தேனாடும் முல்லை-4

தேனாடும் முல்லை-4

மாமியாரின் அதட்டல் விஸ்வாதிகாவை அமைதியாய் இருக்க விடவில்லை. தன்னைப் புரிய வைத்துவிடும் வேகம், அடுத்து என்ன, எப்படி என்றே யோசிக்க வைத்தது.

‘ஊருல இருக்கிறவங்களோட என்னை எப்படி சேர்த்து வைச்சு பேசலாம்? என் வொர்க் பிரசர் தெரியாம இஷ்டத்துக்கு சத்தம் போடுறாங்க… இந்த தொல்லைக்கு தான் கல்யாணம், குடும்பம் எல்லாம் வேண்டாம்னு ஒதுங்கி இருந்தேன்.’ உள்ளுக்குள் முளைத்த முணுக்கென்ற கோபம் அருகில் இருந்த கணவனின் மேல் மையம் மொண்டு அவனை வெட்டும் பார்வை பார்த்தது.

“அம்மா பேசினா நான் என்ன பண்ண முடியும் செல்லா?” அவசரமாய் அலறினான் ராம்சங்கர். முன்தினம் துளிர்விட ஆரம்பித்த காதல் போன்சாய் பட்டுப் போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு!

அன்றைய தினம் வேலைகளை முடித்துக் கொண்டு மாலை ஆறு மணியளவில் கணவனுடன் புகுந்த வீட்டிற்கு சென்று இறங்கினாள் விஸ்வாதிகா.

இவளின் ராயல் ப்ளு லாங்கவுனிற்கு இணையான கேசுவலில் ராம்சங்கரும் பொருத்தமான ஜோடியாக வந்து நின்றதும், ஆரத்தி எடுப்பதற்காக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

“இங்கே வந்து நின்னதுல எதுவும் உள்குத்து இருக்கா?” காதோரம் கிசுகிசுத்தவனை அவளால் முறைக்க முடியவில்லை.

“பெரியவங்க சொல்பேச்சை தட்டாம கேக்கிற நல்ல பொண்ணா நீ?” தங்களின் வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்த பொழுதில் இருந்தே விடாமல் சீண்டியபடி ராம்சங்கர் கேட்க,

“உன்னை போல என்னை நினைக்காதே ராம்! உனக்காக என்னை ஜோடி சேர்த்ததுலயே தெரியலையா… ஐ அம் ஆல்வேஸ் நல்ல பொண்ணுன்னு!” நக்கல் சிரிப்பில் பெருமை பீற்றிக்கொண்ட வேளையில் ஆரத்தியுடன் கிருஷ்ணா வாசலுக்கு வந்துவிட, பின்னோடு பரிமளமும் வந்து சேர்ந்தார்.

இருவருவரின் கிசுகிசுத்த பேச்சும் புன்னகை முகமும் பெரியவரின் மனதிற்கு நிறைவினைக் கொடுக்க, உள்ளே நுழைந்ததும் இருவரையும் சேர்த்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

“வேலை இருக்கு, வரமுடியாதுன்னு சொன்னியே ஆதி!” பரிமளம் கன காரியமாக கேட்க,

“இங்கே இருந்து பார்த்துக்கறேன் ஆன்ட்டி.” என்றதும், முகம் சுருக்கினார் மாமியார்.

“அத்தைக்கு பஞ்சமாப் போச்சா?” அடுத்த குறையைச் சொல்ல,

“இதுல எல்லாம் மூக்கை நுழைக்காதே ம்மா… அவளுக்கு எப்படி தோணுதோ அப்படித்தான் கூப்பிடுவா, நோ காம்ப்ரமைஸ்!” யோசிக்காமல் மனைவிக்கு குடைபிடித்தான் ராம்சங்கர்.

“அவகிட்ட சொன்னா, நீ ஏன்டா பதில் சொல்ற?”

“அனுபவப்பட்டவன் சொன்னா கேட்டுக்கோம்மா…” முன்தின நிகழ்வில் தன்னை அழைத்த விதத்தை மனதில் நிறுத்திப் பேச,

“ஆத்தி… ஒருநாள் ராத்திரியில எம்புள்ளை வாழ்க்கை பாடம் படிச்சுட்டான்.” தாடையில் கை வைத்து கிண்டலடித்தார் பரிமளம்.

