தேனாடும் முல்லை – 1

தேனாடும் முல்லை

முல்லை-1

தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹோ
நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ
தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக
மாறும் நேரம்…

புளூடூத் வழியாக ராஜாஸ் லவ் மெலோடி காதிற்குள் கசிந்து கொண்டிருக்க, கண்மூடி பாட்டில் லயித்திருந்தாள் விஸ்வாதிகா. அவளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு இசையை ரசிப்பது. அதற்காக பக்தி சொட்டும் கர்நாடக சங்கீதத்தையோ, காதைக் கிழிக்கும் ராப், பாப் பாடல்களையோ கேட்க மாட்டாள். அவைகளின் பக்கம் கூட ஒதுங்க மாட்டாள்.

மனதை வருடும் மெல்லிசைக்கு ரசிகை இவள். எளிதில் முணுமுணுக்க வைக்கும் திரைப்படப் பாடல்களில் மெலோடி மட்டுமே  எப்போதும் இவளின் தேர்வு. தனது படபடப்புக்களையும் கடினப் பொழுதுகளையும் இலகுவாக்கிக் கொள்ள இவள் எடுத்துக் கொள்ளும் மந்திரக்கோல் ராஜாவின் இன்னிசை!

“இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சமாவது அப்டேட் பண்ணிக்கோ ஆதி!” நண்பிகள் பலரும் பலவிதமாய் கேட்டாலும் யோசிக்காமல் மறுத்து விடுவாள்.

“நோ வே… தண்ணிதொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்னு தெளிவா டப்பாங்குத்து பாடி ஆட்டம் போடுறதுக்கு அவரோட மியூசிக்ல மட்டுந்தான் முடியும்.” ஆணித்தரமாக கூறி விடுவாள்.

“இப்டியொரு கொ.ப.செ இங்கே இருக்கான்னு அவருக்கு கூடிய சீக்கிரம் சொல்லணும் ஆதி…”   

“சாரி கேர்ள்ஸ்… மியூசிக் ரசிக்கிறதோட என் ரசனை முடிஞ்சது. எனக்கு யார் பின்னாடியும் போயி நிக்கப் பிடிக்காது.” தான் எதற்கும் யாருக்கும் அடிமையாகி விடமாட்டேன் என்பதை தெளிவாய் உணர்த்தி விடுவாள் விஸ்வாதிகா.

அப்பா அம்மாவிற்கு செல்லம்மா… நண்பிகள் வெளியுலக வட்டாரத்தில் ஆதி… இவளது அப்பாவின் பெயரில் பாதியைக் கொண்டிருப்பதால், ‘விஸ்வா’ என இவளை யாரும் அழைப்பதில்லை. இவளும் அனுமதிப்பதில்லை. வருங்காலத்தில் எப்படியோ?

‘கனவோடு சிலநாள் நெனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்…’

அடுத்த பாடலின் வரிகளில் ஆழ்ந்து தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள் விஸ்வாதிகா.

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் டொமஸ்டிக் டெர்மினலைத் தாண்டிய பகுதியில் இருந்தாள். பயணியர்களை வரவேற்கக் காத்திருக்கும் அந்த பரபரப்பான பகுதியில் வெகு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“லெட்ஸ் கோ செல்லம்மா… கெட் அப்!” இடைச்செருகலாய் விஸ்வநாதனின் குரல் கேட்க, அலுப்பாய் கண் விழித்தாள்.

“ம்ப்ச்… சூப்பர்ப் சாங், ஆஸ் யூசுவல் டிஸ்டர்ப்பிங் யூ, டாட்!” இவள் முகம் சுணங்க,

“ஆக்சுவலா நாமளும் அங்கே போயி வெயிட் பண்ண வேண்டியது. ஃபிளைட் லேட்டானதால இங்கே ஹாயா வந்து உக்காந்துட்டோம்… வா, அவர் வந்துட்டார்!” என்றவாறு தூரத்தில் நிற்பவனைப் பார்த்து விஸ்வநாதன் சுட்டிக்காட்ட, அவளின் அலுப்பு இன்னும் கூடியது.

