தொலைந்தேன் 21💜

eiWKPHW13027-46cd1948

அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிந்தது.

அன்று ரிஷியோடு சனா இணைந்து நடித்த பாடல் யூடியூப் காணொளியில் வெளியாகி அதிக பார்வைக்குள் வந்து ட்ரெண்டிங்கில் இருக்க, கூடவே அந்த காணொளி தொடர்பில் ரிஷியின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வேறு.

அது மாஸ்க் அணிந்துள்ள பெண் யாரென்ற கேள்விதான். சில பேர் தாங்கள் யூகித்த நடிகைகளின் பெயர்களை சொல்லி அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று வலைத்தளங்களில் பேசிக்கொள்ள, இதில் மேக்னாவின் பெயர் கூட சொல்லப்பட்டது.

இவ்வாறு அந்தப்பெண் யாரென்ற குழப்பத்தில் வலைத்தளங்களில் பல செய்திகள் பேசப்பட, இங்கு ராகவனின் ஸ்டூடியோ வாசலில் வந்து நின்றது அமுதாவின் கார்.

உள்ளே நுழைந்தவர், அங்கு ரிசெப்ஷனில் நின்றிருந்த பெண் அழைப்தைக் கூட பொருட்படுத்தாது அவர் பாட்டிற்கு உள்ளே நுழைய, சோஃபாவில் தன் நண்பரொருவரோடு பேசிக்கொண்டிருந்த ராகவனோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்.

அங்கு அமுதாவை பார்த்த கணமே அவரின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன. கூடவே, முகமும் இறுகிப் போனது.

வேகமாக எழுந்து அமுதாவை நோக்கிச் சென்றவர், ரிசெப்ஷனிலிருந்த பெண்ணிடம் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையைச் செறும, அரவம் உணர்ந்து திரும்பிய அமுதாவின் விழிகள் முதலில் அதிர்ச்சியில் விரிந்து பின் ஒரு அழுத்தத்தை எடுத்துக்கொண்டது.

“என்ன விஷயம்?” ராகவன் இறுகிய குரலில் கேட்க, “ரிஷி கூட பேசணும்.” என்று அமுதா சொன்னதுமே அவர் விழிகள் இடுங்கின.

“ஃபோர் வாட்?” அவர் சந்தேகமாகக் கேட்க, “நம்…” என்று ஆரம்பித்து  நிறுத்தி, தொண்டையை செறுமிக்கொண்டவர், “மேகா பத்தி ரிஷி கூட பேச வேண்டியிருக்கு.” என்றுவிட்டு அவரை அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்க்க, புருவங்கள் முடிச்சிட தரையை யோசனையில் வெறித்தவர், “வெயிட்!” என்றுவிட்டு ரிஷி இருக்கும் அறையின் தொலைப்பேசிக்கு அழைத்தார்.

அங்கு ரிஷி ராகவனின் ஸ்டூடீயோவில் திரைப்பட பாடலுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தான். அவனுடைய கவனமோ ஒருபக்கம் வேலையிலிருக்க, இன்னொருபுறம் நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. காரணம் மேக்னாதான்.

‘ச்சே! கொஞ்சமும் பொறுப்பில்லை. நேரத்துக்கு வரணும்னு தோனாதா? மேக்கப்ப போட்டுக்கிட்டு மினுக்கிக்கிட்டு வரணும்னா லேட் ஆகதான் செய்யும்.’ என்று முணங்கியவாறு அவனிருக்க, அறையிலிருந்த தொலைப்பேசிக்கு வந்த அழைப்பில் அவனுடைய கவனம் அது நோக்கி திரும்பியது.

சலிப்பாக அழைப்பையேற்றவன், எதிர்முனையில் ராகவன் சொன்ன செய்தியில், விழிகளைச் சுருக்கி யோசித்து, “நோ ஆப்ஜக்ஷன் சார். பேசலாம்.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியே வெறிக்கத் துவங்கினான்.

