ei11SQJ36597-78a35de3

தொலைந்தேன் 03💜

சில மணித்தியாலங்கள் கழித்து,

மெல்ல விழிகளை திறந்த ரிஷிக்கு தலை பயங்கரமாக வலித்தது. “ஆ…” சிறு முணங்கலுடன் விழிகளை இரண்டு மூன்று தடவை மூடித் திறந்தவன், விட்டத்தைப் பார்க்க, அந்த இரவு நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒளியில் சில கம்பிகளுக்கு மத்தியில் மூடப்பட்ட பிளாஸ்திக் துணியே அவன் விழிகளுக்குச் சிக்கியது.

புருவத்தைச் சுருக்கியவாறு அதை அவன் உற்று நோக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செருமல் சத்தம். உள்ளுக்குள் அதிர்ந்து பக்கவாட்டாகத் திரும்பி ரிஷி நோக்க, அங்கு டென்டின் மூலையில் ஒரு கையில் ஃப்ளாஸ்க் இன்னொரு கையில் க்ளாஸுடன் அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் சனா.

அவளை புருவத்தை நெறித்து நோக்கியவன், “யார் நீ?” சந்தேகமாகக் கேட்க, சுடுநீரை ஒரு மிடறு அருந்தியவள், “மயக்கத்துலயிருந்து விழிச்சதுமே நான் யாரு, நான் எங்க இருக்கேன்னுதானே கேப்பாங்க! நீ என்ன நான் யாருன்னு கேக்குற? பரவாயில்லை தெளிவாதான் இருக்க.” கேலியாகச் சொல்ல, ரிஷியோ அவளை முறைத்துப் பார்த்தான்.

அவனுடைய முறைப்பில் சனாவுக்கு சற்று கடுப்பாக, காலியான ஃப்ளாஸ்கை கோபமாக தூக்கியெறிந்தவள், “இந்த முறைப்பெல்லாம் நான் பண்ண வேண்டியது. ஆமா… உனக்கு சாக வேற இடமே கிடைக்கலயா? அறிவுக்கெட்ட முட்டாள்! முட்டாள்! படிச்சவன்தானே! நல்லா பாட்டு பாடுற, நேத்து அவார்ட் எல்லாம் கூட வாங்கின. ஆனா, குடிச்சிட்டு அங்க போய் கிடக்குற. ஆனா ஒன்னு, உன்னை காப்பாத்த வந்ததுக்கு எனக்கு சிறப்பா பண்ணிட்ட. வாந்தி அபிஷேகம்.” என்று காட்டுக்கத்துக் கத்த, விழிகளை விரித்து அதிர்ந்துப் பார்த்தான் அவன்.

அவனை இதுவரை யாருமே இப்படி பேசியதுக் கிடையாது. அதுவும் இந்தத் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியதிலிருந்து அவனுக்கென தனி மதிப்பு. அதுவும், அவனுடைய அழுத்தமான பார்வையிலும் இறுகிய முகத்திலும் அவனை நெருங்க நினைக்கும் பெண்கள் கூட சற்று விலகி நின்றுவிடுவர்.

ஆனால் இவள்?

இருந்தாலும் தன் தவறு அவனுக்கு புரிய, “சோரி.” மெல்லிய குரலில் சொன்ன ரிஷி, “என்னை நீ காப்பாத்தாமலே விட்டுருக்கலாம்.” என்க, அந்த குரலிலிருந்த வலியை உணர்ந்தவளுக்கு அதற்குமேல் அவனை திட்டவும் மனமில்லை.

நாடியை தடவிக்கொண்டவள், “உனக்கு இன்னும் போதை தெளியலன்னு நினைக்கிறேன்.” என்றுவிட்டு வெளியே சென்று ஏற்கனவே ஓரமாக வைத்திருந்த கட்டைகளை எரியும் நெருப்பிலிட்டு மேலும் தீ மூற்ற கைகளை நிலத்தில் ஊன்றி வெளியிலிருந்த சாணக்கியாவை எட்டிப் பார்த்தான்.

அவளோ மேலும் நெருப்பை மூட்டி, குளிருக்கு இதமாக நெருப்பை நோக்கி கையை நீட்டி அதன் உஷ்ணத்தை உடலில் ஏற்றிக்கொண்டிருக்க, ரிஷியோ விழிகளாலே சில நிமிடங்கள் அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்தான்.

