தொலைந்தேன் 22💜

ei67T3T57899

சித்தார்த்தின் நடவடிக்கைகளில் புருவத்தை சந்தேகத்தில் நெறித்த ரிஷிக்கு, நடக்கப் போவதை குறித்து மனம் எச்சரிக்கை மணி ஒலித்தது.

மேடையில் நடப்பவற்றை அவன் பார்த்துக்கொண்டிருக்க, கைக்கோர்த்து அழைத்துச் சென்று கையில் கொடுத்த விருதை மேக்னாவிடம் நீட்டினான் சித்தார்த்.

அவளும் விருதை ஒரு கையால் வாங்கி அதற்கு முத்தமிட்டு மற்ற கையால் மைக்கை வாங்கி, “தேங்க் யூ சோ மச்!” என்று சொன்னதும்தான் தாமதம், அத்தனை கரகோஷங்கள் ஒலித்தன. ரசிகர்களிடமிருந்த வரவேற்பில் அவளுடைய விழிகள் கூட லேசாக கலங்கின.

“தேங்க் யூ சோ மச்… கண்டிப்பா நீங்க இல்லைன்னா இது எனக்கு கிடைச்சிருக்காது. என்னோட மேனேஜர் நரேந்திரன் சார்! என்னோட பெரிய ரோல் மோடல் நீங்கதான். இது உங்களுக்கானது சார். என்ட், இந்த அவார்ட்ட என் ஃபேமிலிக்குதான் டெடிகேட் பண்றேன். அவங்க இல்லைன்னா இப்போ நான் இங்க இல்லை. ஐ லவ் யூ ஆல்.” என்று மேக்னா மைக்கில் பேசிக்கொண்டே போக, அமுதாவோ சீட்டில் வாகாக அமர்ந்து ரிஷியை பார்த்து கர்வமாக சிரித்தார் என்றால், அவனோ அப்போதும் அவள் பேசும் அழகை தன்னை மீறி ரசித்துக்கொண்டிருந்தான்.

அவளும் பேசிவிட்டு இறங்கப் போக, சட்டென அவள் கையிலிருந்த மைக்கைப் பிடுங்கி, “வெயிட் ஏன்ஜல்!” என்றவன், “ஆன்ட்டீ என்ட் அங்கிள் ஸ்டேஜுக்கு வாங்க, டேட் நீங்களும்.” என்று அமுதாவையும் மனோகரையும் அழைத்து கூடவே நரேந்திரனையும் அழைக்க, சுற்றியிருந்தவர்களோ தங்களுக்குள்ளேயே கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

மேக்னாவுக்கோ இப்போதுதான் இதயம் படபடவென அடிக்கத் துவங்கியது. ஏற்கனவே இவன் செய்யப் போகும் காரியத்தை தெரிந்துதான் வைத்திருந்தாள்.

“ஆமா… அந்த பையன் ஏன் நம்மள கூப்பிடுறான்?” என்ன நடக்கின்றது என புரியாது தன் சந்தேகத்தை கேட்டவாறு மனோகர் இருக்கையில் அப்படியே அமர்ந்திருக்க, “இப்போ கேள்வி கேக்குற நேரமா? மொதல்ல வாங்க, அப்றம் எல்லாம் புரியும்.” என்றுக்கொண்டு தன் கணவரை இழுத்துக்கொண்டு சென்ற அமுதாவின் பார்வை ரிஷியின் மேல் சற்று இளக்காரமாகப் பதிந்தது.

அவனுக்கு எதுவும் புரியவில்லை. ‘என்ன நடக்குது இங்க?’ தனக்குள்ளேயே கேட்டவாறு ஏனென்று தெரியாத மனப் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

இங்கு மேடையில் பெரியவர்களும் வந்து நிற்க, சட்டென்று மேக்னாவின் முன் ஒரு காலை மண்டியிட்டு அமர்ந்த சித்தார்த், “வில் யூ மேர்ரி மீ மை ஏன்ஜல்?” என்று கேட்டு வெள்ளை  இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு மோதிரத்தை நீட்ட, விருந்தினர்கள் உட்பட ரசிகர்கள் மத்தியில் பல கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆரவாரம் செய்தனர்.

