தூறல் போடும் நேரம் – 9

பகுதி – 9

இனிதே திருமணம் முடிந்த திருப்தியில், இனிமையாய் எல்லோரும் வீடு திரும்பியிருந்தனர். இத்தனை வருடங்களாய் நல்லறமாய் இல்லறம் கண்ட தம்பதிகளை முதலில் அமர வைத்து பந்தி பரிமாறினர்.

ஏனெனில் அவர்கள் இருவரும் காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை, அன்றைய தினம் திருமணம் நடந்த பின் தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்று அய்யரால் சொல்லி விடப் பட்டிருந்தது.

மேலும் அக்கம்பக்கதினர், மணமக்களைக் காண வரிசையாய் வந்து கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு மதிய உணவை முதலில் பரிமாறி விட்டு, பின் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இதை இங்கு சொல்லியே தான் ஆகவேண்டும், ஏனெனில் திருமணம் வரை வந்து விட்டு, நகரத்தாரின் பந்தி போஜன முறையைப் பற்றி சொல்லாவிட்டால் அது சாமி குத்தம் ஆகிவிடும்.

பால் பணியாரம், இனிப்புச் சீயம், மால்பூ, கவுனரிசி அல்வா என இனிப்பு பதார்த்தங்கள் ஒரு வரிசையும், பருப்பு, தக்காளிக் குழம்பு, முருங்கை கத்திரி சாம்பார், பீன்ஸ் இளங்குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், மோர் என குழம்பு வகைகள், வரிசைக் கட்டி வந்தன.

மேலும், சௌசௌ கூட்டு, உருளை சிப்ஸ், அப்பளம், கொத்துக்கடலை மண்டி, இங்கிலிஷ் காய்கறி பிரட்டல், ஊறுகாய் என வெஞ்சனமும் குழம்புகளுக்கு உகந்ததாய் இருந்தது ஒரு அழகு தான்.

அது எப்படி உகந்தது என நாம் யோசிக்கும் வேளையில், ராமிற்கு எதிராய் ராதா அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள். இல்லை இல்லை ராதாவிற்கு எதிராய் சரியாய், இடம் பிடித்து ராம் தான் அமர்ந்திருந்தான். மேலும் அவள் உண்ணும் அழகை ரசித்து அல்ல, வியந்து கொண்டிருந்தான்.

ஏனெனில், குழம்புகளுக்கு உகந்ததாய் வெஞ்சனம் இருந்தது என்று கூறிய இலக்கணத்திற்கு ஏற்ப, ராதா தனக்கு இட்ட சாதத்தில் நெய்யுடன் பருப்பை பிசைந்து, அப்பளத்தை உடைத்து உண்டாள்.

தக்காளிக் குழம்பிற்கு ஏதுவாய் சௌசௌ கூட்டும், சாம்பாருக்கு பொருத்தமாய் உருளை சிப்சையும் வைத்து உண்டாள்.

புது வகை குழம்பான பீன்ஸ் இளங்குழம்பிற்கு கொத்துக்கடலை மண்டியும், வத்தக்குழம்புக்கு காய்கறி பிரட்டலையும் போட்டு பிசைந்து உண்டாள். இறுதியாய் மோருக்கு ஊறுகாயைத் தொட்டு, சாப்பாடும்-வெஞ்சனமும் என்ற இலக்கணத்திற்கு அழகாய் அணி செய்திருந்தாள்.

உணவை முடித்த ராதா கைக் கழுவ எழுந்து விட்டாள். ஆனால், இன்னும் சாம்பார் சாதத்திலேயே தேங்கியிருந்தான் ராம். அவள் எழுந்து சென்ற பின்னும், அவளின் வெற்றிடத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

காலையில் மருத்துவரிடம் சென்ற போது முடியாமல் மயங்கி இருந்தவளா இவள்? என எண்ணுமளவிற்கு சுறுசுறுப்பாய் இருந்தாள் ராதா.

