தொலைந்தேன் 15💜

ei1T8R248236-8756f450

அடுத்த ஒருவாரத்தில் மனோகரின் வீட்டின் முன் வைவா நிறுவனத்தின் கார் நிற்க, தன் உடைப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறிய மேக்னாவின் விழிகளில் உறவுகளை பிரியும் வலியை விட, தான் நினைத்ததை அடைந்துவிட்டோமென்ற சந்தோஷம் அதிகமாகத் தெரிந்தது.

அமுதாவோ அழுதவாறு மேக்னாவை அணைத்து புலம்ப ஆரம்பிக்க, மனோகரோ சிறு சிரிப்போடு அவளின் தலையை வருடிவிட்டார்.

எப்படியோ அமுதாவை கொஞ்சி கெஞ்சி சமாளித்து திரும்பியவளின் விழிகளில் சிக்கினான் ரிஷி. அதுவும் முகம் முழுக்கச் சிரிப்போடு.

அவனைப் பார்த்ததும் அவனிடம் ஒடிச் சென்றவள், “ரிஷ், நீ என்னை மிஸ் பண்ண மாட்டியா, நான் போறது உனக்கு கவலையா இல்லையா என்ன?” என்று குறைபட்டவாறுக் கேட்க, குறும்புச் சிரிப்பு சிரித்தவன், “அப்பாடா!” என்றான் கேலியாக.

அதில் உதட்டைச் சுழித்து அவனை அவள் முறைக்க, மேக்னாவின் இரு கன்னங்களையும் தாங்கிக்கொண்டவன், அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, “நீ எனக்குள்ள இருக்க மேகாம்மா. என்ட், எத்தனை வருஷ ஆசை உன்னோடது. போகும் போது அமுகாச்சியா உன்னை அனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை. சந்தோஷமா வழியனுப்புறேன். சீக்கிரம் உன் ரிஷ்கிட்ட திரும்பி வா!” என்றான் காதலாக.

அவனின் காதலில் மேக்னாவிற்கே உள்ளம் உருகியது. தலையை விழிகளிலும் இதழிலும் சிரிப்போடு ஆட்டியவள், எட்டி அவனின் கன்னத்தில் முத்தமிட, அதிர்ந்த ரிஷி விழிகளால் அங்கு நின்றிருந்த பெரியவர்களைக் காட்டினான். ஆனால், அவளோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

“நாம வாய்விட்டு சொல்லலன்னாலும் அவங்களுக்கு தெரியும் ரிஷ். கூடிய சீக்கிரம் நீ உன் ஆல்பம் சாங்க்ஸ்ஸ ரிலீஸ் பண்ணி பெரிய ஆளானதும் நாம சொல்லிக்கலாம். அப்றம் கல்யாணம்….” என்று ஒற்றை கண்ணைச் சிமிட்டி சொல்லி காரில் ஏறிக்கொள்ள, ஏனோ அந்த ஆண்மகனுக்கே முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.

போகும் அவளையே கண்கொட்டாமல் அவன் பார்த்திருக்க, இருவரின் நெருக்கத்தைப் பார்த்து மனோகர் உள்ளுக்குள் மனதார சந்தோஷப்பட்டார் என்றால், அமுதாவோ கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாமல் உள்ளுக்குள் பொறுமித் தள்ளினார்.

கடந்தகாலத்தில் மேக்னாவுடனான நினைவுகளை நினைத்துப் பார்த்த ரிஷிக்கு நினைவுகள் உண்டான தாக்கத்திலிருந்து விடுபடவும் முடியவில்லை.

மனம் ரணமாக வலிக்க, நினைவுகளில் மிதந்திருந்தவன் எப்போது உறங்கினானென்று பால்கெனி கண்ணாடி ஜன்னல் வழியே அவனைப் பார்த்திருந்த சந்திரன் மட்டுமே அறிவான்.