முட்டி வரையேயான பேன்ட், ஆண்கள் அணியும் ஷர்ட்டில் கையில் சில ரப்பர் வளையங்களுடன் தலைமுடியை கொண்டையிட்டு முகத்தில் எந்தவித ஒப்பனையுமில்லாது நெருப்பின் வெளிச்சத்தில் அழகியாக தெரிந்தவளை ஒரு ஆண்மகனாக அவன் மனம் ரசிக்க, ஏதோ ஒன்று ஞாபகம் வந்து இதழில் கேலிப் புன்னகையும் தோன்றியது.

அப்போதுதான் தன்னை குனிந்துப் பார்த்தவன், ஏற்கனவே அணிந்திருந்த பேன்ட்டில் வெற்றுடலாக இருப்பதை உணர்ந்து சனா குளிருக்கு இதமாக அவனுக்கு போர்த்தியிருந்த போர்வையை உடல் முழுக்க மூடிக்கொண்டு கைகளை உரசியவாறு மெல்ல வெளியில் வந்தான்.

அப்போதுதான் மலைகளுக்கு நடுவே மரங்கள் சூழ்ந்த பகுதியில் கூடாரம் போட்டு இருப்பது அவனுக்குப் புரிந்தது. அவளெதிரே அமர்ந்துக்கொண்டவன், “நீதானே என்னை திட்டின?” சற்று முறைத்தவாறுக் கேட்க, சடாரென நிமிர்ந்து அவனை பார்த்த சனாவோ திருதிருவென விழித்தாள்.

ஆனால், சுதாகரித்து “ஓஹோ! நியாபகம் இருக்கா? மறந்திருப்பன்னு நினைச்சேன்.” அவள் கேலிதொனியில் சொல்ல, “நான் யாருன்னு தெரிஞ்சும், என்னை நீ எப்படி அப்படி திட்டலாம்?” தன் தரத்தைச் சொல்லி அவன் கோபமாகக் கேட்க, “ரிஷி வேதாந்த்னா, பெரிய கொம்பா?” என்று பதிலுக்கு கேட்டவளின் நினைவுகளோடுச் சேர்த்து ரிஷியின் நினைவுகளும் இரவு விழாவில் நடந்ததை மீட்டிப் பார்த்தன.

சனாவின் தோழன் இந்தர் வேலைப் பார்க்கும் நிறுவனம்தான் இந்தியாவில் நடாத்தப்டும் பெரிய விழாக்களை புகைப்படம், காணொளி, நேரடி ஒளிபரப்பு எடுக்கும் கம்பனி.

நேற்று நடந்த விழாவை காணொளி புகைப்படம் எடுக்கும் ப்ரோஜெக்ட் கூட இவர்களின் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட, எப்போதும் போல் தான் போகும் இடத்துக்கு சாணக்கியாவையும் அழைத்து வந்துவிட்டான் இந்தர். இது வழக்கமாக நடக்கும் விடயம்தான். அவளும் அவனுடைய வேலைகளுக்கு சம்பளமே வாங்காத அப்ரன்டீஸாக வேலைப் பார்ப்பாள்.

ஆனால், ரிஷியுடனான முதல் சந்திப்பை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்கனவே தாமதமாகியதில் வேகம், பதட்டத்தோடு தன் காரை தானே செலுத்தி விழாக்கு வந்து சேர்ந்தவன், க்ரீச்சென்ற சத்தத்தோடு காரை நிறுத்த, மண்டபத்திற்குள்ளிருந்தவர்களுக்கு அப்போதுதான் ரிஷி வரும் விடயமே தெரிய வந்தது.

உள்ளே வந்தவனின் அவசரம் புரியாது தன் வேலையை செவ்வென செய்யவென இந்தர், “சார், ஒரே ஒரு ஃபோட்டோ. உங்கள இன்டர்வியூ பண்ணதான் முடியல. ஃபோட்டோ மட்டும் சார்.” என்று கிட்டதட்ட காலில் விழாதக் குறையாகக் கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்து புகைப்படமெடுக்கவென தயார் செய்திருந்த மேடைக்கு அனுப்ப, கடுப்பாக இருந்தாலும் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு மேடையை நோக்கிச் சென்றான் ரிஷி.

ஆனால், தன்னைத் தாண்டி இந்தரை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருந்த சனாவை கவனிக்காது போனதுதான் அவன் குற்றமாகிப் போனது.

