தேன் பாண்டி தென்றல் _ 13

 
13
 
“அழகிய வீர பாண்டியன் சொன்ன பெயரைக் கேட்டு தேன்மொழி அதிர அவன் ‘இப்பவாச்சும் தெரிஞ்சுதா?” என்பதாக  ஆற்றாமையாகப் பார்த்தான்.
 
அன்றைய காலை மாத்திரையின் உதவியால் தென்றல் காரிலேயே தூங்கி இருந்தாள்.  இனி இவளை மருத்துவமனையில் தங்க வைத்து மருத்துவம் பார்ப்பதுதான் சரி என இவனுக்குத் தோன்ற மருத்துவரும் அதைத்தான் இவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் இன்று காலையில்.
 
‘வேற என்ன ரீல் விடப் போறே?’ என்பதாக அவள் கண்களைச் சுருக்க ,
 
“ அவருக்கும் என் பேருதான்” என்றான் சற்று கோபத்துடன்.
 
இன்னும் நம்பாமல் இவனை முறைத்துக் கொண்டே இருந்தால் என்னதான் செய்வது? காலில் விழுவது மட்டும்தான் பாக்கி.
 
இவளிடம் இப்படி மல்லுக் கட்டுவதற்கு அதைக் கூட செய்து விட்டுப் போகலாம் போல என மனதினுள் புலம்பிக் கொண்டான்.
 
“எவருக்கும்?”
 
“ தென்றல் சொன்ன அவர்… அந்தப் பாண்டி!”
 
“ அது … அது சரி? அதென்ன மரியாதைலாம் பலமா இருக்கு?” என்றாள் தேன்மொழி விளையாட்டாக.
 
‘ஆத்தாடி! இவ பல்லைக் காட்டுறதைப் பாத்தா ஒரு வழியா நம்பிட்டா போலவே? இதுவே பெரிய நிம்மதிடா சாமி!’ என நினைத்தவன் மனம் லேசாகி விட மென்மையாகச் சிரித்தான்.
 
‘என்னை எப்படி நீ நம்பாமல் போகலாம்? என்று முறுக்கிக் கொள்ள ஒரு வினாடி ஆகாது.
ஆனால் சிறுவயதில் இருந்து தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து தன் காலில் நிற்கும் தேன்மொழிக்கு பொதுவாக ஆண்களிடம் ஒதுக்கம் உண்டு என்பது இவன் முதலிலேயே அறிந்ததுதான். 
 
அதனால் இந்த விசயத்தில் அவள் குழம்பியதை அவன் தவறாக நினைக்கவில்லை. தவிர அவளிடம் அவனும் இதுவரை தன் மனதைப் பற்றி ஒன்றும் சொன்னதில்லையே? நேரடியாக திருமணத்திற்குக் கேட்டான் அவ்வளவுதான். 
 
அந்த ‘வருங்காலக் கணவன்’ எனும் இன்னும் முடிவாக பந்தத்திற்கே அவனுக்காக தன் வரைமுறை தாண்டி எத்தனையோ செய்திருக்கிறாள்.
 
தென்றலை கவனித்துக் கொண்டது அவற்றில் மிக முக்கியமானது. தென்றலுக்கும் பாண்டியனுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியால் ஏதோ சம்பந்தம் என்று முடிவு செய்து உழன்ற போதும் அந்த இக்கட்டான நிலையில் தென்றலை தேன்மொழி கனிவாகவே கவனித்துக் கொண்டாள். பாக்கியம்கூடத்தான் கவனித்துக் கொண்டார். ஆயிரம் சொன்னாலும்  பாக்கியம் தனது மகளுக்காகத்தான் தென்றலை தனது வீட்டில் வைத்துப் பராமரித்திருப்பார்.  
 
அவள் இவனை முறைத்துக் கொன்டே தென்றலை ஆசையாகக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து அவள் மீது முன்பை விட இன்னும் அதிகமாக பிடித்தம் வந்தது. அதன் விளைவுதான் அவள் முகம் பார்த்து நடப்பதும் அவள் என்ன சொன்னாலும் பம்முவதுமாக இருக்கிறான். 
அவளுக்கும் இவனை பிடித்து விட்டால்?
 
