தூறல் போடும் நேரம் – 8

பகுதி – 8

“ஏன் உனக்கு குடும்பம் இல்லையா?” என ராம் கேட்ட கேள்வியிலேயே, அவளின் மூளை மாட்டிக் கொண்டது.

பின் தேய்ந்து போன ஒலி நாடா போல், அந்தக் கேள்வியே அவள் மூளையைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் தொடர்ச்சியாய், அவள் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகள் என அனைத்தும் அவளைச் சுற்றி ஆட்டம் போட்டது.

சிறிது நேரம் அதில் தோய்ந்து போய் தளர்ந்தவள், தன் கவனத்தைக் கஷ்டப்பட்டுப் பாடல்கள் மீது திணித்தாள். இரண்டு மணி நேரமாய் இசைத்தப் பாடல்கள் கூட அவளுக்கு சாமரம் வீசவில்லை போலும். கண்கள் மூடியும் விழித்திருந்தாள் அவள்.

புழுக்கமாய் உணர்ந்ததனால், காற்றாட வெளியே நிற்கலாம் என முடிவு செய்தாள். நேற்று போல் மாடியேறவில்லை, அங்கு யாரேனும் இருந்தால் ‘எதற்கு வம்பு’ என்று நேற்றைய அனுபவம் யோசிக்க வைத்து, தடுத்தது.

அதனால் அறையை விட்டு வெளியே வந்து, தாழ்வாரத்தின் கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்து நின்றாள். சிறிது நேரம் சென்ற பின், திரும்பி நின்று கீழே தெரியும் அந்த முற்றத்தை வேடிக்கைப் பார்க்கலானாள்.

இங்கு மேலே உள்ள அறைகள் போன்றே, கீழேயும் இருந்தன அறைகள். அதுவும் சரியாய், மேலிருக்கும் அறைகளின் வாயிலுக்கு நேரே வாயில், சாளரத்தின் நேரே சாளரமும் அச்சு பிசகாமல் சீராய் கட்டியிருந்தார்கள்.

மேலும் நிலைப்படிக்கு கீழே இரட்டைக் கதவுகள். இவர்கள் வீட்டிலும் இரட்டைக் கதவு தான். வேலை நிமித்தமாய் இப்பொழுது இருக்கும், வீட்டின் ஒற்றை கதவைப் பார்க்கும் போதெல்லாம், இரட்டைக் கதவு தான் நல்லது என அங்கலாய்க்கும் பாட்டியின் நினைவு வந்தது.

எவ்வளவு சிறிய நிலைப்படியாக இருந்தாலும், அப்பொழுதெல்லாம் இரண்டு கதவுகள் தான் போடுவார்கள். ஏன் இரும்பு கதவு என்றாலும் கூட இரட்டைக் கதவாய் தான் இருக்கும்.

ஆதி காலத்திலும் சரி, அந்தக் காலத்திலும் சரி, எல்லோரது வீட்டிலும் இரட்டைக் கதவு தான் போட்டிருப்பார்கள். ஏன் நம் புராதன கோவில்களிலும் கூட இரட்டைக் கதவு தானே! இதில் ஏதோ தாத்பரியம் உள்ளது போலும்.

யாரோ கொல்லைப்புறக் கதவைத் திறக்கும் ஓசைக் கேட்டு, தன்னை மீட்டுக் கொண்டவள், அறையின் பக்கம் உள்ள சுவற்றோரமாய், சற்றே மறைவாய் நின்று கொண்டாள்.

அவள் நிற்பதைப் பார்த்தால், என்ன ஏது என்று கேள்வி வரும், அதுவும் ஆட்கள் கூடி இருக்கும் இந்த நேரத்தில், தேவையில்லாத ஒரு சச்சரவு என எச்சரிக்கையான எண்ணம் தான்.

