தேன் தேடும் குழலினி

ei8UWBZ75251-c989bdad

 

‘தேன் தேடும் குழலினி ‘

பிரபலமான கல்லூரி அது.அன்று முன்னணி நிறுவனங்கள் முன்வந்து நேர்முகத் தேர்வினை நடாத்திக்கொண்டிருந்தது. மாணவர்கள் பலரும் பல முகபாவங்களோடு சுற்றிகொண்டிருந்தனர்.

பரீட்சை முடிய அடுத்து,இந்தக் கல்லூரி வாழ்க்கைக்கு விடைக்கொடுக்கும் நிலையில் நண்பர்கள் குழுமமாக அங்கும் இங்கும் அமர்ந்தும் நின்றும் அளவலாவிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் விடைபெற வேண்டுமே எனும் சோகத்தில் இருக்க அவள் மட்டும் கொஞ்சமும் குறைவில்லாத  குதூகலத்தோடு இருந்தாள். தன் தோழியின் தோளில் தொற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த இன்னுமொரு தோழியை சீண்டிக்கொண்டு வர,

“ஹேய்! இந்தா பொண்ணு, உன்னைத்தான்.”

அவள் திரும்பி யாரென்று பார்க்க,

“இங்க வர்றது.”

தன் தோழிகள் பட்டாளத்தோடு சென்றுக் கொண்டிருந்தவளை அழைத்தார் அங்கு வந்திருந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர்.

அவர் தோற்றம் பார்த்து அவரை  சீண்டவேண்டும் என்று தோன்ற,

“அடி ஐஷு,ரொம்ப போறடிக்குது  சொன்னல்ல. வா நம்ம ஊர் காரங்கதான் பேசிட்டு வரலாம்.”

மூன்று வருடங்களாய் கல்லூரி நுழைந்தது முதல் தன் உயிர் தோழியாய் உடன் இருந்தவளை அழைத்துக்கொண்டு அந்த பாட்டிம்மாவிடம் வந்தாள்.

“இந்தா வந்துட்டேன் கெழவி.”

அவர் முன்னே குதித்து வந்து நின்றவள்,

“என்ன விசயம் சொல்லுறது.”என்றிட,

“இங்கதான் என் பேராண்டி படிக்கிறாப்ல, ஓரெட்டு கூப்டன்னா பார்த்துட்டு போய்டுவேன் புள்ள.

“யாருப்பா அந்தப் பேராண்டி. பேராண்டிய கூப்டுன்னா எப்டி? உம் பேராண்டி பேரு என்ன, எந்த ஸ்ட்ரீம்ல படிக்குறாப்ல? “

“அதெல்லாம் நமக்கு எங்க தெரியப்பபோகுது புள்ள. ஏதோ நம்ம ஊரு விவசாயத்தை பெருசா பண்ணப்போறேன், அதுக்கு பட்டப்டிப்பெல்லாம் இருக்கு. முறையா கத்துக்கிட்டு பண்ணனும்னு சொல்லி வந்துட்டான்.”

“ஓஹ்! சரி… உன் பேராண்டி பேரென்ன?”

“செல்லா.”

“ஏதே செல்லாவா?”

“அது நானு செல்லமா கூப்பிடுவேன்.அவன் பேரு,’ரகுநந்தன்’.”

“அடடே! உம் பேராண்டியா அது. ரொம்ப தான் வளர்த்து வச்சிருக்க கெழவி. வயலு மேக்கிற காளைக்கு வச்ச தீனியெல்லாம் உம் பேரனுக்கு வச்சுட்ட கெழவி.அத தின்னுப்புட்டு இங்கவந்து நம்மள மேக்கிறாப்ல.”

தன் பேரனை சொல்லவும் கோபம் கொண்ட பாட்டி,

“என்னடி நானும் பட்டனத்து பொண்ணு பேசிட்டுப் போகட்டுமேன்னு விட்டாக்க,கெழவின்னு வார்த்தைக்கு வார்த்த சொல்லுற. என் ஊரு எலிசபத்து நானுடி.வந்து கேளு என்னப்பத்தி.

“அட எலிசபத்தா நீனு. ஏலேய் இங்க பாருங்கடி இவக எலிசபத்தாம்ல.அப்போ உன் பேராண்டி ஹெர்ரியா?”

