தேனாடும் முல்லை-2
அன்றைய தினம், ‘ட்ரீம்ஸ் நியூ சிட்டி’ அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான திறப்பு விழாவினைத் தொடர்ந்து, மாஸ்டர் அபார்ட்மெண்டில் கிரஹப்பிரவேசமும் கணபதி ஹோமமும் வெகுஜோராய் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதுரை அவனியாபுரத்தை தாண்டிய பக்கா கமர்ஷியல் ஏரியாவில் அமைந்த தொகுப்பு வீடுகளின் வளாகம் அது. ஒருபக்கம் விமான நிலையமும் மறுபக்கம் ரெயில்வே ஜங்சனையும் எளிதில் சென்றடையும் நெடுஞ்சாலை வசதிகளோடு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக தண்ணீர் பிரச்சனையும் தலைகாட்டாத நகரப் பகுதியில் உருவாகி இருந்தது அந்த வளாகம்.
மொத்தம் அறுபது குடியிருப்பு மனைகளைக் கொண்ட ட்ரீம்ஸ் நியூ சிட்டியின் வீடுகள் அனைத்தும் மூன்று படுக்கையறைகளோடு இன்றைய நவீன வசதிகளை உள்ளடக்கிய லக்ஸுரி டைப் வகையினைச் சார்ந்தவை.
பணமும் பகட்டும் ஒவ்வொரு டைல்ஸ் அன்ட் மார்பிள்ஸ் கற்களிலும் பரிமளிக்க வைக்கும், ‘விஸ்வா கிரியேட்டர்ஸ்’ன் மிகச்சிறந்த கட்டுமானப் படைப்புகளில் ஒன்று, இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு.
அந்த வளாகத்தின் உரிமையாளருக்கு சொந்தமான மனையில் ஹோம குண்டத்தின் முன் தம்பதியாராக ராம்சங்கர், விஸ்வாதிகா அமர்ந்திருக்க, கிரஹப்பிரவேச சாஸ்திர சம்பிரதாயங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சுற்றிலும் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் என அமர்ந்திருந்த இடத்தில் விருப்போ வெறுப்போ இல்லாத நிலையில் கடமையைச் செய்து கொண்டிருந்தனர் புதுமணத் தம்பதியர்.
முன்தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் முடிந்து, நண்பகல் வரவேற்பும் மிகச் சிறப்பாய் நடந்தேறி இருந்தது. மறுநாள் இந்த கிரஹப்பிரவேச விழாவினை உத்தேசித்தே திருமண இரவை ஒத்தி வைத்திருந்தனர்.
“ரிலாக்ஸ்டா என்ஜாய் பண்ண வேண்டிய மொமென்ட் எல்லாம் இவ்வளவு அரிபரியா(அவசரம்) நடத்திக்க கூடாது.” மாப்பிள்ளை ராம்சங்கர் வெளிப்படையாகவே சொல்லிவிட, மணப்பெண்ணும், “தட்ஸ் குட்!” மெச்சுதலாய் புருவம் உயர்த்தி அவனுக்கு ஆதரவளித்தாள்.
மணமக்களின் ஒருமித்த எண்ணத்தை அப்பொழுதே கண்டு கொண்ட குடும்பத்தினரும், ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அவர்களின் முடிவிற்கு ஒப்புதல் அளித்து விட, இன்றைய தினம் தம்பதியராக புதுமனை புகுவிழாவிற்கு மனையில் அமர்ந்து விட்டனர்.
ராம்சங்கரின் வருமானத்தில் பெரியதொரு அசையா சொத்தாக, அவன் வாங்கிய சொந்தமான விட்டுமனை வளாகம் அது. ஐந்து குடியிருப்பு மனைகளை அலுவலகத்திற்கும் சொந்த உபயோகத்திற்கும் வைத்துக் கொண்டு மற்றவைகளை விற்பனைக்கோ அல்லது நாள்கணக்கு, மாதக்கணக்கில் தங்கிக் கொள்ளும் வாடகை வீட்டுமனைகளாகவோ மாற்றும் வகையில் வியாபாரச் சந்தையில் இறக்கியாகி விட்டது.
சில வருடங்களுக்கு முன்னால் தன்னை ஒதுக்கி வைத்த குடும்பத்தாரிடம் எப்பாடுபட்டாவது தன்னை பற்றிய அபிப்பிராயத்தை மாற்றிவிட வேண்டுமென்று தவித்துக் கொண்டிருந்த ராம்சங்கருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் இந்த வீட்டுமனை வாளாகம்.