அடுத்த சில நிமிடங்களிலே கதவைத் தட்டி உள்ளே நுழைந்த அமுதா, மேலிருந்து கீழ் ரிஷியைப் பார்த்தவாறு அவனருகே வந்து நிற்க, அவர் வந்ததை ஏற்கனவே உணர்ந்திருந்தவன், எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான்.

ஆனால், தன் நாடகத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.

“ரிஷி கண்ணா…” என்று பாசக் குரலில் அமுதா அழைக்க, புருவங்களை மேலே உயர்த்தி போலியான ஆச்சரியப் பாவனையில் அவரை நோக்கித் திரும்பினான் ரிஷி.

அவரும் அவன் செவிமடுப்பதாக நினைத்து முழுதாக தான் மனப்பாடம் செய்ததை பேசிவிடும் நோக்கில், “மேகா மேல எந்த தப்பும் இல்லைடா, எல்லாமே என்னை சொல்லணும். பெத்தவளா அவ எதிர்காலத்தை பத்தி யோசிச்சுதான் அவள வற்புறுத்தி சம்மதிக்க வைச்சேன். நீயே சொல்லு, தன்னோட மகளுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் போது எந்த தாய்தான் தவறவிட யோசிப்பா? ஆனா, அவள பெத்தவளா யோசிச்சேனே தவிர ஒரு மனுஷியா அவளோட காதல நான் புரிஞ்சிக்கல. அன்னைக்கு மேடையில அவ சம்மதம்னு சொன்னாலும் அவ மனசுல நீதான் இருந்திருக்க. ட்ரஸ்ட் மீ ரிஷி, ஒரே வருஷத்துல ஏகப்பட்ட கலவரம் ஆகிருச்சு. என்னால ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா…” என்று பேசிக்கொண்டேச் செல்ல, ரிஷியிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன், “அவளோட காதல ஏத்துக்கப்பா! இதுக்குமேல அவ தனியா தவிக்குறதை என்னால பார்க்க முடியல.” என்று அமுதா சொன்னதும், “நிஜமாவா அத்தை?” என்றுவிட்டு  சோகமாக முகத்தை வைத்து தரையை வெறித்தான். இல்லை இல்லை நடித்தான்.

அமுதாவுக்கோ உள்ளுக்குள் சந்தோஷம்.

“உண்மைதான் கண்ணா! நீயும் அவளும் பழையபடி…” என்று அவர் ரிஷி தான் சொன்னதை கேட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் படபடவென பேசிக்கொண்டே போக, சில கணங்கள் முகத்தைச் சோகமாக வைத்து தலையசைத்து பாவனை செய்தவன், பின் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்தி சிரித்துவிட்டான்.

அமுதாவின் முகம் சட்டென மாற, “ரிஷி கண்ணா…” என்று அதிர்ந்து அழைத்தவாறு புருவத்தைச் சுருக்கி அவனை நோக்கினார்.

“ரிஷி காம் டவுன்.. கன்ட்ரோல் யூவர் செல்ஃப்!” என்று தன் நெஞ்சை தானே நீவி விட்டு சிரிப்பை அடக்கி, “கன்டினியூ அத்தை!” என்றுவிட்டு மீண்டும் முகத்தை சோகமாக வைக்க, அவருக்கு அவமானத்தில் முகம் சிவந்து கறுத்துவிட்டது.

ரிஷிக்கு மனதிற்குள் அத்தனை திருப்தி. அவரின் முகமாற்றத்தை ஏளனப்புன்னகையோடு ரசித்தவாறு, “மிஸஸ்.மனோகர், தன் மகளோட காதலுக்காக என்கிட்ட வந்து பேசுறாங்க. அம்புட்டு அக்கறைல்ல!” என்று போலியான ஆச்சரியப்பாவனையில் கேட்டு, “அன்னைக்கு என்கிட்ட ஒன்னுமே இல்லைன்னு ஒதுக்கும் போது தெரியல்லையா உன் பொண்ணோட காதல். என்ட், இப்போ காதலிக்கிறேன்னு வந்து நிக்கிறாங்களே அந்த மேடம், அப்போ என்ன **** பிடுங்கிட்டு இருந்தா!” என்று கத்த, அவனின் கோபத்தில் சிலையாகிவிட்டார் அவர்.