இரவு, அவளுக்கு பல வித்தைகளையும் கற்று கொடுத்திருக்கிறது, பல மனிதர்களின் பசுதோல்களையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

கீழே வளவு பகுதியில், சமையல் செய்யும் ஆட்கள் உறங்கிக் கொண்டிருப்பது தெரிய, ‘இவர்களுக்கு மட்டும் எப்படி தான் உறக்கம் வருமோ? எங்கு சென்றாலும் சரி, எந்த இடமானாலும் சரி, சட்டென உறங்கி விடுகிறார்கள். எப்படி தான் இப்படி உறங்குவார்களோ?’ என எண்ணி வியந்தாள்.

ஆனால், மறுநொடியே ‘பாவம், வேலை செய்த களைப்பு, அவர்களையறியாமல் உறக்கம் வருகிறது போலும். ஒரு வேளை, அவர்களைப் போல் அண்டா குண்டா தூக்கி, உடலை வருத்தி வேலை செய்தால், நன்றாக உறக்கம் வருமோ?’ எனச் சிந்தித்த தன் நெற்றியை தட்டியவள், ‘நமக்கு தான் சமைக்கவே வராதே… சமையலறைக்குள் சென்றாலே, “நீ சமைக்கிறேன்னு சொன்னாலே, எனக்கு தாண்டி மா… மண்டையடியா இருக்கு” எனத் தன் சமையல் பராக்கிரமங்களைப் பார்த்து பொருமும் பாட்டியை’ எண்ணி நகைத்து கொண்டாள்.

‘பாவம் பாட்டி, ஒவ்வாதவர்களின் வீட்டில், எப்படி ஒட்டிக் கொண்டு இருக்கிறதோ?’ என அவள் பாட்டியைப் பற்றி நினைத்ததனால், பாட்டிக்காகவே விரைவில் கிளம்ப வேண்டும் என முடிவு செய்தாள்.

கண்களை மூடினாலே, அவளின் முகமே அவனுள் வந்து வந்து சென்றது. காலையில் அவளைத் தாவணியில் கண்டதில் இருந்து, ராமின் உள்ளம் தறிகெட்டுச் சுற்றியது. அதற்கு தீவனம் கொடுப்பது போல், அடிக்கடி அவள் தாவணியை இடுப்பில் சொருகும் காட்சியும் வந்து இம்சித்தது.

இவன் பார்க்கும் போதெல்லாம், அவள் எதார்த்தமாய் சொருகினாளோ? இல்லை அவள் இடுப்பில் சொருகும் நேரம் பார்த்து, இவன் கண்டானோ? மொத்தத்தில் இவனுக்கு தான் அம்பினால் சொருகிக் கொண்டது போல் இருந்தது.

இனி தான் தெரியும், அது காதல் அம்பா… அல்லது வம்பா… என்று. இப்படியே அவளை எண்ணி இவன் உறங்கி விட்டான். நித்திரையின் நடுவே, விக்கல் வந்து விழிப்பு தட்ட, மேஜை மீதிருந்த குவளையிலுள்ள நீரை எடுத்து பருகினான்.

ஏனோ அவனும் புழுக்கமாய் உணர, சாளரத்தின் கதவினை சற்றே விசாலமாய் திறந்தான்.

திறந்தவன், உறைந்து போனான். “வாவ்… இவ்வளவு வெளிச்சமா! ஓ! இரண்டொரு நாளில் பௌர்ணமி நெருங்குகிறதோ.”

உறைந்தவன், சற்றே தெளிந்து, பௌர்ணமியாகப் போகும் நிலவினை, இங்கும் அங்கும் அசைந்து மேலே எட்டிப் பார்த்தான்.

அப்படி பார்த்தவனின் கண்ணில் நிலா கிடைத்ததோ இல்லையோ, அந்த நிலவொளியில் குளித்து கொண்டிருந்த நிலமகள் தான் கிடைத்தாள்.

அதுவும் நிலவொளியில் தகதகத்த அவளின் வதனம் ஓர் அழகு என்றால், அவள் அந்த வதனத்தில் சிரிப்பை வரவழைத்து, தலை சாய்த்து தட்டிக் கொண்ட விதம் அழகோ அழகு என அவளுள் அவன் மிதந்து கொண்டிருந்தான்.