அதற்கு அடித்தளமிட்டு இவனை உத்வேகப்படுத்தியதில் மாமா கதிரவனுக்கும் அண்ணன் அரவிந்தனுக்கும் சமபங்கு உண்டு. ஒட்டு மொத்தக் குடும்பமும் இவனது தான்தோன்றித் தனத்தில் வெறுத்து ஒதுக்கி வைத்த வேளையில், இவனுக்கு ஆதரவு அளிக்காமல், அதே சமயத்தில் மொத்தமாக ஒதுக்கியும் வைக்காமல் உரிமையுடன் இவனது வாழ்வாதாரத்தை விசாரித்து அதை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் கதிரவன்.
“உன் சேவிங்ஸ் எல்லாம் அம்மா பேருக்கு அனுப்பி வை மாப்ள… அடுத்ததா, மாசமாசம் இவ்வளவு மட்டுமே செலவு பண்ணனும்னு ஒரு பட்ஜெட் போட்டு வாழக் கத்துக்கோ! தறிகெட்ட குதிரையாட்டாம் கண்டபடி ஊர் மேயுறதை விட்டுத்தொலை!” கதிரவன் பலத்த கொட்டு வைத்து அறிவுறுத்த இவனுமே கடமையாக தலையாட்டிக் கொண்டான்.
‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் இருந்தவனுக்கு, எப்படியாவது குடும்பத்தினரின் தொடர்பில் இருந்தால் போதுமென்று மூத்தவரின் சொல்படி கேட்டு நடக்க பழக்கப்படுத்திக் கொண்டான்.
மாதந்தோறும் இவன் அனுப்பி வைத்த தொகையைப் பார்த்த பிறகே, அரைகோடியை தொடவிருந்த இவனது மாத வருமானம் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
“இப்படி கணக்கில்லாம சம்பளம் அள்ளிக் கொடுக்கிறதால தான் எல்லா பயபுள்ளையும் யாரையும் மதிக்காம இஷ்டத்துக்கு ஆடித் திரியுதுங்க!” நிதர்சனத்தை கூறிய கதிரவனும், “எப்படியோ நல்லா இருடா மாப்ள!” மனதார வாழ்த்தியதை கெட்டியாகப் பற்றிக் கொண்டான் ராம்சங்கர்.
அம்மா பரிமளவல்லியும் உள்ளுக்குள் பூரித்துப் போனார். “நல்லா தான் சம்பாதிக்கிறான். நீ கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சிருந்தா ஒழுங்கா இருந்திருப்பான் அரவிந்தா! இங்கன இருந்த வரைக்கும் நல்லபையனாத் தானே இருந்தான். என்னவோ போதாத நேரம், ஆகாத கேடு புடிச்சு ஆட்டம் போட்டுட்டான்.” பெரிய மகனைக் குறைகூறி, சிறியவனுக்கு பாவம் பார்த்தார் பரிமளம். தாய் மனதின் வீம்பு வீரத்திற்கெல்லாம் ஆயுசு மிகவும் குறைவு என்பதை நிரூபித்தார்.
மற்றவர்களும், ‘பரவாயில்லையே!’ என வருமானத்தை கேட்டு புருவம் உயர்த்திவிட்டு, “சரி, இனிமேலாவது ஒழுங்கா இரு!’ என்று சமாதானமடைந்து ஏதோ பேசத் தொடங்கி விட்டனர்.
குடும்பத்தினர் மனதில் விகல்பமின்றி பேசத் தொடங்கியிருக்க, ராம்சங்கரோ, ‘பணத்தைப் பார்த்ததும் இயல்பாய் சிரித்து பேச ஆரம்பித்து விட்டனரே! முன்னமே வருமானத்தை சொல்லி அவர்களை வசப்படுத்தி இருக்க வேண்டுமோ!’ தனக்குள் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டான்.
தனது குணத்தை, இயல்புகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று மருகிக் கொண்டிருந்தவனின் உள்ளம் சற்றே மாற்றம் பெற்று முன்னைப்போல் ஏற்றம் கண்டது. அதன்படி தனது உல்லாசத் தேவைகளை சரிபாதியாக சுருக்கிக்கொண்டு முடிந்தளவு அதிகப்படியான பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஒரு பக்கம் தன் மீதான தவறில் குற்றமுள்ள நெஞ்சாளனாக குறுகுறுத்துக் கொண்டிருந்தாலும், அவனது இளமையும் ஆசையும் கையை கட்டி சும்மா இருக்க விடவில்லை. ருசி கண்ட பூனை அத்தனை சீக்கிரத்தில் வாலை சுருட்டிக் கொண்டு அடங்கிக் கொண்டதாக சரித்திரம் இல்லையே!