அங்கிருந்த நண்பர்கள் பட்டாளம் அவளோடு சேர்ந்து சிரித்தனர்.

அவள் சிரிக்க ஒரு பக்கம் விழுந்த கன்னக் குழியில் அவள் வதனம் மிளிர,பார்க்க அத்தனை அழகாய் இருந்தாள்.

அதை ரசித்தாலும் கண்டுக்கொள்ளாததைப்போல,

“என் பேராண்டி பார்த்து பொறாமைல குத்திக்கிற நீனு. அவன் நடந்தாலே நம்ம ஊரு பொண்ணுங்க வாய பொளந்துகிட்டுதான்  திரிவாளுக்குங்க.’

‘எங்க ஊருப்பக்கம் இப்படி சிரிச்சன்னு வய்யி பேயோட்ட வந்துருவானுங்க நம்ம  விருமாண்டிங்க.”

“அடடே அப்படியா சங்கதி, எந்த ஊரு  சொல்லு கெழவி, நானும் இதுக்கப்புறம் எங்க போறதுன்னு யோசிச்சிட்டே இருக்கேன், சொன்னாக்க நானும் அங்க வாரேன்.நின்னு உன் பேராண்டிய வாய கொஞ்சம் பொளந்துகிட்டுதான் பார்க்குறேன். அப்போவாச்சும் என்னதான் அவன்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சுக்குறேன்.”

” எங்க ஊரு மதுரை. அங்கெல்லாம் இப்டி பேசுன, அவிங்க அந்த வாய சேர்த்து தச்சு வச்சுருவாய்ங்க.”

“அப்போ நானே ஊசி, நூலு வாங்கிட்டு வாரேன் கெழவி. உனக்கெதுக்கு செலவு.”

“ஏலேய், என்ன ரொம்ப ஓவராதான் பேசுற, இரு உன்ன எம் பேராண்டிய பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன். “

“அடி சும்மாதான் இரேன், பாவம்டி அந்த  பாட்டி. பாரு பேசியே களைச்சுப்போய்ட்டாங்க.”

“ஐஷு குட்டி, என்ன உங்க பக்கத்து ஊருன்னதும் மதுரக்காரங்களுக்கு சப்போர்ட்டா?”

“அப்டில்லாம் இல்லடி. சீனியர் வந்துட்டா அப்புறம் பிரச்சினை ஆகிரும்.ஏற்கனவே உன்னைக் கண்டாலே ஆகாது. “

“அச்சோ அதோ வர்ராங்க.”

“சரி சரி உனக்காக வேணும்னா விட்டுர்றேன்.”

“வாடி போய்றலாம்.”

“அட நீ வேற இன்னிக்கு விட்டா இனி எங்க இந்த மூஞ்ச பார்க்க.”

“என் மதுர வீரன் தானே…

என்னை உசுப்பி விட்ட வீணே!

இனி விசிலு பறக்கும் தானே …

என் பேராண்டி மதுர வீரன் தானே…”

 பாடிக்கொண்டே,

“ஹேய் கெழவி உன் பேராண்டி வரான்.அப்போ நாம கிளம்புறோம்.”

“அவனை பார்த்ததும் பயத்துல எங்கடி ஓடறீங்க? இவ்ளோ தைரியமா பேசுறவா அவன் முன்னாடி பேசுறது.”

“அச்சோ! இந்தக் கெழவி வேற.” ஐஷு என்கிற ஐஸ்வர்யா வெளிப்படையாகவே தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

“ஏய் கெழவி, உன் பேரனுக்கு நான் பயமா? ” சரிதான்,

“பாரிப்போ யாரு யாருக்கு பயப்படுராங்கன்னு.”

‘அய்யோ,இவ கூட இந்தக் அப்பத்தாக்கு என்ன பேச்சு.’மனதிற்குள் சொல்லிக்கொண்டே அங்கு வந்தான் அந்த பெண்மணியின் பேராண்டி.

“அடடே.வாங்க விவசாயதுத்துறை அமைச்சரே! உங்களைப் பார்க்க உங்க ஊரு எலிசபத்து வந்துருக்காப்ல.ஐய்யாதான் அந்த ஊரு ஹெர்ரியாம்ல.”

