தூறல் போடும் நேரம் – 6

பகுதி – 6

சற்றே வளைந்த முதுகோடு, சுருங்கிய திருமுகத்திலும் சுடர் விடும் கண்களோடு, அந்த தளர்வான தேகத்திலும் தேஜஸ் நிறைந்து இருந்த அந்தப் பாட்டியை காண்பித்தவாறு, “இதான் எங்க அப்பத்தா… எங்க அப்பச்சிகள பெத்தெடுத்த நாச்சியா” எனக் கூறி, அவர் முகத்தை வழித்து, தன் நெற்றியில் கைகளை மடக்கி சொடக்கிட்டு திருஷ்டி கழித்தாள்.

“ஆமா, இவ தா என்னப் பெற்றவ… எங்க ஆத்தா…” எனப் பாசத்தோடு கூறி, அவளுக்கு அவரும் திருஷ்டி கழிக்க, “இதான் இந்த வீட்டுலயே பெரிய ஆயா… பார்த்தியா எங்க அப்பத்தாவே சொல்லிடுச்சு” எனச் சுந்தர் தான் அங்கு ஆஜரானான்.

அதில் ராதா சிரிக்க, ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் “இவுங்க எங்க ஆயா… எங்க அம்மோவோட அம்மா… அப்புறம் அவுங்க அயித்த… பக்கத்துல அம்மாமிண்டி” என தங்களின் அத்தையையும், தாய்மாமாவின் மனைவியையும் அவ்வாறு குறிப்பிடுவோம் என விளக்கி அவர்களை அறிமுகம் செய்தாள்.

பின் அத்தை மகள்களை “இதுங்க எல்லாம் அயித்தயாண்டிஸ்… பார்க்க தான் அமைதியா இருப்பாளுக…” என அவர்களின் முறைப்பைப் பெற்றவள், “ஆமா இவ தான் இங்க இருக்கிறதுலேயே அமைதியின் சொரூபம்” என வேலையாய் உள்ளே நுழைந்து விட்டு, வெளியே வந்த சுந்தரம் தான் அதை மொழிந்தான்.

“அண்ணமிண்டீ… அண்ணமிண்டீ…” எனச் சுந்தரத்தின் மனைவியை அவள் அழைக்க, “ஏய்… ஏன் அவள கூப்பிடுற, அவளே இன்னிக்கு தான் வந்திருக்கா… அதுக்குள்ள எங்களுக்குள்ள எதையும் பத்த வச்சிறாதா?” என ஓடியே விட்டான்.

இவ்வாறு அறிமுகப் படலம் நடக்கும் போதே “ஏண்டி குமரிகளா… இங்க நாங்க எல்லாம் குறுக்குடைய வேலப் பார்த்திட்டு இருக்கோம், நீங்க எல்லாம் நோகமா உக்கார்ந்து போன்ன நோண்டித்து இருக்கீகளா?” என அவளின் சொந்தப்பந்த பெண்மணி ஒருவர், வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த பித்தளை சாமானைத் துலக்கியப்படி அவளை அழைத்தார்.

“ஏண்டி உடையா… நீயாவது வாயேண்டி, கல்யாணம் பண்ணியும் இன்னும் கொண்டியாட்டமே ஆடிட்டு இருக்கா… உண்டது செரிக்கலன்னா இப்படி தான் அலைய சொல்லும்” என அவளின் அயித்தை குறைக் கூற, “இப்போ ஏன் ஐத்த இப்படி கூப்பாடு போடுறீங்க? உங்க நாச்சியாக்கு கல்யாணம்ன நீங்க… நாச்சியா பொண்ணுங்க தா வேலைப் பார்க்கணும். என் கல்யாணத்துக்கு எங்க அயித்தயாண்டில பார்க்கல. அதே போல உங்க அயித்தயாண்டிக்கு நீங்க தான் பார்க்கணும். என்னடி?” என அங்கிருந்த அவளின் தாய் மாமன் மற்றும் அத்தையின் பெண்களைக் கூட்டு சேர்த்தாள்.

