தேனாடும் முல்லை – 3

முல்லை-3

அன்றைய விசேஷங்கள் விருந்துகள் முடிந்த மாலை வேளையில் அந்தப் புதியவீடு, குடித்தனம் பண்ணுவதற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் தயாராகி இருந்தது.

புதிய வாழ்க்கையை புது வீட்டில் இருந்தே தொடங்கட்டும் என பெரியவர்கள் கூறியதும் ஃபர்னிச்சர் வகையறாக்களை தனது மேற்பார்வையில் உடனேயே கொண்டு வந்து இறக்கி விட்டார் விஸ்வநாதன்.

சமையலறை, மற்ற இத்யாதி பொருட்களை சுமதியும் கிருஷ்ணாவும் சேர்ந்து வரவழைத்து, வீட்டு ஆட்களுடன் பொருட்களை ஒதுக்கியும் வைத்து விட்டனர்.

“உன் கையால இன்னைக்கே சமையல் ஆரம்பிச்சிடு ஆதி!” பரிமளத்தின் உத்தரவில், அமைதியாக அடுப்பை பற்ற வைக்கும் மிகப்பெரிய வேலையை செய்து விட்டாள் விஸ்வாதிகா.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அடுப்பில் ஏற்றி வைத்து விட்டு அசையாமல் நிற்க, என்னவென்று பார்வையால் கேட்டாள் கிருஷ்ணா.

“இதுக்கு மேலே எனக்கு ஒன்னும் தெரியாதுக்கா!” கிசுகிசுப்பாய் கூறினாள்.

பெரியவர்களின் முன்னிலையில் சொல்வதற்கு அத்தனை தயக்கம். ‘இவ்வளவுதானா உங்க வீட்டுப் பொண்ணு?’ புகுந்த வீட்டினர், பெற்றவர்களை பார்த்து ஏதும் சொல்லி விடுவார்களோ என்று பின்னடைந்தாள் புதுப்பெண்.

‘ஒய்வு நேரத்தில் எதையாவது கிண்டப் பழக்கிக்கொள்!’ என அம்மா காஞ்சனா சொல்லியது எல்லாம், இப்போது காதிற்குள் அசரீரியாக ஒலித்து பயங்காட்டியது. ‘நான் சொன்னேனே கேட்டியா?’ கண்டனப் பார்வையால் முறைத்த அம்மாவை இயாலாமையுடன் பார்த்தாள்.

“பரவாயில்ல ஆதி… நான் சொல்லச் சொல்ல செஞ்சிட்டே வா, பழகிடும்.” கிருஷ்ணாவின் பேச்சில் அரண்டே போனாள்.

“இம்பாசிபிள் டீச்சர்… கிட்சன் காத்து பட்டாலே எனக்கு  அலர்ஜி, உடம்புக்கு ஒத்துக்காது.” அசால்டாய் தோள்குலுக்கி, ‘செய்யமாட்டேன்’ என்று நின்றவளைக் கண்டு வெடித்துச் சிரித்தாள் சுமதி.

“பின்ன சாப்பிடறது எப்படி?” நமட்டுச் சிரிப்பில் சுமதி கேட்க,

“சீரியல் பிடிக்கலன்னு டிவிய யாராவது ஒதுக்கி வைப்பாங்களா சுமதி?” வக்கணையாக பதிலளித்தாள் விஸ்வாதிகா.

“டீச்சர் அண்ணி, உங்க கையில மாஸ்டர் சிக்கின மாதிரி மாஸ்டர் பில்டரும் சிக்கியிருக்காங்க! நல்ல சான்ஸ், மிஸ் பண்ணாம வச்சு செய்யுங்க…” கேலி பேசிய சுமதி,

ஆதியின் பக்கம் திரும்பி, “டோன்ட் வொரி பில்டர் அண்ணி… ஃபர்ஸ்ட் அந்த சாப்பர்ல காய்கறி கட் பண்ண பழகிக்கோங்க… அப்புறம் டிவிய ஒதுக்கி வைக்கிறதை பத்தி யோசிப்போம்.”

“ஐயோ… நான் பசி தாங்காத சின்ன புள்ளை சுமதி!”

இதைக் கேட்டு, “டேய் அண்ணா… நீ கொஞ்சமே கொஞ்சம் பாவம்தான்.” சமையலறையில் இருந்தே ராம்சங்கரை கிண்டலடித்தாள் சுமதி.  

“அலறாதே ஆதி… ஆந்த்ராய்டு டிவியில லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடுவோம். தெம்பா கிளாஸ்ல சேர்ந்துக்கோ!” கிருஷ்ணாவும் சுமதியும் மாறிமாறி குறும்பு பேசியதில் புது இடம், புது மனிதர்கள் என்பதே மறந்து அவர்களுடன் ஒன்றிப் போனாள் விஸ்வாதிகா.