சிலர் ஆர்வமாக நோக்க, ஒருசிலர் மேக்னாவுக்கு கிடைத்த புகழையும் வாய்ப்பையும் எண்ணி பொறாமையுடன் நோக்க, ரிஷிக்கு இதயம் ஒருநிமிடம் நின்று துடித்தது.

அதுவும் ஒருகண அதிர்ச்சிதான். உடனே சுதாகரித்துக்கொண்டவன், இதழை வளைத்து புன்னகைத்துக்கொண்டான். காரணம், அவனவள் மேல் அவன் கொண்டுள்ள நம்பிக்கை அது.

‘அச்சோ பாவம்! என்ன இருந்தாலும் நம்மள மாதிரி ஒருத்தன்தான். திடீர்னு அவ வேணாம்னு சொன்னா அவனுக்குதான் கஷ்டமாகும். எப்படியும் மேகாம்மா வேணாம்னு சொல்ல போறா, அதை டேக் இட் ஈஸியா எடுத்துக்கணும். என்ட், இவனுக்கு நோ சொல்றதால மேகாவோட கெரியருக்கும் பிரச்சினையாகிற கூடாது.’ என்று தனக்குள்ளேயே பேசியவாறு சாதாரணமாக அமர்ந்திருந்த ரிஷியின் விழிகள் அடுத்த நடந்த சம்பவங்களில் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.

காதலின் இதயத்தை கசக்கி பிழியும் வலியை முதல்முறை உணர்ந்தான் அவன்.

சித்தார்த் மோதிரத்தை நீட்டிக்கொண்டிருக்க, அமுதாவோ வேகமாக மேக்னாவின் கையிலிருந்த ரிஷி அணிவித்த மோதிரத்தை கழற்றி, “கைய நீட்டு மேகாம்மா, எவ்வளவு நேரம் சித்தார்த் சார் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு.” என்று சத்தமாகவே சொல்லி இழித்து வைக்க, உள்ளுக்குள் அரிக்கும் குற்றவுணர்ச்சியோடே படபடக்கும் இதயத்தோடு, “யெஸ்…” என்றவாறு கரத்தை நீட்டினாள் மேக்னா.

இப்போது அவளது விரலில் சித்தார்த் அணிவித்த மோதிரம். எழுந்து நின்றவன், “உரிமையா மருமகன்னு சொல்லுங்க அத்தை.” என்றுவிட்டு மேக்னாவை அணைத்து நெற்றியில் முத்தமிட, அனைத்து கேமராக்களும் நடக்கும் நிகழ்வை தலைப்புச் செய்தியாக பதிவிட வளைத்து வளைத்து புகைப்படமெடுத்தன.

ஆனால், இங்கு ரிஷியின் நிலைமை அந்தோ பரிதாபம். இதயத்தில் ஈட்டியை குத்தும் வலி. அடி வயிற்றிலிருந்து எதுவோ ஒன்று வந்து தொண்டையை அடைப்பது போலிருந்தது.

அத்தனை பேர் சூழ இருந்தும் தனிமையில் இருப்பது போல் உணர்வு. உலகமே தலை கீழாக சுழன்றது அவனுக்கு. அவனையும் மீறி விழிகளிலிருந்து விழிநீர் ஓடியது.

இதுவரை அனுபவித்திராத வலி. அவனது பெற்றோர் இறந்த சமயம் கூட இத்தனை வலியை அனுபவித்திருக்க மாட்டான். சிறு வயதிலிருந்து நேசித்த ஒருத்தி இப்போது இன்னொருவனின் அணைப்பில்.

மேடையை பார்க்கப் பார்க்க மூச்சு அடைப்பது போலிருக்க, அங்கிருந்து எழுந்தவன் விறுவிறுவென வெளியேறினான். சுற்றி நடப்பது எதுவும் தெரியவில்லை. ‘நான் ஏமாற்றப்பட்டுவிட்டேனா? என் காதல் என்னை ஏமாற்றிவிட்டதா?’ என்று மட்டுமே அவன் மனம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டது.