இந்த சந்திப்பிற்காகத் தான் கட்டுமானத் தளத்தில் இருந்தவளை இழுத்துக் கொண்டு வந்திருந்தார் விஸ்வநாதன். அவளின் அலுப்பான பார்வையில் முதலில் விழுந்தான் ராம்சங்கர்.

விமான பயணத்தின் இறுதிகட்ட சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு அவன் டெர்மினலின் வெளியே வந்து நிற்க, “வா மாப்ள, எப்டி இருக்க?” தோள் தட்டி அணைத்துக் கொண்டார் முகிலன். இவனது இரண்டாவது அக்கா சாருமதியின் கணவர். வீட்டு மனிதராய் இவன் மீது அக்கறை காட்டுவதில் இவரும் ஒருவர்.

“ஃபைன் மாமா!” பதிலுக்கு இவனும் அணைத்து விடுவிக்க,

“இந்தியா வரவேற்கிறது மச்சான்!” அடுத்ததாக கை குலுக்கினான் சுதர்சன். இவனது இரட்டை தங்கையின் கணவன். குறும்புப் பேர்வழி. மனைவி சொல்லையே மந்திரமாக உச்சரிப்பவன்.

சுதர்சனின் பேச்சில் ராம் புரியாமல், ‘ஞே’ என முழிக்க, “உன் குசும்புக்கு அளவே இல்லையா தம்பி? இப்ப பாரு… மாப்ள விளக்கெண்ணெய் குடிச்சவனாட்டம் முகத்தை கோணிக்கிட்டு நிக்கறத!” முகிலன் கேலி பேச,

‘இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா?’ என்ற பாவனைதான் ராமிடம்!

“அதொன்னுமில்ல மச்சான்… இந்த இடத்துலயே உங்க பீட்டரை புதைச்சு வச்சுட்டு, முழுக்க முழுக்க தாய்மொழியில பேச ஆரம்பிக்கணும்னு உங்களுக்கு சிக்னல் கொடுத்தேன்.” மச்சானை கலாய்ப்பவனாக சுதர்சன் விளக்கம் கொடுக்க,

“ஏன், பீட்டர் விட்டா என்ன பண்ணுவீங்களாம்?” சிரிப்போடு வெடித்தான் ராம்.

“பதிலுக்கு நான் அவுத்து விடுற பீட்டருக்கு நீ தனி டிக்ஸ்னரி போடணும். மதுரை டெர்மினல் ரூப்டாப் இடிஞ்சு விழ நீ காரணமாகப் போறியா மச்சான்?” பதிலுக்கு சுதர்சன் கேட்க,

“ஒஹ்… சென்னையில அடிக்கடி இடிஞ்சு விழ நீங்கதான் காரணம்னு சொல்றீங்களா மாமா? காவல் நண்பனை கூப்பிடவா… அள்ளிட்டுப் போயிடுவான்!”

“என்னை கம்பி எண்ண வைக்கிறதுல உனக்கு சந்தோசமா?” மெல்ல ஜெர்க்கான சுதர்சன், “சென்னை ஏர்போர்ட குத்தகை எடுத்தது நான் கிடையாது. என்னை மாதிரி ஒரு நல்ல சமூகசேவகன்.” விடாமல் வம்பிழுக்க,

“உங்க வீட்டம்மா புள்ளைய வளக்கிறாளோ இல்லையோ உங்க வாயா ரொம்ப நல்லாவே வளத்து வச்சுருக்கா!” ராம் நக்கலாகப் பேசிய நேரத்தில் அப்பாவும் மகளும் அவர்கள் இருந்த இடத்திக்கு வந்து சேர்ந்தனர்.

சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு தன்னெதிரே நின்றவர்களை இமைக்காமல் பார்த்தான். ஒரே நொடியில் தந்தையை பார்த்து முடித்தவனின் பார்வை, அவரின் பெண்ணை தடையில்லாமல் மேலிருந்து கீழாக லேசர் பார்வையில் குடைந்தது. காணொளியில் தோன்றியவளுக்கும் நேரில் நிற்பவளுக்கும் உள்ள வித்தியாசத்தை நுணுக்கிப் பார்த்து ஆராய்ந்தது அவனின் கண்கள்.

ஐந்தரையடியை தாண்டிய நெகுநெகுவென்ற தேகவாகு. கூர்மையான நாசி, லட்சணமான சற்றே நீள்வட்ட முகம். பன்னீர் ரோஜாவின் சருமத்தில் ஒவ்வாமையாக ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த சின்னஞ்சிறிய சிவப்புநிற பருக்களும் அவளுக்கு அழுகு தான். இறுக்கம் கொண்ட இதழ் வறண்டு விடாமல் இருக்க மெல்லிய படலமாக ஒட்டியிருந்த லிப் பாம் உதட்டழகை அம்சமாய் மினுக்கிக் காட்டியது.

கண்களையும் இமைகளையும் சேர்த்துப் பார்க்க முடியவில்லை. கவசமாக ரேபான் சன்கிளாஸில் தடைசெய்திருந்தாள். சிறிய ஒற்றை வைரக்கல்லில் மினுக்கிக் கொண்டிருந்த கம்மல் அவர்களின் செல்வச்செழிப்பை காட்டியது. அலட்சிய உடல்மொழியோடு மென்மையான சுபாவங்களுக்கு சம்மந்தம் இல்லாதவளாக  நிமிர்வாக தோரணையாக நின்றிருந்தாள்.

பெண்ணை அளவெடுத்தவனின் கண்கள் அவளின் உடையைப் பார்த்ததும் லேசாய் சலித்துக் கொண்டது. ‘இதென்ன, இத்தனை மாடர்ன்?’ சட்டென்று முகம் சுருக்கினான்.

லைட்கிரீம் கலர் ஸ்லீம் ஃபிட் ஜீன்ஸிற்கு, மேட்சிங்காய் கிரே டி-சர்ட், ‘மாஸ்டர் பில்டர்’ வாசகத்துடன் இருக்க, அதற்கு மேல் ஃபுல்ஹான்ட் லாங் பிளாக் ஜீன்ஸ் ஜாக்கெட், காலில் அதற்கு பொருத்தமாய் ரிபோக் ஷூ அணிந்திருந்தாள் தோள்வளைவைத் தாண்டிய கூந்தலை உயரத் தூக்கி போனிடைலில் அடக்கி இருந்தாள். அதற்கும் மேலே கருப்புநிற தொப்பி. பக்கா புரஃபசனல் ஃபிகர்!

பார்வையை விலக்காமல் பெருமூச்சோடு பார்த்தான் ராம்சங்கர். அவனது இமைக்கா பார்வையைக் கண்டு சுதாரித்த முகிலன், “இவர்தான் விஸ்வநாதன்.” என அறிமுகப்படுத்தி கை முஷ்டியால் அவனை இடிக்க, “ஹலோ!” என நிகழ்விற்கு வந்து கை குலுக்கினான்.

காணொளியில் பார்த்து பேசியிருந்தாலும் இந்த சம்பிரதாயத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து அருகில் இருப்பவளை சொல்ல வரும் முன்பே, தானாகவே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“விஸ்வாதிகா” ஒற்றை வார்த்தையோடு அவள் கையை நீட்ட,

“ராம்சங்கர்” அவ்வாறே பதில் பேசி கை குலுக்கினான்.

தொடர்ந்து, “ஹவ் ஆர் யூ?” சம்பிரதாயமாக இவன் கேட்க,

“ஃபைன்… நோ மோர் ஃபார்மாலிட்டீஸ்.” சட்டென்று வெட்டி விட்ட விஸ்வாதிகா, அந்த நேரத்தில் வந்த செல்பேசி அழைப்பினை ஏற்றுக்கொண்டு, “ஜஸ்ட் மினிட்.” என்றதோடு ஒதுங்கிக் கொண்டாள்.