அதிகமான இடைவெளியில் ரசித்து ருசிக்கும் அனுபவசாலியாக மது, மாது உல்லாசங்களை கட்டுக்கோப்பில் வைக்கத் தொடங்கினான். வீட்டில் கேட்கும் பொழுதெல்லாம், “ஒழுங்காக இருக்கிறேன்.” என்று சப்பைக்கட்டு கட்டி விடுவான்.
‘மாதந்தோறும் தான் பணத்தை அனுப்பி வைத்து விடுகிறானே… பின் எப்படி முன்னைப் போல ஊர் மேய முடியும்?’ குடும்பம் முழுவதுமே எதார்த்தமாக கணித்து, இவன் நல்லவனாக மாறிவிட்டான் என நம்பத் தொடங்கினர். இன்றளவும் இவனைப் பற்றிய கணிப்பு அப்படியேதான்!
ராம்சங்கர் அனுப்பி வைத்த பணத்தை பத்திரப்படுத்தி இரட்டிப்பு செய்யும் வேலையை அண்ணன் அரவிந்தனும் மாமா முகிலனுமே மேற்கொண்டனர். கதிரவன் ரியல் எஸ்டேட்டில் கரைகண்டவர் என்றால் முகிலன் பங்குச்சந்தை முதலீட்டில் ஜாம்பவானாக இருந்தார். சுதர்சனின் கவனமெல்லாம் ஆட்டோமொபைல்ஸ் விற்பனையில் மட்டுமே!
அதனால் அவனுக்கும் இவர்களுக்கும் என்றுமே தொழில்ரீதியாக ஒட்டுதல் கிடையாது. ஆரம்பகாலத்தில் இணைந்து தொழில் செய்ததையும் காலப்போக்கில் தனது விருப்பமின்மையை கூறி விலகிக் கொண்டான் சுதர்சன்.
தொடர்ந்து மூன்று வருடங்கள் ராம்சங்கரின் கையிருப்புகளை தங்கம் வெள்ளியாக பங்குச்சந்தையில் சேமித்து கணிசமான அளவில் உயர்ந்ததுமே அதை விற்று பெரிய முதலீட்டிற்காக ரொக்கமாக மாற்றி வைத்தனர். அந்த நேரத்தில் அத்தை மனோன்மணியின் இறப்பு சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்து விட, முதலீடு செய்யும் யோசனையும் தேக்கம் கொண்டது.
மனோன்மணியின் இறப்பிற்கு புகுந்தவீட்டு உறவாக வந்து நின்ற விஸ்வநாதனை, ராம்சங்கரின் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவருக்கும் அப்படியே! முக்கியமாக அரவிந்தனும் கிருஷ்ணாவும் அவரிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்துப் பார்த்து பிரமித்தார்.
இருவரின் பண்பான குணமும் அன்பான பேச்சும் அவர்களின் மூன்று பிள்ளைகளிடமும் வெளிப்பட்டதில் குழந்தைகளை அப்படி ரசித்துப் பார்த்தார். அதோடு மருமகளை கொண்டாடிக் கொள்ளும் பரிமளத்தின் அமைதியான சுபாவம், அவரை ஆச்சரியத்தின் உச்சாணிக் கொம்பில் நிறுத்தி விட்டது.
விஸ்வநாதனோடு அவரது மனைவி காஞ்சனாவும் அந்த குடும்பத்தாரோடு மிகவும் பொருந்திப் போனார். அரவிந்தனின் தொழில்தன்மை, குடுமத்தில் கிருஷ்ணாவின் நிர்வாகம், அந்த குடும்பத்திற்கு இருந்த நற்பெயரை எல்லாம் அலசி ஆராய்ந்தவர்கள் மாற்று யோசனையை செய்யவே இல்லை. தங்கள் பெண்ணிற்கு ராம்சங்கரை கேட்டு நின்றனர்.
முப்பது நாட்கள் முடிந்து மீண்டும் வரும்பொழுது சுபகாரியமாக ராம்சங்கரை மாப்பிள்ளையாக கேட்டுவிடவும், கதிரவனின், “யோசிச்சு சொல்றோம்.” என்ற பதிலில் காத்திருக்கத் தொடங்கினர்.
மீண்டும் ராம்சங்கரின் முதலீடு தொடர்பான பேச்சு வளர்ந்த நேரத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு யோசனையை முன்வைத்தார் விஸ்வநாதன்.