மருத்துவரின் வீட்டில், ராதாவை பரிசோதித்த டாக்டரம்மா, “வா ராமு, எப்படி இருக்க? நல்லா இருக்கியா?” என மயங்கியவளை விட்டு விட்டு இவனை நலம் விசாரித்து, அவர்களின் குடும்ப மருத்துவர் என்பதை நிரூபித்தார்.

“நல்லா இருக்கேன் டாக்டர்”

“பொண்ணு யாரு? சொந்தமா? என்னாச்சு?” என உரிமையாய் விசாரித்தப்படியே அவளின் உடல் நிலையையும் சோதிக்க ஆரம்பித்தார்.

“இல்ல டாக்டர், உடையா பிரெண்ட்… திடீர்னு மயக்கம் போட்டுட்டாங்க”

“ஓ! காலைல சாப்பிட்டாங்களா?” எனப் பற்றிய அவள் நாடியை விடுத்து, அவளின் ரத்த அழுத்தத்தைப் பார்க்கத் தொடங்கினார்.

“சாப்பிட்டாங்க” எனப் பதில் சொல்லும் மாணவனாய் ராம்.

“ம்ம்ம்…” என இம்மியப்படி, ராதாவின் கண்களைப் பிரித்து பார்த்து விட்டு, ஒரு ஊசியை எடுத்து அவளுக்கு போட தயாரானார்.

“ராமு, அவள் கைல போடணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” எனக் கூற, அவனோ என்ன உதவி செய்வது எனக் குழம்பினாலும், முடிவுக்கு வந்தவனாய் அவளின் கையைப் பற்றினான்.

“என்ன இது? அவ கைசட்டைய ஏற்றி விடுப்பா… அப்போ தான ஊசிப் போட முடியும்” என இளம் பச்சை வர்ண பட்டுசேலைக்கு பொருத்தமாய் அதே வர்ணத்தில் முழுக்கை ரவிக்கை அவள் அணிந்திருந்ததால், அவனை உதவிக்கு அழைத்தார்.

அவனோ மருத்துவரின் கட்டளையை “ம்…” என ஏற்று, அவளின் கை சட்டையை மேல் ஏற்ற, அவனின் விரல்கள் அவளை நோக்கி மெல்ல ஊர்வலம் போக தொடங்கின.

பெண்ணின் கைகளைத் தொடாதவன் என்று சொல்வதற்கு இல்லை தான், எத்தனையோ முறை உடையா, உமையாவை எல்லாம் கைப் பற்றி தடுத்திருக்கிறான் தான், ஏன் கைப்பற்றி இழுத்து சண்டை போட்டிருக்கிறான் தான்.

மேலும் பணிபுரியும் சக பெண்களுடன் கைக் குலுக்கி, கைகள் உரச புகைப்படத்திற்கு எல்லாம் உடன் நின்றிருக்கிறான் தான்.

ஆனால் முதன் முதலாய், தான் ரசிக்கும் பெண்ணைத் தொடப் போகும் படபடப்பு… பதற்றம் என எல்லாம் அப்பட்டமாய் முகத்தில் தெரிய, மெல்ல ஊர்ந்த அவனின் விரல்களும் இடையிலேயே நடுங்கியது

“சரியா போச்சு… உன்ன சொன்னதுக்கு நானே பண்ணிருக்கலாம்” என அவனின் படபடப்பை, சங்கடம் என பொருள் மாற்றி உணர்ந்து, அவரே சட்டையை மேலேற்றி ஊசியைப் போட்டு விட்டார்.

அந்த அரை மயக்க நிலையிலும், ‘அவ்வளவு நல்லவனா நீ?’ என்பது போல் ஓரக்கண்ணால், அவனைக் கேள்வியால் கொய்தாள் பெண்ணரசி.

ஊசிப் போட்ட இரண்டு நிமிடம் கழித்து, சிறிது தெம்பாய் உணர்ந்தவள், மருத்துவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலானாள்.