“இது நம்மளுக்கு தெரியாம போய்டுச்சு. இல்லன்னா அமைச்சருக்கு பதவி உயர்வு கொடுத்திருப்போம்ல. “

அவளை முறைத்தவன்,

“அப்பத்தா ரொம்ப நேரம் வெய்ட் பண்றியா? பசங்க யார்கிட்டயாவது சொல்லிருந்தா அப்போவே கூப்பிட்டிருப்பாங்க.எதுக்கு இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ற.”

“இல்லடா செல்லா, பையன்னுதான்  கூப்பிட்டேன், பார்த்தால்…”

அவரும் சிரித்துக்கொண்டே கூறினார்,

“ஹேய் கெழவி ரொம்பத்தான்…”

அவரோடு மீண்டும் சண்டைக்கு செல்லப்பார்க்க அவளை இழுத்துக்கொண்டு ஐஸ்வர்யா முன்னே சென்றுவிட்டாள்.

செல்லும் அவளை பார்த்தவனோ ‘எப்போதான் பொண்ணா நடந்துப்பியோ தெரியாது.பெயர் மட்டும் குழலினி இருக்க குழலோ  அரையடிக்கும் பத்தாது.’

உள்ளுக்குள் கூறிக்கொண்டு சிரித்தவன்,(அதுவும் உள்ளுக்குள் தான்)அவனை பார்க்கவந்த பாட்டியோடு பேசிக் கொண்டு நடந்தான்.

வணிகத் துறையில் தன் கல்லூரிப்படிப்பை முடித்திருந்தாலும் ஏதோ சிறுவயது தொட்டு விவசாயத்தின் மீது கொண்ட பற்றின் காரணத்தால் அத்துறையில் இன்னும் கற்றுக்கொண்டு தன் ஊர் நிலங்களை செழிப்படைய செய்ய நினைத்தான். தன் உயர்தரப்பட்டப் படிப்பை இத்துறையில் முடிக்க நினைத்து இதோ இன்று முடித்தும் விட்டான்.

அவர்கள் இருவரும் பேசிக்கோண்டிருக்க தூரமாய் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தனர் நண்பிகள் இருவரும்.

“இதென்ன ஐஷு இப்டி? முகத்துல தாடி வளர்க்கணும் தான். அதுக்குன்னு இப்படியா? ‘

‘கண்ணு மட்டும் தெரிது. அதை பார்ப்பானா மனுஷன்.அதோட அதுக்குள்ள குட்டியா பொண்ணுங்களை விட அழகா லிப்ஸ் மட்டும் தெரிது.

“ஹ்ம்ம்…” இது ஐஷு.

“பசங்க ஹேர் வளர்த்தா அழகுதான்.அதுக்குன்னு’

தன் கழுத்தோடு நீண்டு தோளுக்கு கீழ் செல்லாத தன்னுடையதை கோதிக்கொண்டே, ‘என்னோடது விட நீளமா இருக்கு.”

“ஹ்ம்ம்.உன் அளவேதான் இருக்குடி.”

“நோ ஐஷு.அவனோடது சுருள் சுருளா இருக்கு ஸ்ட்றேயிட் பண்ணுனா என்னதை விட இன்னும் லோங் தான்.”

“நானும் வந்த நாள்ல இருந்து பார்க்குறேன்.இப்போ காலேஜ் விட்டு கிளம்புற நாளும் வந்தாச்சு. இன்னுமே அவனை பார்த்து திட்டுறியா, வர்ணிக்கிறியா, என்ன சொல்றன்னே புரில.”

“அது ஐஷு, இவ்ளோ பொண்ணுங்க அவன் பின்னாடி அழைதுங்களே அந்த கெழவி வேற இன்னிக்கு அதேதான் அவங்க ஊருலயும் நடக்குதுன்னு சொல்லுது.அப்டி என்னதான் அவன்கிட்ட இருக்குனு தேடறேன். எங்கண்ணுக்கு ஒன்னுமே சிக்க மாட்டேங்குதே.’

‘அதோட நாமளும் தான் இருக்கோம், நம்மளுக்கும் இத்தனை வருஷத்துல  ஒன்னும் சிக்கலையே.”

“அது சரி. இருக்க பையன் பூரா சண்டை வளர்த்து வச்சிருக்க உன்னைக் கண்டாலே தெறிச்சு ஓட்றானுங்க.எவன் வருவான் உன் பின்னாடி?”