அடுத்தநாள் காலை,  அறைக்குள்ளிருந்த தொலைப்பேசி அலறும் சத்தத்திலேயே ரிஷிக்கு விழிப்பு தட்டியது. விழிகளைக் கசக்கியவாறு எழுந்தமர்ந்தவன், சுற்றிமுற்றிப் பார்க்க, அவன் தூங்கியிருந்தது என்னவோ கட்டிலுக்கு கீழே, அதுவும் நேற்று அணிந்திருந்த உடையைக் கூட மாற்றாது.

“ச்சே!” என்று சலித்துக்கொண்டவாறு, எழுந்து நின்றவனுக்கு தொலைப்பேசி ஒலி மேலும் எரிச்சலை மூட்ட, வேகமாகச் சென்று அதையேற்று, “ஹெலோ…” என்று சற்று கடின குரலிலேயே ரிஷி சொல்ல, மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, முகபாவனை மாறி விழிகள் சற்று விரிந்து இடுங்கின.

சிறிதுநேரம் மௌனமாக நின்றிருந்தவன், “வெயிட் பண்ண சொல்லுங்க, ஐ வில் பீ தெயார் இன் டென் மினிட்ஸ்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருத்தான். அவனுக்குள் பல யோசனை.

அதேநேரம், ‘அய்யோ அய்யோ அய்யோ! சீக்கிரம் போகணுமே! இல்லைன்னா, அந்த மென்டல் பய நம்மள திட்டி தீர்த்துடுவான்.’ என்று புலம்பிக்கொண்டே வேகவேகமாகத் தயாராகி வீட்டிலிருந்து வெளியேறவென தேவையான பொருட்களை அள்ளிக்கொண்டு சனா கதவைத் திறக்க, மறுகணம் எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

எதிரே ராஜலிங்கம் நின்றிருக்க, சுதாகரித்து கதவை சாத்தப் போனவளை தடுத்தது, “சாணக்கியா!” என்ற அவரின் கர்ஜிக்கும் குரல்.

அப்படியே நின்றவள், அவரைப் பார்ககாது தரையை வெறிக்க, “இப்படி ஓடி ஒழிஞ்சா நான் உன் அப்பன் இல்லைன்னு ஆகிடுமா? நீ எந்த மூலைமுடுக்குக்கு போனாலும் நீ என் மவதான்.” என்று அழுத்தமாக அவர் சொல்ல, சனாவோ எதுவும் பேசவில்லை.

அமைதியாகவே அவள் நின்றிருக்க, வாசலுக்கு நேரே சுவற்றிலிருந்த தன் முதல் மனைவியின் படத்தைப் பார்த்தவர், ஆழ்ந்த மூச்செடுத்து “கண்டிப்பா உன் அம்மா இப்போ இருந்தா உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்படுவா. உன் போக்கே இப்போ சரியில்லை. ஆரம்பத்துல அந்த கேமராதான் வாழ்க்கைன்னு இருந்த. இப்போ உன் காரியத்தை பார்க்கும் போது சுத்தியிருக்குறவங்க பேசுறதை கேக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு.” என்று கடுகடுக்க, சட்டென்று அவளின் விழிகள் கலங்கின.

என்னதான் அவள் அவரை வெறுத்தாலும் இருவருக்குமான தந்தை மகள் உறவு இல்லையென்று ஆகிவிடுமா? தன்னை பெற்றவருக்கே தன்மேல் நம்பிக்கையில்லையென்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சிவந்த விழிகளோடு அவரை ஏறிட்டவள், “மொத பொண்டாட்டி உயிரோட இருக்கும் போதே இன்னொருத்தி மேல ஆசைப்பட்ட நீங்கெல்லாம் எனக்கு அறி வுரை சொல்ற அளவுக்கு காலம் மாறிட்டுல்ல!” என்று சொல்லிமுடிக்கவில்லை, “சனா…” என்ற கத்தலோடு அடிக்கக் கையை ஓங்கியவர், பின் அவளின் குற்றம் சாட்டும் பார்வையில் எரிச்சலாக பின்வாங்கிக்கொள்ள, ஏளனமாகச் சிரித்தாள் அவள்.

“அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி நீங்க என்னை உங்க மகளாவே நினைக்கலப்பா.” தன்னை மீறி அப்பாவென்று அழைத்து அடக்க முடியாத அழுகையில் கதவை அவள் சாத்தியிருக்க, வருடங்கள் கழித்து கேட்கு ம் அவளின் அப்பா என்ற அழைப்பில் கலங்கிய விழிகளுடன் உறைந்துப்பொய் நின்றுவிட்டார் அவர்.

வெளியில் நின்றிருந்தவரிதும் உள்ளே கதவில் விழிநீர் ஓட சாய்ந்திருந்தவளினதும் நினைவுகள் பல வருடங்கள் முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்தது.

அப்போது சனாவுக்கு பதினாறு வயது.  பதினெட்டு வயதுக்கான வளர்த்தி உயரத்துடன் துறுதுறுவென்று விழிகளை அங்குமிங்கும் அசைத்து பேசும் சாணக்கியாவை ரசிக்கும் ஆண்மகன்கள் ஒரு கூட்டம் அவளின் வீட்டைச் சுற்றி எப்போதும் இருப்பர்.

நண்பிகளோடு இருக்கும் போது சிலபேரை தெரியாத்தனமாக ரசிப்பவள், வீட்டிற்கு வந்தால் அப்பாவுக்கு பயந்தே அடக்க ஒடுக்கமான பெண்ணாக மாறிவிடுவாள். சிறுவயதிலிருந்து வாங்கிய திட்டுக்களும் அடிகளும் அப்படி.

அதுவும் வயதிற்கு வந்ததன் பின் சொல்லவே வேண்டாம். எல்லாமே முன்னிருந்ததை விட மேலதிகமாகவே கிடைக்க, தன்னைத்தானே ஒரு வட்டத்திற்குள் சுருக்கி ஒடுங்கிப் போயிருந்தாள் அவள்.

இப்படியே நாட்கள் ஓட ஒருநாள், “சனா…” என்று கத்திக்கொண்டே அவளை விட ஒருவருடம் பெரியவளான லாவண்யா ஓடி வர, அப்போதுதான் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தவள், சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

அங்கு வந்துக்கொண்டிருந்தவளைப் பார்த்ததும் சனாவுக்கோ ‘அய்யோ இவளா?’ என்றுதான் இருந்தது.

ஏற்கனவே இந்தப் பெண்ணால் பல காதல் பிரச்சினைகளில் ஆசிரியரிடம் மாட்டியிருக்கிறாள். இதற்குமேல் ஏதாவது ஒரு பழி சனாவின் மேல் விழுந்தாலும் அவ்வளவுதான், ராஜலிங்கத்திடம் விடயம் போய்விடும்.

அதற்குப் பயந்தே அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் சனா செல்லப் போக, ஆனால் விடுவேனா என்று ஓடி வந்து சனாவை வழி மறைத்து நின்றவள், “ஏன்டீ என்னை கண்டும் காணாத மாதிரி போற, இதுவரைக்கும் நடந்ததை மறந்துடு சனா. உனக்கு மட்டுமா அடி விழுந்துச்சு, எனக்கும் சேர்த்துதான் அன்னைக்கு அந்த மக்கு சாரு அந்த அடி அடிச்சாப்ல.” என்று பாவம் போல் பேச, சனாவோ எதுவும் பேசவில்லை அமைதியாக நின்றிருந்தாள்.

“ஏன்டீ அமைதியா இருக்க? இன்னும் என்மேல கோபமா என்ன, நான் வேணா போகும் போது உனக்கு புடிச்ச ஸ்விங்கம் வாங்கித் தரட்டா?” என்று சனாவுக்கு பிடித்ததைச் சொல்லி ஆசைக்காட்டி அவள் பேச, “நிசமாவா அக்கா?” என்று விழிகளை விரித்த நம் நாயகியோ சிரிப்போடு தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைத்தாள்.