தன்னை ஒருவன் கவனிப்பதை அறியாமல், தன் போக்கில் எதை எதையோ சிந்தித்தவள், கால் வலிப்பது போல் உணரவும் தான், தன் அறைக்கு திரும்ப எண்ணினாள்.

அவ்வாறு திரும்பும் போது தான், ஏதோ உள்ளுணர்வு உந்தவும், அறையின் பக்கம் திரும்பியவள் சட்டென மீண்டும் பலகணி பக்கம் திரும்பி உன்னிப்பாய் பார்த்தாள்.

அதில் சட்டென திடுக்கிட்டு, அருகில் இருந்த மேஜை மீதிருந்த குவளையை உருட்டி விட்டு விட்டான். அந்தச் சத்தத்தில் அவள் திடுக்கிட்டு, வந்த சுவடு தெரியாமல், அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டாள்.

இருட்டுக்கே உண்டான பயத்தோடும், அவள் அப்படி திரும்புவாள் என எதிர்பாராததாலும், திகைத்து போனான் ராம். வேகமாய் துடித்த தன் இதயத்தை சற்று கைகளால் நெஞ்சு பகுதியை அழுத்தி, ஆசுவாசப்பட்டப் படி, தன் கைப்பேசியை எடுத்தான்.

பார்த்தவன், திகைத்து போனான். ஏனெனில் மணி ஒன்று நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘என்ன இவள் அர்த்த ராத்திரியில், இப்படி பேய் போல் விழித்து கொண்டிருக்கிறாள்? ஒரு வேளை பேய் தானோ?’ என தெளிவில்லாத உதறல் எடுக்க ஆரம்பித்தது.

‘அவளாக சிரிக்கிறாள், அவளாக தலையில் அடித்து கொள்கிறாள், திடீர் திடீர் என திரும்புகிறாள்’ என அவனின் உதறல், அவளுக்கு பேய் உருவத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

பாவம், அவள் ஒரு தடவை தான் திரும்பினாள், ஆனால் அவனின் பயம் அதைப் பெருக்க ஆரம்பித்தது. காலையில் கனவு தேவதையாய் தெரிந்தவள், இரவில் சாதாரணப் பெண் என்ற நிலையில் இருந்து இறங்கி, மோசமாய் ஒரு பேயாய் மாறி போனாள்.

அறைக்குள் சென்ற ராதாவோ கண்கள் தானாய் சொருக, நித்திரைக் கொள்ள ஆரம்பித்தாள். அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும், சமையல்காரர்கள் தங்கள் பணிகளை அதி…அதி… காலையிலே, மூன்று மணி அளவில், வெங்காயம், தக்காளி என உணவுக்கு தேவையான காய்கறிகளை நீரில் அலசி, அரிய தொடங்கி இருந்தனர்.

அவர்கள் குழாய் நீரை திறந்து விட்டு, பாத்திரங்களை உருட்டியதிலேயே ராதா எழுந்து விட்டாள். விழித்தவள், அந்த இருட்டில் வெளியேறாமல், படுத்தவாறே சில மணி துளிகளை கரைய விட்டாள்.

பின் நான்கு மணியளவில் ஒவ்வொருவராக எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளிக்க தொடங்க என எல்லோரும் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாயினர். ராதாவும் எழுந்து கொண்டாள்.

தாவணியில் கண்ட தேவதை, தேவலோகத்து கன்னியாய் பட்டுச் சேலையில், மாடியில் இருந்து இறங்கியவளைக் கண்ட ராம், மெய் மறந்து தான் போனான்.

“ஏலே… அரசு… ஏலே… உண்ணும் போது எங்க பார்க்க, சீக்கிரம் உண்ணுட்டு எழு. வேல கிடக்கு” என அவனின் அயித்தை விரட்டினார்.