ஐஸ்வர்யாவோடு ஹைபை கொடுத்துக்கொண்ட அவர்கள் இருவரின் உற்ற தோழனும் ஐஷுவின் காதலனுமான முகிலன் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டே கூற,

 “ஓகே ஓகே. என் புகழ் பாடுனது போதும்.நானே சோகமா இருக்கேன்.” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டாள். அவள் முக பாவனையை பார்த்து மற்ற இருவரும் சிரித்து வைக்கவென்று,மேலும் சில நேரம் அவர்கள் உரையாடல் நீண்டது.

இனி எப்போதும் பார்க்கப்போவதில்லை என்பதை சொல்லாது நட்புகளிடம்  விடைபெற்றும் கொண்டாள் நம் நாயகி.

“கல்லூரி வாயிலில் தனது ஸ்கூட்டியில் ஏற, இவளுக்கு முன்னாள் நின்றிருந்த ஜீப் வண்டியில் ஏறி அமர்ந்தவனோ அவளைப் பார்த்த பார்வையில் சிலநொடி அவனையே பார்த்தவள் தன்னை சுதாகரித்துக்கொண்டு, அவளுடைய குறும்புத்தனம் எப்போதும் போல துணை வர,

“என்ன சாரே,வண்டி இழுக்குறதெல்லாம் வண்டி ஏறுது. வண்டி தாங்குமா?

இதுல இங்க லுக்கு வேற.”

உள்ளுக்குள் சிரித்தவன் முகத்தை அப்போதும் கடு கடுவென வைத்துக்கொண்டே,

“ஹேய் இதுக்கப்றமாவது பொண்ணா இருக்க கத்துக்கோ. பசங்க துணி கழட்டிட்டு பொண்ணுங்க துணி போட்டுக்கோ.உன்னெல்லாம் பெத்தாங்களா செஞ்சாய்ங்கலான்னு தெரில.

பஜாரி மாதிரி எப்போ பாரு வாயி. முதல்ல அத கண்ட்ரோல் பண்ண கத்துக்கோ.அதோட பெயருக்கு ஏத்தாப்ல கூந்தலை வளர்த்துக்கோ.”

“எனக்குன்னு வந்த ராகு நீ, நண்டு வாயா.உன்ன கேட்டாங்களா நா பொண்ணா பையனான்னு?’

‘இன்னிக்கு சொன்னேன் வச்சுக்கோ மேன்.இப்படியே ஒரு டாம் பாய் உனக்கு கிடைச்சு,காலம் பூரா ஜெர்ரிகிட்ட மாட்டிக்கிட்டு நீ தவிக்கல, அன்னிக்கு நீ என்னை மனசால நினைச்சு,என்கிட்ட மன்னிப்பு கேட்ப.அன்னிக்குதான் இந்த சாபம் ரிஜெக்ட் ஆகும்,அதுவரைக்கும் அனுபவிப்ப.”

“தேங்க்ஸ்.” என்று மட்டும் கூறி புன்னகைத்தவன் தன் பக்க கண்ணாடியை மேலேற்ற அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவளும். வேறு யாராக இருந்தாலும் அந்த சிரிப்பில் கவிழ்ந்திருப்பார்கள்.

குழலினி,அதீத கண்டிப்பின் மத்தியில் வளர்ந்தவள். வெளி உலகம் தெரியாதவள்.ஊருக்குள்ளே இருந்த பாடசாலையில் கற்றாலும் சிறந்த முறையில் சித்திபெற, வீட்டில் உள்ளவர்களை அதைக்கொண்டே பேசி தன் வேலை சாதித்துக்கொண்டாள்.

எதிர்த்து பேச என்ன, பெரியோர் எதிரே முன் நிற்க அஞ்சும் பெண். கூட்டுக்குடும்பத்தில் வளரும் இவள் மூன்று அண்ணன் மாருக்கு தங்கையும் ஆனவள். தன்னுடைய கல்லூரி படிப்பை தொடரவும், பெண்கள் விடுதி தங்கி படிப்பதும் மட்டும் தன் விருப்பம் அதற்கு மட்டும் அனுமதி கேட்டு வாதிட்டவள் வேலைக்கும் செல்ல கேட்க மாட்டேன் என்றும் உறுதி மொழி கூறி அதனை நிறைவேற்றிக் கொண்டாள். இப்போதும் மீண்டும் அந்தக் கூண்டுக்குள் சென்று சேர்கிறாள்.