‘இந்த ஜோடி எப்படி இருக்கப் போகிறது?’ என்று அவருக்குள் உறைந்திருந்த மெல்லிய மனத்தாங்கல் அகன்றது. முறையே மாப்பிள்ளை, மகள்களுக்கு அழைத்து இவர்களின் வருகையை சொல்லிவிட்டு மருமகளிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

“நைட் டிபனுக்கு உனக்கென்ன வேணும்னு சொல்லு ஆதி, சேர்த்து சமைக்கச் சொல்லிடலாம்.” பரிமளம் எப்போதும் போலக் கேட்க விழி விரித்துப் பார்த்தாள் சின்ன மருமகள்.

“என்ன இப்படி பாக்கற?” கிருஷ்ணா கேட்க,

“எங்கம்மா கூட இப்டி பாசமா கேட்டதில்லை க்கா… வாய்க்கு நுழையாததை கேட்டுத் தொலைக்கிறேன்னு திட்டித் திட்டியே அவங்க சமைச்சதை எனக்கு திணிச்சு விட்ருவாங்க!” மெதுவாக சொன்னவள், “ஆனா அதுவும் நல்ல டேஸ்ட்டா இருக்கும்.” சிரிப்போடு தாயை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“இங்க வெரைட்டி கேட்டா, ஆர்டர் போட்டு சாப்பிட்டுக்க சொல்லிடுவோம். அப்புறம் எப்போ எப்படி நாசூக்கா சொல்லணுமோ சொல்லி அந்த பழக்கத்தை குறைச்சுக்க சொல்லிடுவாங்க நம்ம அத்தை.” கிருஷ்ணா சொல்லச் சொல்ல

“ஐயோ, நம்ம மில்(mother in law) அவ்வளவு டெரரா? பார்த்தா அப்படி தெரியலையே!”

“அப்படியில்ல… கண்டிப்போட காட்டுற அக்கறை இது. இப்படி அதட்டி உருட்டி பாசம் காட்டுறது எல்லாம் இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு தண்ணி பட்ட பாடு.” சொல்லிச் சிரித்த வேளையில் ராம்சங்கர் தனது அறைக்கு சென்று விட்டிருந்தான்.

வீட்டைச் சுற்றிப் பார்க்கும் போதே சுமதியும் குழந்தைகளும் வந்து சேர்ந்தனர். “என் ஆத்தா கண்ணு உறுத்தலையா?” விஸ்வாதிகாவின் லாங்கவுனை பார்த்தவாறே சுமதி கேட்க,

“அத்தைக்கே வழி இல்லையாம்… அத்தை கண்ணு உறுத்தி என்னவாகப் போகுது?” பரிமளத்தின் சடைப்பில் வாய் பொத்தி சிரித்தாள் விஸ்வாதிகா

“அத்தைன்னு தான் கூப்பிடேன் ஆதி!”

“வராததை நான் டிரை பண்றதே இல்லக்கா…” சட்டு சட்டென்று பதில் பேசும் சின்ன மருமகளின் போக்கு மாமியாருக்கு கடுப்பை வரவழைத்தது.

‘என்ன சொன்னாலும் தன் போக்கிலிருந்து மாறமாட்டேன் என அடம்பிடித்து நிற்பவள், இந்த வீட்டில் எப்படி பொருந்தப் போகிறாள்?’ மிகப்பெரிய கவலை அந்த குடும்பத் தலைவிக்கு பாரமாய் வந்தமர்ந்து கொண்டது.

அதனைத் தொடர்ந்த பொழுதுகளும் உணவு நேரத்திலும் ராம்சங்கரின் கவனமெல்லாம் குழந்தைகளின் மீது மட்டுமே மையம் கொண்டன. அவர்களது தினப்படி வீட்டுப் பாடங்களை முடிக்கும்வரை பவ்யமாய் கிருஷ்ணாவின் முன்பு அமர்ந்து எழுதுவதை இமைக்காமல் பார்த்து ரசித்தான்.

சிறுசிறு குறும்புகள் செய்த வைபவ், கிருஷ்ணாவின் ஒற்றை முறைப்பில் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவதும் கூட அத்தனை ரசனையாக இருந்தது.