அவளோ, “இந்து…” என வேகமாக ஓடி வந்தவள், சட்டென குறுக்கே வேகமாக நடந்து வந்த ரிஷியின் மீது மோதிவிட, இருக்கும் அவசரத்தில் அவனுக்கு மேலும் கோபம் வந்தாலும் கேமராக்களைப் பார்த்துவிட்டு, “சோரி…” என்று அவன் அமைதியாக கடந்துப் போக, இந்த சண்டிராணி விட்டால்தானே!

“அறிவுக்கெட்ட முண்டம்! நான் போற வழியிலதான் குறுக்க நந்தி மாதிரி வந்து மோதுவியா?” சனா சத்தமாகவே கத்திவிட, “ஹவ் டேர் இஸ் ஷீ?” வேகமாக கோபத்தோடு திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் முதுகுப்புறமே தெரிந்தது.

அதுவும், அரங்கத்துக்குள் நுழையும் அவசரம் வேறு. வேகமாக ஸ்டைலாக ஒரு தோரணையீல் நின்றவன், இந்தர் புகைப்படமெடுத்ததுமே கொஞ்சமும் நிற்காது மண்டபத்திற்குள் நுழைந்திருந்தான்.

ஆனால், அவளின் குரலையும் வார்த்தைகளையும் அவனால் மறக்கவே முடியாது. அதனாலேயே மண்டபத்தினுள் நுழையும் போது சிரிக்க முயன்றாலும் லேசான கடுப்பு அவன் முகத்தில் எட்டிப் பார்த்தது.

இப்போது சனா திட்டவுமே, அவனுக்கு அவள் யாரென்று புரிய கோபம் மூண்டாலும் ஏனோ கோபப்பட முடியவில்லை. சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

மெல்ல விரிய முயன்ற இதழை அடக்கியவாறு ரிஷி பொய்யாக முறைக்க, “ஹிஹிஹி…” அசடுவழிந்தவாறு அவள் முதத்தை திருப்பிக்கொள்ள, சுற்றிமுற்றி ஆராய்ந்தவனுக்கு இந்த நெருப்பில்லையேல் முழுக்க கும்மிருட்டுதான் என்பது மட்டும் புரிந்தது.

“ஒருவேள, இப்போ நான் உன் கூட இல்லைன்னா இங்க தனியாதானே இருந்துருப்ப, உனக்கு பயமா இல்லையா?” அவன் கேட்டுவிட்டு அவளை கேள்வியாக நோக்க, விழிகளைச் சுருக்கி அவனை உற்றுப் பார்த்தவள், “என்னை என்னன்னு நினைச்ச, இது ஒன்னும் எனக்கு புதுசு கிடையாது. இந்தர் கூடதான் புதுபுது ஊரா போவேன். அவன் அவனோட கம்பனி ஆளுங்க கூட கூட்டு சேர்ந்து வேலை பார்ப்பான். எனக்கு அதெல்லாம் செட் ஆகாது. நான் இப்படி எங்கேயாச்சும் தனியா வந்து டென்ட் போட்டு தங்கிப்பேன். அதுமட்டுமில்லாம, என் கூடதான் என் டோலி இருக்கே, தென் வை ஷூட் ஐ?” என்க, மீண்டும் சுற்றிமுற்றி தேடினான் அவன்.

“டோலியா, உன் பெட் எனிமல்லா, இங்கேயா இருக்கு?” ரிஷி தேடி  அலசியவாறுக் கேட்க, “ஹாஹாஹா…” வாயைப் பொத்திச் சிரித்தவள், “பெட் இல்லை. என்னோட கேமரா.” என்றுவிட்டு பக்கத்தில் வைத்திருந்த தன் புகைப்படக் கருவியைக் காட்டி, “இதுதான் எனக்கு எல்லாமே! அம்மா கடைசியா எனக்காக சேர்த்து வைச்சிருந்த காசுல வாங்கினது. இப்போ வரைக்கும் இதுதான் எனக்கு சோறு போடுது.” சிரித்தவாறுச் சொல்ல, அவனுக்கோ ஆச்சரியம்.

அதே ஆச்சரியம் கலந்த சிரிப்போடு, “என் ஸ்பைக்கும் எப்போவும் என் கூடவேதான் இருக்கும்.” என்று சொன்ன ரிஷி, “ஓஹோ! உன் நாய்க்குட்டியா?” என்று சனா கேட்டதும், “நோ, மை கிட்டார்.” என்றான் விழிகள் மின்ன. இப்போது சிரிப்பது சனாவின் முறையானது.