லாவண்யாவும் சனாவை கடைக்கு அழைத்துச் சென்று அவள் கேட்டதை வாங்கிக்கொடுக்க, “இது சாப்பிட்டா அப்பாக்கு பிடிக்காது, அப்பாக்கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க!” என்றுக்கொண்டே அவளும் அதை சாப்பிட, “நான் சொல்ல போறதில்லை. நீ கடைசியா  எனக்கு இன்னொரு உதவி மட்டும் பண்ணணும்.” என்றாள் அந்தப்பெண் மெதுவாக.

அதிர்ந்து நிமிர்ந்தவளுக்கு பக்கென்று இருந்தது. “எனக்கு இதெல்லாம் வேணாம் அக்கா, நான் போறேன்.” என்றுவிட்டு அவள் வாங்கி தந்ததை அவளிடமே கொடுக்கப் போக, “அய்யோ சனா, ஏன் இப்படி பயப்படுற? இங்க பாரு! எதுவும் ஆகாது. உனக்கே தெரியும் நான் பார்த்திய எம்புட்டு லவ் பண்றேன்னு. இந்த வருஷத்தோட என் படிப்பு முடியுது. முடிஞ்சதுமே கல்யாணம்னு வீட்டுல பேசிக்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என அழுவது போல் தன் நடிப்பை ஆரம்பித்துவிட்டாள் அவள்.

சனாவுக்கோ அவளின் அழுகையை பார்க்க முடியவில்லை. ஒரு மாதிரி ஆகிவிட, “எல்லா சரியாகும் அக்கா.” என்றாள் ஆறுதலாக.

அதில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட லாவண்யா, “இதுதான் கடைசி. இதுக்கப்றம் உன்கிட்ட உதவின்னு வரவே மாட்டேன். ப்ளீஸ்டீ, இந்த லெட்டரையும் சாக்லெட்டையும் பார்த்திக்கிட்ட கொடுத்துடு. ஸ்கூல் கேன்டீன் பின்னாடிதான் இருக்குறதா சொன்னாரு.” என்று சொல்லி ஆர்வமாக அவளின் முகத்தை நோக்க, சிறிதுநேரம் என்ன செய்வதென்று தெரியாது யோசித்தவள் பின் நடக்கப் போவது தெரியாது அதை வாங்கிக்கொண்டு மீண்டும் பள்ளிக் கூடத்திற்கேச் சென்றாள்.

சில நிமிடங்களில் அங்கு போய் சேர்ந்தவள், ‘எங்க காணோம்?’ என்று விழிகளைச் சுழலவிட்டுத் தேடிக்கொண்டே காத்திருக்க, லாவண்யா சொன்னதுபோல் சுவற்றுக்கு பின்னிருந்து வந்தான் லாவண்யாவின் காதலன் பார்த்தி.

அவனைப் பார்த்ததும்தான் அவளுக்கு ‘அப்பாடா!’ என்றிருந்தது. “அண்ணா…” என்று வேகமாக ஓடிச் சென்றவள், லாவண்யா கொடுத்ததை அவனிடம் கொடுத்துவிட்டு, “அப்போ நான் வரேன்.” என்றுக்கொண்டே திரும்ப, எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்தவருக்கு உலகமே தலை கீழாக சுழன்றுவிட்டது.

எதிரே அவளின் வகுப்பாசிரியர். ஏற்கனவே ஜாதி என்ற ஒரு விடயத்தை வைத்து அவளின் மேல் தனிப்பட்ட கோபம் கொண்டவர் அவர். எப்படியும் இவளின் விளக்கத்தை கேட்கப் போறதில்லை.

அவளோ விழியிலிருந்து விழத் துடிக்கும் கண்ணீரை விழாது இழுத்துப் பிடித்து, ‘சொல்லுங்கண்ணா’ என்ற ரீதியில் பார்த்தியை பார்க்க, அவனுக்கோ அவனின் காதலியை காப்பாற்ற வேண்டிய நிலை.