“ச்சோ ஸ்வீட் குட்டீஸ்!” தானாகவே முன்வந்து கொஞ்சிய விஸ்வாதிகாவிற்கு வைபவ் அத்தனை பிடித்தவனாகிப் போனான்.

“லவ் யூ சித்தி!” பதிலுக்கு அவன் கொஞ்சிக் கொள்ள,

“நானு… நானு!” என பிரணவி, வைணவி, சாகித்யா என மூவரும் கூட்டு சேர்ந்து முத்தமிட்டுச் சென்றனர்.

“வாவ்… பிளசன்ட் ஃபீல், இங்கே வரலன்னா இதையெல்லாம் மிஸ் பண்ணியிருப்பேன் ராம்.” கணவனிடம் மகிழ்வை பகிர்ந்து கொண்டாள்.

கிருஷ்ணாவிற்கு தன் பிள்ளைகளோடு டியூசனுக்கு வந்த பிள்ளைகளை கவனிப்பதற்கும், சுமதிக்கு தொழில் கணக்கு வழக்குகளை கணிணியில் பதிவேற்றுவதற்கும் சரியாக இருந்தது. இடையில் இரண்டு முறை அரவிந்தன் தொலைபேசியில் அழைத்து வீட்டு நிலவரங்களை தெரிந்து கொண்டான். அனைவருக்கும் நேரங்கள் அத்தனை வேகமாய் விரயமாகத் தொடங்கின.

படிப்பு, எழுத்து வேலை முடிந்த பிறகு அந்த வீடே பிள்ளைகளின் குறும்பில் சிக்கித் திண்டாடியது. குறிப்பாக ராம்சங்கர் பிரணவியை தூக்கி வைத்து அதிகமாக செல்லம் கொஞ்சியதில் சாகித்யா, வைணவி இருவரும் முகம் திருப்பிக் கொண்டு உணவை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டனர்.

அவனது லட்டுமாவிற்கு ஏக கிராக்கி ஆகிப் போனதில் அடுத்தடுத்து பட்டுமா, சிட்டுமா என பல செல்லப் பெயர்களை எடுத்து விட்டும் குழந்தைகள் மசியவே இல்லை.

அவர்களை சமாதானப்படுத்தும் வேலையும் தனதாக்கிக் கொண்டு குழந்தைகளுக்கு சமமாக இறங்கிய கணவனை இமைக்காமல் பார்த்தாள் விஸ்வாதிகா. பிள்ளைகளிடம் மலர்ந்து சிரிக்கும் ராம் முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான்.

சஞ்சய், வைபவ் உலகமே தனி! விளையாட்டில் பெண் பிள்ளைகளோடு எப்போதும் கூட்டு சேர மாட்டார்கள். வீடியோ கேம், மொபைல் கேம் முடித்து, இறுதியில் பாஸ்கெட்பால் விளையாட்டில் வந்து நின்றனர் சிறுவர்கள்.

“இன்னும் என்ன விளையாட்டு? சாப்பிட வாங்கடா!” இருவரையும் சுமதி அழைக்க

“கேர்ள்ஸ் சாப்பிட்டு முடிக்கட்டும் அத்தே… நாங்க வர்றோம்.” வைபவ் பதில் சொல்ல,

“ஏன் அவங்களோட சேர்ந்து சாப்பிட மாட்டீங்களா?” விஸ்வா கேட்க,

“ஐயோ… சாப்பிடுற நேரத்துல அவங்களோட கொஞ்சலும் அலப்பறையும் அப்பப்பா… பாக்கவே சகிக்காது அத்தை.” ஏகமாய் அலுத்துக் கொண்டான் சஞ்சய்.

“டேய்… இப்படி பேசினா அடி விழும் படவா!” சுமதி தான் குரலை உயர்த்தி இருந்தாள்.

பெண் பிள்ளைகள் தகப்பனோடு கொஞ்சுவதில் இந்த சிறுவர்களுக்கு சற்று பொறாமை தான். அனைத்து  வீடுகளிலும் நடக்கும் வழமை இது.

“இப்பகூட ராமுப்பா  கேர்ள்ஸ் கூட மட்டுமே கொஞ்சிப் பேசுறாரு! சாப்பிடுடா… அழாதேடா… கண்ணுடா… பொண்ணுடா! யப்பா… தாங்க முடியல!” நீளமாக பாட்டுப் பாடி முடித்த வைபவின் பாவனையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் விஸ்வா.

