தொலைந்தேன் 18💜

eiD7QOO90637-c138c24f

சென்னையில் நடக்கவிருக்கும் பெரிய விருது வழங்கும் விழாவுக்காக மேக்னாவின் குழு தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்க, திடீரென வாசலில் ஒரு சலசலப்பு.

சட்டென எல்லார் பார்வையும் அங்கு திரும்ப, வாசலில் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்தவர்கள், “ஹாய் சார்…” என்று ஒருசேர சொல்லி சிரித்துப் பேச, அவன் பார்வையோ ஆடுவதற்கென இலகுவாக அணிந்திருந்த ஆடை வியர்வையில் நனைந்து மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த மேக்னாவின் மீதுதான் பதிந்தது.

அங்கு சுற்றியிருந்தவர்களுக்கும் அவனின் பார்வை தெரியாமலில்லை. ஏற்கனவே மேக்னாவிடம் அவன் காதலை சொன்ன விடயத்தை அறிந்திருந்தவர்கள், இப்போதும் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி ஏதேதோ வேலைகளை சாக்காகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற, இப்போது அந்த பெரிய அறையில் மேக்னாவும் சித்தார்த்தும் மட்டுமே.

“நம்மள சேர்த்து வச்சு சோஷியல் மீடியாவுல வர்ற நியூஸ் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். ஐ அம் ரியலி சோரி மேகா, என்னாலதானோன்னு…” என்று சித்தார்த் இழுக்க, “ச்சே அப்படியெல்லாம் இல்லை. இதுல உன் தப்பு என்ன இருக்கு சித்து? நான் உன்னை எந்த விதத்துலேயும் தப்பா எடுத்துக்கல.” என்றுவிட்டு மீண்டும்  கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு அவள் பயிற்சி எடுக்க, அவளை மேலிருந்து கீழ் அளவிட்டான் அவன்.

இதுவரை பல பெண்களை கடந்திருக்கிறான். சில பெண்கள் தானாக அவனை நெருங்கி அவனுடன் உறவும் வைத்துள்ளனர். ஆனால், மேக்னாவின் மேல் அவனுக்கு உருவான காதல் எந்த பெண்ணிடமும் தோன்றாதது.

அவளையே பார்த்திருந்தவன் மெல்லிய குரலில், “மேகா…” என்று காதலாக அழைக்க, அவளோ, “ம்ம்…” என்றாள் பயிற்சி எடுத்துக்கொண்டே திரும்பிப் பார்க்காது.

அடுத்தகணமே அவள் பின்னால் வந்து அவள் கழுத்தில் கற்கள் பதிக்கப்பட்ட மெல்லிய செயினை அவன் போட்டுவிட, ஒருகணம் அதிர்ந்து நின்றவள், “சித்தார்த்…” என்றாள் வேகமாக அவனை நோக்கித் திரும்பி.

“பிடிச்சிருக்கா?” என்று அவன் சாதாரணமாக கேட்க, “என்ன இது, எனக்கு இதெல்லாம் வேணாம். ஓ கோட்!” என்றுக்கொண்டே அவள் கழற்றப் போக, வேகமாக அவள் கரத்தைப் பற்றிக்கொண்டவன், “இது உனக்காகவே ஸ்பெஷலா பண்ணது மேக்னா, ஆஸ் அ ஃப்ரென்ட்டா நீ இதை ஏத்துக்கிட்டா போதும்.” என்றான் பாவமாக.

அதில் சங்கடமாக உணர்ந்தவள், “இருந்தாலும் இவ்வளவு கோஸ்லியா…” என்று தயக்கமாக இழுக்க, “தட்ஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ். பிடிச்சிருக்கா, அதை மட்டும் சொல்லு.” என்றுவிட்டு அவள் முகத்தை அவன் ஆர்வமாகப் பார்க்க, “தேங்க்யூ சித்து.” என்றவளுக்கு அத்தனை சந்தோஷம்.

