“என்ன பேசினாலும் அவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க. டூ வீக்ஸ்ல அந்த வீட்டை நான் வாங்கலன்னாலும் என்னை விட அதிக விலை கொடுத்து வாங்குறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஏதோ எனக்கு தெரிஞ்சவர்னால டூ வீக்ஸ் டைம் தந்திருக்காங்க. பட், இன்னும் எனக்கு பணம் தேவைப்படுது. என்ன செய்றதுன்னு புரியல.” மேக்னா அங்குமிங்கும் நடந்தவாறு எரிச்சல்பட்டு பேசிக்கொண்டிருக்க,
“போயும் போயும் இதுக்காகதான் காலையிலிருந்து ஒருமாதிரி இருந்தியா? ஓ கோட் மேகா! இப்போ அந்த வீடு இல்லைன்னா என்ன, இதை விட பெஸ்ட்டா வேறொரு வீடு பார்க்கலாம். என்ட், இப்போதான் நீ இந்த ஃபீல்ட்டுல ஆரம்பிச்சிருக்க. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். அம்மா நானே உனக்கு…” என்று பேசிக்கொண்டேச் சென்ற அமுதாவை உக்கிரமாகப் பார்த்து இடைவெட்டினாள் அவள்.
“ஷட் அப் மாம்! எனக்கு நான் ஆசைப்பட்டதுதான் வேணும். இது என்னோட ட்ரீம் ஹவுஸ் மாம், என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது.” என்ற தன் மகளின் பிடிவாதத்தைப் பற்றி அமுதா அறியாமலில்லை.
புருவங்களை சுருக்கி யோசித்தவருக்கு சட்டென்று என்ன தோன்றியதோ, இதழுக்குள் சிரித்து “உனக்கே தெரியும்ல, அப்பாவோட கம்பனி இப்போ ரொம்ப டவுன்னா போயிக்கிட்டு இருக்கு. உடனே இவ்வளவு பணம் கேட்டா அவருக்கு ரெடி பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். பட், அம்மா உன்னை அப்படியே விட்டுடுவேனா என்ன, எப்படியாச்சும் ஏற்பாடு பண்ண ட்ரை பண்றேன்.” என்றுவிட்டு, “இப்போ நீ போய் தூங்கு, காலையில பேசிக்கலாம்.” என்று தலையை தடவிவிட, மேக்னாவும் ஒரு அணைப்பைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
இருவரும் பேசிக்கொண்டிருந்ததை இத்தனை நேரம் கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கு ஒரு யோசனைதான் தோன்றியது. உள்ளுக்குள் அதைப் பற்றி குழம்பிப் போனவனாக வேகமாக மேக்னா வருவதைப் பார்த்து சுவற்றுக்கு பின்னால் ஒழிந்து அவள் கண்ணை விட்டு மறைந்ததும் யோசித்துக்கொண்டே தனதறைக்குச் செல்வதற்காகத் திரும்ப, “ரிஷி கண்ணா…” என்ற அமுதாவின் அழைப்பு.
சட்டென்று நின்றவன், ‘ஷீட்!’ என்று தன்னைத்தானே கடிந்தவாறு திரும்பிப் பார்க்க, அவனை கூர்ந்து கவனித்தவர், “மேகா பேசினதை கேட்டல்ல ரிஷி கண்ணா?” என்று எப்போதும் இல்லாத பாசக்குரலில் பேச, ஆமென தலையசைத்தவனுக்கு மனதிற்குள் ஏற்கனவே தோன்றிய அதே யோசனை.
அந்த சிந்தனையில் தரையை வெறித்தவாறு அவன் நிற்க, “உனக்கே தெரியும் மேகா அவ்வளவு ஈஸியா எது மேலேயும் ஆசைப்பட மாட்டா. அவ ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் இந்த துறைதான். இப்போ…” என்று நிறுத்தி மீண்டும், “சின்ன வயசுலயிருந்து அவ கேக்காமலே நாங்க எல்லாமே பண்ணியிருக்கோம். இப்போ ஆசைப்பட்டு ஒன்னு கேக்குறா. இந்தநேரம் பார்த்து உங்க மாமா கம்பனி வேற நஷ்டத்துல இருக்கு. வீட்டுல ஏகப்பட்ட பிரச்சினை.” என்று மேலும் மேலும் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே போக, அவனால் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை.