இரண்டு வருடங்கள் காற்றாய் கரைந்திருக்க, நினைவாய் தன் கல்லூரி வாழ்க்கையை சுமந்து, தன் தோழமையின் நேசம் எண்ணி தினம் வருந்துவாள். இருந்தும் அதுவே போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.

இதோ அடுத்த கட்டமாக அவளை பெண்பார்க்கும் படலமும் முடிந்து வீட்டின் பின் கிணற்றுக்கட்டில் அமர்ந்திருந்தாள்.

இன்னும் அவன் முகம் கூட பார்த்ததில்லை. அடுத்த வாரமே திருமண நாள் குறிக்கப்பட்டுவிட்டது.பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை. தோன்றவில்லையா இல்லை அவன் தோற்றம் பார்ப்பதெதிலும் தோன்றி தன்னை நிலைக்குலையச் செய்கின்றதுவா.அவளே அறியா நிலை.

“ஹேய்” பொண்ணு இந்தா  உன்னைத்தான்.”

அன்று கேட்ட அதே குரல்.ஸ்ரீவள்ளி பாட்டியின் குரலது. கண்கள் குளமென நிரம்பியிருக்க அந்தக் குரலில் சட்டென்று திரும்ப அவள் கன்னம் தீண்டியது துளி ரெண்டு. கண்கள் இரண்டும் விரிக்க அவரை திரும்பிப்பார்த்தவள்,

” ஹேய் கெழவி…” என அவரை ஓடிவந்து அணைத்து கன்னத்தில் முத்தமும் வைத்தாள்.

“அட ச்சே, என் கன்னத்தை எச்சில் பண்ணுத.” கன்னத்தை 

அழுந்த துடைத்துக்கொண்டே கூற,

“எங்கிட்ட முத்தம் வாங்க கொடுதுவைக்கணும் கெழவி. “

“அதுன்னா வாஸ்தவந்தான். “

“அது சரி,என்ன கெழவி நீ,இந்த ஊருன்னு அன்னிக்கு சொன்னதுல இருந்தே கோயில் போறப்பெல்லாம் தேடுவேன். ஆனாலும் கண்டதில்லை. இன்னிக்கு என்னன்னா எங்க வீட்லயே,சோ சப்ரைஸ்.”

அந்த நிமிடம் அவள் அன்றைய  மணப்பெண் என்பதையே மறந்து, மனம் கொண்டிருந்த சஞ்சலங்கள்  மறந்து.பேசிக்கொண்டிருந்தாள்.

“எங்க அன்னிக்கு தொத்திக்கிட்டு நின்னியே கூட்டாளிக, ஒன்னத்தையும் காணோம்.பிரெண்டுக்கு கல்யாணமுன்னா வராதுகளோ?”

“அதெல்லாம் இல்ல கெழவி.காலேஜ் விட்டு வந்தன்னைக்கு பார்த்தது.அதுக்கப்பறம் அவங்க கூட உறவு வச்சுக்க விடமாட்டாங்க. அப்டில்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் காலேஜ் போனேன்.என்ன ஒன்னு, நினைச்சு சந்தோஷபப்டுறதுக்கு நெஞ்சுபூரா கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன்.”

அவள் பேச அவள் மனம் கொண்டிருந்த வேதனை உணர முடிந்தது அவரால்.அத்தனை பிள்ளைகள் வளர்த்து பேரப்பிள்ளைகளையும்  வழி நடத்தியவருக்கு புரியாதா என்ன. அவள் கன்னம் வருட அவளோ அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, அவர் காதருகே குனிந்தவள்,

” சரி நீ மாப்ளக்கி என்ன வேணும்? பையன் எப்படி இருப்பான்?உன் பேராண்டி போல இருப்பானா? “

அவள் வார்த்தைகளில் தடுமாற்றம் கொண்ட பெண்மணி,

“பையன் போடோ பார்த்து பிடிச்சுப்போய்த்தானே ஒதுக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. “

“அடப்போ கெழவி. நைட் தான் சொன்னாங்க காலைல நிச்சயம் பண்ண வர்ராங்கன்னு. அதுக்கு மட்டும் எப்போவும் நான் மறுத்து பேசமாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணித்தான் காலேஜ் போக பர்மிஷன் வாங்குனேன். “

“அட எந்த காலத்துல இருக்கானுவ. கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணை கேட்க வேணாமா?