சரியாக ஏதோ ஞாபகம் வந்தவளாக, “அடக் கடவுளே! மறந்தே போயிட்டேன்.” என்றுவிட்டு வேகவேகமாக கூடாரத்துக்குள் நுழைந்தவள் பையில் எதையோ அலசித் தேடி, கையில் ஒரு பொலித்தீன் உறைக்குள்ளிருந்த பாணையும் கூடவே ஒரு மெழுகுவர்த்தி லைட்டருடன் ஓடி வந்தாள்.

ரிஷியோ அவளின் செய்கைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க, கல்லின் மேல் பொலித்தீனை விரித்து பாணை வைத்து அதற்குமேல் அவள் மெழுகுவர்த்தியை ஏற்றியவாறு, “இன்னைக்கு என் பர்த்டே, உன்னை காப்பாத்தின கலவரத்துல அதை செலப்ரேட் பண்ணவே மறந்துட்டேன்.” என்று சிரிப்போடுச் சொல்ல, அவனோ எட்டி கேக்குக்கு பதிலாக பாணில் மெழுகுவர்த்தியை அவள் ஏற்றி வைத்திருப்பதைப் பார்த்து சிரித்தேவிட்டான்.

அவளோ அவன் சிரிப்பதை முறைத்துப் பார்த்து, “க்ரேன்டா பர்த்டே செலப்ரேட் பண்ணி அதை சோஷியல் மீடியாவுல அப்லோட் பண்ணணும்னு பேருல காசை தண்ணி மாதிரி செலவளிக்குற உங்கள மாதிரி பணக்காரங்கள விட இருக்குறதை வச்சி பொறந்தநாள கொண்டாடி தானம் கொடுக்குற எங்கள மாதிரி ஆளுங்க எவ்வளவோ மேல்.” என்று பதிலடிக் கொடுக்க, அவனுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அதில் அவளை முறைத்தவன், முகத்தைத் திருப்பிக்கொள்ள, “சரி விடு! இப்போ நீதான் எனக்கு பர்த்டே பாட்டு பாட போற. இதுவரைக்கும் எனக்கு நானே பாடி, எனக்கு நானே ஊட்டிவிட்டு அப்பப்பப்பா…. இன்னைக்குதான் த பெஸ்ட் சிங்கர் ரிஷி வேதாந்த் என் கூட இருக்காரே, பாடுங்க பாடுங்க.” சனா சொல்ல, ரிஷியும் சிறிதுநேரம் அவளை பார்த்திருந்தவன், பின் மெல்லிய குரலோடு பாட ஆரம்பித்தான்.

அவனுக்கே தன்னை புரிந்துக்கொள்ள முடியவில்லை. பெயர் கூட தெரியாது அவளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறான். ராகவனோடு கூட ஐந்து நிமிடத்துக்குமேல் அவன் பேசியதே கிடையாது. ஆனால், இந்த சிறுபெண் அவனை பேசும் விதத்தைக் கூட கண்டுக்கொள்ளாது இப்போது இந்த நடுராத்திரியில் தரையில் அமர்ந்து அவளுக்காக பிறந்தநாள் பாடல் பாடுகிறான்.

அவன் பாட, “ரிஷி வேதாந்த் பாடி நான் பர்த்டே செலப்ரேட் பண்ணேன்னு என் ஏரியா பசங்ககிட்ட சொன்னா எவனும் நம்ப மாட்டாங்க. ஐ அம் சோ ப்ளெஸ்ட்.” உற்சாகமாகக் கத்திவிட்டு கேக்காக வைத்திருந்த பாணின் ஓரத்தை கத்தியில்லாத காரணத்தால் பிய்த்து எடுத்தவள், “இது அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.” விழிகளை மூடிச் சொன்னவாறு தனக்குத்தானே ஊட்டிக்கொள்ள, அவனோ ‘அழுகுறாளோ?’  என்ற ரீதியில் அவளின் குரலில் தெரிந்த வலியில் சனாவை உற்று நோக்கினான்.

“இது என் குட்டிம்மா ஊட்டி விடுறா.” என்று சொல்லும் போதே அவளுடைய குரல் உடைந்துவிட்டது. விழிகளிலிருந்து விழிநீர் ஓட அதைத் துடைக்க கூட மனமில்லாது விழிகளை மூடியே அமர்ந்திருந்தாள் அவள்.