“காசு இல்லாதப்போ நான் தேவைப்படல. இப்போ… இரண்டு பேருக்கும் நான் தேவைப்படுறேன்.” என்றுவிட்டு அங்கிருந்த கண்ணாடியை அவன் ஓங்கிக் குத்த, இரண்டடி பின்னால் நகர்ந்தவருக்கு பயத்தில் முகமெல்லாம் வியர்த்து கைகால்கள் நடுங்க ஆரம்பிக்க, அதற்குமேல் அதே இடத்தில் நிற்பாரா என்ன?

அடுத்தகணமே பயத்தில் அமுதா அங்கிருந்து வெளியேற, அப்போதுதான் தன் அம்மா வந்த செய்தியைக் கேட்டு வேகவேகமாக வந்த மேக்னா எதிரே அமுதா பேயறைந்தது போல் வருவதைப் பார்த்து புருவத்தை நெறித்தாள்.

தான் நிற்பதைக் கூட பார்க்காது தன்னை கடந்துச் செல்பவரை வேகமாகப் பிடித்து, “மாம், என்னாச்சு?” என்று அவள் பதறியபடிக் கேட்க, “மேகாம்மா… மேகாம்மா… அங்க… அந்த ரிஷ்… ரிஷி…” என்று வாய் குளர தடுமாற, அமுதா முழுதாக சொல்லவில்லையென்றாலும் ரிஷியை பற்றி தெரிந்தே நடந்ததை யூகித்திருந்தாள் மேக்னா.

ஆழ்ந்த மூச்செடுத்தவள், “நீங்க ஏன் இங்க வந்தீங்க, மொதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று அவரை வழியனுப்பிவிட்டு ரிஷி இருக்கும் அறைக்குள் நுழைய, அங்கு சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடி சுக்குநூறாக தரையில் கிடந்திருந்தது.

முகம் சிவந்து நரம்புகள் புடைத்து கண்ணாடியை உடைத்தில் காயமாகி தரையில் சொட்டு சொட்டாக கையிலிருந்து இரத்தம் சொட்ட, சோஃபாவில் அமர்ந்திருந்தவனைப் பார்க்க மேக்னாவுக்கே வயிற்றில் பயபந்து உருண்டது.

ஆனால், அதை வெளிக்காட்டாது மெல்ல ரிஷியின் அருகில் சென்றவள், அவன் காலுக்கருகில் தரையில் அமர்ந்து காயப்பட்ட அவன் கரத்தை மெல்ல பிடிக்கப் போக, பட்டென்று கரத்தை உருவிக்கொண்டான் அவன்.

அவளுக்கோ அவனின் உதறல் உள்ளுக்குள் வலியை எடுக்க, “ஐ அன்டர்ஸ்டேன்ட் ரிஷ், என்ட் சோரி…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து ராகவனிடம் விடயத்தைச் சொல்லிவிட்டு வெளியேறியிருந்தாள்.

இத்தனைநேரம் கீழ்தளத்தில் எதிலேயும் தலையிடாது அமர்ந்திருந்த ராகவன், மேக்னா சொன்னதைக் கேட்டதும் வேகமாக முதலுதவி பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடி ரிஷி மறுக்க மறுக்க அவனின் காயத்திற்கு மருந்திட, அவனிதழ்களோ கேலியாக வளைந்தன.

அதைக் கவனித்தவர், “ரிஷ்…” என்று மெல்ல அழைக்க, “நான் அனுபவிச்ச காயத்தை விட இது ஒன்னும் அவ்வளவு பெரிய வலியை கொடுக்கல சார்.” என்று வலிகள் நிறைந்த வார்த்தைகள் ரிஷியிடமிருந்து வர, அவன் நினைவுகளோ மேக்னாவிடமிருந்து மொத்தமாக விலகிய சம்பவத்தை மீட்டியது.