ராம்சங்கருக்குள் ஏதோ இடறிய உணர்வு. வெறுமையான பார்வையோடு அவளது தந்தையை பார்க்க, “சில் ராம்… அவ அப்படிதான்!” பெருமையோடு பேசினார் விஸ்வநாதன்.

சரியான மகள் கோண்டு இவர். மகளின் பேச்சிற்கேற்ப எப்போதும் தாளமிடும் இவரது வார்த்தை ஜதிகள். ஆனால் மகளோ தனது விருப்பமின்மையை தந்தைக்கும் திணித்தே நினைத்ததை சாதித்துக் கொள்வாள்.

ராமிடம் மேற்கொண்டு பயண விவரங்களை விசாரித்துக் கொண்டிருந்தவரிடம்,  “டாட் ஒன் மினிட்.” மகள் அழைத்ததும் அவருமே அங்கிருந்து விலகிப் போனார்.

“என்ன மாமா இதெல்லாம்?” கடுப்புடன் தனது சொந்தங்களைப் பார்த்து முணுமுணுத்தான் ராம்.  

“ஏன் மச்சான், என்ன குறைச்சல்?” சுதர்சன் கேட்க,

“மதுரையில இப்படியொரு அலப்பறை தேவையா? ராம்சங்கரின் நொடிப்புக்கு, ‘அடப்போடா’ பாவனையை தந்தனர்.

“பாதி வெளிநாடும் பாதி சென்னையும் மதுரையில தான் ஷிஃப்ட் ஆகிட்டு இருக்கு மச்சான். இப்பதானே வந்து இறங்கி இருக்கீங்க… போகப்போகத் தெரியும்!”

“இருந்தாலும் இந்த குதிரைவால்காரி நம்ம வீட்டுக்கு செட் ஆவாளா மாமா?”

“நாங்க உன் வீட்டுக்கு மருமகளை தேடல… உனக்கு பொருத்தமான ஜோடியைத் தான் தேடியிருக்கோம்.” இலகுவாக சுதர்சன் பேச,

“உங்க இஷ்டத்துக்கு பொண்ணு பார்த்ததுக்கும் நான்தான் காரணமா?” கடுப்போடு கேட்டான் ராம்.

“சத்தமா பேசாதே மாப்ள… உன்னோட ஏ டூ இஜட்(A to Z)க்கு பக்காவா இந்த பொண்ணுதான் பொருந்தி போறான்னு உன் வீட்டு பெரியவங்களே அலசி ஆராய்ஞ்சு பேச்சு வார்த்தையும் முடிச்சு வைச்சுட்டாங்க… இன்னும் ரெண்டு நாள்ல நீ, அவ கழுத்துல மூனு முடிச்சு போட்டு, உனக்கு நீயே முக்கணாங்கயிறு மாட்டிக்கறது மட்டுந்தான் பாக்கி.” விளக்கமாக கூறிய முகிலனை முறைப்பாக பார்த்தான்.

“எனக்கு என்னமோ சரியாப்படல… இந்த ஜீன்ஸ்மோகினி கிட்ட என்னை மாட்டி விடாதீங்க மாமா!”

“பார்த்த நிமிசத்துலயே குதிரைவால்காரி, ஜீன்ஸ் மோகினின்னு பேரு வச்சவன் பேசுற பேச்சா இது?” சுதர்சனின் கேலியில் பல்லைக் கடித்தான்.

“இப்ப நீ அலறி எந்த பிரயோசனமும் இல்ல… வீட்டுக்குத்தானே போறோம். அங்கே உங்கம்மா கிட்ட சொல்லு, அண்ணன் அண்ணிகிட்ட பேசு! நான் உடால நிக்கல மாப்ள…” என்றதும் உள்ளுக்குள் ஜெர்க்கானான்.