இவளைப் பற்றி அறிந்திருந்த வள்ளியம்மை, “அவள கூப்பிடாதீக ஆயித்தயாண்டி. அவள வேல எல்லாமே, மதிப்பு மசால் வட… பிச்சு பார்த்தா ஊச வடயாட்டம் செய்வா” என எச்சரிக்கைச் செய்ய, அதையும் மீறி உதயாவின் அத்தை, “நீ சும்மா இரு வள்ளியம்ம, அதெப்படி ஊச வட ஆகுதுன்னு பார்ப்போம்.” என அவளை அமரவைத்து வெள்ளி பாத்திரங்களைக் கழுவி வைக்க சொன்னார்.

என்னவோ வீடு காலி செய்வது போல், மதிய விருந்துக்கு பின் எல்லா பெண்களும் வளவு பகுதியில் கூடி, பூட்டிய ஒரு அறையில் இருந்து வெள்ளி பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், பீங்கான் பொருட்கள் என எடுத்து வந்து சுத்தம் செய்ய வேண்டிய பொருட்களைத் தூசி தட்டி சுத்தம் செய்வதும், துலக்க வேண்டிய பாத்திரங்களைத் துலக்குவதுமாய் வேலையில் இறங்கினர்.

இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி, உதயாவுடன் வலம் வந்தாள் ராதா. அவளுக்கோ உதவ வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் அதற்கும் ஏதேனும் சாஸ்திர சம்பிரதாயம் இருக்குமோ என எண்ணி, மௌனத்துடன் வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

இப்பொழுது உதயாவை வேலைக்கு அழைக்கவும், தான் என்ன செய்வது என யோசித்து கொண்டு நிற்கையிலேயே “இந்தா… பொண்ணு… இங்க வா. நா கழுவி வச்ச ஜாமன்ன எல்லாம் தொடச்சு வை. இந்தா…” என ஒரு பருத்தி துணியையும், பாத்திரத்தையும் அவளிடம் நீட்டினார் ஒரு பெண்.

அதை வாங்க கை நீட்டும் போது, அவளின் தாவணியும் முன் பக்கமாய் விழ, அதை மொத்தமாய் எடுத்து தன் இடுப்பில் சொருகினாள். அதை ஒரு ஜோடி கண்கள் க்ளிக் செய்து கொண்டன.

குட்டி குட்டி சொம்புகளில் ஆரம்பித்து, பெரிய டேக்ஸா, பெரிய அண்டா என பித்தளை சாமான்களும், வெள்ளியில் குத்து விளக்கு தொடங்கி, கடல் சங்கு, தாம்பாளம், நார்பெட்டி போன்று ஒரு பாத்திரமும் வெள்ளியிலேயே இருக்க, எல்லாவற்றையும் பார்க்க பார்க்க வித்தியாசமாய் இருந்தது.

இவர்கள் வீட்டில் எல்லாம், வெள்ளியில் ஒரு விளக்கும், இவள் சிறுபிள்ளையாய் இருந்த போது, வாங்கிய குட்டி தட்டும், டம்ப்ளரும் தான் உள்ளது. ஆனால் இங்கோ விளக்கு போதாது என்று சந்தன கும்பா, பன்னீர் சொம்பு, பாலாடை என ஏதேதோ வெள்ளியில் இருந்தது.

மாலை மங்கியதும் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் தனி தனியே சாமான் பரப்பினர். அதற்கு முன், வேலை செய்த களைப்பு நீங்க தேநீரும், வெள்ளைப் பணியாரமும், கந்தரப்பமும், இனிப்பு சீயமும், தூள் பஜ்ஜியும் இடைவேளை பலகாரம் என்ற பெயரில் வழங்கப் பட்டது.

பொதுவாய் இந்த சாமான் பரப்புதல் எனும் முறை செட்டி வீட்டு திருமணத்தில், முதல் நாள் நடக்கும். ஆனால் அறுபதாம் கல்யாணத்தில் பரப்புவது இல்லை, இங்கு பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் இது நடந்தது.

பெண் வீட்டு சாமான்கள் மூன்று பிரிவாய் நிறைந்தும், மாப்பிள்ளை வீட்டு சாமான்கள் ஒற்றை பிரிவுடன் குறைந்தும் காணப்பட்டன. மேலும் இரு பக்கமும் தங்க நகைகளும், பெண்களின் துணிமணிகளும் இருந்தன.