“அடேய் ஆழாக்கு சைஸ் இருந்துட்டு என்ன பேச்சு பேசுற நீ?” அதட்டலுடன் கேட்டான் ராம்சங்கர்.

“டோன்ட் சவுட் ராமுப்பா… உங்களுக்கு எல்லாம் கேர்ள்ஸ் மட்டும்தான் கிட்ஸ் மாதிரி தெரியுறாங்க… நாங்க எல்லாம் என்ன பெத்த பெரிய மனுசங்களா?” சிலிர்த்துக் கொண்ட வைபவ்,

“கேளு சஞ்சு மாமா… எப்பவும் எங்களை யாரும் கவனிக்கிறதில்ல தானே!” தினப்படி இப்படியொரு தர்க்கம் அந்த வீட்டில் குழந்தைகளிடையே நடக்கும்.

அதற்கும் காரணம் உண்டு. பெண் பிள்ளைகளுக்கு அழகாய் அம்சமாய் இருக்குமென்று அத்தை, அம்மா, பாட்டி முதற்கொண்டு அனைவரும் வளையல், தோடு, கிளிப், உடைகள் என வாங்கிக் குவிப்பவர்கள், சிறுவர்கள் கேட்கும் அதிநவீன விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தர மறுத்து விடுகின்றனர்.

“படிக்கிறதை விட்டுட்டு அந்த வீடியோ கேம்லயே நீ உக்காந்துருவே!”

“ஷூ, பெல்ட், வாட்ச் விட்டா உங்களுக்கு வாங்கிக் கொடுக்க என்னடா இருக்கு?”

“விளையாட்டு சாமான் வாங்குறதெல்லாம் காசை கரியாக்குற சமாச்சாரம்.”

“ஆம்பளைப் பையன் இதுக்கெல்லாமா போட்டி போடுறது!” அத்தை, மாமா முதல் அப்பா வரை வரிசையாக காரணம் கூறி சிறுவர்களின் ஆசையை தட்டிக் கழித்து விடுவர்.

அதற்கும் அதிகமாய் எல்லாம் பெரியவர்கள் பிள்ளைகளை அதட்டி வைப்பதில்லை. இரண்டு முறை முறைத்து விட்டு மூன்றாம் முறை கிருஷ்ணாவின் தயவால் வைபவிற்கு வேண்டியது கிடைத்து விடும்.

சஞ்சய் நிலையும் அப்படியே! அவன் சற்று பெரியவனாக வளர்ந்து விட்டபடியால் இந்த விளையாட்டு சமாச்சாரத்தை அத்தனை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.

ஆனால் வைபவின் வயது போட்டியை வளர்த்துக் கொண்டது. அவனது மனத்தாங்கலைக் கண்ட ராம்சங்கரின் மனமும் பிள்ளைக்காக பாவம் பார்த்தது.

‘இந்த வயதில் இப்படியொரு குறையா இவனுக்கு?’ மனதிற்குள் முளைத்த கேள்வியை வெளியே கேட்கவும் அத்தனை தயக்கம்.

“அப்பா ரொம்ப திட்டுவாரா அப்பு?” சிறியவனிடத்தில் ஆதுரமாகக் கேட்க,

“அப்படியெல்லாம் இல்ல… பட் திட்டுவாரு ராமுப்பா!” எந்த நிலையிலும் இல்லாமல் பதில் சொல்லி சிறுபிள்ளை புத்தியை காண்பித்தான் வைபவ்

“அதென்ன ராமுப்பான்னு கூப்பிடுற? அழகா சித்தப்பான்னு கூப்பிடு!” சட்டென்று சொன்ன விஸ்வாவின் பேச்சிற்கு அனைவரும் வாயடைத்து நின்றனர்.

‘சித்தப்பா’ என்றழைக்க ஆரம்பித்த குழந்தைகளை, ‘ராமுப்பா’ என அழைக்க வைத்ததே ராம்சங்கர் தான். அதற்கான காரண காரியமெல்லாம் அவனது மனதிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

“அப்படி கூப்பிட்டா ராமுப்பாக்கு பிடிக்காதே!” வைணவி கூற, ‘அப்படியா’  மனைவியின் கேள்விப் பார்வை ராம்சங்கரை துளைத்தது.