இப்போ வரைக்கும் நீ பையனை பர்க்கலையா? “

உதட்டை பிதுக்கி இல்லையென்றாள்.

“சரி ஏதோ உன்ன பார்க்க முடிஞ்சதே அதுவே போதும். நாம அப்பப்ப மீட் பண்ணலாம் கெழவி.”

“அதெல்லாம் பார்க்கலாம். நீ பையனை பார்க்க நான் வேணும்னா ஏற்பாடு பண்ணவா? “

“வேணாம் கெழவி, இப்போல்லாம் யாரை பார்த்தாலும் உன் பேராண்டி முன்னாடி வந்து நிக்குறான்.காலேஜ் போக முன்ன என் முடி ரொம்ப நீளமா இருக்கும்.நான்தான் சோர்ட் பண்ணுனேன்.காலேஜ்ல அவனோடது என்னை விட நீளம்.பாரு இப்போ அவனை விட நீளமா கூந்தல் வளர்ந்தந்துடுச்சி.”

தன் முதுகு படர இருந்த கூந்தலை எடுத்துக்காட்டியவள்,

“இப்போ பொண்டாட்டி பிள்ளைனு செட்ல் ஆகிருப்பான்ல. அப்போவே நம்மளை விட மூனு வருஷம்  பெரியவன்ல.”

“இவ்ளோ அவனை பத்தியே பேசுறவ அவன பிடிச்சிருக்குன்னு அப்போவே சொல்ல வேண்டியதானே? “

“அய்ய,அப்படிலாம் ஒன்னுல்ல. ஏதோ தெரில, அப்பப்ப அந்தாளு முகம் வந்துட்டே இருக்கும். இப்போ இன்னொருத்தங்களுக்கு சொந்தமா இருந்தா அதுகூட தப்புல்ல.”

அவள் பேசக் கேட்டுகொண்டிருந்தார். அவள் முக பாவனைகள் அவள் மனதை தெளிவாய் எடுத்துக்காட்டியது.

சற்றுநேரத்தில் பாட்டியை உள்ளிருந்து அழைக்க,

“சரிடாமா. நா கிளம்புறேன்.”

“கெழவி ரொம்ப பக்கத்துலயா இருக்க? “அவர் கைகளை பிடித்துக்கொண்டே கேட்டாள்.

“இல்லடிம்மா.இங்கருந்து ஆறு கிலோமீட்டர் இருக்கும்ல.என் பேராண்டி கூட வீட்லதான்  இருக்கேன். “

“சரி கெழவி. பார்த்து போயிட்டு வா.”

மனம் ஏதோ இலகுவானதாய்  உணர்ந்தாள்.இருந்தும் பேராண்டி பற்றி ஏதும் பேசாதது வருத்தமளிக்கவும் தவறவில்லை.

மட மடவென கல்யாண வேலைகள் நடந்தேற, இதோ மேடையில் அவன் அருகே அமர்ந்திருந்தாள்.

வெகு விமர்சையாக நடக்க

மேடைக்கு முன் போடப்பட்டிருந்த  இருக்கைகளில் முன் வரிசையிலேயே அமர்ந்திருந்த பாட்டியை கண்டவள் அமர்ந்திருந்த வாக்கிலே,”ஹாய் கெழவி”என யாரும் அறியாவண்ணம் கையசைத்தாள்.

அவரும் கீழிருந்து ஆசிர்வதிப்பது போல செய்கை செய்ய இருவரையும்  அருகிருப்பவன் பார்த்திருந்தான்.

படித்து நவீனமான முறையிலேயே  அனைத்தும் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களின் செயல்களும், நடவடிக்கைகளும் அந்தக் கால மக்களின் வழித் தொடரல்களாகவே 

இருந்தது. இன்றைய வாழ்வை ஏற்று வாழ உகந்த சூழ்நிலை அமையவில்லை. பெண்ணை பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்தால் போதும் அவ்வளவுதான் அவர்களுக்கு.

ஏனோ கண்கள் அங்கும் இங்கும் அவன் தென்படுகிறானா என தேடவும் தவறவில்லை.