இன்று வரையில் இவன் பேசத் தயங்கி நிற்கும் உறவுகளிடம் தனது மறுப்பினை சொல்ல சுத்தமாய் இவனுக்கு தைரியம் இல்லை. ஐந்து வருடத்திற்கு முன் ஆரம்பித்த அதே குற்ற உணர்ச்சியில் தான் இன்னமும் உழன்று கொண்டிருக்கிறான். அதன் காரணமே இத்தனை நாட்கள் இவன் தாய்நாடு திரும்பாமல் இருந்தான்.

ஆனால் விதி வலியதாக மாறி அம்மாவின் மிரட்டலில் அண்ணனின் அதட்டலில் வாழ்க்கைத் துணையோடு புதிய வாழ்வினைத் தொடங்க இன்று பிறந்த மண்ணிற்கு வந்திறங்கி விட்டான் ராம்சங்கர்.

காணொளியில் பெண் பார்க்கும் படலமும் நிச்சயமும் முடித்துவிட்டு இன்னும் இரண்டுநாளில் திருமணம் என்கிற நிலையில் இவன் வந்து இறங்கியிருக்க, இவனை வரவேற்பதற்கென வந்த புதுப்பெண்ணோ இவனை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

‘தன் முகம் பார்க்கவும் மறுக்கிறாளே… திருமணத்தில் விருப்பம் இல்லையோ!’ அவனது உள்மனம் குமையத் துவங்கியது.

“இவ புரோஃபசனலா வந்திருக்கிற மாதிரி இருக்கு மாமா… அவ பியான்சியா என்னை பார்க்கவே இல்ல!”

“அட வந்து நின்ன பத்து நிமிசத்துல கணிச்சு வைச்சுட்டியா? தீயா வேலை செய்யுற! சொந்ததொழிலை எடுத்து செய்றதுல உங்க அண்ணுக்கு   போட்டியா இவ இருக்கா மாப்ள…” பெருமை பேசும் நேரத்தில் அப்பாவும் மகளும் வந்து சேர்ந்தனர்.

இவனைப் பார்த்து கடமையாக சிரித்தவள், “மீட் லேட்டர்.” எனக் கூறிவிட்டு, “ஐ வில் கோ டாட்…” பேசியவாறே கிளம்பி விட்டாள்.

“எனக்கு சொன்ன பீட்டர் அட்வைசை இவளுக்கு சொல்லி இருக்கலாம்.” முணுமுணுத்த ராமை அடக்கிய சுதர்சன்,

“என்ன சார், சிஸ்டர் கிளம்பிட்டாங்க?” கடுப்பை மறைத்துக் கொண்டு கேட்க, தர்மசங்கடமாய் சிரித்தார் விஸ்வநாதன்.

“திருமங்கலத்துல இன்னைக்கு கான்கிரீட் நடக்குது. அதான் அவசரமா போறா… இன்னும் ரெண்டுநாள்ல பெண்டிங் வொர்க் முடிக்கிற அவசரத்துல இருக்கா… நத்திங் டூ வொரி!” என்றவர் மேற்கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு ஃபுட்கோர்ட் செல்ல, மற்றவர்களுக்கு அந்த சூழ்நிலையே சற்றும் பொருத்தமற்றதாகத் தோன்றியது.

“அவளோட மாப்பிள்ளையா பார்க்காம மனுசனா பார்த்தாவது நாலு வார்த்தை அவ பேசிட்டு போயிருக்கலாம்.” முகிலன் காதில் ராம் முணுமுணுக்க, அவருமே மெதுவாய் ஆமென்று தலையசைத்துக் கொண்டார்.  

காபி முடித்த நேரத்தில் தனக்கும் வேலை இருப்பதாக கூறி விஸ்வநாதன் சென்று விட்டார். அப்போதும் பலமுறை நயந்த பேச்சுதான் அவரிடம்.