சிரிப்போடு இரவு உணவினை முடித்துக்கொண்டு அனைவரும் விடைபெற்றுக் கொள்ள, இப்போது புதிய வீட்டில் புதுமணத் தம்பதிகள் தனித்து விடப்பட்டனர்.

அமைதியான இரவு நேரத்தில் வீட்டினை பூட்டி பத்திரப்படுத்திய ராம்சங்கர் படுக்கையறைக்குள் நுழைந்தபோது எந்தவித அலங்காரமுமின்றி அறை மிக நேர்த்தியாக இருந்தது.

அங்கிருந்த கிங்சைஸ் கட்டிலில் அமர்ந்தவாறு மடிக்கணிணியை தட்டிக் கொண்டிருந்த விஸ்வாதிகாவும் எளிமையான இரவுநேர பைஜாமாவில்  இருந்தாள். கழுத்தில் தாலிச்சரடும், காதில் ஒற்றைக்கல் வைரக்கம்மலும் மட்டுமே… எப்போதும் போல் உயர்த்திக் கட்டிய போனிடைலில் கூந்தல் அடங்கியிருந்தது.

“ஜீன்ஸ் மோகினி இப்ப நைட்வியர் மோகினி ஆகிடுச்சு!”  ரசனையுடன் ராம் முணுமுணுக்க, அவளுக்கோ கேட்கவில்லை.

இந்தக்கால பெண்ணிடத்தில் பட்டுப்புடவை, பூ, பழம், நாணம் என்ற சம்பிரதாயத்தை எல்லாம் ராம்சங்கர் எதிர்பார்க்கவே இல்லை. எப்போது அல்ட்ரா மாடர்னாக அவளைப் பார்த்தானோ அப்பொழுதே மனைவியைப் பற்றிய கணிப்புகளை எடை போட்டு விட்டான்.

“என்ன விஸ்வா? இந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க?” அவளின் தோற்றத்தை அளவிட்டவனாக கேள்வி கேட்டான்.

“ஜஸ்ட் ஒன் ஹவர் ராம்! உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு!” எளிதாக இவள் ஒருமையில் அழைத்த விதத்தை தான் இவனால் தாங்க முடியவில்லை.

“என்ன இது? நீ, வா, போன்னு கூப்பிட்டுகிட்டு…” முறுக்கிய குரலுடன் எதிர்ப்பு தெரிவிக்க,

“உன்னை பார்த்த நேரத்துல இருந்து அப்படித்தானே கூப்பிடுறேன். நீ இப்பத்தான் நோட் பண்றியா?” சலிக்காமல் கேட்டாள்.

“பொய் சொல்லாதே!”

“ம்ப்ச்… உன்னை ராம்னு தானே கூப்பிட்டு பேசுறேன்?”

“ஆமா!” என்றவனின் நினைவில் மனைவி தன்னை பன்மையில் அழைத்ததாய் ஞாபகமில்லை. ‘அங்கே கூப்பிடுறாங்க ராம். அப்புறம் பேசலாம் ராம்.’ இப்படித்தான் இருவருக்குமிடையே பேச்சுகள் ஓடியிருந்தன.

“ஒஹ்… நான்தான் லேட்டா கவனிக்கிறேனா?” கேட்டவனுக்கு பதிலாக, அசட்டையாக தோள்குலுக்கி அலட்சியமாய் சிரித்தாள்.

“பேர் சொல்லிக் கூப்பிட்டா, மரியாதை கொடுக்கக் கூடாதுன்னு அர்த்தமா? அட்லீஸ்ட் வயசுல பெரியவன்னு நினைச்சாவது மரியாதை குடுக்கலாமே?”

“அப்படிப் பார்த்தா ஃபர்ஸ்ட் உன் சிஸ்டருக்கு தான் மரியாதை கொடுக்கணும். சுமதி, என்னை விட ரெண்டு வயசு பெரியவ… அண்ணின்னு கூப்பிடணும். பட், ஐ டோன்ட் லைக் இட்!”

“அவளும் நானும் ஒண்ணா?”

“மரியாதை கொடுத்து பழகினா, என்னால யார்கிட்டயும் குளோசா மூவ் பண்ண முடியாது. இப்ப என்ன சொல்ற நீ? சட்டென்று கேட்ட கேள்வியில் வாயடைத்துப் போனான்.

“பெரியவங்க ஸ்தானத்துல இருக்கிறவங்களை தவிர்த்து மத்தவங்களை பேர் சொல்லிக் கூப்பிட்டுத் தான் பழக்கம். அது யாரா இருந்தாலும் சரி. உன்னால முடிஞ்சா அக்செப்ட் பண்ணிக்கோ! இல்லன்னா…” நொடிநேரம் இழுத்து நிறுத்தியதும், மனைவியின் முகம் பார்த்தான் ராம்.