விருது வழங்கும் விழாவுக்கு சில நாட்களே இருக்க, ரிஷியை மொத்தமாக தவிர்த்தாள் மேக்னா.

ஆரம்பத்தில் அழைப்பையேற்று வேலை வேலையென்று தவிர்ப்பவள், அதன்பிறகு அழைப்பை ஏற்காது மொத்தமாக தவிர்த்திருந்தாள்.

அவள் ஆரம்பத்தில் தவிர்க்கும் சமயம் அவளுக்கு வேலையாக இருக்குமென்று தன்னைத்தானே தேற்றி சமாதானம் செய்துக்கொள்பவன், மேக்னா வலைத்தளங்களில் ரசிகர்களோடு பேசவென காணொளிகளுக்காக நேரம் ஒதுக்குவதை, க்ளப் கேளிக்கை விருந்துகளின் புகைப்படங்களை வலைத்தளங்களில் பகிர்வதை பார்க்கும் போது மனதிற்குள் ஒருவித வலியை உணர ஆரம்பித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“இதுக்கெல்லாம் நேரம் இருக்கும் போது, ஏன் என்கிட்ட சாப்பிட்டியான்னு கேக்க கூட அவளுக்கு நேரமிருக்க மாட்டேங்குது? நான் எப்படி இருக்கேன்னு கேக்க ஏன் அவளுக்கு தோன மாட்டேங்குது? நேரம் நமக்காக எப்போவும் நிக்க போறதில்லை. நமக்கு பிடிச்சவங்களுக்காக நேரத்தை நாமதான் ஒதுக்கணும்.” என்று அவன் மனம் கூக்குரலிட, அதை சமாதானம் செய்து அடக்குவதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.

இவ்வாறு நாட்கள் ஓட சித்தார்த்துடனான மேக்னாவின் நெருக்கமான புகைப்படங்கள் வலைத்தளங்களில் மேலும் அதிகமாக பகிரப்பட, ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வேறு.

ஆனால், மற்றவர்களின் பார்வையில் தன்னவள் தவறாக காட்டப்படுகிறாளே என்று ரிஷி வருத்தப்பட்டானே தவிர, ஒருகணம் கூட அவள் மீதிருந்த நம்பிக்கையை அவன் இழக்கவில்லை. ஆனால் மொத்த நம்பிக்கையும் சுக்கு நூறாக சிதறும் நாளும் வந்தது.

அன்றிரவு, விருது வழங்கும் விழா ஆரம்பமாக இருக்க, நேற்றிரவு வரை பயிற்சி முடித்து அன்று காலைதான் தன் வீட்டிற்கு வந்திருந்தாள் மேக்னா. கூடவே, விழாவுக்கு செல்லவெனமே மனோகரும் அமுதாவும் அங்கேயே இருக்க, வீட்டு தொலைப்பேசிக்கு ஒரு அழைப்பு.

அமுதாவே அழைப்பையேற்றதும், “மேடம், ரிஷி சார் வந்திருக்காரு. உள்ள விடவா?” என்று மறுமுனையில் வாசல் காவலாளி கேட்க, கூடவே உள்ளே விடாது காவலாளி நிறுத்தி வைத்ததில் கோபமான ரிஷியின் கத்தல் வேறு அமுதாவின் காதில் விழுந்தது.

சோஃபாவில் அமர்ந்திருந்த மேக்னாவை நோக்கி திரும்பியவர், “ரிஷ் வந்திருக்கான்.” என்றுவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருக்க, முதலில் அதிர்ந்து விழித்தவள் பின் யோசித்து, “வர சொல்லுங்கம்மா.” என்க, மனோகரோ ஆர்வமாக வாசலைப் பார்க்கத் துவங்கினார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, “நான் யாருன்னு தெரிஞ்சும் என்னை விடாம வெயிட் பண்ணை வைச்சு டைம் வேஸ்ட் பண்றான் இடியட்! மேகாம்மா அந்த வாட்ச்மேன்ன…” என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தவனின் பேச்சு அங்கு அமர்ந்திருந்த அமுதாவையும் மனோகரையும் பார்த்ததும் அப்படியே நின்றது.