அந்த வலியை தாங்க முடியாது வண்டிகள் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தவன், அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து கத்தியழ ஆரம்பித்துவிட்டான். அந்த சத்தத்தில் சுற்றியிருந்தவர்களும் அவனை நோக்கினர். ஆனால், யாரும் அவனை நெருங்கவில்லை.

“இட்ஸ் ஹர்ட்டிங். என்னால இந்த வலிய தாங்க முடியல.” என்று கத்தி நெஞ்சைப் பிடித்து கதறியவன், அடுத்தகணம் நிறுத்தியிருந்த தன் வாகனத்தையெடுத்து மின்னல் வேகத்தில் புறப்பட்டான்.

ஏற்கனவே விழா காரணமாக பல வீதிகள் மூடப்பட்டிருக்க, வாகன நெரிசல் வேறு. ஆனால், அவனின் வேகம் குறையவில்லை.

மனதின் ரணத்தை ஆற்ற வண்டியில் வேகத்தைக் கூட்டினான். மீண்டும் மேடையில் சித்தார்த் மேக்னாவின் நெற்றியில் முத்தமிட்டது ஞாபகத்திற்கு வர, விழிகளில் நீர்த் தேங்கி விழிகள் மங்க, நேரே வந்துக்கொண்டிருந்த ஆட்டோவையும் கவனிக்கவில்லை அவன்.

அந்த ஆட்டோ ஓட்டுனர் ஹார்ன் அடிக்க, முன்பாதை தெரியாததில் விழிநீரை ஒரு கையால் அழுந்த துடைத் தெறிந்தவன், அப்போதுதான் எதிரே பார்த்து, அதிர்ந்து வாகனத்தை ஒருபக்கம் வேகமாகத் திருப்ப, வாகனம் சரிந்து தேய்ந்துக்கொண்டுச் சென்று வீதியோரத்தில் முட்டி மோதி விழுந்துவிட்டான் ரிஷி.

பெரிய காயம் இல்லையென்றாலும் தலையில் விழுந்த லேசான அடியிலும் உண்டான மன அழுத்தத்தில் அவன் அப்படியே மயக்கமாக, கடைசியாக அவனின் மங்கலான விழிகளுக்கு தெரிந்தார் மனோகர்.

அடுத்த பத்தே நிமிடத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவன், ஒரு மணி நேரத்திலேயே கண் விழித்திருக்க, அவன் காதுகளுக்கு விழுந்தது மனோகரின் பேச்சுக் குரல்.

“இன்ஸ்பெக்டர், இந்த விஷயம் வெளியில தெரியக் கூடாது. சாதாரண ஆக்சிடன்ட் கேசா இதை முடிச்சிடுங்க. ஆக்சிடன்ட்ல அவங்க இறந்ததா இருக்கட்டும். ஆனா, ரிஷியோட பெயரு வெளியில வரவே கூடாது. என்ட், என்ன பண்ணணும்னு சொல்லுங்க பண்ணிடலாம்.” என்ற அவரின் வார்த்தைகளில் கண் விழித்தவன், “மாமா, என்னாச்சு?” என்றான் பதறியபடி.

அவரோ, “ஒன்னுஇல்லை கண்ணா, நீ தூங்கு. நாளைக்கே நீ பெங்ளூர் கிளம்ப போற.” என்றுவிட்டு நகரப் போக, அந்த பிடிவாதக்காரன் இலகுவாக விட்டுவிடுவானா என்ன?

“என்னன்னு சொல்ல போறீங்களா, இல்லையா?” அழுத்தமாக அவன் கேட்க, ஆழ்ந்த மூச்செடுத்தவர், நடந்ததை சொல்லி முடிக்க, அதிர்ந்து விழித்துவிட்டான் அவன்.

