தொலைந்தேன் 16💜

ei16PIH50410-16c696ed

தொலைந்தேன் 16💜

அன்றிரவு எல்லோரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, அமுதாவோ விதவிதமாக ஆசையாசையாக செய்து வைத்திருந்த மொத்த உணவுகளையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மேக்னாவின் தட்டிலிருந்த வேக வைத்த பச்சை காய்கறிகளை உதட்டைப் பிதுக்கிப் பார்த்தார்.

அவளோ முற்கரண்டியால் ஒவ்வொன்றாக சாப்பிட, “என்னம்மா இது, உனக்காக ஆசையா அத்தனையும் பண்ணேன். ஆனா, நீ என்னடான்னா…” என்று அமுதா சலித்துக்கொள்ள, அவரை சலிப்பாகப் பார்த்தவள், “மாம், ஹெல்த்தையும் பியூட்டியையும் மெயின்டெய்ன் பண்ணாதான் எனக்கு வேலை. வைவா கம்பனியில வேலை பார்க்குறதுக்கு இதையெல்லாம் செக்ரிஃபைஸ் பண்றதுல தப்பில்லை.” என்றாள் உணவை விழுங்கியவாறு.

ரிஷிக்கோ சிரிப்புதான் வந்தது. வாயைப் பொத்தி அவன் சிரிக்க, மேக்னாவோ கரண்டியை சுழற்றியவாறு அவனை புரியாதுப் பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்து, “இல்லைம்மா, முன்னாடியெல்லாம் நீ எப்படி சாப்பிடுவன்னு நினைச்சிப் பார்த்தேன். அதான் பொசுக்குன்னு சிரிப்பு வந்துட்டு.” என்று சிரித்தவாறு சொன்னவன், “ஆமா… வைவா கம்பனியில ரூல்ஸ் ரொம்ப அதிகமாமே, எப்படி சமாளிக்குற?” என்று கேட்டான் சந்தேகமாக.

அதில் இதழை வளைத்துச் சிரித்தவள், “ஒரு பாட்டுக்கு நான் எவ்வளவு சம்பாதிக்க போறேன்னு தெரியுமா?” என்று கேட்டு ஒரு பணத்தொகையைச் சொல்லி, “இத்தனை பணத்துக்கு அவங்க சொல்றபடி கேக்குறதுல ஒன்னும் தப்பில்லை.” என்றாள் அழுத்தமாக.

அமுதாவின் விழிகளோ அவள் சொன்ன கணக்கில் சாரசர் போல் விரிந்தன. ‘இத்தனை பணமா?’ என்று வாயைப் பிளந்தவர், “ஆமாடா ஆமா, நீ அவங்க சொல்றபடியே கேளு, குரு சொல்றபடிதானே கேக்கணும். அதானே முறை. அதுல ஒன்னும் தப்பில்லை.” என்றார் படபடவென்று.

அமுதாவை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவர் பேசியதை மனோகரும் ரிஷியும் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. ஆனால், மேக்னாவின் பணத்துக்கு மேலான புதிய ஆசையில்தான் இருவருக்கும் மனம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரிஷி அவளை இறுகிய முகமாக பார்த்திருக்க, “உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் மேகாம்மா, மனோவும்தான். அப்படிதானேங்க?” என்று அமுதா பேச, “ஹாஹாஹா…. ரியலி? அப்போ இனி என்னை நீங்க ரொம்ப மிஸ் பண்ண வேண்டியிருக்கும்.” என்றவள், “ரிஷ், என்னை மிஸ் பண்ணுவியா?” என்று கேட்டாள் சிரிப்போடு.