“காதை மூடிக்கோ… சிம்பிள்.” இலகுவான வழியைச் சொன்னவளாக தனது வேலையில் ஆழ்ந்தாள்.

‘ஐயோ சாமி! மரியாதை கிலோ என்ன விலைன்னு கேக்குறாளே… நம்ம வீட்டுப் பெருசுங்க எல்லாம் இதுக்கு ஒத்துப்பாங்களா?’ மனதிற்குள் அலறியவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.

“ரொம்ப உத்துப் பார்க்காதே ராம்! நீ என்ன சொன்னாலும் இன்னும் ஒன் ஹவர்க்கு உன் பேச்சை என் காது கேட்காது!”

“ஒஹ்… ஒரு நேரத்துக்கு ஒருவேலையை மட்டுமே பாக்குற மக்குப்பொண்ணா நீ? கண் பார்க்க வாய் வேலை செய்யாதோ!” வீம்புக்கென்று வம்பு வளர்க்க,

“அப்படியா தெரியுறேன்? சரி, ஃபிக்ஸ் பண்ணிக்கோ! ஆனா அந்த மக்குப்பொண்ணை சமாளிக்க முடியாம முழி பிதுங்கி நிக்கிற நீ, என்ன மாதிரியான அறிவாளி ராம்?” அசராமல் கேட்க, கையெடுத்து கும்பிட்டு விட்டான்.

“தெரியாம பேசிட்டேன்டி… இதோட விட்ரு!”

“அடப்போடா, சட்டுன்னு சரண்டர் ஆகிட்ட… சப்புன்னு போச்சு!” இத்தனை பேச்சில் பெண்ணின் பார்வை மடிக்கணிணியில் இருக்க, வாய் இவனிடம் பேசிக் கொண்டிருந்தது.

“டயர்டா இருக்கேன். என்னை பேச வைக்காதே… படுக்கலாம் வா!” சர்வ சாதரணமாக அழைக்க, அதைக் கேட்டவள் ‘அடேய்’ என மனதிற்குள் பல்லைக் கடித்தாள்.

‘வருஷக்கணக்கா என்கூட குடும்பம் நடத்தி, குதூகலமா இருந்தவனாட்டம் கூப்பிட்டுத் தொலைக்கிறானே! இவனுக்கு இங்கிதமே தெரியாதா?’ வெறுமையான பாவனையில் உறுத்துப் பார்த்தாள்.

“நீ தூங்க என்னை எதுக்கு மேன் கூப்பிடுற? இத்தனை பெரிய கட்டில்ல இடத்துக்கா பஞ்சம்? பாதிக்கு மேல ப்ரீ ஸ்பேஸ் இருக்கு. படுத்து புரளு!”

“அடியே, கடுப்பை கிளப்பாதே! உடைச்சு சொல்லணுமா உனக்கு?” பதிலுக்கு கடுகடுத்தான்.

புது மனைவியாக இருந்தாலும் இவள் வயதிற்கு விஷயம் அறிந்து வைத்திருப்பாள் என்றே நேருக்குநேராய் அழைத்துவிட்டான். பெண்ணை அழைக்க அவனுக்கு தெரிந்த வகை இதுவொன்று தான். பெண்ணிடத்தில் மயங்கிக் கிறங்கி, குழைந்து, தளர்ந்து கொஞ்சிப் பேசியெல்லாம் இவனுக்கு பழக்கமில்லை. எதுவென்றாலும் ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் மட்டுமே!  

மனைவியின் அழகை ஒருபுறம் ரசித்தாலும் இந்த நேரத்தில் இத்தனை பேச்சு தேவையா என சோர்வு கொண்டான். பின்னே முதலிரவன்று ஏட்டிக்கு போட்டியாக பேசிக் கொண்டிருப்பேன் என்று நினைத்தும் பார்த்திருப்பானா?

நேற்றில் இருந்து பதுமையாகச் சிரித்து அதிராமல் பேசியவள் இப்போது கன்னத்தில் இடிக்காத குறையாக வாய்க்குவாய் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். எங்கே சொல்லி முட்டிக் கொள்ள?

இரண்டு நாட்கள் சிரித்துப் பேசிய பழக்கத்தில் நெஞ்சு முட்ட அவளைக் கட்டியணைத்து காதல் செய்ய ஆசையிருந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்தான். வெட்கத்தை விட்டு அழைத்தும் பார்த்தாயிற்று!

இனியும் கெஞ்சுவதற்கு ஆணின் ஈகோ இடம் தவறவில்லை. ‘சரிதான் போடி!’ என கட்டிலின் மறுகோடியில் சென்று படுத்துக் கொண்டான். தலைகுனிந்து மடிக்கணிணியில் ஆழ்ந்திருந்தவளை பார்வையால் கொள்ளையடித்தான்.