“ராதா… வா… சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பனும்” என உமையாள் அவளுக்கு ஒரு இலை போட்டு பரிமாற ஆரம்பித்தாள்.

இவள் வந்து அமர்வதற்கும், எதிர்பக்கத்தில் அவன் எழுந்து செல்வதற்கும் சரியாய் இருந்த போதிலும், கண்களை விரித்து, இரு புருவங்களையும் ஒருங்கே மேலேற்றி அவளின் அழகை ஆராதித்து விட்டே சென்றான்.

மேலும், “வாவ்… யூ ஆர் லுக்கிங் ஜார்ஜியஸ்” எனச் சிலாகித்து குறுந்தகவல் ஒன்றை தட்டினான்.

அவளது அழகின் அளவைப் பற்றி அவளுக்கு தெரியும் என்பதால், அவனின் அளவீடுகளைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

அவள் தன் குறுந்தகவலைக் கண்டும், பதில் அளிக்காமல் இருக்கவும், அவள் உண்ணும் பகுதிக்கு எதிரே இருந்த முற்றத்தைத் தாண்டிய வளவின் அடுத்த பக்கம், அவளுக்கு நேரெதிரே அவன் நின்றிருந்தான்.

அவள் நிமிரும் சமயம் பார்த்து ஏன் பதில் அளிக்கவில்லை என்ற தோரணையில் புருவம் உயர்த்தி, அலைப்பேசியை காட்டி நிதானமாய் கேட்டான்.

அவளோ ஓரக்கண்ணால் ஓரஞ்சாரம் பார்த்து விட்டு, அசட்டையாய் இதழ்களை ஒரு பக்கமாய் இழுத்து விட்டாள்.

மீண்டும் அவன் ஏதோ தட்டச்சு செய்து தட்டி விட, அதைப் பார்த்தவளின் கண்கள் ஸ்தம்பிக்க, வாயில் இருந்த உணவோ கீழே தொண்டைக்குள் செல்லாமல், மேலே மூக்குக்குள் சென்று அவளுக்கு புரையேறியது.

அவளின் இருமலில் பரிமாறிக் கொண்டிருந்த பெண்கள் அருகே வந்து நீரைக் கொடுக்க, பக்கத்தில் இருந்த உமையாளோ “என்னாச்சு ராதா… மெல்ல மெல்ல…” என அவளின் தலையை தட்டி விட்டாள்.

“யாரோ உன்ன நினைக்கிறாங்க போல…” என சுந்தரத்தின் மனைவி அனிதா கூற, அவள் சட்டென எதிரே நின்றவனைப் பார்க்க, அவனோ, தன் மீது சுட்டு விரல் வைத்து, பின் அவளை நோக்கி திருப்பி, மீண்டும் அதை தன் நெற்றி பொட்டில் வைத்து ‘நான் தான் உன்னை நினைத்தேன்’ என்பது போல் செய்கை செய்திருந்தான்.

“ஆமா, அவங்க பாட்டி தான் நினைச்சிட்டு இருப்பாங்க.” என உதயா விளக்கம் அளித்தாள்.

ஆனால் ராமின் செய்கையைக் கண்டவள், ‘பாட்டியை தாண்டியும் நம்மை நினைக்க ஒருவன் இருக்கிறானா?’ என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு நகைச்சுவையாய் தோன்றியது.

அதற்கு காரணம் ‘இதெல்லாம் ஒரு பேன்டஸி…’ என அவள் நம்பினாள்.

இரவு தோன்றிய கருப்பு எண்ணங்கள் எல்லாம் அவளை பட்டு வர்ணத்தில் கண்டதுமே ராமிற்கு வண்ணமயமாய் மாறியிருந்தன.

அதனால் தான் துணிந்து அவளுடன் கதைக்க ஆரம்பித்தான். அவளோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவும்,  சில சமயம் தன்னையே விழுங்கும் மீனாகாவும் அவள் இருப்பதனால், அவளுடன் வம்பு வளர்க்க அவன் அதிகம் பிரியப்பட்டான்.