“என்னாலதானா? எல்லாம் என்னாலதானா? எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். நா…நான் அப்…படி போயிருக்க கூடாது. நா..நான்தான். இப்போவே நான் போய்…” என்று அழுதுக்கொண்டே பேசியவாறு கட்டிலிலிருந்து இறங்கப் போனவனை பிடித்து அமர வைத்தவர், “ரிஷ், உன்னை காப்பாத்த வேண்டியது என்னோட கடமை. உன்மேல முழு தப்பையும் சொல்லிற முடியாது. நீ இருந்த மனநிலை அப்படி. ஏதாவது பண்ண போய் எல்லாத்தையும் கெடுத்து வச்சிறாத! நாளைக்கே பெங்ளூர் கிளம்பிடு. யாருக்கும் இது தெரிய கூடாது. என் மகளால நீ பட்ட காயத்துக்கு மருந்தா இதை நெனைச்சிக்கோ! இங்கயிருந்து போயிடு!” என்று விழிகள் கலங்கச் சொன்னார்.

இதுவரை மனோகரின் வார்த்தைகளை அவன் மீறியதே இல்லை.

எனக்கப்றம் மனோகர்தான் உனக்கு எல்லாமே. அவன் சொல்ல என்னைக்கும் நீ தட்ட கூடாது. அவனும் உனக்கு நல்லது மட்டும்தான் யோசிப்பான்.” அவனுடைய தந்தையின் கடைசி வார்த்தைகள் இவை.

ஒருபக்கம் காதலை இழந்த வலி இன்னொருபக்கம் குற்றவுணர்ச்சி என வாழ்க்கையையே வெறுத்துப் போனவனாக உள்ளுக்குள் இறுகிப் போனவன், அடுத்தநாளே பெங்ளூருக்குச் சென்றிருந்தான்.

அங்கு தன் மனதின் ரணத்தையும் ஆதங்கத்தையும் குறைக்க எண்ணி தெருக்களில் ரிஷி பாட ஆரம்பிக்க, அப்போதே ராகவன் அவனைப் பார்த்து தன்னோடு இணைத்துக்கொண்டது.

நடந்ததை நினைத்துப் பார்த்தவாறு ரிஷி விழிநீர் ஓட கரத்தில் காயத்தோடு அமர்ந்திருக்க, அவன் காயத்திற்கான மருந்தையிட்டு அவனை தேற்றி அங்கிருந்து நகர்ந்தார் ராகவன்.

அதேநேரம் காரை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்த மேக்னாவின் விழிகள் சிவந்து வீங்கிப் போயிருக்க, என்ன செய்வதென்று தெரியாது தன் போக்கிற்கு வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் நன்கு அறிவாள் முழு தப்பும் அவளுடையதென்று. ஆனால், காலம் கழித்து யோசித்து என்ன பயன்?

அன்று ரிஷியின் காதலை உதாசீனப்படுத்தியதால் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளுடைய நினைவுகளும் நடந்த சம்பவங்களை குற்றவுணர்ச்சியோடு மீட்டிப் பார்த்தன.

அன்று மேடையில் நின்றிருக்கும் போதும் ரிஷி தன்னையே பார்த்திருப்பதை அறிந்திருந்தாள் மேக்னா. அன்றுதான் ரிஷியை அவள் கடைசியாகப் பார்த்திருப்பாள்.

மனோகரும் ரிஷி பெங்ளூருக்குச் சென்றதை அமுதாவிடமோ மேக்னாவிடமோ வாயே திறக்கவில்லை. அமுதா ‘சனியன் தொலைந்தது’ என்று அப்படியே இருந்துவிட்டார் என்றால், மேக்னா கேக்க துடித்த நாவை அடக்கி வைத்திருந்தாள்.

அவளுக்குள் குற்றவுணர்ச்சி நாளுக்குநாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது. அந்த விழாவுக்கு பிறகு சித்தார்த்தும் மேக்னாவுடன் உரிமை உணர்வுடன் நெருங்கி பழகத் தொடங்க, ஏனோ அவளால் அவனோடு சகஜமாக பழக முடியவில்லை.

ஆரம்பத்தில் அமுதா சொன்ன போது அவர் பக்கம் சாய்ந்தாலும் உள்ளுக்குள் ஒருவித குற்றவுணர்ச்சியாகவே இருந்தது. அவளும் சிறுவயதிலிருந்து ரிஷியை காதலித்தவள்தானே!