இது எதுவும் அறியாத ராதா, அறிந்து கொள்ளும் முயற்சியாய் அதை தன் தோழியிடம் கேட்க, “அதுவா, பொண்ணு வீட்டுல, மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் சாமான் வைப்பாங்க. ரொம்ப பணக்காரங்கன்ன அவங்க பொண்ணுக்கும் தாங்க நகை துணிமணி, சீர்வரிசை சாமானும், பணமும் வைப்பாங்க” என அவள் விளக்கினாள்.

“என்ன பணமா?” என ராதா நெற்றி சுருக்க

“ஆமா, அதுக்கு பேர் ஸ்ரீதனப் பணம். இது பொண்ணுக்கு ஒரு பங்கும், மாமியாருக்கு ஒரு பங்கும் கொடுப்பாங்க. பொண்ணுக்கு கொடுக்குற பணத்தை, பொண்ணு-மாப்பிள்ளை பெயர்ல டெப்பாசிட் பண்ணிடுவாங்க”

“அப்போ பணமும் கொடுத்து, மாமியாருக்கு சாமான் வேற கொடுப்பீங்களா?” என ஐயப் பட்டாள்.

“ம்ம்ம்… எல்லாம் வீட்டுக்கு உபயோகப் படுற சாமான் தான். அந்தக் காலத்துல, கோலம் போட்ட அடுப்பு பானை, கோலக்கூட்டு, அலுமினிய பேசின், சம்படம், தாம்பாளம்னு கொடுப்போம். இப்போ அதுக்கு பதிலா காஸ் அடுப்பு வாங்கிக்கிறாங்க. இல்லாட்டி ரொக்கமா வாங்கிக்கிறாங்க”

“அப்புறம் மாப்பிள்ளைக்கு என்ன வைப்பீங்க?”

“மாப்பிள்ளைக்கு ட்ரெஸ், கோட் சூட், வாட்ச், சென்ட், டிவி, டேபிள் சேர், அலங்காரப் பொருள்ளு, சூட்கேஸ், செப்ப்லன்னு இப்படி அவங்களுக்கு தேவையான எல்லா பொருளும் வைப்போம்”

“அப்புறம் பொண்ணுக்கு வேற வைப்பீங்களா?”

“பொண்ணுக்கு தான் நெறைய வைப்பாங்க, ஏன்னா… இது அவங்க பொண்ணுக்குன்னு ஆசையா வைக்கிறது. வசதி இருந்தா… குண்டூசில இருந்து கப்பல் வர வைப்பாங்கன்னு எங்க அப்பத்தா சொல்லி கேட்டிருக்கேன்.

ஆனா இங்க எங்க சொந்தப் பந்தம் கல்யாணத்துக்கு போனப்போ தான், பொண்ணுக்கு வீடு, தோட்டம், நிலபுலம்லாம் சீர்வரிசையா கொடுக்கிறதப் பார்த்தேன்”

“எப்பா… ரொம்ப பணக்காரவங்களா இருப்பாங்க போலேயே. அதான் இங்க ஒவ்வொரு வீட பார்த்தாலே தெரியுதே. அது கூட புரியாம சொல்லிட்டு இருக்கேன்” என தன் தலையில் தட்டிக் கொண்டாள் ராதா. இப்போதும் ஒரு ஜோடி கண்கள் க்ளிக் செய்து கொண்டன.

“ம்ம்… வெள்ளக்காரன் வந்த காலத்திலேயே, எங்க பாட்டன் பூட்டன்லாம் பாஃரின் ரிட்டர்ன் பாய்ஸ்ஸா இருந்திருக்காங்க. அதான் பணம் புகுந்து விளையாடி இருக்கு.”

“ஓ… அப்போ கல்யாணம் பண்ணி திரும்ப போவாங்களா? வைப்பையும் கூட்டிட்டு போவாங்களா?” என ஐயமுற கேட்டாள்.

“அதெல்லாம் கூட்டிட்டு போக மாட்டாங்க. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் ஆண்கள் மட்டும் தான் போவாங்க. சில பேர் கல்யாணத்துக்கு பிறகு, சம்பாத்திச்சு கொண்டு வந்த பணத்த வட்டிக் கடை வச்சு பிழைப்பாங்க.