‘இவளுக்குள்ள அப்படி என்ன வலி இருக்கு?’ அவளையே பார்த்திருந்த ரிஷிக்கு அவள் கண்ணீரை பார்க்கும் போது ஏனோ அவனுக்குள் இதயத்தை கசக்கிப் பிழியும் வலி.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” அவன் தொண்டையை செறும, பட்டென்று விழிகளைத் திறந்து, முகத்தைத் திருப்பி வேகமாகத் துடைத்துக்கொண்டவள், அடுத்தகணம் உற்சாகப் புன்னகையை முகத்தில் தாங்கி, “இது உனக்கு.” என்றுக்கொண்டே அவனுக்கு சிறுதுண்டை ஊட்டி விடப்போக, முகபாவனையை வேகமாக மாற்றிய அவளின் சாமர்த்தியத்தை உள்ளுக்குள் மெச்சியவாறு அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டான் ரிஷி.

அதற்குமேல் எதுவும் தோன்றாது அதே இடத்திலே பின்னால் நிலத்தில் சரிந்துப் படுத்தவாறு, “நீ உள்ள போய் தூங்கு, உன் உடம்பு இந்த பூச்சிக் கடியெல்லாம் தாங்காது. நான் இங்க படுத்துக்குறேன்.” விழிகளை மெல்ல மூடிவிட்டு சனா சொல்ல, “அது… அது வந்து நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு நீ கேக்கவே இல்லையே!” தயக்கமாக அவன் இழுக்க, அவளோ “அது எனக்கு தேவையே இல்லாத விஷயம்.” என பட்டென்று சொல்லிவிட்டாள்.

ஏனோ அவள் தன்னிடம் கேட்டிருக்கலாமோ என்று அவன் மனம் அவனையும் மீறி சுணங்கிக்கொண்டது. பெண்களிடத்தில் ஒதுங்கி வாழ்பவன்தான் அவன். ஆனால், பெண்களைப் பற்றி அறியாதவனில்லை. இருந்தும் இதுவரை இப்படியொரு பெண்ணை அவன் பார்த்ததே இல்லை.

சிறிதுநேரம் அவள் முகத்தையே ஆராய்ந்தவாறு யோசனையில் மூழ்கியிருந்தவன், எப்போது உறங்கினானென அந்த இரவை வெளிச்சமாக்கிய அந்த சந்திரனுக்கு மட்டுமே தெரியும்.

அடுத்தநாள்  விடிந்தும் விடியாததுமாக இருக்க, காலில் உணர்ந்த சுள்ளென்ற வலியில் “ஸ்ஸ் ஆ…” என்று கத்திக்கொண்டு பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான் ரிஷி.

வேகமாக அவன் தன் பாதத்தைப் பார்க்க, அங்கோ காட்டிலிருக்கும் பெரிய கட்டெறும்பு. அதைப் பார்த்ததுமே தட்டிவிட்டு, அது கடித்த இத்தை பரபரவென அவன் தேய்க்க, அந்த இடமோ வீங்கி சிவந்துப் போயிருந்தது. சரியாக, “என்ன வேது சார், எறும்பு கடிச்சதுக்கா உதட்டை பிதுக்கிகிட்டு உக்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க.” என்ற கேலியான சனாவின் குரல்.

குரல் வந்த திசையை ரிஷி நோக்க, அங்கு மேற்சட்டையை மரக்கிளையில் தொங்கவிட்டு உள்ளே அணிந்திருந்த டீஷர்ட்டுடன் போத்தல் நீரினால் முகத்தைக் கழுவியவாறு நின்றிருந்தாள் சாணக்கியா.

“கடிச்சா புரியும்.” கோபமாக உரைத்துவிட்டு சுள்ளென்று அது உருவாக்கும் வலியில் முகத்தை சுருக்கி அவன் வைத்திருக்க, “சேத்துலேயும் அடிவாங்கியாச்சு. சோத்துலேயும் அடி வாங்கியாச்சு.” கெத்தாக கோலரை தூக்கிவிட்டவாறு அவனருகே வந்து முட்டியை தரையில் ஊன்றி அமர்ந்துக்கொண்டவள், பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயின்மென்ட்டை எடுக்க, பதறியபடி தடுப்பது போல் கையை நீட்டினான் அவன்.