அவனோ புரியாது புருவத்தைச் சுருக்க, “இனி கம்பனியிலதான் அதிகமா இருக்க வேண்டியிருக்கும். கூடிய சீக்கிரம் எங்க முதல் சாங் ரிலீஸ் ஆக போகுது. அதை கான்சேர்ட்டா வைச்சு ரிலீஸ் பண்ண போறாங்க. என்ட், இப்போ எங்களுக்கு ப்ரெக்டிஸ் ரொம்ப அதிகமா இருக்கு. இந்த த்ரீ மன்த்ஸ்ல விடியுற வரைக்கும் ப்ராக்டிஸ்ல இருந்த நாட்களும் இருக்கு. வீக்கு டூ டேய்ஸ்தான் வீட்டுல. சம்டைம்ஸ் அது கூட கிடைக்குமான்னு தெரியல. ஹார்ட்வர்க் நெவர் ஃபெயில். அந்தமாதிரி கூடிய சீக்கிரம் முழு உலகமும் எங்க பேரதான் சொல்ல போகுது.” என்று மேக்னா புகழின் மேல் மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“உன்னையே வருத்திக்கிட்டு இது ரொம்ப அவசியமா?” என்று மனோகர் மகளின் மீதிருந்த அளவுகடந்த பாசத்தில் பேச, “எனக்கு அவசியம்தான், என்ட் உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க.” என்று வெடக்கென பேசியவள், தட்டிலேயே கையை கழுவிவிட்டு அங்கிருந்து நகர, ரிஷியோ மேக்னா நடந்துக் கொள்ளும் விதத்தில் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.

அடுத்தநாள் காலை,

மொட்டை மாடியில் வானத்தை வெறித்தவாறு மேக்னா நின்றிருக்க, அவளைத் தேடி அங்கு வந்த ரிஷி, தன்னவளைப் பார்த்ததுமே சிரிப்போடு மெல்ல அடிகளை வைத்து நெருங்கியவன், அவளிடையை இரு கரங்களால் வளைத்து தன்னுடன் நெருக்கி அவள் கழுத்துவளைவில் முகத்தைப் புதைக்க, அவளிடத்திலோ எந்தவித எதிர்வினையும் இல்லை.

அவனும் தன் காதலை அவளின் பின்னங்கழுத்தில் அழுந்த முத்தமிட்டு வெளிப்படுத்தி, “என்னாச்சு மேகா?” என்று மெல்லிய குரலில் கேட்க, அவனின் கைவளைவுக்குள்ளிருந்தவாறே அவனை நோக்கி திரும்பியவள், “எனக்கு ரொம்ப நெர்வர்ஸ்ஸா பயமா இருக்கு ரிஷ்.” என்றாள் பயந்த குரலில்.

முதலில் புருவத்தைச் சுருக்கிய ரிஷிக்கு அடுத்தகணமே அவளின் பயத்திற்கான காரணம் நன்றாகவே புரிந்தது. இதழுக்குள் சிரித்தவன், “இந்த த்ரீ மன்த்ஸ் உன்னோட அந்த சோ கோல்ட் கம்பனி பயமில்லாம பாட கத்து தரல்லையா?” என்று கேலிக் குரலில் கேட்க, அதில் உதட்டைச் சுழித்து முறைத்தவள், “அதெல்லாம் கத்து தரத்தான் செய்றாங்க. ஆனா, பயத்தை இல்லாம செய்றது நமக்குள்ளதான் இருக்கு. முதல்தடவை பல்லாயிரம் பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாட போறேன். சொதப்பிருவேனோன்னு…” என்று அப்படியே நிறுத்தியவளுக்கு விழிகள் கூட லேசாக கலங்கியிருந்தன.

அதை கண்டுகொண்டவனுக்கு தன்னவளின் கலங்கிய விழிகள் உள்ளுக்குள் அத்தனை வலியை உண்டாக்க, கரங்களில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்து தன்னோடு நெருக்கியவாறு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், “லுக் மேகா, இது உன்னோட பல வருஷ கனவு. நீ கண்டிப்பா இதை மிஸ் பண்ண மாட்ட. ரொம்ப பர்ஃபெக்டா இருக்க போகுது. நான் இருக்கேன் உன் கூட, ஐ லவ் யூ!” என்று காதலாகச் சொல்ல, “நீ கான்செர்ட்டுக்கு வருவதானே?” என்று விழிகளை விரித்து ஆர்வமாகக் கேட்டாள் அவள்.