‘என்னடா பண்ணிட்டு இருக்க?’ பதுங்கியிருந்த மனசாட்சி உள்ளுக்குள் இருந்து கூக்குரல் எழுப்பியது.

“சைட் அடிச்சிட்டு இருக்கேன்.”

‘உன்னைத் தான்டா மத்தவங்க சைட் அடிச்சுப் பழக்கம்.’

“அதெல்லாம் கழிசடைங்க… இவ என் பொண்டாட்டி, நான் சைட் அடிப்பேன்.”

‘அடச்சீ… கட்டின பொண்டாட்டிய சைட் அடிக்கிறேன்னு சொல்றியே வெக்காமாயில்ல?’

“வேற என்ன பண்ணச் சொல்ற? இப்போதைக்கு அதுக்குத்தான் பர்மிசன் கிடைச்சிருக்கு.”

‘டேய், நீ ராம்சங்கர்! பாதி சிரிப்புல பொண்ணுகளை கவுத்தி காரியம் முடிக்கிறவன். இப்ப என்ன கருமத்துக்கு இப்படி பம்மிட்டு நிக்கிற?’

“அந்த ராம்சங்கர் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு காணாம போயிட்டான். நீ மூடிட்டு போறியா? என்  பொண்டாட்டிய நான் என்னமும் செய்வேன். போடா அங்கிட்டு!” ஆட்டம் போட்ட மனசாட்சியை அடக்கி வைத்த பிறகும் மனைவியின் நிலையில் சற்றும் மாற்றமில்லை.

இன்னும் அவள் மடியில் அந்தக் கணிணி தவம் கிடந்தது. ‘நாளைக்கு மொத வேலையா இந்த லேட்பாப்பை மக்கர் பண்ணி வைக்கணும். அப்போதான் இவ ஃப்ரீயா இருப்பா! தனக்குள் முடிவெடுத்த வேளையில் கைகளைத் தூக்கி சோம்பலாக நெட்டி முறித்தாள் விஸ்வாதிகா.

“வேலை முடிஞ்சுடுச்சா விஸ்வா?” இளித்தபடி கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்னை விஸ்வானு கூப்பிடாதே?”

“வேற எப்படி கூப்பிடுறதாம்?”

“எப்டியோ கூப்பிட்டுக்கோ! பட், நோ விஸ்வா… அது எங்கப்பா பேர்.”

“சோ வாட்? உலகத்துல உங்கப்பாவுக்கு மட்டும்தான் அந்த பேர் இருக்கா என்ன?” வம்பாகக் கேட்க, அவளின் முறைப்பு பன்மடங்கானது.

“நீ சகட்டுமேனிக்கு விஸ்வா, வா, போ ன்னு கூப்பிடுவ… சமயத்துல டி போடுவ… அதெல்லாம் கேட்டு சகிச்சுட்டு இருக்க முடியாது.”

“ஒஹ்… இவ்ளோ பார்ப்பியா நீ? உங்கப்பா பேருன்னா மட்டும் மரியாதை பார்க்கத் தெரியுது.” புருவம் உயர்த்தி நக்கல் பேசினான்.

“இப்ப என்ன? உன்னை பிராணநாதான்னு கூப்பிட்டு கோவில் கட்டச் சொல்றியா?” வெறுப்புடன் முகம் சுழித்தபடி கட்டிலில் அவனுக்கு எதிர்புறத்தில் சென்று அவள் படுத்தும் விட, நொந்தே போனான் ராம்சங்கர்.

‘முதலுக்கே மோசம் வந்துடுச்சா சோனமுத்தா? இதுக்குதான் அடக்கிவாசிக்கச் சொல்றாங்களோ! என்னமோடா கல்யாண வாழ்க்கை உனக்கு ஒரு மார்க்கமாத்தான் ஆரம்பிக்குது. தனக்குள் புலம்பிக் கொண்டவனாக,

“மை டியர் மோகினி கோபமா?” சீண்டலாய் கேட்க, அடங்காத எரிச்சலுடன் அவனை முறைத்தாள்.

“என்னை கடுப்பேத்துற வேலையை மட்டுமே ஒழுங்கா பண்றடா!”

“என்ன பேசினா நீ சிரிப்பேன்னு சொல்லு, அப்படியே பேசுறேன்!”

“இப்ப உனக்கு கிளாஸ் எடுக்கற ஐடியா எனக்கில்ல… தூக்கம் வருது. ஆளை விடு!” கடுப்புடன் திரும்பிப் படுத்தவள்,

“புது பொண்டாட்டிகிட்ட எப்படி பீஹேவ் பண்ணணும்னு கூடத் தெரியாம இளிச்சிட்டு இருக்கான். சரியான வாத்து மடையன்.” முணுமுணுத்தவளின் வார்த்தைகள் துல்லியமாக ராம்சங்கருக்கு கேட்டு விட்டது.