“அது ஒன்னுமில்ல செல்லா… ரொம்ப ஃபார்மலா இருந்தது. அதோட அவங்களை என் பிள்ளைகளாவே நினைச்சுட்டு இருக்கேன். அதான்…” கணவனின் தேவையில்லாத இளிப்பும் சமாளிப்பும் விஸ்வாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராம்… வார்த்தைக்கு வார்த்தை உன்னை பேர் சொல்லி கூப்பிடுற ஃபீல் வருது. எனக்கு பிடிக்கல.” என்றவள்,

நேரடியாக குழந்தைகளைப் பார்த்து, “இனிமே சித்தப்பான்னே கூப்பிடுங்க குட்டீஸ்!” உத்தரவாகவே கூறி முடித்தாள்.

“ஏன்? எனக்கு பிடிக்கல.”  வைணவியின் மறுப்பு இது

“என்னை சித்தின்னு தானே கூப்பிடுறீங்க… சோ, அவர் சித்தப்பா, தட்ஸ் ஆல்!” கத்தரித்த பேச்சில் முடிவாக சொல்லி முடித்தாள்.

“ஏன் ராமுப்பா, விஸ்வாம்மான்னு ரெண்டு பேரையும் கூப்பிடுறோமே?” வைபவின் பேச்சு அங்கிருந்த அனைவருக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கியது.

‘இன்னும் எத்தனை கேள்விகளைத் தான் இந்த பெரிய(!) மனிதர்கள் கேட்பார்கள்? சின்ன மாற்றத்தைக் கொண்டு வருவதற்குள் கண்ணைக் கட்டுவிடும் போலிருக்கிறதே!’ மனதிற்குள் நொந்தது போனவளாக கிருஷ்ணாவைப் பார்த்தாள்.

“அப்பு… பெரியவங்க பேர் சொல்ற மாதிரி இருக்குன்னு தானே சித்தி அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்றாங்க… சரின்னு சொல்லப் பழகணும் கண்ணா…” கனிவான கிருஷ்ணாவின் குரலில் சிறுவனின் தலை தன்னால் சரியென்றது.

“ஒத்த வார்த்தை வேண்டாம்னு சொல்றானா? இல்ல பொண்டாட்டி சொன்னதுக்கு மறுப்புதான் பேசுறானா உங்க அண்ணேன்… அப்படியே பிடிச்சு வைச்ச பிள்ளையாரட்டம் அவளையே பார்த்துட்டு நிக்கிறான் கடங்காரன்! இப்படியா ஒருநாள்ல பொண்டாட்டிக்கு கூஜாவா மாறி நிப்பான்?” பரிமளத்தின் முணுமுணுப்பு அருகில் நின்றிருந்த சுமதிக்கு நன்றாகவே கேட்டது.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த அரவிந்தனும் சுதர்சனும், புது ஜோடியை வரவேற்று விட்டு இரவு உணவிற்காக அமர்ந்தனர். வழக்கம்போல பெண் பிள்ளைகள் தகப்பனின் அருகே அமர்ந்து கொள்ள, புரியாமல் பார்த்தான் ராம்சங்கர்.

“ஏண்ணே… அப்புவ பக்கத்துல வச்சுக்கல நீ?”

“அவன் ஓவரா சேட்டை பண்ணுவான்டா… அவனுக்கு அவன் அம்மாதான் சரி!” அரவிந்தன் மேற்கொண்டு பேச முயன்ற நேரத்தில்,

“உங்களுக்கும் உங்க பொண்ணு தான் சரி, வெவ்வே… வெவ்வே…” வைபவ் ஒழுங்கு காட்ட அங்கே மீண்டும் சிறியவர்களின் கோஷ்டி பூசல் உருவாகத் தொடங்கியது.

“லீவ் இட் வைபவ்… உனக்கு நான் இருக்கேன். இனிமே நீயும் நானும் பார்ட்னர்!” விஸ்வாதிகா அவனை உற்சாகப்படுத்த

“அப்போ நானு?” இடையிட்ட ராம்சங்கரை,

“நீங்க கேர்ள்ஸ் பக்கம் போங்க சித்தப்பு!” விரட்டியடிக்காத குறையாக ஒதுக்கினான் வைபவ்.