அந்த செயினை தொட்டுப் பார்த்த மேக்னாவுக்கு நன்றாகத் தெரியும், அதன் விலை மதிப்பு லட்சங்களை தொட்டிருக்குமென. தன்னை மீறி ரிஷியை சித்தார்த்தோடு அவள் மனம் ஒப்பிட்டுப் பார்த்து உதட்டைப் பிதுக்கியது.

சரியாக, அவளுக்கொரு அழைப்பு. திரையைப் பார்த்தவளுக்கு அதிலிருந்த ரிஷியின் எண்ணைப் பார்த்ததும் மனம் சுணங்க, வேண்டுமென்று திரையை மூடிவிட்டு சித்தார்த்தோடு பேச ஆரம்பித்தாள்.

அதேநேரம், மேக்னாவுக்கு அழைத்தவாறு தன் கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்தான் ரிஷி. இப்போதுதான் தன் சம்பளத்தில் சிறுக சிறுகச் சேர்த்த பணத்தில் அவளுக்கென தங்க மோதிரம் வாங்கியிருந்தான். அதை வாங்கிய கணத்திலிருந்தே அவளின் குரலை கேட்கும் ஆர்வம் அவனுக்குள்.

காதலோடு அவளுக்கு அழைத்துக்கொண்டிருந்தவன் அப்போது அறிந்திருக்கவில்லை, எப்போதே அவனவள் மனதளவில் அவனை விட்டு விலகிவிட்டாளென்று.

அதுவரை நடந்ததை நினைத்துப் பார்த்தவாறு ரிஷி அப்படியே கையில் வீட்டுப் பத்திரத்தோடு சோஃபாவில் அமர்ந்திருக்க, “ஐயா… ஐயா…” என்று அழைக்கும் சத்தம்.

ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தது போல் மலங்க மலங்க விழித்தவாறு அவன் நிமிர்ந்துப் பார்க்க, வீட்டு வேலையாள்தான்.

“ஐயா, பெரியய்யா லைன்ல இருக்காரு.” என்று அந்த வேலையாள் சொல்ல, அப்போதுதான் நேரத்தைப் பார்த்து படப்பிடிப்பு இருப்பது ஞாபகம் வந்தவனாக தலையிலடித்துக்கொண்டு அலைப்பேசியை காதில் வைத்தான்.

“உடனே அந்த பொண்ணுக்கு கால் பண்ணி எழுப்பிவிட்டு இன்னும் இருபது நிமிஷத்துல நீயும் அவளும் இங்க இருக்கணும்.” பற்களை கடித்துக்கொண்டுச் சொல்லிவிட்டு கோபத்தோடு ராகவன் அழைப்பைத் துண்டிக்க, ‘அந்த சாணி இன்னும் போகல்லையா?’ என்று மேலும் அதிர்ந்து அவளுக்கு அழைத்தான் ரிஷி.

அங்கு, தன் வீட்டில் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தவள் அலைப்பேசியின் ஒலியில், விழிகளைக் கூட திறக்காது அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹெலோ யாரு…?” என்று நீட்டி முழக்கி தூக்கக் கலக்க குரலில் கேட்க, அவள் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பதில் கடுப்பாகிவிட்டான் ரிஷி.

“எதே, யாரா?” ரிஷி உச்சக்கட்ட கோபத்தில் கத்த, அந்த குரலில் தூக்கம் மொத்தமும் தெளிந்தவளாக பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்த சனா, “அய்யய்யோ வேது, திட்டிறாத! லேசா கண்ணு தூங்கிருச்சு. கண்ணு மேலதான் தப்பு. என்மேல இல்லை. பத்தே நிமிஷம். பத்தே நிமிஷத்துல நான் ஸ்பாட்ல இருப்பேன். மன்னிச்சு…” என்று படபடவென பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கோ கவலை மறந்து அவளின் செயலில் சிரிக்கத்தான் தோன்றியது.