“வேற எப்படி கேக்குறது? நீயே சொல்லு!” அசராமல் கேட்டவன், மிக அருகில் அவளை நெருங்கி, பட்டென்று திருப்பியிருக்க, புதுமனைவி கணவனை தடுக்கவேயில்லை.

‘பக்கத்துல வராதே… எனக்கு பிடிக்கல.’ என மறுக்கச் செய்வாளோ, கோபம் கொண்டு கத்துவாளோ என்றெல்லாம் நினைத்தான். அதற்கு மாறாக அவனது செயலை ரசிப்பவளாக, தன்னிடத்தில் அவனுக்கு இடம் கொடுக்கத் தொடங்கியிருந்தாள் விஸ்வாதிகா.

ராம்சங்கருக்கு ஆச்சரியமாய் இருந்தது. ‘இத்தனை நேரம் சிங்கப்பெண்ணாய் சிலிர்த்து வாய் பேசியவள், இப்பொழுது தன்னை ரசிக்கிறாளே! என்ன திடீர் மாற்றம்?’ கேள்வி எழுந்து அதை கேட்கவும் நினைத்தவன் அடுத்த நொடியே மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.

அவளொன்றும் அறியாத பதின்வயது சின்னப்பெண் அல்லவே… தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வின் ஓரங்கம். தம்பதியர்களுக்கு இடையேயான புரிதலுக்கு தொடக்கப் புள்ளியும் முற்றுப் புள்ளியும் அதுவே!

இது ஏன் எப்படி என்ற ஆராய்ச்சிக் கேள்விகளை யாரிடமும் கேட்கவும் கூடாது. அதற்கு பதிலும் கிடைக்காது. இன்னும் என்னென்ன செய்வான் என ஆர்வத்தோடு பார்த்தவளின் முகத்தை விரலால் அளந்தான்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி!” என்றவனின் விரல் முகத்தில் கோலம் போடத் தொடங்க உதட்டை பழித்துக் காட்டினாள்.

“உனக்கு பதில் சொல்ற நிலையில நான் இல்லன்னு சொல்லிட்டேன்.” என்றவளுக்கு விலகிப் படுக்க மனம் வரவில்லை.

கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும் அந்த நொடியை, உணர்வுகளை அனுபவிக்க ஆசையாகவும் இருந்தது. கணவன் மனைவி என்றால் தானாய் ஒரு ஒட்டுதல் வந்து விடுகிறது போல… வாழ்வின் ஆரம்பம் எப்படி இருந்தால் என்ன? இனி இவனுடன் தானே வாழ்க்கை என்று எண்ணுகையிலே தன்னையும் மீறிய நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டு புன்னைகையை வரவழைத்தது.

“என்ன சிரிப்பு?” முகத்தில் கோலம் போட்டு முடித்தவன் உதட்டுச் சிரிப்பினை அளக்க, அவளோ தடுக்கவேயில்லை. அவள் கண்ணில் ஓரப்பார்வை, இவன் கண்ணில் தாபப்பார்வை… இதைதான் இந்த காலத்தில் கெமிஸ்ட்ரி என்கிறார்களோ!

பெண்ணின் பேசாநிலை இவனுக்குள் உத்வேகத்தை கொடுக்க, “பட்டுப்புடவை, பூ எதுவும் இல்லாமயே என்னை கட்டியிழுக்கிற!” என்றவன் கன்னத்தோடு கன்னம் வைத்து முன்னேறிக் கொண்டிருந்தான்.

“ஹவ் நைஸ்… சறுக்கிட்டு இறங்குது. உங்கம்மா, உன்னை வெண்ணெயில குளிப்பாட்டி வளத்தாங்களா?” கன்னம், இதழ் தீண்டி கழுத்தில் இறங்கியிருந்தது அவன் கைகள்.

“அடேய்… கொஞ்சம் விட்டா என்ன பண்ற நீ?” தடைசெய்ய நினைத்தவளின் குரல் உயர எழும்பவே இல்லை. மாறாக இமைக்காமல் கணவனை ரசித்துப் பார்த்தவளின் பார்வைதான் முற்றிலும் மாறிப்போனது.

அவனது ஆசையை அவளுக்கும் கடத்தி அவளையே மாற வைத்திருந்தான் ராம்சங்கர்.

“விஸ்வா உனக்கு பிடிக்கல… ஆதி எனக்கு பிடிக்கல!”

“ஏன்?”

“ஆம்பளைய கூப்பிடுற ஃபீல் வருதுடி… வேற எப்படி கூப்பிட?” யோசனையை அவளுக்கு கொடுத்துவிட்டு இவனது உதடுகள் எறும்பாய் அவளின் உடலில் ஊறத் ஊர்வலம் போகத் தொடங்கின.