“நான் இல்லாம எப்படி? கண்டிப்பா வருவேன். அதுக்கப்றம் நீ இன்னும் நிறைய சாங் பண்ணி பெரிய சிங்கர்ராகி கூடிய சீக்கிரமே நமக்கு ஜாம்ஜாம்னு கல்யாணமாகி அப்றம்…” என்று  ரிஷி கனவில் நினைத்து பேசிக்கொண்டேப் போக, “வெயிட் வெயிட்!” என்று நிறுத்தியவள், “என்ன பேசுற ரிஷ், கல்யாணமா? நமக்கென்ன அவ்வளவு வயசாகிட்டா என்ன? என்ட்… என்னோட கான்ட்ரேக்ட் படி நெக்ஸ்ட் எயிட் இயர்ஸ்ஸுக்கு நான் கல்யாணமே பண்ண முடியாது.” என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிப் போட, அதிர்ந்துவிட்டான் அவன்.

“வாட்?” ரிஷி திகைத்துப்போய் கேட்க, “ஆமா ரிஷ், வைவா கம்பனியோட கான்ட்ரேக்ட்ல இருக்கு. என்ட், நீயும் எத்தனைநாளைக்கு அம்பாதியிரம் சம்பளத்துக்கு அந்த மொக்க கம்பனியில வேலைக்கு போயிக்கிட்டு இருக்கப் போற? கூடிய சீக்கிரம் ஆல்பம் சாங்க ரிலீஸ் பண்ற வழிய பாரு! அப்போதான் நம்ம விஷயத்தை அம்மாக்கிட்ட கூட பேச முடியும்.” என்று மேக்னா பேச, அவள் பேசும் விதத்தில் கீழுதட்டைக் கடித்துக்கொண்டவன், “நானும் ட்ரை பண்ணதான் செய்றேன் மேகா.” என்றான் மெல்லிய குரலில்.

“எனக்கென்னவோ நீ ட்ரை பண்ற மாதிரி தோனல. கையில வெண்ணைய வச்சிக்கிட்டு வெளியில நெய் தேடி அலையுற கதையா இருக்கு ரிஷ் உன்னோடது.” என்று அவள் சொன்னதும் புரியாது விழித்தவன், கேள்வியாக அவளை நோக்க, அவனின் பார்வை அர்த்தத்தைப் புரிந்து, “வேணும்னா அந்த வீட்டை வித்துரு ரிஷ், உனக்கும் பணம் கிடைச்ச மாதிரி இருக்கும்ல?” என்று அவள் சொல்ல, “மேகா…” என்று கத்திவிட்டான் அவன்.

“மேகா நீ தெரிஞ்சுதான் பேசுறியா?  பல வருஷமா என் கூட இருக்க. அந்த வீடு எனக்கு எந்தளவு இம்போர்டன்ட்டுன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் நீ எப்படி இப்படி பேச…பேசலாம்? இது என்னோட மேகாதானா? நீ மாறிட்டம்மா.” என்ற ரிஷியின் குரல் தன்னவளில் உணர்ந்த மாற்றத்தில் தழுதழுக்க, அதை உணர்ந்தவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“ஓ கோட் ரிஷ்! என்ன இது? சரி சரி சோரி… அதான் சோரி சொல்றேன்ல…” என்றுக்கொண்டே அவனின் இதழில் அழுந்த முத்தமிட, விழிகளைச் சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டவன், “எப்போ கிளம்புற மேகா?” என்று கேட்க, “ஒரு வாரத்துல கான்சேர்ட். நான் நாளைக்கே கிளம்புறேன்.” என்றாள் சாதாரணமாக.

ஏனோ அவனின் விழிகளில் தெரியும் ஏக்கத்தையும் வலியையும் அவள் கொஞ்சமும் கவனிக்கவில்லை.

அடுத்தநாளே மேகா சென்றிருக்க, அடுத்த ஒரு வாரத்திலேயே நிகழ்ச்சியும் ஆரம்பமானது.

குடும்பத்தர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த ரிஷிக்கு அந்த மேடையை பார்க்கும் போது ஒருவித ஏக்கம். அவனும் ஆசைப்படுகின்ற ஒன்றல்லவா அது!

சுற்றிமுற்றி ஆசையாக அவன் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்திலிருந்த அமுதாவுக்கோ அத்தனை எரிச்சல்.

