிறதா?’ என எண்ணியவள், தன் கையில் இருந்ததை எடுத்து, தன் குறிப்பேட்டிற்கு அடியில் மறைத்து வைத்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில், அவன் கதவை தட்டுவான் என்று ஏனோ அவளுக்கு தோன்றியது. அதே போல் அவள் மனதிற்குள் மூன்று எண்ணுவதற்குள்ளேயே கதவைத் தட்டினான்.

அவளும் நிதானமாய், ஒன்றும் அறியாதவள் போல் கதவைத் திறந்து, அவனைக் கண்டு புருவம் சுருக்கிக் கேள்வியாய் பார்த்தாள். அவனோ “அது… வந்து…” எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் திணறினான்.

அவளோ தன் சிரிப்பை வாய்க்குள் ஒளித்தவாறு, என்ன என மீண்டும் புருவத்தைத் தூக்கி செய்கையாலே வினவினாள். அவனோ “இல்ல…” என மீண்டும் தடுமாற, அவள் அசையாது தன் இதழ்களை இறுக மடித்தவாறு ‘காலையில் என்ன ஒரு அதட்டல்! என்ன ஒரு கோபம்! பேசுப்பா… பேசு… இப்போ பேசு பார்க்கலாம்’ என மனதுக்குள் தாளித்தப்படி, அவனைப் பார்த்தாள்.

மூச்சை இழுத்து பிடித்து “என்னோட பர்ஸ்ஸ இங்க மிஸ் பண்ணிட்டேன் நினைக்கிறேன்” என ஒரு வழியாய் இழுத்து வைத்திருந்த அந்த பெருமூச்சை வெளியேற்றினான்.

“வெறும் பர்ஸ் மட்டும் தானா?” என அவள் விவரமாய் வினவவும், “வாட்?” என நெற்றி சுருக்கி கேள்வியில் கொஞ்சம் கடுமை ஏற்றினான்.

“இல்ல… பர்ஸ் மட்டும் தானா… இல்ல அதுக்குள்ள…” என அவள் இழுக்கையிலேயே, உள்ளே அவனுக்கு படபடக்க… இருந்தும் கெத்தை விடாமல் பார்வையைக் கூர்மையாக்கினான்.

அந்தப் பார்வையின் அர்த்தம் “அதுக்குள்ள…?” எனக் கேட்பது போல் இருக்க, அவளோ தோள்களை குலுக்கியபடி “மே பி கிரெடிட்கார்ட், டெபிட்கார்ட், இல்ல அமௌன்ட் கூட இருக்கலாம். சோ ஜாக்கிரத… தேடி பாருங்க” என அவனுக்கு வழி விட்டாள்.

உள்ளே நுழைந்ததும், நாலா பக்கமும் கண்ணைச் சுழல விட்டான். அதன் பின் பர்ஸை எங்கு கடைசியாய் வைத்தோம் என்ற சிந்தனையின் முடிவில், அவன் கால்சட்டையில் வைத்ததும், அதைத் துவைப்பதற்கு எடுத்து கொடுக்கும் சமயம் கீழே விழுந்ததும் நினைவு வர, கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தான்.

அங்கு அவனது கைப்பை அவனைப் பார்த்து வரவேற்றது. அதைக் கைப்பற்றி எழுந்தவன், “தேங்க்ஸ்ங்க” என இந்த இரவு நேரத்தில் அவனுக்கு உதவி செய்ததற்கு நன்றி நவின்றான்.

அதை ஒரு தலை ஆட்டலோடு ஏற்றவள், “எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க” எனக் கைப்பையை தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினாள்.

“ஷ்யூர்” என அவள் முன்னேயே, அவனும் சரி பார்த்தான். எல்லாமே இருந்தது. அவனது காசோலை அட்டை, பணம், கடனட்டை, சில முகவரி அட்டை என எல்லாமே சரியாக இருப்பது போன்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், சரேலென்று மீண்டும் குனிந்து தன் கைப்பையை சரி பார்த்தான்.