அவனது செயல்களுக்கு இவளுள் மௌன மாற்றங்கள். பதில் பேசிட நினைத்தாலும் அவளால் முடியவில்லை. ஆனால் அவனுக்கு இசைந்து கொடுக்க அவளுக்கு அலுக்கவில்லை. இவனுக்கும் சலிக்கவில்லை.

அவளது உடல்மொழி ஏதோ ஒன்றை உணர்த்த கேள்வியாக மனைவியைப் பார்த்தான். “ம்ப்ச், இப்ப எதுக்கு அந்த கேள்வியெல்லாம்?” என இவளாகவே அவனை இழுத்துக் கொள்ள, இருவரின் ஆசைகளும் கரைந்து நிறைவான இல்லறத்தில் முடிந்தது.

அன்றைய விடியலைத் தொட்ட நேரத்தில் ராம்சங்கரின் ஆசைமனைவி செல்லாவாக மாறியிருந்தாள்.

“பாட்டி காலத்துப் பேர் மாதிரி இருக்குடா!” சிணுங்கிக் கொண்டே இவள் மறுக்க,

“உங்க வீட்டுல கூப்பிடுற செல்லாம்மாவை விடவா?”

“அதையே வேண்டாம்னு சொல்வேன் ராம். இது… ஐயோ… பிடிக்கலடா!” சிணுங்கிய வார்த்தை ஒவ்வொன்றிக்கும் இதழ் முத்தம் வைத்து இளைப்பாறினான்.

“பிடிக்கலன்னு சொல்றதுக்கு முன்னாடியே இங்கே ஒரு ஸ்ட்ராங் குடுத்துடு!” என்று தன் உதடு காட்டி பேசிவிட்டு, “நான் வாடி போடின்னு மாத்திக்கிறேன்!” கண்சிமிட்டி குறும்பு பேசியவனுக்கு வகையாக கொட்டு வைத்து செல்லாவில் பொருந்திப் போனாள் விஸ்வாதிகா.

“கல்யாணம் முடிஞ்ச ரெண்டுநாள்ல என்னடி வேலை இருக்கு உனக்கு?” காலையில் சீக்கிரமே எழுந்து நின்றவளை இழுத்தபடி கேட்டான்.

“நீ மூனு மாசம் மொத்தமாக லீவெடுத்துட்டு வந்தா, நானும் வேலையை ஒதுக்கி வைப்பேன்னு நினைச்சியா? இன்னைக்கு சைட் வொர்க் இங்கேதான்.” என்றபடி விரைவாக குளிக்கச் சென்றுவிட்டாள் விஸ்வாதிகா.

தனது அலுவலக உடையில் தயாராகிக் வெளியே செல்லும் வரையில் ராம்சங்கர் அவளைச் சீண்டியபடியே இருக்க, அவனின் செல்லாவும் பதிலுக்கு பதில் பேசி முறைக்கும் பார்வையை பரிசாகத் தந்தாலும் அவளின் முகத்தில் இருத்த வாடாப்புன்னகையும், குழைவாய் பேசிய அவளின் கேலியும் கிண்டலும் அவனுக்கு காணக்காண தெவிட்டவில்லை.

அவள் வெளியே சென்றதும் சிறிது நேரத்தில் இவனும் குளித்து கிளம்பி வர, அதற்குள் இரண்டு பணியாட்களை சமைக்கவும் வீட்டு வேலைக்காகவும் விஸ்வநாதன் அனுப்பி வைத்திருந்தார்.

“செல்லம்மா மேல விச்சுக்கு ரொம்ப பாசம் போல… நோ சான்ஸ்.” சோபாவில் காபியை ருசித்துக் கொண்டே பேசியவனின் முகத்தில் அன்றைய தினசரியை எடுத்து வீசினாள்.

“ஒஹ்… விச்சுக்கு கூட தடாவா? பேச்சு சுதந்திரமும் போச்சா! ஜனநாயக நாடுன்னு சொல்றாங்க… வொய்ஃப் அராஜகத்தை எந்த கோர்டும் தட்டிக் கேக்கிறதில்ல.” பொய்யாய் முகம் சுருக்கினான்.

“என் மேல கேஸ் போட்டு, நீ வேணா தட்டிக் கேளேன்? என்னென்ன செக்சன், லா பாயிண்ட்ஸ் எல்லாம் எடுத்துத் தர்றேன்.” என்றதும் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“என்ன செல்லா, இப்படி கோபம் வருது உனக்கு?”

“இப்படி அசட்டுத்தனமா சிரிச்சா, இன்னும் கோபம் அதிகமா வரும் வாத்து… அடக்கி வாசி!”

“ஆமா, நீ வாத்துன்னு சொல்லி மட்டம் தட்டு… பின்ன எப்படி கெத்தா நிமிந்து இருக்கிறதாம்?”