“ஆமா… ரிஷி கண்ணா நீ உன் அம்மா வீட்டை விக்கிறேன்னு கிளம்புனியே என்னாச்சு? வீட்டுக்கு எவ்வளவு பணம் கிடைச்சது? ஒருவேள, என்கிட்ட பணம் இருந்துச்சுன்னா நான் கொடுத்திருப்பேன். உன்னால ஏதாச்சும் ஏற்பாடு பண்ண முடியுமா கண்ணா?” என்று பாவம் போல் பேசி உள்ளுக்குள் அவர் சிரித்துக்கொள்ள, ரிஷியோ அவர் கேட்ட அடுத்தகணமே, “நான் இன்னும் வீட்டை விக்கல அத்தை, மேகாவுக்கு பிடிச்சதை விட நமக்கு வேறென்ன இருக்கு. நான் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். அவள எதைப் பத்தியும் யோசிக்க வேணாம்னு சொல்லுங்க.” என்றுவிட்டு மீண்டும் மனோகருக்கு அலைப்பேசியில் அழைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
இதில் அமுதாவுக்குதான் எதையோ சாதித்து விட்ட உணர்வு.
அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் ஏற்கனவே வீட்டை வாங்க தயாரானவரிடமே பேசி வீட்டை விற்று பணத்தை பெற்றவன், அன்றே இரவு அமுதாவின் கரங்களில் மேகாவுக்கு தேவையான தொகையை வைத்திருந்தான்.
அமுதாவுக்கோ அதைப் பார்த்ததுமே விழிகள் மின்னின. இருந்தும் பேராசை விடாது, “இவ்வளவுதான் அந்த வீட்டை வித்து பணம் கிடைச்சதா, அதிகமா இருக்கும்னுல்ல நெனைச்சேன்.” என்று அவர் நீட்டி முழக்கி குறைப்பட்டுக்கொள்ள, அவனுக்கோ ‘இவங்கெல்லாம் பெரிய மனுஷங்கதானா!’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பற்களைக் கடித்துக்கொண்டு, “கொஞ்சம் பணம் அகௌன்ட்ல இருக்கு. தேவைக்கு வச்சிருக்கேன். இதைக் கொண்டு போய் மேகாட்ட கொடுங்க.” என்று ரிஷி கடுகடுக்க, அதற்குமேல் பேச அவனின் கோபமான முகச்சிவப்பு விடவில்லை.
மேகாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டி அமுதா அவளை அழைக்க, மீண்டும் கம்பனிக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தவளோ, “கம் இன்!” என்றுவிட்டு மீண்டும் ஆடையை சரி செய்துக்கொண்டிருந்தாள்.
உள்ளே வந்த அமுதாவோ முகம் முழுக்க புன்னகையோடு அமைதியாகவே நின்றிருக்க, உள்ளே வந்ததும் அமைதியாக இருக்கும் தன் அம்மாவை திரும்பிப் பார்த்தவள், “வாட்?” என்றாள் புரியாமல்.
அடுத்தகணம், “உன்னோட ட்ரீம் ஹவுஸ் உனக்கு சொந்தமாக போகுது.” என்றுவிட்டு அமுதா பணத்தைக் காட்ட, அவ்வளவுதான் அளவு கடந்த சந்தோஷத்தில் பணம் வந்த வழியைக் கூட கேட்க தோன்றவில்லை அவளுக்கு. ஓடிச் சென்று, “யூ டிட் இட் மாம்!” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அமுதாவை கொஞ்சி அணைத்து ஒருவழிப்படுத்திவிட்டாள்.
இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்குதான் ஒருபக்கம் வீட்டை விற்றதில் மனம் கனத்துப் போயிருந்தாலும் இன்னொருபுறம் தன்னவளின் சிரிப்பில் ஒருவித மகிழ்ச்சி.
அடுத்து வந்த நாட்களில் மொத்தப் பணத்தையும் கொடுத்து வீட்டை வாங்கிய மேக்னா ரிஷியை மறந்துதான் போனாள். ஆரம்பத்தில் எது நடந்தாலும் முதலில் அவனிடம் ஓடி வருபவள், இப்போது ஏனோ தான் உண்டு தன் வேலை தன் நண்பர்கள் உண்டென இருந்துவிட, இந்த மாற்றம் புதிதாக இருந்தாலும் அதை பொருட்படுத்தவில்லை அவன்.
இப்படியே நாட்கள் ஓட அன்று,
வேலையிலிருந்து அப்போதுதான் தன் புது வீட்டிற்கு வந்திருந்தவள், தனதறை பால்கனி வழியே தெரியும் கடற்கரையை ரசித்தவாறு அப்படியே இருக்க, கதவு தட்டப்படும் சத்தம்.