ஆதலால் தான் இப்பொழுது கூட, அவள் அழகாய் இருக்கிறாள் எனப் பலவிதமாய் கூறியும் பதிலுக்கு ஒரு நன்றி கூட உரைக்காதவளை “யூ வானா ட்ரை மீ” எனக் கேட்டு வம்பிழுத்திருந்தான்.

“இல்ல உதயா… உன் ப்ரண்ட், போன்ல எதையோ பார்த்ததால தான், இப்படி புரையேறிருச்சு” என மாட்டி விட்டான்.

தண்ணீர் குடித்து கொண்டிருந்தவளுக்கு, அவன் கூறியதில் மேலும் புரையேறியது. “அப்படி என்ன பார்த்த? கொடு பார்ப்போம்” என உதயா அவளின் அலைப்பேசியை பிடுங்க, ராதாவின் கண்கள் பிதுங்க…

“ஏய்… விடுடி, சாப்பிடும் போது என்ன போன்ன நோண்ட வேண்டியதிருக்கு” என இருவருக்கும் பொதுவாய் உமையம்மை பிடுங்கி, தன் இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

திக் திக் நிமிடங்கள் என கேள்விப்பட்டிருக்கிறாள், ஆனால் அதை உணர்ந்த படி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ராதா. எப்பொழுதுமே உணவை ரசித்து உண்பவள், ஆனால் இன்றைக்கு இல்லை இல்லை இப்போதிருந்த மனநிலையில் பேருக்கு சாப்பிட்டு, மறு சாப்பாடு கூட வாங்காமல் எழுந்து விட்டாள்.

கைக் கழுவி விட்டு, கைப்பேசியைக் கைப்பற்றும் வரை அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது.

அலைப்பேசியை வாங்கிய பின், “இனிமேல் இப்படி செய்தால், நடக்கும் விபரீதத்திற்கு நான் பொறுப்பல்ல” என பொறுப்பு துறப்பு செய்தாள்.

அதன் பின் அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதனால் சற்று ஆசுவாசப்படும் போது தான், அவளின் தலை வலிப்பதை போல் உணர்ந்தாள்.

அதனால் அப்படியே அமர்ந்து விட்டாள். எல்லோரும் கிளம்பும் அவசரத்தில் இருந்ததால், அவளை யாரும் அவதானிக்கவில்லை.

இப்படியாக எல்லோரும் கிளம்பி விட, பொண்ணும் மாப்பிளையும் அவர்களுக்கு துணையாய் உமையம்மை மற்றும் அவரது பிள்ளைகள் மட்டும் மீதம் இருந்த நிலையில், இறுதியில் கிளம்ப எத்தனிக்கும் போது தான் ராம் கேட்டான்.

“ஆமா உன் பிரண்டு எங்க? முன்னாடியே போயிட்டாங்களா? ஆனா ரெண்டு வேன்லையும் அவங்க ஏறலையே…” என அவன் ஒவ்வொரு வண்டியாய் எல்லோரையும் அனுப்பும் போது கூட அவளைப் பார்த்தது போல் தெரியவில்லையே என்ற ஐயத்தில் தான் கேட்டான்.

“ஏன் அவ உமையா கூட வேன்ல போகலையா? நான் மாடில இருந்து நேரா இங்க வந்துட்டேன். இரு நான் உள்ள போய் பாத்திட்டு வரேன்” என உள்ளே சென்றவள், இரண்டாம் கட்டு வளவு பகுதியில் தேட, அங்கே ஒரு தூண் ஓரமாய் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ராதா. எல்லோரும் அவள் தன் தோழியுடன் வருவாள் என அவளைக் கிளப்பவில்லை.

“ராதா… ஏய் ராதா…” என அழைத்துக் கொண்டே சென்றவள், ராதாவை நெருங்கவும் தான், அவள் அமர்ந்தவாறே உறங்கி போயிருப்பது தெரிந்தது.