“இன்னைக்கு ஈவனிங் ரெடியா இருங்க ராம்… உங்களுக்கு ரிசப்ஷன் சூட் எடுத்திடுவோம். செல்லாம்மாவும் வர்றேன்னு சொல்லியிருக்கா. அப்போ ப்ரீயா பேசுவா… எனக்கும் கொஞ்ச வேலை இருக்கு. தப்பா எடுத்துக்க வேணாம்.” என்றவாறே கிளம்பி விட்டார்.

ராம்சங்கருக்கு பொறுமை பறந்து போனது. “பொண்ணு வந்தா… அவ இஷ்டத்துக்கு கிளம்பி போயிட்டா! அப்பன்காரன் என்னன்னா எனக்கே டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு போறான். என்னை என்னன்னு தான் நினைச்சாங்க?” வெளிப்படையாகவே கொதித்த நேரத்தில் கதிரவனின் அழைப்பு வந்தது.

இவனது பெரிய அக்கா சுதாமதியின் கணவர். இவனது குடும்பத்தின் மூத்தவர். இவர் இல்லாமல் அவர்களின் வீட்டில் எதுவும் அசையாது.

அழைப்பை ஏற்ற நொடியிலேயே, “வந்துட்டேன் மாமா… பார்த்துட்டேன் உங்க செலக்சனை… எனக்கு சரிபட்டு வராது. கல்யாணத்த கேன்சல் பண்ணுங்க!” கறாராக, கடுகடுப்பாக பேசியவனை பார்த்து அருகில் இருப்பவர்கள் பதட்டமே படவில்லை. மாறாக முகச் சுழிப்புடன் தலையில் கை வைத்துக் கொண்டனர்.

“டேய் ஆரம்பிச்சிட்டியா?” முகிலன் குரலை உயர்த்த,

அழைப்பில் இருந்த கதிரவனோ, “உன் முப்பத்திரெண்டுக்கும் அவ முப்பதுக்கும் நல்லாவே பொருந்திப் போகும் சின்ன மாப்ள… ஏதும் அபசகுனமா பேசாம ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு!” அதட்டலோடு உத்தரவைப் போட்டு அழைப்பினை முடித்தார்.

இவனுக்கோ ஆத்திரம் தாங்கவில்லை. “ச்சே… இன்னும் எத்தனை நாளைக்கு தான் என்னை உங்க கை பொம்மையா நடத்தப் போறீங்க? உங்களை மாதிரியே என்னை அலட்சியமா பாக்கற ஒருத்திய எனக்குன்னு பார்த்து வச்சுருக்கீங்க! இப்படியே போனா மூச்சுமுட்டி செத்துப் போயிடுவேன் மாமா!” கோபத்துடன் வெடித்தவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அலுப்போடு சலித்துக் கொண்டார் முகிலன்.

“நீ இன்னமும் மாறலடா… அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இங்கே இருந்து கெளம்பிப் போன அதே கோமாளிப் பயலாத்தான் இருக்க… கொஞ்சமாவது வயசுக்கேத்த நிதானத்தோடு நடந்துக்கப் பாரு! இதுக்கு மேல எதுனாலும் வீட்டுல போயி சொல்லிக்கோ!” என்று விரட்டியபடி வீட்டிற்கு அவனை கிளப்பினார்.

 கூடல்நகரில் உள்ள தங்களது பெரிய வீட்டில் சென்று இறங்கியதும் சொந்தங்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.

“பிரயாணம் சௌரியமா இருந்துச்சா தம்பி?” மாறாத வாஞ்சையோடு சுதாமதி கேட்க,

“ஃபிளைட்ல வர்றவனுக்கு என்ன கஷ்டம்க்கா இருக்கப் போகுது? உக்காந்துட்டு வர்றதுதான் சலிச்சு போயிருக்கும். இல்லடா தம்பி!” எப்போதும் போல ஜால்ரா தட்டினாள் சுதாமதி.