“கம் இன்!” என வேலைக்காரப்பெண்ணென நினைத்து சொல்லிவிட்டு கடலலைகளை ரசித்தவாறு ஒரு பாடலை மேக்னா ஹம் செய்துக்கொண்டிருக்க, அவளின் இடையை வளைத்தது அந்த வலிய கரங்கள். முதலில் பயந்து திரும்பப் போனவள், பின்னரே அக்கரங்கள் அவளை மேலும் அணைப்பதை புரிந்து அது யாரென புரிந்துக்கொண்டாள்.
அறிந்த மறுகணமே “ரிஷ்…” என்று கத்தியவாறு கைவளைவுக்குள் இருந்துக்கொண்டே திரும்பியவள், “ஆர் யூ மேட்?” என்று கத்தி அவனை பிடித்து தள்ள, காலை தரையில் ஊன்றி சமன்படுத்தி நின்றவனுக்கு அதிர்ச்சி. இதுவரை இவ்வாறு பல தடவை அவளை அணைத்திருக்கிறான். ஆனால், இது போன்று இதுவரை நடந்துக்கொண்டது இல்லை.
ஆனால் இப்போது?
“என்னாச்சு உனக்கு?” ரிஷி அதிர்ந்துப்போய் கேட்க, “உனக்கு அறிவில்லையா? யாராச்சும் பார்த்தா என்னாகும்?” என்று எப்போதும் இல்லாத பயத்தில் அவள் கேட்க, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆரம்பத்தில் அவனே தள்ளிவிட்டாலும் வழியச் சென்று அவனை நெருங்குபவள், இப்போது நடந்துக் கொள்ளும் விதத்தில் குழம்பித்தான் போனான்.
கோபம் தலைக்கேற, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவன் முறைக்க, ஏனோ அந்த பார்வையில் அவளுக்கே முதுகுத் தண்டு சில்லிட்டது. சற்று அடங்கியவள், மெதுவான குரலில் “அது… அது வந்து… நான் ஏன் அப்படி பண்ணேன்னா, உனக்கே தெரியும். இப்போ நான் என்ன வேலை பார்த்துட்டு இருக்கேன்னு. சின்ன விஷயத்தை கூட இந்த மீடியாகாரங்க ஊதி பெருசாக்கிடுறாங்க. இப்போ எப்படியோ இங்க நான் இருக்குறதை கண்டுபிடிச்சிருக்காங்க. நீ வாரதையோ இல்லைன்னா நாம ஒன்னா இருக்குறதையோ பார்த்தாங்ஙன்னா அவ்வளவுதான். அதனாலதான் ரிஷ்…” என்று புரியும்படி சொன்னவாறு அவனை நெருங்கி அவனின் கரங்களை பற்றிக்கொள்ள, அவள் விளக்கமளித்ததில் கோபம் குறைந்து அமைதியானான் அவன்.
மேக்னாவே அவன் கரங்களை இறுகப் பற்றி அழைத்துச் சென்று அறையிலிருந்த சோஃபாவில் அமர வைக்க, அவள் கரத்தைப் பற்றி தன் பக்கத்தில் அமர வைத்தவன், அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்து அழுந்த முத்தமிட்டான். அதில் உண்டான கூச்சத்தில் நெளிந்தவள், “ஹ்ர்ம் ஹ்ர்ம் ரிஷி…” என்றுக்கொண்டே தள்ளி அமர்ந்து, “எனி இம்ப்ரூவ்மென்ட்?” என்று கேட்டாள்.
அவள் விலகியதில் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டாது, “கம்பனியில ஹெவி வர்க் மேகாம்மா, வேறெதை பத்தியும் யோசிக்க முடியல. என்ன பண்றதுன்னே தெரியலல் என்ட், இன்னும் டூ டேய்ஸ்ல மும்பை கிளம்புறேன்.” என்று ரிஷி சொல்ல, “ஃபோர் வாட்?” என்று கேட்டாள் புருவத்தைச் சுருக்கி.
“அது… இப்போ நான் வேலை பார்க்குற கம்பனியோட மெய்ன் ப்ரான்ச்தான் மும்பையில இருக்கு. கொஞ்சநாளைக்கு என்னை அங்க ஷிஃப்ட் பண்ணியிக்காங்க. அதைப் பத்தி சொல்லதான் வந்தேனே!” என்று அவன் சலித்துக்கொள்ள, “ஓஹோ…” என்றுக்கொண்டே யோசனைக்கு தாவியவளை மேலிருந்து கீழ் கவனித்தவன், “பணம் கூட கூட ட்ரெஸ்ஸோட சைஸ்ஸும் சின்னதாகிட்டே போகுதே மேகாம்மா.” என்றான் கோபம் அடங்கிய சிரிப்போடு.