பிடித்து விட்டால் என்ன? பிடித்து விட்டால்? அதெல்லாம் அவளுக்கு இவனைப் பிடித்துதான் விட்டிருக்கிறது. இல்லை என்றால் எப்படி இவன் மீது சந்தேகம் இந்த விசயத்தில் வந்திருக்கும்? அப்படியே வந்தாலும் அதற்கு இத்தனை கோபம் ஏன்? 
 
ஆனால் தென்றல் விசயம் முடியாமல் அவளிடம் அவர்களைப் பற்றிப் பேசுவது மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அந்தப் பெண் அத்தனை துன்பத்தில் இருக்கும் போது அவன் தன்சுகம் பற்றி எண்ணவே முடியவதில்லை.
 
அவனுக்கு தென்றல் மீது ஏன் இத்தனை பரிவு? 
 
இதே காலனியில் இருப்பவள் என்பதைத் தாண்டி தேன்மொழியின் இன்னொரு பெயரைக் கொண்டவள் அல்லவா? அவள் நன்றாக இருக்க வேண்டும் – அந்த அவள் பெயருக்காகவே!
 
இது அர்த்தமில்லாததாகத் தோன்றும். ஆனால் தன் பிள்ளையின் பெயரைத் தாங்கிய பேப்பரைக் கூட பத்திரப்படுத்தும் செண்பகம் பாக்கியம் போன்ற தாய்மார்கள் இதைப் புரிந்து கொள்ளுவார்கள். 
 
ஆம் ! முன்பு இவர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த இவனது பெயரைத் தாங்கிய பலகையை இவன் அம்மா இன்றும் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறார்.
 
இது ஒரு மென்மையான உணர்வு என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் அவனால்?
 
காரை ஒரு ஓரமாக ஒதுக்கினான் பாண்டியன் . கேள்வியாகப் பார்த்த தேன்மொழிக்கு 
 
“அப்பாயின்மென்ட்  டைம்க்கு இன்னும் நேரம் இருக்கு. உன்கிட்டப் பேசனும். அதான் சீக்கிரம் வந்தேன். வீட்ல வச்சு பேசலாம்னு நினைச்சேன். ஆனா அத்தை இல்லாதப்ப நான் வீட்ல இருந்தா நல்லாயிருக்காது. அதான் அப்படியே உங்களைக் கூட்டிட்டு வந்திட்டேன்” என்றவன் –
தாங்கள் பேசிக் கொண்டு வந்த விசயத்திற்கு வந்தான்.
 
“பாண்டியன் ஒரு பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கார். அவர் சென்னையில ஒர்க் பண்ணப்ப தென்றலுக்கும் அவருக்கும் பழக்கம் ஆகிருக்கும் போல. தென்றலோட காலேஜ் பீஸ் இவர் ஒர்க் பண்ண பாங்க்ல தான் கட்டனுமாம். அந்த காலேஜ் ஒரு ட்ரஸ்ட் மூலமா நடக்குது. பீஸ் எப்பவும் பேங்க் மூலமாத்தான் கட்டுவாங்களாம். “
 
ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்த தேன்மொழியைப் பார்த்து கோபம்தான் வந்தது. 
 
“ நீ நம்பினா நம்பு. நம்பலைனா விடு. இதுதான் உண்மை.” என்றான்.
 
“அந்த பேங்க் இவங்க காலேஜ் காம்பஸ்க்கு உள்ளேதான் இருக்கு. அதோட என்ட்ரன்ஸ் காலேஜ் என்டிரான்ஸ்கு அடுத்து இருக்கு “
 
பாண்டியன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வந்தாள் தேன்மொழி.
 
“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.
 
 
“ஏன் கேட்கிற?”
 
“நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்களே? அதான்”
 
“இதுலாம் எனக்கு சொன்னது பூதப்பாண்டியன் சார்தான். “ என நிதானமாக அவன் சொல்ல தேன்மொழி கண்களை உயர்த்தினாள்.
 
“இப்போ அவர் எங்க இருக்கார்?”
 