“ஐயோ, நீ எதுவும் தெரியாத பச்சைபுள்ள பாரு… போடா டேய்… சரியான இம்சை, நினைச்சதை சாதிச்சுக்கற!” இரவின் நினைவில் சன்னமான வெட்கச் சிரிப்பில் நொடித்துக் கொள்ள, அசராமல் கண்ணடித்து பறக்கும் முத்தத்தை பரிசளித்தான் ராம்சங்கர்.  

“ஹனிமூன் போவோமா செல்லா?” கேட்டவனை அழுத்தமாய் பார்த்தாள்.

“அசராம கோல் அடிக்கப் பாக்கறடா!”

“மேரேஜ் லைஃப் இப்படித்தான் என்ஜாய் பண்ணணும். பின்னாடி இந்த மொமென்ட் நினைச்சு பாக்கவே செம்மையா இருக்கும்ல!”

“உன் ஆசைக்கு நான் ஏன் தடா போடபோறேன்? நீ நடத்து வாத்து…”

“அட… நீயும் ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்க… எங்கே போகலாம் சொல்லு? சாய்ஸ் இஸ் யூவர்ஸ்!” ராம் குதுகலமாய் கேட்டதும் நொடிநேரம் யோசித்தவள்,

“ஜெய்ப்பூர் போவோம் ராம்.” என்றதும் அவனின் உற்சாகம் எல்லாம் சட்டென்று வடிந்து போனது.

“ஏன் ஸ்ட்ரைட்டா பாலைவனத்துக்கு போயி செட்டில் ஆகிடுவோமே!”

“ஏன்டா இத்தனை வெறுப்பு?”

“உன் ரசனைக்கு எங்கே போயி முட்டிக்க? ஹனிமூனுக்கு போற ஊராடி அது? இந்த ஊருக்கெல்லாம் புரோஃபசனலா போயி சுத்திப் பாக்கணும்டி செல்லாத்தா!” என்றவனின் தொடையில் பலமாய் கிள்ளினாள்.

“யாருக்குடா ரசனை இல்லை? அங்கே உள்ள பேலஸ், போர்ட், பில்டிங் ஸ்கெட்சர் எல்லாம் பாக்கணும் எனக்கு ரொம்பநாளா ஆசை”

“அதுக்கு என் ஹனிமூனைத்தான் பலியாக்கப் போறியா?” மூக்கால் அழுதான் ராம்சங்கர்.

“உனக்கு என்கூட இருக்கணும் அவ்வளவுதானே? நான் ஊரைச் சுத்திப் பாக்கறேன். நீ என்னைச் சுத்திப்பாரு தட்ஸ் ஆல்!” முடிவாகக் கூறிவிட்டு அன்றைய அலுவல்களை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

அவனது புலம்பலையோ மறுப்பையோ காதில் ஏற்றிக் கொள்ளவே இல்லை. ‘என்ன ஒரு அலட்சியம் இவளுக்கு?’ அவனால் மனதிற்குள் நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.

மனைவியில்லாத வீட்டில் நிமிடங்களைக் கடத்துவதே பெரும் அவஸ்தையாய் இருந்தது. வீட்டில் இருந்தவனுக்கு பொழுது போகவில்லை. மனைவியுடன் நேரத்தை செலவிட வேண்டுமென்று பல வழிகளில் யோசிக்க ஆரம்பித்தான்.

ஒரு வழியாக காலை உணவை முடித்துக்கொண்டு அவள் வேலை செய்யும் இடத்திற்கு தேடிச் சென்று இவன் நிற்க, விஸ்வாதிகா மொட்டைமாடியில் நின்றிருந்தாள். அந்த வளாகத்தின் நான்காவது மாடி அது.

கணவன் வருவதை மேலே இருந்தே பார்த்துவிட, ‘கீழே வா’ என மனைவியை சைகையில் அழைத்தான் ராம்சங்கர். அதை மறுத்து, கீழே நின்ற பணியாளிடம், “முத்து, சார் வந்ததும் மேலே கூட்டிட்டு வா… கீழே பார்த்து மெதுவா வரச் சொல்லு, கம்பி கட் பண்ணி கிளீன் பண்ணாம இருக்கு!” சிறிய மைக்கில் சொல்லிவிட்டு, பார்வையால் மேலே அழைத்தாள்.

தான் அழைத்து இவள் வரவில்லை என்ற குறுகுறுப்பு இருந்தாலும், பணியாட்களின் முன்னிலையில் தன்னை மதிப்பாய் நடத்தியது கண்டு உள்ளம் பூரித்தான்.

தனிமையில் தான் தன்னை ஒருமையில் அழைக்கிறாள். மற்றவர் முன்னிலையில் தனக்குரிய மரியாதை எங்கும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறவளைக் கண்டு அவனுக்குள் ஒரு ஆசுவாசம்.       