முதலில் விழித்தவள் பின் சலித்தவாறு, “ஓ ரிஷ், இந்த வீட்டுல நான் தனியாதான் இருக்கேன்.” என்க, “நான் வெளியிடத்துல நீ போடுறதை பத்தி பேசிட்டு இருக்கேன் மேக்னா, சின்ன பசங்க போடுற ட்ரெஸ்ஸ கான்சேர்ட்ல போட்டுட்டு திரியுற. பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு.” என்று அவன் கடுகடுக்க, அவளுக்கோ சுள்ளென்று கோபம் எகிறியது.
“ஷட் அப் ரிஷ்! யூ நோ வெல், அது அவங்க முடிவு பண்றது. நான் ஒன்னும் பண்ண முடியாது. என்ட், இந்த மாதிரி என்கிட்ட பேசிட்டு வராத! இட்ஸ் இர்ரிடேட்டிங்.” என்று அவள் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, எல்லை மீறி வந்த கோபத்தை அடக்கி, “சோரி மேகாம்மா, நான் வர்றேன்.” என்று நகரப் போனான் அவன்.
சட்டென என்ன நினைத்தாளோ, “ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா ரிஷ், ஐ மீன் ஃபினான்ஷியல்லா?” என்று பட்டென்று கேட்டுவிட, அவனுக்கோ முகம் மேலும் கறுத்துவிட்டது.
ஏதோ அவமானப்பட்டது போல் உணர்வு அவனுக்குள். கீழுதட்டைக் கடித்து எச்சிலை விழுங்கி வெளிவரத் துடித்த கோபத்தை அடக்கியவன், “நோ நீட்!” என்றுவிட்டு வெளியேறினான். ஆனால், இதன்பிறகு நடக்கப்போகும் சம்பவங்களை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
இவ்வாறு ரிஷி மும்பை சென்று ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பான செய்தி.
‘வைவா நிறுவனத்தின் உரிமையாளர் நரேந்திரனின் மகன் சித்தார்த்திற்கும் பாடகி மேக்னாவுக்கும் இடையே காதல்’
இதை பாதி பேர் நம்ப, மீதி பேர் நம்பாது இருக்க, அமுதாவுக்கோ அச்செய்தியை பார்த்ததுமே உள்ளுக்குள் குதூகலம். அத்தனை பெரிய கம்பனிக்கும் சொத்துக்கும் ஒரே வாரிசு. தன் மகளுக்கு வேண்டாமென்ற தோன்றும்?
ஆனால், தன்னவளின் மேலுள்ள நம்பிக்கையில் ரிஷி அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்றால் மேக்னாவோ இந்தத் துறையில் இது சகஜமென உணர்ந்து இதை கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால், அவ்வளவு இலகுவாக இதை விட்டால் அது அமுதா அல்லவே!
அன்று மேக்னா வீட்டிலிருக்கும் சமயமாக பார்த்து அமுதா திடீரென வந்திருக்க, எப்போதும் தன்னிடம் சொல்லிவிட்டு வருபவர் இன்று அரக்கபறக்க வந்ததை சந்தேகமாகப் பார்த்தாள் அவள்.
“என்ன மாம் திடீர்னு…” என்று அவள் அமுதாவை கூர்ந்துப் பார்த்தவாறு கேட்க, “ஒன்னுஇல்லைடா, சும்மாதான். ஏதாச்சும் வேலையிருக்கா?” என்று கேட்டார் சோஃபாவில் அமர்ந்தவாறு.
“இன்னைக்கு ஃப்ரீதான். நாளைக்கு ரிஹேர்சல் இருக்கு. நெக்ஸ்ட் மன்த் பெங்ளூர்ல நடக்க போற அவார்ட் ஃபங்ஷன்ல எங்க டீம் பெர்ஃபோர்ம் பண்ண போறோம்.” என்று மேக்னா உற்சாகமாகச் சொல்ல, “வாவ் குட் நியூஸ் மேகாம்மா! எனிவேய், வாட் அபௌட் சித்தார்த்?” என்று நேடியாக சடாரென கேட்டுவிட்டார் அமுதா.
அதில் சிரித்தவள், “அந்த நியூஸ்ஸ மனசுல வச்சு கேக்குறீங்களா மாம், ஓ கோட்! நான்தான் சொன்னேனே… சும்மா அங்க இங்கன்னு ஒன்னா சுத்தினா லவ்வுன்னு ஆகிடுமா? என்ட், உங்களுக்கே தெரியும். நானும் ரிஷியும்…” என்று சொல்லி முடிக்கவில்லை, “புல்ஷீட்! கையில இரத்தினத்தை வச்சிக்கிட்டு சாதாரண கல்லை தேடி போயிக்கிட்டு இருக்க. யூ நோடிஸ் சம்திங், உங்க கம்பனியில உன் கூட பழகுற மாதிரிதான் சித்தார்த் எல்லார் கூடவும் பழகுறாரா?” என்று மனதில ஒன்றை நினைத்து கேட்டார் அவர்.