“அவருக்கு ஒரு வருசம் முன்னவே மயிலாடுதுறையில ட்ரான்ஸ்பர் ஆனதால அங்கதான் இருக்கார். தென்றலை கான்டாக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்ணியிருக்கார். ஆனா மல்லிகாம்மா அவ செல்லை சென்னையில இருந்து வரும் போது எப்படியோ கால் அட்டென் செய்யமுடியாதபடி செய்திட்டாங்க போல.
 
 
அவ செல்போனை கண்டுபிடிக்கக் கூட பூதப்பாண்டியன் ட்ரை பண்ணிருக்கார். ஆனா முடியல. அதே நேரத்துல அவங்க அம்மாதான் அவளைக் கூட்டிட்டுப் போயிருக்காங்கனும் போது அவ இங்கதான் இருப்பான்னு ஒரு நிம்மதி. “
 
பேசிக் கொண்டே போன வீர பாண்டியனை தன் குறுக்குக் கேள்வியால் தடுத்தாள் தேன்மொழி.
 
“ ஒரு வருசமா அவ எப்படி இருக்கானு ஒரு தடைவை கூட வந்து பாக்கனும்னு தோணலையா அவர்க்கு? போனும் ஒர்க் ஆகல. பின்ன தென்றல் எப்படி இருக்காளோனு எந்தக் கவலையும் அவருக்கு   வரலையா?” 
இவள் படபடவெனக் கேட்க அவன் ஆச்சரியமாகப் பார்த்தபடி பதிலுறுத்தான்.
 
‘காதல் ஊதல்னா தேனும்மா டின்னு கட்டும்னு நினைச்சேன். ஆனா இங்கயும் பொங்குதே?’ என ஆனந்தம் வரத்தான் செய்தது வீர பாண்டியனுக்கு.
 
 
“வந்தாராம். அங்கே எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் தாண்டி இவளைப் பாக்க ரெண்டு தடைவ வந்தாராம்” என்றபோது இவள் யோசனையாகப் பார்த்தாள்.
 
அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு _
 
“ஆமா. அவர் வந்திருந்ததை நான் பாக்கலை. அவரை நமக்கு முன்ன பின்ன தெரியாது. ஆனா நம்ம ஏரியாவுக்கு புதுசா ஆள் வந்தா நமக்குத் தெரியும். நான் சரக்கு எடுக்கப் போயிருப்பேன். நீ வீட்டுக்குள்ளயே இருந்திருப்பே – அவர் வந்த டேய்ஸ்ல” என்றான் பதில் போல.
 
‘இருக்கலாம்’ என்று நினைத்தது இவள் மனதும்.
 
“வந்து ஒன்னும் கண்டுபிடிக்கலியாமா?”
 
“தென்றல் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டார். ஆனா அவங்க அம்மா அவங்க பொண்ண வெளியூர்ல படிக்கப் போயிருக்கறதா சொல்லி வச்சிருந்ததால இவரும் நம்பிட்டாரு.
 
தென்றல் ஃபர்ஸ்ட் சென்னையில படிச்சிட்டு இருந்தால்ல? அந்த காலேஜ்ல இருந்து அவளை டிஸ்கண்டினியூ பண்ணி கூட்டிட்டு வந்திட்டாங்கனு தெரியும். வேற காலேஜ்ல சேர்த்திருப்பாங்களோன்னு நினைச்சிருக்கார். “
 
“அது சரி. தென்றல் வெளியூர்ல படிக்கிறான்னு ஊரை உலகத்தை எல்லாம் ஏமாத்தியிருக்கு அந்தம்மா. இதுல டீச்சராம்!”
 
வெறுப்புடன் சொன்னாள் தேன்மொழி.
 
“அதுக்கும் மேல அவங்க அவளோட அம்மா. அவளுக்கு நல்லதில்லன்னு நினைச்ச விசயங்களை – அவ செய்யக் கூடாதுங்கதுக்காக அவங்களுக்குத் தெரிஞ்ச வகையில் செய்து அவளைத் தடுத்திருக்காங்க. 
 
அதே சமயம் அவங்க நினைப்பே தப்புங்கிறது அவங்களுக்குத் தெரியமலேயே இறந்துட்டாங்கங்கறதுதான் சோகம்”
 
“என்ன சொல்ல வர்றீங்க?”
 