இதுக்கு கூட எங்க பெரிம்மா ஒரு பழமொழி சொல்லும். துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி ஒன்னு எட்டுத் துட்டுன்னு விற்றாலும் வட்டிக்கு ஈடாகுமா?ன்னு சொல்லும். அதவாது எந்த தொழில் செஞ்சாலும் வட்டி தொழிலுக்கு ஈடாகாது.

உக்கார்ந்த எடத்துலேயே துட்டு சம்பாரிப்பாங்கன்னு அத பெருமையா சொல்லுவாங்க.”

முதலில் அவள் சொன்ன பழமொழி ராதாவிற்கு புரியவில்லை, பின் மீண்டும் அவள் சொல்லக் கேட்டதும், அவள் மனதில் தோன்றிய முதல் வார்த்தை ‘அடப்பாவிங்களா!’

‘ஒரு சட்டியை எட்டு துட்டுக்கு விற்றாலே, கொள்ளை லாபம். ஆனால் அதையும் தாண்டி இவர்கள் இந்த தொழிலில் லாபம் ஈட்டியிருகின்றனர் என்றால், எவ்வளவு வட்டிக்கு விட்டிருப்பார்கள்’ என எண்ணும் போதே அவளுக்கு தலைச் சுற்றிற்று.

‘நல்லவேளை இது இப்போது நடைமுறையில் இல்லை’ என்று இளைப்பாறினாள். ஏனெனில் இவளும் வட்டிக்கு பணம் வாங்கி தான் தன் படிப்பினை முடித்தாள்.

“நீ என் கல்யாணத்துல பார்க்கலையே, கட்டில், பீரோல இருந்து குப்ப போடுற பிளாஸ்டிக் சாமான் வரைக்கும் எல்லாம் வச்சோம். அதே போல ட்ரெஸ், நகை செட். அதுவும் வீட்டுல இருக்கும் போது ஒரு செட், வெளிய போன வந்தா ஒரு செட்ன்னு… வைப்பாங்க. இது ஏன் சில பேர் வைர செட் கூட வைப்பாங்க” எனப் புருவத்தை ஏற்றி வியப்போடு கூறினாள்.

“இதெல்லாம் ஓகே, பின்ன மாப்பிள்ள வீட்டுலயும், சேலை, நகைன்னு வச்சிருக்காங்க. அது யாருக்கு?” என வினவினாள் ராதா.

“அதுவும் பொண்ணுக்கு தா மா. மாமியார் தன் மருமகளுக்கு வைக்கும் சாமான்கள். அதுக்கும் ஒரு கணக்கு இருக்கு. ஆறு பட்டுப்புடவை, பதினாறு சாதா புடவை, உள்ளாடை, நைட்டி, வளையல், மேக்கப் செட் வரை வைப்பாங்க. அப்படியே ஒரு செட் நகை, அதுல ஒரு நெக்லஸ் தோடு கண்டிப்பா இருக்கணும்.”

“ஓ… அதுனால தான் ஆன்ட்டிக்கு பவுடர், கண்மை, சாந்து டப்பா, ரிப்பன், குஞ்சலம்ல வச்சிருக்காங்களா”

“ம்ம்ம்… அந்தக் காலத்துல மேக்கப் செட்டுனா இதான. அதுனால தான் அத அப்படியே, அவுக ஆத்துக்காரரே போய் வாங்கிட்டு வந்திருக்கார். அதான் ஹை லைட் இன்னிக்கு” எனத் தன் பெரியப்பாவை பெருமையாய் கூறினாள்.

பொதுவாகவே, பெண்கள் வளரும் போது எப்படியோ, வளர்ந்த பின் திருமணம் ஆனவுடனோ அல்லது பக்குவப்பட்ட பின்னோ, தங்கள் தாய் தந்தை, இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கப் பட வேண்டும் என எண்ணுகின்றனர். அல்லது அவர்களின் அன்பை, காதலை, ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகள் வரவேற்கின்றனர். இதில் சில ஆண் பிள்ளைகளும் விதி விலக்காய் இருக்க தான் செய்கின்றனர்.