தோள் தொட்டு அவளைத் தட்டியவள், “என்ன ராதா அதுக்குள்ள தூங்கிட்ட, வெள்ளன்னே எழுந்ததால, தூக்கம் வருதா? சரி வா, சீக்கிரம்… அங்க எல்லோரும் கிளம்பிட்டாக, உனக்காக தான் வெயிட்டிங். கோவிலுக்கு போயிட்டு வந்து தூங்கிக்கலாம்” என வரிசையாய் அடுக்கிக் கொண்டே சென்றவள் தன் தோழியின் நிலையை உணராமல், முன்னே அவசரமாய் செல்லத் தொடங்கியிருந்தாள்.

ராதாவும் சூழ்நிலைக் கருதி, அவளும் நிதானிக்கக் கூட இல்லாமல், உதயாவை பின் தொடர்ந்தாள். வெளியே சூரிய வெளிச்சத்திற்கு வரவும், சட்டென தலை அதிகமாய் வலிப்பது போல் உணர்ந்தவள், வண்டியில் ஏறுபவர்கள் எல்லாம் மங்கலாய்… தேய்ந்து… அவளை விட்டு வெகு தூரமாய் செல்ல… அப்படியே மயங்கி சரிந்தாள் ராதா.

ராதா வந்ததில் இருந்து, அவளை நோட்டமிட்ட ராம், அவளின் அசாதாரணப் போக்கு சற்றே வித்தியாசமாய் பட்டது. ‘ஏன்? என்னாயிற்று இவளுக்கு? நாம் சற்று அதிகப்படியாய் பேசி விட்டோமோ?’ என எண்ணியவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு விடலாம் என அவள் தன்னைப் பார்க்கும் நொடிக்காகக் காத்திருக்க தொடங்கினான்.

அதனால் அவள் மயக்கமுற்றதை முதலில் அவன் கவனித்து, மண்ணில் அவள் விழுவதற்குள் கைத் தாங்கினான். இருவரையும் கவனித்த மற்றவர்கள் அருகில் ஓடி வர, உதயாவும் அவனுக்கு உதவினாள்.

அங்கிருந்த வாசல் படியில் அவளை அமரவைக்க, ஓட்டுனர் தன்னிடம் இருந்த தண்ணீரை தர, அதை அவள் முகத்தில் அடித்து தெளிவிக்க, ஆயினும் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை.

‘என்ன இது கிளம்பும் போது இப்படியாயிற்றே. அங்கு கோவிலில் எல்லோரும் நம்மைத் தேடுவார்களே’ எனப் பதற்றம் தொற்றிக் கொண்டாலும், கணவன் முன் எதையும் கூறவில்லை வள்ளியம்மை.

அருணாச்சலமே, “அரசு… நீ பக்கத்துல இருக்க நம்ம டாக்டரம்மா வீட்டுக்கு, கூட்டிட்டு போயிட்டு வந்திருப்பா” எனக் கட்டளையிட்டவர், “அப்படியே தோது பார்த்திட்டு, சூதானமா அந்தப் பிள்ளைய… முடிஞ்சா கூட்டிட்டு வா, இல்ல வீட்ல விட்டுட்டு, நேரா கோவிலுக்கு வெரசா வந்திடு”

“ஏறுங்க… எல்லோரும் கிளம்பலாம். நான் ஆட்டோக்கு சொல்லி விடுறேன். உதயா நம்ம டாக்டரம்மா ஆசுபத்திரி போறதுக்குள்ள போன் போட்டு, நிப்பாட்டி வை” என எல்லோருக்கும் கட்டளை பிறப்பித்தார்.

அவர்கள் சென்ற பின், இருபது நிமிடம் கழித்து ராம் மற்றும் ராதா கோவில் வந்து சேர, அங்கு இரண்டாம் பூஜை நடந்து கொண்டிருந்தது. அதாவது யாகம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

அறுபதாம் கல்யாணத்தில் மூன்று பூஜைகள் செய்வது வழக்கம், முதலில் கலசத்திற்கு மந்திரம் ஓதுவது, இரண்டாவது யாகம் வளர்ப்பது, மூன்றாவது திருமணம் நடக்க இருக்கும் பெரியவர்களுக்கு கலச நீர் ஊற்றுவர், இதனை அபிஷேகம் எனக் குறிப்பிடுவர்.