ஒருகட்டத்தில் ரிஷியை மொத்தமாக தொலைத்துவிட்டதை உணர்ந்துக்கொண்டவளுக்கு நாளுக்கு நாள் ரிஷிக்கான தேடலும் அதிகமாக, அவன் விலகிய ஒரே வருடத்தில் அவனின் காதலையும் அருமையையும் புரிய ஆரம்பித்தாள் மேக்னா.

அவளின் மாற்றத்தை சித்தார்த் உணராமலில்லை. கூடவே, தன்னுடன் வற்புறுத்தி அவளை வைத்துக்கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. “உனக்கு என்ன தோனுதோ, அதை பண்ணு மேகா. பட், ஐ லவ் யூ, என்ட் வெயிட்டிங் ஃபோர் யூ!” என்றுவிட்டு அவன் விலகியிருக்க, நடந்ததை கேள்விப்பட்ட அமுதா தாம்தூமென்று குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

எத்தனை பெரிய சம்மந்தம். தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு வந்தால் சும்மா விடுவாரா என்ன?

ஆனால், மேக்னா எதையும் கண்டுக்கொள்ளவில்லை. அதேநேரம் மேக்னா விலகியதும் சித்தார்த் லண்டன் சென்றுவிட, இருவருக்கிடையே நடந்தது தெரியாத  நரேந்திரனுக்கு கோபம் மொத்தமும் மேக்னாவின் மீதுதான்.

அதனாலேயே தனிப்பட்ட முறையில் அவர் அவளை தாக்க, ரிஷியை சந்திப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னே ஒப்பந்தத்தை முறித்திருந்தாள் அவள். கம்பனியிலிருந்து விலகியதும் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை வைத்து கான்செர்ட்டுக்கள் செய்து ஆல்பம் பாடல்களை அவள் வெளியிட,  சிலபேருக்கு நடப்பது போல் வைவா நிறுவனத்திடமிருந்து கொலை மிரட்டல்கள் வேறு.

இதனாலேயே மேக்னா எவ்வளவு மறுத்தும் ஒரு தாயாக தன் மகளின் பாதுகாப்பிற்கு தன் தம்பி ஈஷ்வரையே செயலாளராக வைத்துவிட்டார் அமுதா.

ரிஷியுடனான நினைவுகளுடன் நாட்களை அவள் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே வருடங்கள் கழித்து அவனை ராகவனின் கான்செர்ட்டில் பார்த்தாள்.

எப்படியாவது சமாதானம் செய்துவிடலாமென்று நினைத்திருந்தவள், சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றுதான் ரிஷியின் வாழ்வில் சனாவின் வருகை.

அத்தனையும் நினைத்துப் பார்த்து கடற்கரையோரத்தில் காரை சர்ரென்று நிறுத்தியவளுக்கு கத்தியழ வேண்டும் போலிருக்க, காருக்குள்ளேயே முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டாள் மேக்னா.

கேமராக்கள் முன் போலி புன்னகை சூடும் இது போன்ற பிரபலங்களின் வாழ்வில் உள்ள பிரச்சினைகளை வெளியிலிருந்து பார்க்கும் ரசிகர்களால் உணர மூடியுமா என்ன?

எப்படியோ அன்றைய நாள் நினைவுகளோடே கழிந்து அடுத்தநாள் ராகவனின் ஸ்டூடியோவில் முதல் ஆளாக ஈஷ்வரோடு வந்து நின்றாள் மேக்னா.

உள்ளே நுழைந்த ரிஷியும் நேற்று நடந்தவற்றை முற்றாக மறந்து வேலைப் பற்றியே அவளுடன் பேச, ஏனோ அவளுக்குதான் தன் பழைய ரிஷ்ஷை காண வேண்டும் போலிருந்தது.

அன்று பிரபாகரின் முன் முதலில் தயாரித்த பாடலை ஒத்திகை காட்ட ஏற்பாடு செய்திருக்க, அடுத்த அரைமணி நேரத்தில் ராகவனோடு தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரபாகரன் உள்ளே நுழைந்தார்.