பின் மாப்பிள்ளை வீடு, பெண் பிள்ளை வீடு என வளவில் குழுமி இருந்த சொந்தப்பந்த பெண்களே இரு பிரிவுகளாய் பிரிந்து கொண்டனர். அதுவும் இளசுகள் எல்லாம் பெண் வீட்டின் சார்ப்பாய் நின்றனர். ஏனெனில் அங்கு தான் அதிக அளவில் இவர்களின் உதவியோடும், கலைநயத்தோடும் சாமான் அடுக்கி இருந்தனர்.

இதில் உதயா,ராதாவுடன் பெண் வீட்டினரோடு ஐக்கியம் ஆகி விட்டாள். “சரி, இப்போ நாட்டாமைகள் வரலாமா? எப்படி அடுக்கிருக்கீங்கன்னு பார்க்கலாமா?” எனத் தன் இரு மச்சான்களோடு, மீசையை நீவியப்படி அழகேசன் அங்கு வந்து சேர்ந்தான்.

இரு பக்கங்களையும் பார்த்து விட்டு, “என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டுல நெறைய சாமான் அடுக்கி இருந்தாலும், மாப்பிள்ளை வீடு தான் கொஞ்சம் உசத்தியா சாமான் எல்லாம் வச்சிருக்காங்க” என அவன் சொன்னதற்கும் காரணம் இருந்தது.

மாப்பிள்ளை வீட்டு சார்ப்பாய், வள்ளியம்மைக்கு அவரின் மாமியார் தன் பட்டுப்புடவைகளுள் இரண்டும், அவரின் வைர மூக்குத்தியும் பரிசாய் வைத்திருந்தார். மேலும் அருணாச்சலம், தன் மனைவிக்கு வாங்கிய புதிய அட்டிகையையும் சேர்த்து வைத்து பரப்பி வைத்திருந்தனர்.

“எங்க பக்கமும் பொண்ணுக்கு நெறைய வெயிட்டான பொருள்லா வச்சிருக்கோம். அதுக்காக மாப்பிள்ளைக்கு நாங்க என்ன காசு மாலையும், ஒட்டியாணமுமா வாங்கி வைக்க முடியும்” என உதயாவின் அத்தைப் பெண்ணொருத்தி இடித்துரைக்க, அங்கு சிரிப்பொலி சிதறியது.

“இருங்க… நீங்க சொல்றத காட்டிலும், மாப்பிள்ள வந்து சொல்லட்டும், எங்க சீர் போதுமா போதலையான்னு…” என்று சொல்லி விட்டு, “பெரிப்பா… பெரிப்பா…” என அங்கிருந்தே கூவ தொடங்கினாள் உதயா.

“ஏய் கத்தாத… இரு நான் போய் பெரிப்பாவ கூட்டிட்டு வர்றேன்” என உதயாவின் தமையன் அவளைக் காப்பாற்ற, “இது ஒரு பொல்லாப் பூடம்… எப்படி கத்துதுறான்னு பாரு” எனப் பெண்கள் கூடி இருக்கும் கூட்டத்தில், வீட்டிற்கு பெரியவரை கூவி அழைத்த அவளின் தவறை மூத்தப் பெண் ஒருவர், தன் முகவாய் கட்டையில் கை வைத்து, அவளை இடித்துரைத்தார்.

“உன் தங்கச்சிய உங்கம்மா திட்டுறதுல தப்பே இல்ல” என அழகேசன், சுந்தரத்திடம் கூறினான்.

அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே, சற்றே அவனை திரும்பி பார்த்தான் அழகேசன். அவனோ தலையை இடவலமாய் ஆட்டியதும் இல்லாமல், தன் சட்டைப் பாக்கெட்டையும் வேறு தடவி, கை விரித்து கொண்டிருந்தான்.

வழக்கம் போல் தன் துப்பறியும் மூளையைக் கசக்கிய அழகேசன், தனக்கல்லாமல் வேறு யாருக்கு இவன் பதில் அளிக்கிறான் என்று ஆராய்ந்ததில், அவன் தன் மனைவிக்கு தான், ஏதோ ஜாடை செய்து கொண்டிருந்தான் என்பதை அறிந்தான்.