அந்த இரண்டு நிமிட இடைவேளையில், மருத்துவர் ராமின் குடும்பத்து உறுப்பினர்களை எல்லாம் தவறாது விசாரித்து, இப்பொழுது விஷேசத்தில் பங்கு கொள்ள முடியாமைக்கு மன்னிப்பு கோரியும், கட்டாயம் மாலை வருவதாய் வாக்கும் அளித்திருந்தார்.

“என்னம்மா நைட் சரியா தூங்கலையா?” என மருந்து சீட்டினை எழுதியபடி கேட்டார்.

“ம்ம்…” என அவன் முன்னிலையில் சங்கடமாய் பதில் தந்தாள்.

“அடிக்கடி இப்படியா… இல்ல ரெகுலராவே இப்படியா? ஏன் மாத்திரை கொண்டு வரலையா?” என அவளின் குறைந்த ரத்த அழுத்தத்தை சமன் செய்யும் மருந்தை எழுதி தந்தார்.

“ரெகுலரா முந்தி இருந்துச்சு… இப்போ இல்ல டாக்டர்… மாத்திரை போட மறந்துட்டேன்” என உண்மையை மறைக்காமல் உரைத்தாள்.

இருவரின் சம்பாஷணையில் எதுவும் புரியாதவனாய், “என்னாச்சு டாக்டர்? எனி பிராப்ளம்” என இடைப் புகுந்தான்.

“அவங்களுக்கு லோ பிபி. அதான் மயக்கம் வந்திருக்கு. அடிக்கடி சாப்பிடனும், நல்லா தூங்கனும். எப்போவும் மனச ரிலாக்ஸா வச்சுக்கோ.” என அவனுக்கு பதில் உரைத்தப்படி, சில மருத்துவ குறிப்புகளை அவளுக்கும் அறிவுறுத்தினார்.

அதிலேயே புரிந்து கொண்டவர்கள் போல, மருத்துவரின் பொன்னான நேரத்தை விரயப் படுத்தாமல் எழுந்து கொண்டனர்.

“இந்த வயசிலேயே பிபியா? இனி எங்க வயசுல எல்லாம் எப்படி கடக்கப் போறீங்கன்னு தெரில?” என அறவுரையாய் அங்கலாயித்தாரோ?

“என்ன ஐடி பீல்டா?” என விவரம் கேட்டார்.

அவள் இல்லை எனத் தலையாட்ட, பின்னே என்பது போல் மருத்துவரும் கண்ணைச் சுருக்கி வினவ, “ஐஃப்சிஐ…” என விடை பகிர்ந்தவளை, “அங்கே…” என அடுத்து அவர் துருவ, “அசிஸ்டெண்ட் மேனேஜர்” என அவள் கூறவும், கண்ணைப் பெரிதாக்கி கண்களாலே பாராட்டினார்.

“பினான்ஸ் செச்டாரா… அதுவும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் தானே…” என தோராயமாய் ஐயம் கொண்டார். அவள் ஆம் என தலையாட்டவும், “குட் குட்… ஆனா ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத” என மெச்சினாலும், மருத்துவராய் அறிவுரை வழங்கினார்.

பின் இருவரும் காத்திருந்த, ராமின் பெரிய தந்தை அமர்த்திய அதே ஆட்டோவில் ஏறவும், ஓட்டுனர் எடுக்கவும், “இப்போ எப்படி இருக்கு? வீட்டுக்கு போகலாமா? இல்ல கோவிலுக்கு போகலாமா?” என அவள் எப்படியும் கோவிலுக்கு தான் வருவாள் எனக் கணித்தே கேட்டான்.

அவளும் அவன் கணிப்பைப் பொய்பிக்காமல், கோவிலுக்கே செல்லலாம் எனக் கூறினாள். ஏனெனில் இங்கு வந்ததே, வள்ளியம்மையின் திருமணத்தில் பங்கேற்க தான், அதை எப்படி தவிர்ப்பது? பின் இங்கு வந்து பயனில்லாது என்று சொல்ல முடியாது, தேவையான மட்டும் ஊர் சுற்றி பார்த்து விட்டார்கள் தான் தோழிகள்.