இவரின் பூர்வீகம் தஞ்சாவூரை சேர்ந்த கிராமமாக இருந்தாலும், கட்டுமானத் தொழிலில் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக கன்ஸ்ட்ரக்ஷனில் இறங்கி விட்டார். அதற்குரிய படிப்பையும் முடித்திருக்க, தெளிவான நிதானமான அனுபவம், அவரது தொழிலில் பல வெற்றிகளை பெற்றுத் தந்தது.
தனது சொந்த முயற்சியில், ‘விஸ்வா கிரியேட்டர்ஸ்’ என்ற பெயரில் வீடுகளை கட்டி விற்பனை செய்வதை சென்னையில் ஆரம்பித்தார். பின்னர் படிப்படியாக பல கிளைகளை தமிழ்நாட்டில் தொடங்கி, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை ஒப்பந்த முறையிலும் தனியாகவும் கட்டி இன்றளவும் விற்பனை செய்து வருகிறார்.
சென்னையில் தொழிலோடு வாழ்க்கையையும் தொடங்கியவர், கடந்த பனிரெண்டு வருடங்களாக மதுரை திருப்பாலையில் அமைதியான பங்களாவில் வசித்து வருகிறார். ராம்சங்கர் குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்ட சமயத்தில், ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த பேச்சுக்களோடு இவரது கன்ஸ்ட்ரக்ஷன் தொடர்பான பேச்சுகளும் வந்தன.
ராம்சங்கரை தனது கட்டுமானத் தொழிலில் பங்குதாராரக சேர்த்துக் கொள்ளும் யோசனையை பெரும் ஆவலுடன் சொன்னார்.
“என்னோட ஷேர்ஸ்ல ஒரு பார்ட் உங்க தம்பிக்கு தர்றேன். என் கம்பெனியில இன்வெஸ்ட் பண்ணுங்க!” அரவிந்தனிடம் சொல்ல,
“இல்ல மாமா… என் தம்பி தொழில், நிர்வாகம் எடுத்து நடத்துற அளவுக்கு பொறுமைசாலி இல்ல… பக்குவமா கணக்கை கூட பார்க்க மாட்டான்.” தம்பியை அறிந்தவனாக மறுக்க,
மற்ற ஆண்களும், “இன்னும் கொஞ்சநாள் போகட்டும். இதைப் பத்தி யோசிப்போம்.” என கிடப்பில் போட்டனர்.
“நாம உறவாகப் போறோமோ இல்லையோ… ஒருத்தனுக்காக, நீங்க மொத்தக் குடும்பமும் மெனக்கெட்டு வேலை செய்யுறதை பார்க்கும் போது, எனக்குமே இந்த குடும்பத்துக்காக இறங்கி வேலை செய்யனும்னு தோணுது.” விடாமல் தனது ஆசையை கூறிய விஸ்வநாதன், ட்ரீம்ஸ் நியூ புராஜெக்டை பற்றி எடுத்துக் கூறினார்.
“எஸ்டிமேட் கையை மீறிப் போயிடும் மாமா… சொத்து வாங்கிக் கொடுக்கிறேன்னு அவனுக்கு பாரமேத்தி வைக்கக் கூடாது.” அரவிந்தனின் தயக்கத்திற்கும் வழியைக் கூறினார் விஸ்வநாதன்.
“லோன் போடுவோம் அரவிந்த்… இப்பவே பத்து பிளாட்க்கு டோக்கன் அட்வான்ஸ் வாங்கியாச்சு. பில்டிங் முடிஞ்சதும் சீக்கிரமாவே பாதி அமவுண்ட் எடுத்திடலாம்.”
“மீதி பாதியும் பெரிய தொகை தானே?” கதிரவன் யோசிக்க,
“பிஃப்டி பிஃப்டி பார்ட்னர்ஷிப் போட்டுப்போம் தம்பி… இன்வெஸ்ட் பண்ணுங்க. புராசஸ் நடக்கட்டும். மீதியை உங்களுக்கு லோன் கிடைக்கிறதை வச்சு பார்த்துக்கலாம்.” யோசனை சொன்ன விஸ்வநாதனின் வலியுறுத்தலில் அறுபது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சொந்தக்காரன் ஆகிவிட்டான் ராம்சங்கர்.
தொழில்நிமித்த சந்திப்பிற்காக அரவிந்தனின் வீட்டிற்கு வரும் விஸ்வநாதன், திருமணத்தை பற்றிய பேச்சு வார்த்தைகளை மீண்டும் கையிலெடுக்க, ராம்சங்கரை வளைத்துப் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார் பரிமளம்.