அவளோ புருவத்தைச் சுருக்கி யோசித்தவள், “அது மாம்… அது… சித்தார்த் எனக்கு ப்ரோபோஸ் பண்ணான். பட், எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. ஃப்ரென்ட்டாதான் நான் அவன் கூட பழகுறேன்.” என்று சொன்னவளோ திருதிருவென விழித்தவாறு நின்றிருக்க, இது போதுமே அமுதாவுக்கு.
“ஏன் உனக்கு அவர்மேல எந்த ஃபீலிங்ஸ்ஸும் இல்லையா மேகாம்மா, அப்படிப்பட்ட பையன ரிஜெக்ட் பண்ண ரீசன்னே இல்லையே!” என்ற அமுதா அவளை மெதுமெதுவாக சலவை செய்ய ஆரம்பிக்க, “மாம்…” என்று அதிர்ந்தவள், “நா..நான் ரிஷிய லவ் பண்றேன், இது உங்களுக்கு தெரியும்னுதான்…” என்று தடுமாற, “ச்சே! சரியான முட்டாள் மேகா நீ…” என்றார் அவர் கடுப்பாக.
அவளோ புரியாது அவரை நோக்க, அவளருகில் அமர்ந்து அவளின் கரத்தைப் பற்றிக்கொண்டவர், “இங்க பாரு மேகாம்மா, வாழ்க்கையில கல்யாணம் வரைக்கும்தான் இந்த காதல் எல்லாம். இப்போ நீ எந்த இன்டஸ்ட்ரீல இருக்கன்னு உனக்கு தெரியும். சாதாரண கம்பனியில நாப்பத்தையாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்குற ஒருத்தன காதலிக்கிறேன்னு சொல்றது உனக்கே சரியா தோனுதா? ஒருவேள ரிஷிய நீ கல்யாணம் பண்ணா மீடியாவும் இதைதான் பேசும். நீ ஆசைப்பட்டதை வாங்கி தர அவன் இரண்டு மாசம் உழைக்கணும் மேகாம்மா.” என்று நாக்கில் நரம்பே இல்லாமல் பேசிக்கொண்டே போனார்.
அவரின் வார்த்தைகளில், “மாம், அது.. ரிஷி கூடிய சீக்கிரம் அவனோட ஆல்பம் சாங்க்ஸ்ஸ ரிலீஸ் பண்ணி பெரியாளாகுவான். படத்துக்கு பாடுறதுக்கு கூட வாய்ப்பு கிடைக்கும். கண்டிப்பா. கொஞ்சம் பொறுமையா இருக்கணும். என்னோட கான்ட்ரேக்ட் முடியுறதுக்குள்ள நல்ல நிலைமைக்கு…” என்று மேகா ரிஷிக்கு சார்பாகப் பேச, அதில் கடுப்பானவர், “எல்லாருக்குமே எல்லா வாழ்க்கையும் கிடைச்சிறாது, அவனோட வீட்டை வித்த காசுல பாதி காசு இப்போ செலவாகிட்டு. ஓ கோட்! அவன் சம்பளம் வீட்டு செலவுக்கு கூட பத்தாது. என்ட், அவனோட நீ வாழணும்னா நிறைய விஷயம் அட்ஜஸ்ட் பண்ணணும். உனக்கே தெரியும், நரேந்திரன் சார் எவ்வளவு பெரிய ஆளு. மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு அந்த சித்தார்த். உன்னோட கனவு வாழ்க்கை மேகா, அது சித்தார்த் கையில இருக்கு.” என்றார் காரியத்தை சாதிக்கும் பொருட்டு.
மேக்னா எதுவும் பேசவில்லை. சிந்தனையில் உழன்றவாறு, “ஆனா, அம்மா இது எப்படி? நான்தான் ரிஷிய…” என்று தடுமாற, அந்த தடுமாற்றமே அவருக்கு காரியத்தை பாதி சாதித்து விட்டதாக தோன்றியது.
தோளை அலட்சியமாகக் குலுக்கியவர், “உன்னோட கனவு வாழ்க்கை மேகா, காதல் கீதல்னு அதை தொலைச்சிராத! அதை விட முட்டாள் யாருமேயில்லை.” என்றுவிட்டு நகர, தரையை வெறித்தவாறு யோசிக்கத் துவங்கினாள் அவள்.