எச்சிலை விழுங்கிக்கொண்டவன், “எங்களை மன்னிச்சிருங்க சார், ஏதோ ஆசையில…” என்றுவிட்டு தலையை குனிந்துக்கொள்ள, சனாவோ, “அண்ணா…” என்ற அலறலோடு உண்டான திகைப்பில் விழிகளை விரித்துக்கொண்டாள்.

மறுகணம் சனாவின் காதைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அந்த ஆசிரியர் பேராசிரியரின் அறையில் வைத்து சனாவின் அழுதலையும் கெஞ்சலையும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாது ராஜலிங்கத்திற்கு அழைத்து விடயத்தைச் சொல்லியிருந்தார்.

பள்ளிக் கூடத்திற்கு வந்த ராஜலிங்கத்தின் முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது. சனாவுக்கோ திக்திக் நிமிடங்கள்தான்.

அங்கிருந்து எதுவும் பேசாது அவர் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, உள்ளே வந்த தன் கணவனையும் மகளையும் பார்த்த விசாலத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

“சனா கண்ணு…” என்றுக்கொண்டே அவர் சனாவின் அருகில் சென்று முடிக்கவில்லை, அடுத்தகணம் தன் இடுப்பிலிருந்த பெல்ட்டை உருவிய ராஜலிங்கம் தன் மகளை அடி விலாசிவிட்டார்.

முதலில் அதிர்ந்து பின் ஓடிப்போய் தன் மகளை காக்க குறுக்கப் புகுந்த விசாலத்திற்கும் பல அடிகள் விழ, “அப்பா, நான் இல்லைப்பா, நம்புங்கப்பா. என்னை நம்புங்கப்பா ஆஆ…” என்று கதறிய சனாவின் கத்தல்கள் யாவும் காற்றில் கரைந்த கற்பூரம்தான்.

“ச்சீ வாய மூடுடீ! இப்போவே ஆம்பள சுகம் கேக்குதா உனக்கு? என் மானத்தையே வாங்கிட்டியே… கேடுகெட்ட நாயே **** செத்துத்தொலைடீ நீ!” என்று வாயிற்கு வந்தபடிப் பேசி கெட்ட வார்த்தையில் திட்டி அவர் அடிக்க, அவர் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் ஆணி அடித்தாற் போல் பதிந்து போகின.

அப்பாவென்று அவரோடு இருந்த கொஞ்சநஞ்ச நெருக்கமும் அத்தோடு முடிந்துப் போனது.

நடந்ததை நினைத்துப் பார்த்து சனா விம்மி விம்மி அழ, வெளியில் நின்றிருந்தவருக்கும் அவளின் விம்மல் சத்தம் கேட்கத்தான் செய்தது.

அதற்குமேல் அங்கு நிற்காது அங்கிருந்து ராஜலிங்கம் சென்றுவிட, இங்கு சொன்னபடி பத்தே நிமிடத்தில் முகம் கழுவி உடை மாற்றி அறையிலிருந்து வெளியே வந்த ரிஷி, மாடியிலிருந்தே ஹோல் சோஃபாவில் அமர்ந்திருந்தவளை எட்டிப் பார்த்தான்.

சுற்றிமுற்றி ஆர்வமாக விழிகளை சுழலவிட்டுத் தேடியவாறு கைகளைப் பிசைந்துக்கொண்டு பதட்டமாக அமர்ந்திருந்தாள் மேக்னா.

ஏனோ எப்போதும் போல் அவனால் கத்தி கூப்பாடு போட தோனவில்லை. நேற்று உண்டான பழைய நினைவுகளின் தாக்கத்தின் விளைவோ, என்னவோ? அமைதியாகவே ரிஷி அவளைப் பார்த்தவாறு மாடிப்படிகளிலிருந்து இறங்கி வர, “மேடம்…” என்றழைத்து அங்கிருந்த வேலையாள் மேக்னாவிடம் ரிஷியைக் காட்டினான்.