கட்டிட வேலை முழுதாய் முடிந்து வரவும், திருமணம் நெருங்கி வருவதும் ஒன்றாக இருக்க, இன்றையதினம் திருமணத்தோடு வீட்டு வளாகத்தின் கிரஹப்பிரவேசமும் இனிமையாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
வங்கிக்கடன் மூலம் ராம்சங்கர் தனது பங்கிற்கான பணத்தை முழுதாய் கொடுத்து கணக்கை நேர்செய்து விட்டான். மீதமுள்ள பங்கிற்கான உரிமையை மகளின் பெயருக்கு அன்பளிப்பாக எழுதி வைத்து விட்டார் விஸ்வநாதன்.
“என் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கிரஹப்பிரவேசத்துக்கு நான் செய்யுற சீர்வரிசையா இருக்கட்டும். வேண்டாம்னு சொல்லாதீங்க!” காரணகாரியத்தோடு கொடுத்ததை தடுக்க முடியவில்லை.
மகளுக்கான செய்முறை என்று திட்டவட்டமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது யாரால் என்ன சொல்லி மறுக்க முடியும்? நிறைந்த மனதுடன் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டனர்.
திருமணம் முடிந்த ஒருநாளில் இத்தனை எடுத்துச் செய்பவரைப் பார்த்து மாப்பிள்ளையின் குடும்பம் அதிசயப்பட்டுத்தான் போனது.
மகளிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் விஸ்வநாதனை பற்றி அவர்கள் இன்னும் அறிந்து கொண்டிருக்கவில்லை. தொழிலில் கறார் காட்டும் மனிதராக மட்டுமே இதுவரையில் பார்த்தும் பழகியும் வந்திருக்கின்றனர்.
“பிடிக்கல டாட்… கம்பெல் பண்ணாதீங்க!” மெல்லிய சிணுங்கலோடு, தந்தையிடம் அடம்பிடித்தவளின் பேச்சினை எல்லாம் காற்றில் பறக்க விட்டவராய் மகளை மனையில் அமர்த்தி, அருகேயே தானும் அமர்ந்திருந்தார் விஸ்வநாதன்.
“இவ என்ன கைக் குழந்தையா? இறக்கி வைக்காத கொறையா இவளையே ஒட்டிட்டு உக்காந்திருக்கீங்க! போய் வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட்டு பேசுங்க! சம்மந்தகாரங்க முன்னாடி அசட்டுத்தனமா இருக்காதீங்க!” கிசுகிசுப்போடு கணவர் விஸ்வநாதனின் காதினை கடித்தார் காஞ்சனா.
“செல்லம்மா… ஒழுங்கா, நிமிர்ந்து உக்காரு! ஹோமத்தை கவனி, முகத்தை சுருக்காதே!” அதட்டிய தாயின் பேச்சினை மகளால் தட்டிக் கழிக்க முடியவில்லை.
தந்தைக்கும் மகளுக்கும் உரிமையாக கொட்டு வைத்து இருவருக்கும் அவ்வப்போது நிதர்சனத்தை உணர வைக்கும் குடும்பத்தலைவியின் அறிவுரை மகளுக்கு வேப்பங்காயாக கசந்தது.
“என்னை இப்படி ட்ரீட் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல டாட்… ரெடிகுலஸ்… எல்லாம் முடியட்டும், உங்களுக்கு இருக்கு.” தாயிடம் காட்ட முடியாத கடுப்பை எல்லாம் தந்தையிடம் இறக்கி வைத்தாள் விஸ்வாதிகா.
“இங்கே பேசுறவ உன் மாமியார்கிட்ட போயி சொல்லேன்? அவங்க சரின்னு சொன்னா நானும் உன்னை கம்பெல் பண்ணல!” காஞ்சனா சொன்னதைக் கேட்டு சற்றே தடுமாறினாள்.
பரிமளத்தின் அமைதியான சுபாவம் புது மருமகளுக்கு அத்தனை தயக்கத்தை கொடுத்தது. வெளியாட்களிடம் முகம் பார்க்காமல் பேசிப் பழக்கப்பட்டவளுக்கு கணவனது குடும்பத்தாரிடம் எப்படி பேசிப் பழகுவது என்றே பிடிபடவில்லை.
அரவிந்தன், கிருஷ்ணாவின் சிநேக பாவனை மட்டுமே தற்போது அவளுக்கு இருக்கும் ஆறுதல். மூன்று நாத்தனார் குடும்பங்களை நினைத்தாலே சோர்வு தட்டி விடுகிறது. அதிலும் சுதாமதியும் சாருமதியும் சேர்ந்து எப்போதும் பரிமளத்திடம் குசுகுசுவென பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சற்றே எரிச்சல் வரத்தான் செய்கிறது.