அது வேறு ஒன்றுமில்லை, அங்கு வள்ளியம்மைக்கு வைத்திருந்த அட்டிகைப் போன்ற ஒன்று தனக்கு வேண்டும் என அவன் மனைவி கண் ஜாடையாய் கேட்க, அதே பாணியில், அதற்கு தன்னிடம் பணமில்லை எனக் கணவனான அவனும் சொல்லிக்கொண்டிருந்தான்.

இதற்கிடையே வளவிற்கு வந்த அருணாசலம், இரு மருங்கிலும் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து விட்டு, பெண் வீட்டில் தனக்காக வைக்கப்பட்டிருந்த நவீன ரேடியோ பெட்டியைப் பார்த்து விட்டு, அவர்கள் பக்கம் சாய்ந்தவர், பெண் வீட்டிற்கு சார்ப்பாய் தன் தீர்ப்பைக் கூறி விட்டார்.

“ஹே…ஏ…” என இளசு பெண்கள் கூவி, அருணாசலத்தை சுற்றி, பட்டாம் பூச்சிக்களைப் போல் ஒரு சுற்று சுற்றி விட்டனர்.

“ஹேய்… ரொம்ப கூவாதீங்க. நாட்டாமைக்கிட்ட இதுக்கு இடஞ்சுட்டி பொருள் விளக்கம், கேப்போம்” என அழகேசன் முன்னே வந்து அவரிடம் ‘ஏன்?’ என கேட்க, ‘தனக்கு பிடித்தமான ரேடியோ, அங்கு இருப்பதால் தான், அவர்களுக்கு தீர்ப்பு கூறினேன்’ என அவர் விளக்கவும்,

அதற்கு பொருளுரையாய், “கல்யாணம் ஆகாத பொண்ணுங்களா… மாமா சொன்னத கேட்டீங்களா? பார்த்து பார்த்து வாங்குற காஸ்ட்லியான பொருள விட, புருஷனுக்கு பிடிச்ச மாதிரி பொருள வாங்கினா தான் அவங்களுக்கு பிடிக்கும்ங்கிறதபுரிஞ்சுக்கோங்க” என அழகேசன் ஆற்றி முடித்தான்.

“சரி… இத எங்களுக்கு சொல்றீகளா? இல்ல உம்ம பொண்டாட்டிக்கு சொல்றீகளா?” என ஒருத்தி கோர்த்து விட, ‘அதான… அவளே சும்மா இருந்தாலும், இவளுக சொரிஞ்சு விடாம போ மாட்டாளுகளே’ என எண்ணியவன், “நா… பொதுவா தான் சொன்னேன்” என மெதுவாய் சொன்னவன், “அம்மாடி… ஆள விடுங்க சாமி” என முனுமுனுத்தப்படியே அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.

“ஹெலோ… லேடிஸ்… இப்போவும் நாங்க தான் ஜெயிச்சோம். ஏன்னா அந்த ரேடியோவே என் தம்பி தான் வாங்கிட்டு வந்தான்” என கெத்தாய் சொல்லி, “அத ஞாபகமா இங்க வச்சு, மறக்காம கரெக்டா அடுக்குனோம்ல. அங்க தான் நாங்க இருக்கோம்” என அவனும் மொக்கை வாங்கினான்.

ஆனால் அவன் சொல்லிய சேதியில், ‘ஓ… பெரியம்மா பெரியப்பா மீதும் பாசமானவனாய் தான் இருக்கிறான் போலும். பெரிதாய் ஒன்றும் மோசம் இல்லை போலும்’ எனப் பாவையவள் நெஞ்சில், பதியம் போட்டான்.

ஆனால் அவனோ அவர்கள் மீது மட்டுமல்ல, அவள் மீதும் பாசத்தைக் கொட்ட தயாராய் தான் இருக்கிறான் என்பதை அவளுக்கு தெளிவு படுத்தினான்.

“ஒய் சோ சேட் — ஏஞ்சல்?” என்று இரவை தொட்டப் பின் வந்த குறுந்தகவலில் சற்றே குழம்பியவள், “ஹூஸ் திஸ்?” என அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்த நொடியில், “ஆம் ராம்” என அனுப்பியவனே தன்னை யார் என வெளிப்படுத்திக் கொண்டான்.

 

மீண்டும் தூறும்…