“வாங்க மாமா… வாங்க அத்தை…” என்று வெளியிலிருந்து நுழைந்தவாறு அமர்ந்திருந்தவர்களை அழைத்து, “மேகா மாமாவுக்கும் அத்தைக்கும் சாப்பிட ஏதாச்சும் கொடுத்தியா?” என்று கேட்டு அவன் பாட்டிற்கு பையை ஒரு ஓரமாக போட்டு அப்படியே மேகாவின் அருகே அமர்ந்தான்.

மேக்னாவோ எதுவும் பேசாது இத்தனைநேரம் அமைதியாக பார்த்திருந்தவள், அவன் நெருங்கி அமர்ந்ததும் தன் அம்மாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தள்ளி அமர, கேலியாக புன்னகைத்த அமுதா, “என்னப்பா, ஏதோ ரொம்ப உரிமை எடுத்து உன் சொந்த வீடு மாதிரி நடந்துக்குற. நல்லா காரியக்காரன்தான் நீ!” என்று பொடி வைத்துப் பேச, ரிஷிக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அவன் மேக்னாவை தனக்கு சார்பாக ஏதாவது பேசுவாளென்று நோக்க, அவளோ எதுவும் பேசாது எழுந்து நின்றாள்.

ரிஷி அதிர்ந்து நோக்க, அவனை பரிதாபமாக நோக்கிய மனோகர், “அமுதா, வாய மூடு!” என்று அவரை அடக்கி, “ரிஷி கண்ணா, நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு, இன்னைக்கு நைட் ஃபங்ஷன் இருக்கு, தெரியும்ல? போப்பா.” என்றார் ஆறுதலாக.

“யெஸ் ரிஷ். இன்னும் கொஞ்சநேரத்துல என் மேக்கப் ஆர்டிஸ்ட் என்ட் என் டிஸைனரும் வந்துடுவாங்க. நான் ஏர்லியாவே அங்க போக வேண்டியிருக்கு. சோ…” என்று அவனுக்கு ஒரு அறையைக் காட்ட, அவளின் ஒதுக்கமெல்லாம் அவன் விழிகளுக்கு தெரியவில்லை போலும்!

சிரிப்புடன் அவளெதிரே சட்டென்று மண்டியிட்டு அமர்ந்தவன், “மேகா, ஐ லவ் யூ!” என்று அவளுக்கு தான் வாங்கிய மோதிரத்தை நீட்டியவாறுச் சொல்ல, அவளோ விக்கித்துப்போய் விட்டாள். இதுவே பழைய மேக்னாவாக இருந்திருந்தால் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டமே செய்திருப்பாள்.

ஆனால் இவள்??

ஓரக்கண்ணால் அவள் அமுதாவை பார்க்க, அவரோ வாங்கும்படி தலையசைத்து விழிகளை அழுந்த மூடித் திறந்தார். மனோகரோ நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல் விழிகளில் சந்தோஷத்தோடு இருவரையும் நோக்க, போலியான புன்னகையோடு இடக் கரத்தை ரிஷியை நோக்கி நீட்டினாள் மேக்னா.

அவனும் காதலாக மோதிரமிட்டு கரத்திலும் எழுந்து நெற்றியிலும் அழுந்த முத்தம் பதித்தவன், “மாமா, அத்தை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நீங்களும் எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்றுவிட்டு மேகாவை ஒருகரத்தால் அணைத்தவாறு நிற்க, “தகுதிக்கு மீறின ஆசைன்னு தோனல்லையா ரிஷி கண்ணா?” என்று அவமானப்படுத்தும் நோக்கில் அமுதா கேட்டதும், “காதல்ல ஏது அத்தை காசு பணம்? மேகாவுக்கு தெரியும் அவ மேல எனக்கிருக்குற அளவுக்கடந்த காதல். என்னைக்கும் அவள என்னை விட்டு விலக வைக்காது” என்றான் ரிஷி அளவுகடந்த நம்பிக்கையில்.