‘நாத்தனார் பவரை காட்டுகிறார்களோ… மாமியாரும் அவர்களின் பேச்சினைக் கேட்டு குற்றம் குறைகளை அடுக்கி வைப்பாரோ!’ யோசித்தவளின் உள்ளம், ‘அதெல்லாம் என்கிட்ட நடக்குமா? நான் யாரு!’ உள்ளுக்குள் இறுமாப்பு கொண்டாலும், ஏதோ ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வப்போது சின்ன நாத்தனார் சுமதியின் கேலிப்பேச்சுகளும் ராம்சங்கருடனான அவளது வாய்ச் சாவ்டால்களும் தான் சுவாரஸ்சியம் கொள்ளச் செய்கின்றன.
“கோபப்படாதே செல்லம்மா… இதெல்லாம் வேண்டாம்னு தட்டிக்கழிக்கக் கூடாது. பழகிக்கணும்டா!” மகளை கொஞ்சும் குரலில் சமாதனம் செய்தவரை இயலாமையுடன் பார்த்தாள்
“இங்கே என்னடி பார்வை? மாப்பிள்ளைய பாரு… எவ்வளவு அழகா உக்காந்த இடத்துல இருந்தே வந்தவங்கள வாங்கன்னு சொல்லி கவனிக்கிறாரு!” காஞ்சனா, ராம்சங்கரை காண்பிக்க, அவனும் அவ்வாறே புன்னகை முகமாக இருந்தான்.
“எனக்கு தெரிஞ்ச ஆள் வந்திருந்தா நானும் கூட இப்படி ரிசீவ் பண்ணி இருப்பேன்.” என கடுகடுத்தவள் அவனை உற்றுப் பார்த்தாள்.
பஞ்சகச்ச வேட்டியில் சந்தனம் பூசிய மார்போடும் கழுத்தில் மாலையோடும் வசீகரனாக அமர்ந்திருந்தான் ராம்சங்கர். ‘இவனுக்கு எல்லாமே செட் ஆகுது. பரவாயில்ல, நல்லாத்தான் இருக்கான்.’ அலட்சியப் பார்வையில் ரசித்தாள்.
விமானநிலையத்தில் ஜீன்ஸ் டி-சர்ட், ஜவுளிக் கடையில் பார்மல் டிரெஸ், திருமணத்தின் போது பட்டுவேஷ்டி வரவேற்பில் கோட்-சூட் என அனைத்திலும் கச்சிதமாய் பொருத்திப் போனவனை நினைவு கூர்ந்தாள். இவளது ரோஜா நிறத்திற்கும் அவனது சிவந்த மேனிக்கும் இருந்த பொருத்தத்தை பார்த்து புருவம் உயர்த்தினாள் விஸ்வாதிகா.
“என்ன விஸ்வா? நம்ம ரெண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்து முடிச்சிட்டியா? எப்படி இருக்கு நம்ம பேர்(pair)? லவ்லி, ஸ்மார்ட்டர், கியூட், சார்மிங் எதுல செட் ஆவோம்?” மலர்ந்த சிரிப்பில் மெதுவாக கேட்டவனை ரசித்துப் பார்த்தாள்.
‘இவனுக்கு எப்பவும் ஸ்மைலிங் ஃபேஸ் தானா? இல்ல ஃபங்சன் நடக்கிறதால மட்டும் இப்படியா?’ அவளின் மனம் ஆராய்ந்தது.
எப்போதும் மாறாத புன்னகை முகத்துடன் தான் நேற்றில் இருந்து அவளை வளைய வந்து கொண்டிருக்கிறான். தங்கையிடம் செல்லச் சண்டையிடும் போது மட்டுமே இவனது முகமும் மூக்கும் சிவந்து வேர்த்து விடும். பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்.
நேற்றைய தினம் திருமணம் முடிந்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த வேளையில், ராம்சங்கரின் கையில் சின்னதொரு பரிசுப் பொருளை கொடுத்து, “என் சின்ன மதினிய கண் கலங்காம காப்பாத்த வேண்டியது உன் கடமைடா அண்ணா…” சுமதி தொடங்கிய வேடிக்கை விளையாட்டு நன்றாகவே சூடுபிடித்துக் கொண்டது.