ஆனால், முக்கிய நிகழ்வை ஒட்டி தானே இத்தனையும் முடிந்தது, அதனால் அதிலும் கலந்து கொள்வதே மரியாதை. இல்லையெனில் பெரியவர்கள் மனதில் வருத்தம் கொள்வார்கள் என எண்ணம் கொண்டாள்.

அதனால் நேரே கோவிலுக்கு சென்று விட்டனர். அங்கு சென்றும் ராம் அவளை தனியே விட்ட பாடில்லை. அனைவரும் கல்யாண மும்முரத்தில் இருந்ததால், ராமின் மெய் காப்பாளன் வேலையை யாரும் பார்க்கவும் இல்லை, தவறாய் எண்ணவும் இல்லை.

அதே போல் அபிஷேகத்திலும், இருவரும் சேர்ந்தே நீர் தெளித்ததை, நேரமின்மை மற்றும் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட சிக்கல் என்றே கருதினர். ஆனால் எல்லாவற்றிலும் ராம் விரும்பியே ஏற்றான்.

ராதா வந்த பின், அவன் வாழ்வில் நடந்த சோக கீதத்தைக் கூட மறந்து விட்டான் எனலாம். அதை நியாபகப்படுத்துவது போல், “ராம் நல்லா இருக்கியா பா?” என நலம் விசாரித்தார் அந்த பெண்மணி.

“அம்மா… நீங்களா? எப்படி இருக்கீங்க?” என அவரைப் பார்க்க தவறிய தன் கவனமின்மையை உள்ளுக்குள் சாடியப்படி, எழுந்து நின்றான்.

“ஐயோ உக்கார்ந்து சாப்பிடு பா. ஏன் எழுந்த?” என அவர் பதற, அவனுக்கோ அதன் பின்னும் உணவு உள்ளே இறங்குமா எனச் சந்தேகம் தோன்றியதால், அப்படியே இலையை மூடி விட்டான்.

“சாப்பிட்டேன் மா. கைக் கழுவ எழும் போது தான் நீங்க வந்துட்டீங்க? நீங்க சாப்பிட்டீங்களா? அப்பச்சி வந்திருக்காரா?” என அவர்களை விசாரித்தான்.

“அவர் வரலப்பா” என அமைதியாய் சொன்னவர், “அம்மா நீ வந்திருக்கன்னு சொன்னாங்க, அதான் பார்த்திட்டு போலாம்னு…” என இழுத்தவரை, வந்து இரண்டு நாட்களாகியும் அவரைப் போய் பார்க்காத தன் தவறை உணர்ந்து சங்கடமாய் பார்த்தான்.

எப்படி மறந்தோம்? ஊருக்கு வந்தவுடன், எப்போதும் இவர்களின் வீட்டிற்கு தவறாது செல்பவன், இந்த தடவை தவற விட்டு விட்டானா? இல்லை மறக்கடிக்கப் பட்டானா?

முதல் நாள் இரவு கூட, இவர்களின் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தான். அந்த இரவில் ராதா பேசியது… அதனைத் தொடர்ந்து கல்யாண வேலை… கோவிலில் திருமண ஏற்பாடு… சமையல் ஏற்பாடு எனத் திரிந்ததில் சற்றே மறந்தாலும், ராதாவின் மயக்கத்தில் முழுதும் மறந்தான் என்றே கூற வேண்டும்.

அதனால் தன்னையே நொந்தவன், “கிளம்பிட்டீங்க போல, வாங்கம்மா… நான் உங்கள விட்டுட்டு வர்றேன்” என அவர் கைகளில் வைத்திருந்த தாம்பூல பையைப் பார்த்து யூகித்தவன், அவருடனே கிளம்பினான்.

“இல்லப்பா நான் போயிக்குவேன்… உனக்கு வீட்டுல ஏதாவது வேல இருக்கப் போவுது…” என அவன் வரவைத் தடுத்தார்.

“அதெல்லாம் இல்லம்மா… வாங்க போலாம்” என யாரிடமும் சொல்லாமல் அவருடனே சென்று விட்டான். அவன் சொல்லாவிட்டாலும், வீட்டில் உள்ள யாவருக்கும் அவன் யார் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று தெரியும்.