ஏனோ அந்தகணம் மேக்னாவுக்கு ஒருவித குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் தோன்ற, மெல்ல அவனை விட்டு விலகியவள், “நீ போய் ரெஸ்ட் எடு ரிஷ்!” என்றுவிட்டு அங்கிருந்த வேலையாளுக்கு விழிகளால் அவனின் பைகளை எடுத்துச் செல்லும்படி சைகை செய்தாள்.

அவன் நகர்ந்த அடுத்தநொடி மேக்னாவை அறைக்குள் இழுத்துச் சென்ற அமுதா, “ச்சே! இவனால ஒரு டயமன்ட் ரிங் வாங்க கூட வக்கில்லை. இவனெல்லாம் நீ கல்யாணம் பண்ணா அவ்வளவுதான், வாழ்க்கைய பட்ஜட்லதான் ஓட்டணும். அதுவும் உன் காசுல. தேங்க் கோட்! அந்த பையன் உன் வாழ்க்கையில வந்திருக்கான். இன்னைக்கே உன் லைஃப் மாற போகுது. ஐ அம் சோ ஹேப்பீ. நீ எதை பத்தியும் யோசிக்காத! இன்னைக்கு உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான நாள். பீ ஹேப்பீ மேகாம்மா.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, யோசனையில் தரையை வெறிக்கத் துவங்கினாள் அவள்.

அன்றிரவு, பேரழியாக தயாராகி மாடிப் படிகளிலிருந்து இறங்கி வந்த மேக்னா ரிஷியின் ஆழ் மனதில் சிலையாக பதிந்துதான் போனாள். விழிகளில் காதல் பொங்க அவன் அவளையே பார்த்திருக்க, சாதுரியமாக அவனை தவிர்த்தவள், அலைப்பேசியை நோண்டியவாறு காரை நோக்கி ஓட, ரிஷியும் ” மேகா… மேகா…” என்றழைத்தவாறு அவள் பின்னாலே சென்றான்.

ஆனால் அவளோ கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை.

அவள் பாட்டிற்குச் செல்ல, பின்னாலிருந்து ரிஷியை பிடித்திழுந்த அமுதா, “நீ எங்கப்பா போற, கூட ஒட்டிக்கிட்டு போய் தேவையில்லாத பிரச்சினையில அவள சிக்க வைச்சிறாத!” என்று கடுகடுக்க, தன் மனைவியை எரிச்சலாகப் பார்த்த மனோகர், “அவள கண்டுக்காதப்பா, நீ எங்க கூட வா மருமகனே!” என்று உறவு சொல்லி அழைத்து அவன் தோளில் கையைப் போட்டவாறு கூட்டிச் செல்ல, விழிகளை சலிப்பாக உருட்டியவாறு நகர்ந்தார் அவர் மனைவி.

அடுத்த சில மணித்தியாலங்களில் அத்தனை பெரிய அரங்கத்தினுள் பல முண்ணனி நடிகர், நடிகைகள், வியாபார தொழிலதிபர்கள் பாதுகாப்போடு சிவப்பு கம்பளத்தின் ஆர்ப்பாட்டமான வரவேற்போடு உள்ளே நுழைய, தன் காரில் வந்திறங்கினாள் மேக்னா.

சிகப்பு கம்பளித்தின் வழியே தேவதையாக நடந்து வந்தவளிடம் அங்கிருந்த பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிபுணர்களும், “சித்தார்த் சாருக்கும் உங்களுக்கும் காதல்னு சொல்றாங்களே, உண்மையா மேடம்?” என்று கத்தி சித்தார்த்தை பற்றியே கேள்விகளை அடுக்க, புகைப்படத்திற்காக உடலை வளைத்து நின்றவள், “கூடிய சீக்கிரம் அதுக்கான பதில் கிடைச்சிடும்.” என்றுவிட்டு உள்ளே விறுவிறுவென நுழைந்தாள்.