பொதுவாக பிரபலங்கள் தங்களின் படப்பிடிப்புக்களிள் போது வேலையின் போது செய்யும் லூட்டிகளை சிறு சிறு காணொளிகளாக வலைத்தளங்களில் பதிவதுண்டு. அதுபோல மேக்னாவும் ரிஷியும் பாடுவதை காணொளியாக இரண்டுபேர் பதிவு செய்ய, இரு சிறந்த பாடகர்கள் இணைந்ததில் உண்டான பாடலை கேட்ட பிராபகருக்கு அத்தனை திருப்தி.

முதல் பாடல் அவர் எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக இருக்க, “வெல்டன் காய்ஸ், ஐ அம் செடிஸ்ஃபைட். என்ட் டேம்ன் ஷுவர், இது கண்டிப்பா வைரல் ஆக போகுது.” என்று அவர் உற்சாகமாகச் சொல்ல, மேக்னா ரிஷியை சந்தோஷம் விழிகளில் மிதக்க பார்த்தாள் என்றால், அவனோ பக்கவாட்டாகத் திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டான்.

“யெஸ் பிரபா, மேக்னா ரிஷியோட காம்பினேஷன் வேற லெவல்தான்.” என்ற ராகவன் ரிஷி விழிகளால் முறைப்பதைப் பார்த்து, “ஹ்ர்ம் ஹ்ர்ம். அது… அது வந்து நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன். நெக்ஸ்ட் டூ சாங்க்ஸ்ஸும் இதே மாதிரி பெட்டர் தென் எக்ஸ்பெக்டேஷனா இருக்கணும்.” என்று அசடுவழிந்து சமாளிக்க, புருவங்களை நெறித்து யோசனைக்குத் தாவினான் ரிஷி.

“எனக்கு வன் வீக் லீவ் வேணும்.” சட்டென்று ரிஷி சொல்ல, ‘எதே லீவ்வா, இதென்னடா புதுசா?’ என்ற ரீதியில் ராகவன் சடாரென திரும்பி ரிஷியைப் பார்க்க, மேக்னாவோ ‘வாட்!’ என அதிர்ந்து அவனை ஒரு மாதிரி நோக்கினாள்.

“வாட் ரிஷ்?” என்று பிரபாகரன் புரியாதுக் கேட்க, “அதான் சார், லீவ் வேணும். வன் வீக்கு அப்றம்தான் என்னால நெக்ஸ்ட் சாங்கான வேலைய ஆரம்பிக்க மூடியும்.” என்று ஏதோ பள்ளி மாணவன் போல் கேட்டவன், ராகவனின் கூர்மையான பார்வையை உணர்ந்து எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தான்.

இதுவரை தன் வேலைக்கு விடுமுறை அளித்ததே இல்லை அவன். எப்போதும் உடலை செதுக்க அல்லது இசையிலேயே தன்னை மூழ்கடித்துக்கொள்பவன், இப்போது சில நாட்களாக வேலையில் ஒவ்வொரு சாக்குகளைச் சொல்ல, ராகவனுக்கோ கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ள முடியாத நிலை.

“ஓ கோட் ரிஷ்! சில்லித்தனமா இருக்கு. ஹாஹாஹாஹா…. நீ எவ்வளவு லீவ் வேணா எடுத்துக்க. பட், நான் சொன்ன டேட்குள்ள என்னோட சாங்க்ஸ் எனக்கு கிடைச்சா போதும்.” என்ற பிரபாகரன், “எனி இம்போர்டன்ட்?” என்று சிரித்தவாறுக் கேட்டார்.

“அது சார் நாளை மறுநாள் என் பர்த்டே. இந்த தடவை என்னோட இன்டர்ஸ்ட்ரீ ஃப்ரென்ட்ஸுக்கு பார்ட்டீ கொடுக்கலாம்னு இருக்கேன். என்ட், அதுக்கப்றம் சில கமிட்மென்ட்ஸ் அதான்…” என்று அவன் அசடுவழிய, அப்போதுதான் அடுத்த இரண்டு நாட்களில் வரவிருக்கும் ரிஷியின் பிறந்தநாள் ஞாபகம் வந்தவளாக தலையிலடித்துக்கொண்டவளுக்கு தன் காதலை உணர்த்த ஒரு யோசனை தோன்றியது.