இந்த களேபரத்தில் சுமதி குடும்பம் கிளம்பி நிற்க, சாகித்யா பாட்டி வீட்டில் தங்கிக் கொண்டாள். தோதான விளையாட்டு துணை, பிடித்தமாய் அன்பாய் கனிவாய் பார்த்துக் கொள்ளும் பாட்டி, மாமா, அத்தை உறவுகள் கொண்ட இந்த வீடுதான் அந்த சிறுமிக்கு எப்போதும் சொர்க்கம். மூன்று பெண் பிள்ளைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்திருக்க, சாகித்யா பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வருகிறாள்.

மூன்று சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு ராம் தனதறைக்கு சென்றிருக்க, வைபவை அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் விஸ்வாதிகா. வேண்டாமென்று தடுத்த பரிமளத்தின் குரல் காற்றோடு கரைந்து போனது.

புதுமணத் தம்பதிகளின் அறையில் பிள்ளைகள் நால்வரும் இருந்ததில் அவர்களின் பெற்றோருக்கு பெருத்த சங்கடம். எதிர்புறம் இருந்த அறைக்கு சென்று குழந்தைகளை அழைத்தும் பார்த்தான் அரவிந்தன். அவர்கள் வந்தால் தானே!

குழந்தைகளுடன் இருப்பதே விஸ்வாவிற்கு புது அனுபவமாய் இருக்க, தன்னுடன் அவர்களை வைத்துக் கொண்டாள்.

ஆசையாக ஒரப்பார்வை பார்த்த கணவனிடம் நாக்கை துருத்தி கண்ணடித்தாள் மனைவி. “பெரியவங்க பேச்சை தட்டாம கேக்குற பொண்ணு ராம்…” கேலி பேச,

“யாரு சித்தி அது?” இடையிட்டான் வைபவ்.

“இவங்களை வச்சுட்டு நாம பேசிட்டாலும்…” என முணுமுணுத்தவன், “வாங்கடா குட்டீஸ்… ஆளுக்கொரு கதையை சொல்லிட்டே தூங்குவோம். லட்டுமா நீ ஆரம்பிடா…”

பெண் பிள்ளைகளை இவன் கூட்டு சேர்த்துக்கொள்ள, வைபவ் விஸ்வாவின் மொபைலில் மான்ஸ்டார் ஹன்டர் விளையாடினான்.

அரவிந்தனின் அறையில், “ரெண்டும் கூமுட்டையா இருக்குது சாலா… நாலு பிள்ளைகளை வச்சுட்டு தூங்குறாங்களாம்!” பாவமாய் சொன்ன கணவனைப் பார்த்து சிரித்தாள் கிருஷ்ணா.

“உங்க தம்பின்னு ஃப்ரூப் பண்ணிட்டாரு புது மாப்பிள்ளை.” பதில் பேசியவளுக்கு தங்களின் ஆரம்பகால திருமண வாழ்க்கை நினைவிற்கு வந்தது.

“என்னென்ன அலப்பறை பண்ணுவீங்க ரவி? இப்ப அந்த கெத்து எல்லாம் எங்கே போச்சு?” மீசையை பிடித்து இழுக்க அவளுக்கு வகையாக முகத்தைக் கொடுத்து விட்டு நின்றான் அரவிந்தன்.

“எல்லா பகுமானமும் இந்த டீச்சர் முந்தானையில புதைஞ்சு காணாமப் போச்சு! டீச்சரும் சரியா பாடம் எடுக்கிறதில்லையா… புதையலை தேடி எடுக்கவும் மறந்து போயிடுது.” சரசமாய் பேசியவனின் மார்பில் கை வைத்து தடுத்தாள் கிருஷ்ணா.

“அந்த ரூம்ல தான் நியூ மேரிடு கப்பில் இருக்காங்க மாஸ்டர்!” வார்த்தைகள் குழைவாக வெளிப்பட,

“யாருடி சொன்னது? என் பொண்டாட்டி பக்கத்துல இருக்கிற நேரமெல்லாம் நான் புது மாப்பிள்ளையாக்கும்!” என்றவன் அதிரடியாக, அவளுள் புதைந்த புதையலை தேடி கலையத் தொடங்கினான்.