“வெங்காயம் உரிக்கும் போது கூட தங்கச்சிய கண்ணை கசக்க வைச்சு, கடமையில இருந்து தவறிடாதீங்க மச்சான்!” சுதர்சனும் மனைவியுடன் கூட்டு சேர்ந்து கொள்ள,
“அதுக்குதான் சூப்பரா கிஃப்ட் கொடுத்திருக்கேன். என் அண்ணேன் யூஸ் பண்ணிடுவாப்புல!” சுமதியின் பேச்சில் ஆர்வம் தாங்காமல் பார்சலை பிரித்துப் பார்த்த ராம்சங்கர், அதிலிருந்த வெங்காயம் அரியும் பிளாஸ்டிக் சாப்பரைப் பார்த்து முகம் சுருக்கினான்.
“என்னடி பாசமா கொடுக்கறேன்னு பார்த்தா கேலி பண்றியா?” சுமதியிடம் கடுகடுத்துப் பேசியவன்,
சுதர்சனைப் பார்த்து, “என் தங்கச்சிய கண்கலங்காம காப்பாத்துற உங்களுக்கு தான் இது தேவைப்படும் மாமா! வச்சுகோங்க!” என்றபடி அந்த சாப்பரை அவனது கைகளில் திணித்தான்.
“அண்ணி நோட் பண்ணுங்க… இவன் வெங்காயம் உரிச்சு கொடுக்கற வரைக்கும் உங்க சமையலை சாப்பிடுற தண்டைனைய கொடுங்க!” சுமதி பேச்சோடு பேச்சாக விஸ்வாதிகாவையும் வாரிவிட,
“உசுருக்கு உலை வைக்காதேடி…கல்யாணம் முடிஞ்சு ஒருமணி நேரம் கூட ஆகல…” ராம்சங்கர் பொய்யாய் கோபித்துக் கொண்டான்.
“ஆமா சுமதி… கொஞ்சநாள் ஹாப்பியா இருக்கட்டும் அப்புறம் வச்சு செய்வோம்!” முதன்முறையாக நீளமாகப் பேசி சுமதியை மடக்கிய புது மணப்பெண்ணை பார்த்து வெடித்துச் சிரித்தனர்.
“என்ன மாப்ள எங்கேயும் உனக்கு மெஜாரிட்டி கிடைக்காது போலிருக்கே?” முகிலனின் கேலியில் முகம் சுருக்கிய மாப்பிள்ளை, “நீங்களுமா மாமா?” கடுப்பான பார்வையில் கேட்ட பொழுது குட்டிப்பெண் அவனருகே வந்து அமர்ந்தாள்.
“ராமுப்பா டோன்ட் ஆங்கிரி… கோபப்பட்டா சீக்கிரம் வெள்ளை முடி வந்துடும். கூல் டவுன்.” ஆறுவயது பிரணவி வந்து முதுகு தட்டிக் கொடுக்கும்போது தானாய் சிரித்து விட்டான்.
“என் லட்டுமா பக்கத்துல வந்தா எனக்கும் கோபம் போயிடுமே!” என்றவாறு அண்ணன் மகளை மடியில் அமர்த்தி முத்தம் கொடுத்த நேரத்தில்,
“பொய், பொய்… ரொம்ப ஏஜ் ஆனா தான் வொயிட் ஹேர் வரும்.” எட்டுவயது வைணவி சொல்லும் போது, அவளுக்கும் அதே அன்பு முத்தத்தை பரிசளித்து அமரவைத்துக் கொண்டான்.
“இல்லல்ல… பாட்டி சொல்லி இருக்காங்க! அவங்க அடிக்கடி கோபப்பட்டங்களாம்! அதான் நிறைய வெள்ளை முடி இருக்காம்!” சுமதியின் பெண் ஏழுவயது சாத்விகாவும் வந்து சேர்ந்து கொள்ள, அவளுக்கும் அதே பரிசு கொடுத்து முதுகில் உப்பு மூட்டையாக சாய்த்துக் கொண்டான்.
“ஆனா பாட்டிக்கும் வயசாயிடுச்சு தானே?” அரவிந்தனின் மகன் வைபவ் யோசனையாக கேட்டு நிற்க, ராம்சங்கர் முழித்தான்.
“இப்ப என்ன செய்யணும்னு சொல்றடா?”
“என் மருமகன் கேள்விக்கு பதில் சொல்லு மாப்ள!” சீண்டலைத் தொடர்ந்தாள் சுமதி.
“ஏஜ் ஆகாம வொயிட்ஹேர் இருந்தா அவங்கதான் ஆங்கிரி மேன்.” முடிவாக கூறினான் வைபவ். வைணவியின் இரட்டை சகோதரன் இவன்.