அதனால் அவன் அவருடன் சென்று விட்டான். “என்ன… தேனம்மை இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட… நா தா சோறு உண்ணுக்…” என அவரால் தேனம்மை என்று விளிக்கப்பட்டவர், தன்னுடன் ஒருவரை அழைத்து வரவும் பேச்சை பாதியிலேயே நிறுத்தியிருந்தார்.

பின் அது ராம் எனத் தெரிந்ததும், “அடடே ராமுவா… வாப்பா… வா வா…” என வரவேற்றார்.

உள்ளே நுழைந்ததும், இருவரையும் ஒரு சேர நிற்க வைத்து, கால்களில் விழுந்து வணங்கினான். ஆசி வாங்கினானோ அல்லது மன்னிப்பை யாசித்தானோ?

அவர்களோ “நல்லா இருப்பா…” என வாழ்த்தினர்.

“வா… இங்க வந்து உக்காரு” எனத் தன்னருகே இருக்கையைக் காட்டியவர், அவன் அமர்ந்ததும் “அப்புறம் வேலை எல்லாம் எப்படி போகுது?” என பொதுவான விசயங்களைப் பேச ஆரம்பித்தவர், இடையிலேயே தன் மனைவிக்கு “தேனு… நம்ம ராமுவுக்கும் சேர்த்து இலை போடு. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” எனக் கட்டளையிட்டார் ராமலிங்கம்.

அவர் இலைப் போடு எனும் போதே வேண்டாம் எனத் தடைப் போட எண்ணியவன், அவரின் பிற்பாதி ஆசையினால், தனது வாய்க்கு பூட்டினை இட்டான்.

கணவன் மனைவி இருவருக்கும், தனது பெற்றோரின் வயதொத்தவர்கள்… இல்லை இல்லை அவர்களை விட இரண்டு மூன்று வயது சின்னவர்கள் தாம். ஆனால் அவர்களின் இழப்பும், சோகமும் அவர்களின் இயல்பான வயதை விட கூட்டிக் காட்டியது.

அவர்களின் முகத்தில் மலர்ச்சி என்பது மருந்துக்கும் இல்லாமல் போனதோ? இவன் வந்தால் மட்டுமே, முகத்தில் மகிழ்ச்சியை… அதுவும் இவனின் அன்புக் கட்டளைக்கு பணிந்து தான் செய்தார்கள் எனலாம்.

‘ஹும்… மகிழ்ச்சியை செய்தார்களா? யாரவது மகிழ்ச்சியை செய்வார்களா? ஆனால் இவர்கள் செயற்கையாய் உற்பத்தி செய்வார்கள், தான் வந்தால் மட்டும். முதலில் இந்த நிலையை மாற்றி, இயற்கையாய்… மனநிறைவோடு… அவர்களை மகிழ்விக்க வேண்டும் இறைவா! அதற்கு நீ தான் ஒரு வழி காட்ட வேண்டும்’ என மனமுருக… மெய்யுருக வேண்டினான்.

‘எப்படி? எப்படி செய்வது?’ என்ற நிராசை… ‘இவர்களுக்காகவாது ஏதேனும் செய்தே ஆக வேண்டும்’ என்ற உறுதி… கோபமாய் மாறி… கோபம் வன்மையாய் உருமாறி அவன் கைமுஷ்டியை இறுக செய்தது.

செந்நிற மஞ்சள் வெயில் பொழுதை, கருமேகம் சூழ கருக்கல் பொழுதாய் தோன்ற வைக்க, “என்ன இன்னிக்கு மழ தூறும் போலையே…” எனத் தன் கணிப்பைக் கூறினார் வள்ளியம்மை.