மீண்டும் மீண்டும் கைப்பையின் அடுக்குகளைக் குழப்பத்தோடு துழாவினான். எதையோ தேடும் முகபாவம் அவனிடம் இருந்தது.

“என்ன சார்? என்னாச்சு?” என எல்லாம் அறிந்தவள் போல் நிதானமாய் அவள் வினவவுமே, அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அதனால், அவளைப் பார்த்தவன், “எங்க வச்சிருக்க?” எனக் கேட்டான்.

அவளோ குழப்பமான முகப்பாவத்தோடு “என்ன…? என்ன சொல்றீங்க? புரியல” என ஒன்றும் அறியாதவளாய் நடித்தாள்.

“எனக்கு தெரியும் நீ தான் வச்சிருக்க? வெர் இஸ் இட்?” என அவனும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவாகவே கேட்டான்.

“நானா… எனக்கு… எதுவும்” என அதற்கு மேல் நடிக்க இயலாமல், வார்த்தைகளும் வராமல், ஆனால் ஒரு மெல்லிய மென்னகை மட்டும் அவளிடம் வந்தது.

அவனோ அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, “வெர் இஸ் இட்?” என மீண்டும் அதே கேள்வியையே உறுதியாகக் கேட்டான்.

அவளோ வார்த்தைகள் வராமல், அதே மென்னகையோடு, தன் உதட்டின் இதழ்களைப் பிதுக்கி தெரியாது என்பது போல் தலையாட்டினாள்.

மேலும் அவளை நெருங்கிய வண்ணம், அவளையே பார்த்ததாலோ அல்லது சங்கோஜப் பட்டதாலோ என்னவோ அவனும் இதழோர சிரிப்போடு “எங்க ஒளிச்சு வச்சிருக்க” என வினவினான்.

அவளும் சிரிப்போடே, பின்னேயே அடி வைத்து மேஜை அருகே நகர்ந்தப்படி, “நான்… ச்சீச்சீ… நா எடுக்கல… பட் கீழ உங்க பர்ஸ்ல இருந்து எகிறி வெளியே கிடந்துச்சு. எப்படியும் நீங்க தேடி வருவீங்கன்னு எடுத்து வச்சேன்” என தன் குறிப்பேட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை அவனிடம் காட்டினாள்.

சட்டென அதை எடுத்தவன், அவளிடம் புன்னகைப் பூத்தப்படி “தேங்க்ஸ்” என்றான். “குட் நைட்” என்று கதவு வரை சென்றவனிடம், இவளும் அவன் பின்னோடே போய் சொல்ல, அதற்கும் அவன் சிரிக்க, மேலும் “ஆல் டி பெஸ்ட்” எனப் புருவத்தை ஏற்றி வினயமாய் கூறினாள்.

எதற்கென ஒரு நொடி அவனுக்கு புரியாவிட்டாலும், பின் உணர்ந்தவனாய் “ஷ்யூர்” எனக் கூறினான். இவளும் ஒரு புன்னகையோடு கதவை அடைத்து தாழிட்டுக் கொண்டாள்.

அவளுக்கு நினைக்க நினைக்க ஏனோ சிரிப்பாய் உணர்ந்தாள். ஏனெனில் உதயாவின் தந்தையோ கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாய், ‘இங்கு என்ன செய்கிறாய்? அங்கு என்ன செய்கிறாய்?’ எனக் குடைந்து கொண்டு கடுமையாய் தெ(தி)ரிகிறார்.

‘ஆனால் அவர் பெற்ற மகனோ தைரியமாய் ‘காண்டமை’ பாக்கெட்டில் வைத்து சுற்றி கொண்டிருக்கிறான். ம்… பாட்டி சொல்வது போல், கலிகாலம் இதானோ?’ என எண்ணியவள், விட்ட பணியைத் தொடர்ந்தாள்.