 
“மல்லிகாம்மா போன வருசம் தென்றலைப் பாக்க அவ காலேஜ் போயிருக்காங்க. அப்போ…” என்று ஆரம்பித்து தென்றலின் இன்றைய நிலைக்கான கதையைச் சொல்லத் தொடங்க தேன்மொழி கூர்ந்து கேட்கலானாள்.
 
அன்று…
 
இரண்டாம் சனிக்கிழமை. 
 
மகளைப் பார்த்துவிட்டு வரலாம் என மல்லிகா தனது பள்ளிக்கூடத்திற்கு விடுமுறைக் கடிதம் கொடுத்துவிட்டு சென்னைக்கு பயணமானார்.
 
சனிக்கிழமை அவருக்கு விடுமுறைதான். ஆனால் புறப்பட ஆயத்தம் செய்ய அது இது என வெள்ளியும் அரைநாள் விடுமுறை எடுத்திருந்தார்.
 
அவளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ஊறுகாய்,  இட்லிப்பொடி ,தேங்காய் எண்ணெய் ,கொஞ்சம் புதிய உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டவர் _ ஒரு பாட்டிலில் அவர் கடைந்து எடுத்த வெண்ணையில் இருந்து அவரே காய்ச்சிய நெய்யையும் எடுத்துக் கொண்டார்.
 
‘வத்தக் குழம்பிற்கு நெய் போட்டு சாப்பிட்டால் அவளுக்குப் பிடிக்கும். புதன்கிழமை அவர்கள் கேண்டீனில் மதியம் வத்தக் குழம்பு வைப்பார்கள் என மகள் சொல்லி இருந்ததை நினைவு வைத்து எடுத்துக் கொண்டார்.
 
இன்னும் அவளுக்காக சுத்தமான தேங்காய்எண்ணெயில் செய்த குளியல் சோப்பையும் எடுத்துக் கொண்டார்.
 
“டீச்சர்.டீச்சர். தென்றல் அக்கா எவ்ளோ அழகா இருக்காங்க? குளிக்க என்ன சோப்பு வாங்கிறீங்க டீச்சர்?” என்று கேட்கும் இளம்பருவ மாணவிகளுக்கு புன்னகையைப் பதிலாக கொடுத்தாலும் மகளின் சருமம் ஆரோக்கியாக இருக்;க அவருக்குத் தெரிந்த அளவில் குடிசைத் தொழில் செய்யும் ஒருவரிடம் இருந்து இந்த சோப்புகளை வாங்கி மகளுக்குக் கொடுப்பார். 
 
அந்த சோப்புகளின் புண்ணியமோ? இல்லை பிறவியிலேயே அப்படியோ? தெரியவில்லை – தென்றலின் முகம் தங்கமென மின்னும் எப்போதும்.
 
இன்னும் தேவை என்று கருதிய சில பொருட்களையும் தனக்காக சில மாத்திரைகளையம் எடுத்துக் கொண்டு தன் மகளைக் காணச் சென்றார் மல்லிகா.
 
கோவையிலிருந்து சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி அம்ந்தார் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன். அந்தப் பயணம் தாய் மகள் இருவரின் வாழ்க்கையை மாற்றிப் போடப் போவது தெரிந்திருந்தால் அந்த பயணம் அவருக்கு அத்தனை மகிழ்ச்சியை தந்திருக்குமா ?
 
 
 
அந்தப் பேருந்தில் அவர் பக்கவாட்டில் இருந்த இரு இருக்கைகளில் ஒன்றில் பூதப் பாண்டியன் இருந்தான். இன்னொன்றில் தனது பேக் பேக்கை வைத்திருந்தான். ஆட்கள் இல்லாததால் அவ்வாறு வைத்திருந்தான். யாராவது வந்தால் பேக்கை மேலே இருந்த ஷெல்பில் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தான் போலும்.
 
ஜன்னல் ஓரமாக தண்ணீர் பாட்டில் விற்க வந்தவரிடம் ஒரு பாட்டிலை வாங்கி விட்டு காசையும் அந்த வியாபாரிக்கு கொடுத்த பின் தண்ணீர் அருந்த நினைத்து பாட்டிலின் மூடியைத் திறக்க – எங்கிருந்தோ விக்கல் சப்தம் கேட்டது. அவர் சுற்றும் முற்றும் பார்க்க  – விக்கியது பூதப் பாண்டியன்தான்.
 