இங்கும், வள்ளியம்மையின் உடன் பிறந்த சகோதரர்கள் தான் முறை தட்டு வைக்க வேண்டும், தேங்காய், பழம், இனிப்பு என ஏதாவது ஒரு வகை வைக்கலாம். பின் அவர்களின் பெண் பிள்ளைகளும் வைக்கலாம்.

உதயா, உமையா மற்றும் அவர்களின் அயித்தைகளோடு சேர்ந்து தேங்காய், மாதுளம், ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, வெற்றிலை பாக்கு, கற்கண்டு என மொத்தம் ஏழு தட்டு வைத்திருந்தார்கள்.

பதினாறு கலசங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் பூஜை முடித்து, யாகம் வளர்த்து, வள்ளியம்மையின் அண்ணனும், அண்ணமிண்டியும் மணமக்களுக்கு மாலை சாற்றினர்.

அப்போது சரியாய், ராம் மற்றும் ராதா வர, வள்ளியம்மை சற்றே நிம்மதியடைந்தார். ஏனெனில், அவரின் இளைய அரசு இல்லாமல் எங்கே திருமணம் முடிந்து விடுமோ என்ற அச்சம் தான்.

நல்லவேளையாக அவர்களும் வர, இருவருக்கும் இரண்டு கலசங்கள் அய்யரால் வழங்கப்பட்டது. “வாங்கோ… எல்லோரும் கலசத்த கைல எடுத்திட்டு வாங்கோ” என கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து சென்றார்.

மணமக்கள் தலைக்கு மேல், சல்லடை வைத்து, அதில் கலச நீரை ஊற்றினர். முதலில் உமையாவின் மாமா மற்றும் அத்தை தொடங்கி, உமையம்மை – வெங்கடாசலம், உமையாள், உதயா, சுந்தரம் என அவரவர் தங்கள் துணையுடன் தம்பதி சமேதராய் அனைவரும் மணமக்களுக்கு அபிஷேகம் நடத்தினர்.

அப்படியே தம்பதிகளோடு தம்பதிகளாய் ராம் மற்றும் ராதாவையும் தம்பதிகள் என எண்ணி அய்யர் இருவரையும் ஒருங்கே அபிஷேகம் செய்ய வைத்து விட்டார்.

பின்னர் அண்ணன் எடுத்து கொடுத்த புது புடவையை, மணமகள் உடுத்தி வர, மணமகன் புது பட்டுச் சட்டை, பட்டு வேஷ்டி உடுத்தி தயாராய் இருந்தார்.

மந்திர வேதங்கள் ஒலிக்க, நாதஸ்வரம் இசை முழங்க, சுவாமி சந்நிதியில், அண்ணன் தங்கைக்கு செய்து கொடுத்த பொன் தாலியை அய்யர் எடுத்து மணமகனிடம் கொடுக்க, அதை முதலில் சாமியிடம் காண்பித்து விட்டு, மணமகளுக்கு திருப்பூட்டு பூட்டினார்.

எல்லோரும் அட்சதைத் தூவி, மணமக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினர். எத்தனைப் பேருக்கு இந்த பாக்கியம் கிட்டும்?

பொதுவில், மணமக்களை ஆசிர்வதிப்பதற்கு தான் திருமணத்திற்கு செல்வார்கள், ஆனால் இந்த அறுபதாம் திருமணத்தில் மட்டும் தான் மணமக்களிடம் ஆசி பெற செல்வார்கள்.

மேலும், சொந்தப்பந்தம் மட்டுமல்லாது, கோவிலுக்கு வாருவோர் போவோர் என யாவரும் மணமக்களிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் பெறுவது தான், தனி சிறப்பு.

 

தூறல் தூறும்…