அடுத்த இருபதே நிமிடங்களில் ரிஷியும் குளித்து முடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து சேர, இவன்  காரை நிறுத்தும் அதேசமயம் படப்பிடிப்பு வெளியிடத்தில் நடப்பதால் முகக்கவசத்தை அணிந்தவாறு ஆட்டோவில் வந்திறங்கினாள் சனா.

‘என்ன இவன், இப்போதான் வர்றானா? இல்லைன்னா, வெளியில எங்கேயாச்சும் போயிட்டு வர்றானா?’ உள்ளுக்குள் யோசித்தவாறு சனா ரிஷியை பார்த்தவாறு வர, இரு பாதுகாவலர்களோடு உள்ளே ரிஷி நுழைய, இருவரையும் முறைத்துப் பார்த்தவாறு வேகவேகமாக வந்தார் ராகவன்.

வந்ததுமே தாறுமாறாக பொறிய ஆரம்பித்துவிட்டார். 

“இதுதான் நீங்க இரண்டு பேரும் வர்ற நேரமா, கொஞ்சமாச்சும் பொறுப்புன்னு ஒன்னு இருக்கா? அந்த பொண்ணுதான் இதுக்கு புதுசு. உனக்கென்னடா? இதுதான் உங்க இரண்டுபேருக்கும் ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட். இதுக்கப்றம் லேட்டாச்சசுன்னா நடக்குறதே வேற.” என்று காட்டுக்கத்து கத்திவிட்டு நகர்ந்திருந்தார் அவர்.

ராகவன் சென்றதுமே  ரிஷியை முறைத்துப் பார்த்தவள், ‘பெரிய யோகியன் மாதிரி பேசினான் ஃப்ராடுபயல்!’ என்று உள்ளுக்குள் நினைத்து உதட்டைச் சுழித்து முகத்தைத் திருப்பிக்கொண்டுச் செல்ல, அவளின் மனதின் திட்டல் புரிந்து ‘ஹிஹிஹி…’ என்று அசடுவழிந்தான் அவன்.

அடுத்த சில மணித்தியாலங்கள் வெவ்வேறு உடைகளில் பல காட்சிகள் எடுக்கப்பட, ஒருகட்டத்தில் களைப்பாகி அங்கிருந்த இருக்கையில் சனா அமர்ந்துவிட, அவளை யோசனையோடுப் பார்த்தவாறு அவளருகில் வந்தமர்ந்தான் ரிஷி.

சுற்றிமுற்றி பார்த்த சனாவின் விழிகளிலோ அதிருப்தி. ரிஷியோடு முகக்கவசமணிந்து நடிக்கும் நடிகையை காண பொதுமக்கள் சிலர் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால், விட்டால் முகக்கவசத்தை பிய்த்து முகத்தை காணும் ஆவலில் கேமராக்களால் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் சில மீடியாவை சேர்ந்த நபர்கள்.

அத்தனைப் பேரையும் சலிப்பாகப் பார்த்துவிட்டு சனா முகத்தைத் திருப்பிக்கொள்ள, “ஏன் உன் அப்பாவுக்கு உன்னை பிடிக்கல சாணக்கியா?” என்று தன் சந்தேகத்தை பட்டென்று கேட்டான் ரிஷி. அவளோ அவன் கேள்வியில் புருவத்தைச் சுருக்கி பின், “அவர் பையன் ஆசைப்பட்டாரு. நான் பொண்ணா பெறந்துட்டேன் அதான்.” என்றுவிட்டு அலைப்பேசியை நோண்டினாள்.

“ஓஹோ!” என்று நீட்டி முழக்கி நெற்றியை ஒரு விரலால் நீவிவிட்டவன், “நாளையோட ஷூட்டிங் முடிஞ்சிடும். அப்றம்…” என்று ஏதோ சொல்ல வர, “அப்போ… நாளைக்கு பேமன்ட் தந்துருவாங்கல்ல?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க, “ம்ம்…” என்றவனுக்கு முகக்கவசத்தினூடே தெரியும் விழிகளில் ஒரு மயக்கம்.