தன்னியல்பாக அவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தவர் அவன் குடித்து முடித்ததும் பாட்டிலை வாங்கிக் கொண்டு புன்னகைத்தார்.
 
“ரொம்ப தேங்கஸ்மா” என்றான்.
 
“தாகத்துக்கு தணணீர் கொடுக்குறதுக்கு ஒரு தேங்கஸா? நம்ம தமிழ்நாட்டுல வீட்டுக்கு கெஸ்ட் வாந்தாலே தண்ணீர் குடுத்து வரவேற்போம்” எனவும் அவன் சிரித்தான்.
 
“நான் தமிழ்நாடு மட்டும் இல்ல ஆண்டி . கேரளாவும்தான்” என்றான்.
 
அவன் உயரமும் நிறமும் அரிசிப் பல்லும் அதை பறைசாற்றின. 
 
“அப்பா மலையாளி. அம்மா மதுரைதான். எங்க குலசாமி பேருதான் எனக்கு. பூதப் பாண்டியன்” என்றவன் அவர் தாய் தந்தையின் காதல் கதை – அவர்கள் ஊரை எதிர்த்து திருணம் செய்தது- தாய் தங்கள் ஊரின் நினைவாக தங்கள் ஒரே மகனுக்கு குலசாமி பெயர் வைத்தது என்று பிட்டு பிட்டு வைத்தான். 
 
 
மல்லிகா ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டார். அவருக்கு அதில் சம்மதம் இல்லை. ஆனால் அது அவர்கள் வாழ்க்கை. அதில் இவரது கருத்துக்கள் எதற்கு? 
 
கொஞ்ச நேரம் பயணம் செய்யப் போகிறோம். அதில் தேவையில்லாத வாக்கு வாதங்கள் எதற்கு? யார் எங்கிருந்து வந்தால் என்ன? போனால் என்ன? 
 
யார் எந்த மதமாக மொழியாக இனமாக இருந்தாலும்தான் என்ன?
 
அனைவருக்கும் தேவை அந்த தூரத்தைக் கடப்பது மட்டும்தான்.
 
 அந்தப் பொழுதுகள் இனிமையானவையாக இருந்துவிட்டுப் போகட்டுமே? என நினைத்தவர் அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டு மகளுக்கு போனைப் போட்டார்.
 
மறுமுனையில் தென்றல் ‘அம்மா’ என்று குதிப்பது இங்கிருந்தே தெரிந்தது அவருக்கு.
 
அதில் அவர் மனம் மகிழ்ச்சியில் மகளை விட அதிகமாக குதித்தது.
 
அவர் பெண்!
 
தனி ஒருத்தியாக யாரின் தயவும் இன்றி யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்;க்காமல் அவர் வளர்த்த அவர் பெண்!
 
அதில் அவருக்கு கர்வம் அதிகம்தான்.
 
வகுப்பில் ஓய்வு வேளகைளில் மகளின் படிப்பு பிரதாபங்களை அவரது மாணவர்களிடம் அளக்கத் தொடங்கினார் என்றால் அந்தக் குழந்தைகள் அவற்றை வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
 
அவையெல்லாம்தான் அவரின் பிந்தைய முடிவுகளுக்குக் காரணம் ஆகப் போகிறது என்பது தெரிந்திருந்தால் அதைத் தவிர்த்திருப்பாரோ? 
 
“பாப்பா. நல்லா இருக்கியாடா?” என்றார் முதன்தலாக அவளை கையில் எடுத்த சமயம் தோன்றிய அதே பரவசத்தோடு.
 
“நல்லல்ல்ல்லா இருக்கேன்மா. எப்ப வர்றீங்க ஊருக்கு?” என்றாள் குதித்துக் கொண்டே.
 
“குதிக்காதடி. இன்னும் சினனக்குழந்தை மாதிரி” என செல்லமாக கடிய –
 
“நான் இங்க குதிக்கிறது அங்க உங்களுக்குத் தெரியுதாம்மா?”அவள் கூவ – இவர் காதைக் குடைந்து கொண்டார்.
 