“வந்தவன் மூச்சு விடட்டும்… அப்புறமா கேள்வி கேக்கலாம்.” அம்மா பரிமளவல்லியின் குரல் ஓங்கி ஒலிக்க, இவனது தலை தன்னால் தாழ்ந்து போனது.

“சின்னவனே… கை கால அலம்பிட்டு மொதல்ல போயி உன் அத்தையை கும்பிடு!” என்றதும் சொல்பேச்சு தட்டாதவனாக எழுந்தான்.

“உங்களுக்கு ரூம் மேலேயே ரெடி பண்ணியாச்சு ராம்! உங்க திங்க்ஸ் அங்கேயே கொண்டு போயி வச்சாச்சு!” அண்ணி கிருஷ்ணாக்ஷியின் கனிவான தகவலில் உள்ளம் நெகிழ்ந்தான்.

“தாங்க்ஸ் அண்ணி!” ஒற்றை வார்த்தையோடு மாடியேறியவன், அவசரக் குளியல் போட்டுவிட்டு கீழே பூஜையறைக்குள் நுழைந்தான்.

காலம் சென்ற தனது தாத்தா, பாட்டி, அப்பா இவர்களின் புகைப்படங்களோடு அன்பு அத்தை மனோன்மணியின் புகைப்படமும் மாட்டப்படிருக்க, விளக்கு பொருத்தி கண்மூடி தியானித்தான். துக்கம் தொண்டைக் குழியில் உருண்டது. இதற்குப் பெயர் தான் பாசம் என்கிறார்களோ?

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இரவுநேர உறக்கத்தில் சிவலோகப் பதவியை அடைந்த மனோன்மணியின் இறப்பு அந்த குடும்பத்திற்கு மிகப் பெரும் இழப்பாகவே இன்று வரையிலும் இருக்கிறது.

மனோன்மணியின் மறைவின் போது, புகுந்த வீட்டு உறவாக அவரது காரியத்திற்கு முன்னால் வந்து நின்றவர் தான் விஸ்வநாதன். மனோன்மணியின் கணவரது தம்பியின் மகன் என்ற உறவோடு வந்தவருக்கு அரவிந்தனின் குடும்பத்தையும் அவர்களது பழக்க வழக்கத்தையும் பார்த்ததும் பிடித்துப் போனது.

ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது உண்டான பற்று அவரது பெண்ணையே அந்த குடும்பத்தில் வாழ வைத்துப் பார்க்க ஆசைப்பட, விடாமல் வீம்பி பிடித்து நின்று சம்மந்தம் பேசி சாதித்துக் கொண்டார். இதற்கே இரண்டு வருடங்கள் முழுதாய் கழிந்திருந்தது.

இனி திருமணம் முடிந்து அவரது மகள் இந்த குடும்பத்தில் ஒன்றிக் கொண்டு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்வதை பார்ப்பது மட்டுமே அவரது ஆசையாக இருக்கிறது.

ராம்சங்கரின் குடும்பத்தாரும் எப்படியாகினும் இவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்று மெனக்கெட்டுக் கொண்டிருந்தனர்.

‘தவறு செய்து தப்பிப் போனவர்களும் குடும்பம் குழந்தை என்று வாழத்தானே செய்கிறார்கள்! இவனுக்கு மட்டும் என்ன கேடு?’ தமக்கைகளின், மாமன்களின் பலமான ஆதரவில் இந்த சம்மந்தம் பேசி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

‘இனி எனது எதிர்காலம் அவளுடைய கையில் தானா?’ என்ற நினைவே ராமிற்கு வேப்பங்காயாகக் கசந்தது. அந்த உணர்வில் இவன் முகம் சுழித்து அறையை விட்டு வெளியில் வர, “ராமுப்பா!” என மூன்று பிள்ளைகளும் கோரசாக அழைக்க, தன்னால் மலர்ச்சி கொண்டான் ராம்சங்கர்.