‘அப்பா அம்மா செத்ததும் போய் சேர வேண்டியதுதானே, எங்க உசுர வாங்கிகிட்டு. என் புருஷன் காசுலதான் இத்தனைநாள் இருந்தான்னு பார்த்தா இப்போ என் மக காசுலயும் டேரா போட பார்க்குறான். இவனெல்லாம் என் புள்ளைக்கு எப்படி பொருத்தமாவான்? கூடிய சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டணும்’ தனக்குள்ளேயே பேசி அவனை சுட்டெறிக்கும் பார்வை பார்த்தவர், மேடையில் பேச ஆரம்பித்ததுமே அத்திசைக்கு திரும்பினார்.

அங்கு சிலபல பேச்சுக்களுக்கு பிறகு பல பாடல் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடந்து மேக்னாவின் குழுக்கான அறிமுகம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தங்களின் முதல்பாடலை ஆடலுடன் பாடி மொத்தப் பேரையும் கவர்ந்துவிட்டனர் அவர்கள். அதிலும் குறிப்பாக, மேக்னாவின் குரல் மொத்தப் பேரையும் ரசிக்க வைத்தது.

ரிஷிக்கோ மேடையில் நடனம் போட்டு பாடும் தன்னவளைப் பார்க்க பார்க்க தெகிட்டவில்லை. இன்று ஏனோ அத்தனை அழகாக தெரிய ஆரம்பித்தாள் அவள். விழிகளை கூட இமைக்க மறந்து அவன் பார்த்திருக்க, கூடவே இன்னொரு ஜோடி விழிகளும் கண்ணிமைக்க மறந்து அவளைப் பார்த்திருந்தன.

அது சாட்சாத் வைவா நிறுவனத்தின் எம்.டீ நரேந்திரனின் மகன் சித்தார்த்.

இப்படியே கான்சேர்ட் முடிந்து இன்றோடு பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. ஆனால், மேக்னாதான் வீட்டுக்கு வருவதே அரிதாகிப் போனது. வாரத்துக்கு ஒருமுறை இருகிழமைகளுக்கு ஒருமுறையாகி இப்போது மாதத்திற்கு ஒருமுறையாகிவிட்டது.

அடுத்தடுத்தென பாடல்கள் வெளியாக, பயிற்சி வேலைப்பழு அதிகமாகி அவளாலும் வீட்டைப் பற்றி யோசிக்க முடியவில்லை. கூடவே, மக்களிடையே அவள் எதிர்ப்பார்த்திருந்த புகழும் கிட்டிருக்க, புகழுக்குமேல் புகழ் சம்பாதிக்க உழைக்க ஆரம்பித்தாள் அவள். அந்த ஊரில் பல போஸ்டர்களில் மேக்னாவின் குழுவின் படம்தான்.

ஏகப்பட்ட இடங்களில் இவர்களின் புகைப்படங்களும் பாடல்களும். ஆனால், பணத்தையும் புகழையும்  பார்த்தாளே தவிர தன்னவனுடனான பிரிவின் வலியை கொஞ்சமும் உணரவில்லை.

ஆனால், ரிஷிதான் மேக்னாவை ஒவ்வொரு நிமிடமும் நினைக்க ஆரம்பித்தான். அவனின் ஒவ்வொரு அணுக்களிலும் அவள்தான். ஒருநாளைக்கு பல தடவைகள் அவளுக்கு அழைத்துவிடுவான். எப்போதாவது அழைப்பை ஏற்பவள், இரண்டு நிமிடங்கள் கூட தொடர்ந்து பேசியிருக்க மாட்டாள்.

இதில் அவன் தற்போது வேலைப் பார்க்கும் கம்பனியில் வேறு நேரத்தைக் கூட்டி வேலையை அதிகமாக்கியிருக்க, அவனால் தன் கனவைப் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை.

ஆனால், தன் கனவை மறக்கவில்லை அவன். சம்பாதிக்கும் பணத்தை அந்த வீட்டில் இருப்பதற்கான வாடகையாக அமுதாவிடமே கொடுத்தால் அவனுக்கு ஏது பணம்?