“வாவ் க்ரேட்! பட் எங்களை இன்வைட் பண்ண மாட்டியா ரிஷ்?” ஆர்வமாக பிரபாகரன் கேட்க, கூடவே குறுக்கிட்டு, “யெஸ் யெஸ் அப்போ நாங்களும் வரலாம்ல?” என்று அடக்கப்பட்டச் சிரிப்போடு கேட்டாள் மேக்னா.

“ஆஃப்கோர்ஸ் சார் கண்டிப்பா நீங்க வரணும். என்ட் யூ டூ…” என்று பிரபாகரிடம் சொல்லி அவர் முன் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாமென எண்ணி அவளையும் அவன் அழைக்க, அதுவே அவளுக்கு போதுமாக இருந்தது.

பிரபாகரன் அங்கிருந்து நகர்ந்ததும் அலைப்பேசியில் ஒருவருக்கு அழைத்து கேளிக்கை விருந்துக்கான ஏற்பாடுகளை சொன்னவாறு ரிஷி நகர, ராகவனோ மேக்னாவை பார்த்து ரகசியமாகச் சிரித்தார் என்றால், தன்னவனை காதலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அதேநேரம் இரண்டுநாட்களாக ரிஷியின் அழைப்போ குறுஞ்செய்தியோ வராததில் குழம்பித்தான் போனாள் சனா. அடிக்கடி அலைப்பேசியை பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம், ‘ஒருவேள நாம செட் ஆகலன்னு வேற ஃபிகர பார்த்துட்டு போயிட்டானோ? பின்ன நீ வேணாம்னு சொன்னதும் உன் பின்னாடியே அலைவானா என்ன? சரி போனா போகட்டும் நமக்கென்ன, நம்ம வேலைய பார்த்துட்டு இருப்போம். ஆனா இருந்தாலும்…’ என்று மதில் மேல் பூனை போல் தத்தளித்துக்கொண்டிருந்தது.

அவளுக்கு அவன் வேண்டாம் ஆனால் வேண்டும். அவன் நெருங்கி வருவதில் இனம் புரியாத பயம். செய்வதறியாத மனக்குழப்பத்தோடே அன்றையநாள் கழிய அடுத்தநாள் காலையிலேயே அவளுக்கு ரிஷியிடமிருந்து அழைப்பு.

திரையைப் பார்த்தவள் தன்னை மீறி வேகமாக ஏற்று, “ஹெலோ வேது…” என்று பதட்டமாக அழைக்க, எப்போதும் எரிந்து விழுபவள் இன்று அழைத்த விதத்தில் சிறகில்லாமல் பறந்துவிட்டான் ரிஷி.

“யூ மிஸ் மீ மை ஸ்வீட்ஹார்ட்?” என்று குறும்பாக அவன் கேட்க, அப்போதுதான் தன் நடவடிக்கை புரிந்து சுதாகரித்துக்கொண்டவள், “ஹ்ர்ம் ஹ்ர்ம்… நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” என்று தடுமாறியபடிச் சொல்ல, அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“உன் பேச்சுல தடுமாற்றம் தெரியுதே என்னோட அரக்கி, ஒருவேள யூ ஃபீல் மை லவ் ரைட்?” என்று கேட்டு உள்ளுக்குள் குதூகலிக்க, பற்களைக் கடித்துக்கொண்டு, “மண்ணாங்கட்டி போடாங்கு…” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனாள் சனா.

அதை உணர்ந்து, “வெயிட் வெயிட்!” என்று கத்தியவன், “ஒரு முக்கியமான விஷயம்.” என்க, கேள்வியாய் புருவத்தை நெறித்தவள் எதுவும் கேட்காது அமைதியாக அவன் அடுத்த சொல்லவிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டாள்.

ஆனால், அவன் விடயத்தை சொன்ன மறுகணம் உச்சகட்ட கோபத்திற்கு எகிறியவள், அழைப்பை பட்டென்று துண்டித்திருக்க, “நீ என்கிட்டயிருந்து தப்பிக்க முடியாது ஸ்வீட்ஹார்ட்.” என்று திரையில் தெரிந்த சனாவின் புகைப்படத்தைப் பார்த்து சொல்லிக்கொண்டான் அந்த விடாக்கண்டன்.