இவர்கள் அருகே வந்த பாட்டி,

“டேய் பேராண்டி என்ன லுக்கு இந்தா கட்டு தாலிய.” என்றிட, அவரின் ‘பேராண்டி’ என்ற அழைப்பில் அருகிருப்பவனைக் காண விரித்த கண்களின் இமை சேர மறுத்தன.

“ஹேய், பொண்டாட்டி உன் சாபத்தை வாபஸ் வாங்கிக்கிறியா, இல்ல சாபம் பளிகட்டும்னு காலம் பூரா ஒன்னா இருந்து எனக்கு சேவகம் பண்றியா?”

அவள் முகம் அருகே சென்று காதோடு அவள் மட்டும் கேட்க கூறிக்கொண்டே தன் சரிபாதியாகிக்கொண்டான் அவளின் நந்தன்.

அவன் முகத்தையே விழி அகலாது பார்த்துக்கொண்டிருந்தாள் குழலினி.

அழகாய் சிகை வெட்டி,அளவாய் கத்தரிக்கப்பட்ட தாடி,இதழ் இரண்டும் தெரிய முறுக்கிய மீசை என வெள்ளை வேட்டி சட்டையில் அமர்ந்து அவளை கட்டியிழுத்தான்.

“இந்த சைட் அடிக்கிற வேலையை நீ இன்னும் விடலையா? “

“ஏதே நான் எப்போ அடிச்சேன்.”

“அதான் என்னை எப்போ பார்த்தாலும் இப்படித்தானே பார்ப்ப, அப்போ இதுக்கு என்ன பேரு “

“அது சும்மா. இப்டில்லாம் அப்போ பார்க்கல. “

“இப்படித்தான் அப்போல இருந்தே பார்க்குற. “

“பெரியவா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கோ”

 ஐயர் கூற, தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் இருவரும். அவர்களை நெற்றி முத்தமிட்டு வாழ்த்த,

“ஹேய் கெழவி அன்னிக்கு வந்தப்ப சொல்லிருக்கலாம்ல? “அவருக்கு மட்டும் கேட்குமாறு கூற

“இன்னிக்கு இந்த முகத்துல இத்தனை சந்தோஷத்தை பார்க்கணும்னு நானும் பேராண்டியும் நினைச்சோம். அதுக்குத்தான். பாரு இப்போ எவ்ளோ அழகுன்னு.” அவளுக்கு நெற்றிமுறித்தார்.

அதன் பின்னே அவர்களின் சடங்குகள் முடிய ரகுநந்தனின் வீட்டுக்கே செல்லவேண்டும் என்று அவன் கூறிவிட, தம்பதியர்களை அங்கே அழைத்து சென்றுவிட்டனர். அங்கே அவளை வரவேற்க நின்றிருந்த இருவரையும் கண்டவள் மகிழ்வில் கொண்டாடித்தீர்த்து விட்டாள்.

“ஐஷு,பாரு உன் பிரெண்ட,எங்க கிட்ட கூட சொல்லல. சும்மா திட்டிட்டே இருந்து கடைசில கல்யாணம் பண்ணிக்க முடிவானதும் சொல்லிருக்கா.”

“ஹேய் அப்டில்லாம் இல்லை. எனக்கே இன்னிக்குத்தான் தெரியும்.” குழலி கூற,

“இதை நாங்க நம்பனும்?”

“அதானே எவ்ளோ தைரியம்  இருந்தா எங்க பாட்டிய விட்டே எங்க வீட்ல கேட்டிருப்பா நல்லா கேளுங்க.”

ரகு  அவர்களுக்கு இளநீ கொடுத்தாவாறே எடுத்துக்கொடுக்க,

அவனைப் பார்த்து ஏதோ கூற  வாயெடுத்தவள், அவன் தந்த பறக்கும் முத்தத்தில் திக்குமுக்காடிப் போனாள்.