அவளுடைய விழிகளையே அவன் பார்த்திருக்க, “வேது…” என்று கத்திக்கொண்டு அவனை உலுக்கியவள், ” சீன் ஸ்டார்ட் ஆகிடுச்சு. போலாமா?” என்று கேட்டு பொறுப்பாக அவனை இழுத்துக்கொண்டுச் செல்ல, அலைப்பாயும் விழிகளைக் கட்டுப்படுத்த படாதபாடுபட்டுப் போனான் அவன்.

அடுத்தநாளும் இறுதியாக எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட, சனாவுக்கோ ‘அப்பாடா!’ என்றிருந்தது.

கூட்டம் களைவதற்குள்ளேயே வேகவேகமாக கேரவனிற்குள் ஓடி அணிந்திருந்த சவுரி முடியையும் ஆளுக்கு பெரிய கவுனையும் கழற்றியெறிந்து தன் சாதாரண உடைக்கு மாறி அப்படியே அங்கிருந்த சோஃபாவில் தொப்பென்று விழுந்தாள்.

திடீரென, “சாணி…” என்ற குரலோடு கதவு தட்டும் சத்தம். ‘அய்யோ! இவன் நம்மள விடமாட்டான் போலயே…’ எரிச்சலாக விழிகளை உருட்டியவள், “வந்து தொலை!” என்று கடுப்பாக குரல் கொடுக்க, உள்ளே வந்தவனுக்கோ சிரிப்புதான் வந்தது.

அந்த சிரிப்போடே கையிலிருந்த செக்கை அவளை நோக்கி அவன் நீட்ட, வேகமாக அதையெடுத்து அதிலிருந்த தொகையை பார்த்தவளுக்கு அத்தனை சந்தோஷம். “நான் நினைச்சதை விட அதிகமாதான் இருக்கு. இருந்தாலும் காசா கொடுத்திருக்கலாம்.” என்றுவிட்டு அந்த செக்கையே திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரிஷியும் அவளையே பார்த்திருந்தவன், “நீ யாரையும் லவ் பண்றியா சாணி?” என்று மீண்டும் கேட்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவனை மேலிருந்து கீழ் ஒருமாதிரியாகப் பார்த்தவள், “ஆமா இருக்கான். அதுக்கென்ன இப்போ?” என்று கேட்டு முறைக்க, ரிஷியின் முகமோ சட்டென்று இறுகியது.

உரிமை உணர்வு தலைத்தூக்க, “அப்படியா…” என்றுக்கொண்டே அவள் முகத்துக்கு நேரே குனிந்து மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு நெருங்கியவன், “இருந்துட்டு போகட்டும். இன்னும் கொஞ்சநேரத்துல ரெடியா இரு, வெளியில போறோம்.” என்றுவிட்டு வெளியேற, ‘ஆ…’ என வாயைப் பிளந்தவாறு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவனின் மிரட்டலில் தலையை சுவற்றில் முட்ட வேண்டும் போலிருந்தது.

அவள் மறுத்தால் அந்த விடாக்கண்டன் விட்டுவிடுவானா என்ன?

அடுத்த அரைமணி நேரத்தில் வேலை செய்ததில் உண்டான களைப்பில் காரில் தூங்கி வழிந்தவாறு சனா அமர்ந்திருக்க, “எங்க போலாம்?” ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் ரிஷி.

“வீட்டுக்கு போகணும்னு சொன்னா விடவா போற? எங்கேயாச்சும் போ!” என்றுவிட்டு நன்றாக சாய்ந்து சீட்டில் அவள் படுத்துக்கொள்ள, மண்டையை குடைந்து யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

உடனே பளிச்சென்ற புன்னகை தோன்ற வண்டியை தான் நினைத்த இடத்திற்கு படுவேகமாகச் செலுத்தினான். அடுத்த சில நிமிடங்களில் சர்ரென்ற வேகத்தில் ஒரு வாசற்கதவுக்கு முன் ரிஷி வண்டியை நிறுத்தி, தானே இறங்கிச் சென்று பூட்டைத் திறந்து வண்டியை உள்ளே விட்டான்.