அன்று மேக்னா சொன்னது போல் வீட்டை விற்றுவிடலாமா என்று முடிவுக்கு வந்தவன், ஒருதடவை மனோகரிடம் இது பற்றி பேச, அவருக்கோ தன் நண்பன் குடும்பம் வாழ்ந்த வீட்டை விற்பதற்கு கொஞ்சமும் மனம் வரவில்லை. அப்போதும் தான் பணம் தருவதாக அவர் கேட்க, அமுதாவைப் பற்றி நினைத்தே அதை மொத்தமாக மறுத்துவிட்டான் ரிஷி.

ஒரு தடவை பணம் எடுத்தால் பல தடவை அதையே அமுதாவிடமிருந்து திரும்பத் திரும்ப கேட்க நேரிடுமென்று அறிந்தே வைத்திருந்தான். அதனாலேயே அவன் மறுத்திருக்க, மனோகரும் வீட்டை நல்ல விலைக்கு விற்க ஆட்களை பார்க்க ஆரம்பித்தார்.

இப்படியே நாட்கள் ஓட, அன்றும் பல நாட்கள் பேசாத ஏக்கத்தில் எப்போதும் போல் ரிஷியே அவளுக்கு அழைத்திருக்க, அதிர்ஷ்டவசமாக அவளின் அலைப்பேசி ஏற்கப்பட்டது. ஆனால், மறுமுனையில் பேசப்பட்டதும் ரிஷியின் புருவங்கள் சுருங்கி விழிகள் இடுங்கின.

“அய்யோ சித்து என்னை விடுங்க, ஹாஹாஹா… போதும் போதும். ஓ கோட்! இந்த விளையாட்டே வேணாம். நீங்கதான் வின் போதுமா? என்னை விடுங்க சித்து!” சிரித்து சிரித்து மேக்னா அங்கிருக்கும் நபரிடம் பேசிவிட்டு, “ஹேய் ரிஷ், என்ன இப்போ கால் பண்ணியிருக்க? ரொம்ப ப்ராக்டிஸ் அதான் உன்கூட பேச முடியல. எனிவேய் ஹவ் ஆர் யூ?” என்று பேசிக்கொண்டே போக, ரிஷியின் முகமோ இங்கு இறுகிப் போயிருந்தது.

“நீ ப்ராக்டிஸ் பண்ற மாதிரி எனக்கு தெரியல்லையே மேக்னா, எவனோ ஒருத்தன் கூட விளையாட நேரமிருக்கு. என் கூட பேச முடியல்லையா?” என்று ரிஷி குற்றம் சாட்டும் குரலில் கேட்க, அவளுக்கோ அவன் குரலிலிருந்த கோபம் சுத்தமாகத் தெரியவில்லை. “ரிஷ், நரேந்திரன் சாரோட சன்தான் சித்தார்த். என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட். என்ட், ஹீ இஸ் சோ ஃபன்னி.” என்று அவள் பேசிக்கொண்டே போக, ரிஷிக்கு உள்ளுக்குள் அத்தனை கடுப்பு.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறுமி உணர்வை வெளிக்காட்டாது மறைத்தவன், “நான் வீட்டை விக்கலாம்னு இருக்கேன் மேகா.” என்று இறுகிய குரலில் சொல்ல, “ரியலி?” என்று ஆச்சரியமாகக் கேட்டவள், “வாவ் ரிஷ்! சூப்பர். இப்போவாச்சும் உனக்கு அந்த வீட்டை விக்கணும்னு தோனிச்சே, இதுக்கப்றம் நோ ப்ரோப்ளம். சீக்கிரமே நீ உன் சாங்க ரிலீஸ் பண்ணிருவ, அப்றம் நீயும் பெரியாளுதான்! என்ட், நான் கூட ஒரு வீடு பார்த்திருக்கேன். அப்படியே பேளஸ் மாதிரி. என்னோட ட்ரீம் ஹவுஸ் ரிஷி. சின்ன சிக்கலிருக்கு. பட், சீக்கிரம் வாங்கிருவேன். என்ட்…” என்று சந்தோஷமாகப் பேசிக்கொண்டேச் சென்றாள்.

ஆனால், ஏனோ அவனின் வலியை ஒரு காதலியாக உணராமல்தான் போனாள் அவள்.