அதேநேரம் விழாவும் ஆரம்பிக்கப்பட்டது. முக்கிய விருந்தினர்கள் முன்னே அமர்ந்திருக்க, குடும்பத்தினருக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் மனோகரோடு அமர்ந்திருந்தான் ரிஷி. அங்கிருந்த முண்ணனி பாடகர்களையும் நடிகர் நடிகைகளையும் விழிகளை விரித்து ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் எப்போதும் தோன்றும் வாய்ப்புக்கான ஏக்கம்.

வேலை வேலையென்று தன் கனவை ஒதுக்கி வாழ்பவனுக்கு இது போன்ற முண்ணனி பாடகர்களை காணும் போது ஏக்கம் எழத்தான் செய்யும். ஆனால், அதை ஒதுக்கி தன்னை வேலையில் மூழ்கடித்துக்கொள்வான் அவன்.

விழா ஆரம்பமாகி சிலபல விருதுகள் கொடுக்கப்பட்டு நடன பாடல் நிகழ்ச்சிகள் தொர்ந்து நடைபெற்று மேக்னாவின் குழுவுடைய நடன பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. மேக்னா பாடும் போது ஏதோ முதல் தடவை அவள் மேடையில் பாடும் போது கத்தியது போல் இன்றும் கத்தி ஆர்ப்பாட்டமே செய்துவிட்டான் ரிஷி.

அவர்களின் நிகழ்ச்சி முடிய நரேந்திரனோடு சித்தார்த் உள்ளே நுழையவும் அறிவிப்பாளர்கள் மைக்கில் அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்க, அமுதாவோ இனி நடக்கவிருப்பதை ஆர்வமாக பார்க்கத் துவங்கினார்.

பல விருதுகள் கொடுக்கப்பட்டு, அடுத்து சரியாக “கோல்டன் வொய்ஸ்” என்ற பெயருடைய விருது அறிவிக்கப்பட்டு அதை வழங்க சித்தார்த் மேடைக்கு அழைக்கப்பட, அவனோ அங்கு அமர்ந்திருந்த மேக்னாவை பார்வையால் பருகியவாறு ஸ்டைலாக தாவிக் குதித்து மேடைக்கு ஏறினான்.

அவன் கையில் ஒரு அட்டை கொடுக்கப்பட, அதிலிருந்த பெயரைப் பார்த்தவன், “வாட் அ கோ இன்ஸிடன்ட்” என்றுவிட்டு, “கோல்டன் வொய்ஸ் அவார்ட் எங்க கம்பனி ஏன்ஜலுக்கு  கிடைக்கும்னு நானே எதிர்பார்க்கல.” என்று சொல்லிச் சிரிக்க, சில பேருக்கு புரிய சில பேர் விழிக்க, மேக்னாவோ தலையை வெட்கத்தில் குனிந்துக்கொண்டாள்.

அவனும் மேடையிலிருந்து அவள் வெட்கத்தை ரசித்தவாறு, “கோல்டன் வோய்ஸ் அவார்ட் கோஸ் டூ மேக்னா சௌத்ரி!” என்று சந்தோஷமாகச் சொல்லி அவள் மேடை மீது ஏறும் முன் அவனே இறங்கிச் சென்று அவள் கரத்தோடு கரம் கோர்த்து மேடைக்கு ஏற, சுற்றியிருந்தவர்கள் கத்தி சந்தோஷக் கூச்சலிட்டனர்.

ஆனால், சித்தார்த்தின் நடவடிக்கைகளில் புருவத்தை சந்தேகத்தில் நெறித்த ரிஷிக்கு, நடக்கப் போவதை குறித்து மனம் எச்சரிக்கை மணி ஒலித்தது.