“பெரிம்மா… எல்லாம் உன்னால தா… நீ நல்லா பச்சரியும் வெல்லமா தின்னுருப்ப போல… அதான் உன் கல்யாணத்தன்னிக்கு மழை கொட்டுது”

“ம்க்கும்… போடி போக்கத்தவளே… இங்க தூவானத்தையே காணோமாம்… இவ கொட்டுற வெள்ளத்துக்கு போயிட்டா…”

“பெரிம்மா… இன்னிக்கு ஒரு நாளாவது உன்னோட பழமொழிக்கும், சுடுமொழிக்கும் விடுப்பு விடு. ஏன்னா… நீ இப்போ கல்யாணம் முடிஞ்ச புதுப் பொண்ணு. சோ… வாயவே திறக்கக் கூடாது. ஒன்லி வெக்கம் மட்டும் தான் வரணும்” என அவள் சொன்னது தான் தாமதம்.

“போடி… மருக்கொளி…” என அங்கிருந்த ஒரு மூங்கில் கூடையை, வெட்கத்தோடே அவள் மேல் எரிந்து விட்டு சென்றார்.

லாவகமாய் விலகியவாறே, உமையாவோடு செட்டு சேர்ந்து சிரித்து கொண்டிருந்தாள் உதயா. ஆம், திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மதிய விருந்து முடியவும் கிளம்பி இருந்தனர்.

இத்தனை நாள் வரை மகள் வீட்டில் இருந்து விட்டு வந்த அவளின் அப்பத்தாவும், வள்ளியம்மையின் அண்ணனும், அண்ணமிண்டி மட்டுமே அதிகமாய் இருந்தனர்.

மேலும், மாடியில் தனது அறையில், இரவு ஊருக்கு செல்வதற்கு தயாராய், தன் துணிமணிகள் மற்றும் தனது பொருட்களை எடுத்து வைத்து, பைகளில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ராதா.

காலையில் அவள் மயங்கிய காரணத்தால், உடல்நிலை சரியான பின் இரண்டு நாள் தள்ளி செல்லலாம் என உதயா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வற்புறுத்தியும், தனக்கு முக்கியமான அலுவலக வேலைக் காத்திருக்கிறது இல்லையென்றால் கூட பரவாயில்லை எனக் கூறி ஒரு வழியாய் அவர்களைச் சமாதானம் செய்திருந்தாள்.

ஆனாலும், “உனக்கு வேணா சாதாரணமா இருக்கலாம். உடம்பு சரியில்லாத பொண்ண, இப்படி அநாதரவா அனுப்ப, எங்களுக்கு மனசு வரல தாயி. உடையா… உன் அண்ணனுக்கு போன் போட்டு வர சொல்லு. அவென் எப்போ கிளம்புறான் கேட்டு, அவன வேணா கூட… துணைக்கு அனுப்பி வைப்போம்” என ராமிற்கு ஆதரவாய், அவனின் பெரியப்பாவால் வீட்டில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

இது தெரியாமல், உதயா அலைப்பேசியில் அழைக்கும் போது, “ம்ச்… என்ன?” எனக் கடுப்பாய் கேட்டான்.

“இப்போ எங்க இருக்க?”

சலிப்பான குரலில், “ஏன் உனக்கு தெரியாதா?”

“எப்போ ஊருக்கு போ போற? இன்னிக்கு தானா…? அதவாது நியாபகம் இருக்கா?” என அவள் கேள்வியின் தொனியில், எல்லாமே நியாபகம் வர, “வரேன் உதயா… பத்து நிமிஷத்துல வரேன். அம்மாவ என் டிரஸ் எல்லாம் எடுத்து வைக்க சொல்லு” எனக் கூறி விட்டு, அவர்களிடம் விடைப்பெற்று வீட்டிற்கு வந்திருந்தான்.

வந்தவனிடத்தில் விஷயம் தெரிவிக்கப் பட, சற்றே முகம் மலர்ந்தான். அவளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவளுடன் பயணிக்க சம்மதப் பட்டான்.

பின்னே கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விட அவன் ஒன்றும் முட்டாள் அல்லவே. ஆனால் அவன் முட்டாள் தான் எனச் சொல்லாமல் சொல்லியது, பேருந்தில் அவள் நீட்டிய கல்யாண பத்திரிக்கை.

 

தூறல் தூறத் தொடங்கிற்று…