உள்ளே பூங்காவிற்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த அந்த அழகிய வீட்டின் முன் வண்டியை நிறுத்தி, “சாணக்கியா…” என்று மெல்ல அவள் கன்னத்தைத் தடவ, சோம்பல் முறித்தவாறு விழிகளைத் திறந்தவள், முதலில் புருவத்தைச் சுருக்கி பின் கண்ணாடியோடு ஒட்டிக்கொண்டு வெளியே தெரிந்த வீட்டை வாயைப் பிளந்துப் பார்த்தாள்.

“யார் வீடுடா இது?” ஆச்சரியமாக அவள் கேட்க, “என் வீடு.” என்றுக்கொண்டே காரிலிருந்து இறங்கி வேகமாக மற்றபுறம் வந்து கார்கதவை திறந்துவிட்டான்.

அவளும் சுற்றிமுற்றி பார்த்தவாறு இறங்கியவள், “உன்னோடதா, ஆனா யூடியூப்ல சிங்கர் ரிஷி வேதாந்தோட ஹோம் டூர்ல இதை காமிக்கலையே…” என்று சந்தேகப் பார்வையோடு இழுக்க, “இது நான் சின்ன வயசுல என் அப்பா அம்மா கூட வாழ்ந்த வீடு. பல வருஷத்துக்கு அப்றம் இப்போதான் நானே உள்ள போக போறேன், அதுவும் உன்கூட.” விழிகளில் ரசனையோடு சொல்லி அவளின் கரத்தைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

வீட்டினுள் பொருட்கள் எதுவுமின்றி இருந்தாலும் சுவற்றில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள், தரை டைல்ஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள அலங்கரிப்புக்கள் அந்த வீட்டை அத்தனை அழகாகக் காமித்தது. “ம்ம் சும்மா சொல்லக் கூடாது. நல்லாதான் இருக்கு.” என்றுக்கொண்டே திரும்பிய சனா, ரிஷி முகம் இறுகி சிவந்துப்போய் நின்றிருந்த தோற்றத்தில் அதிர்ந்துப்போனாள்.

அவன் நினைவுகளோ தன் பெற்றோருடனா நினைவுகளையும் இறுதியில் மேக்னாவுக்காக அன்று வீட்டை விற்று பணம் கொடுத்ததையும் ஞாபகப்படுத்தி காயப்பட்ட மனதை மேலும் ரணத்திற்குள்ளாக்கியது. கூடவே, இரண்டு நாட்களுக்கு முன் மேக்னா இந்த வீட்டை அவனுக்கே மீட்டுக் கொடுத்து பேசிச் சென்றதும் மனதிற்குள் ஓட, அப்படியே அசையாது நின்றிருந்தான்

அவனை கோயிலைச் சுற்றுவது போல் சுற்றி சுற்றி வந்தவள், “அய்ய… என்னாச்சு இவனுக்கு? டேய் வேது! முழிச்சிக்கடா!” என்று ஒரு குலுக்கு குலுக்க, “ஆங்…” என்று மலங்க மலங்க விழித்தவாறு அவளை நோக்கியவன், “சோ..சோரி” என்றான் தடுமாற்றமாக.

அதில், “என்ன வேது ஃப்ளேஷ்பெக்கா?” என்று சொல்லி அவன் முதுகில் ஒரு அடியைப் போட்டு, “இந்த வெத்து வீட்டுல ஒன்னுமேயில்லை. வா போகலாம்.” என்றுவிட்டு அவள் வெளியேறப் போக, “இல்லை, ஒரு முக்கியமான ப்ளேஸ் இருக்கு.” என்றுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான்.