அத்திசைக்கு பட்டென்று திரும்பிப் பார்த்தவளுக்கு பதட்டத்துடன் கூடிய ஆச்சரியம். ‘இத்தனைநாள் தன்னைப் பார்த்தாலே வெறி பிடித்தவன் போல் நடந்துக்கொள்பவன், இன்று அமைதியாக எதிரில் நிற்கிறான்.’ அவளுக்குள் உண்டான சந்தேகம் இது.

ஆனாலும், பல வருடங்கள் கழித்து பார்க்கும் அவளை நோக்கிய ரிஷியின் நிதானத்திலும் பொறுமையிலும் அசந்துத்தான் போனாள் மேக்னா. அவனைப் பார்த்துக்கொண்டே எழுந்து நின்றவளின் விழிகளில் தெரியும் ஆர்வத்தை அந்த ஆண்மகனும் அறியாமலில்லை.

அவனும் அவளெதிரே வந்து நிற்க, “அது… ரிஷ்.. ஹாய்… நான் அது வந்து…” என்று தடுமாறியவளுக்கு அவனெதிரே இருக்கும் சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. ஒருவித தடுமாற்றம் உள்ளுக்குள். அளவுகடந்த சந்தோஷத்தில் அவளுக்கோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

அவளுடைய விழிகள் பயத்திலும் பதட்டத்திலும் நாணத்திலும் அலைப்பாய்வதை ரிஷியும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால், எதுவும் பேசவில்லை.

தடுமாற்றத்தை எப்படியோ கட்டுப்படுத்தி ஆழ்ந்த மூச்செடுத்தவள், “வெயிட் ரிஷ்!” என்றுவிட்டு கொண்டு வந்த பையிலிருந்த ஒரு சிறிய பரிசுப்பெட்டியையும் ஒரு கவரையும் அங்கிருந்த கண்ணாடி மேசையின் மீது வைத்து அவனை ஏறிட, ரிஷியின் விழிகளோ கேள்வியாக சுருங்கின.

அவனையே மொத்தக் காதலையும் சேர்த்து பார்த்துக்கொண்டு, “ரிஷ், ஆல்பம் சாங்கோட ஷூட்டிங் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சிருங்க. பிரபா சாரோட படத்துக்கான ஷூட்டிங் ஸ்டார்ட்டாக போகுது. லிரிக்ஸ் எழுதி மூனு சாங்க்ஸ்ஸ ரெடி பண்ணணும்.” என்று தொழில் சம்மந்தமாகப் பேசி, “இது நிஜமாவே நமக்கு புது அனுபவமா இருக்க போகுது ரிஷ். நம்ம வாழ்க்கையையே மாத்துற மாதிரி. மறுபடியும் மொதல்லயிருந்து ஆரம்பிக்கலாமா?” என்று குறும்பாகக் கேட்டாள் மேக்னா.

ரிஷியோ அந்த வார்த்தையில் விழிகள் இடுங்க அவளை நோக்க, வார்த்தைகள் ஏதுமின்றி விழிகளாலேயே பாவனைகள் காட்டும் தன்னவனின் விழிப்பாவனைகளை ரசித்தவாறு, “நம்ம வேலைய சொன்னேன் ரிஷ்.” என்றுவிட்டு விழிகளால் கண்ணாடி மேசையின் மீதிருந்தவைகளையும் காட்டிவிட்டு மேக்னா அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளையே கண்வெட்டாமல் பார்த்திருந்தவனின் பார்வை மறுகணம் அந்த பரிசுப்பொருளின் மீது பதிந்தது.

மெல்ல நகர்ந்து அதையெடுத்தவன் சந்தேகத்தோடு திறந்துப் பார்க்க, அதிலோ இரண்டு சாவிகள் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க, ரிஷிக்கு ஒருநிமிடம் எதுவும் புரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் அதுவாக இருக்குமோ? என்ற சந்தேகம் கலந்த கேள்வி.