மேலே சென்றதும் உற்சாகமாய் வரவேற்றாள். அவனைப் பேசவே விடவில்லை. அந்த வீட்டு வளாகத்தின் அருகில் உருவாகிக் கொண்டிருக்கும் பூங்காவைக் காட்டி பேசத் தொடங்கினாள்.

“இங்கே இருந்து பார்க்கும்போது அந்த பார்க் வியூ நல்லாத் தெரியுதா ராம்? அதுக்கு பக்கத்துலயே ஒரு ஸ்விம்மிங் பூல் கட்டப் போறோம். அப்புறம் நம்ம டிரீம் சிட்டி பேக் சைட்ல… இதோ இங்கே ஒரு பிரேயர் ஹால். இன்னும் ஃபினிசிங் டச் பெண்டிங் இருக்கு. மெடிடேசன், யோகா எல்லாத்துக்கும் அலவ் பண்ணப் போறோம். இந்த பிளாட்ல தங்கி இருக்கிறவங்க மட்டுமே யூஸ் பண்ணிக்கலாம்.

“இதை ஏன் பேக் சைட் கொண்டு வந்தீங்க? ஃபிரண்ட்ல  வச்சுருக்கலாமே செல்லா!”

“என்ட்ரன்ஸ்ல குட்டி கோவில் ஒன்னு கட்டியாச்சு ராம். இது தனி. வாக்கிங் போக முடியாம, மனசுக்கு அமைதி வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த இடம் சூட் ஆகும்.” ஒவ்வொரு ஏற்பாட்டையும் ஆசையாக விளக்கிச் சொல்லும்போது விஸ்வாதிகாவின் கண்கள் ஆர்வத்துடன் பளபளத்தன.

“என்னோட இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ், என் கிரியேட்டிவிட்டி, டிசைனிங்ஸ் எல்லாமே இந்த புராஜெக்ட்ல இறக்கியிருக்கேன். யாரோட சப்போர்ட்டும் இல்லாம தனியா நான் எடுத்து செய்யுற ஃபர்ஸ்ட் புராஜெக்ட் இது. சேல்ஸ்ரேட் எப்படிப் போகும்னு கொஞ்சம் நெர்வஸா இருந்தது. நாட் பேட்… அப்பாவோட நம்பிக்கையை காப்பாத்திட்டேன். ஐ அம் பிரவுட் டு பீ எ மாஸ்டர் பில்டர்.” பெருமையாக சட்டைக்காலரை உயர்த்தி விட்டுக் கொண்டாள்.

“மீ டூ பீ பிரவுட் டு யூ செல்லா… கன்ஸ்ட்ரக்ஷன்ல உனக்கு எவ்வளவு இன்வால்வ்மென்ட்! கிரேட்… கிரேட்!” பெருமிதத்தோடு அவளின் கை கோர்த்து சின்ன முத்தம் கொடுக்க, “அழுக்கு கையா இருக்கு ராம்! சின்னக்குரலில் பேசி விலகினாள்.

“அம்மா ஃபோன் பண்ணாங்க செல்லா!”

“என்னவாம்?”

“வீட்டுக்கு எப்போ பொண்டாட்டிய கூட்டிட்டு வரப்போறேன்னு கேட்டாங்க?” என்றதும் யோசனையில் ஆழ்ந்தாள்.

சட்டென்று தனது செல்பேசியில் பரிமளத்தை அழைத்து விட்டாள். “பாருடா… மாமியார் கூட பேச என்ன ஒரு வேகம்! எல்லார் நம்பரும் கான்டாக்ட்ஸ்ல இருக்கா?” ராம் கேலிபேசிய வேளையில் பரிமளம் அழைப்பில் வந்திருந்தார்.

“ஆன்ட்டி கூப்பிட்டு இருந்தீங்களாம்?” இவளாகவே பேச்சை ஆரம்பிக்க,

“ஆமா ஆதி… கல்யாணம் விசாரிக்க சொந்தக்காரங்க வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க… நீங்க இங்கே எப்போ வரப் போறீங்க?”

“இங்கே வேலை கொஞ்சம் அதிகம் ஆன்ட்டி… இப்போதைக்கு வரமுடியாது.”

“இப்ப உள்ள புள்ளைகளுக்கு இதை விட்டா வேற பேசத் தெரியாதா? என்னமோ உலகத்தையே நீங்கதான் தாங்கிட்டு நிக்கிறதா நினைப்பு! அவனுமே இதையே சொல்றான் நீயும் அவனுக்கு தப்பல… பெரியவங்க பேச்சுக்கு எப்போதான் மதிப்பு குடுக்கப் போறீங்க? சாக்குபோக்கு சொல்லாம வந்து சேருற வழியைப் பாருங்க!” மாமியாராக கண்டிப்பான குரலில் உத்தரவிட, என்ன பதில் பேசுவதென்று தெரியாமல் ஒருநிமிடம் முழித்தாள் விஸ்வாதிகா.