 
“நீ எப்ப என்ன செய்வன்னு எனக்கு நல்லாவேத் தெரியும் வேலம்மா” பாசமான அவர் குரலைக் கேட்டு அவள் சற்று மௌனித்தாளோ?
 
“என்னடி சத்ததைக் காணோம்?”சற்று அதட்டவும் அவள் மீண்டும் ஆரம்பித்து விட்டாள்.
 
“அதிருக்கட்டும்மா. எப்ப வர்றீங்கனு கேட்டேன்?” என நினைவு படுத்தினாள் மகள்.
 
 
“வந்துட்டே இருக்கேன். அம்மா பஸ் ஏறிட்டேன். சீக்கிரம் வந்திருவேன். அங்க பஸ் ஸ்டாண்ட்லயே பேசஞ்சர் வெயிட்டிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெப்ரஸ் ஆகி வந்திடறேன். காலையில உன்னைப் பாக்க காலேஜ் வர்றேன் “ என்று பேசி முடிக்க அந்தப்புறம் அவள் கொடுத்த உம்மாவிற்கு இந்தப்புறம் இவர் வெட்கப்பட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். 
 
யாரும் கவனித்த மாதிரி தெரியிவல்லை.
 
ஆனால் பக்கத்து இருக்கை பரந்தாமன்….. இல்லை… இல்லை  … பூதப்பாண்டியன் மட்டும் இவளை பராக்கு பார்த்துக் கொண்டிருந்ததை கடைசியாகத்தான் கவனித்தார்.
 
 
சரி. அவனுக்கும் நமக்கும் என்ன? என நினைத்தவர் சும்மா ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தார்
 
“யார் ஆண்டி போன்ல?”
 
அது உனக்கு எதுக்கு? என்று கேட்கலாம்தான். அப்படி கேட்டால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. 
 
“என் பொண்ணு. ஹி..ஹி..” என்ற வழிந்து வைத்தார்.
 
 
நாளை காலை பெண்ணைப் பார்த்துவிட்டு கொண்டு வந்திருந்த பொருட்களை அவளிடம் சேர்ப்பித்து விட்டு அன்று இரவே கோவை திரும்ப எண்ணம். தவிர அதுதான் செய்ய முடியும். அங்கே யாராவது தெரிந்தவர்கள் உறவினர்கள் இருந்தாலாவது அங்கே தங்கி மகளை கூட இரண்டு நாட்கள் கண்ணாரக் கண்டு செல்லலாம். ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் இவர் எங்கே தங்குவார்? வெளியே அறை எடுக்கவும் அவருக்கு ஒப்பாது. இருக்கட்டும் இன்னும் ஒரு வருடம்தானே? பி.ஜி முடித்ததும் உள்ளுரிலேயே ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணத்தை முடித்து வைத்து வைத்து பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தார்.
 
அவர் உலகமே அவள்தான். அதுதான் – அந்த எண்ணம்தான் பிழையாகிவிட்டது.
 
பஸ்ஸில் அவன் பாட்டுக் கேட்டுக் கொண்டு வர இவர் செல்போனில் மகளின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டு வந்தார். 
 
அவன் பாட்டு கேட்டுக் கொண்டு வரவில்லை. பேசிக் கொண்டு வந்தான். அதுவும் இவர் மகளுடன்  -என்பது தெரியாது அவருக்கு.
 
அவன் வெறுமே கேட்டுக் கொண்டு வந்தான். எப்போதாவது “ம்” என்றான் . அல்லது “ம்ம்” என்றான். அது பாட்டுடன் முனகுவது போலத்தான் இருந்தது. 
 
பஸ்ஸில் விளக்குளை அணைக்கவும் இருட்டில் செல்போனைப் பார்க்க கண்கூசியது மல்லிகாவிற்கு. 
 
போனை மூடிவிட்டு நிமிர – அவன் இவரைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
 
அவன் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது அவருக்கு.
 
ஆனால் அவன் என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலை அவருக்கு இல்லை என்பது அவன் அறியாமல் போனது துரதிருஷ்டம்தான்.