இதயம் படபடவென அடிக்க, வேகமாக கவரை கையிலெடுத்தவன்,  அதனுள்ளே இருந்த பத்திரத்தைப் பார்க்க, அவன் நினைத்தது சரியே. அவன் எதிர்ப்பார்த்தது போல் அவனுடைய பெற்றோர் வாழ்ந்த அவனின் பழைய வீட்டின் பத்திரம்.

அவனுடைய கடந்தகாலத்தில் அவனுக்கிருந்த ஒரே பொக்கிஷம். மனோகரின் வீட்டில் ரிஷி பல வருடங்கள் தங்கியிருப்பதற்கு அமுதாவின் வாயை அடைத்த ஒரே சொத்து.

அன்று தன்னவளென்று மேக்னாவுக்காக அவன் விற்றிருக்க, இன்று அதே வீடு மேக்னாவின் மூலமாக மீண்டும் அவனிடமே வந்துவிட்டிருந்தது. அதிர்ந்து விரிந்திருந்த ரிஷியின் விழிகளிலிருந்து விழிநீர் தரையில் சொட்ட, அவன் நினைவுகளோ மேக்னா மூன்று மாதங்கள் கழித்து வந்த நினைவுகளுக்குச் சென்றது.

அன்று மேக்னா வைவா நிறுவனத்தின் மேலதிக பயிற்சிக்காக சென்று இன்றோடு மூன்று மாதங்கள் கடந்துவிட்டிருந்தன.

மூன்று மாதங்களுக்கு பிறகு,

கருப்புநிற ஜாகுவார் கார் வீட்டு வாலில் நிற்க, கூலிங் க்ளாசை கண்களிலிருந்து கழற்றியவாறு தன் ஹீல்ஸ்ஸை தரையில் வைத்து காரிலிருந்து இறங்கினாள் மேக்னா.

அவளின் முடியிலிருந்து பாதம் வரை உடையிலிருந்து எல்லாம் இந்த மூன்று மாதத்தில் மாறியிருக்க, உள்ளே வந்தவளை அழுகையோடு அணைத்துக்கொண்டார் அமுதா.

“மாம்…” என்று அவரை இறுக அணைத்துக்கொண்டவள், மனோகர் தலையை தடவியதும் அவரை ஒருபுறமாக அணைத்துக்கொண்டாள்.

“எப்படியோ உன் ட்ரெயினிங் மண்ணாங்கட்டியெல்லாம் முடிஞ்சது. இனி இங்கேயேதான் இருக்கணும். ஆமா… முன்னாடியெல்லாம் கொஞ்சமாச்சும் கொளுக்கு மொளுக்குன்னு கன்னம் எல்லாம் இருந்துச்சே. எங்டீ போச்சு அதெல்லாம்?” அவளை மேலிருந்து கீழ் அலசி ஆராய்ந்தவாறு அமுதா கேட்க, “இதுக்குமேல கொஞ்சம் வெயிட் போட்டாலும் என் வேலை போயிடும்.” என்றுக்கொண்டே சுற்றிமுற்றி விழிகளால் அலசினாள் அவள்.

அவளின் தேடலைக் கவனித்து, “ரிஷிய தேடுறியா மேகாம்மா?” என்று புரிந்தது போல் மனோகர் கேட்க, சிரிப்போடு தலையாட்டியவள், இந்த முறை “ரிஷி… ரிஷ்…” என்று கத்தவே துவங்கிவிட்டாள்.

இதில் அமுதாவிற்கோ அத்தனை எரிச்சல். “இப்போ என்ன இவ்வளவு அவசரம்? மொதல்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடு! அப்றம் அவன தேடிக்கலாம்.” எரிச்சலாக அவர் சொல்ல, அதேநேரம் “மேகா…” என்றொரு குரல்.

வேகமாக அத்திசைக்குத் திரும்பிவள், அங்கு நின்றிருந்தவனை ஓடிச் சென்று தாவி அணைத்திருக்க, பிரிவின் வலியில் தன்னவளை காற்று கூட புக முடியாதவாறு இறுக அணைத்திருந்தான் ரிஷி.