‘அய்யோ! இவன் தொல்லை தாங்க முடியல’ சலித்தவாறு அவன் இழுப்பிற்குச் சென்றவள், அங்கு மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த பெரிய ஊஞ்சலையும் சுற்றி நடப்பட்டிருந்த பூக்களையும் பார்த்து அப்படியே சிலையாக நிற்க, “அப்பா அம்மாக்காக இந்த ஊஞ்சலை கட்டினாங்க. இப்போ ரொம்ப அழகா இருக்குல்ல?” என்றுகேட்டு அவளை அந்த ஊஞ்சலில் அமர வைத்தான்.

அவள் அமர்ந்ததும் பின்னாலிருந்து ரிஷி ஊஞ்சலை ஆட்டிவிட, சனாவுக்கோ தன் சிறிய வீட்டில் ஊஞ்சல் கட்டிக் கேட்டு தன் அம்மாவிடம் அடி வாங்கியது ஞாபகத்திற்கு வந்து சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

தரையைப் பார்த்து அவள் சிரிப்பதை கவனித்தவன், “என்ன சாணி, உனக்கும் பழைய ஞாபகமா?” என்று கேட்டு சிரித்தவாறு அவளருகே வந்தமர, புன்னகையோடு தலையசைத்தவள், “இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு.” என்றாள் சுற்றி ரசித்துக்கொண்டே.

“பிடிச்சிருக்கா?” ஆழ்ந்த குரலில் ரிஷி அவளோடு நெருங்கி அமர்ந்தவாறு கேட்க, அவனின் குரல் மாற்றத்தை முக மாற்றத்தை எதுவும் சனா கவனிக்கவில்லை. “ம்ம்…” என்று அவள் சொன்னதும் மெல்ல அவளின் கரத்தைப் பற்றி, “உன் மனசுல யாராச்சும் இருக்காங்களா?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, கடுப்பாகிவிட்டாள் அவள்.

“என்ர குருவாயுரப்பா, என்னை சோதிக்காத! ஏன்டா ஒரே கேள்விய டிஸைன் டிஸைன்னா கேக்குற? யப்பா சாமி! எனக்கு இந்த காதல் கருமத்து மேல நம்பிக்கையில்லை. நாம நம்மள மட்டும்தான் காதலிக்கணும். அடுத்தவங்க மேல வர்றதெல்லாம் உடல் ஆசை தீருற வரைக்கும்தான்…” என்று பேசிக்கொண்டே திரும்பியவள், ரிஷி விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் அப்படியே அமையாதிவிட்டாள்.

அவனோ அவள் விழிகளையே ஆழ்ந்து நோக்க, “என்..என்னாச்சு உனக்கு?” தடுமாற்றத்தோடு கேட்டவளுக்கு தன் பார்வையை அவனிடத்திலிருந்து அசைக்க முடியவில்லை.

“அது.. அது சனா… ச…” என்று ஏதேதோ உளறியவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷியின் பார்வை மெல்ல அவளின் நாசி வழியே இதழுக்குத் தாவ, மெல்ல இதழை நெருங்கினான். ஏனோ அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கும் ஏதோ காந்தம் இழுப்பது போன்ற உணர்வு. நடக்கப்போவது மூளைக்கு உரைத்தாலும் முதல்முறை உணர்ந்த இந்த ஸ்பரிசத்தில் அவளால் விலக முடியவில்லை.

மூளை எச்சரிக்க, மனம் ஏனோ அவனின் அருகாமையை விரும்ப, ஒருவித தடுமாற்றத்தோடு சனா சிலையாக அமர்ந்திருந்தாள் என்றால், மெல்ல அவளின் இடது கன்னத்தை தன் வலக் கரத்தால் தாங்கி அடுத்தகணம் அவளிதழை தன்  வன்மையான இதழால் சிறைப்பிடித்தான் ரிஷி.