சில நாட்கள் நகர்ந்திருந்த நிலையில், அப்போதுதான் ஒரு பாடல் வெளியாகி யூடியூப்பில் வைரலாகிய நிலையில் தன் புது காரில் வந்திறங்கியவளைப் பார்க்கவே அவளின் வாசற்கதவுக்கு வெளியில் பல இளைஞர்ககள் குவிந்திருந்திருந்தனர். ஆரம்பத்தில் மறுத்த அமுதாவுக்கே இப்போது மகளால் கிடைக்கும் புகழையும் ஆடம்பரத்தையும் பார்த்து அத்தனை பெருமை.

கார் கண்ணாடி வழியாக கைக்காட்டியவாறு உள்ளே நுழைந்தவளுக்கு வெளியில் போலியான புன்னகை மாத்திரமே. அப்போதுதான் வீடு விற்பது தொடர்பாக வெளியில் மனோகருடன் செல்லவிருந்த ரிஷி, வீட்டுக்குள் நுழைந்த மேக்னாவை பார்த்ததும் காதலாக “மேகா…” என்றழைத்தவாறு செல்லப் போக, அவளோ யாரையும் கண்டுக்கொள்ளாது யோசனையோடு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்.

அவளின் செய்கையில் புரியாது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அமுதா மட்டும் “அவளுக்கு ரொம்ப டயர்டா இருக்கும். எப்போவாச்சும்தான் வீட்டுக்கு வர்றா. சும்மா போய் நொய்நொய்யுன்னு தொல்லை பண்ண வேணாம். அவங்க அவங்களோட இடத்தை புரிஞ்சு நடந்துக்கிட்டா ரொம்ப நல்லது.” என்று ரிஷிக்கு சொல்வது போல் எங்கோ பார்த்து கடுகடுத்துவிட்டு நகர்ந்திருந்தார்.

மனோகரோ அவனை பாவமாகப் பார்க்க, ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்பவனில்லை ரிஷி. கூடவே, வெளியில் செல்லும் அவசரத்தில் அப்போது தன்னவளை தொல்லை செய்யாது மனோகரோடு அவரின் நண்பரொருவருக்கு வீட்டை விற்க வெளியேறியிருந்தான்.

ஆனால், அங்கு நடந்ததோ வேறு.

அன்றிரவு,

கையெழுத்து போடும் வரை சென்று மனம் கேக்காமல் மறுத்துவிட்டு சந்தோஷத்தோடு விடயத்தை சொல்லவென வந்த ரிஷி, உடையை கூட மாற்றாது மேக்னாவைதான் தேடி அலைந்தான்.

அறைகளில் பார்த்துவிட்டு அவளைக் காணாது அங்கிருந்த வீட்டில் வேலை செய்யும் கமலாம்மாவிடம், “அம்மா, மேகா எங்க?” என்று அவன் விழிகளைச் சுழற்றி தேடியவாறுக் கேட்க, “ரிஷி கண்ணு, மேகாம்மா பெரியம்மா கூட மொட்டை மாடிக்கு போச்சு.” என்றுவிட்டு தன் வேலையில் கவனமாக, வேகவேகமாக அங்கு ஓடினான் அவன்.

‘நான் வீட்டை விக்க போறதில்லைன்னு மேகாக்கிட்ட சொல்லிரணும். பணத்துக்கு வேற வழியில ஏற்பாடு பண்ணிக்கலாம். இது அம்மா அப்பா வாழ்ந்த வீடு. கண்டிப்பா என்னால விக்க முடியாது’

உள்ளுக்குள் நினைத்தவாறு சென்றவன், மேக்னாவின் குரலில் சட்டென்று நின்று உள்ளே செல்லாமல் வாசலிலிருந்தே பார்க்க, அங்கு மேக்னா அமுதாவிடம் காலையிலிருந்த தன் யோசனைக்கான காரணத்தைப் பேசிக்கொண்டிருந்தாள்.

அதைக் கேட்டவனுக்கோ சட்டென மனதில் தோன்றியது ஒன்றுதான். மனம் கனத்தாலும் இதை விட்டால் வேறு வழியில்லை என்று மட்டும்தான் தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!