“இல்லை பரவாயில்லை, நானே போட்டுக்றேன். நீ என் காலெல்லாம் தொடாத!” ரிஷியின் வார்த்தைகள் பதட்டமாக வர, ‘ஙே’ என அவனை ஒரு மார்கமாகப் பார்த்தவள், “அய்யடா! நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்.” நொடிந்துக்கொண்டவாறு அந்த ஆயின்மென்ட்டைக் காட்டி, “இங்க பாரு, இதுல கொஞ்சோண்ணுதான் இருக்கு. நீயும் அதுல கொஞ்சோண்ணுதான் எடுக்கணும். அதிகமா காலி பண்ணேன்னா நீதான் அப்றம் எனக்கு வாங்கி கொடுக்கணும்.” படபடவென பேசிக்கொண்டே போனாள்.

அதில் அவளை ஒரு மார்கமாக பார்த்து, அவள் கையிலிருந்ததை “சரியான கஞ்சம்!” என்று கடுப்பாக முணுமுணுத்தவாறு ரிஷி வாங்கிக்கொண்டு  காயத்திற்கு போட, காதில் விழுந்தாலும் அதை பொருட்படுத்தாது, “மலையடிவாரத்துல உன் கார் நிக்குது. இப்போவே கிளம்புற வழிய பாரு, எனக்கும் இங்க முக்கியமான வேலையிருக்கு. சீக்கிரம் ஜாவ் ஜாவ்!” என்று அவசரப்படுத்தினாள் சனா.

அவனோ சட்டென நிமிர்ந்து விழிகளை விரித்து அவளை நோக்கியவன், மெல்ல எழுந்து டென்டினுள்ளிருந்த தன் ஷர்ட்டையெடுத்து அணிந்தவாறு, “போகவா, எப்படி போக? அதான் வண்டி ரிபேயர்ல இருக்கே.” என்க, “எதே?” அதிர்ந்துப் பார்த்தவள், “புரியல” என்றாள் கோபமாக.

“நேத்து நைட் மனசு சரியில்லைன்னு காரை எடுத்துட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன். இங்க வந்ததும் வண்டி சட்டுன்னு நின்னுருச்சு. சோ, காரை அப்படியே விட்டுட்டு ட்ரிங்க்ஸ்ஸ எடுத்துக்கிட்டு கால் போற போக்குக்கு மேல வந்துட்டேன். அப்போதான் நீ என்னை பார்த்திருக்க.” அவன் பேசிக்கொண்டே போக, “முட்டாள் முட்டாள் முட்டாள்! அறிவிருக்கா கொஞ்சமாச்சும்? மனசு சரியில்லைன்னா போறதுக்கு உனக்கு வேற இடமே தெரியல்லையா, இதுதான் கிடைச்சதா? இங்க பாரு, இங்க நெட்வர்க் இருக்காது. யாரையும் கான்டேக்டே பண்ண கூட முடியாது. இவ்வளவு பெருசா வளரந்திருக்கியே, குடிச்சிட்டு இப்படிதான் பண்ணுவியா? உன்னை போய்…” படபடவென பொரிய ஆரம்பித்துவிட்டாள்.

இப்போது அதிர்ந்து விழிப்பது ரிஷியின் முறையானது. இதுவரை யாரும் அவன் முன் இவ்வாறு பேசியது இல்லை.

“ஹவ் டேர் இஷ் ஷீ?” பற்களைக் கடித்துக்கொண்டவன், சட்டையைக் கையை மடித்து விட்டவாறு அவளெதிரே வந்து, “மரியாதையா பேசு! இல்லைன்னா…” என்று உறும, அவனுக்கு சற்றும் சளைக்காதது போல் முறைத்து நின்றவள், “அய்யடா! நான்தான் உன்னை காப்பாத்தியிருக்கேன். நீதான் எனக்கு மரியாதை கொடுக்கணும்.” என்றாள் முறுக்கிக்கொண்டு.

அவளுடைய மூச்சுக்காற்றோடு தன் மூச்சுக்காற்றை கலக்கும் தூரத்தோடு நின்றுக்கொண்டு, “இதுக்கு நான் விழுந்தே இருக்கலாம்.” என்ற ரிஷி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி கோபமாக திரும்பி நின்றுக்கொள்ள, கோபமாக காலை தரையில் உதைத்துக்கொண்டவள், தானும் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி முறுக்கிக்கொண்டவாறு திரும்பி நின்றுக்கொண்டாள்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!