இரண்டு நாள் சென்று சந்திக்கலாம் என்று நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

இரவு தூங்கும் நேரம் போல  

பாட்டி,ரகுவின் அன்னை தந்தை, அவன் அண்ணன், மனைவி அவர்கள் பிள்ளையென்று அந்த  வீட்டின் உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர். ஒன்றாக அமர்ந்து உண்டனர். பின் அவளை மேல் மாடியில் அவர்கள் அறைக்கு செல்லமாறு பாட்டி கூற, அவரையும் அழைத்து போராடியவள் தோற்று பின்னே தனியாய்  மாடியேறினாள். வெளி தாள்வாரத்தில் ரகு 

அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க சத்தமின்றி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அலங்காரம் ஏதுமின்றி அறையில் ஏதோ ஓர் அழகு அவளை ஈர்த்தது. இளமஞ்சள் ரோஜாச் செண்டொன்று மட்டும் கட்டிலின் அருகே இருந்த சாடியில் வைக்கப்பட்டிருக்க அதுமட்டுமே அத்தனை அழகாய்.

வெள்ளை திரைச் சீலை யன்னல் வழி தீண்டும் தென்றல் தீண்டி விலக அதன் அருகே சென்றவள் அந்த இரவின் கருமையிலும் வெளி தோட்டம் தந்த அழகில் ரசித்து லயித்திருந்தாள்.

அவள் பின்னால் கேட்ட காலடிச் சத்தத்தில் இதயம் தாளம் தப்ப, யன்னல் கம்பிக்களை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அவள் உடல் மொழியில் சிரித்துக்கொண்டவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு,

“சரி எங்கப்பத்தாகிட்ட என்ன சொல்லி இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுன? “

“நான் எங்க பண்ணுனேன். எனக்கே இன்னிக்குத்தான் தெரியும், அப்போவே ஐஷு வந்திருக்கப்பவும் இதேதான் சொன்னீங்க.”

இவன் பக்கம் திரும்பியவள் அவன் அருகாமையும் பொருட்படுத்தாது அவள் சந்தேகத்தை  தீர்த்துக்கொள்ள நினைக்க, அவளை பார்த்து புன்னகைக்க அப்போதுதான் அதை உணர்ந்தாள்.

அவளை மிக நெருங்கியிருந்தான்.

இடையோடு சேர்த்துக்கொண்டு 

அவள் நெற்றி முட்டியவன்,

“எனக்கும் தெரியாது இனி. பொண்ணு பாருங்கன்னு மட்டும் தான் சொல்லிருந்தேன் வீட்ல. என் வேலை அப்டி ரொம்ப பிஸி ஆகிட்டேன்.

ஏதோ யாரோ அப்பப்ப என் மனசுக்குள்ள என்னை ரொம்ப இம்ச பண்ணிட்டே இருந்தாங்க. பட் என்னால உணர முடில.” கூறியவன்,

அவள் நுதலில் மெல்லமாய் இதழ் ஒற்றியெடுத்தான்.

“அப்பத்தாக்கு அன்னிக்கு காலேஜ்ல உன்னை பார்த்ததுல இருந்தே பிடுச்சுப்போயி,இங்க ஊருக்கு வந்தப்றமா உன்னை பத்தி விசாரிச்சிருக்காங்க. அப்றம் எப்டியோ உங்க வீட்ல பேசி முடிசிட்டாங்க. அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்து நிச்சயம் பண்ற  அன்னிக்குத்தான் எனக்கு நீன்னு தெரியும். நீ ஓகே சொல்லித்தான் பண்றாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்பத்தா வந்து சொல்லவும் தான் எனக்கு ரொம்ப ஷாக்கிங். அப்பறம் உன்னை சப்ரைஸ் பண்லாம்னு சொல்ல வேணாம் சொல்லிட்டேன்.”

அவனையே பார்திருந்தவள் அவன் நெருக்கத்தை உணர்ந்த நொடி, அவன் காதல் சொட்டும் பேச்சினில் அன்றைய நாட்களில் வளம் வந்த முரட்டுக் காளையினை தேடி தோற்றுக்கொண்டிருந்தாள்.😏😏

தன்னோடு சரிக்கு சமமாய் வாயாடி வீழ்த்துபவளை இன்றோ பேசாது  பார்வைக்கொண்டே, அவள் மென்மைக்கொண்டு தன்னை வீழ்த்தும் மாயத்தில் மூழ்கிப்போனான்.

இணைந்த மேகமிரண்டு

இனி பிணைய கொள்ளும் ஊடலில் 

மிகைக்கும் காதல்

தூறலாய் சாரலாய் 

அவ்வப்போது அடை மழை பூத்தூவலாய்