“நம்ம நாட்டாமை தீர்ப்பு சொல்லிடாரு… அடுத்த பஞ்சாயத்துக்கு வாங்க!” என அதிரடியாக முழங்கியது பனிரெண்டு வயது சஞ்சயின் குரல். சுமதியின் மகன். தற்போதைய இளைய தலைமுறையின் தளபதி இவன்.
சுதாமதி, சாருமதியின் மகன்கள் படிப்பு முடிந்து தங்களுக்கான வேலைகளில் ஆளுக்கொரு பக்கமாக சென்று பொருந்திக் கொள்ள, இப்பொழுது ராம்சங்கரின் வீடு இந்த தளபதி படையினரின் அட்டகாசத்தில் தான் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
“என்ன விஸ்வா பதிலக் காணோம்?” முழங்கையால் இடித்து மனைவியை நிகழ்விற்கு திருப்பினான் ராம்சங்கர்.
“நத்திங்.” என்ற ஒற்றை வார்த்தையோடு அவள் முடித்துக் கொள்ள,
“எல்லாத்துக்கும் ஒன் வேர்ட் ஆன்சர் தானா?” உச்சுக் கொட்டிய வேளையில் மூன்று சின்னஞ்சிறிய தேவதைகள் அங்கே வந்து நின்றனர்.
“எங்க மூனு பேருல யார் சூப்பர்ன்னு சொல்லு ராமுப்பா!” வைணவி இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்க மூவரையும் கண்ணெடுக்காமல் பார்த்தான்.
பட்டுப்பாவாடையில் ஒட்டியாணம், நெத்திச்சுடி என வரிசையாக சின்னச் சின்ன நகைகளை அணிந்து கொண்டு குட்டி தேவதைகளாக முல்லைப் பற்கள் தெரிய சிரித்து, இடுப்பில் கை வைத்து அசைந்தபடி நின்றிருந்தனர் வைணவி, சாகித்யா, பிரணவி.
“உங்க சித்திகிட்ட கேளுங்க ஏஞ்சல்ஸ்… கிளியர் ஒன்வேர்ட் ஆன்சர்ல சொல்லிடுவா!” கண்சிமிட்டி குறும்பு பேசியவனை முறைக்கத் தோன்றவில்லை.
“மூனு பேருமே சூப்பர்.” விஸ்வா பதில் சொல்ல,
“யார் பெஸ்ட்ன்னு தெரியணும். நீ சொல்லு ராம் மாமா!” சாகித்யா அவனிடம் கேட்க,
“சாகி குட்டி சூப்பரோ சூப்பர்!” என ஆரம்பித்தான்.
“அப்போ… நானு?” வைணவி இழுக்க,
“நீ ரியலி, வெரி சூப்பர்!”
“நான் ராமுப்பா? பாரு… ஸ்டோன் வச்ச ஒட்டியாணம் நான்தான் போட்டுருக்கேன்.” சின்ன இடுப்பை அசைத்துக் காட்டிய பிரணவி அழகாய் கேட்க,
“என் லட்டுமா எப்பவும் டாப் டக்கர்டா!” சின்னச்சிட்டை கொஞ்சியபடி வழக்கம் போல தன்னிடம் அமரவைத்துக் கொண்டான்.
“நீங்களும் உக்காருங்க செல்லங்களா… இந்த கும்பத்துக்கு பூ போடுங்க!” என்றவாறே குட்டி தேவதைகளை அருகில் வைத்துக் கொள்ள, ராம்சங்கரை அறிந்து கொள்ளும் ஆர்வம் மனைவிக்கு அதிகரித்தது.
‘தான் பார்த்த வரையில் குழந்தைகள் என்றாலே கணவன் அப்படி உருகிப் போகின்றானே… அத்தனை பாசமா? முக்கியமாக லட்டுமா என்றழைத்து பிரணவியை அடிக்கடி அருகில் அமர வைத்துக் கொள்ளும்போது, அவன் முகத்தில் தோன்றும் மலர்ந்த புன்னகை இவனது அன்பினைச் சொல்லிவிடும்.
தனிமை வாழ்க்கையின் ஏக்கத்தை குழந்தைகளை கொஞ்சிப் பேசி சமன் செய்து கொள்கின்றானா? அல்லது இவனுக்குள் இத்தனை இளகிய மனமா? நல்லவனாக இருந்தாலும் இப்படியான அன்பு ஒருவனிடத்தில் காண முடியுமா?’
விஸ்வாதிகாவின் கேள்விகள் வளர்ந்துகொண்டே சென்றன. அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனுடனான தனிமைப் பொழுதை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கினாள்.