மறுநாளின் விடியலில் குழந்தைகளின் பொறுப்பை  தனதாக்கிக் கொண்டாள் விஸ்வா. புது சித்தியிடம் சமத்து பிள்ளைகளாக குறும்பு செய்யாமல் தயாராகி பள்ளிக்கு கிளம்பி நின்ற நேரத்தில், ராம் விஸ்வா ஜோடியும் வெளியே செல்வதற்கு தயாராக கீழே இறங்கி வந்தனர்.

“இந்நேரத்துக்கு எங்கே புறப்பட்டீங்க?”

“வேலை இருக்கு ஆன்ட்டி.”

“இங்கே இருந்து பாக்கப் போறதா சொன்னியே ஆதி?”

“ஆமா… அதான் இங்கே இருந்து கிளம்பிப் போறேன். ரூமுல உக்காந்து கம்ப்யூட்டர் தட்டுற வேலையில்ல எனக்கு. அந்தந்த இடத்துக்கு போயி நின்னாத்தான் என் வேலை நடக்கும். என்னை டிராப் பண்ணிட்டு ராம் வந்துடுவார்.” சகஜமாய் கூறியவள்,

கணவனைப் பார்த்து, “வேலை முடிஞ்சதும் கால் பண்றேன். பிக்கப் பண்ண வந்துடு ராம்!” உத்தரவாக சொல்லி முடித்து அவனோடு கிளம்பி விட்டாள்.

“சாப்பாடு எல்லாம் எப்படி?” பரிமளம் அத்தனை சீக்கிரமாய் விடவில்லை.

“புது வீட்டுல சொல்லிட்டேன். நீங்க கஷ்டப்பட வேண்டாம்.” வெட்டிவிட்ட பேச்சு மாமியாருக்கு கோபத்தை வரவைத்தது.

“என்ன பொண்ணு இவ… எதுக்கும் பிடி கொடுக்காம அவ போக்குலயே பேசிட்டு போறா! யாருக்கும் எதுக்கும் மரியாதை கொடுக்க மாட்டேங்குறா!” அதிருப்தியான பாவனைதான் சிறிய மருமகளின் மேல் உண்டானது.

“இந்த கூத்துக்கு இவங்க அந்த புது வீட்டுலயே இருந்திருக்கலாம். நீ இழுத்த உரண்டைக்கு அந்த பொண்ணு சரியான பதிலடி கொடுத்திட்டா… இப்ப சந்தோசமா ஆத்தா?” பரிமளத்தையும் கடிந்து கொண்டான் அரவிந்தன்.

“சின்னஞ்சிறுசுகள தொல்லை பண்ணாதே… அவங்க போக்குல விடுன்னு சொன்னா கேட்டாத்தானே! இங்கே வந்து அங்கே போயின்னு பெட்ரோலுக்கு வந்த கேடு! அலைச்சல் தான் அதிகமாகுது.” அரவிந்தனும் கடுப்பாய் சொல்லிவிட்டுச் செல்ல, அந்த சூழ்நிலையே பரிமளத்திற்கு பிடிக்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் தேனிலவுக்கு ஜெய்பூர் கிளம்பி சென்றது புதுஜோடி. மனைவியின் பிடிவாதத்திற்கு தலையாட்டியே ஒரு வழியாகிப் போனான் ராம்சங்கர். ‘விட்டுப்பிடி, பொறுமையாய் இரு!’ மனம் ஒருபக்கம் நிதானப்பாடம் நடத்த, பல்லைக் கடித்துக் கொண்டான்.

இரவில் அவன் கை வளைவில் அடங்கிப் போகிறவள், பகல் நேரத்தில் அவனையே சுழற்றியடிக்கும் சாட்டையாகி விடுகிறாள். கணவனின் மறுப்பிற்கெல்லாம் மனைவியிடத்தில் மறுதலிப்பு மட்டுமே எதிரொலிக்கும்.

காதலின் பலவீனம் இருவரையும் இணைக்க, புரிதலின் பலவீனத்தில் இருவருமே வெவ்வேறு திசைகளில் பிரிந்து நின்றனர். வாழ்க்கை முழுவதும் இப்படியே நகர்ந்து போனால் தனது நிலை என்னவாகிப் போகும் என நினைத்துப் பார்க்கும் போதே ராம்சங்கரின் மனம் முழுவதும் ஆயாசம் மேலிட்டது.